Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Galattaa Kaathal

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 23.2

கலாட்டா  23.2

 

‘தன்யா கன்ஸ்ட்ரக்ஷன்’ உறுப்பினர்கள் பயணப்பட்டிருந்த விமானம் மாலத்தீவை முன்னிரவிலேயே வந்தடைந்தது. சுரேனின் ஒரு வருட நீண்….ட உழைப்பு!  சுற்றிலும் நீர் சூழ, அதன் நடுவே அங்கங்கே இருந்த சிறு சிறு குடில்கள் அந்த இரவு நேர மின்விளக்கு அலங்காரத்தில் சொர்க்கலோகமென காட்சியளிக்க, யாராலும் தங்கள் கண்களை இமைக்கக்கூட முடியவில்லை.

 



Advertisement

ஒவ்வொரு குடிலும் விதவிதமான அமைப்புகளில் வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் இருக்க, ஒரு குடிலுக்கும் மற்றோரு குடிலுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லாதபடி பிரத்யேகமாய் வடிவமைத்திருந்தான் சுரேன்.

 

அதிலும் அவன் ‘விவிஐபி’ விடுதி என காட்டிய அந்த குடிலின் வடிவமைப்பில் அசந்தே போயினர் அனைவரும். முழுக்க முழுக்க கண்ணாடிகளால் அமைக்கப்பட்டிருந்தது அக்குடில்.

Advertisement

 

Advertisement

மொத்தம் நான்கு அறைகளாக பிரிந்திருந்த அக்குடிலில் செயற்கை குளிரூட்டம் என்பது தேவையே இல்லை என்பதை போல இயல்பிலேயே ஒரு ‘சில்லாப்பு’ அமைந்திருந்தது.

 

உள்ளிருப்பவர் வெளியே விரிந்திருக்கும் இயற்கை வனப்பை ரசிக்கும்படி தெள்ளத்தெளிவாய் அமைத்திருந்த அந்த கண்ணாடி குடில், வெளியே இருந்து உள்ளே இருப்பதை பார்க்க முடியாதபடி ‘தேனிலவு’ தம்பதிகளுக்க்கெனவே அம்சமாய் அமைந்திருந்தது.

Advertisement

 

நான்கு அறைகள் கொண்ட பெரிய குடில் என்பதால், குடும்பமாய் வரும் ‘விவிஐபி’களும் பயன்படுத்திக்கொள்ளும்படி இருந்தது.

 

போதாதற்கு, அந்த குடில் இருந்த இடத்தில் இருந்து அடுத்த நூறு அடிக்கு எந்த ஒரு குடிலும் இல்லாது, இது மட்டுமே ‘தனித்து’ நிற்க, அந்த தனிமையை இனிமையாக்க, ‘சவுண்ட் ப்ரூப்’ டெக்னாலஜி வேறு அந்த குடில் முழுவதும் பொருத்தப்பட்ட்டிருந்தது. உள்ளே என்ன நடந்தாலும் வெளியே சற்றும் குரல் கேட்காதபடி!!!

 

சுரேனின் இந்த கலை ரசனையை பார்ப்பவர்கள், ஒருபுறம் புகழ்ந்தாலும், ‘பாவம், அவருக்கு ஒரு கல்யாணம் கூடி வர மாட்டுதே!’ என அனுதாபம் போல, புறம் பேசாமல் இல்லை. அதேதான் லட்சுமியின் மனதிலும் ஓட, நன்னாளில் எந்த மனசுணக்கமும் வேண்டாம் என அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு ரெசார்ட்டுக்கு சென்று அமைதியாக படுத்துக்கொண்டார்.

 

ராஜகோபால் அந்த ரெசார்ட் வெளியே ஜெயதேவ் குடும்பத்தின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தார். சுரேன் மறுநாள் நிகழவிருக்கும் ‘திறப்பு விழா’வை எண்ணி உற்சாக மிகுதியில் உலாத்திக்கொண்டிருந்தாலும், ஏனோ, அந்த குடில்களை காணும் போது, ‘மதுதேவா’வின் முகம் கண் முன் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

 

சில நாள் மானசீக காதலிலேயே, காதலியின் முகத்தை மறக்க, சுரேன் சிரமப்படும்போது, பலவருட காதலில் மூழ்கி திளைத்து, அவன் நினைவிலேயே தவித்துக்கொண்டிருக்கும் தன்யாவுக்கு உறக்கம் எட்டுமா என்ன?

 

சுரேன் கட்டியிருக்கும் ரெசார்ட்டை வேடிக்கை பார்த்தபடி அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையின் வெளிசுற்றில் குளிர்க்காற்றில் நின்றிருந்தாள் தன்யா.  

 

ஆதியின் மீது இதுநாள் வரை இருந்த ஏக்கம், தவிப்பு, கோவம் எல்லாம் இறுதியாய் அவன் கோவித்துக்கொண்டு சென்றுவிட்ட அன்று முதல் பூதாகரமாய் எழுந்து நின்றுவிட்டதை போன்றொரு எண்ணம் அவளுக்கு.

 

நான்காண்டுகள் அவனை பாராமலே அவன் மீதான கோவத்திலும், தவிப்பிலும் கடத்திவிட்ட அவளால், இந்த பத்து நாட்களை அவனின்றி, அவன் நினைவுகளின்றி கடத்துவது பிரம்ம பிரயத்தனமாய் போய்விட்டது.

 

ஆபீஸில் அவன் கேபினை பார்க்கும்போதெல்லாம், அவள் அறைக்கதவு தட்டப்படும்போதெல்லாம், அவள் தனியாய் லிப்டில் பயணிக்கும்போதெல்லாம்  ஆதியின் வருகையை அவள் கண்கள் அவள் அனுமதியின்றியே எதிர்ப்பார்க்க ஆரம்பித்திருந்தன.

 

தன் மனதை மாற்ற முடியாத இயலாமை, காண்போரிடம் எல்லாம் அவளை கடுமையாய் நடந்துக்கொள்ள வைத்தது. அதிலும் பிரியா’வை பார்க்கும்போதெல்லாம் ஏனோ ஆதியின் நினைவு தன்னைப்போல வந்து ஒட்டிக்கொள்ள, ஆதி அவள் அருகே இல்லாத ஏக்கம், பிரியாவிடம் கோவமாக வெளிப்பட்டது.

 

ஆதியை எப்போது பார்ப்போம்’ என ஏங்கும் மனதுடன் இருட்டிலும் மின்விளக்குகளால் அழகுற மின்னிக்கொண்டிருந்த குடில்களை வேடிக்கை பார்த்தபடி அவள் நிற்க, “ஹலோ மேம்” என இன்முகமாய் அவளை நெருங்கினாள் பிரியா.

 

அவளை கண்டதுமே ஆதியின் நினைவு அதிகரிப்பதை போன்ற பிரம்மையில், “எதுக்கு இப்ப வந்த?” என எரிந்து விழுந்தாள் தன்யா.

 

அவள் எரிச்சலை அசட்டை செய்தவளாய், “செம்ம பிளேஸ்… இல்ல மேம்?” என்றாள் ரசனையாய்.

 

தன்யா பதில் பேசாது நிற்க, “உங்களுக்கு இந்தமாறி இடத்துல ஹனிமூன் செலிப்ரேட் பண்ணனும்ன்னு ஆசை இருக்கா மேம்?” என அடுத்து பிரியா பேச, அதற்கும் அமைதியாக நின்றாள் தன்யா.

 

பிரியா அவள் பதிலை எல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை போலும்!

 

பிரியா, “இந்த மாதிரி ராத்திரி நேரம், யாரும் இல்லாத தனிமைல, ஜிலுஜிலுன்னு வீசுற காத்துக்கு நடுல, நம்ம மனசுக்கு பிடிச்சவங்களை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இயற்கையை ரசிக்கிறது…   ப்ச்!!! அது ஒரு தனி சுகம் தானே மேம்?” என அவள் சொல்ல,

 

தன்யாவுக்கு இதே வார்த்தைகளை தன் குரலில் கேட்டதை போன்று தோன்றியது. இது அவளுடைய ரசனை, ஆசை ஆயிற்றே! எத்தனை முறை ஆதியிடம் இதை சொல்லியிருப்பாள் என கணக்கே கிடையாது!!! இன்று அதே வார்த்தைகளை வேறொருத்தி சொல்ல கேட்கும்போது, அவனுடனான அவளது இனிமையான நாட்கள் மெல்ல மனதின் மத்தியில் இருந்து மேலெழும்ப ஆரம்பித்தது.

 

தன்யாவை நிறைய யோசிக்க விடாமல், “என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான் மேம்! அவனோட லவ்வருக்கு இதேமாதிரி ஆசை இருக்காம்! ஒருநாள், அவளுக்கே தெரியாம சர்ப்ரைஸ் குடுக்கணும்ன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லுவான்” என்று பிரியா சொல்ல, ‘இதை ஏன் என்கிட்ட சொல்ற?’ என கத்த வந்தவள்,

 

“அவனுக்கு இன்னைக்கு பர்த்டே” என்ற பிரியாவின் அடுத்த வார்த்தைகளில் சற்றே திகைத்து, அவசரமாய் அலைபேசி மூலம் அன்றைய தேதியை பார்க்க, அது ஆதியின் பிறந்த தேதியை காட்டியது. 

 

பிரியா, “லவ் ஒரு தனி பீல் தான்… இல்ல மேம்!?  எல்லாருக்கும் அவங்களுக்கான ‘சோல் மேட்’ கிடைச்சுடுறது இல்ல! ஆனா, அப்படி கிடைக்குறவங்களுக்கு அந்த உறவோட அருமை தெரியுறது இல்லன்னு தான் சொல்லணும்! சின்ன சின்ன விஷயத்தை கூட பெருசாக்கி, ஈசியா பிரிஞ்சு போய்டுறாங்க!

 

என் அப்பா எப்பவும் சொல்லுவாங்க! எந்த ஒரு உறவுக்கு நடுவுலயும் ‘ஈகோ’ங்குற ஒன்னு மட்டும் வந்துடவே கூடாது! அப்படி வந்துட்டா, அது அந்த உறவை அதுக்குமேல வாழ விடாதுன்னு!!!

 

ரொம்ப சரியான வார்த்தைகள் மேம் அது!!! ஒருசிலருக்கு அது புரியவே லேட் ஆகுது! புரியுறப்போ, அதை சரிப்படுத்திக்குற சந்தர்ப்பம் கிடைக்கிறது இல்ல” என்று சொல்ல, பிரியாவின் வார்த்தைகள் அனைத்தும் தனக்கெனவே அவள் சொல்வதாக தோன்றியது தன்யாவுக்கு.

 

அதற்குமேல் தன்யாவை தொந்தரவு செய்யாது, “பை மேம்! என் பிரண்ட் பர்த்டே’க்கு விஷ் பண்ணணும்! நான் போறேன்” என அவளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள் பிரியா.

 

தன்யாவின் மனம் முழுக்க, இறுதியாய் ஆதியுடன் அவள் கழித்த அந்த பிறந்தநாள் இரவு ஆட்கொள்ள, அந்த சுகநினைவுகளில் தன்னை மீறி மூழ்கினாள்.

 

ஆதி கோவிலில் வைத்து தன்யாவுக்கு தாலியை அணிவித்த அன்று, தனியாக அவன் பயன்ப்பாட்டுக்கென இருந்த ‘பிளாட்’ ஒன்றில் இருவரும் குடிப்போக, அவர்களின் நாட்கள் வண்ணமயமாகவே சென்றுக்கொண்டிருந்தது.

 

செமெஸ்டர் விடுமுறையால் தன்யா முழுநேரமும் படிப்பை மறந்து ஆதியிடம் லயிக்க, ஆதிக்கோ, பெற்றோர் அமெரிக்கா சென்றுவிட்டதால், கம்பெனி பொறுப்பை சேர்த்து அவனே பார்த்துக்கொள்ளும் வேலையும் சேர்ந்தது.   

 

ஒரே வீட்டில் இருந்தாலும், தன்யாவிடம் அவன் ‘கணவன்’ என்ற உரிமையை எடுத்துக்கொள்ள சிறிதேனும் முயன்றதில்லை.  உடல் கூடவில்லையே தவிர, இருவரும் மனதளவில் கணவன் மனைவியாக, இளம்தம்பதிகளாக ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தனர்.

 

அடிக்கடி நிகழும் சிறு அணைப்பு, எப்போதேனும் அவனிடம் இருந்து கிட்டும் ‘முத்தம்’, இரவில் அருகருகே படுக்கையில் அவன்மீதிருந்து எழும் பிரத்யேக நறுமணம், இவையே தன்யாவுக்கு ஆதியின் மீது பித்தம் கொள்ள செய்தது.

 

அன்று, நண்பனின் திருமண வரவேற்பிற்கு செல்வதாக சொன்ன ஆதி, தன்யாவை அழைக்க, உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, காரணமாய் அவனுடன் செல்வதை மறுத்துவிட்டாள் தன்யா.

 

அவனோடு போகாமல் இருந்தால் தானே, அன்றிரவு ஆதியின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை அவளால் செய்ய முடியும்!

 

வீடு முழுவதையும் இருளில் மூழ்கடித்தவள், அழகழகாய் நறுமண மெழுகுவர்த்திகளை அடுக்கி, அதன் வெளிச்சத்தை வீடு முழுக்க பரவ செய்ய, அடுத்ததாய் தோரணங்கள், வாசலில் இருந்து பால்கனி வரை மலர்ப்பாதை, என்று ரம்யமாய் அமைத்து முடித்தாள் தன்யா.

 

அவன் வரும் நேரம் நெருங்கவே, தன்னை அலங்காரப்படுத்திக்கொள்ள விரைந்தாள் தன்யா. ஒரு டிசைனர் வெண்ணிற சேலையை அழகாய் ஒற்றை தலைப்பாய் அணிந்து, அதற்கு தோதான ‘லோ கட்’ ஸ்லீவ்லெஸ் ப்ளஸ் அணிந்து தயாரானவள் தன்னை கண்ணாடியில் பார்க்க, கழுத்தில் தொங்கும் ‘கருகமணி’ கோர்த்த பொன்தாலி அவளை பேரழகாய் காட்டியது.

 

வாசலின் அழைப்பு மணி சத்தத்தில் வேகமாய் ஓடினாள். கதவை திறக்கும் முன் ஒருமுறை தன்னை சரிப்பார்த்துக்கொண்டவள், முகத்தில் தோன்றும் வெட்கச்சிரிப்புடன் கதவை சிறிதாய் திறக்க, கலைந்த சிகையும், போடப்படாத சட்டையின் முதலிரண்டு பொத்தான்களும், ‘டக்கின்’னில் ஒரு பக்கம் மட்டும் எடுத்து விட்டிருந்த சட்டையும், என ஓய்ந்து போன தோற்றத்தில் நின்றிருந்தான் ஆதித்யா.

 

“என்னாச்சு தேவா?” எதுவும் சண்டையோ? என பதறி அவள் விசாரிக்க, “நத்திங் தனு, செம்ம பார்ட்டி இன்னைக்கு! ரொம்ப டயர்ட்” என்றவன் சோபாவில் பொத்தென விழுந்து கண்களை மூடிக்கொண்டான்.

 

அவனுக்காக ஆவலாய் காத்திருந்தவளுக்கு அவன் தன்னை நிமிர்ந்தும் பாராதது பெரும் வருத்தமாய் போக, அப்படியே நின்றாள்.

 

என்ன நினைத்தானோ?! சட்டென கண்களை திறந்தான் ஆதி!

 

சுற்றிலும் இருந்த மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில், அதன் நடுவே பதுமையென நின்றிருக்கும் தன்யாவை கண்டு மெய்மறந்து போனான்.

 

ஆனந்த கூவலாய், “ஏய்ய்ய்ய்ய்…” என ஒரே எட்டில் அவளை அடைந்து தன் கைசிறையில் நிறுத்த, அவனிடம் விரும்பி அகப்பட்டவளின் வதனம், மலர்ந்து விகாசித்தது.

 

“என்ன இதெல்லாம்?”

‘எதற்க்காக?’ என்று தெரிந்துக்கொண்டாலும், அவள் வாய்மொழியாய் அறிய வேண்டி அவன் வினவ, திறந்திருந்த அவன் சட்டை பொத்தானை திருகிக்கொண்டே, “ஹேப்பி பர்த்டே” என்றாள் தன்யா. அவன் கண்களை சந்திக்க முடியாது வெட்கம் தள்ளியது அவளுக்கு.

 

பால்கனியில் வைத்திருந்த ‘ஆப்பிள் கேரமல் கேக்கில்’ மெழுகுவர்த்தியை ஏற்றி, அவன் கையில் கத்தியை கொடுத்தாள் தன்யா.

 

கேண்டிலை அவன் ஊத, கைத்தட்டி சிரித்தவள், ‘ஹாப்பி பர்த்டே டு யூ’ என மெல்லமாய் பாட, அவளை பார்வையால் விழுங்கிக்கொண்டே, கேக்கை வெட்டியவன், அவளுக்கு ஊட்டிவிட்டு, தானும் உண்ண, ஒவ்வொரு நிமிடமும் இருவரின் மனசிறையில் பொக்கிஷமாய் பதிந்தது.

 

சோபாவில் அவன் அமர, அருகே அமர போனவளின் கரம் பிடித்து இழுத்து தன் மடியில் இருத்திக்கொண்டான் ஆதி.  அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவன் மீதே சாய்ந்து அமர்ந்தவளுக்கு பேச்சு என்பதே மறந்து போனது.

 

மடியில் அமர்ந்திருந்தவளின் வெற்றிடையில் அழுத்தமாய் பதிந்திருந்த அவனது கரம், அவளை மேலும் வெட்கம்கொள்ள செய்ய, அவன் கழுத்தைத்தாண்டி நிமிரவில்லை அவள் நயனங்கள்.

 

ஆதி, “ஓய்…!!!”

 

தன்யா, “ம்ம்ம்”

 

“உங்க வீட்ல சொல்லிடலாமா?” ஆதி அப்படி கேட்டதும் வெடுக்கென நிமிர்ந்தவள், “என்ன சொல்ல போற?” என்றாள்.

 

அவள் முன்நெற்றியில் தவழ்ந்துக்கொண்டிருந்த சிகையை சரி செய்தபடி, “நம்ம லவ் பண்றோம்ன்னு தான்! இப்படி ரெண்டு வீட்டுக்கும் தெரியாம நம்ம ஒண்ணா இருக்கிறது சரியில்லை தனு” என்றான் பொறுமையாய்.

 

“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு மறந்துட்டியா தேவா?”

 

“நான் எதையும் மறக்கலடா! வீட்ல சொல்லிட்டா, ‘கில்டி’ இல்லாம இருக்குமேன்னு தான் சொல்றேன்!” என்றான்.

 

“அப்ப என் கூட இருக்கிறது உனக்கு கில்டியா இருக்கா தேவா?” என்றவள் அவனை விட்டு எழுந்துக்கொள்ள பார்க்க, அவளை விடாது மேலும் இறுக்கமாய் அணைத்தவன், “உடனே கோச்சுப்பியே நீ!” என்றான் செல்லமாய்.

 

“பின்ன என்ன? படிப்பு முடியுறதுக்குள்ள எங்க வீட்ல நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சா, என்னை திரும்ப இங்க அனுப்பவே மாட்டாங்க! நான் உன்னை விட்டு ஒரு நாளும் இருக்க மாட்டேன்” என அவனோடு புதைந்தபடி அணைத்துக்கொண்டாள் தன்யா.

அவள் உடல் அழுத்தமாய் அவன் மீது பதிந்திருக்க, மொத்தமாய் திணறிப்போனான் ஆதி. என்னதான் ‘நல்லவனாய்’ இத்தனை நாட்கள் அவள் அருகே கழித்து விட்டாலும், இன்று அந்த விரதம் ஆட்டம் காணும் என தெளிவாய் தோன்றியது அவனுக்கு.      

 

இப்படியே போனால் சரி வராதே’ என்றெண்ணி பேச்சை மாற்ற, அவன் ஒரு கேள்வியை கேட்க, அதற்கு அவள் கொடுத்த பதிலில் அவன் நரம்புகள் இன்னும் தான் சூடேறியது.

 

“சரி! விஷ் மட்டும் பண்ணியே! எனக்கு எங்க பர்த்டே கிப்ட்?” என்றான் ஆதி.

 

அணைப்பை விளக்காது, அவன் கழுத்து வளைவில் முகம் வைத்து நிமிர்ந்து பார்த்தவள், “நானே உனக்கொரு கிப்ட் தானே? என்னை விட வேறென்ன வேணும்? ம்ம்?” என கண்ணடிக்க, அவள் இதழ்களை கவ்விக்கொள்ளும் வேகம் அவனுள்.

 

“கிப்ட் குடுத்தா, அதை திறந்து பார்க்கணுமே!!!” என்றான் கிறக்கமாய்.

 

சில நொடிகள் அவன் நெஞ்சில் தன் விரலால் கோலம் போட்டவள், “பார்த்துக்கோ” என முனக, அவள் தந்த சம்மதத்தில் மதிமயங்கியவன், முதல்முறையாய் அவள் கணவனாய் மாறியிருந்தான். உள்ளத்தோடு, உடலும் இணைந்த சங்கமத்தில் திளைத்திருந்த இருவருமே ‘பிரிவு’ என்பதை அப்போது நினைத்திருக்க கூட இல்லை.

 

ஆதியின் பிறந்தநாள் நினைவில் மூழ்கியிருந்தவள், அதிலிருந்து மீள முடியாது, தவித்துப்போனாள். தன் வீம்பை விடுத்து ஆதியிடம் சென்றுவிடலாமா? என்று கூட தோன்ற, அந்த சூழலில் இருந்து விடுப்பட வழி தெரியாது தினறியவள், தன் அறையை விட்டு வேகமாய் வெளியேறினாள்.

 

சுற்றிலும் ஆள்நடமாட்டம் அற்ற இருளில், பாதை செல்லும் மட்டும் நடந்தவள் ஓரிடத்தில் சற்று தயங்கி முன்னேற, அங்கே அவள் கண்ட காட்சியில் கண்கள் விரிய, ஸ்தம்பித்து போனாள்.     

 

ராஜகோபால், ஜெயதேவ் ஒருபுறமாய் விழுந்து கிடக்க, மதுதேவா சோபாவிலேயே மயங்கி இருந்தாள். சுரேன் ஒரு ஓரமாய் விழுந்திருக்க, கோகுலுடன் ஆதியும் சேர்ந்து மயங்கி தரையில் கிடப்பதை கண்ட தன்யாவுக்கு அவள் கண்களையே நம்ப முடியாது போனது.

 

“தே…வா….?” ஆதியை அங்கே கண்டதில் அவள் ஐம்புலனும் வேலை நிறுத்தம் செய்தது.

 

உதவிக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்பதை கூட மறந்தவளாய் அவள் விக்கித்து, திகைப்பில் நிற்க, அவள் தோள் தொட்டு யாரோ அழைத்தனர்.

 

திரும்பி பார்த்தவள் முன்னே, குளிருக்கு அணியும் குரங்கு குல்லாவில் நின்றிருந்த மூவர்,

“ஹலோ மேடம், சாரி ஃபார் தி டிஸ்டபென்ஸ்! நாங்க உங்களை கடத்திட்டு போலாம்ன்னு வந்துருக்கோம்! தேன்கிங் யூ” என்று சொல்ல, தன்யா சுதாரிக்கும் முன்னே, கையில் இருந்த கைக்குட்டையை அவள் மூக்கில் வைத்து மூர்சையாக்கி விட்டிருந்தனர்.

 

-கலாட்டா தொடரும்…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!