Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 12 2

                 

திடீரென்று கதிரிடம் பேச சொல்லி போன்னை கொடுத்ததும் சந்தியாவுக்கு உடலெங்கும் இனிய படபடப்பு. அவள்சொல்லுங்க மாமா…என்றாள் மெதுவாக.

ஹாய் பொண்டாட்டி, எப்படி இருக்க…?” என்ற கதிரின் துள்ளலான குரலில். சந்தியாவின் வருத்தங்கள் சட்டென்று மறைந்து முகம் பிரகாசமானது. 



Advertisement

சந்தியா பதில் சொல்லாமல் அமைதியாகப் புன்னகைத்தபடி நிற்க, “என்னடி எதுவுமே பேச மாட்டேங்கிற…?” என்று கதிர் அடுத்தக் கேள்விக்குத் தாவ, 

இங்க நிறையப் பேர் இருக்காங்க மாமா…என்றாள் சந்தியா கிசு கிசுப்பாக. அவளின் நிலையைப் புரிந்து கொண்ட கதிர்அப்படியா சரி நைட் பேசுறேன்.என்று போனை வைக்க, சந்தியாவும் வைத்தாள். 

பெரியசாமியும், சந்தியாவும் பேசுவதைத் தூரத்தில் இருந்து துரை பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அவருக்கும் கதிர் வராதது கோபம் தான். பெரிய இவன்னு பந்தா காட்டுறான் போலிருக்கு என்று கதிரை மனதிற்குள் திட்டிக்கொண்டு தான் இருந்தார். அவருக்குத் தெரியவில்லை இனி அவன் தான் தன்னை ஆட்டிவைக்கப் போகிறான் என்று. 

Advertisement

கதிர் பேசியது சந்தியாவுக்கு சற்று தெம்பாக இருந்தது. அவள் முகத்தில் வருத்தம் மறைந்து மலர்ச்சி தோன்றியது. சந்தியாவுடன் கூடவே சித்ரா இருந்து அவளைப் பார்த்துக்கொண்டாள்.  அங்கே நந்தினி கொதித்துப் போய் இருந்தாள். மகேஷ் முகம் இறுக அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவன் நிச்சயமாக இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவனொன்று நினைத்துச் செய்ய, நடந்தது வேறொன்று. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் சந்தியாவை மணக்க சம்மதம் சொல்லியிருக்கலாமே என்று இப்போது நினைத்து வருத்தப்பட்டான். 

Advertisement

நிச்சயம் முடிந்த அன்று இரவு சந்தியா சித்தார்த்தை அழைத்தாள். நிச்சயத்தைப் பற்றி அவள் இதுவரை சித்தார்த்திடம் எதுவும் சொல்லவில்லை. ஏன் ஊருக்கு வந்த பிறகு அவனை அழைக்கவேயில்லை. இப்போது தான் அழைக்கிறாள். 

ஹே சந்தியா எப்படி இருக்க…? பிரச்சனை ஒன்னும் இல்லையே. நான் போன் பண்ணா உனக்கு எதாவது பிரச்சனை ஆகப்போகுதுன்னு நினைச்சு தான் இதுவரை போன் பண்ணலை…..என்று சித்தார்த் பேசிக்கொண்டே செல்ல.

இடையில் சந்தியாஎனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு சித்து.என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் சித்தார்த் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டான். 

Advertisement

என்னடி சொல்ற…. கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சா…. 

ஆமாம் டா இன்னைக்குத் தான்.என்றாள் சந்தியா. 

அவள் குரலில் வருத்தமோ, அழுகையோ இல்லாததை வைத்தே மாப்பிள்ளை யார் என்பதைப் புரிந்து கொண்ட சித்தார்த்உனக்கு என் கிட்ட இப்ப தான் சொல்லனும்னு தோணுச்சா. உன் கதிர் மாமா வந்ததும் என்னை மறந்துட்ட இல்லை….என்று கோபத்தில் போனை வைத்து விட, சந்தியா அவனை மீண்டும், மீண்டும் அழைத்தாள். 

சிறிது நேரம் அவளைத் தவிக்க விட்டே போன்னை எடுத்தான் சித்தார்த். போன்னை எடுத்த போதிலும் அவனாகப் பேசவில்லை.  அவன் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்த சந்தியாசாரி டா சொல்லக் கூடாதுன்னு இல்லை. எனக்கே நிச்சயம் நடக்குமான்னு கடைசிவரை பயமா இருந்தது. கதிர் மாமாவே நிச்சயத்துக்கு வரலை தெரியுமா….அவள் ஊருக்கு சென்ற பிறகு நடந்த அனைத்தையும் சொல்ல, 

என்ன இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லாம இருந்ததை என்னால ஏத்துக்க முடியாது. உன்னோட கல்யாணத்துக்காவது என்னைக் கூப்பிடுவியா. இல்லை அதுக்கும் சொல்லமாட்டியா…சித்தார்த் சுருக்கென்று கேட்டுவிட. 

சந்தியாவின் கண்களில் கண்ணீர் வழிந்ததுநீ கூட என்னைப் புரிஞ்சிக்களைன்னா எப்படிச் சித்து. இன்னும் படிப்பே முடியலை. அதுக்குள்ள கல்யாணம். எனக்குச் சந்தோஷப்படுறதா, இல்லை வருத்தப்படுறதான்னே தெரியலை… 

எங்க அப்பா வீம்புக்குன்னு பண்றார். கடைசிவரை எதாவது சண்டை போட்டு, எங்க அப்பா நிச்சயத்தை நிறுத்தி விடுவாறோன்னு பயத்தில தான் இருந்தேன் தெரியுமா…. 

சந்தியா அழுததும் சித்தார்த்துக்கு வருத்தமாகப் போய்விட்டதுசரி அழாத விடு. எதோ கோபத்தில பேசிட்டேன். உன் கல்யாணத்தில ஒரு கலக்கு கலக்கிடுறேன் பாரு.என்றான் சமாதானமாக. 

அதற்குள் கதிர் அழைப்பதை பார்த்த சந்தியாகதிர் மாமா கால் பண்றாங்கடா. நான் அப்புறம் பேசுறேன்.என்றாள். 

ம்ம், இனி ஒரே ரொமான்ஸா நடக்கட்டும். நடக்கட்டும்.என்று சித்தார்த் போன்னை வைக்க. சந்தியா புன்னகையுடன் கதிரின் அழைப்பை ஏற்றாள். 

நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே வெறும் நாற்பது நாட்களே இருந்தது. அதிலும் கதிர் இப்போது பார்த்து புது இடத்தில் வேலைக்குச் சேர்ந்ததால். அவனால் விடுமுறை எடுக்க முடியாமல், பெரியசாமியே எல்லாவற்றையும் பார்க்க வேண்டியதாக இருந்தது. 

தன் மகனின் திருமணம் என்ற உற்சாகத்தில். உடம்பு முடியாத நிலையிலும் பெரியசாமி திருமண ஏற்பாடுகளைச் சிறப்பாகவே செய்தார். பெரியசாமியும், துரையும் நேரடியாகப் பேசிக்கொள்வது இல்லை. எது பேசுவது என்றாலும் பாண்டியனை நடுவில் வைத்தே பேசிக்கொண்டனர். 

பெரியசாமிக்கு தன் மகன் இருக்கையில் சந்தியாவுக்குத் துரை வெளியே மாப்பிள்ளை பார்த்த வருத்தம். துரைக்கு வீம்பு. துரை சென்று பேசியிருந்தால் பெரியசாமியும் பேசியிருப்பார் தான், ஆனால் துரை இறங்கி வருவதாக இல்லை. கதிருக்கு கல்யாண கனவு காண நேரம் இல்லை. அலுவலகத்தில் திருமணத்திற்கு ஒரு வாரம் விடுமுறை கேட்டிருந்ததால். அதற்கும் சேர்த்து இப்போது அதிக நேரம் அவன் வேலை பார்க்கும்படி இருந்தது. அதிக வேலை இருந்தாலும் சந்தியா கைப்பேசியில் அழைக்கும் போது. எடுத்துப் பேசுவான். 

கதிருக்கு சந்தியா மீது எந்த வருத்தமும் இல்லை. முதலில் அவள் மீது வருத்தம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை. அதனால் அவளோடு இயல்பாகப் பேசுவான். தன் தந்தையால் மனதில் காயம்பட்டிருந்த சந்தியாவுக்குக் கதிரின் பேச்சு ஆறுதலாக இருந்தது. 

அவர்கள் பேசும்போது துரையைப் பற்றிப் பேச்சு வந்தால், கண்டிப்பாக அதைக் கதிர் தவிர்த்து விடுவான். இல்லையென்றால் வேறு விஷயத்துக்குத் தாவி விடுவான். அதைச் சந்தியாவும் உணர்ந்து தான் இருந்தாள். அவளுக்கு மனதிற்குள் கலக்கமாகவே இருந்தது. 

பெரியசாமி அலைய முடியாத காரணத்தால், ஒரு ஞாயிற்றுக் கிழமை கதிர் நேரில் சென்று சுபாஷ் குடும்பத்திற்குப் பத்திரிகை வைத்துவிட்டு வந்தான். அப்போது அவன் சுபாஷின் பெற்றோரை கண்டிப்பாகத் திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைக்க, அவர்கள் தயங்கினார்கள். 

அவர்களின் தயக்கத்தை உணர்ந்த கதிர், நீங்களும் எங்க குடும்பம் தான். அதனால கண்டிப்பா வந்து முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும் என்று அழைத்த போது, சுபாஷின் பெற்றோர் மனம் மகிழ்ந்தனர். 

கதிர் திரும்பி செல்லும் போது ரயில் நிலையம் வரை சுபாஷும் அவனுடன் சென்றான்.எங்க கல்யாணம் நடந்த போது. நீங்க ரொம்பக் கோபமா இருந்தீங்க கதிர். இப்ப கோபம் போய்டுச்சா?” 

இல்ல இப்பவும் அந்தக் கோபம் இருக்கு. இப்பவும் நீங்க அன்னைக்குச் செய்ய நினைச்ச கல்யாணத்தை நான் சரின்னு சொல்ல மாட்டேன்.என்ற கதிர் சுபாஷின் பக்கம் திரும்பி நின்று

பிறகு ஏன் உங்களை நேர்ல வந்து கல்யாணத்துக்குக் கூப்பிட வந்தேன்னு நினைக்கிறீங்களா? அது நீங்க எங்க குடும்பத்திற்குள்ள வந்த விதம் வேணா தப்பா இருக்கலாம், ஆனா, நீங்க தப்பானவர் இல்லைன்னு புரிஞ்சதுனால. அதோட நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை. நாங்க செய்ய வேண்டிய மரியாதையை ஒழுங்கா செய்யணும் இல்ல…என்று கதிர் புன்னகையுடன் சொல்ல,

 சுபாஷும் பதிலுக்குப் புன்னகையுடன்தேங்க்ஸ் மாப்பிள்ளை.என்றான். 

கதிருக்கு ஏற்கனவே தங்கள் திருமணத்தில் வருத்தம் என்று தெரியும். அதோடு தன் திருமணத்தின் பொருட்டே சந்தியாவைக் கதிருக்கு கொடுக்க மாட்டேன் என்று துரை சொன்னதும் சுபாஷ்கு தெரியும். அதனால் கதிர் எப்படி நடந்துகொள்வானோ என்று மனதிற்குள் கவலைப்பட்டுக்கொண்டு தான் இருந்தான். ஆனால் இப்போது கதிரே நேரில் வந்து தன் திருமணத்திற்கு அழைத்ததும், சுபாஷுக்குச் சந்தோஷமாக இருந்தது. 

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஊர் கோவிலில் கதிர், சந்தியா திருமணத்தை முன்னிட்டுச் சிறப்புப் பூஜை நடந்தது. சந்தியா குனிந்த தலை நிமிராமல் பூசாரி சொன்னபடி பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். சுற்றி இருவரின் பெற்றோர்களும், உறவினர்களும் இருந்தனர். 

அப்போது கதிர், சித்தார்த், அனு, ஸ்ரீஜா, பாலா மற்றும் அவன் மனைவி, குழந்தையுடன் காரிலிருந்து இறங்கினார்கள். சந்தியா பூஜையில் கவனமாக இருந்ததால் அவர்களைக் கவனிக்கவில்லை.  சித்தார்த், அனு மற்றும் ஸ்ரீஜா அவளிடம் திருமணத்தன்று வருவதாகத் தான் சொல்லியிருந்தனர். அதனால் அவள் அவர்களை அப்போது எதிர்பார்க்கவும் இல்லை. 

நம்ம பார்த்ததும் சந்தியா துள்ளி குதிக்கப்போறா…என்று அனு சொல்ல,

நீங்க சென்னையில் பார்த்த சந்தியாவையே இங்கயும் எதிர்பார்க்காதீங்க. அவ எல்லோரும் இருக்கிறதுனால ரொம்ப அடக்க ஒடுக்கமா இருப்பா…என்று கதிர் புன்னகையுடன் சொல்ல, அனு அதை நம்பவில்லை. 

கதிரை பார்த்ததும் எல்லோரும்வா கதிரு…என்று அவனைச் சூழ்ந்து கொள்ள, சந்தியாவிற்குக் கதிரின் பெயரை கேட்டதும் படபடப்பாக இருந்தது. அவள் குனிந்த தலை நிமிராமல் பூஜையில் கவனமாக இருந்தாள். 

அவளுக்குச் சிறு வயதிலிருந்தே கதிரை தெரியும் தான் இருந்தாலும், திருமணம் என்றவுடன் மனதிற்குள் புரியாத ஒரு பயம்.  துரை இதற்கு முன்பு இருந்தது போல் கதிரை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இப்போது அவன் தான் மாப்பிள்ளை. அவர் கண்டிப்பாக வா என்று அவனைக் கேட்க வேண்டும். 

அங்கு இருந்த உறவினர்கள் சிலர்துரை, மாப்பிள்ளை வந்திருக்கார் பாரு. போய் வாங்கன்னு சொல்லி கூப்பிடு…என்றதும், அவர்கள் முன்பு கோபத்தைக் காண்பிக்க முடியாமல், துரை சென்று கதிரைவாங்க…என்று அழைக்க. அவரின் நிலையை உணர்ந்த கதிர் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவரைப் பார்த்து தலை அசைத்தான். 

இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சந்தியாவுக்குத் தன் அப்பா கதிரிடம் எப்படி நடந்து கொள்வாரோ என்ற கவலை இருந்தது. அதனால் அவள் ஓரக்கண்ணால் அவர்கள் இருவரையும் பார்த்தாள். ஆனால் அப்போதும் அவள் தன் நண்பர்களைப் பார்க்கவில்லை. 

எல்லாச் சந்நிதியிலும் பூஜை நடந்தது, சந்தியா நிமிர்ந்து கதிரை மட்டுமில்லை வேறு யாரையும் பார்க்கவில்லை. காவேரி சென்றுஅண்ணன் உன்னைக் கூப்பிடுது சந்தியா….என்றவுடன் சந்தியாவுக்கு மேலும் படபடப்பானது. அவள் வர மாட்டேன் என்று மறுத்து, தன் உறவு பெண்களுடன் சென்று நின்று கொண்டாள். 

கதிர் அவள் செய்வதை எல்லாம் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்க. அனுவும், ஸ்ரீஜாவும் இது நம்ம சந்தியாவா என்று ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சித்தார்த் கிராமத்துக்கு வருவது இது தான் முதல் முறை என்பதால், அந்தக் கோவிலை சுற்றி பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். 

முருகன் சந்நிதியில் பூஜை நடக்கும் போது. சந்தியா மெதுவாகத் திரும்பி கதிரை பார்க்க. கதிரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்து மீண்டது, அது இருவருக்கும் சுகமாகவும் இருந்தது. 

சந்தியா புன்னகையுடன் முன்புறம் திரும்பிக்கொள்ள, கதிரின் அருகில் நின்ற பாலாஎன்னடா நடக்குது இங்க…?” என்றான் கிசுகிசுப்பாக. 

நீ சாமி கும்பிடாம இங்க என்னடா பார்க்கிற?” என்றான் கதிர் பதிலுக்குப்        புன்னகையுடன். 

எல்லாம் நேரம்டா…என்று பாலா புலம்பும் போது. சந்தியா மீண்டும் திரும்பி கதிரை பார்க்க, அதுவரை கதிரின் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த சித்தார்த், சட்டென்று கதிரின் முன்பு வந்து நின்று, சந்தியாவைப் பார்த்து ஹாய் என்று கை அசைத்தான். 

சந்தியா அங்கே சித்தார்த்தை பார்த்ததும், நம்ப முடியாத ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றுவிட்டாள். அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.  சித்தார்த் திருமணத்தன்று வருவதாகத் தான் சொல்லியிருந்தான். ஆனால் அவன் வருவானோ, மாட்டானோ என்று கவலையில் இருந்த சந்தியாவிற்கு, சித்தார்த் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்தது, சந்தோஷத்தில் கண்ணீரை வர வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!