Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கனவும், நினைவும் உனையே

Kanavum Nanavum Unaiyae 1 2

“ஆமா அப்படி உனக்கு என்னைக்காவது பட்டாம்பூச்சி அடிச்சு.,  ஹார்ட்டு துடிச்சி.,   கை, கால்  நடுங்கி நீ அவன்கிட்ட போய் சொல்லும் போது அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பிள்ளை இருந்துச்சின்னா., என்ன பண்ணுவ”, என்று கேட்கவும்.,

      ஒரு நிமிடம் தட்டோடு திரும்பி பார்த்தவள்,  “என்னைய கிண்டல் பண்ணுறீங்க”, என்று சொல்லிவிட்டு “அந்த மாதிரி ஆட்களை பார்த்து எல்லாம் அப்படி வராது பாட்டி., அவங்க மூஞ்ச பாத்தாலே தெரியும்., அவங்களுக்கு எல்லாம் கிழட்டு தட்டி இருக்கும்., ஒருவேளை அப்படியே வயசானதை மறைக்கிறதுக்கு ட்ரை பண்ணாங்கன்னா  கண்டுபிடித்துவிடலாம் பாட்டி., அவங்க பாக்குற பார்வையில ஒரு திருட்டுத்தனம் இருக்கும்.,

      நான் நம்புறேன்.,  அப்படி ஒருத்தர மீட் பண்ணுவேன்னு நம்புறேன்., நீங்களும் நம்புங்க., நம்ப முடியலன்னா போய் சாமி கும்பிடுங்க., அந்த மாதிரி ஒருத்தன சீக்கிரம் என் பேத்தி கண்ணுல காட்டுன்னு., அதை விட்டுட்டு சும்மா  அப்படி ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவ., இப்படி ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவ ன்னு கொஸ்டின் கேட்க கூடாது., ஒரு வேலை நான் நினைக்கிற மாதிரி ஒருத்தன் கிடைக்கலன்னா.,

     கிடைக்கலைன்னா., நல்ல நோட் பண்ணனும் சரியா, கிடைக்கலன்னா நீங்க பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா”, என்று சொல்லிவிட்டு கையை கழுவிக்கொண்டு வந்தவள்.,



Advertisement

கல்லூரிக்கு கிளம்ப தொடங்கவும், பாட்டி தான் “இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம்., நம்ம மதுரைக்கு போகனும்”, என்று சொன்னார்.

    இவளோ “எக்ஸாம் அன்னைக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கீங்க, அப்புறம் நான் எப்படி உங்க கூட வர முடியும் நீங்க போங்க, நான் எக்ஸாம் முடிச்சிட்டு தான் வருவேன்”, என்று சொன்னாள்.

    அவள் அண்ணன் தான், “நான் உன் கூட இருந்து வரேன்”, என்று சொல்ல,

Advertisement

     “இல்ல ண்ணா நீ முன்னாடி போ., நான் வந்துருவேன்”, என்று சொன்னாள்.

Advertisement

   “மதுரைக்கும் சென்னைக்கும் என்ன பக்கமா இருக்கு, நீ எக்ஸாம் முடிச்சிட்டு எப்ப வந்து சேருவ”, என்று கேட்டார்.

   “அதெல்லாம் வந்திடலாம் பாட்டி, நீங்க காலையில போறீங்க., ஈவினிங் தானே என்கேஜ்மென்ட்., நீங்க போய் அங்க எல்லாம் ரெடி பண்ணுங்க., எப்படியும் ஹோட்டல்ல தான் தங்க போறீங்க., ஈவினிங் கோவிலுக்கு போகணும்  இல்ல., கோயில் போயிட்டு வந்து தானே மண்டபத்தில் வைத்து என்கேஜ்மெண்ட்., நீங்க கோயிலுக்கு போற டைமுக்கு நான் வந்து சேர்ந்திடுவேன்., எனக்கு மத்தியானம் எக்ஸாம் முடிஞ்சிடும்., மத்தியானம் பிளைட்ல கிளம்பினேனா அங்க வந்து ஒரு ஒன் அண்ட் ஆப் ஹவர் ல்ல அங்க சேந்துருவேன், நேரா கோயிலுக்கு வந்துடுறேன் சரியா., நான் இங்க இருந்து ரெடியாவே கிளம்பி வந்துடறேன், அப்ப கோயிலுக்கு வந்துட்டேனா சரியா இருக்குமா.,

     அப்புறம் உங்க கூடவே  மண்டபத்துக்கு வந்துருவேன் சரிதானா., இதுக்கு டென்ஷன் ஆகாதீங்க., எல்லாரும் சேர்ந்து உங்க பிளான் அவங்க பிளான்னு  என்னையே சுத்தி சுத்தி வர கூடாது சரியா., நான் என்னை பார்த்துப்பேன்.,

Advertisement

      நான் ஒன்னும் சின்ன பாப்பா கிடையாது., நீங்கதான் சொன்னீங்களே 25 வயசு ஆச்சுன்னு.,  25 வயசு ஆச்சு தானே என்னை நானே பார்த்துப்பேன் ஓகேவா.,  அண்ணாவுக்கு பாருங்க, அண்ணாக்கு வர போற பொண்ணுக்கு தேவையானதை செய்யுங்க., அந்த வேலை மட்டும் பாருங்க என்னை நான் பாத்துப்பேன்”, என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றாள்.

அதுவரை அமைதியாக அவள் அப்பாவும் அண்ணனும் அமர்ந்திருந்தனர்.

    பாட்டி தான் “மழை பெஞ்சு ஒய்ஞ்ச  மாதிரி இருக்குடா., உன் பிள்ளை பேசுற பேச்சு, காது வலிக்குது பாரு” என்று சொல்ல.,

     “ஏமா அவ எத்தனை தடவை இந்த டயலாக் சொல்லிட்டா., நீங்க திருப்பி கேட்டாலும் இதுதான் சொல்லுவான்னு தெரிஞ்சு தான் நானும் இவனும் வாயை மூடிட்டு உட்கார்ந்து இருந்தோம், உங்களுக்கும் உங்க மருமகளுக்கும் தான் பொறுக்கலை.,  நீங்க தான் பேச்ச ஆரம்பிச்சிங்க”, என்று சொல்லவும்.,

     “நாங்க மட்டுமாடா., முதல்ல தொடங்கி வைத்ததே உங்க அப்பா தான்”, என்று சொல்லவும்.,

    “என்னமோ போங்க., அவ சொல்றதுல, அவ பிடிவாதத்தில் தான் நிக்கா, எத்தனை தடவை பேசி பார்த்துவிட்டோம்., ஒரு வயசுக்கு மேல.,   பிள்ளைகள் ட்ட வற்புறுத்த முடியாதுமா., அதுவும் இந்த காலத்து பிள்ளைங்க, அவங்க சொல்லுறது தான் சரின்னு நிக்கிறாங்க.,  இப்போ உள்ள பிள்ளைகளுக்கு நிறைய விஷயங்கள் தெரியுது, நம்ம யாரையும் குறை சொல்ல முடியாது, அவ இஷ்டம் ன்னு விடனும் பாப்போம்., பொறுங்க அவதான் சொல்லி இருக்க இல்ல., அவ நினைக்கிற மாதிரி அவளுக்கு கிடைக்கலன்னா., நம்ம பாக்குறவங்களை பண்றேன்னு, என்ன இன்னும் ஒரு ரெண்டு வருஷம் டைம் கேக்குறா,  அவ்வளவு தானே விடுங்க.,

     27 வயசு வரைக்கும் அவ தேடுவாளாம், 27 வயசுக்கு அப்புறம் கிடைக்கலைன்னா, நம்ம தேடுவோம் விடுங்க விடுங்க”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.

    மாப்பிள்ளை வீட்டார் சார்பாக இவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு செய்ய வேண்டிய முறைகளைப் பற்றி அங்கு பேச்சு வர., அதன் பிறகு திருமண பேச்சு மட்டுமே அங்கு இருந்தது., அவளைப் பற்றி யாரும் பேசவில்லை அவளது பிடிவாதம் தெரிந்தவர்களாக.,

    மதுரையில் பெண் வீட்டிலுமே திருமண வேலைகள் பற்றிய பேச்சுகளும்.,

என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

     அவர்கள் அங்கு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர், மதுரையில் முக்கிய பகுதியில் வியாபாரம் செய்து வருபவர் பெரியவர் சேகரன், அவரது மனைவி தனம்,

    அவருக்கு மூன்று மகன்கள் மூத்தவருக்கு ஒரு மகன் மட்டுமே., இளையவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்., மூன்றாவது மகனுக்கு இரண்டு மகன்கள்., வீட்டின் ஒரே பெண் பிள்ளையான சரிகாவை தான் நித்திலனுக்கு பேசி முடித்து இருக்கிறது.

    மூவருக்கும் அவள் ஒருத்தி தான் பெண் என்பதால் அந்த திருமணத்தை அத்தனை பேரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பெண்ணுக்கு முடித்த பிறகு தான் பேரன்களுக்கு பார்க்க வேண்டும் என்பதில் தாத்தா உறுதியாக இருந்தார்.

   தாத்தா தன் பெரிய மகனை பார்த்து, “எப்பா பாண்டியா பெரியவனுக்கு சொல்லிட்டியா, என்னைக்கு வரானாம்”, என்று கேட்டார்.

       “வந்திருவான்னு சொல்லிட்டாய்ன் ப்பா கரெக்டா வந்துருவாய்ன்”, என்று சொல்லவும்,

     “அவன் சொன்னான் னா செஞ்சு போடுவான்., ஆனா சரியா வரணும் இல்ல அதுக்குதே கேட்டேன்”, என்று பேசிவிட்டு மற்றவர்களை பார்க்க.,

      அவர்கள் தங்கள் பங்குக்கு செய்து கொண்டிருக்கும் வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    பெரியவர் தன் தந்தை செய்யும் வியாபாரத்தை தொடர்ந்து செய்து கொண்டே, பத்தாதற்கு விவசாயத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சின்னவர் தனியாக தொழில் தொடங்கியது மட்டுமல்லாமல், பெரியவரின் தொழிலையும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வார்., ஆனால் பெரியவரின் தொழில் மூன்று மகன்களுக்கும் பங்கு உண்டு., அதை தவிர அவரவர் தனித்தனியாக ஒவ்வொரு தொழில் செய்தனர்.

பெரியவர் மட்டும் விவசாயம் தோட்டம் என்று சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தார். பெரிய மகனின் மனைவி ஒரு வாயில்லா பூச்சி என்ன சொன்னாலும் சரி என்று அமைதியாக கொண்டு செல்லும் மருமகள்., மாமியாருக்கு மூத்த மருமகளை பிடிக்கும்., ஆனால் இரண்டாவது மருமகள் பாட்டியின் அண்ணன் மகள் என்பதால் சற்று பிரியம் அதிகம் தான்., அதற்காக மற்ற இரண்டு மருமகள்களையும் விட்டுக் கொடுப்பவர் அல்ல.,

     “நீ என் அண்ணன் மக அப்படிங்கிறனால, உனக்கு இங்க எந்த தனி உரிமையும் இல்லை, என்ன நீ முன்னாடியே தெரிந்தவ சின்னத்திலிருந்து பார்த்தவ ன்கிறதால நீ கொஞ்சம் உரிமையா பேசுத அவ்வளவுதான்., அதுக்காக மத்த ரெண்டு மருமகளையும் நான் உன்கிட்ட விட்டுக் கொடுத்து விடுவேன் அப்படின்னு நினைக்காத., எனக்கு மூணு பேரும் சமம் தேன்”, என்று அடிக்கடி இரண்டாவது மருமகளிடம் பாட்டி சொல்லும் வார்த்தை தான் இது.,

     ஏனெனில் இரண்டாவது மருமகள் கொஞ்சம் தனக்கு தான் எல்லா உரிமையும் உண்டு என்பதைப் போல காட்டிக் கொள்ள நினைப்பவர்., அதை கட்டுப்படுத்துவதற்காக பாட்டி அவ்வப்போது சொல்லும் வார்த்தை அது.,

     வீடு மூன்று குடும்பமும் சேர்ந்து இருப்பது போல பெரிய வீடு என்றாலும்., அவர் அவருக்கான தனிப்பகுதிகளும் உண்டு.

வீட்டின் பக்கவாட்டில் வீட்டோடு சேர்ந்து எடுத்தார் போல கீழ் பகுதியும் மேல் பகுதியுமாக வீடு இருக்கும்.

வீட்டின் பெரியவர்களும் வீட்டின் பிள்ளைகளுமே அக் குடும்பத்தின் ஒற்றுமைக்கு மூல காரணம் என்றாலும்., மூத்த மருமகளும் ஒருவகையில் காரணமாகவே இருந்தார்.

  வீட்டிற்கு வீடு வாசப்படி என்பது போல ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் பிரச்சனைகளுக்கு ஏற்றார் போல சில முகத்திருப்பலும் உண்டு,  ஆனால் அவை எவற்றையும் ஒற்றுமையான நாள்களில் காட்டுவது இல்லை.

தாத்தா தான் அனைவரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்., “ஆளுக்கு ஒரு வேலையா இழுத்து போட்டு பாருங்கப்பு, அப்பத்தேன் சட்டுபுட்டுன்னு கல்யாண வேலை வேகமாக நடக்கும்., நிச்சயதார்த்த தேதி நம்ம இஷ்டப்படி முடிச்சாச்சு., கல்யாண தேதி அவங்க இஷ்டப்படி  இருக்கட்டும், அவக என்ன சொல்றாவுகளோ அது படி கேட்டுக்குவோம், ஆளுக்கு முந்திக்கிட்டு நிச்சயதார்த்த தேதிக்கு இத வச்சுக்கலாம் ன்னு சொன்ன மாதிரி நீங்களா சொல்லாதீங்கப்பு, அவுக யோசிச்ச மாதிரி இருந்துச்சு”, என்று சொல்லவும்,

   இளைய மகனோ அவர் மனைவியை முறைத்து பார்த்தார். ஏனெனில் நிச்சயதார்த்ததிற்கு அவசரமாக தேதியை குறிப்பிட்டு சொன்னவர் அவர்தான்.,

     மூன்று நான்கு தேதிகள் கொடுத்திருக்க, அவர்கள் யோசனையோடு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க., அவர்கள் எந்த தேதியை யோசனையாக சொன்னார்களோ., அதே தேதியே அவசரமாக சொன்னார்.

    ஒரு நிமிடம் எல்லோருமே யோசிக்க தான் செய்தனர்., இவரும் கல்யாண பெண்ணை காரணம் காட்டி அந்த தேதியை சொன்னார்., வேறு வழியின்றி அனைவருமே சரி என்று சம்மதித்திருந்தனர். அவர் ஆசைப்பட்ட தேதியும் நெருங்கிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!