Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 28.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாசலில் வந்து வந்து யாரையோ எதிர்பார்த்து கொண்டிருந்த லட்சுமியை கவனித்த வசந்த் அவரிடம் வந்தான்.

“என்னமா வெளியில நின்னுகிட்டு யாரையோ  காலையிலிருந்து எதிர் பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.  யாரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கீங்க?”  என்றான் கேள்வியாக.

“எங்க கிட்ட வேலை செய்ற ரெண்டு பசங்க மூணு  நாளா வரவே இல்லை. அதான் இன்னிக்காவது  வராங்களான்னு பாத்துட்டு இருக்கேன்.”



Advertisement

“ஓ அப்படியா ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க அம்மா. நான் செய்ற” என்றான்.

இவனுடன் அவர்கள் வீடு சென்று பார்க்கலாமா என்று முதலில் யோசித்தார் லட்சுமி. ஆனால் வசந்த்  நிற்கக்கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்ததை கவனித்த லட்சுமி இவனை  தொந்தரவு செய்வது சரியாக இருக்காது என்று அவனிடம் வேறு எதுவும் கூறாமல் விட்டு விட்டார்.

மழை காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலையை ஆரம்பித்திருந்த  வசந்த்  உட்கார கூட முடியாமல் வேலைகள் சேர்ந்திருந்தன. மிகவும் அசதியாக உணர்ந்தான்.

Advertisement

இருளத் தொடங்கியது.  கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வேலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

Advertisement

எப்பொழுது வீட்டுக்கு செல்லலாம் என்று காத்துக் கொண்டிருந்தான் வசந்த்.  எனினும் வெண்மதியை பார்க்காமல் வீடு செல்வதற்கு அவனுக்கு மனம் இல்லாமல் அவள் வரும்வரையில்  காத்திருந்தான். அவள் அன்று வழக்கத்தை விட தாமதமாக வீட்டுக்கு வந்தாள். அவளை பார்த்த பிறகு தன்  காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினான் வசந்த்.

வாசலில் காத்துக் கொண்டிருந்த தாயை பார்த்த வெண்மதிக்கு புரிந்துவிட்டது.

“அப்போ இன்னும் அந்த பசங்க வரல.” என்றாள் தாயிடம்.

Advertisement

“ஆமாமா” என்றார் லட்சுமி வருத்தமாக.

கதிர்வேலன் தான் இவர்களை வேலைக்கு வரவிடாமல் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகித்தாள். எனினும் உறுதியாக அவளுக்கு தெரியவில்லை.  அவள் பொருத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்.

“சரிமா வாங்க. நம்ம போய் பாத்துட்டு வரலாம்.”

“அப்பா இன்னிக்கு லேட்டா தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டு தான் வேலைக்கு போய் இருக்கார். அதனால நாம முல்லை வீட்டுக்கு போய் முல்லையை கூப்பிட்டுக்கிட்டு போய் பார்த்துட்டு வரலாம்.” என்று லட்சுமி கூற

வெண்மதியும் லட்சுமியும் முல்லை வீட்டுக்கு சென்றனர்.

 

முல்லை இடம் விபரத்தை கூறி அந்த இரு பையன்களின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்டனர். அந்த இரு பையன்களையும் இந்த வேலைக்கு சிபாரிசு செய்தவர் முல்லை  தான்.

முல்லை, வெண்மதி, லட்சுமி மூவரும்  அந்த இரு பையன்களின் வீட்டிற்கு சென்றனர். ஒருவனின் தாய்

“அவனா அவன் வீட்டுக்கு வந்தே மூன்று நாள் ஆகுது. எங்க சுத்திக்கிட்டு இருக்குதுன்னு தெரியல.” என்று அலட்சியமாக கூறிவிட்டு சென்றார்.

அடுத்தவனின் வீட்டுக்கு மூவரும்  சென்றனர்.

அவனின் தாய் “அவன் தினமும் நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு நைட்டு தூங்குறதுக்கு மட்டும் தான் வீட்டுக்கு  வர்றான்.”

 

அதற்கு முல்லை “என்ன சரளா இப்படி பேசுற? உன்னை நம்பி தானே உன்னோட பையனை இந்த வேலையில் சேர்த்து விட்டேன். இப்போ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுற.” என்று கோபமாக கேட்டார். அதற்கு அந்த சரளா “நான் என்ன அக்கா பண்றது? இவன் எங்க போறான்னு இவன் பின்னாடியே  சுத்திக்கிட்டேவா இருக்கமுடியும்? நானும் நாலு வீட்டுக்கு போய் பத்து பாத்திரம் தேய்ச்சா தானே எனக்கு வருமானம்.” என்று அவர் அவர் பங்கிற்கு சோகக்கதை பாடினார்.

 

“சரி சரி நீ வேற ஆரம்பிக்காத. இப்போ எங்கே இருப்பா? சொல்லு.”

“அதுவா அந்த டாஸ்மாக் பக்கத்துல எங்கேயாவது குடிச்சிட்டு விழுந்து கிடப்பான். போய் பாருங்க.” என்றார் சரளா.

“அங்கேயா?” என்று யோசித்தார் முல்லை.

“என்ன முல்லை அக்கா யோசிக்கிறீங்க? “ என்று அவரை கவனித்த வெண்மதி கேட்டாள்.

“இந்த நேரத்துல அங்க போகணுமான்னு  யோசிக்கிறேன் வெண்மதி.” என்று தயங்கியபடி முல்லை கூற

“அக்கா இதுக்கு எல்லாம் யோசிக்காதீங்க. ஏற்கனவே அம்மா ரொம்ப கவலை படறாங்க நாளைக்கும் வரலனா ரொம்ப கஷ்டமா போய்டும். இன்னைக்கு நாம இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும். இல்ல அம்மாவுக்கு சாப்பாடு தண்ணி கூட உள்ளே இறங்காது.” என்று லட்சுமியை பார்த்தபடி கூறினாள் வெண்மதி.

“நீங்க பயப்படாம என்கூட வாங்க. நாம மூணு பேரு இருக்கிறோம். அவனைப் போய் பார்த்துட்டு வரலாம்.” என்று வெண்மதி தைரியம் கூற முல்லையும் லட்சுமியும் “சரி போய் பார்க்கலாம்” என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த டாஸ்மாக்கிற்கு கிளம்பினார்.

 

இதனை கவனித்த அவனின் தாய்

“நானும் வரேன். அவனை நான் இன்னைக்கு ஒரு வழி பண்றேன்.” என்று கோபமாக  தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டு அவருடன் கிளம்பினார்.

“இதுக்கு மேல நமக்கு யாரு துணை வேணும்? வாங்க போகலாம்.” என்று வெண்மதி கூற நால்வரும் அந்த டாஸ்மாக்கிற்கு சென்றனர்.

அங்கு ஒரு சிலர் விழுந்து கிடந்தனர். அதில் அவன் இருந்தான். அவனை முதலில் கண்டுகொண்டது லட்சுமிதான்.

“இதோ இங்கே இருக்கான் பாருங்க.” என்று மற்ற மூவரையும் அழைத்தார் லட்சுமி.

அங்கு சாலையின் ஓரமாக இருந்த சேற்றில் விழுந்து கிடந்தான் அவன். முகம் முதல் கால் வரை சாலையின் மண்ணும் சேரும் அப்பியிருந்தது. அவனை அந்த நிலையில் பார்த்த அவனின் தாய்க்கு கோபம்  பொத்துக் கொண்டு வந்தது.

“எப்படி கடக்குது பாரு நாயி! டேய் எழுந்திருடா. எழுந்திருடா!” என்று அவன்  சேர் படிந்திருந்த பனியனை பிடித்து அவனை எழுப்பி உட்கார வைக்க முயன்றார்.

ஆனால் அவனால் உட்கார முடியவில்லை. ஏதோ முனகிக்கொண்டு திரும்பவும் தரையில் விழுந்தான். அப்பொழுது வெண்மதி பக்கத்திலிருந்த குழாயடியில் தண்ணீர் அவள் கையில் பிடித்து அவன் முகத்தில் தெளித்தாள்.  ஆனால் அவன் தெளியவில்லை. அந்த அளவுக்கு போதையில் இருந்தான்.

அவனின் தாய் அவனை இழுத்து வந்து அந்த குழாயடியில் உட்காரவைத்து குழாயை திறக்க அவன் தலைமீது தண்ணீர் சில்லென்று விழ அவன்  மெல்ல மெல்ல போதையிலிருந்து தெளிந்தான். பிறகு கண்ணை திறந்து தாயை பார்த்தான்.

“நீ இங்க என்ன பண்ற?” என்று தன்னை போதையிலிருந்து தெளிய வைத்த தாயின் மீது எரிந்து விழுந்தான்  அவன்.

“உன்னை மாதிரி பையனை பெத்தா இங்க வராம அவார்டு வாங்கவா போகமுடியும்? எல்லாம் என் தலையெழுத்து. முதல்ல இவங்க கேக்கறதுக்கு பதில் சொல்லு.” என்று முல்லையை காண்பித்தார்.

முல்லையை பார்த்ததும் அவன் தட்டுத்தடுமாறி எழுந்து ஓட முயற்சி செய்தான்.

இதனை கவனித்த அவன் தாய் அவன் பனியனை பிடித்து இழுத்து திரும்ப அங்கேயே உட்கார வைத்தார்.

“எங்கடா ஓடற? இந்த இடத்தை விட்டு எழுந்த  மவனே உன்னை நானே என் கையாலேயே கொன்று போட்டுடுவேன். ஒழுங்கா உட்காரு.” என்று ஒற்றை விரலை உயர்த்திக் காட்டி மிரட்டினார் அவனது தாய்.

அவன் வேறு வழியில்லாமல் அங்கேயே உட்கார்ந்து இருக்க முல்லை ஆரம்பித்தார்.

“என்ன தம்பி என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் வேலைக்கு வர மாட்டேங்கறீங்க? அதைவிட முக்கியமா எதுக்காக எங்களை பார்த்து இப்படி ஓட  பார்க்கிற?” என்று விசாரித்தார்.

“அதெல்லாம் நான் சொல்லக்கூடாது. என்னை எதுவும் கேட்காதீங்க.” என்றான் தள்ளாடியபடி.

“இங்க பாருப்பா உன்னை நம்பி நான் இந்த வேலையில சேர்த்து விட்டு இருக்கேன். இப்போ இப்படி பண்ணினா நாங்க என்ன செய்யறது?” என்று பணிவாக விசாரித்தார்  முல்லை.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நாங்க ரெண்டு பேரும் இனிமே இந்த வேலைக்கு வர மாட்டோம்.” என்று திரும்பத் திரும்ப அதையே கூறினான். “ஏன் வர மாட்டீங்க? சம்பளம் ஏதாவது பத்தலையா?” என்று வெண்மதி கேட்டாள்.

“அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லுப்பா.” என்று லட்சுமி விசாரித்தார். அதற்கு அவன் “வேலைக்கு போகாம சம்பளம் எங்களுக்கு வரும். அப்புறம் எதுக்கு நாங்க வேலைக்கு போணும்? எங்களுக்கு ஜாக்பாட் அடிச்சி இருக்கு. ஒரே ஜாலிதான்.  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி.” என்று பலமாக கரை படிந்த பல்லை காட்டி சிரித்தான்.

“என்னடா சொல்ற? மரம் கழண்டு போச்சா?” என்றார் அவனது தாய். “கழண்டு போனது உனக்கு தான். நான் நல்லா ஸ்டெடியா தான் இருக்கேன்.” என்று  எழுந்து நிற்க முயன்று திரும்ப பொத்தென்று விழுந்தான். மயக்கத்தில் ஆழ்ந்தான்.

“இனிமே இவனை எழுப்ப முடியும்னு தோணல. நீங்க நாளைக்கு காலையில வாங்க.” என்று அவன் தாய் கூற மூவரும்  வீட்டை நோக்கி நடந்தனர்.

அப்பொழுது முல்லை “என்னமோ உளர்றா. என்னன்னு ஒண்ணுமே புரியல. உனக்கு ஏதாவது புரிஞ்சுதா வெண்மதி?” என்று வெண்மதியை பார்த்தார்.

“எனக்கு ஓரளவுக்கு புரியுது. இருந்தாலும் நிச்சயமா தெரியல. அதனால இப்போ நான் சொல்ல முடியல.” என்று புதிர் போட்டாள் வெண்மதி.

கதிர்வேலன் தான் இந்த வேலையை செய்திருக்கிறான் என்று அவளுக்கு தெரிந்துவிட்டது. எனினும் அதனை அந்த பையன்களின் வாயாலேயே தெரிந்து கொண்ட பிறகு அவனிடம் நேரடியாக இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.  இந்த பதட்டமான சூழ்நிலையில் கதிர்வேலனை பற்றி தாயிடம் கூறினால் அவரது பதட்டம், பயம் எல்லாமே அதிகரிக்கும் அது அவருக்கு நல்லதல்ல என்று இப்போதைக்கு இதை சொல்லவேண்டாம் பின்பு  சொல்லலாம் என்று தாயிடம் மறைத்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!