Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 7 3

சேகர் தான் முதலில் சென்று பேச ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கவும் தான் நடப்புக்கு வந்தான் ராகவன். “குட் ஈவினிங்க் ஸ்டூடண்ட்ஸ், அண்ட் மை டியர் கொலிக்ஸ். இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். சர்வதேச அளவில் நடை பெற்ற போட்டியில் ராகவன் முதலாவதாக வந்திருக்கிறார். அதற்கு பாராட்டவே இந்த விழா ஏற்பாடு. அது போக இன்னொரு சர்பிரைசும் உங்களுக்கு இருக்கு. அதை புகழ் பெற்ற இசையமைப்பாளார் சேகர் பின் அறிவிப்பார். இப்போது அந்த இசை போட்டியில் வெற்றி பெற்ற பாடலை பாட ராகவனை அழைக்கிறேன்”, என்று சொல்ல அடுத்த நொடி எழுந்து வந்த ராகவன் அந்த பாடலைப் பாடினான்.

அனைவரும் அந்த பாடலைக் கேட்டு மயங்கி தான் போனார்கள். தேன்மொழி மற்றும் அமருக்கு கூட அந்த பாட்டு பிடித்திருந்தது. ஆனால் அந்த பாடல் முழுவதும் ஒரு பெண்ணைப் பற்றி இருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது.



Advertisement

“அக்கா, இவன் என்ன இப்படி உருகி உருகி பாடிருக்கான். ஒரு வேளை காலேஜ்ல யாரையும் லவ் பண்ணுறானோ? அப்படினா ஸ்ருதி அக்கா நிலைமை?”, என்று கேட்டான் அமர்.

Advertisement

“இல்லை டா அமர். எனக்கு அப்படித் தோணலை. ஒரு வேளை இவன் ஸ்ருதியை நினைச்சு தான் இப்படி உருகிப் பாடிருக்கான்னு தோணுது. பாப்போம். ஒரு நாள் உண்மை வெளிய வரும். ஆனாலும் சூப்பரா பாடுறான்ல? இவனை நம்ம அண்ணான்னு சொல்ல பெருமையா இருக்கு டா”

Advertisement

“ஆமாக்கா, நான் நாளைக்கு ஸ்கூல்க்கு போய் என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லுவேன்”, என்று சொல்லி சந்தோஷப் பட்டான்.

Advertisement

ராகவன் பாடலை பாடி முடித்ததும் அரங்கமே கை தட்டலால் நிறைந்தது. எல்லாவற்றையும் பிரஸில் இருந்து வந்தவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டனர்.

“தேங்க் யு”, என்று சொல்லி விட்டு அவன் சீட்டில் அமர சேகர் பேச வந்தார். “இந்த விழாவுக்கு என்னை வரவச்சு கவுரவப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி. உங்க எல்லாருக்கும் நான் இப்ப ஒரு பெரிய உண்மையைச் சொல்லப் போறேன்”, என்று அவர் ஆரம்பித்ததும் அரங்கமே எதிர்பார்ப்புடன் பார்த்தது.

“உங்க எல்லாருக்கும் ராகவனை இப்ப தானே தெரியும். ஆனா எனக்கு இவன் ஸ்கூல் படிக்கும் போதே தெரியும்”, என்று அவர் ஆரம்பிக்க அனைவரும் வியப்பாக அவர் பேச்சைக் கவனித்தார்கள்.

“நான் மியூசிக் போட்ட படத்துல காலைக் காற்றேன்னு ஒரு பாடல் வரும் தெரியுமா?”, என்று அவர் கேட்க “தெரியும் சார்…. எங்க பேவரைட் பாட்டு சார்….”, என்று பல குரல்கள் எழுந்தது.

“ஆமா, எல்லார் மனசுலயும் இடம் பெற்ற அந்த பாடலைப் பாடினது வேற யாரும் இல்லை. நம்ம ராகவன் தான்”, என்று சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

தேன்மொழியும் அமரும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “நான் உண்மையா தான் சொல்றேன். அந்த பாட்டு மட்டும் இல்லை. இது வரைக்கும் ராகவன் எட்டு பாடலை படத்துல பாடிருக்கார்”, என்று சொன்னவர் அந்த பாடல்களை எல்லாம் பட்டியல் இட்டார்.

அனைவருக்கும் இந்த உண்மையைக் கேட்டு வியப்பாக தான் இருந்தது. “நான் உண்மையா தான் சொல்றேன். இவ்வளவு பாட்டை பாடின ராகவன் பேர் இது வரைக்கும் வெளிய வரலை. அவனோட படிப்பு பாதிக்க படக் கூடாதுன்னு தான் வெளிய சொல்லலை. ஆனா இந்த அவார்ட் பங்ஷன்ல சொல்ல வேண்டியது என்னோட கடமை. ராகவனுக்கு அதிக திறமை இருக்கு. ஆனாலும் தன்னடக்கம் அதிகம். அவர் பேர் வெளிய வரக் கூடாதுன்னு அம்மா அப்பா பேரை சேத்து வச்சு மதன்ராஜ்ன்னு மீடியாக்கு கொடுத்தார். இனி வரப் போற படங்கள்ல ராகவன் பாடுவார். அவரே கூட முழு படத்துக்கும் மியூசிக் போடுவார். கூடிய சீக்கிரம் நேஷனல் அவார்ட் வாங்குவார். அதுக்கு என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உண்டு”, என்று சொல்லி அவர் பேச்சை முடிக்க ஆடிட்டோரியமே ஆரவாரத்துடன் சந்தோஷப் பட்டது.

விழா முடிந்ததும் அடுத்த பட வாய்ப்பை பற்றிச் சொல்லி விட்டு சேகர் கிளம்பினார். ராகவனின் குடும்பமும் கிளம்ப “அவங்க கூட போயிட்டு வா ராகவா. பஸ் ஏத்தி விட்டுட்டு ஹாஸ்டல் வந்தா போதும்”, என்று சொல்லி விட்டார் சிதம்பரம்.

அதன் பின் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார் மதன். ஒரே டேபிளில் அனைவரும் சுற்றி அமர்ந்தார்கள். யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜி மற்றும் மதன் முகத்தில் சந்தோஷம் வழிந்தோடியது. பெற்றோர் சந்தோசத்தைக் கண்ட ராகவனுக்கும் பெருமையாக இருந்தது. தம்பி தங்கையைப் பார்த்தான். அவர்கள் இருவரும் உர்ரென்று இருந்தார்கள்.

“ஏய் என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? உம்முன்னு இருக்கீங்க? தேனு என்ன? அமர் என்ன டா?”, என்று கேட்டான் ராகவன். அவர்கள் அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொள்ள அவன் தாயைப் பார்த்தான்.

“நீ படத்துல எல்லாம் பாடினதை அவங்க கிட்ட சொல்லலைல? அதான் நம்ம எல்லார் மேலயும் கோபமாம்”, என்றாள் ராஜி.

“பெரிய ஆளா வந்த பிறகு சொல்லலாம்னு தான் அப்ப சொல்லலை. இப்பவும் சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா சொல்ல வேண்டியதா போச்சு. நான் உங்க செல்ல அண்ணன் தானே? என்னை மன்னிச்சிருங்க ரெண்டு பேரும்”, என்று அவர்களிடம் மன்னிப்பை வேண்டினான்.

“உன்னை மன்னிக்கணும்னா அடுத்த மேடைல என்னையும் அமரையும் மேடைல ஏத்தி இவங்க தான் என்னோட தம்பி தங்கச்சின்னு சொல்லணும். அப்ப தான் உன்னை மன்னிப்போம்”, என்று தேன்மொழி சொல்ல “ஆமா ஆமா, அப்ப தான் உன்னை மன்னிப்போம்”, என்றான் அமர்.

“இவ்வளவு தானா? செஞ்சுட்டா போச்சு. இப்ப உங்களுக்கு புடிச்ச ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணவா?”, என்று கேட்க அவர்கள் கோபம் எல்லாம் மாயமானது.

எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் தேன்மொழி கை கழுவச் சென்றாள். அவளுக்கு துணையாக ராகவன் சென்றான். “அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்”, என்றாள் தேன்மொழி.

“என்ன தேனு?”

“நீ பின்னணி பாடகர்னு எங்களுக்கே இப்ப தான் தெரியுது? ஆனா அவ்வளவு வருசத்துக்கு முன்னாடி ஸ்ருதி எப்படி அதைக் கண்டு பிடிச்சா?”

“ஸ்ருதியா? அது யாரு? வெட்டி பேச்சு பேசாம கையைக் கழுவிட்டு வா”, என்று சொல்லி தேன்மொழிக்கு நெஞ்சு வலியை வர வைத்தான் ராகவன். கை கழுவி வந்த தேன்மொழி அதன் பிறகு ஸ்ருதி பற்றி எதுவும் பேச வில்லை. ராகவனும் அப்பாடா என்று எண்ணிக் கொண்டான்.

ராகவனின் குடும்பம் ஊருக்கு கிளம்பிச் செல்ல ராகவன் ஹாஸ்டலுக்கு வந்தான். அவனைக் கண்டு விஷ்ணு முகம் திருப்ப மற்ற அனைவரும் அவனை வாழ்த்தினார்கள்.

“டேய் சாரி டா விஷ்ணு”, என்றான் ராகவன்.

“நீங்க எல்லாம் பெரிய ஆள். எங்க கிட்ட எல்லாம் உண்மையா இருப்பீங்களா?”, என்று விஷ்ணு கேட்க அவனிடமும் மன்னிப்பை வேண்டினான். விஷ்ணுவும் அவனை மன்னித்து விட்டு வாழ்த்து தெரிவித்தான்.

“உன் திறமையை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நீ பாடின பாட்டு எல்லாம் எங்க வீட்ல அடிக்கடி ஓடும். அந்த பாட்டைக் கேட்டு அந்த மதன்ராஜ் நல்லா பாடிருக்கான்லன்னு பேசிப்போம். ஆனா அது நீ தான்னு கண்டே பிடிக்க முடியலை மச்சான்”

“யாருமே கண்டு பிடிக்காததை ஒருத்தி மட்டும் என் பாட்டைக் கேட்ட உடனே கண்டு பிடிச்சிட்டா மச்சான்”, என்று எண்ணி சிரித்தான்.

“என்ன சிரிக்கிற? சரி இன்னைக்கு பாடின பாட்டை யாரை நினைச்சு எழுதின?”, என்று விஷ்ணு கேட்க ராகவன் முகம் மேலும் மலர்ந்தது.

விஷ்ணு அவனை ஆராய்ச்சியாக பார்க்க அப்போது அவனுக்கு போன் என்று அறிவிப்பு வர அங்கிருந்து ஓடி நண்பனிடம் இருந்து தப்பித்தான்.

போனில் வாசு தான் பேசினான். அவனும் ராகவனை திட்டி பின் வாழ்த்து சொல்லி கடைசியில் யாரை நினைத்து பாடின என்று கேட்டான்.

அவனிடமும் ஏதோ சமாளித்து விட்டு வைத்தான் ராகவன். அன்றில் இருந்து அவனைப் பற்றிய தகவல்கள் செய்தி தாள், இணையதளம் என்று பரவியது. ஹாட் டாப்பிக்காக ராகவன் தான் இருந்தான்.

நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி ராகவன் பெயர் வரவும் இமைக்க மறந்து டி‌வியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேடையில் உருகி உருகி அவன் பாடிக் கொண்டிருக்க இவளோ கண் சிமிட்டினால் மறைந்து விடுவான் என்பது போல அவனையே பார்த்திருந்தாள்.

“நான் அன்னைக்கே சொன்னேன், ஆனா இவன் ஒத்துக்கலையே? இப்ப கூட இந்த விழா பத்தி தேனு கூட நம்ம கிட்ட சொல்லலையே? இவனுக்கு என்னை எப்பவுமே பிடிக்காதா?”, என்று சோர்ந்து போனாள்.

அதற்குள் சாப்பிடுவதற்கான மணி அடிக்க வேறு வழியில்லாமல் டைனிங் கால் சென்று உண்ண அமர்ந்தாள். ஆனால் ஒரு வாய் கூட அவளால் உண்ண முடியவில்லை.

ராகவனின் நினைப்பே அவள் மனதில் ஓடியது. சும்மாவே தன்னைக் கண்டு கொள்ள மாட்டான். இதில் அவன் இவ்வளவு பெரிய ஆளான பிறகு தன்னை எப்படி நினைத்துப் பார்ப்பான் என்று எண்ணி தளர்ந்து போனாள்.

இனி தன்னால் அவனை நெருங்க கூட முடியாது என்று அவள் கலங்கிப் போனாள். ஏதோ கை பொருள் தன்னுடைய கையை விட்டுச் சென்ற துக்கம் அவளை வாட்டியது.

இசை தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!