Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 24.2

கோவிந்தன் “நம்ம வீட்டு தோட்டம் ரொம்ப பெருசு. அதுல பாதி நமக்கு தான். அந்த  தோட்டத்து கிழக்கு மூலையில் இடம் காலியா தான் இருக்கு. அங்கு ஒரு ஷெட் போட்டு அதுக்கு கீழ நாம ஸ்வீட் செய்யலாம். அந்தப் பக்கம் ஒரு சின்ன கேட் இருக்கு. அதனால வர்றவங்க அப்படியே வந்துட்டு போகலாம் பிரச்சனை வராது. என்ன சொல்றீங்க?” என்று கேட்க  மற்ற மூவரின் முகமும் மலர்ந்தது.

கார்த்திகேயன் “சூப்பர் ஐடியா. சித்தப்பா.”

“ஆமாம்பா நீங்க சொன்ன ஐடியா சூப்பர்.”

“அதுக்கு தேவையான ஏற்பாடு எல்லாத்தையும் நான் செய்கிறேன்.



Advertisement

எங்க அம்மா பண்ண தப்புக்கு நான்  பிராயச்சித்தம்  பண்ற.” என்று தானாகவே முன்வந்து அந்த வேலையை செய்வதற்கு ஒப்புக் கொண்டான் கார்த்திகேயன்.

ஆனால் தேவையான பணத்தை வெண்மதி அவனிடம் கொடுத்து விட்டாள்.

 

Advertisement

லட்சுமி வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் கபிலனுக்கு போன் செய்து  மேலும் 2 வாரம் கழித்துதான்  இந்த வேலையை செய்ய முடியும் என்று லட்சுமி கூற அவர் அதற்கு  ஒப்புக்கொண்டார்.

Advertisement

லட்சுமிக்கு நிம்மதியாக இருந்தது.

அந்த வார விடுமுறையில் அந்த இடத்தில் ஷெட் போட்டு கேஸ் ஸ்டவ் வைப்பதற்கு தேவையான ஸ்டாண்ட் அமைத்தனர். பிறகு பெரிய பாத்திரங்களையும் கரண்டிகளையும் வைப்பதற்கு இன்னொரு ஸ்டாண்ட் செய்தனர். பிறகு சில நாற்காலிகள், மேஜை  என்று அந்த இடத்தை இனிப்பு செய்வதற்கு ஏற்ற மாதிரி எல்லா வசதிகளையும்  செய்தனர். அந்த இடம்  தயாரானது.

தயாரான பிறகு லட்சுமி “இவ்வளவு பண்ணிட்டோம். நாம ஒரு பூஜையும் பண்ணிடுவோம்.” என்று கூற நால்வரும் சேர்ந்து அடுத்த நாள்  பால் காய்ச்சி பூஜை செய்தனர்.

Advertisement

அன்று வெண்மதிக்கு சம்பள நாள். 25 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு வீடு வந்தாள். சொன்னதுபோல 15 ஆயிரம் பணத்தை லதாவிடம் கொடுத்துவிட்டு மீதம் இருந்த பணத்தை தாயிடம் கொடுத்தாள். அதனை வாங்கியவர் கண்களில் ஒற்றிக்கொண்டு சுவாமி படத்திற்கு முன்பு வைத்து வணங்கினார். பிறகு அதனை எடுத்து வெண்மதியிடம் கொடுத்து “பார்த்து செலவு பண்ணுமா.” என்று  கூறினார்.

“சரிமா நான் சொன்ன மாதிரியே ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதில் அஞ்சாயிரம் டெபாசிட் பண்ணி  வச்சிடறேன். அப்புறம் நீங்க என்கூட வெளியே வாங்க.”

“எதுக்குமா?”

“நீங்க வாங்க சொல்றேன்.” என்று புதிர் போட்டபடி லட்சுமியை அழைத்துக்கொண்டு ஒரு துணிக்கடைக்கு சென்றாள்.

அங்கு “யாருக்கு மா புடவை?” என்று லட்சுமி கேட்க

“உங்களுக்குத்தான்.” என்று  அவரை பட்டுப்புடவை காட்டும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.

“எனக்கு எதுக்குமா இப்போ பட்டு புடவை?”

“அம்மா நாளைக்கு உங்களுக்கு பிறந்தநாள்.”

“என்னம்மா சொல்ற?” என்று ஆச்சரியமாக கேட்டார் லட்சுமி. அவர் பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது. ஒவ்வொரு வருடமும் கோவிந்தன் லட்சுமிக்கு அவரது பிறந்த நாளன்று  அவரை அழைத்து சென்று புடவை வாங்கி கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறுவார். ஆனால் லட்சுமி எப்பொழுதுமே அவருடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டது கிடையாது. வெண்மதியும் வாழ்த்து கூறுவாள்.

 

“எதுக்குமா இப்போ வீண் செலவு? எப்படியும் அப்பா எனக்கு நாளைக்கு ஒரு புடவை வாங்கித் தருவார். அதுவே எனக்கு போதும். அது அப்பா வாங்கித் தருவது. இது நான் என்னோட சம்பளத்தில்  வாங்கி தருவது. முதல் மாச சம்பளத்திலே உங்களுக்கு புடவை வாங்கி தர ஆசைப்பட்டேன். ஆனா அந்த 15,000 பெரியம்மாவுக்கு கொடுக்கவே சரியா இருந்தது. அதனாலதான் இந்த மாசம் உங்களுக்கு பட்டுப்புடவை வாங்கலாம்னு இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். ப்ளீஸ்  ஒரு புடவை செலக்ட் பண்ணுங்க.” என்று அங்கு கடைக்காரர் காட்டிக்கொண்டிருந்த புடவைகளை காட்டினாள் வெண்மதி.

மகள் கூறியதை கேட்ட தாயின் மனம் நெகிழ்ந்தது. “சரிமா” என்று கூறியபடி அங்கு இருந்த பட்டுப்புடவைகளை பிரித்து பார்த்தார். அங்கு பச்சை, மஞ்சள்,  சிகப்பு, ஊதா என்று எல்லா நிறத்திலும் அழகாக பட்டுப்புடவைகள் இருந்தன.

அதில்   பச்சை நிற புடவையில் சிகப்பு நிற பார்டர் போட்டிருந்த புடவை அவருக்கு பிடித்திருந்தது. எனினும் அதனுடைய விலையை முதலில் பார்த்தார். 4500 என்று தெரிந்து கொண்டார். உடனே அதனை அந்தப்பக்கம் தள்ளினார். இதனை கவனித்த வெண்மதி

“அம்மா இந்த புடவை உங்களுக்கு பிடிச்சிருக்கா? என்று அவர் முகத்தை பார்த்து கேட்டாள்.

அதற்கு லட்சுமி குனிந்தபடியே “இல்லை” என்றார்.

வெண்மதி அந்த புடவையின் விலையை பார்த்தாள்.

“அம்மா நான் உங்களுக்கு 5000த்தில் புடவை வாங்கி தர ஆசைப்பட்டேன். இது அந்த விலையை விட கம்மி தான். அதனால நீங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா இதையே எடுத்துக்கோங்க.” என்று கூற “எதுக்குமா இப்போ நமக்கு வீண் செலவு?” என்று திரும்பவும் கேட்க

“இது வீண் செலவு இல்லமா. உங்களுக்கு பிடிச்சிருக்கா? சொல்லுங்க.”

லட்சுமி  புடவையை தடவியபடி “பிடிச்சிருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.”

“எனக்கும் இந்த புடவை ரொம்ப பிடிச்சிருக்கு. கலர் காம்பினேஷன் நல்லா இருக்கு உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.” என்று லட்சுமியிடம் கூறிவிட்டு அந்த கடைக்காரரிடம் திரும்பி

“இந்த புடவையை  பேக் பண்ணுங்க.” என்று  கூறினாள்.

பணத்தைக் கட்டி புடவையை வாங்கிய வெண்மதி அங்கேயே ரவிக்கை தைக்க கொடுத்தாள்.

“பிளவுஸ் தைக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டாள்.

அதற்கு அவர்கள் “ஒரு மணி நேரம் ஆகும்,” என்று கூற

“சரி நா கடைக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று பூ, பழம், வெற்றிலை பாக்கு என்று கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கினாள் வெண்மதி.

“நாளைக்கு நீங்க இந்த பட்டுப்புடவையை கட்டிக்கணும். நாம மூணு பேரும் கோவிலுக்கு போகிறோம். அப்புறம் சினிமா அப்புறம் நைட் ஹோட்டலில் சாப்பாடு முடிச்சிட்டு தான் வீட்டுக்கு  வருகிறோம்.”

“என்ன சொல்ற வெண்மதி? நாளைக்கு உனக்கு வேலை இருக்கு. நான் லீவ் போட்டு இருக்கேன்.”

“எதுக்குமா  இந்த சின்ன விஷயத்துக்கு லீவ் போட்டு இருக்க?”

“அம்மா  இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் தான் வாழ்க்கையின் சுவாரசியம். அதனால நாளைக்கு நான் பிளான் பண்ண மாதிரி எல்லாமே பண்ணலாம்.” என்று கூறிவிட்டு மீண்டும் அந்த கடைக்கு வந்து ரவிக்கையை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

 

அடுத்த நாள் காலை எழுந்ததும் தாயை தேடி சென்று “ஹாப்பி பர்த்டே”  என்றாள். பிறகு அவரது கண்களை தன் கைகளால் மூடி ஹாலுக்கு அழைத்து வந்தாள்  வெண்மதி.

லட்சுமியின்  கண்களின் மேல் இருந்த கையை எடுக்க லட்சுமி மெதுவாக கண்ணை திறந்து பார்த்தார்.

கோவிந்தன், கார்த்திகேயன் கேக் உடன்  காத்துக்கொண்டிருந்தனர்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கோவிந்தன் கூற கார்த்திகேயன் “ஹாப்பி பர்த்டே” என்றான்.

ஹால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த லட்சுமிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்

“எதுக்குமா இதெல்லாம்?” என்று மகளை கேட்டார்.

“அதையெல்லாம் நீங்க கேட்கக்கூடாது. சித்தி. முதல்ல கேக் கட் பண்ணுங்க. எவ்வளவு நேரமா கேக்குகாக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். தெரியுமா?” என்று கார்த்திகேயன் அவசரப்படுத்த

“உனக்கு இல்லாததா கார்த்திக்.” என்று கூறியபடி கத்தியை  எடுத்து கேக்கை கட் பண்ணி ஒரு துண்டு எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டார் . “எனக்கு” என்று வெண்மதி கேட்க வெண்மதிக்கும் ஊட்டி விட்டார்.

பிறகு கோவிந்தன் “ஆ” என்று வாயை திறந்தார்.  லட்சுமி தலை குனிந்து கொண்டார்.

“இப்படி வெட்கபட்டா எப்படி?  சீக்கிரம் ஊட்டுங்க. சித்தப்பா வெயிட்டிங்.” என்று கார்த்திகேயன் கூற

லட்சுமி கணவனுக்கு ஊட்டினார்.

பின் அனைவரும்  கோயிலுக்கு கிளம்பினர்.

லட்சுமி, வெண்மதி வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு வந்து நின்றார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு பொறாமை பொங்கியது.

“இது  என்ன இப்படி கண்டதையும் கண்ட இடத்தில் தொங்கவிட்டு வச்சிருக்கீங்க?” என்று  தொங்கவிடப்பட்டிருந்த பலூனை பார்த்து கூறினார்.

அதற்கு கார்த்திகேயன் “ நீங்க முன்ன பின்ன பலூனை பார்த்தது கிடையாதா? ஏன்மா இப்படி நல்ல நாள்ல மூட கெடுக்குறீங்க?  உள்ள ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க. இல்லனா வழக்கம்போல டிவியை போட்டு உட்கார்ந்து பாருங்க. அதான் வாங்கி வச்சிருக்கீங்களே 60  இன்ச் டிவி.” என்று  கூற லட்சுமி கார்த்திகேயனை கண்களால் அமைதியாக இருக்க சொன்னார்.

பின்பு நால்வரும் கோயிலுக்கு சென்று அர்ச்சனையை முடித்துவிட்டு அங்கிருந்து சினிமா தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்துவிட்டு வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பினர்.

 

லட்சுமிக்கு நடந்தவை எல்லாம் கனவா நினைவா என்று ஆச்சரியமாக இருந்தது.

 

எந்த வருடமும் அவர், அவருடைய பிறந்த நாளை ஞாபகம் வைத்துக் கொண்டது கிடையாது. அவரது பிறந்தநாளை ஞாபகப்படுத்துவது அவரது  கணவரே. முதன்முறையாக தன்னுடைய பிறந்த நாளை இப்படி கொண்டாடியது அவருக்கு சந்தோஷமாகவும் ஒருவகையில் வித்தியாசமாகவும் இருந்தது. ஆனால் எல்லா வருடமும் தன்னுடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டு தனக்கு புடவை வாங்கித்தரும் கணவரிடமிருந்து இந்த வருடம் புடவை கிடைக்காமல் இருந்ததை நினைத்து சிறிது  வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. “சரி இன்று வேலை நிறைய இருந்திருக்கும்.” அதனால் எதுவும் வாங்கவில்லை என்று நினைத்து சமாதானம் செய்ய முயற்சித்தாலும் அவரால் சமாதானமாக முடியாமல் கணவரிடம் திரும்பினார்.

“நீங்க இன்னைக்கு எனக்கு புடவை வாங்கி  குடுக்கலையா?” என்று கேட்டுவிட்டார்.

அப்பொழுது கோவிந்தன் தன்னுடைய பையிலிருந்து ஒரு புடவையை எடுத்து கொடுத்தார்.

“நீதான் ஏற்கனவே பட்டுபுடவை கட்டிக்கிட்டு இருக்கியே. அதனால தான் நான் இந்த புடவையை உனக்கு கொடுக்கல.”

“ ஏன் ? அந்த  பட்டுப்புடவை மாதிரியே இந்த புடவையும் எனக்கு சிறப்பு தான்.” என்று கூறிவிட்டு அந்த புடவையை வாங்கி  அந்த பட்டுப் புடவையை மாற்றி அணிந்து கொண்டு மகளிடம் சென்று காட்டினார்.

“இது உங்க அப்பா வாங்கி வந்த புடவை. எப்படி இருக்கு? பாத்து சொல்லு.” என்று பெருமையாகக் கேட்டார்.

அதற்கு மகள் “ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.” என்று கூற அவர் அறைக்கு திரும்பினார்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!