Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 15 2

“போச்சா”, என்று கேட்ட படி அவளிடம் இருந்து விலகி அமர்ந்தான். சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் வினோதினி. அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் பிஸியாக தான் சென்றது. 

திருமண வேலைகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்கள். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வினோதினி வீட்டினர் வந்து விட்டனர். 



Advertisement

ஒரு வழியாக இன்பா வினோதினி திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு விஜியும் குடும்பத்துடன் வந்திருந்தாள். 

வினோதினிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க நேராக அங்கே வந்த விஜி அங்கே யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் “என்ன பெரிய இடம் கிடைச்சிட்டுன்னு ஆடுறியா? நிச்சயத்துக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலை? கூடப் பிறந்த அக்காவாச்சேன்னு தான் வந்தேன். கல்யாணம் முடிஞ்சதும் போயிருவோம்”, என்று கத்தி விட்டுச் செல்ல வினோதினி அவளையே திகைப்பாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

Advertisement

Advertisement

“அவளை விடுக்கா. சில ஜென்மங்கள் எவ்வளவு நாள் ஆனாலும் மாறாது. அதுல ஒண்ணு தான் இவளும்”, என்றாள் அணு. அது உண்மை தான் என்று எண்ணிக் கொண்டாள் வினோதினி.

சிறிது நேரத்தில் அவளை அழைத்து வந்து மணமேடையில் இன்பா அருகில் அமர வைத்தார்கள். வெட்கத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். 

Advertisement

ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அனைவரின் ஆசியோடு அவள் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான். திருமணமும் அதை தொடர்ந்து வந்த சடங்குகளும் நல்ல படியாக நடந்தது. 

அன்றைய இரவு வினோதினி தங்கி இருந்த வீட்டில் தான் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வினோதினி வீட்டினரை பெரிய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டாள் பாமா. 

அனைவரும் அங்கு சென்றதும் எப்போதும் போல திண்ணையில் நிலவைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள் வினோதினி. இன்பாவுக்காக காத்திருந்த அவளை தனிமை உணர்வு அண்டவே இல்லை. அவள் மனது நிறைந்திருந்தது. 

எப்போது விடுவார்கள் என்று எண்ணி வீட்டில் அமர்ந்திருந்த இன்பா அவர்கள் சொன்னதும் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என மனைவியைத் தேடி ஓடி இன்பா. அவனைக் கண்டு அவள் புன்னகைக்க சந்தோஷமாக அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“ஐயோ கொஞ்சம் தள்ளி உக்காருங்களேன்”, என்று அவள் சிணுங்க “தள்ளி உக்காரணுமா? அதுக்கு வாய்ப்பே இல்லை. இனி அந்த கிழவி கூட என்னைத் தடுக்க முடியாது. சரி உள்ள போகலாமா?”, என்று வெளிப்படையாகவே அழைத்தான்.

அது எதற்கு என்று புரிய “கொஞ்ச நேரம் பேசலாமே?”, என்றாள். “பேச நல்ல நேரம் பாத்த போ? பேச வாழ்க்கை முழுக்க இருக்கு. இப்ப வேற டைம்”, என்று சொன்னவன் அவளை உள்ளே அழைத்துச் சென்று கதவை அடைத்தான். 

அலங்கரிக்கப் பட்ட அறைக்குள் வந்ததும் அவள் தடுமாறி நிற்க அந்த தடுமாற்றம் தன்னிடம் தேவையே இல்லை என்பது போல அவளை அணைத்துக் கொண்டு கட்டிலை அடைந்தான் இன்பா. 

அவளை அவன் காதலுடன் ஆக்ரமிக்க பேச வேண்டும் என்பதையே மறந்தாள் வினோதினி. அங்கே அவர்களின் இல்லறம் அழகாக ஆரம்பித்தது. 

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. காதல் பறவைகளாக இருவரும் பழைய வீட்டிலே இருந்தனர். அங்கு கதிரும் இளவரசியும் இருப்பதால் இவர்கள் சாப்பிட மட்டும் அங்கு சென்று விட்டு மத்த நேரம் இங்கேயே தங்கிக் கொண்டனர். 

இன்பாவும் வினோதினியும் தங்களுக்கு கிடைத்த தனிமையை விரும்பி ரசித்தனர். அடுத்து சென்னைக்கு மறுவீட்டு விருந்துக்கு சென்று வந்தார்கள். அடுத்த நான்கு நாட்கள் கழித்து இருவருமே வேலைக்குச் செல்ல இந்த முறை உரிமையாக அவளை பேங்க்க்கு வண்டியில் அழைத்துச் சென்றான் இன்பா. நாட்கள் எப்போதும் போல நகர்ந்தது. 

ஒரு வழியாக கதிரும் இளவரசியும் எதிர் பர்த்த தருணமும் வந்தது. அன்று தான் அவர்களுக்கு திருமணம். இன்பாவின் திருமணத்தை எப்படி பிரம்மாண்டமாக செய்தாரோ அதைப் போலவே கதிரின் திருமணத்தையும் செய்தார் சிதம்பரம். 

அவருக்கு துணையாக இன்பா எல்லா வேலையையும் செய்தான். நல்ல நேரத்தில் அனைவரின் ஆசியோடு இளவரசி கழுத்தில் தாலியைக் கட்டினான் கதிர் . 

அவர்கள் திருமணம் முடிந்ததும் இன்பாவும் வினோதினியும் அந்த வீட்டுக்குச் சென்று விட்டார்கள். 

இளவரசி அறைக்கு கதிர் வந்து விட இன்பா அறையில் வினோதினியின் பொருள்கள் இடம் பெயர்ந்தது.  

அன்றைய முதலிரவுக்கு கதிர் ஆவலாக இருக்க “இதை இப்ப உடனே வைக்கணுமா? கொஞ்ச நாள் தள்ளிப் போட்டா என்னவாம்?”, என்று கேட்டு அவனுக்கு நெஞ்சு வலியை வர வைத்தார் பார்வதி. 

“கிழவி”, என்று அவன் பல்லைக் கடிக்க “என்ன டா முறைக்கிற? இப்பவே முதலிரவு வச்சா உடனே பிள்ளை உருவாகிருச்சுன்னா என்ன பண்ண?”, என்று கேட்டார்.

“உருவானா என்னவாம்?”, என்று அவன் வெட்கமே இல்லாமல் கேட்க “என்னவா? ஒழுங்கு மரியாதையா ஏதாவது பரீட்சை எழுதி வேலைக்கு போகப் பாரு. பிரெஸிடெண்ட் பதவியா ஆயுசுக்கு சோறு போடும்? நாளைல இருந்து நீயும் இளவரசியும் உக்காந்து பரீட்சைக்கு படிக்கணும்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டார். 

கதிர் முகம் அதைக் கேட்டு விளக்கெண்ணையை குடித்தது போல ஆனது. அதைக் கண்டு சிரித்த இன்பா கதிரிடம் இருந்து நான்கு அடிகளைப் பெற்றுக் கொண்டான். 

“அம்மா, நானே என் பேரன் பேத்திகளைப் பாக்கணும்னு இவனுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சா நீங்க வேலை, படிப்புன்னு சொல்லிட்டு இருக்கீங்க? கதிருக்கு கவர்ன்மெண்ட் வேலைல எல்லாம் நாட்டம் இல்லை. அவனுக்கு பிடிச்சது விவசாயம் தான். எனக்கு அப்புறம் நம்ம பூமியை அவன் தானே பாத்துக்கணும்? எப்படியும் இந்த இன்பா பய செய்ய மாட்டான். அதனால கதிருக்கு என்ன தோணுதோ அதைச் செய்யட்டும். அப்புறம் இளவரசிக்கு தான் கவர்ன்மெண்ட் வேலைக்கு போகணும்னு ஆசை. அவ வினோதினி கிட்டயும் இன்பா கிட்டயும் கேட்டு படிக்கட்டும். அப்படியே குழந்தை உருவானா கூட பாத்துக்க நாம இத்தனை பேர் இருக்கோம் தானே? இப்ப அவங்க சந்தோஷமா இருக்கட்டும்”, என்று மருமகனுக்காக பரிந்து வந்த சிதம்பரம் “அம்மாடி வினோதினி”, என்று அழைத்தார்.

“என்ன மாமா?”

“போய் இளவரசியை ரெடி பண்ணு மா”

“சரிங்க மாமா”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். “எப்பவுமே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. இப்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்”, என்று கதிர் சிதம்பரத்திடம் வழிய “ரொம்ப வழியுது டா துடைச்சிக்கோ”, என்றான் இன்பா. 

இளவரசிக்கு மிதமான அலங்காரம் செய்து விட்டு வெளியே வந்தாள் வினோதினி. அவளை இன்பா ஆவலாக பார்க்க வெட்கச் சிரிப்புடன் அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள். 

பெரியவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க கதிரும் இன்பாவும் மட்டும் தான் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். 

எப்போது இன்பா இங்கிருந்து செல்வான் என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான் கதிர். அவனோ உள்ளே போகும் எண்ணமே இல்லாதவன் போல “அப்புறம் மாப்பிள்ளை, ஊருக்குள்ள ரோடு போடுற வேலை எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”, என்று கேட்டான்.

“நல்லாத் தான் போகுது”

“இப்படிச் சொன்னா எப்படி டா? விளக்கமா சொல்ல வேண்டாமா?”

“என்னத்த மச்சான் இப்ப உனக்கு விளக்கணும்?”

“எங்கல்லாம் ரோடு வரது? அதுக்கு என்ன செலவு ஆகுது? கவர்ன்மெண்ட் கிட்ட இருந்து பண்ட் வந்துச்சா? இப்படி நிறைய இருக்குல்ல?”

“இதை எல்லாம் பேசுற நேரமா டா இது?”

“வேற எப்ப பேசவாம்?”, என்று அவன் கேட்க உள்ளே இருந்த வினோதினிக்கு இன்பாவின் சேட்டை புரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டவள் “என்னங்க இங்க வாங்க”, என்று அழைத்தாள்.

“ஒரு பத்து நிமிஷம் பொறு வினோ. ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்”, என்றான் இன்பா. கதிர் அவனை முறைத்துப் பார்க்க “இப்ப வரப் போறீங்களா? இல்லை நான் கதவை அடைக்கட்டுமா?”, என்று கேட்டாள் வினோதினி.

“ஆத்தாடி”, என்று எண்ணிக் கொண்டு “இதோ வரேன் வினோ”, என்று சொல்லி இன்பா எழுந்து கொண்டான். அவனைப் போக விடாமல் பிடித்த கதிர் “எங்க மச்சான் போற? நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டாமா? இன்னைக்கு முழுக்க நாம பேசிட்டே இருக்கலாம்”, என்றான்.

“ஹி ஹி, நாளைக்கு எல்லாம் பேசலாம் மாப்பிள்ளை”

“நாளைக்கு எல்லாம் மறந்துரும்”

“டேய் உனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட் டா. உள்ள போ”

“ஓ, எனக்கு முத ராத்திரின்னு உனக்கு இப்ப தான் தெரிஞ்சதா? இவ்வளவு நேரம் மொக்கை போடும் போது தெரியலையா?”

“சரி சரி விடு. உள்ள தங்கச்சி வெயிட் பண்ணுறா. சீக்கிரம் போ”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து இன்பா ஓட சிறு சிரிப்புடன் கதிரும் அவனது அறைக்குச் சென்றான். 

உள்ளே வந்த இன்பாவைக் கண்டு “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?”, என்று கேட்டாள் வினோதினி. 

“ஏன் டி?”

“உங்களுக்கு கதை பேசணும்னா என் கிட்ட பேச வேண்டியது தானே? அண்ணனை எதுக்கு அப்படி படுத்தி எடுக்குறீங்க?”

“உன் கிட்ட பேச வந்தா தான் பேச தோணவே மாட்டிக்கே”, என்று சொல்லிக் கொண்டே அவளை இழுத்து அணைத்தவன் அதன் பிறகு எதுவும் பேச வில்லை.

அங்கே அறைக்குள் சென்ற கதிர் கதவை அடைக்க படபடப்புடன் அமர்ந்திருந்தாள் இளவரசி. அவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. 

முழு அலங்காரத்தில் தேவதை போல இருந்த அவளின் கோலம் அவனைக் கவர்ந்தது. வேகமாக அவளை நெருங்கினான். அவன் நெருங்கியதும் கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள். ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. 

அவன் அவளை இன்னும் நெருங்க கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவனது மூச்சுக் காற்று அவளுடைய முகத்தில் பட்டது. ஆனாலும் விழி திறக்க வில்லை. அவளுடைய இடையில் கை வைத்த கதிர் அவளது தலையை நிமிர்த்தி மூடிய இமைகளின் மீது முத்தமிட்டான். 

அடுத்து அவளுடைய கன்னத்தில் இதழ் பதிப்பான் என்று அவள் எண்ண சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் அவளுடைய இதழ்களை தன்னுடைய இதழ்களால் மூடியிருந்தான். 

அதிர்ச்சியில் கண்களை அகலத் திறந்தவள் அடுத்த நிமிடம் அவனுடைய முத்தத்தில் கரைந்தாள். அந்த முத்தத்தில் இருந்து இருவருமே விடு பட விரும்பவில்லை. அவளது கைகள் உயர்ந்து அவனுடைய சட்டையின் காலரை இறுகப் பற்றியது. 

கதிரோ அவளுடைய இடையில் கை கோர்த்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். பின் இதழ்களில் இருந்து பிரிந்து அவள் கன்னம் காது என்று முத்தமிட்டவன் அவளது தோளில் முகம் புதைத்தான். அவன் கைகள் அவளுடைய மேனியில் எல்லை மீறுவதை உணர்ந்த இளவரசி அவனுடைய தீண்டலில் கரைந்தாள். அவன் மேலும் முன்னேற அவனுக்கு இசைந்தாள். அவர்களின் வாழ்க்கையை அன்றே ஆரம்பித்தார்கள். 

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு இன்பாவின் வீடே பரபரப்பாக இருந்தது. 

இன்பா வினோதினியின் மகன் ராம் என்ற ராமநாதனுக்கு மொட்டை போடும் விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குல தெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுவதாக ஏற்பாடு. பார்வதி சண்முகநாதன் முகம் சந்தோசத்தில் மலர்ந்து இருந்தது. சிதம்பரமும் பாமாவும் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தார்கள். 

இதற்காக சென்னையில் இருந்தும் அனைவரும் வந்து விட்டார்கள். அணுவும் வந்திருந்தாள். அவள் இப்போது டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தாள். அவளை டாக்டருக்கு படிக்க வைக்க முடியாது என்று தேவி சொல்ல இன்பா அவளுடைய படிப்பை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டான். 

பெண்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். “இளவரசி அந்த கரண்டியை எடு”, என்று சொன்னாள் வினோதினி.

“இதோ எடுத்து தரேன் அண்ணி”, என்று சொன்ன இளவரசிக்கு இப்போது ஏழு மாதம். பொங்கல் வைத்து முடித்ததும் மொட்டை போடுபவர் குழந்தையை கொண்டு வரச் சொன்னார். தன்னுடைய மகனை ஏந்திய படி வந்தான் இன்பா. 

“தாய் மாமா மடியில உக்கார வைங்க”, என்று சொல்ல “அண்ணா உக்காருங்க”, என்று சொல்லி கதிரை அமர சொன்ன வினோதினி அவன் மடியில் குழந்தையைக் கொடுத்தாள். நெகிழ்ந்து போய் அவன் அவளைப் பார்க்க “நீங்க எனக்கு என்னைக்குமே என் கூட பிறந்த அண்ணன் தான்”, என்றாள். 

அதன் பின் மொட்டை அடித்து, கிடாய் வெட்டி, சாமி கும்பிட்டு, சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். ராம் இன்பாவின் கைகளில் இருக்க “என் பேரனை என் கிட்ட கொடு டா”, என்று சொல்லி வாங்கிக் கொண்டார் சிதம்பரம். அனைவரின் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருந்தது. 

…..முற்றும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!