Thedi Vantha Kaathal 3 1
அத்தியாயம் 3
“பாருங்க அத்தை எப்படி திமிரா போறான்னு? என்னங்க நீங்களும் பேசாம இருக்கீங்க? அவளை எதுக்கு உள்ள விட்டீங்க?”, என்று கேட்டாள் பார்வதி.
Advertisement
“விடு பார்வதி. அந்த பொண்ணு வந்த பிறகு, நந்தினி முகத்துல இருக்குற சந்தோசத்தை பாத்தியா? அம்மா நீங்களும் எதுவும் சொல்லாதீங்க. மோகனோட பொண்ணு, எதுக்கு இப்ப இங்க வந்துருக்கான்னு மெதுவா கண்காணிப்போம். உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு நடந்தார் மகேந்திரன்.
“என்ன அத்தை உங்க பிள்ளை இப்படி சொல்லிட்டு போறாரு? எனக்கு என்னமோ மனசு கிடந்தது அடிச்சிக்குது அத்தை”, என்று சொன்னாள் பார்வதி.
Advertisement
Advertisement
“விடு மா. நம்மளை மீறி எதுவும் நடக்காது. ஆனா எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு பார்வதி. வந்துருக்குறது உன்னோட சொந்த தம்பி பொண்ணா இருந்தா கூட, நேர்மையா எதிர்க்கிற பாத்தியா? நீ இந்த வீட்டுக்கு வந்துருக்குறது வரம் மா”, என்றாள் செண்பக வள்ளி.
“ப்ச் போங்க அத்தை. நந்தினி படுற அவஸ்தையை கூட இருந்து பாத்தவ அத்தை நான். அவளோட வலி எனக்கு இன்னும் நினைவு இருக்கு. ஒரு துறவி மாதிரி வாழ்ந்துட்டு இருக்குறதுக்கு, அவன் தான காரணம்? அவன் எனக்கு தம்பியும் கிடையாது. இப்ப வந்துருக்குறது தம்பி மகளும் கிடையாது. கூடிய சீக்கிரம் இவளை இந்த வீட்டை விட்டு விரட்டணும். மறுபடியும் நந்தினியை அழ வைக்க தான், இந்த குதிரை வாலு இங்க வந்துருக்கா. ஜாக்கிரதையா இருக்கணும் அத்தை”, என்று சொன்னாள் பார்வதி.
Advertisement
அப்போது அங்கு கை தட்டி கொண்டே வந்த மித்ரா “பிளான் போடுற மூஞ்சுகளை பாரு? ஒரு ரகசியம் கூட ஒழுங்கா பேச தெரியலை. நீங்க பேசுன எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். எப்படி? எப்படி? என்னை நீங்க விரட்ட போறீங்களா? இது என்னோட வீடு. ஒரு இன்ச் கூட உங்களால என்னை அசைக்க முடியாது. ஏய் சகுனி கிழவி, எதாவது எனக்கு எதிரா செய்யணும்னு நினைச்ச, தூங்கும் போது போர்வைக்குள்ள வெடியை வச்சிருவேன் பாத்துக்கோ. அப்புறம் அத்தை, நீங்க இன்னும் வளரனும்”, என்று சொல்லி விட்டு வெளியே இருந்த இன்னொரு பையையும் எடுத்து கொண்டு சென்றாள்.
இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பாத்து கொண்டார்கள்.
உள்ளே போன மித்ரா, அங்கே அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு எதிரே அமர்ந்தாள். இவளை பார்த்ததும் அவர் எழுந்து உள்ளே போய் விட்டார்.
“அது அந்த பயம் இருக்கட்டும்”, என்று நினைத்து கொண்டு புன்னகை புரிந்தாள் மித்ரா.
“அப்புறம் மித்ரா, நீ என்னோட ரூம்லே தங்கிக்கோ என்ன?”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தாள் நந்தினி.
“என்ன நந்து நீ? அவளுக்கு வேற ரூமை கொடுக்கலாம்”, என்று சொன்னாள் பார்வதி.
“என்ன மதினி நீங்க? அவ என்னோட பொண்ணு. இனி என்கூட தான் இருப்பா. அப்புறம் அங்க இருந்து வந்து அவளுக்கு பசிக்கும். நீங்க சாப்பாடு எடுத்து வைங்க”, என்று பார்வதியிடம் சொன்ன நந்தினி, மித்ரா புறம் திரும்பி “நீ வா டா. குளிச்சிட்டு சாப்பிடலாம்”, என்று சொல்லி அழைத்து போனாள்.
உரக்கடையில் உரம் வாங்கி விட்டு வந்து கொண்டிருந்தான் பார்த்திபன். நேராக வயலுக்கு சென்று அதை வேலை செய்பவர்களிடம் கொடுத்தான்.
“அப்பாடி அப்பா இன்னும் வரலை”, என்று நினைத்து கொண்டு, அப்படியே திரும்பி வந்து கொண்டிருந்தவனின் எதிரே நடந்து வந்தான் ராசு குட்டி. அவனை கூட கவனிக்காமல் சென்றது பார்த்திபன் புல்லட்.
“என்ன நம்ம மாப்பிள்ளை பாக்காம போறான்?”, என்று நினைத்து “ஏலே பார்த்தி”, என்று அழைத்தான் ராசு.
திடுக்கிட்டு வண்டியை நிறுத்தினான் பார்த்திபன்.
“என்ன மச்சான் எதுத்தாப்புல நடந்து வரேன், கண்டுக்காம போற? இன்னைக்கு எவ கூட கனவு?”, என்று கேட்டான் ராசு.
“ப்ச் போ ராசு, நீ வேற? நம்ம ஊரு பொண்ணுங்களை வச்சு கனவு கண்டுட்டாலும்”, என்று இழுத்தான் பார்த்திபன்.
“அப்புறம் ஏன் டா நிக்காம போன?”
“அதை ஏன் கேக்குற? ஒரு பெரிய கூத்தே நடந்துட்டு டா. எங்க வீட்டுக்கு எங்க மாமா பொண்ணு வந்துருக்கா”
“அடி சக்கை. அப்ப கனவுல அவ தானா?”
“போடா நீ வேற? நடந்ததை சொல்றேன் அப்பறம் சொல்லு”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“உனக்கு இப்படி ஒரு மாமா இருக்காரா? சொல்லவே இல்லை”
“எனக்கே இன்னைக்கு தான் டா தெரியும்”
“அது சரி, அவ எதுக்கு இத்தனை வருசத்துக்கு பிறகு இங்க வந்துருக்கா?”
“அது தான் தெரியலை டா. வந்த உடனே எங்க அத்தையை, அம்மான்னு கூப்பிட்டு ஆப் பண்ணிட்டா. ஆனா ராசு எனக்கு செமையா ஆப்பு வச்சிட்டா மச்சி. எங்க அப்பா கண்ணுல சிக்கிற கூடாது. அதை தான் நினைச்சிட்டு வந்தேன்”
“என்ன பார்த்தி நீ? நீ யாரு? உன்னோட லெவல் என்ன? நீ இதுக்கெல்லாம் கவலை படலாமா?”
“இப்படியே ஏத்தி விடு டா. சரி சரி அங்க இருந்து நம்ம முத்து மாமா மக வனிதா வாரா. அமைதியா இரு”, என்றான் பார்த்திபன்.
“பொண்ணுங்க எங்க இருந்து வந்தாலும், உன் முகத்துல லைட் எரிஞ்சிருமே”
“என் முகத்துல எங்க எரியுது? அங்க பாரு அவ தான் ஈஈன்னு பல்லை கட்டிட்டு வாரா. ஸ்ஸ் அமைதியா இரு டா”, என்று சொல்லி விட்டு ஒரு காந்த பார்வையை வனிதா நோக்கி வீசினான் பார்த்திபன்.
அதில் உச்சி குளிர்ந்த வனிதா அவன் அருகிலே வந்து விட்டாள்.
“என்ன மச்சான் துரும்பா இளைச்சிட்டீங்க?”, என்று கேட்டாள் வனிதா.
“சோறு பொங்கி போட, உன்னை மாதிரி ஆள் இல்லைல அதான்”, என்று சிரித்தான் பார்த்திபன்.
“அதுக்கு தான் என்னை கட்டிக்கணும்ங்குறது. நீங்க இப்படி சொல்றீங்க. உங்களை பாக்க வீட்டு பக்கம் வந்தால் அத்தை துரத்தி துரத்தி அடிக்குது”
“அதை விடு. இப்ப நீ எங்க போற வனிதா?”
“எங்க அப்பனுக்கு சோறு கொண்டு போறேன். கொஞ்சம் உங்க வண்டில கொண்டு போய் விடுங்களேன்”
“விட்டுட்டா போச்சு. ஆனா பாரு வனிதா. இப்ப தான் அப்பா முக்கியமான வேலையை சொல்லி விட்டாங்க. அதை சொல்ல தான் ராசு வந்து நிக்குறான். அப்படி தான மச்சான்?”, என்று கேட்டு கொண்டே ராசு காலில் ஒரு மிதி மிதித்தான் பார்த்திபன்.
“ஆ அம்மா”, என்று அலறினான் ராசு.
“ஹ்ம்ம் ஆமான்னு சொல்றான். அப்படி தான டா ராசு? சரி வனிதா நான் கிளம்புறேன். நீ பாத்து பத்திரமா போகணும் என்ன?”
“சரிங்க மச்சான். நான் வாரேன்”, என்று சிரித்து கொண்டே சென்றாள் வனிதா.
“என்கிட்ட எங்க டா உங்க அப்பா வேலை சொன்னாரு?”, என்று கேட்டான் ராசு.
“அப்படி சொல்லலைன்னா அவளை வண்டில வச்சி ஏத்திக்கிட்டு போகணும். அது தேவையா?”
“அப்புறம் எதுக்கு டா, அவ கிட்ட வம்பு பேச்சு பேசுற?”
“டேய் மச்சான். பொண்ணுங்களுக்கு நாம அப்ப அப்ப இப்படி பேசலைன்னுவை சோகமா இருக்கும். இப்ப இப்படி பேசுனா அவங்களுக்கு நாம அழகா இருக்கோம். அதான் பையங்க நம்ம கிட்ட பேசுறாங்க அப்படின்னு தன்னம்பிக்கை வரும். அதுக்கு தான்”
“உனக்கு எதுக்கு டா இந்த மானங்கெட்ட பொழப்பு?”
“ஒரு சோசியல் சர்வீஸ் தான்”
“அது சரி நீ துரும்பா போய்ட்டியாம். நீ எப்ப குண்டா இருந்த? அவ உன்னை என்னைக்கு கடைசியா பாத்தா?”
“நேத்து தான் டா பாத்தா. விடு விடு, அவளுக்கும் பேச்சு ஆரம்பிக்க வார்த்தை வேண்டாமா?”
“நல்லா வருவ டா. உன் வாய் கொழுப்பை அடக்க தான், உன் அத்தை பொண்ணு வந்துருக்காளோ என்னவோ?”
“அவ என்னை அடக்குறாளா? அவ எல்லாம் என் கால் தூசி டா. உஃப்புனு ஊதுனா பறந்துருவா. என்ன சொன்னா தெரியுமா டா. இவனை போய் லவ் பண்ணுவேனான்னு கேக்குறா? ஏண்டா எனக்கு என்ன டா குறை?”
“உனக்கு என்ன குறை? ராஜா மாதிரி இருக்க? ஆனா உன்னை பாத்தா அப்படி சொன்னா?”
“ஆமா டா. சரியான ராங்கி பிடிச்சவ போல, ஆளையும் மண்டையும் பாக்கணுமே”
“ஏண்டா கேவலமா வா இருந்தா?”
“கேவலமாவா? அப்சரஸ் மாதிரி இருந்தா டா. அதான் திமிரு. ஒரு வேளை எங்க சொத்தை எல்லாம் அமுக்க வந்துருக்காளோ?”
“என்ன டா சொல்ற?”
“ஆமா ராசு. ஆனா நீ கவலை படாத. அவளை எல்லாம் சீக்கிரம் விரட்டணும். நான் செஞ்சிருவேன் மச்சான். என் வீடுன்னு சொன்னா டா அவ? முதல்ல அந்த மாமாவை பத்தின விசயம் எல்லாம் கறக்கணும் டா”
“நீ கறக்குறது இருக்கட்டும். ஆள் பாக்க அப்சரசுனு சொல்ற. அதுல நீ கவுந்துராத மச்சான்”
“இந்த பார்த்திபனை யாருன்னு நினைச்ச? கிளியோபாட்ராவே வந்தாலும் கவுக்க முடியாது மச்சி. சரி நீ வண்டில ஏறு. டவுன்க்கு போய் ஒரு படம் பாத்துட்டு வருவோம்”
“போடா அங்குட்டு. நேத்து நான், பாண்டி எல்லாம் எவ்வளவு நேரம் உனக்காக நின்னோம் தெரியுமா? நீ வரவே இல்லை. நம்ம பயலுக எல்லாம் உன் மேல கோபமா இருக்காங்க டா”
“நான் என்ன டா செய்ய? அந்த கிழவி என்னை உள்ள வச்சி பூட்டிட்டா டா. சரி இப்ப போகலாம் வா”, என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்தான்.
அதே நேரம் வீட்டில், நந்தினி அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் மித்ரா.
அவளை முறைத்து கொண்டு, தோசை சுட்டு கொடுத்து கொண்டிருந்தாள் பார்வதி.
நந்தினி அந்த புறம் நகர்ந்த பின் “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க? நான் சுட்டு போட்டுக்கிட்டே இருக்கேன். நீ உள்ள தள்ளி கிட்டே இருக்க? அங்க இருந்து தின்னே எங்க சொத்தை அழிக்க தான் வந்தியா?”, என்று கேட்டாள் பார்வதி.
“இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. அப்புறம் அத்தை, பச்சை பிள்ளை சாப்பிடும் போது கண்ணு போடலாமா? அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும்”, என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.
“யாரு நீ பச்சை பிள்ளையா? விட்டா ஊரையே வித்துட்டு வந்துருவ? ஆமா இப்ப எதுக்கு இங்க வந்து டேரா போட்டுருக்க? எங்க சொத்தை அமுக்க தான் உன்னை உங்க அப்பனும், ஆத்தாளும் அனுப்புனாங்களா?”
“இது என்னோட சொத்து, நான் எதுக்கு அமுக்கணும்?”
“உன்னோட சொத்தா? நீ தான் உழைச்சு கொட்டிருக்க பாரு? ஒழுங்கா ஊரு போய் சேரு, சொல்லிட்டேன்”
“நீங்க போக சொன்னா நான் போயிருவேனா? அப்புறம் அத்தை தோசையும், இந்த தக்காளி சட்டினியும் சூப்பரோ சூப்பர். அதான் உள்ளே போய்கிட்டே இருக்கு. இன்னொரு தோசை கொடுங்களேன்”
“தின்னி பண்டாரம்”
“என்ன அத்தை இப்படி சொல்றீங்க? என்ன செய்ய? உங்களை மாதிரி சமையல் செய்ய உங்க தம்பிக்கும் சொல்லி கொடுத்துருக்கலாம்ல? தினமும் அந்த தேங்காய் சட்னியா வச்சி என்னை கொன்னுட்டாரு”
“என்னது அவன் சமையல் செய்வானா? ஏன் உன் ஆத்தா காரி செய்ய மாட்டாளா?”, என்று கேட்டாள் பார்வதி. அவள் பதில் சொல்வதற்குள் அங்கே நந்தினி வரும் அரவம் தெரிந்து “நீ தின்னது போதும். உனக்காக எல்லாம் கால் வலிக்க நின்னு தோசை ஊத்தி தர முடியாது”, என்று சொன்னாள் பார்வதி.
“அத்தையும், மருமகளும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டு கொண்டே மித்ரா அருகில் அமர்ந்தாள் நந்தினி.
“அது வந்து சும்மா தான் நந்தினி”, என்று சிரித்தாள் பார்வதி.
“பொய் சொல்றாங்க மா. தோசை ஊத்தி தரது கஷ்டமா இருக்காம். நான் தின்னுட்டே இருக்க தின்னி பண்டாரமாம். ஒழுங்கா கை கழுவிட்டு போன்னு சொல்றாங்க”, என்று சொன்ன மித்ரா எப்படி என்ற பார்வையை பார்வதி பக்கம் வீசினாள்.
“என்ன மதினி நீங்க? பிள்ளை சாப்பிடுறதை இப்படி சொல்றீங்க?”, என்று கேட்டாள் நந்தினி.
“அது வந்து நந்து, நான் சும்மா”
“என்ன சும்மா? உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க. நானே என் மகளுக்கு செஞ்சு கொடுக்குறேன்”,
“இல்லை நந்து, இனி நான் சொல்லலை. இரு அடுத்த தோசை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி விட்டு மித்ராவை முறைத்து விட்டு உள்ளே சென்றாள் பார்வதி.
மித்ரா தலையை தடவி கொடுத்த நந்தினி “நீ நல்லா சாப்பிடு டா. மதினி சொல்றதை பெருசா எடுத்துக்காத. அவங்களும் நல்லவங்க தான். எல்லாரும் என்னோட தலைவிதியை குறை சொல்லாம, தாஸையே குறை சொல்றாங்க”, என்று பெரு மூச்சு விட்டாள்.
“அப்பா மேல உங்களுக்கு கோபமே வராதா மா?”
“கோபமா? எதுக்கு வரணும்? அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். நல்லா இருக்கான் தான? இப்ப எப்படி இருக்கான்? அவன் முடி எல்லாம் நரைச்சு கிழவனா ஆகிட்டானா?”, என்று கேட்டாள் நந்தினி.
“நீங்க அப்பாவை பாக்கணுமா? இருங்க வரேன்”, என்று சொன்னவள் தன்னுடைய பையை திறந்து மோகன் தாஸ் போட்டோ எடுத்து கொண்டு நந்தினி அருகே வந்தாள்.
அவள் கையில் இருப்பது தாஸ் போட்டோ என்று நினைத்த நந்தினி ஒரு பக்கம் ஆவலோடும், மறு பக்கம் புது பெண் மாப்பிளையை பார்ப்பதை போல நடுக்கத்துடனும் அமர்ந்திருந்தாள்.
நந்தினியின் பதட்டத்தை ஒரு சிரிப்புடன் பார்த்த மித்ரா, அதை நந்தினி கையில் கொடுத்தாள்.
ஆவலாக அதை பார்த்த நந்தினி சிறு சிரிப்புடன் “நரைக்கவே இல்லை. அப்பவாது சீக்கு வந்தவன் மாதிரி இருப்பான், ஆனா இப்ப கம்பீரமா இருக்கான்”, என்று ரசித்து சொன்னாள்.
அடுத்து அந்த போட்டோ மித்ரா பையில் இருந்து காணாமல் போய், நந்தினி டிரஸ் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டது. அது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தாள் மித்ரா.
அன்று மாலை தான் வீட்டு பக்கம் வந்த பார்த்திபன் “அம்மா கொஞ்சம் காபி கொடேன்”, என்றான்.
“காபி தான? இரு அதுல விஷத்தை கலக்கி கொண்டு வரேன். எத்தனை மணிக்கு போன டா? இப்ப வந்து நிக்குற? துரை இன்னைக்கு எங்க நாட்டாமை பண்ண போன?”
“எங்க போனேனு சொன்னா காபி தருவியா? தர மாட்ட. எப்படியும் புது புது வார்த்தையால எனக்கு அர்ச்சனை செய்வ. அதனால சொல்ல மாட்டேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு போக திரும்பினான்.
“டேய் நில்லு டா. அந்த வனிதா கிட்ட என்ன டா சொன்ன?”
“அதுக்குள்ள குள்ளச்சி இங்க வந்து வத்தி வச்சிட்டாளா?”, என்று நினைத்து கொண்டு “எந்த வனிதா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம் நொந்த வனிதா”
“எம்மா நீ சூப்பரா சிரிப்பு காட்டுற மா. எந்த வனிதா….. நொந்த வனிதா…. செமையா இருக்குல்ல?”
“ஏலேய் பேச்சை மாத்தாதே. ஒழுங்கா சொல்லு”
“நிஜமாவே நான் ஒன்னும் சொல்லலை மா. என்ன சொன்னா உங்கிட்ட வந்து?”
“நீ அவளை உயிருக்கு உயிரா விரும்புரியாம். நான் தான் உங்க ரெண்டு பேரையும் சேர விடாம கெடுக்குறேனாம். எனக்கு சாபம் விட்டுட்டு போறா டா”
“அட பாவி என்னமா பிட்டு போட்டுருக்கா? நான் எப்ப அப்படி சொன்னேன்?”, என்று நினைத்து கொண்டு “சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்லை மா. நீ வேணா ராசு குட்டி கிட்ட கேட்டு பாரேன்”, என்றான்.
“நீயே ஒரு பரதேசி. இதுல உனக்கு சாட்சிக்கு அந்த நாதாரி பயலா? பேரை பாரு ராசு குட்டி, கழுதை குட்டின்னு. மவனே என்னைக்கும் சொல்றது தான் இப்பவும் சொல்றேன். எவளையாவது பொண்டாட்டின்னு இழுத்துட்டு வந்த, அவ தலை முடியை ஆஞ்சி விட்டுருவேன் சொல்லிட்டேன்”
“விடு மா, விடு மா. நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். அவ ஒரு ஆளுன்னு அவ பேச்சை பெருசா பேசிட்டு இருக்க. ஆமா என்ன வீடே அமைதியா இருக்கு?”
“நம்ம வீடு எப்ப கல கலன்னு இருந்துருக்கு? இன்னைக்கு இருக்குறதுக்கு?”
“அது இல்லைம்மா. காலைல ஒரு சீமாட்டி, என் வீடுன்னு சொல்லிட்டு வந்தாளே, எங்க அவளை காணும்?”
“சீமாட்டியா? அப்படி சொல்லு டா என் தங்கம். அவ எங்க போக போறா? உன் அத்தை கூட தான் டா இருக்கா”
“என்ன மா நீ? இன்னுமா அவளை விரட்டாம வீட்டுக்குள்ள சேத்து வச்சிருக்க?”
“என்ன டா பார்த்தி செய்ய? உங்க அத்தை காரி தான் மித்ரா மித்ரான்னு அவ பின்னாடியே சுத்துறாளே. நம்ம சொன்னா எங்க எடு படும்?”
“ஆமா உனக்கு நிஜமாவே ஒரு தம்பி இருக்கானா? ச்சி இருக்காரா?”
“ஹ்ம்ம் இருந்தான். இப்ப அவன் என் தம்பியே இல்லை”
“எதுக்கு மா கோபம்? ஒரு வேளை நீங்க அத்தையை பொண்ணு பாத்து, அவர் அத்தையை பிடிக்காம, வேற பொண்ணை லவ் பண்ணி இழுத்துட்டு போய்ட்டாரா? அதனால் தான் குடும்பம் பிரிஞ்சிட்டா?”
“அட நீ வேற பார்த்தி. அவன் லவ் பண்ணது உண்மை தான். ஆனா அவன் லவ் பண்ணது உங்க அத்தையை தான். இனி அதை பத்தி பேசி என்ன ஆக போகுது? நீ ரூம்க்கு போ. நான் காபி எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பார்வதி.
குழப்பத்துடன் அங்கேயே டிவி முன் அமர்ந்தான் பார்த்திபன்.
