“எனக்கு கூச்சமா இருக்கு மதினி. எதுக்கு இப்படி சின்ன பிள்ளை மாதிரி பண்றீங்க?”, என்று அழகாக வெட்க பட்டாள் நந்தினி
“மோகன் உன் புருஷன் மா. இனி அவன் கூட தான் நீ இருக்கணும். இனியாவது சந்தோசமா இரு”, என்று சொல்லி நந்தினியை மோகன் அறைக்குள் அனுப்பி வைத்தாள் பார்வதி.
கை கால் நடுக்கத்துடன், மனதில் எழுந்த தயக்கத்துடன் உள்ளே வந்தாள் நந்தினி.
அவளை பார்த்த மோகன் “உக்காரு நந்தினி”, என்று சொன்னார்.
அமைதியாக தலை குனிந்து அமர்ந்தாள் நந்தினி.
“மித்ரா இப்படி செய்வான்னு எனக்கு தெரியாது நந்தினி. அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். தாலி கட்டிட்டேன்னு எல்லாம் பெருசா நினைக்காத. ஏற்கனவே உன் வாழ்க்கையே வீணாக்கிட்டேன். இப்ப இந்த கல்யாணம் பண்ணி உன்னோட நிம்மதியவே கெடுத்துட்டேன். என்னை மன்னிச்சிருமா”
……
“என்ன நந்தினி நான் பேசிட்டே இருக்கேன். நீ அமைதியாவே இருக்க?”
“என்னோட நிம்மதியை நீங்க கெடுக்கல. ஆனா இன்னைக்கு தான் நான் நிம்மதியா இருக்கேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?”
“நந்தினி”
“ஆமா தாஸ். நான் இன்னைக்கு தான் ரொம்ப நிம்மதியா சந்தோசமா இருக்கேன்”, என்று முகம் முழுக்க புன்னகையோடு அவரை பார்த்தாள் நந்தினி.
…..
“இந்த ஜென்மத்தில் நீங்க எனக்கு கிடைச்சதே நான் செஞ்ச பாக்கியம். அப்புறம் எப்படி இதை எனக்கு வாங்கி கொடுத்த மித்ரா மேல கோபம் வரும். உங்க மக அவ அதனாலேயே அவளை எனக்கு பிடிக்கும். இப்ப அவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப அவ என்னோட பொண்ணு. நீங்க என்னோட புருஷன். இது போதும் எனக்கு”
“நந்தினி. என்னை மன்னிச்சிருமா. எனக்கும் உன்னை…”
“தெரியும் தாஸ், உங்க மனசுல எப்பவுமே நான் தான் இருப்பேன்னு. எனக்கு நம்ம காதல் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு”
“என் மேல கோபம் இல்லையா?”
“கோபம் இல்லை. ஆனா இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்துட்டீங்களேன்னு கொஞ்சம் பொறாமை இருக்கு. அது இல்லைனா நான் எப்படி மனுசியா இருக்க முடியும்? அதை தான் நான் மறக்க முயற்சி செய்ய போறேன்”
“நந்தினி” என்று சொல்லி கொண்டே அவள் கைகளை பிடித்தார் மோகன்.
சிறு பெண் போல வெட்க பட்டு தலை குனிந்த நந்தினி “நாம பழசை எல்லாம் மறந்துறலாம் தாஸ். நமக்கு இன்னைக்கு தான் கல்யாணம் நடந்துருக்குன்னு நினைச்சிக்கலாம் சரியா?”, என்றாள்.
“ஹ்ம்ம் நினைச்சிக்கலாமே”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கி அமர்ந்தார் மோகன்.
“என்ன தாஸ்?”, என்று கேட்ட நந்தினி குரல் நடுங்கியது.
“கிழவன் ஆனா தான் உணர்வுகள் மங்கும் நந்தினி. இன்னும் நான் கிழவனா ஆகலைனு நினைக்கிறேன். உன்னை நினைச்சு பல நாள் தவிச்சிருக்கேன். ப்ளீஸ்”, என்ற படியே அவள் முகம் நோக்கி குனிந்தார் மோகன்.
அடுத்த நாள் காலை தூக்கம் வராததால் சீக்கிரம் கண் விழித்தாள் மித்ரா.
அருகில் தூங்கி கொண்டிருந்த பார்த்திபனை பார்த்தாள். “என்னை மன்னிச்சிரு செல்லம். இன்னைக்கு நீ தூங்காம இருக்குற நாள்னு எனக்கு தெரியும். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அப்புறம் உன்னை விடவே மாட்டேன்”, என்று நினைத்து கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்த மித்ரா கண்ணில் பட்டது, நந்தினி அறையையே ஆசையாக பார்த்து கொண்டிருந்த வள்ளி பாட்டி தான்.
அதை பார்த்த மித்ராவுக்கு சிரிப்பு வந்தது. நந்தினி சந்தோசமாக வாழ்ந்திருக்காளா என்று பார்க்க காத்திருந்த அவரை பார்த்து “எந்த வயசானாலும் அம்மாவுக்கு குழந்தைகள் குழந்தைகள் தான்”, என்று நினைத்து கொண்டு அவர் அருகில் சென்றாள்.
“என்ன பாட்டி பண்ற?”
“ஸ்ஸ்ஸ் சும்மா இரு மித்ரா”, என்றார் வள்ளி பாட்டி.
“ஓ அம்மாக்காக வெயிட் பண்றியா?”, என்று கேட்டு கொண்டே அங்கு அமர்ந்தாள்.
மோகன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த நந்தினி சிரித்து கொண்டே எழுந்தாள். அவளை விடாமல் இழுத்தார் மோகன்.
“ப்ச் விடுங்க பா. விடிஞ்சிருச்சு. இப்ப தான் சின்ன பையன்னு நினைப்பு”, என்று சிணுங்கினாள் நந்தினி.
“இப்ப விடுறேன். ஆனா அப்புறம் பாத்துக்குறேன்”, என்று சிரித்தார் மோகன்.
எழுந்து குளிச்சு முடிச்சு வெளியே கூச்சத்துடன் வந்த நந்தினி, அங்கே இங்கே பார்க்காமல் வெட்க முகத்துடன் நேராக கிட்சன் உள்ளே சென்றாள்.
அதை ஒளிந்திருந்து பார்த்த மித்ரா மற்றும் வள்ளி பாட்டிக்கு திருப்தியாக இருந்தது. பாட்டி முகத்தில் தெரிந்த ரியாக்சனை பார்த்து சிரிப்பு வந்தது மித்ராவுக்கு.
நந்தினியை பார்த்த பார்வதி, அவளுக்கு திருஷ்டி கழித்தாள்.
“சும்மா இருங்க மதினி. எனக்கு கூச்சமா இருக்கு”, என்று வெட்க பட்டாள் நந்தினி.
“இன்னைக்கு தான் உன்னை பாக்க சந்தோசமா இருக்கு. என் கண்ணே பட்டுரும் போல? இந்தா மோகனுக்கு காப்பி கொண்டு போ”, என்று கொடுத்து விட்டாள் பார்வதி.
நந்தினி அங்கே இருந்து போன பின்னர் “எனக்கு காப்பி இல்லையா அத்தை?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்தாள் மித்ரா.
“ஏய் வாலு குட்டி. வா வா. ஒரு நாளில் குடும்ப நிலமையையே மாத்தி சந்தோசத்தை கொண்டு வந்துட்டியே. நீ என் ராஜாத்தி டா. இந்தா காப்பி குடி”, என்று கொடுத்தார்.
“கொஞ்சினது போதும் அத்தை. இன்னொரு காபி கொடுங்க. உங்க பிள்ளைக்கு கொண்டு போறேன்”
“ஏன் அவன் வந்து குடிக்க மாட்டானோ?”
“பாரு டா. தம்பிக்கு மட்டும் காபி இங்க இருந்து போகுது. என் புருசனுக்கு மட்டும் கொடுக்க கூடாதோ? அதுக்கு தான் அத்தான் உனக்கு சொர்ணாக்கான்னு பேரு வச்சிருக்காரு போல”
“அதுக்குள்ளே புருசனுக்கு சப்போர்ட்டா? பிழைச்சிக்குவ மித்ரா. இந்தா தாரேன் மா காபி. உன் புருசனுக்கு கொண்டு போய் கொடு. அவன் அன்னைக்கே சொன்னான். என் பொண்டாட்டி கூட சேந்து உன்னை வீட்டை விட்டு அனுப்புறேன்னு. அப்படி தான் நடந்துரும் போல”
“ஹா ஹா. சிரிப்பு காட்டாத அத்தை. நீ என்னோட செல்ல அத்தை. உன்னை போய் அனுப்புவேனா? வேணும்னா இந்த கிழவியை தான் நாடு கடத்துவேன்”, என்று அங்கு வந்து கொண்டிருந்த வள்ளியை பார்த்து சொன்னாள் மித்ரா.
“இதை தான் இத்தனை நாளும் இந்த பார்த்தி நாய் சொல்லிக்கிட்டு திரிஞ்சது. இப்ப அவன் பொண்டாட்டியும் ஆரம்பிச்சிட்டா. நீங்க ரெண்டு பேரும் சேந்து, என்னை ஒன்னும் செய்ய முடியாது”, என்றாள் வள்ளி பாட்டி.
“எங்களால முடியாதா? நானும் அத்தானும் சேந்து என்ன வேணா செய்வோம் தெரியுமா சகுனி கிழவி?”
“நீங்க ரெண்டு பேரும் சேந்து சீக்கிரம் பிள்ளையை பெத்து என்னை கொள்ளு பாட்டியா ஆக்குங்க. அது போதும். அதுக்கான முயற்சியில் இறங்காம இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்குற என்னை போய் நாடு கடத்த போறாங்களாம். பாரு பார்வதி”, என்று சொல்லி சிரித்தாள்.
பார்வதியும் கூட சேர்ந்து சிரித்தாள்.
மித்ரா முகம் சிவந்து, “விட்டால் போதும்”, என்று நினைத்து காபியை வாங்கி கொண்டு அங்கு இருந்து நகர்ந்தாள்.
அறைக்குள் வந்தாள் மித்ரா.
குளித்து முடித்து துண்டுடன் வெளியே வந்தான் பார்த்திபன். அவனை பார்த்து கூச்சத்துடன் “காப்பி இங்க இருக்கு அத்தான்”, என்று சொல்லி அங்கு வைத்து விட்டு வெளியே ஓடி போனாள்.
அவள் முகத்தில் இருந்த வெட்கத்தை ஆச்சர்யமாக பார்த்தவன் “வயசுக்கு வரலைன்னாலும் பொண்ணுங்களுக்கு கூச்சம் மட்டும் வரும் போல”, என்று நினைத்து கொண்டு சட்டையை எடுத்து போட்டான்.
கீழே அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
“சென்னைக்கு நானும், நந்தினியும் கிளம்புறோம். கடை பாக்க ஆள் இல்லை”, என்று சொன்னார் மோகன்.
“சரி மோகன்”, என்றார் மகேந்திரன்.
“இல்லை பா. நாம இனி சென்னை போக போறது இல்லை”, என்றாள் மித்ரா.
“உன்னை யாரு கூப்பிட்டா? உன்னை தான் உன் புருஷன் கிட்ட ஒப்படைச்சாச்சே. இன்னும் என்னால உன்னை வச்சு மேய்க்க முடியாது. அப்பப்பா இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. மறுபடியும் வந்து ஒட்டிக்க பாக்குறியா? உன்னை மேய்கிறதும் ஒன்னு தான். நாலு கழுதையை மேய்கிறதும் ஒன்னு தான். நானும் என் பொண்டாட்டியும் தான் போறோம்”, என்று சிரித்தார் மோகன்.
“அப்பா”, என்று முறைத்தவள் “நான் உங்களையும் சேத்து தான் சொன்னேன்”, என்றாள்.
“என்ன சொல்ற மித்ரா?”
“நாம யாரும் அங்க போக போறது இல்லை”
“அப்ப நம்ம கடை மித்ரா?“
“கடை நடத்த தான் போறோம்”
“எப்படி மித்ரா வாடகைக்கு விட போறோமா?”
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு பா. அவசர பட்டு பேசாதப்பா. நொச்சு நொச்சுன்னு கேள்வி கேட்டுகிட்டு”
“சரிங்க மகாராணி சொல்லுங்க”
“உனக்கு சென்னை பிடிக்காது. உனக்கு உன்னோட ஊரு தான் பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். அம்மாவும் இத்தனை வருஷம் இங்க ஊரிலே இருந்துட்டாங்க. அவங்களுக்கும் இங்க தான் பிடிக்கும். அதனால அங்க இருக்குற நம்ம கடையை இப்ப நம்ம மாமா இடத்துல வைச்சு நம்ம ஊரு டவுன்ல நடத்த போறோம். சென்னைல இருக்குற இடத்தை மட்டும் வாடகைக்கு விட போறோம். இங்க நம்ம புதுசா ஆரம்பிக்க போற நம்ம கடைல ஒரு செக்சனா அத்தான் சொல்ற உரக்கடை, விதை நெல் கடையும் வைக்க போறோம். மளிகை சாமான் கடையை நீ பாரு. விவசாய பொருள் கடையை மாமா பாப்பாரு”
“நான் வயலை பாக்கணுமே மித்ரா”, என்றார் மகேந்திரன்.
“இல்லை மாமா, உங்களுக்கும் வயசு ஆகிட்டு. வயல், காடுன்னு இறங்கி வேலை செய்ய முடியாது. அதனால கிழவங்க ரெண்டு பேரும் கடையை தான் பாக்கணும்”
“அப்ப வயல் என்ன ஆகும்?”, என்று கேட்டாள் பார்வதி.
“கடைசில என்னோட ஆசைல மண்ணை அள்ளி போட்டுட்டா”, என்று அவளை முறைத்தான் பார்த்திபன்.
“அதை உங்க பிள்ளை பாப்பாரு அத்தை”, என்று சொன்னாள் மித்ரா.
“இதுக்கு தான் லோன் வேண்டாம்னு சொன்னாளா?”, என்று நினைத்து கொண்டு சந்தோசமாக அவளை பார்த்தான் பார்த்திபன்.
“அவனுக்கு அந்த வேலை எல்லாம் செய்ய தெரியாது மா”, என்றார் மகேந்திரன்.
“செய்ய தெரியாதுன்னு இல்லை. அத்தானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை. இனி அவர் தான் அதை செய்வார். அவருக்கு தெரியாததை நீங்களும், அப்பாவும் சொல்லி கொடுங்க. இப்ப நான் சொன்னது எல்லாருக்கும் சரின்னு தோணுதா? கிழவி நீ சொல்லு. என் யோசனை சரி தான?”
“சரி தான்னு சொன்னா புருசனும் பொண்டாட்டியும் எனக்கு என்ன செய்ய போறீங்க?”
“ஒன்னும் தர போறது இல்லை. எங்க வயலில் களை எடுக்க உன்னை முன்னாடியே புக் பண்ணி வைக்க போறேன்”, என்று மித்ரா சொன்னவுடன் அனைவரும் சிரித்தார்கள்.
காதல் தொடரும்….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.