நவீனோ “அப்படின்னா தேன்மொழி ஸ்ருதியோட பிரண்டா? ஆனா ஒரு நாள் கூட அவ அதைச் சொன்னதே இல்லையே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
“தேன்மொழியும் ஸ்ருதியும் பிரண்டா?”, என்று நவீன் கேட்க ஆம் என்றான் ராகவன்.
“நீங்க ஏதோ ஸ்ருதி பத்தி பேச வந்தீங்க?”, என்று கேட்டார் தேவேந்திரன்.
“ராகவன் ஸ்ருதி பத்தி பேச தான் இங்க வந்தானா? அப்படின்னா தேன்மொழி பத்தி என்னோட அம்மா அப்பா கிட்ட பேச வரலையா?”, என்று நிம்மதி அடைந்தான் நவீன்.
“சொல்றேன் அங்கிள். அன்னைக்கு ஒரு நாள் மியூசிக் டேரெக்டர் சேகர் சார் என்னை ஒரு பாட்டு பாட கூப்பிட்டிருந்தார். அப்படியே ஒரு பீமேல் சிங்கர் வேணும்னு சொல்லிருந்தார். அதனால நான் ஸ்ருதியைக் கூட்டிட்டு போனேன்”, என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியானர்கள்.
முதலில் ஸ்ருதி பாடல் பாடுவாள் என்பதே அவர்களுக்கு தெரியாது. வீட்டில் பாட்டு பற்றி ஸ்ருதி இது வரை மூச்சு கூட விட்டதில்லை.
“நீங்க வேற ஸ்ருதியை தேடி வந்துட்டீங்க போல? எங்க ஸ்ருதி பாட்டு எல்லாம் பாட மாட்டாளே தம்பி?”, என்றாள் வேணி.
“என்ன சொல்றீங்க நீங்க? அவ நல்லா பாடுவா. ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் நிறைய பிரைஸ் வாங்கிருக்கா”
“அப்படியா? அதெல்லாம் பாட்டு பாடினதுக்கு கிடைச்ச பிரைசா?”,. என்று கேட்ட தேவேந்திரன் ஷோகேசை காட்ட “ஆமா அதோ அந்த பிரைஸ் எங்க காலேஜ்ல அவ சூப்பரா பாடினான்னு தான் கொடுத்தாங்க”, என்றான் ராகவன்.
தேவேந்திரன், வேணி மற்றும் நவீன் மூவரும் அமைதியாக இருந்தார்கள். இது வரை தாங்கள் பெற்ற பிள்ளையை புரிந்து கொள்ள வில்லையே என்ற கவலையும் யாரோ ஒருவன் வந்து தான் அவளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ற வேதனையும் வந்தது.
“நீங்க சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிங்க ராகவன்”, என்றான் நவீன்.
“அன்னைக்கு ஸ்ருதியை நான் ஸ்டூடியோக்கு அழைச்சிட்டு போய் பாட வச்சேன். அவ உங்க எல்லார்க் கிட்டயும் சொல்லணும்னு தான் சொன்னா. நான் தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு சொல்லிருந்தேன், சாரி”
“அவளைக் காப்பாத்த நினைக்கிறீங்களா ராகவன்? கண்டிப்பா அவளே எங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சிருப்பா”, என்று வேதனையாக சொன்னான் நவீன். அதே வேதனையை அவளுடைய பெற்றோரின் முகமும் பிரதிபலித்தது.
“சாரி என்னால தான் எல்லாம். அவளை தப்பா நினைக்காதீங்க”, என்று ராகவன் சொல்ல “அதை விடுங்க. அப்புறம் என்ன ஆச்சு?”, என்று கேட்டான் நவீன்.
“நான் தான் அவளை பாட வச்சேன். அவ கூட சேந்து நானும் பாடினேன். அந்த படம் ரிலீஸ் ஆகி நல்லா போச்சு”
“நானும் பாத்தேன். படம் பாட்டு எல்லாம் சூப்பரா இருந்துச்சு. அப்படின்னா அந்த பாட்டுல உங்க கூட சேந்து பாடிருக்குறது ஸ்ருதியா?”
“ம்ம்”
“இது பெருமைப் பட வேண்டிய விஷயம் தான். ஆனா அவளே ஒரு வார்த்தை சொல்லிருந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்”, என்றான் நவீன்.
“அந்த பாட்டு ரிலீஸ் ஆனது ஸ்ருதிக்கு தெரியுமா தம்பி?”, என்று கேட்டார் தேவேந்திரன்.
“ம்ம் ஆமா அங்கிள். அன்னைக்கு எங்க ஆபீஸ்ல இருந்தே படத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அப்ப தான் அவ பாடின பாட்டு படத்துல உள்ளதுன்னு தெரியும். ஆனா இப்ப நாங்க பாடின பாட்டுக்கு நேஷனல் அவார்ட் கொடுக்க போறாங்க. அதான் உங்க கிட்ட சொல்லாம்னு வந்தேன். அது இன்னும் ஸ்ருதிக்கே தெரியாது”, என்று சொல்ல மூவரின் முகமும் மலர்ந்தது.
“உண்மையா தான் சொல்றீங்களா?”, என்று கேட்டாள் வேணி.
“ஆமா, அடுத்த வாரம் டெல்லி போகணும். அவ கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. ஏன்னா உங்க யார் கிட்டயும் கேக்காம அவளை இதுல இழுத்து விட்டது நான் தான். அது கொஞ்சம் குற்ற உணர்வா இருக்குது”
“நான் சார் கிட்ட கேட்டுட்டு எல்லாம் சொல்றேன் ஆண்ட்டி. அவங்களே அவளுக்கும் டிக்கட் போட்டுருவாங்க. நீங்க யாராவது ஒரு ஆள் துணைக்கு வாங்க. உங்களுக்கும் சேத்து போடச் சொல்றேன்”
“நவீன் வருவான் தம்பி”, என்றார் தேவேந்திரன்.
“சரி அங்கிள். ஒன்ஸ் அகைன் சாரி. நான் கிளம்புறேன்”, என்று எழுந்து கொண்ட ராகவன் “உங்க கிட்ட இன்னொரு விஷயம் பேசணும்”, என்றான்.
“உக்காருங்க தம்பி”, என்று தேவேந்திரன் சொல்ல அவனும் அமர்ந்தான். நவீன் அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க “தேன்மொழி நவீன் கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சிட்டீங்கன்னு தெரியும். ஆனா நவீன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சா தான் அவர் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க”, என்று ஆரம்பித்தான்.
பெற்றவர்கள் இருவரும் திகைத்து போய் நவீனைப் பார்க்க அவர்களை எதிர்க் கொள்ள முடியாமல் அவன் தலைக் குனிந்தான். அதுவே எல்லா உண்மையையும் அவர்களுக்கு உணர்த்த அவனை ராகவன் முன்னால் விட்டுக் கொடுக்க முடியாமல் “ஆமா தம்பி. நவீன் சொன்னதும் சரி தானே? முதல்ல ஸ்ருதிக்கு முடிச்சிட்டு தானே அவனுக்கு பண்ண முடியும்?”, என்று சொன்னார் தேவேந்திரன்.
“அது சரி தான் அங்கிள். ஆனா ஒரு என்கேஜ்மெண்ட் மாதிரி வச்சிக்கலாம்ல?”, என்று கேட்டான் ராகவன்.
“நிச்சயமும் கல்யாணம் மாதிரி தானே பா? நிச்சயத்துக்கு வரவங்க கேப்பாங்களே, இன்னும் பொண்ணுக்கு முடிக்கலையான்னு?”
“ஆமா சார். ஸ்ருதிக்கு மாப்பிள்ளை பாத்துட்டீங்களா?”, என்று தயக்கத்துடன் கேட்டான் .
“பாத்தோம். பொண்ணு பாக்க வர அன்னைக்கு மயங்கி விழுந்துட்டா. அதுக்கப்புறம் தினமும் அவங்களை வரச் சொல்லவானு கேட்டுட்டு தான் இருக்கோம். மூச்சே விட மாட்டிக்கா. அதைப் பத்தி பேசினா சாப்பிடாம ரூமுக்குள்ளே முடங்கி கிடக்கா. வேற மாப்பிள்ளை பத்தி பேசினாலும் அதே நிலைமை தான். சரி கொஞ்ச நாள் கழிச்சு பேசலாம்னு விட்டுட்டோம். உங்களுக்கு ஏதாவது மாப்பிள்ளை தெரியுமா தம்பி?”
“ம்ம் அது….. வந்து… எனக்கு நான் பேசுறது சரியா தப்பான்னு தெரியலை. ஆனா சொல்லணும்னு தோணுது. ஸ்ருதியை….”, என்று தயங்கினான்.
“சொல்லுங்க தம்பி”
“ஸ்ருதியை எனக்கு கல்யாணம் பண்ணித் தறீங்களா?”, என்று கேட்டே விட்டான்.
அனைவரும் அதிர வேணியோ “என்னங்க ஒரே நாள்ல நான் இவ்வளவு அதிர்ச்சியை எப்படி தாங்குவேன்?”, என்று கணவரிடம் கேட்டாள்.
“அமைதியா இரு டி. எனக்கும் இதே நிலைமை தான்”, என்றார் தேவேந்திரன்.
“இப்படி சட்டுன்னு கேட்டது தப்பு தான். நீங்க நல்லா யோசிங்க. என்னை பத்தி நல்லா விசாரிச்சிக்கோங்க. நான் கேட்டது தப்புன்னா அம்மா அப்பாவை விட்டு பேசச் சொல்றேன். என்னை ஸ்ருதிக்கு பாக்கலைன்னா கூட பரவால்ல. ஆனா தேன்மொழி நவீன் நிச்சயமாவது சீக்கிரம் நடக்கணும்னு வீட்ல நினைக்கிறாங்க. இதுல என்னோட அப்பா நம்பர் இருக்கு. நல்லா யோசிச்சு முடிவு எடுங்க. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
“சரிப்பா”, என்று சொன்ன தேவேந்திரனும் எழுந்து கொள்ள வாசல் வரை வந்தவன் மீண்டும் அவரிடம் திரும்பி “ஸ்ருதி போட்டோவை மீடியாவுக்கு கொடுக்கவா வேண்டாமா?”, என்று கேட்டான்.
“எப்படின்னாலும் பிரைஸ் வாங்குறப்ப தெரிய தானே போகுது? தாராளமா கொடுங்க. இது அவ திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம்”, என்றார் தேவேந்திரன்.
“சரி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் போனதும் வீட்டில் மயான அமைதி நிலவியது. நவீனால் பெரியவர்களை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.
“ஏங்க நாம பிள்ளைகளை சரியா வளக்களையோ? ஒருத்தி என்னடான்னா எவ்வளவு பெரிய வேலையை செஞ்சிட்டு கமுக்கமா இருந்திருக்கா. இவன் என்ன டான்னா கல்யாண விஷயமே பேசிட்டு அமைதியா இருந்துருக்கான்?”, என்று கேட்டாள் வேணி.
“அம்மா சொல்றது காதுல விழுந்துச்சா இல்லையா நவீன்? இப்பவாது உன் காதலைப் பத்தி சொல்லப் போறியா இல்லை, கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க போறியா? அதையாவது சொல்லு. நாங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம்”, என்று சொன்னார் தேவேந்திரன்.
அவர்கள் அருகே வந்து அமர்ந்தவன் “கல்யாணத்துக்கு முன்னாடி லவ்ல எல்லாம் விழக் கூடாதுன்னு இருந்தவன் மா நான். எனக்கு பாக்குற பொண்ணையும் நீங்க தான் செலக்ட் பண்ணணும்னு நினைச்சேன் பா”, என்றான் .
“தேனைப் பாத்ததும் மனசு மாறிட்டா உனக்கு?”, என்று கேட்டாள் வேணி.
“இல்லை மா. இப்ப வரைக்கும் எனக்கு அந்த எண்ணம் தான்”
“என்ன டா சொல்ற?”
“நான் இப்ப வரைக்கும் தேன்மொழியை விரும்பலை மா”
“என்ன டா சொல்ற? அப்படின்னா ராகவன் சொன்னது?”
“தேன்மொழியும் நானும் நல்ல ஃபிரண்ட்ஸ் மா. அவ என்னோட ஜூனியர் தான். தேன்மொழிக்கு வீட்ல பாரின் மாப்பிளை பாத்தாங்களாம். அவளுக்கு பாரின் போக விருப்பம் இல்லையாம். அதனால அவ வீட்ல கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருக்கா. ஏன்னு அவங்க கேட்டதுக்கு யாரையோ லவ் பண்ணுறேன்னு பொய் சொல்லிருக்கா. அவங்க யாருன்னு கேட்டதுக்கு சட்டுன்னு என் பேரைச் சொல்லிருக்கா. அவளுமே என்னை விரும்பலை மா”
“என்ன டா இது இப்படியுமா நடக்கும்?”
“ம்ம், எப்படியோ இதுல சிக்கிட்டோம். இதுல இருந்து வெளிய வர முடியலை. ராகவன் என்னைப் பாக்க வந்து பேசினப்ப எனக்கும் அதிர்ச்சி தான். அவளை கண்ணா பின்னான்னு திட்டிட்டேன். அவளும் சரி விடுங்க. நான் வேற ஆளைக் கை காட்டிக்கிறேன்னு சொல்றா. அதுவும் அவ சொல்ற டாக்டர் சரியே கிடையாது மா. (https://biergardenencinitas.com/) எவ்வளவோ சொன்னேன் அவ கேக்கலை. இதுல ராகவன் வேற உங்க கிட்ட பேசச் சொன்னார். அவர் கிட்ட என்ன சொல்லன்னு தெரியாம தான் முதல்ல என் தங்கை கல்யாணம் முடியணும்னு சொல்லி வச்சேன். சத்தியமா இந்த நிமிஷம் வரைக்கும் நான் உங்களை ஏமாத்தலை”, என்று சொல்ல அவர்களுக்கும் மகனை நினைத்து நிம்மதியாக இருந்தது.
“தேன்மொழி நல்ல பொண்ணு தான். ஸ்கூல் படிக்கும் போது பாத்தது. நல்ல குடும்பம் தான். ராகவன் வேற ஸ்ருதியை பெண் கேக்குறார். உனக்கு அவளை பிடிச்சிருக்கா நவீன்?”, என்று கேட்டார் தேவேந்திரன்.
“இதுல என் விருப்பம் எதுவும் இல்லைப்பா. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான். வேண்டாம்னு சொன்னாலும் வேண்டாம். தேன்மொழிக்காக என்னால உங்களை கஷ்டப் படுத்த முடியாது”, என்று அவர்களை பெருமை படுத்தினான். ஆனாலும் உள்ளுக்குள் “அப்படின்னா தேன்மொழி வேற எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப் பட்டா உனக்கு பரவால்லயா?”, என்று கேள்வி எழும்பியது.
அந்த கேள்வியில் அவனே திகைத்தான். அவனுடைய குடும்பத்தையும் மீறி அவன் மனதில் அவளைப் பற்றிய எண்ணம் வருகிறது என்றால் அவனுக்கும் அவளை பிடித்திருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது அவனுக்கே.
“என்னங்க பேசலாமா? பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்தா நாமளும் பயம் இல்லாம இருக்கலாம். ஸ்ருதியும் தேன்மொழியும் பிரண்ட்ஸ் வேற. எனக்கு ராகவனையும் பிடிச்சிருக்கு”, என்றாள் வேணி.
வேணி அப்படிச் சொன்னதும் நவீன் முகம் மலர்ந்தது. அதைப் பார்த்த தேவேந்திரனுக்கு மகனுடைய மனது லேசாக புரிய “சரி அவங்க வீட்ல பேசுறேன். ஆனா இப்போதைக்கு நவீன் தேன்மொழி கல்யாணம் பத்தி மட்டும் பேசுவோம். ஸ்ருதி விருப்பம் தெரியாம ராகவன் பத்தி பேச வேண்டாம்”, என்று தேவேந்திரன் சொல்ல அதுவே மற்றவர்களுக்கு சரி என்று பட்டது.