Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 5 by Aruna Kathir

அத்தியாயம் 5

அடுத்த முறை வகுப்பில் பரணி கேள்வி கேட்கும்போது நர்மதா சொல்லிக் கொடுத்தது போல, பரணிதரன் கேள்வி கேட்டு முடிக்கும் முன்னர், திவ்யா தானாகவே பதில் சொல்லியிருந்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தது போல அவள் பதிலளித்த விதம் கண்டு பரணி அவளைப் பாராட்டவில்லை. மாறாக இன்னமும் திட்டலானான்.

“கேள்விக்கு ஆன்சர் தெரிஞ்சா முதல்ல கை தூக்கணும். நான் யாரை பாயிண்ட் அவுட் பண்றேனோ அவங்க மட்டும் பதில் சொன்னா போதும். அவரசகுடுக்கத் தனமா எல்லாமே எனக்கு மட்டும் தான் தெரியும்னு குதிக்க கூடாது, சிட்.” என்று கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் முகத்திலடித்தாற் போல சொல்லிவிட, திவ்யபாரதிக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

அவளிடம் எந்த ஆசிரியரும் இதுநாள் வரையிலும் இப்படி கோபப்பட்டதே இல்லை. அதிலும் சரியான பதில் சொன்னதற்காக இப்படி அவள் ஏச்சு வாங்கியதே இல்லை. அவள் திட்டு வாங்கவும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிலர் சற்றே நக்கலாக சிரிக்க, திவ்யாவின் முகம் கன்றிப் போயிற்று.



Advertisement

அன்றைய தினம் வகுப்பிலும் விடுதியிலும் விடாமல் பரணியைப் பற்றி ஆதங்கப்பட்ட திவ்யா, இரவு தன் வீட்டிற்கு அழைத்து, தன் அன்னையிடமும் தந்தையிடமும் பரணியைப் பற்றி தன் ஆசை தீரத் திட்டினாள்.

“கரெக்டா ஆன்சர் சொன்னதுக்கு என்னை இன்சல்ட் பண்ணிட்டான் ம்மா. பழைய கோவத்தை மனசில வச்சுகிட்டு எப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தினான் தெரியுமா? முன்னாடி பெஞ்ச் பிள்ளைக திரும்பி பார்த்து கெக்கலிக்க போட்டாளுக.”

“சரி, விடுடி. ஃபோனை எடுத்ததில இருந்து இதை தானே சொல்லிட்டு இருக்க.” என்று சலிப்புடன் பேசிய தாய் மஞ்சுளா, “பாடம் நடத்தற வாத்தியார பேசற பேச்சா இது? அவன் இவன்னு கண்டமேனிக்கு ஏசற?” என்று திவ்யாவின் மீதே சம்பவத்தைத் திருப்ப, திவ்யா நேராக தன் தந்தையிடம் சரணடைந்திருந்தாள்.

Advertisement

திவ்யாவின் தந்தை ரகுராமனும் மகள் புலம்புவதைக் கண்டு இரக்கப்பட்டு, “நான் வேணும்னா நாளைக்கு காலேஜுக்கு வந்து அந்த வாத்தியார்ட்ட பேசவா பாப்பா? பதில் சொன்னதுக்கு எதுக்கு ஏசறீங்க, எங்க சின்ன பாப்பா வருத்தப்படுதுன்னு சொல்லவா?” என்று கேட்க, திவ்யாவிற்கு கோபம் வந்து விட்டது.

Advertisement

“என்னைய சின்ன பாப்பான்னு கூப்பிடாதீங்கன்னு சொன்னா கேட்கவே மாட்டீங்களா? அதான் அழகா திவ்யான்னு பேரு வச்சிருக்கீங்கள்ல, அதை சொல்லி கூப்பிடறது தானே?”

“அட! அக்கா எனக்கு பெரிய பாப்பா, நீ சின்ன பாப்பா. அப்படியே கூப்பிட்டு பழக்கமாயிட்டுல்ல. சரி, நீ சொல்லு பாப்பா, அப்பா வந்து அந்த வாத்தியார்ட்ட கேட்கவா? ஏன்டா என் புள்ள பதில் சொன்னப்போ திட்டினியாம்னு?” என்றார் திவ்யபாரதியின் தந்தை ரகுராமன்.

“ம்க்கும், அதெல்லாம் ஒன்னும் வேணாம் ப்பா. நீங்க வேற இங்கையும் வந்து சின்ன பாப்பாவ ஏன் ஏசறீங்கனு கேட்டு வைக்காதீங்க. விடுங்க, நான் பார்த்துக்கிறேன். சின்ன பாப்பாவாம் சின்ன பாப்பா.” என்று தந்தையிடம் சடைந்து கொண்ட திவ்யா இன்னமும் சிறிது நேரம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.

Advertisement

அன்றைய தினம் உறக்கம் வராமல் கட்டிலில் உருண்டு உருண்டு படுத்தவள், ‘ஒரு பதில் சொன்னா தப்பா? எப்படி பேசிட்டாரு… இன்னமும் என்ன மண்ணாங்கட்டிக்கு மரியாதை வேண்டிக் கிடக்கு? குத்துகல்லுக்கு குளிரா, வெயிலான்னு சொல்லற மாதிரி, இவன் க்ளாஸ் கவனிச்சா தான் நான் பாஸாக முடியுமா? இவன் க்ளாஸ்ல இனி நான் வாயே திறக்கப் போறதில்ல. இவன் க்ளாஸ் எடுப்பான்னு நம்பிதான் காலேஜ் சேர்ந்தேனாக்கும்? நானே படிச்சுக்குவேன். நீ ஒன்னும் எனக்கு சொல்லித் தர வேணாம், போ.’ என்று தீர்மானம் செய்துகொண்ட பின்னர் தான் திவ்யாவிற்கு நிம்மதியாக உறக்கமே வந்தது.

திவ்யா, பரணிதரனைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த அதே வேளையில், அந்த பெண்கள் விடுதியில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஆண்கள் விடுதியில், ஒரு அறையின் முன்பு திட்டில் அமர்ந்திருந்த பரணி, திவ்யாவைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தான்.

இன்னமும் சொல்லப் போனால், திவ்யாவின் வகுப்பில் பயிலும் மாணவன் சக்திவேலிடம் திவ்யாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். சக்திவேலின் அண்ணன், பரணியுடன் ஒரே வகுப்பில் பயின்றவன். அதனால் சக்திவேலிடம் தம்பி முறையில் சற்றே இலகுவாகப் பேசுவான் பரணி.

“டே சக்தி, உங்க க்ளாஸ்ல அந்த முந்திரிக்கொட்டை இருக்கே, அது எப்படிடா?” என்று தன் அறையின் வாயிலின் திண்டு மீது ஒரு காலை தொங்கப் போட்டபடி அமர்ந்து வினவினான்.

“யாரு திவ்யாவா பரணி ண்ணா?”

“ஆமா, ஆமா, அவதான். அவ ஆள் எப்படிடா?”

“எப்படின்னா எதைப் பத்தி கேட்குறீங்க? நல்லா படிப்பா, போன ரெண்டு வருஷமாவே க்ளாஸ்ல முத மூனு ரேங்க்குள்ள வந்துடுவா.” என்றான் சக்திவேல், பரணியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே.

“படிப்பைப் பத்தி கேட்கலைடா. அவ கூட ஒரு பையன் சுத்துறானே, அவளோட முன்னத்த ரோல் நம்பர். அந்த டேஸ்காலர் பையன்…” என்று தினேஷின் பெயர் மறந்து விட்டவன் போன்ற பாவனையுடன் விசாரித்தான் பரணி.

“யாரு தினேஷா?”

“ஆமா, அவன்தான். ரெண்டும் என்ன லவ் பண்ணுதுகளா?” என்று கேட்ட பரணியை, சற்றே கண்களை உருட்டி நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்டான் சக்திவேல்.

“தினேஷும் திவ்யாவுமா? சே சே, அப்படியெல்லாம் இல்ல ண்ணா. பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டும். அவன் டேஸ்காலர், அவ்வளவா படிக்க மாட்டான். இவ படிக்க ஹெல்ப் பண்ணுவா, அவளோதான்.”

“அப்படியா, பார்த்தா அப்படி தெரியலையே? கூடி கூடி ரெண்டும் லேப்ல பேசிட்டே இருக்கு எப்ப பார்த்தாலும்.” என்றான் பரணி.

“எனக்கு தெரிஞ்சு அப்படிலாம் எதுவும் இல்லண்ணா. அந்த பொண்ணும் நல்ல டைப்தான். அவனுக்குன்னு இல்லை, யாரு ஹெல்ப் கேட்டாலும் முகம் சுளிக்காம செய்யும். லேப்ல அவுட்புட் வரலைன்னா, சொல்லி குடுக்கும். மத்த படிக்குற குந்தாணிக மாதிரி அலட்டிக்காது.” என்று திவ்யாவைப் பற்றி நல்லவிதமாகவே சொல்லிக் கொண்டிருந்தான் சக்திவேல்.

“ஓ…” என்று மட்டும் பதிலளித்த பரணிக்கு, சக்திவேலிடமிருந்து திவ்யாவைப் பற்றி இன்னமும் தெரிந்து கொள்ள ஆசைதான். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது. முன்பு போல வெறும் சீனியராக இருந்தால் கேட்டிருப்பான். இப்போது அவளது ஆசிரியர் என்ற மதிப்பு மிகுந்த ஸ்தானத்தில் நிற்பதனால், அப்படிக் குடைந்து கேட்பது தவறு என்று தோன்றிவிட்டது.

பரணியின் தயக்கத்தை அவன் சொல்லாமலே புரிந்து கொண்ட சக்தி, “ண்ணா, என்ன திவ்யா மேல கண்ணா? விஷயம் அப்படி போகுதா?” என்று நக்கலாக சிரிப்புடன் வினவினான்.

சக்தி கேட்கவும் அவன் மீது கோபப்படுவது போல அழகாய் நடித்த பரணி, “சே, ஏன்டா நீ வேற? அப்படிக்கிப்படி போய் யார்கிட்டயும் உளறி வைக்காதடா. கொஞ்ச நாளைக்கு இந்த வேலையில இருக்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு வேட்டு வச்சுடாத.” என்று சமாளிப்பாகக் கூறினான்.

“நான் யார்ட்ட ண்ணா சொல்லப் போறேன்? எங்க அண்ணன் மாதிரி தான் நீங்களும் எனக்கு, நம்புங்க ண்ணா.” என்று சக்தி டச்சிங்காக நெஞ்சை நக்கிவிட, அவன் சொன்ன விதத்திலேயே பரணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“டேய், டேய், அளவா நடிடா. நீ யாருன்னு எனக்குத் தெரியாதா? அடுத்த பத்தாவது நிமிஷம் உங்கண்ணனுக்கு கால் பண்ணி உளறி வைப்ப. அந்த நாயி, ‘சேதி தெரியுமா? சேதி தெரியுமான்னு…’ ஊரெல்லாம் தண்டோரா போடும். அதனால நம்ப முடியாத அளவுக்கு ஓவர் ஆக்டிங் குடுக்காத ராசா!”

“சரி ண்ணா, சரி ண்ணா, ரொம்ப புகழாதீங்க, எங்க ஃபேமலிக்கே புகழ்ச்சி புடிக்காது. அதே மாதிரி சுத்தி வளைச்சு பேசறதும் புரியாது. நாங்கள்லாம் நேரா நாட்டாமை டு பங்காளி, பங்காளி டு நாட்டாமை தான். இப்போ என்ன, அந்த புள்ள திவ்யபாரதி பத்தி உங்களுக்கு தெரியணும், அவ்வளோ தானே? ஆல் டீடெய்ல்ஸ் ஐ டெல் யூ.” என்று பரணியின் அருகே திண்டில் காலை மடக்கிப் போட்டு உடன் அமர்ந்தான் சக்திவேல்.

“திவ்யபாரதி எங்க ஊரு தான் ண்ணா, கிருஷ்ணகிரி. அப்பா விவசாயம் பார்க்கிறாரு. அம்மா ஹவுஸ் வொய்ஃப். ஒரு அக்கா இருக்காங்க. போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்துக்கு எல்லாரையும் இன்வைட் பண்ணியிருந்தா. ஒரு நாலஞ்சு பேர் போனாங்க. கவர்மெண்ட் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் பக்கம் தான் வீடு. நம்ம முன்னூத்தி பதினோராம் நம்பர் ரூம் முத்துக்கருப்பன், சிவில் டிபார்ட்மெண்ட் பையன் இருக்கான்ல? அந்த கருவாயன் இவகூட ஸ்கூல்ல ஒன்னா படிச்சவன் தான். அவனை கேட்டா இன்னும் டீடெயில்ஸ் தெரியும்.” என்று சொல்லி முடித்தான் சக்திவேல்.

அத்தோடு, “ஃபோன் நம்பர் வாட்ஸாப் க்ரூப்ல இருக்கு. வேணுமா ண்ணா?” என்று கேட்க, பரணி கை முஷ்டியை குத்துவது போல் காட்டி முறைத்தான். ஏனென்றால் அதே வாட்ஸாப் க்ரூப்பில் ஆசிரியர்களும் இருந்த காரணத்தினால், ஏற்கனவே அவனிடம் திவ்யாவின் எண் இருந்தது.

“சாரி ண்ணா! சாரி ண்ணா! நீங்க வாத்தின்னே அடிக்கடி மறந்துடுது. அதே க்ரூப்ல நீங்களும் இருக்கீங்கள்ல? சீனியர் ஞாபகத்திலயே ஃபோன் நம்பர் வேணுமான்னு கேட்டுட்டேன்.” என்று தலையை தட்டிக் கொண்டான் சக்தி.

“டே, நான் விசாரிச்சதைப் பத்தி யார்ட்டையாவது மூச்சு விட்ட… அவ்வளோ தான், தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை!” என்று மிரட்ட,

“ண்ணா, இதெல்லாம் சொல்லணுமா? ஏற்கனவே உங்களுக்கு சொல்லிட்டேன். இருந்தாலும் இன்னொரு முறை கவிதையில சொல்றேன் கேட்டுக்கோங்க.

என் பேரு சக்தி, எனக்கு இருக்கு உங்க மேல பக்தி, இரும்பு கைப்பிடி சுத்தி, சொல்ல மாட்டேன் நான் விஷயத்த கத்தி, ஏ டண்டனக்கா… ஏ டணக்குனக்கா…” என்று பாடி காட்ட, பரணி மனம் விட்டு நகைத்தான்.

சக்திவேல் யாரிடமும் சொல்லமாட்டன் என்று தெரிந்திருந்த போதிலும், அவனுக்கு ஒரு ஆசிரியர், மாணவியைப் பற்றி கேட்கிறாரே என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்று நினைத்தான். சக்திவேல் தன்னை இன்னமும் சீனியராகப் பார்ப்பதும், தன் அண்ணனின் நண்பன் என்ற உரிமையில் பேசுவதுமாக இருந்ததால் சக்தி, தான் திவ்யாவைப் பற்றி விசாரித்ததை வெளியே சொல்லிவிடுவானோ என்று பரணி கவலைப்படவில்லை.

இன்னமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, தன் அறையில் சென்று படுத்துவிட்டான்.

எப்பொழுதும் படுத்த உடனே உறங்கிவிடும் சுபாவம் கொண்டவன். ஆதலால், மனதில் திவ்யாவைப் பற்றிய எண்ணங்கள் மேலோட்டமாக அலைமோதிய போதும், அதைப் பொருட்படுத்தாமல் நிம்மதியாக நித்திரை கொள்ள பரணியால் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!