Skip to content
Post Views: 2,949
“டின்னர் சாப்பிடலையா திவ்யா. சிட் வித் அஸ்” என்று யஷ்வந்து சப்பாத்தி சுட்டுக் கொண்டே மொழிய, “இல்ல, ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டேன். நல்லா இருந்துச்சு” என்று ஒப்புக்காக யஷ்வந்தின் மனம் நொந்துவிடக் கூடாது என்று கூறினாள்.
“ஓ, நல்லா இருந்துச்சாம் யஷ். இன்னொரு வரட்டி, ஐ மீன் சப்பாத்தி வை உன் சவுத் இந்தியன் ஃப்ரெண்ட்டுக்கு” என்று அவளை சீண்டுவது போலக் கூறிய பரணி, அவள் திணறுவதைக் கண்டு திருப்தியுற்று எழுந்து சென்றான்.
‘ஆரம்பிச்சுட்டானா? ஆண்டவா!’ என்று கண்களைப் பெரியதாக உருட்டிய திவ்யா, “எனக்கு போதும் யஷ். ஐம் டன்” என்று அவசர அவசரமாக கூறி தப்பித்தாள்.
சாப்பிடும் போது நாபியும் வந்துவிட, அந்த வீட்டின் அனைவரையும் பரிட்சயம் செய்து கொண்டாள். மாலை ஏழு மணிக்கே அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தது விசித்திரமாக இருந்தது.
Advertisement
“இங்க சீக்கரமா சாப்பிட்ருவாங்க. டின்னர் டைம் இங்க 6 டு 7.30 தான். அதே மாதிரி நைட் எயிட் தேர்டிக்கே படுக்க போயிடுவாங்க. அப்போ தான் காலையில ஐஞ்சு மணிக்கு எந்திரிக்க முடியும். நீயும் இதை பழக்கப்படுத்திக்கோ. ஏன்னா, ஆபீஸ் கேப் 7.15க்கு வந்துடும். எயிட் ஒ க்ளாக் நமக்கு ஆபீஸ்ல இருக்கணும்” என்று விளக்கம் கொடுத்தான் வருண்.
அத்தோடு, “இங்க சமைக்கறது, க்ளீனிங் எல்லாமே நாமளே தான் பார்க்கணும். சோ, குக்கிங் தான் கொஞ்சம் கஷ்டம். மோஸ்ட்லி நைட்க்கு ஆபீஸ்ல இருந்து வரும்போதே வாங்கிட்டு வந்துடுவோம். காலையில ப்ரேக்ஃபஸ்ட் சீரியல்ஸ் தான். இல்லைன்னா எக், மில்க், லோஸ்ட் இப்படி. மதியம் ஆபீஸ்ல ஷாப்ஸ் இருக்கு. பக்கத்தில ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் இருக்கு. இங்க குக்கிங் வீக்கெண்ட் மட்டும் தான்” என்று அந்த வீட்டின், அவர்களின் அன்றாட நிகழ்வுகளைப் பட்டியலிட்டான் வருண்.
“எனக்கும் குக்கிங் அவ்வளோ தெரியாது. ஆனா, நல்லா சாப்பிட தெரியும்” என்று திவ்யா கூற, வருணும் யஷ்வந்தும் நகைத்தனர். மூவரும் சேர்ந்து கிட்ச்சனை துடைத்து, சுத்தம் செய்து முடித்தனர். நாபி தன் ஈவினிங் வாக்கிற்காக ரன்னிங் ஷு மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டிருந்தாள். பரணி அங்கே இல்லை என்பது திவ்யாவின் கவனத்தில் பதிந்தாலும் பெரியதாக காட்டிக் கொள்ளவில்லை.
Advertisement
வேலைகள் முடித்து யஷ்வந்தும், வருணும் டீவியில் மேட்ச் பார்க்க உட்கார்ந்துவிட, திவ்யா தன் அறைக்கு சென்றுவிட்டாள். அவரவர் வேலையில் ஈடுபட்டிருக்க, திவ்யாவிற்கு வீட்டு நினைவும் நண்பர்களின் நினைவும் எழுந்தது.
Advertisement
வெர்மாண்டினுக்கும் இந்தியாவிற்கும் 10.30 மணி நேர வித்தியாசம். ‘இங்கே நைட் இப்போ 8.30 மணி. அங்கே அதே நாள் காலை 11 மணி. சரி வீக்கெண்ட் தானே! ஃப்ரீயா தான் இருப்பாங்க’ என்று எண்ணி அப்பா, அம்மா, அக்கா, தினேஷ், பரிமளா என அனைவருக்கும் அழைத்து பேசிவிட்டு உறங்கிப் போனாள்.
அதிகாலை ஆறு மணிக்கே உறக்கம் கலைந்து போக, ஜன்னலின் வழி வெளியே பார்த்தாள். அத்தனை ரம்மியமாக இருந்தது. இவள் அறை வீட்டின் பின்பக்கம் இருந்ததால், இங்கிருந்து பார்க்கையில் வெறும் குச்சி குச்சியாக மரங்களும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பொதிந்திருந்த வெண்பனியுமே தெரிந்தது. அதிலும், மெல்லிய மழைத் தூரலாக பனி பொழிந்து கொண்டிருக்க அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடம் எந்த சிந்தனைகளும் இல்லாமல் நிசப்தமான அந்த மெளனத்தில் லயித்திருக்க, கீழே, “சரக், தொப், சரக் தொப்” என்ற சப்தங்கள் அவள் தவத்தைக் கலைத்திருந்தன.
Advertisement
கீழே பரணி, ஒரு பெரிய பனி வழிக்கும் குச்சியின் உதவியுடன் வீட்டின் கீழ் பக்க ஜன்னல் அருகே மூடியிருந்த பனியை அகற்றிக் கொண்டிருந்தான்.
பரணி வேலை செய்வதை கவனித்த வண்ணம் முதல் மாடியில் நின்றிருந்தவளின் எண்ணங்கள் அவனிடம் குவிந்திருந்தது. குளிருக்கு தோதாக முழு நீள பாண்ட்டும் அழுத்தமான ஷூக்களும் அணிந்து, கைகளில் ரப்பர் க்ளவுஸுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரக் தொப், சரக் தொப்” என்று தாளமாக வேலை நடந்து கொண்டிருக்க, எதார்த்தமாக தலையைத் தூக்கி மேலே அவள் ஜன்னலைக் கண்ட பரணிக்கு கைகள் அசையாமல் நின்றுவிட்டன. பரணி தன்னைப் பார்த்துவிட்டான் என்பது புரிந்த போதிலும் திவ்யா அவனை விழிவிரிய ஏறிட்டாள்.
‘தலையை பின்னால் இழுத்துக் கொள்’ என்று மூளை கட்டளையிட, ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என்று கெஞ்சியது அவள் மனம். இந்த குழப்பத்தில் பரணியை ஏறிட்டபடிக்கே இருந்தாள் திவ்யா.
அவன் விழிகள் ஒரு நொடி கூட அவள் முகத்தை விட்டு அகலவில்லை. நெற்றியில் இருந்து மெல்ல மெல்ல அவளைப் புதிதாகப் பார்ப்பவன் போல, தனக்குள் மீண்டுமாய் அவளை நிரப்பிக்கொள்ள ஆரம்பித்தான்.
திவ்யா உள்ளே சென்றுவிடுவாளோ என்ற தவிப்பில், அவசரமாக அவள் முகத்தை படம் பிடித்துக் கொள்பவன் போல கண்களை அவள் முகமெங்கும் படரவிட்டான். இறுதியாக திவ்யாவின் விழிகளுடன் தன் பார்வையை கலந்தவனின் கள்வடியும் போதை பார்வையில் இருந்து விடுபட இயலாமல் தவிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
அவன் விழிகள் அவள் உதட்டோரத்தை கவனிக்க, அங்கே மெல்லியதாக நெளிந்தாடும் புன்னகையைக் கண்டு சொக்கிப் போய்விட்டான் பரணி.
‘இந்த நாலு வருஷ பிரிவுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லையா? காலேஜ்ல என்னைப் பார்க்கறப்போ சீண்டலா ஒரு சிரிப்பு வந்து போகுமே, மின்னல் மாதிரி, அதே மாதிரி தானே இருக்கு இப்பவும். இன்னுமா இவளை என் மனசு நினைச்சு மருகுது?’ என்று அவன் மனம் பதட்டத்துடன் துடித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அசையாது நின்றான் பரணி.
திவ்யாவின் நெஞ்சம் அவள் தொண்டையில் தான் துடித்துக் கொண்டிருந்தது. தட் தட் என்று அது அடித்துக் கொண்ட சப்தம் கீழே நின்றிருந்த பரணிக்கே கேட்டிருக்கும். அவளையும் அறியாது, அவள் உதட்டோரம் புன்னகை விரிந்திருக்க, தலையோ வழக்கம் போல கவிழ்ந்து கொண்டது.
குனிந்த தலையில் இருந்து கண்கள் மட்டும், அவள் இதயத்தின் ஜன்னலாய் மாறி, அவன் குளிர் பார்வை கொட்டிய காற்றை அவள் இதய அறைக்குள் வீசச் செய்தன. மனமெல்லாம் குளிர்ந்து சில்லிட்டிருக்க, படபடத்த இதயம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் துடித்தது.
இருவரின் மோன நிலையையும் கலைக்கும் விதமாக, கீழே யாரோ வரும் அரவம் கேட்டு பரணி சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
“பரணி, முடிஞ்சதா? போன வாரத்துக்கு இந்த வாரம் கொஞ்சம் ஸ்னோ கம்மியாகி இருக்குல” என்று கீழே வருணின் குரல் கேட்டது. திவ்யாவும் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு இன்னமும் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. இதென்ன இத்தனை வருடங்கள் கழித்த பின்னரும் இப்படி ஒரு ஈர்ப்பு இவனிடம்? இவன் பார்க்கையில் தானாக விழிகள் தரை பார்ப்பதென்ன மாயவித்தை. அதைவிடவும், உதட்டோரம் நெளியும் அந்த புன்னகையின் விஸ்தீரத்தை உணரவும் மெய்சிலிர்த்தது.
இதெல்லாம் பரணிக்கு தன் மீது என்ன விதமான எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்ற அச்சம் வேறு. ‘ஏன் அவனும்தானே கண்ணை எடுக்காம பார்த்தான்?’ என்ற வாதம் தோன்றிய போதும், ஆறு மாதங்களுக்கும் அதிகமாக அலுவல் ரீதியாக மட்டுமே செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கையில், இன்று அவனை நேராகக் காணும் முதல் தினமே இப்படி கொக்கி போட்டு அவள் பார்வையை நிறுத்த முடியுமா இவனால்? முடியுமா என்பதென்ன கேள்வி? என்ன வகை பார்வையாம் அது? அவளை மெய்மறக்கச் செய்து, வெட்கத்தில் தலை கவிழ்த்து கொள்ளச் செய்வித்து விட்டதே!
‘திவி! என்னடா பண்ணற? ஆறு மாசமா உன்கிட்ட ஃப்ரெண்டிலியா ஒரு வார்த்தையாவது பேசியிருப்பானா? அன்னைக்கு என்னவோ, என் மனசு புரியுதா? மண்ணாங்கட்டி புரியலையான்னு ஓடற பஸ்ஸில உட்கார்ந்து ஒப்பாரி வச்சான்? இவ்வளோ வருஷம் அந்த கண்றாவி காதல் எங்க போச்சாம்? ஆமா நான் வேண்டாம்னு சொல்லிட்டு எந்திரிச்சு வந்துட்டேன் தான். அதுக்காக அப்படியே விட்ருவானாமா? ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என்கிட்ட பேச ட்ரை பண்ணியிருக்கணும்ல’ என்று உள்ளம் கூப்பாடு போட்டது.
‘இப்போ இப்படி வச்ச கண்ண எடுக்காம பார்த்தானேன்னு நினைச்சு, நான் சந்தோஷப்பட்டுக்கணுமா? போடா போடா! இவ்வளோ நாள் இல்லாத லவ்வு, ‘சும்மா பாரு குமுதா பத்திக்கும், சும்மா பாரு பத்திக்கும்னு’ என்னை பார்த்ததும் குபுக்குன்னு கொழுந்துவிட்டு எரியுதோ! இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு!’ என்று தலையை உலுக்கிக் கொண்டாள்.
‘சரி, இப்போ இவனைப் பார்க்கறப்போ எப்படி ரியாக்ட் பண்ணணும்? ‘நீ பார்த்த பார்வையில பச்ச தண்ணி பத்திகிடுச்சு’ன்னு நம்பணுமா? இல்ல, ‘யார்ரா நீ கோமாளின்னு’ கண்டுக்காம போயிடணுமா? ஒரே குழப்பமா இருக்கே!
எப்படியும், அவன் ஒரு கான்செப்ட் வச்சு, அது படி நடப்பான். நாம அதையே ஃபாலோ பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம். அவனா பேசினா நாமளும் பேசுவோம், இல்லையா பேசாம விட்றலாம்!’ என்று தீர்மானம் செய்தாள்.
பரணியைப் பற்றி முன்னுக்குப் பின்னாக நினைத்துக் கொண்டிருந்ததில் தலை வலிக்கத் துவங்க, இறங்கி கீழே சென்றாள். நாபி காலை நேர ஜாகிங்கிற்காக ஷூக்களை போட்டுக் கொண்டிருந்தாள். திவ்யாவைக் கண்டதும் சினேகமாக கையசைத்தாள்.
வருணும், பரணியும் இன்னமும் வெளி வாயிலில் கிடந்த பனியை அள்ளிக் கொண்டிருந்தனர். யஷ்வந்த், கிச்சன் ஐலாண்ட் மேடையில், ஒரு டசன் முட்டைகளை உடைத்துப் போட்டு ஆம்லெட் செய்ய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தான்.
“ஹாய்! குட் மார்னிங் திவ்யா. ஆப்கோ டீ சாஹியே?” என்று ஹிந்தியில் வினவினான்.
“இல்ல, எனக்கு டீ பிடிக்காது காபி தான். நான் போட்டுக்கறேன்” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்க, “வாவ் திவ்யா காபி போடறீங்களா? எனக்கும் ஒரு கப்” என்றபடிக்கு உள்ளே வந்தான் வருண். அவன் பின்னால் கைகளை துடைத்துக் கொண்டு வந்த பரணியின் பால் பார்வையை செலுத்தினாள் திவ்யா.
அவன் முகத்தில் இருந்து எந்த விஷயத்தையும் கணிக்க இயலவில்லை. திவ்யா தன்னைப் பார்ப்பதை உணர்ந்தும், முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் யஷ்வந்திடமே கண்களை பதித்திருந்த பரணி, “இன்னைக்கும் முட்டயும் ப்ரெட்டுமா?” என்று யஷ்வந்திடம் பேசுவது போன்ற பாவனையில் திவ்யா நின்றிருந்த இடத்தின் பின்னால் வந்திருந்தான்.
அவன் திவ்யாவின் சமீபமாக வரவுமே இவளது கைகளில் ஒரு பரபரப்பு சேர்ந்து கொண்டது. பிடித்திருந்த பால் ஜக்கை இறுக்கமாக படித்தவளின் கழுத்தருகில் குனிந்த பரணி, “கண்ணாடி! உடைஞ்சறாம பார்த்துக்குங்க!” என்று சற்றே மெல்லிய குரலில் கூறிவிட்டு, எதுவுமே நடவாதது போல யஷ்வந்திடம் பேச்சு கொடுக்கத் துவங்கினான்.
பரணியின் குரல் காதருகிலும், அவன் சூடான மூச்சு அவள் கழுத்திலும் படிய, கண்ணாடி ஜக்கின் கைப்பிடியை இன்னமும் இறுக்கினாள். திவ்யாவிற்கு, அவன் கண்ணாடி ஜக்கை சொல்லவில்லை என்பதும், அவள் இதயத்தை சொல்கிறான் என்பதும் தெளிவாகப் புரிந்தது.
‘உடையாம பார்த்துக்கோங்கன்னா? என்ன சொல்ல வர்றான். நான் உடைக்க முயற்சி பண்ணுவேன். நீங்க உடைஞ்சுடாதீங்கன்னு சொல்லறானா? இல்லை, இப்படியே உடையாம பத்திரமா பார்த்துக்கோங்கன்னு நக்கலா சொல்லறானா?’ என்று யோசிக்கும் இடத்தில் அவள் இருக்கவில்லை.
அவனது சொற்களின் தாக்கம் மெல்ல குறையவும், பலமாக மூச்சுவிட்டவளை கடைக் கண் சிரிப்பினால் பார்த்தவனின் உதடுகளில் சின்ன வெற்றிப் புன்னகை. அவன் தாக்கம் அவளிடம் இருக்கிறது என்பது கண்கூட புலனாயிற்றே!
அவன் சிரிப்பதை கண்டுகொண்ட திவ்யா, “ஸ்டெடி திவி” என சற்றே அவசரமாக உச்சரிக்க, “திவ்யா ஏதாவது சொன்னீங்களா?” என்று வம்படியாக அவள் பதட்டம் கண்டு குதூகலத்துடன் வினவினான்.
“அது… கா… காபி… காபி உங்களுக்கும் வேணுமான்னு கேட்டேன்” என்று சமாளிப்பாக தன் பதட்டம் மறைந்து இயம்பினாள் திவ்யா.
“ஓ…” என்றவன், கொஞ்சமும் கடைக் கண் பார்வையத் தாழ்த்திக் கொள்ளாமல், “நான் காபிலாம் குடிக்க மாட்டேன்! ஒன்லி க்ரீன் டீ” என்று சொல்லிக் கொண்டே, யஷ்வந்த் தனக்காக சக்கரை இல்லாமல் போட்டு வைத்திருந்த சூடான க்ரீன் டீயை எடுத்து ஒரு மடக்கு பருகினான்.
உள்ளே சென்ற திரவத்தின் துவர்ப்பு சுவையைத் தாள மாட்டாமல், அருகே நின்றிருந்த யஷ்வந்தின் முதுகில் துப்பியும் விட்டிருந்தான். இதைக் காணவும் களுக்கென நகைத்தாள் திவ்யா. அவளுடன் வருணும் சேர்ந்து சிரிக்கத் துவங்க,
“பாப்ரே! மேரே அண்டா” என்று கத்திய யஷ்வந்த், எங்கே பரணி தான் ஆம்லெட்டுக்காக வைத்திருக்கும் முட்டையில் துப்பிவிடுவானோ என்ற பயத்தில், முட்டை குண்டாவை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டான்.
யஷ்வந்த், “அண்டா” என்று கத்திக் கொண்டு, குண்டாவைத் தூக்கிப் பிடித்தது பார்த்து பரணிக்கும், திவ்யாவிற்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வருணுக்கு சட்டென புரியாவிட்டாலும், அங்கே நடந்ததை எண்ணி அவனும் இருவரின் சிரிப்பலையில் தன்னையும் சேர்த்துக் கொண்டான்.
யஷ்வந்த், “க்யா க்யா?” என்று வினவ,
சிரித்துக் கொண்டே, “கையில குண்டா! குண்டாகுள்ள துமாரா அண்டா!” என்று பரணி சொல்ல, அப்போதும் யஷ்வந்திற்கும் வருணுக்கும் புரிபடவில்லை.
“போங்கடா டேய்!” என்று நிறுத்தாமல் சிரித்தவன், திவ்யாவின் கண்பார்த்து கல்மிஷமில்லாமல் கண்ணடிக்க, திவ்யாவுமே விகசித்தாள். அவனுடன் சேர்ந்து புன்னகைத்தது கள்ளமில்லாமல் ஆத்மார்த்தமாக இருந்தது.
அந்த ஞாயிறு நிம்மதியாக கழிந்தது. நாபி-ஜூன் அதே ஊரில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்த தன் கொரிய நண்பர்கள் சிலரை சந்திக்க சென்றுவிட, திவ்யா, தன் துணிகளை சீராக கப்போர்டில் அடுக்கும் வேலையை செய்தாள்.
மாலையில், அவள் இந்தியாவிலிருந்து கொணர்ந்த உணவு பதார்த்தங்களை கிச்சனில் அடுக்க வருண் உதவினான். பின்பு, வீட்டில் இருந்த நால்வருக்காக, பெரிய மேகி பேக்கெட்டை உடைத்து கிளறி சூடாக நூடுல்ஸ் செய்தாள் திவ்யா.
ஆளுக்கு ஒரு தட்டில் நூடுல்சுடன் லிவிங் ரூம் சோஃபாவில் சாய்ந்துகொள்ள, “டு யூ நோ குக்கிங்?” என்று திவ்யாவிடம் ஆர்வமாக வினவியபடிக்கே மேகியை உள்ளே தள்ளினான் வருண். அவனுக்கு இந்தியப் பெண், அதுவும் சவுத் இந்தியன் தங்களுடன் வந்து தங்கப் போகிறாள் என்ற செய்தி கேள்விபட்டதுமே அவன் மகிழ்ந்த ஒரே விஷயம், “இனி சமையல் பத்தி கவலை இல்ல. நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும்” என்பதே!
அதை அவன் பகிரவும், “முஜே பீ ஐசா ஹி லகா” என்று தவறாது மொழிந்த யஷ்வந்தை முறைத்தாள் திவ்யா.
“இல்ல, வாட் வீ தாட் வாஸ், இந்தியன் பொண்ணு, அதுவும் சவுத் இந்தியன் சோ, கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும்னு எதிர்பார்த்தோம். ஏனா, நம்ம நாபி சமையல் செய்வாங்க. பிபிம்பாப், கிமிச்சி, புல்கோகின்னு வாயில நுழையாத ஏதோ செஞ்சு, அவங்க மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிட்டுக்குவாங்க. நமக்கு வேணுமான்னு கூட கேட்க மாட்டாங்க, ‘திஸ் இஸ் கொரியன் ஃபூட். யூ நாட் லைக் இட்’னு அமைதியா சாப்பிட்டுட்டு மறக்காம நமக்கு வணக்கம் சொல்லிட்டு எந்திரிச்சு போயிருவாங்க.” என்று சொல்ல, அதில் கொஞ்சமும் சிரிப்பு வரவில்லை திவ்யாவிற்கு.
மாறாக, ‘இவனுக எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டானுக’ என்ற எண்ணமே தோன்றியது. பொங்கி வந்த ஆத்திரத்தை கொஞ்சமும் கட்டுப்படுத்த நினைக்காமல், “ஓ, அப்போ உங்களுக்கு வடிச்சு கொட்ட ஒரு பொண்ணை எதிர்பார்த்திருக்கீங்க! ஏன் பொண்ணுகன்னா கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும்னு எதிர்பார்த்தீங்களா? சாரி டு டிஸபாயிண்ட் யூ. எனக்கும் உங்களை மாதிரி நூடுல்ஸ் கிண்டவும், டீ போடவும் மட்டும் தான் சமையல் தெரியும்” என்று கூறி அத்தோட நிறுத்தவில்லை இவள். கிடைச்சது ஆடு என்று கிடா வெட்ட ஆர்வமாக இறங்கியிருந்தாள்.
“அதெப்படி எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி மேல்சாவினிஸ்ட்டாவே இருக்கீங்க? ம்ம்ம்ம்? குக்கிங் இஸ் எ லைஃப் ஸ்கில். எல்லாருக்குமே வயிறு இருக்கில்ல. அது மூனு வேளையும் சோறு கேட்கும்ல. சோ, எல்லாருக்குமே தான் தெரிஞ்சிருக்கணும். இதுல என்ன பொண்ணுக்கு தெரியணும், பையன்னா நட்டமா உக்காந்து சப்பு கொட்டி சாப்பிடணும்னு ஒரு எண்ணம். ம்ம்ம், உங்களை சொல்லக் கூடாது. உங்க வீட்டு ஆளுங்களை சொல்லணும். ஸ்விமிங், டிரைவிங் தெரிஞ்சுக்கறது எப்படி முக்கியமோ அதைவிடவும் குக்கிங் தெரிஞ்சுக்கறது ரொம்ப ரொம்ப முக்கியம். ” என்று கூற,
பேயரைந்தது போல திகைத்துப் போன யஷ்வந்த் “பாப்ரே!” என்று தலையை கவிழ்த்துக் கொள்ள, ‘தைரியமிருந்தால் நீ ஏதாவது சொல்லேன்’ என்பது போல திவ்யா, வருணை ஏறிட்ட விதம் பார்த்து, “ஒரே தேவுடா! நேனு இப்புடு யேமி செப்பேனு” என்று வேறு எதுவும் பேசாமல் அமைதியாக தன் தட்டை கவனிக்கலானான்.
திவ்யாவின் செற்பொழிவையும், உறுத்து நோக்கிய விதத்தையும் பார்த்துக் கொண்டு, அதுவரையிலும் மூச்சு கூட விடாமல் அமர்ந்திருந்த பரணி, எழுந்து அவள் நூடுல்ஸ் செய்த பார்த்திரத்தையும், தட்டுகளையும் யாரும் சொல்லாமலேயே தானாக கழுவத் துவங்க, அவன் செய்கை சிரிப்பை வரவழைத்த போதும், அதை முகத்தில் காட்டிக் கொள்ளாத திவ்யா, “தட்ஸ் குட்” என்று பெருமூச்சுடன் சொன்னாள்.
error: Content is protected !!