Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 2 1

அத்தியாயம் 2

பூஞ்சோலையின் வாசம்

கண்டேன் என்னவள் அருகில்!!!



Advertisement

அடுத்த நாள் எப்போதும் போல அழகாக விடிந்தது. புது யூனிபார்ம் அணிந்து தயாரான ஸ்ருதி இன்று அதிகமாக கண்ணாடி பார்த்தாள். அவளது ஹார்மோன் அப்படி செய்ய அவளைத் தூண்டியது போல.

மகள் கண்ணாடியை பார்ப்பதைக் கவனித்து விட்ட வேணி “பாப்பா ரொம்ப கண்ணாடி பாக்காத. அப்புறம் பருவா வரும்”, என்று எச்சரித்தாள்.

Advertisement

Advertisement

“சரி மா”, என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். தேவேந்திரன் உணவு உண்டு கொண்டிருக்க அவர் அருகில் அமர்ந்தாள். அவளுக்கும் வேணி உணவு எடுத்து வைக்க அமைதியாக அதை உண்ண ஆரம்பித்தாள்.

அப்போது தேவேந்திரன் எண்ணுக்கு அழைத்தான் நவீன். அண்ணன் தான் என்று உணர்ந்த ஸ்ருதி போனை எடுத்து “போண்ணா, உன் கூட சண்டை”, என்றாள்.

Advertisement

“ஏன் குட்டி மா”, என்று அன்புடன் கேட்டான் நவீன்.

“நைட் கூப்பிடுறேன்னு சொன்ன? ஆனா கூப்பிடலை”

“பேசணும்னு நினைச்சேன் டா. ஆனா போன் பேச இங்க பெரிய கியூ நின்னுச்சு. அதுல நின்னு வெயிட் பண்ணிருந்தா கொடுத்த புராஜெக்ட் எல்லாம் பண்ண முடியாது டா”

“ஓ, சரிண்ணா பரவால்ல. உனக்கு ஹாஸ்டல் கஷ்டமா இருக்கா?”

“கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு டா”

“நீ ஏன் ஹாஸ்டல் போன? பேசாம நம்ம வீட்ல இருந்து காலேஜ் போக வேண்டியது தானே?”

“இங்க பசங்க எல்லாம் இருக்குறதுனால ஒண்ணும் தெரியலை டா. ஆனா வீட்லன்னா நான் மட்டும் தான் தனியா இருக்கணும். சாப்பாடும் ஹோட்டல்ல தான் சாப்பிடணும். காலேஜ்ல சாப்பாடு நல்லா இல்லாம போனாலும் சத்தானதா இருக்கும். ஆனா ஹோட்டல்ல அப்படி இருக்காதே”

“அப்படின்னா சரி, நீ அங்கயே இரு. எப்ப இங்க ஊருக்கு வரவ?”

“அடுத்த மாசம் வரேன் டா. நீ ஸ்கூல்க்கு கிளம்பிட்டியா?”

“ஆமா அண்ணா”

“சரி நீ கிளம்பு. நல்லா படி சரியா? உனக்கு கூட இருந்து சொல்லிக் கொடுக்க முடியாதது தான் கஷ்டமா இருக்கு டா”

“அதெல்லாம் பரவால்ல அண்ணா. ஸ்கூல்ல நல்லா தான் சொல்லித் தராங்க. நீ சொல்லிக் கொடுத்தா அடிச்சிட்டே இருப்ப. என் தலை உன் கிட்ட கொட்டு வாங்கி வீங்கிரும் பா. அதுல இருந்து எனக்கு விடுதலை தான்”, என்று சொல்லி சிரித்தாள்.

“வாலு, சரி நான் காலேஜ் கிளம்பனும். அம்மா அப்பா கிட்ட சொல்லிரு. நான் நாளைக்கு பேசுறேன். முடிஞ்சா சாயங்காலம் பண்ணுறேன்”

“சரிண்ணா, மிஸ் யு”, என்று அவள் சொல்ல தங்கையின் அன்பில் அவனும் நெகிழ்ந்து போய் போனை வைத்தான்.

“என்ன டா பேசிட்டியா? கிளாஸ்க்கு போகலாமா?”, என்று கேட்டான் அவனது நண்பன் விஷ்ணு.

“போகலாம் டா”

“சரி அந்த குட்டி வால் என்ன சொல்லுச்சு?”, என்று விஷ்ணு உண்மையான அன்புடன் ஸ்ருதியைப் பற்றி கேட்க நவீனும் தங்கை பேசியதைச் சொல்லிக் கொண்டே கிளாசுக்கு சென்றான்.

தந்தையுடன் பள்ளிக்கு வந்த ஸ்ருதி தன்னுடைய கிளாசை நோக்கிச் சென்றாள். நேற்றைய பயமும் தயக்கமும் இப்போது அவளிடம் இல்லை.

“இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டியா?”, என்று கேட்ட படி அவள் அருகில் அமர்ந்தாள் தேன்மொழி.

“ஆமா தேனு”

“சாரி டி, நேத்து என் அண்ணன் அப்படி நடந்துக்கிட்டதுக்கு. அவன் எப்பவுமே அப்படித் தான். யார்க் கிட்டயும் அதிகமா பேச மாட்டான்”

“பரவால்ல தேனு, விடு”

“வீட்ல போய் அம்மா கிட்ட வத்தி வச்சிட்டேன். நல்லா திட்டு வாங்கினான்”

“ஏன் டி அப்படி பண்ணின?”

“அப்ப தானே அவன் திமிரும் குறையும். என் குட்டித் தம்பியும் அவனுக்கு வச்சான் பாரு ஒரு கொட்டு. எனக்கு அப்ப தான் நிம்மதியா இருந்தது”

“ஐயோ பாவம்”, என்று அவனுக்காக ஸ்ருதி உண்மையிலே பரிதாபப் பட “அவன் பாவமா? என்னையும் அமரையும் எப்படி அடிப்பான் தெரியுமா டி?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“அமருக்கு அவங்களை விட உன்னைத் தான் பிடிக்குமா?”

“அவங்களையா? எவங்களை?”, என்று தேன்மொழி கேட்டதும் சிவந்த முகத்துடன் “உன் அண்ணனைத் தான் சொன்னேன்”, என்றாள்.

அவளை வித்தியாசமாக பார்த்த தேன்மொழி அவளை ஆராயாமல் “ஆமா டி, அமருக்கு என்னைத் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா எங்க ரெண்டு பேருக்குமே அண்ணாவைப் பிடிக்கும். ஆனா அதை வெளிய காட்டிக்கவே மாட்டோம். அவனும் தான் எங்க ரெண்டு பேரையும் அடிப்பான் திட்டுவான். ஆனா அவனுக்கும் எங்களைப் பிடிக்கும்”, என்றாள்.

“ஓ, உங்க அம்மா திட்டினதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“அவன் என்ன சொல்லுவான்? சாரி மான்னு சொன்னான். அப்புறம் நீ என்ன எங்க அம்மாவை உங்க அம்மா உங்க அம்மான்னு சொல்ற? அது நல்லாவா இருக்கு? ஒழுங்கா அத்தைன்னு சொல்லு”, என்று தேன்மொழி மிரட்ட அந்த மிரட்டல் ஸ்ருதிக்கு பிடித்தது. அதுவும் அந்த அத்தை என்ற வார்த்தை தித்தித்தது.

“சரி டி, இனி அத்தைன்னே சொல்றேன். அப்புறம் என் அம்மா உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாங்க டி”

“கொஞ்ச நாள் ஆகட்டும் ஸ்ருதி வரேன்”, என்றாள் தேன்மொழி. அதற்கு பின்னரும் தேன்மொழியிடம் கதை பேசுகிறேன் என்ற பெயரில் அவளுடைய வீட்டைப் பற்றியே அதிகம் கேட்டாள்.

“உனக்கு என்ன பிடிக்கும்? அமருக்கு என்ன பிடிக்கும்? அவங்களுக்கு என்ன பிடிக்கும்?”, என்று கேள்விகளாக கேட்டு ராகவனைப் பற்றிய செய்திகளை எல்லாம் வாங்கி அவளுடைய மனதுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டாள் ஸ்ருதி. தேன்மொழியோ அவளுடைய மனதில் இருக்கும் கள்ளம் அறியாமல் தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும் தன்னுடைய அண்ணனைப் பற்றியும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

தேன்மொழிக்கு சிறிதளவு கூட தோழியிடம் சந்தேகம் வரவில்லை. அதனால் இயல்பாக அனைத்தையும் சொன்னாள். ராகவன் விரும்பி என்ன உண்பான்? அவனுக்கு பிடித்த சாக்லேட் எது? தினமும் எப்போது எழுவான்? எப்போது உறங்குவான் என்று வரை அனைத்தையும் தேன்மொழியிடம் கறந்திருந்தாள் ஸ்ருதி.

ஆனால் அவனைப் பற்றிய விஷயங்களை எதனால் அவளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை ஸ்ருதிக்கே தெரியாதது தான் இங்கே விந்தை.

“எதனால் அவனைக் கண்டதும் மெய் மறந்து நின்றாள்? அவனைப் பற்றி தெரிந்து கொள்ள எதனால் இப்படி ஆர்வம் காட்டுகிறாள்?”, என்று அவளுக்கு புரியவே இல்லை. அதை யோசிக்கும் வயதும் அவளிடம் அப்போது இல்லை.

ஆனால் அவன் மீதான ஈர்ப்பு அவளுடைய மனதில் விதைக்கப் பட்டு விட்டது. அது வளர்ந்து மரமான பிறகு அது காதல் என்று புரிந்து கொள்வாளோ என்னவோ?

இங்கே ஒருத்தி அவன் நினைவில் இருக்கிறாள் என்று ராகவனுக்கு தெரியவே செய்யாது. இன்னும் சொல்லப் போனால் அன்னையிடம் திட்டு வாங்க வைத்ததால் தேன்மொழி மீதும் ஸ்ருதி மீதும் அவனுக்கு சிறிது கோபம் கூட இருந்தது.

அன்றைய பிரேயர் ஆரம்பித்தது. அனைவரும் கிரவுண்டில் வந்து வரிசையாக கிளாஸ் சகிதம் வந்து நின்றார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வந்ததும் ஸ்ருதியின் கண்கள் அவனைத் தேடியது. அவனைக் கண்டு விட்டாள். அவனோ அவனுடைய தோழனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு குதூகலமாக இருந்தது.

அவன் எதற்கோ இந்த பக்கம் திரும்பிப் பார்க்க இவள் படக்கென்று தலை குனிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் குறுகுறுத்த மனதுடன் மீண்டும் அவனைப் பார்த்தாள். புன்னகையுடன் நின்ற அவனது முகம் அவள் ரசிக்கும் படி இருந்தது.

“இவன் தான் எவ்வளவு அழகா இருக்கிறான்?”, என்று எண்ணி அவன் அழகில் மயங்கி அவன் சிரிப்பை ரசித்தாள்.

அப்போது “டேய் ராகவா”, என்று அழைத்தான் அவனது நண்பன் வாசு.

“அமைதியா இரு டா. பிரேயர் ஆரம்பிக்கப் போகுது. இப்ப பேசுறதை சார் பாத்தா கிரவுண்ட்ல ஓட விடுவாங்க. கிளாஸ்ல வந்து பேசு”, என்றான் ராகவன்.

“நான் இதை உன் கிட்ட இப்பவே சொல்லணும் டா”

“என்ன வசனம் எல்லாம் பலமா இருக்கு? என்னன்னு சொல்லித் தொலை”

“அந்த பொண்ணு உன்னையே பாக்குற மாதிரி எனக்கு தெரியுது டா”

“என்னது பொண்ணா? என்ன டா உளறுற?”

“நம்ம தேனு பக்கத்துல நிக்குற பொண்ணு உன்னையே தான் டா பாக்குது”, என்றதும் படக்கென்று திரும்பிப் பார்த்தான். அவன் திடீரென்று திரும்பிப் பார்ப்பான் என்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. அவன் பார்வையில் அகப்பட்டுக் கொண்டவளாக தலை குனிந்து கொண்டாள்.

அவள் பார்வையில் இருந்த மையலில் ராகவன் அதிர்ந்து விட்டான். வாசு அவனையே ஆராய்ச்சியாக பார்க்க இதை வளரவிடுவது ஆபத்து என்று புரிந்து “அது தேன்மொழியோட ஃபிரண்ட் டா. பேர் ஸ்ருதியாம். புதுசா அவ கிளாஸ்க்கு வந்துருக்கா. நேத்து அவ முன்னாடி தேனை நல்லா திட்டிட்டேன். அதான் பாப்பாளா இருக்கும்”, என்று சமாளித்தான்.

“ஓ, பேர் என்ன சொன்ன?”

“ஸ்ருதி டா”

“பேர் மட்டும் இல்லை, ஆளும் அழகா இருக்கா டா”

“ஆரம்பிச்சிட்டியா, உன் வேலையை?”

“இப்ப சைட் அடிக்காம வேற எப்ப டா சைட் அடிக்கிறது? உண்மையிலே அவ ரொம்ப அழகா இருக்கா டா. மெழுகு பொம்மை மாதிரி”, என்று வாசு வர்ணிக்க “பேசாம இரு. பிரேயர் ஆரம்பிக்க போகுது”, என்று சொன்ன ராகவன் வாசுவுக்கே தெரியாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!