Skip to content
Post Views: 925
நேர்மையே..உந்தன் பேர் பெண்மையோ?
குழந்தைகள் விளையாடும் டோமினோக் கட்டைகளை நேர்க்கோட்டில் அடுத்தடுத்து அடுக்கி வைத்ததை போன்று வரிசையாகக் குடியிருப்புகள். இங்கு வசிப்பவர்களுக்கு நுழைவுவாயில், கழிவறை, குளியலறையுடன் வறுமையும், விரக்தியும்கூட பொது.
Advertisement
அதில் இரண்டாவது குடியிருப்பில், 250 சதுர அடியில், குறுஞ்செய்தியாகப் பெண் பார்க்கும் படலம். ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்பதுப் போன்ற தோரணையில் துவங்கினார் தரகர்.
“பையனுக்கு ஏற்கனவே இந்தப் பொண்ணை நல்லாத் தெரியும். அதனால பொண்ணுக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேச வேண்டியதை பேசிடலாம்.” வெற்றிலை பாக்கைக் குதப்பியபடி வார்த்தைகள் விழுந்தன.
Advertisement
Advertisement
தங்கநகை மாளிகையின் மாடலாக அமர்ந்திருந்த பையனின் அம்மா, “எங்ககிட்ட இல்லாததா புதுசா பொண்ணு கொண்டு வந்துடப் போறா? உங்க ஆசைக்கேத்தபடி செய்ங்க.”
என்றார்.
Advertisement
“அம்மாவுக்கு நல்ல மனசு. வெளிப்படையா பேசறாங்க.” ஜிங்சாக் வாசித்தார் தரகர்.
“அபி பேர்ல பேங்க்ல மூணு லட்சம் எஃப்.டி இருக்கு. அவ கல்யாணத்துக்குன்னு சேர்த்து வெச்ச நகை மொத்தம் அஞ்சி சவரன் இருக்கு. அப்பறம் மாப்பிள்ளைக்கு ரெண்டு சவரன்ல காத்திரமா செயின் போடறோம். அவருக்குப் பிடிச்ச மாதிரி புது மாடல் பைக் வாங்கி தந்துடறோம்.” என்றாள் அபியின் அம்மா மரகதம்.
“இப்ப என் பையன் போட்ருக்கானே இந்த மோதிரம், செய்ன், பிரேசுலெட்டு..இதெல்லாம் சேர்த்து மூணு சவரன். நான் பொதுவாச் சொன்னேன்.” என்றாள் தங்கநகை மாளிகை.
கைகளைக் கட்டிக் கொண்டு இதுவரை பொறுமையாக இருந்த அபிநயா, “உங்கப் பையனுக்குக் கை,கால்,மூளை எல்லாம் நல்லாத்தானேம்மா இருக்கு? அப்பறம் ஏன் இப்படிப் பிச்சை எடுக்கறீங்க? நான் பொதுவாச் சொன்னேன்.” என்றதும் ஆவேசமாக எழுந்தாள் பையனின் அம்மா.
“எழுந்துர்றா. ஏதோ நீ ஆசைப்பட்டேன்னுதான் இந்தக் குடிசைக்குள்ள வந்தேன்…ஊரெல்லாம் கடன் வெச்சிருக்கிற இவளுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது.” என ஸ்ரீ மௌனேஸ்வர ஸ்வாமிகளாக இருந்த பையனின் கையை இழுத்தபடி வெளியேறினாள்.
“அம்மா..அம்மா..கொஞ்சம் நில்லுங்க..
மரகதம்..கவலைப்படாதே..நான் அவங்களை சமாதானப்படுத்தறேன்.” என்ற தரகரை கண்களால் எரித்தாள் அபி.
கலங்கி நின்றாள் மரகதம்.
“நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசையெல்லாம் நீ இவனுக்கு அழு.” நொந்து கொண்டாள் அபி.
சுவரில் மாலையோடு மாட்டப்பட்டிருந்த தன் அப்பாவின் படத்தின் முன் கூனியிருந்த தீபத்திரியை நிமிர்த்தினாள். விளக்கேற்றி வணங்கிவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
அபியை தினமும் பின் தொடர்பவர்களுக்குத் தெரிந்த தகவல்கள்..ஆதம்பாக்கத்திலிருந்து காலை 8 மணிக்கு பேருந்து பிடித்துத் தி.நகர் பேருந்து நிலையத்தில் இறங்கி பத்து நிமிடங்கள் நடப்பாள். அவளிடம் இருக்கும் ஒரே கைப்பையின் ஜிப்பை நான்கு முறை மாற்றிவிட்டாள். அவளின் கைப்பையைத் திருடும் எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..கைப்பைத் திறந்ததும் முதலில் தும்முவீர்கள். பிறகு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். கைபேசியைக்கூட சில சமயம் மறந்துவிடுவாள். ஆனால் அவளின் கைப்பையின் நிரந்தர குடிமக்கள்..மிளகு ஸ்ப்ரே மற்றும் சுயமுன்னேற்ற புத்தகங்கள்.
சரியாக 9 மணிக்கு செல்வந்தர் தேவேந்திரனுக்குச் சொந்தமான கறுப்பு பென்ஸ் காரை துணி வைத்துத் துடைத்துக் கொண்டிருப்பாள். அவர் வண்டியில் ஏறியதும், காரை அவரின் ‘சரஸ்வதி புத்தக அச்சக’த்திற்கு ஓட்டிச் செல்வாள்.
தேவேந்திரன் பெரும்பாலும் வெள்ளை வேட்டி – வெள்ளைச் சட்டையில் கலைமகளின் ஆண் உருவமாகத்தான் காட்சி தருவார். மோதிரங்களின் நெரிசலால் விரல்கள் சற்று வீங்கியிருக்கும். தொழிலிலும் தண்ணீர் கலக்காதத் தரமான பசும்பால். இவர் அச்சிட்டு வெளியிட்ட, வழிமுறைகள் மற்றும் விடையுடன் கூடிய பல போட்டித் தேர்வுத் தாள்களின் தொகுப்புப் புத்தகங்களினால், இவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் பல அரசு அதிகாரிகளும், பொறியாளர்களும் உருவாகி இருக்கின்றனர்.
அச்சகத்தின் முன் வீற்றிருந்த சரஸ்வதிச் சிலையை வணங்கிவிட்டு வேகமாக அச்சக அலுவலகத்தினுள் நுழைந்தார் தேவேந்திரன். பின் தொடர்ந்தாள் அபி.
“மணியைக் கூப்பிடும்மா…இன்னும் கொஞ்ச நேரத்துல முக்கியமான க்ளையண்ட்ஸ் வருவாங்க. அவங்களுக்கு ஸ்வீட்,காரம் வாங்கி வரணும்.”
“சார்..இன்னிக்கு மணி லீவு..”
“ஓ..ஆமா..மறந்துட்டேன்.”
“நான் வாங்கிட்டு வர்றேன் சார். வழக்கமா வாங்கற கடைதானே?”
“ஆமாம்மா. வாங்கிட்டு வந்து என் பி.ஏ.கிட்ட கொடுத்துடு. அப்பறமா வண்டி எடுத்துட்டு வீட்டுக்குப் போ. மேடம் கோவிலுக்குப் போகணும்னு சொன்னாங்க.”
கோவில் வாசலில் அமர்ந்திருந்த அனைத்துப் பிச்சைக்காரர்களுக்கும் பாரபட்சமில்லாமல் ஆளுக்குப் பத்து ரூபாய் என தானம் செய்தாள் தேவேந்திரனின் மனைவி ஸ்ரீவள்ளி. தன் காலணிகளை அணியும் முன் மற்றொரு முறை மூலவரை வணங்கிவிட்டுப், பார்க்கிங் பகுதியில் காத்திருந்த காருக்கு வந்தவளின் முகத்தில் கலவரம் இருந்தது.
“வீட்டுக்குத்தானேம்மா..” என ஓட்டுனர் சீட்டிலிருந்த அபி கேட்டதற்கு மிக சன்னமாக “ம்..” என்றாள்.
“அம்மா..எப்பவும் கலகலன்னு ஏதாவது பேசிட்டே வருவீங்களே..ஏம்மா..என்னாச்சு..இன்னிக்கு சாமி உங்ககிட்ட சரியாப் பேசலையா?”
“ம்..பேசினாரு..ஆனா நான் சொல்றதைக் கேக்காம என் பொண்ணு சொல்றதைத்தான் கேக்கறாரு. அதான் எனக்குக் கவலை.”
“ஓ..இப்பல்லாம் சாமியும் வாட்ஸாப்ல பேச ஆரம்பிச்சிட்டாரா?
உங்க புஜ்ஜி என்ன சொன்னாங்களாம்.”
“ஆமா..நான்தான் அவளை கண்ணு..புஜ்ஜின்னு கொஞ்சிக்கிட்டிருக்கேன். அவளுக்கு இந்தியாவுக்கு வர்ற நினைப்பே இல்லை அபி. ஆஸ்திரேலியால மேற்படிப்பு முடிச்சிட்டு வர்றேன்னா. அப்பறம் ப்ராஜெக்ட்ன்னா. இப்ப வேலை கிடைச்சிடுச்சாம். அடுத்துக் கல்யாணம் ஆகிடிச்சின்னு சொல்லப் போறா. எல்லாம் என் தப்புதான். நம்ம அரியலூர் ஜோசியர் எப்பவோ சொன்னார். உங்க பொண்ணும் நீங்களும் பிரிஞ்சி இருக்கற காலம் குறையணும்னா தம்பதியா குலதெய்வம் கோவிலுக்குப் போய் நெய் விளக்குப் போடணும்னு. உங்க சாருக்குத்தான் இந்தப் பரிகாரம்ல எல்லாம் இஷ்டம் இல்லையே. பரிகாரத்தை செய்யாதப் பெரிய கடன்காரியா நிக்கறேன்.”
அபி சட்டென்று சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிறே?”
“இல்லை…நீங்க கடன்காரின்னா எனக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்துடுச்சு.”
புரியாமல் பார்த்தாள் ஸ்ரீவள்ளி.
“என் ஃபுல் ஸ்டோரி உங்களுக்குத் தெரியாதுல்ல?”
“ஏன் தெரியாது..அப்பா இறந்ததுக்கப்பறம் வீட்டைக் காப்பாத்தற பெரிய பொறுப்பு உனக்கு. வாரத்துல அஞ்சி நாள் டிரைவர். சனிக்கிழமை அல்லையன்ஸ் ஃப்ரான்சேஸ்ல ஃப்ரெஞ்ச் டீச்சர். ஞாயிறு நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃபோட பசங்களுக்கு ஆன்லைன் மேத்ஸ் டீச்சர். இப்ப கொஞ்ச நாளா ரெண்டு ஃப்ரெண்ட்சோட புது யூ-ட்யூப் சேனலுக்கு எடிட்டர். அடுத்துக் கரெஸ்ல எம்பிஏ படிக்கப் போறே. ரொம்ப நல்ல பொண்ணு.”
“ம்..இதெல்லாம் வீட்டைக் காப்பத்த மட்டுமில்ல. என் அப்பா ஊரெல்லாம் வாங்கின கடனை அடைக்க. அப்பா ஒரு டிராவல்ஸ்ல கார் டிரைவர். ஒரு ட்ரிப் முடிச்சுத் திரும்பி வரும்போது விபத்துல இறந்துட்டாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பாசம். என் படிப்புக்காகவும், கல்யாணத்துக்காகவும்தான் நிறைய கடன் வாங்கினாரு. இப்ப சொல்லுங்கம்மா..யாரு பெரிய கடன்காரி?”
மௌனமாக இருந்தாள் ஸ்ரீவள்ளி.
மாலையில் வீட்டில் ஓய்வாக ஊஞ்சலாடி கொண்டிருந்தார் தேவேந்திரன். அவர் பருகிய மோர் குவளையைக் கையில் வைத்திருந்தாள் ஸ்ரீவள்ளி.
“சேர்ந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் இந்த அபி பொண்ணு ஒரு தடவைகூட நம்மகிட்ட கடன் பிரச்சனை பத்தி சொன்னதே இல்லையே வள்ளி.”
“ஆமாங்க. சொல்லியிருந்தா எப்பவோ நம்மளால முடிஞ்ச அளவு ஒரு தொகையைக் கடனா இல்லாம சும்மாவே குடுத்திருக்கலாம்.”
“இல்லை வள்ளி. அவ நம்மகிட்டேர்ந்து பணத்தை வாங்கிக்க மாட்டா. எனக்கு வேறு ஒரு யோசனை இருக்கு.”
அன்றைய வேலைகளை முடித்துவிட்டுக் கார் சாவியை தேவேந்திரனிடம் நீட்டினாள் அபி.
“ஃபுல் டேங்க் ஃபில்அப் பண்ணிட்டேன் சார்.” என பில்லையும், மீதிப் பணத்தையும் கொடுத்தாள். “அப்ப நான் நாளைக்கு வந்துடறேன்.”
“அபி. இரும்மா.” என ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார் தேவேந்திரன். “நாளைக்கு இந்த அட்ரஸ்ல இருக்கற ஆஃபீசுக்குப் போ. இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணு. அப்பறம் உன் ப்ரொஃபைல்ல பி.எஸ்சிக்குப் பக்கத்துல எம்.பி.ஏ போட்ரு.
உன்னை பத்தி இந்தக் கம்பெனி ஓனர் அதான் என் ஃப்ரெண்ட்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். இண்டர்வியூ சும்மா ஃபார்மாலிட்டிதான். அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வாங்கிட்டு வா. ஆல் தி பெஸ்ட்.”
“சார்..அது வந்து…நான் எம்.பி.ஏ இல்லையே..”
“இந்த வேலைக்குப் போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சவங்களைத்தான் தேடிட்டு இருந்தாங்களாம். அது பரவால்லைம்மா. அவங்க கம்பெனி ரெக்கார்ட்சுக்குத்தான். வேற ஒண்ணுமில்லை. நீ திறமைசாலி. எதுக்கும் பயப்படாதே.”
விசிட்டிங் கார்டை மேஜை மீது வைத்தாள் அபி.
“இல்லை சார். வேணாம். ஏற்கனவே கடன்காரிங்கற பட்டப்பேர் இருக்கு. ஃப்ராடுன்ற இன்னொரு பட்டப்பேர் வேணாம்.”
“என்னம்மா..பொழைக்கத் தெரியாதப் பொண்ணா இருக்கியே. எல்லாருக்கும் வாய்ப்பு வராது. வரும்போது பயன்படுத்திக்கணும்.”
“சார். கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. உங்க வாழ்க்கைல நீங்க இதுவரைக்கும் கொலை பண்ணலை. ஆனா அதுக்கான வாய்ப்பு வந்தா..நீங்க செய்வீங்களா? என்னை பொறுத்த வரைக்கும் இதுவும் ஒரு கொலைதான் சார். மனசாட்சியைக் கொல்றது.”
“அடப்போம்மா..இதுக்குத்தான் நிறைய படிக்கக்கூடாதுன்றது. ஏதாவது ஒரு விதத்துல உனக்கு உதவணும்னு நினைச்சேன்.”
“எப்பவாவது உதவி வேணும்னா நானே உங்களை கேக்கறேன் சார்.”
அடுத்த நாள்..
“வள்ளி..அபி இன்னிக்கு லீவு ஏதாவது சொன்னாளா? மணி பத்தாகப் போகுது. இன்னும் வரலையே.” அலுவலகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் தேவேந்திரன்.
“ஒண்ணும் சொல்லலையேங்க..போன் பண்ணிப் பாருங்க.”
கைபேசியைக் கையில் எடுத்தவர், ”இதோ..அபியே போன் பண்றாளே..ஹலோ..அபி..என்னாச்சும்மா..ஏன் அழறே?” எனப் பரபரத்தார்.
“சார்..வீட்டுக்கு போலீஸ் வந்திருக்காங்க சார்..என்னை நம்ப மாட்டேங்கறாங்க…என் வாழ்க்கையே முடியப் போகுது..” என எதிர்முனையில் அழுதபடி கூறினாள் அபி.
“போலீஸா..இரு..இரு..நான் உடனே கிளம்பி வர்றேன். பதறாதே.”
‘என்ன?’ என்பது போல் தவித்த வள்ளியிடம், “ஒண்ணுமில்லை..வந்து சொல்றேன்.” என அவசரமாகக் கிளம்பினார் தேவேந்திரன்.
அந்தக் குடியிருப்புகளின் முன் ஒரு விலையுயர்ந்த கார் வந்து மூச்சிரைத்து நிற்கும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். விசாரித்து அபியின் குடியிருப்பிற்கு தேவேந்திரன் வந்தபோது, மரகதமும், அபியும் அழுதுகொண்டு.. ஒரு இன்ஸ்பெக்டர் விறைப்புடன்.. ஒரு லேடி கான்ஸ்டபிள் எந்தவித பாவமும் காட்டாமல் நின்று கொண்டிருந்தனர். மற்ற குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அபி வீட்டின் முன் ஆஜர்.
“இன்ஸ்பெக்டர்.. ஐ ஆம் தேவேந்திரன்.” எனத் தன் விசிட்டிங் கார்டை தேவேந்திரன் நீட்டினார்.
கையில் வாங்கி அதை படித்த இன்ஸ்பெக்டர்
“ம்..இந்தப் பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்?” என்றார்.
“என் கம்பெனிலதான் இந்தப் பொண்ணு மேனேஜரா வேலை பாக்கறா. என்ன பிரச்சனை சார்?”
“மேனேஜரா?” என அபியை மேலும் கீழும் சந்தேகப் பார்வையுடன் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
அபி ஏதோ சொல்ல வர..’வேண்டாம்’ என ஜாடை காட்டினார் தேவேந்திரன்.
“கம்பெனில வேலைக்குச் சேக்கறதுக்கு முன்னாடி கரெக்ட்டா விசாரிக்க மாட்டிங்களா சார்? கரெஸ்ல எம்பிஏ படிக்க அப்ளை பண்ணிருக்கா. இவ சப்மிட் பண்ண ஸ்கூல்,காலேஜ் எல்லா சர்டிபிகேட்சும் டூப்ளிகேட். ஃபோர்ஜரி சார். விசாரணைக்குக் கூட்டிட்டுப் போணும்.”
“சார்..சார்..இந்தப் பொண்ணைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். ரொம்ப நேர்மையான பொண்ணு. அப்படில்லாம் செய்ய மாட்டா சார்.”
“என்ன சார் வெள்ளந்தியாப் பேசறீங்க.. இந்தக் காலத்துல நேர்மைங்கிற முகமூடியோடத்தான் நிறைய பேர் தப்பே பண்றாங்க. எல்லாம் ஸ்டேஷன்ல வெச்சி விசாரிச்சா முகமூடி கிழிஞ்சிடும்.”
“சார்..அவசரப்படாதிங்க. இது யாரோ வேணும்னே செஞ்ச வேலை. எனக்கு ஒன் அவர் டைம் குடுங்க. யார் செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கிறேன்.” என தேவேந்திரன் கெஞ்சினார்.
“ம்..சரி சார்..நீங்க பெரிய மனுஷன். உங்க வார்த்தையை நம்பறேன். ஜஸ்ட் ஒன் அவர்தான். அப்பறம் நான் என் கடமையைத்தான் செய்யணும்.”
“அழாம பொறுமையா யோசி அபி. யார் இப்படி செஞ்சிருப்பாங்க?”
“தெரியலை சார்..எத்தனையோ பேருக்குக் கடன் பாக்கி வெச்சிருக்கேன். யாரா வேணும்னாலும் இருக்கலாம்.”
“இல்லை அபி. உனக்குக் கடன் குடுத்த யாரும் நீ ஜெயிலுக்குப் போகணும்னு நினைக்க மாட்டாங்க. நிதானமா யோசி..சமீபத்துல யாரோடயாவது எதுக்காகவாவது சண்டை போட்டியா?”
“சார்..எனக்கு..ஒருத்தன் மேல.. சந்தேகமா இருக்கு. என்னை லவ் பண்றேன்னு.. என் பின்னாடி சுத்திட்டு இருந்தான். வினீத்.”
சரியாக ஐம்பது நிமிடங்களில்..
போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்பில் வீங்கிய முகத்துடன் அபியைப் பெண் பார்க்க வந்த வினீத்.
நடந்தவற்றை புகாராக அபி எழுதிக் கொண்டிருக்க, அருகில் தேவேந்திரன். எதிரில் இன்ஸ்பெக்டர்.
“அபி கிடைக்கலைங்கிற கோபத்துல அவளை அவமானப்படுத்தணும்னே இப்படி செஞ்சிருக்கான். இன்னும் பத்து நாள்ல அபி எம்பிஏக்கு அப்ளை பண்ணப் போறாங்கறதை தரகர் மூலமா தெரிஞ்சிக்கிட்டான் இந்தப்பய. அப்பறம் ப்ளானைப் போட்ருக்கான். அபியை விடாம ஃபாலோ பண்ணிருக்கான். அபி வீட்டுக்கு டூப்ளிகேட் சாவியை ரெடி பண்ணி, வீட்ல யாரும் இல்லாத நேரத்துல அபியோட ஒரிஜினல் சர்டிஃபிகேட்சை மாத்தி, போலி சர்டிஃபிகேட்சை வெச்சிருக்கான். கிறுக்குப்பய சார். ஒரிஜினல்சை எரிச்சிருக்கான்.” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அமுக்குனியாட்டம் இருந்துட்டு எவ்வளவு வேலை பாத்துருக்கான் பாருங்க சார். ஒரிஜினல்ஸ் வாங்கிக்கலாம் சார். நமக்கு ஸ்கூல்ஸ், யுனிவர்சிடிஸ்ல வேலை பாக்கற நிறைய பேர் நல்ல பழக்கம்.” என்றார் தேவேந்திரன்.
“ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் வரலைன்னா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே தெரியலை. வண்டி சாவிக் குடுங்க சார். ஆபீசுக்குத்தானே?” என்றாள் அபி.
“இனி உனக்கு டிரைவர் வேலை இல்லை அபி.”
“சார்..”
“உன் மேல இன்ஸ்பெக்டருக்கு நம்பிக்கை வரணுங்கறதுக்காக மட்டும் நீ எங்க மேனேஜர்னு சொல்லலை. உனக்கு நான் ப்ரொமோஷன் தந்துட்டேன். என் கம்பெனில மேனேஜர் ஆகணும்னா பெரிய பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. நேர்மை, நாணயம், கொஞ்சம் படிப்பு இருந்தாப் போதும். மேனேஜரா இனி உன் வேலை..உன் மேஜைக்கு வர்ற ஃபைல்சை சரி பார்த்துக் கையெழுத்துப் போடுறது. வருங்காலத்தைப் பத்தி இனிக் கவலைப்படாம, ஏ.சி ரூம்ல ஜம்முனு உக்காந்து எம்பிஏ படிக்கிறது.”
நம்பிக்கையின் துளிகள் அபியின் கண்களை நனைத்தன.
– ஸ்வர்ண ரம்யா
error: Content is protected !!