Neeyum Seiyya Vaa Kaathaal 1
நீயும் செய்ய வா காதல்..!!
காதல்-1
Advertisement
No one is too old for fairy tales
காட்டாற்று வெள்ளமும்
Advertisement
கனிந்த மனமும்
Advertisement
இணையுமிடம்
அன்பெனும் ஆழ்கடலே…!!
Advertisement
இது ஒரு பொன்மாலைப் பொழுதென்று பாடுமளவு இதமான மாலைப்பொழுது அது. இருள் கவிழாத, மஞ்சள் வெயில் மாலை.. வெளீர் வானம் கண்களை கூசாதளவு பரந்து உயர்ந்து நின்றது அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள். ஏ, பி, ஸி, என மொத்தம் ஐந்தாறு ப்ளாக்குகளுடன் கம்பீரமாய் நின்ற கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை பசேலென முடிந்தளவு பராமரித்து வந்தனர்.. முயன்றனர்.
மொத்தத்தில் இன்றைய நவீனத்துவத்தின் அடையாளமாய் நின்றிருந்த கட்டிடத்திற்குள் விறுவிறுவென நடந்து.. இல்லை கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.
சிலர் சிறு புன்னகையுடனும் சிலர் முறைப்புடனும் மற்ற சிலர் வினோத பாவத்துடனும் கடந்துச் சென்றதை உணர்ந்தும் அதை கண்டுக்கொள்ளாதவளாய் ஓடிக் கொண்டிருந்தவளின் நோக்கமெல்லாம் முடிந்தளவு சீக்கிரமாய் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும் என்பதே!
காலேஜிலிருந்து கிளம்பியவள் எதிர்ப்பாராதவிதமாய் வேறொரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அங்கிருந்து கிளம்பி வரவே இத் தாமதம்.
லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தவளுக்கு பொறுமை பறந்தது. அது ஆடி அசைந்து கடைசி ஃப்ளோரிலிருந்து இங்கு கீழே வருவதற்குள்… இதற்கு படியே பெட்டர்! என்று மூன்று மூன்று படிகளாய் தாவி ஏறத் தொடங்கியவள் சில மணி நிமிடங்களிலேயே அந்த ஃப்ளாட்டின் முன் நின்றாள்.
வீட்டினுள் பேச்சு சத்தம் கேட்டது.
‘வழக்கம்போல சொதப்பிட்டியேடீ!!!!’ என்று தன் தலையில் தானே சிறு குட்டு குட்டியவளாய் மெல்ல சத்தமெழாத வண்ணம் அந்த மரக்கதவை திறந்தாள்.
அவள் நினைத்ததுக்கு நேர்மாறாய் முகப்பறை சோஃபாவில் ஆச்சியும் தாத்தாவும் மட்டுமே இருக்க இவள் விழியோ மற்ற இருவருக்காய் துளாவின..
கதவை லேசாய் திறந்து அதன் வழியே தலையை மட்டும் உள்நுழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் பட்டனர் அவ்விருவரும். அந்த முகப்பறையிலிருந்து பிரிந்து கண்ணாடித் திரைக்கு அப்பால் இருந்த சிட்டவுட்டில்.
[the_ad id=”6605″]
இங்கு இவளை யார் கவனித்தனரோ இல்லையோ சரியாய் சிட்டவுட்டில் இருந்தவள் கவனித்துவிட்டாளென்பது அவள் விழிகளில் தென்பட்ட நிம்மதியே பறைசாற்றிட அவள் எதிரில் இருந்த மனிதனை ஆராய்ச்சியாய் இவள் பார்வை படர்ந்திட கண்களை ஒரு முறை மூடித் திறந்தவள் பின் அப்பொழுதே வீட்டினுள் நுழைபவள்போல் நுழைந்தாள்.
அவள்… சக்தி… சர்வசக்தி ஆதிரா! எவர் கேட்டாலும் அவளது பதில் இதுவாகவேதான் இருக்கும். அப்பெயரை அவள் உரைக்கும்பொழுது அதில் பெருமையும் சேர்ந்து அவள் விழிகளில் பளிச்சிடும் சிறு கீற்றொளி அப்பெயரை எதிரிலிருப்பவரையும் ரசிக்க வைக்கும்.
ஆம்! அவள் பெயரை சொல்வதில் அவளுக்கு அத்தனை பெருமை!
“சர்வி வந்தாச்சு!! பட்டூஸ்!!” என்று தனது வழமையான கத்தலுடன் அவள் வீட்டினுள் நுழைய ‘வந்துட்டாளா! இனி உருப்புட்டாப்ளதான்!’ என்று கண்களில் அப்பட்டமாய் பாய்ந்தோடும் உணர்வை மறைக்கத் தேவையின்றி முறைத்தவர் பின்,
“வாடாமா!! அவங்க பேசிட்டிருக்காங்க.. நீ ஃப்ரெஷாகிட்டு வா. நான் காஃபி தாரேன்..” என்று அவளை அங்கிருந்து நகர்த்துவதில் குறியானார்.
அவர் அவளது ஆச்சி லோகநாயகி. உண்மையில் அவர்கள் குடும்பத்துக்கே நாயகி! அவர் எடுக்கும் முடிவுகளே அங்கு எடுப்படும். அவ் வீட்டின் சிவகாமி தேவியார்.. அவரது கட்டளையே அங்கு சாசனம்..
சர்வியோ சற்றும் சளைக்காதவளாய், “நான் அங்கிருந்து கிளம்பும்போதே ரெஃப்ரெஷ் பண்ணிட்டு தான் கிளம்பினேன் ஆச்சிமா! அண்ட் எனக்கு காபி பிடிக்காதுன்றத மறந்திட்டீங்களா..? டீ தாங்களேன் ப்ளீஸ்…” என்று அவள் அந்த ப்ளீஸை இழுத்த விதத்தில் இங்கு அவளால் ஆச்சிமா என்று அழைக்கப்பட்டவருக்கோ தாறுமாறாய் ஏறியது உள்ளுக்குள்.
ஏனெனில் அவரது பிள்ளைகள் யாரும் இப்படியில்லை. அவரது பேச்சிற்கு மறுபேச்சின்றி நடப்பர்.. அதுவும் இவளது வயதில்… அவர் வயதில் பாதியிருப்பாளா?
ஆனால் சர்வியோ அதற்கு எதிர்பதமாய் வந்தமைந்தாள். அவர் மறுக்க அவள் அதை உடைக்கவென நகரும் நாட்களை காணக் காண மற்ற இருவருக்கும் தலை சுற்றிப் போகும். அவளது தாத்தா விஷ்வநாதனுக்கும் அம்மா ஆதிராவுக்குதான்.
சர்வி சௌகரியமாய் சோபாவில் சரிந்தமர்ந்த விதமே சொல்லியது அவள் நகரப்போவதில்லையென.. பல்லைக்கடித்தவாறு அவர் அடுக்களையினுள் நுழைய அவர் சென்றதை உறுதி செய்தவளாய் பக்கத்து அறை பால்கனிக்குச் செல்ல நினைத்தவள் ஒரு நொடி தாத்தாவை கவனித்தாள், பாவம் உட்கார்ந்திருந்தவர் அசந்து உறங்கிவிட்டார்போலும். ஏற்கனவே கழுத்து வலி.. இதில் இப்படி தலையை வைத்தால்? என்று தோன்றிட அவர் எழுந்துவிடாத வண்ணம் சோஃபாவில் லெமன் க்ரீன் நிறத்தில் கிடந்த வட்டவடிவிலான குட்டி தலையணையை அவருக்கு வசதியாய் வைத்தவள் பூனைப் பாதம் வைத்து பால்கனிக்கு ஓடிவிட்டாள்.
அங்கிருந்து அந்த சிட்டவுட்டை நன்கு பார்க்கலாமில்லையா. அதுவும் இன்று செல்லம்மா சீக்கிரமே கிளம்பிவிட்டக் காரணத்தினால் லோகநாயகி வர தாமதமாகும். செல்லம்மா சில வருடங்களாய் அவர்களுக்கு வீட்டு வேலையில் ஒத்தாசையாய் இருப்பவர்.
லோகநாயகி ஒருவிதத்தில் பெர்ஃபெக்ஷனிஸ்ட் ரகம். அவருக்கேற்றார்போல் செல்லம்மாவும் அமைந்துவிடவே அவர்கள் அந்த ஃப்ளாட்டிற்கு வந்த காலத்திலிருந்து இவர்களுடனே பயணிக்கிறார். இன்றுகூட இந்த சந்திப்பிற்கான வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டே சென்றிருக்கிறார் என்பது அவள் நாசியை தீண்டிய கேசரி மணமே சொல்லியது.
பால்கனிக்கு வந்தவளுக்கு அந்த சிட்டவுட்டிலிருந்து பேசுவது சரியாய் கேட்காமல் போகவே கைகளால் இரும்புபிடியை இறுகப் பற்றிக்கொண்டு எக்கி நிற்க முயன்றாள். அவள் எக்கி நின்ற விதத்தில் எதிரில் இருந்தவளின் முகத்தில் அதட்டல் அப்பட்டமாய் தெரிந்தது. லேசாய் சறுக்கினால்கூட அவள் அங்கிருந்து நேரடியாகவே கடைசி தளத்திற்கு சென்றுவிடக்கூடும். அதனாலையே அந்த அதட்டலென அவளுக்கு புரியாமல் இல்லை.
மற்றவளின் பார்வையை உணர்ந்தவளோ அந்த பால்கனியின் மூலையில்.. ஸ்க்ரீனுக்கு பின்னால் ஒதுங்கியபடி அங்கு நடக்கும் பேச்சு வார்த்தையை கவனிக்க முயன்றாள்.
தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள். ஆள் பார்க்க வாட்டசாட்டமாய்தான் இருந்தார். ஆனால் அதுமட்டும் போதாதே! அதுவும் இவளைக் கண்டவுடன் மற்றவளின் கண்களில் தென்பட்ட நிம்மதியுணர்வு… அத்தனை நேரம் அவள் சர்வியை எதிரப்பார்த்திருக்க வேண்டும்..
அவள்தானே சொன்னது “நான் பார்த்து ஓகே சொன்னாதான்!” என்று நேற்று விளையாட்டாய்தான் மிரட்டிச் சென்றாள். இருந்தும்…
[the_ad id=”6605″]
காதை நன்கு தீட்டியபடி மறைந்து நின்றவளுக்கோ அவர் பேசியதில் “ஞே” என்று முழிப்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. கூடவே அவளது ஆச்சியை அர்ச்சிக்கவும் மறக்கவில்லை.
அங்கு…
இளம் பச்சை நிற குர்த்தாவில் தன்னெதிரே அமரந்திருந்தவளையே அளவிட்டது அரவிந்தின் பார்வை..
“நீங்க ப்ரொஃபஸரா இருக்கறதா சொன்னாங்க..” என்று கேள்வியாய் இழுக்க முதன் முதலாய் வாயைத் திறந்தாள் அவள்.
“ம்ம் எஸ்.வி–ல மேனேஜ்மென்ட் டிபார்ட்மெண்ட்ல ப்ரொஃபஸரா இருக்கேன்..”
“ஓ..ஓகே! நான் இங்கதான் மைசூர்ல சார்ட்டர்ட அக்கௌண்ட்டண்ட்… சொல்லிருப்பாங்களே..” என்றவன் கேட்டவிதத்தில் கேட்டிருந்தவளுக்கு மட்டுமின்றி திரைக்கு பின்னாலிருந்தவளின் முகத்திலும் சட்டென ஒட்டிக்கொண்டது சிறு கேலிச் சிரிப்பு! அது அவர்களுக்குள்ளான ரகசியம்.
எங்கோ சென்ற மனதை இழுத்து வைத்தவளாய் எதிரிலிருப்பவனின் பேச்சை கவனிக்க முயன்றாள் அவள்.
“ப்ச்! அதுக்கு அப்பறம் இந்த கல்யாணத்து மேல இருந்த இன்ட்ரஸ்டே போயிருச்சு… ” என்றவன் சொல்லிக்கொண்டே போக பாதி புரிந்தும் புரியாமலும் போனது அவளுக்கு.
“அம்மாதான் விடாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டே இருந்தாங்க… எனக்காக இல்லாட்டியும் பையனுக்காகனு..” என்றதில் ஒருகணம் உருகிய சர்வியின் உள்ளம் மறுகணமே அவன் உரைத்ததில் உலைகளமானது.
“அதான்… பண்றதும்தான் பண்றோம்.. என்னைப்போலவே ஃபர்ஸ்ட் மேரேஜ் செட்டாகத பொண்ணுக்காவது வாழ்க்கை குடுக்கலாமேனு பார்க்க சொன்னேன்… அப்போதான் ரிலேட்டிவ் ஒருத்தங்க மூலமா உங்கள பத்தி தெரிய வந்தது..” என்றவன் சொல்லிக்கொண்டேப் போக இங்கு சர்வியின் வாயிலோ வார்த்தைகள் பல வர்ணங்களில் சரமாகின…
பக்கத்து சிட்டவுட்டிலிருந்தவளின் பார்வை சர்வியையே வெறித்தது. இச்சூழ்நிலையில் சர்வசக்தி என்னவெல்லாம் செய்யக்கூடுமென்று உணர்ந்தவளாயிற்றே! சர்வியோ கையை தன் நெஞ்சில் வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சைகை செய்துவிட்டு அந்த பால்கனியை சுற்றி முற்றி பார்க்க அது அவள் கவனத்தில் பட்டது.
பெரியவள் வேண்டாமென பார்வையாலே அறிவுறுத்த அதை சற்றும் கண்டுகொள்ளாதவளாய் அங்கு தொங்கிக் கொண்டிருந்த பூந்தொட்டியை வேகமாய் தள்ளினாள். அவள் தள்ளிய வேகத்தில் அது மற்றவனின் தலையை உடைத்திருக்க வேண்டும்.
நொடிப்பொழுதில் எதிரிலிருந்தவனை பிடித்திழுத்தாள் அவள். அவள் இழுத்த வேகத்தில் முன்பக்கமாய் சரிந்தவனின் காலடியில் வந்து ‘பொத்தென‘ விழுந்து உடைந்தது அந்த பூந்தொட்டி. அரவிந்தனுக்கு ஒருகணம் மூச்சே நின்றதுபோலானது.
சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள் அதிர்ச்சியை கடன் வாங்கியவளாக சிட்டவுட்டிற்கு ஓடினாள் சர்வி.
“அச்சோ!! என்னாச்சு!? அடி எதுவும் படலையே? இந்த பசங்களுக்கு இதே வேலையா போச்சு! பால தூக்கிப்போடாதீங்கடானா கேக்கவும் மாட்டானுங்க!! என்று படபடத்தவள்
“பட்டூஸ்!! தண்ணி கொண்டா!” என்றுவிட்டு அரவிந்த் எழுவதற்காக கை கொடுத்தாள். இவளையே முறைத்துப் பார்த்தவாரே பட்டூஸ் என்று அவளால் அழைக்கப்பட்டவள் தண்ணியெடுக்க சென்றுவிட… அரவிந்த் எழ உதவியவளாய்…
“யாரு யாருக்குங்க வாழ்க்கை குடுக்கறது? பட்டூஸ் மட்டும் இல்லன்னா உங்க மண்டை செதறிருக்கும் இப்போ…” என்றவளையே நம்பவியலாத அதிர்ச்சியுடன் அரவிந்த் வெறிக்க
“வாழ்க்கை குடுக்கறானாம்… வாழ்க்கை..” என்றவள் முணுமுணுக்கவும் லோகநாயகி அங்கு வரவும் சரியாய் இருந்தது.
“என்னாச்சுபா? எங்கயாவது பட்டுச்சா?” என்றவரின் பதட்டத்திற்கு பதிலாய்..
“வழக்கம்போலதான் ஆச்சிமா.. பால் பட்டு தொட்டி விழுந்திருச்சு… பட்டூஸ் கரெக்ட்டான நேரத்திற்கு இழுத்திட்டதால… நோ ப்ராப்ளம்!” என்றவள் பட்டூஸ் கொண்டு வந்த பாட்டிலை அரவிந்திடம் கொடுத்துவிட்டு “அப்படிதான மிஸ்டர்.அரவிந்த்?” என்று வேறு கேட்க அரவிந்தின் கண்ணிற்கு சர்வி பக்கா சைக்கோவாகிப்போனாள்.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடியது.. சர்வியை காணக் காண எரிச்சல் அதிகரிக்க அங்கிருந்து சீக்கிரமே கிளம்பிவிட்டான் அரவிந்த்.
அரவிந்த் சென்றதும் வாசல்வரை வந்து வழியனுப்பியவர்கள் கதவைடைத்துவிட்டு வீட்டினுள் நுழைய முதல் வேளையாய் லோகநாயகி தனக்காக பாதி ஆத்தி வைத்திருந்த டீயை கலக்கி கையோடு எடுத்துக்கொண்டு அவளறையினுள் தஞ்சமானாள் சர்வி. சேரில் அமர்ந்து டேபிளின் மேல் கால்களை வைத்துக்கொண்டு டீயை உறிஞ்சிக் கொண்டிருக்க, அவ்வறையின் கதவை அடைத்துவிட்டு அவள் முன்னால் கேள்வியோடு நின்றவளை பார்த்தும் பார்க்காததுபோல இவள் பாவனை செய்ய பொறுமையிழந்தவளாய்,
“ஏன் சர்வி அப்படி பண்ண?” என்றாள் அவள்.
“என்ன பண்ணேன்?” என்றவாரே மக்கை வைத்துவிட்டு கால்களை கீழிறக்கினாள் இளையவள்.
“கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தாலும் இன்னைக்கு நீ கொலை கேஸில உள்ளபோயிருப்ப!” கோபம் சற்றும் குறைந்திருக்கவில்லை.
“ப்ளாஸ்டிக் தொட்டி விழுந்தெல்லாம் யாரும் சாகமாட்டாங்க பட்டூஸ்…” என்றவாரே எழுந்து சென்று கப்போர்டை நோண்டினாள்.
“விளையாடாத சர்வி!! நீ வீசின வேகத்துக்கு பட்றுந்தா நிச்சயம் ரத்தம் வந்துருக்கும்!” என்க மாற்று துணியை எடுத்து தோளில் போட்டுக் கொண்டவளோ,
“அதான் படலையே! அதுக்குள்ளதான் நீ அவருக்கு வாழ்க்கை குடுத்திட்டியே பட்டூஸ்..” என்றாள் கண்ணடித்து.
என்னதான் கண்ணடித்தாலும் சர்வியினுள் இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறதென்று அவளுக்கு தெரியாதா என்ன?
“முட்டாள்த்தனம்!! அந்த ஒரு வார்த்தைக்காகவா அப்படி பண்ண? அப்படியே அவன் சொன்னாலும் சொல்லிட்டுதான் போகட்டுமே! ‘நீ இவ்ளோதானா?!’ அப்படினு விடறத விட்டுட்டு…” என்றவளை தடுத்தவளோ,
“எனக்கு அவ்வளோ பரந்த மனசு கிடையாது பட்டூஸ்! உன்ன யாராவது காயப்படுத்தினா நான் கேட்கத்தான் செய்வேன்!
வாழ்க்கை குடுக்கறானாம்…. ராஸ்கல்!! யாருக்கு யார் வாழ்க்கை குடுக்கறது!? அது என்ன அது.. ‘வாழ்க்கை குடுக்கறது‘ இங்க யாரு இப்போ டெட்பாடியா இருக்கா இவன் வந்து வாழ்க்கை குடுக்க…” என்று எகிற அவளைப் பிடித்து மெத்தையில் அமர வைத்தவளோ,
“இங்கப் பாரு சர்விமா… அவன் சொன்னா அது உண்மையாகிடுமா என்ன!? இங்க பல பேர் அப்படிதான் இருக்காங்க… அதுக்காக எல்லார்ட்டையும் சண்டை போடுவியா என்ன? இதுக்கெல்லாம் இம்பார்ட்டெண்ஸ் குடுத்து நீயே இவங்களலாம் பெரியாள் ஆக்கிடாத…” என்று அணைத்து தட்டி குடுக்க எழுந்து அவள் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள்
“ஒன்னு சொல்லு.. உனக்கு அவர பிடிச்சுதா?”
“இல்ல… பட்..”
“அப்போ விடு!” என்றவள் சிறு துளி மௌனத்திற்கு பின்,
“லவ் யூ பட்டூஸ்!!” என்றுவிட்டு குளியலறையினுள் புகுந்துக் கொண்டாள்.
அவளை நன்கறிந்ததாலோ என்னவோ தலையசைத்தவாரே வெளியில் சென்றுவிட்டாள் அந்த “பட்டூஸ்”
சர்வியை பொருத்தவரை அவள் செய்தது சரியா தவறா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. அவளைப் பொருத்தவரை அவளது பட்டூஸிற்கு ஒன்றென்றால் அவள் எதையும் செய்வாள். அவ்விடத்தில் அவள் செய்வதே அவளுக்கு சரியாகிப்போகும்..
குளித்து வேறுடை மாற்றிவிட்டு மற்ற வேலைகளில் ஆழ்ந்தவள் வெகு நேரம் சென்று நிமிரவே தெரிந்தது மணி இரவு எட்டென… கண்களை கசக்கி சோம்பல் முறித்தவளாய் அவள் வெளியில் வரவும் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அன்று பின் ட்ராப் சைலன்ஸில் அனைவரும் சாப்பிட்டு முடிக்க கையில் சிறு கேசரி பௌலுடன் அங்கு ஹாலிலேயே சர்வி அமர்ந்துவிட மெல்ல தொடங்கியது விசாரணை…
“அரவிந்த்க்கு என்னாச்சு சக்தி?” என்ற லோகநாயகியின் பார்வை அவளையே துளைத்தது. அதை உணர்ந்தவளோ,
“அதான் சொன்னேனே ஆச்சிமா பால் பட்டு.. தொட்டி விழுந்திருச்சுனு..” என்க அவரோ
“நம்பறா மாதிரி இல்லை!” என்று தோள்களை குலுக்கினார்.
“பாருங்க தாத்தா…” என்றிவள் தாத்தாவை சப்போர்டிற்கு இழுக்க விஷ்வநாதனும்..
“விடு லோகா… அவளே இன்னைக்கு களைச்சுப் போய் வந்திருக்கா..” என்று பேத்திக்காக பேச
“சரி.. அப்போ அவங்கட்ட பேசிடலாமா?” என்று பொதுவாய் கேட்பதுபோல் கேட்க.. எதற்கு என்று தெரிந்திருந்தும்,
“இல்லை ஆச்சி அவர் வேணாம்..” என்றவளின் குரலில் அத்தனை நேரமிருந்த விளையாட்டுத்தனங்கள் அத்தனையும் மறைந்து அழுத்தமாய் ஒலித்தது.
“ஏன்? அத அவ சொல்லட்டும்..” என்றார் அவரும் விடாமல்.
[the_ad id=”6605″]
“பட்டூஸ்க்கு பிடிக்கல ஆச்சிமா.. அவர் வேண்டாம்” என்றாள் உறுதியாய். மகள் முகத்தை காண அவளோ அதை அமோதிப்பதைப்போல அமைதிகாத்தாள்.
காரணம் ஏதுமின்றி வெறுமனே அவள் வேண்டாம் வேண்டாம் என்றதில் எரிச்சல் எகிறிட,
“இப்படி எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னா! என்னதான் பண்றது!!??” என்று அலறிக்கொண்டிருக்கும் ஆச்சியை கவனியாதவளாய், அவரை பார்ப்பதை தவிர்த்து.. அந்த கூடை நாற்காலியில் கால்கள் இரண்டையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டவளாய் கேசரியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவளை காணக் காண இன்னுமின்னும் கோபமேறியது அவருள் இவளால்தானே எல்லாம் என்று.
அவரது பார்வை அவளில் படிய அதை உணர்ந்தவளாய் மற்றவள் இவள் கையில் லேசாய் இடிக்க ‘என்ன?’ என்றாள் பார்வையாலே.
‘அங்க பாரு‘ என்ற மற்றவளின் கண்ணசையில் கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தாள் சிறியவள்.
“அவர் வேணாம் ஆச்சிமா… ப்ளீஸ்” என்றவளின் குரலில் அமைதி திரும்பியிருந்தது.
“அவருக்கு என்னடி கொறச்சல்??”
‘எது.. அந்த பரங்கி மண்டைக்கா?’ என்று உள்ளுக்குள் ஒலித்த குரலை அப்படியே அமுக்கியவளாய் வெளியே ஆச்சியிடம்…
“அவனுக்கெல்லாம் நானே ஓகே சொல்ல மாட்டேன்!! இதுல எங்கம்மாக்கு எப்படி ஓகே சொல்லுவேன்? சரியான பரங்கி!!!” என்று முணுமுணுத்தாள் கடைசி வரியை மட்டும்.
“இப்படியே பண்ணிட்டிரு…” என்று அவர் தொடங்கியதில் இம்முறை உண்மையிலேயே கோபம் துளிர்க்க
“போதும்!! உங்களால முடியலன்னா விடுங்க! எனக்குத் தெரியும் எங்கம்மாக்கு எப்படி பாக்கனும்னு” என்று தீர்மானமாய் உரைத்தவள் அறையினுள் புகுந்து கொண்டாள்.
“பாத்தீயாடி உன் பொண்ண!?” என்றவரின் கோபம் ஆதிராவின் பக்கம் திரும்ப ஆதிராவோ..
“ம்மா அவளப்பத்திதான் உனக்கு தெரியும்ல..” என்று சமாதனம் செய்து அவரை உறங்க அனுப்பிவிட்டு தானும் வந்து தனதறையில் படுத்துக்கொண்டாள்.
வீட்டிற்கு வந்தவரை அவமதிப்பதா? என்று அவரும், வீட்டுக்கே வந்து அவமதிக்கிறாயா? என்று அவளும் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில் கண்டனர்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சர்வியின் கண் முன் யார் யாரெல்லாமோ வந்தனர்.. அவளை அதட்டினர்… கெஞ்சினர்… பின் அந்த அலறல் சத்தம்! எப்பொழுதும் அவள் தூக்கம் தொலைய காரணமாய் இருக்கும் அதே அலறல் சத்தத்தில் பட்டென எழுந்தமர்ந்தாள்.
சற்று நேரத்திற்கு எதுவும் செய்யாமல் தலையை கையில் தாங்கியபடி அமர்நதிருந்தவள் சற்று நேரத்திற்கு பிறகு ஃபோனை எடுத்து மணி பார்க்க அது மணி அதிகாலை மூன்று என்று காட்டியதென்றால்.. லாக் ஸ்க்ரீனில் அவளும் அவளது பட்டூஸும் முகத்தை அஷ்டகோணலாக்கி சிரித்தபடியிருந்தனர்.
சத்தமெழாதவண்ணம் எழுந்து சென்றவள் ஆதிராவின் அறைக் கதவை ஒலியெழும்பாதவாறு தள்ளி திறந்துக்கொண்டு உள் நுழைந்தாள்.
ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அருகில் சென்றவள் சில நொடிகள் அன்னையையே மௌனமாய் பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினாள்.
அவள் உள்ளம் மட்டும், ‘யூ டிஸர்வ் “தி பெஸ்ட்” பட்டூஸ்‘ என்றது.
தொடரும்….
