Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Short Stories

கண் பேசும் வார்த்தைகள்

பேருந்தின் முன் இருக்கையில் அவள்.

ஜன்னலோர பேருந்து பயணம் எவ்வளவு சுகமென்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக்கூடும்.

அதிலும் தேவதை தரிசனங்கள் அந்த இன்பத்தை மேலும் இனிதாக்கிடுமே…

இளையராஜா பாடலும், மழையும், இந்த சூழலை இன்னும்  இனிமையாக்கும் என்று முகப்புத்தகத்தில் நீங்கள் எழுதியிருக்கக்கூடும்.



Advertisement

ஆனால் மன்னிக்கவும் எனக்கு அந்தக் கொடுப்பினைவாய்க்கவில்லை.

ஏதோ தொண்ணூறுகளின் அதிரடிப் படமொன்று தொலைதூரமிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்தது.

என் கையிலிருந்த புத்தகம் எதற்காக என்னைவேறு திறந்துவைத்தும் அடிக்கடி புரட்டியும் இம்சிக்கிறாய் என்று காற்றடிக்கையில் படபடத்தது.

Advertisement

அக்காற்றோ இன்னும் என்னை சோதிக்க எண்ணி, பின்னி வைத்த அவள் கூந்தலின் மீதமிருக்கும் சிறு முடிகளை அசைத்துப் போகிறது.

Advertisement

இயற்கை வருணனை எனக்கு மிகப்பிடிக்கும். இதுவும் இயற்கை வருணனை தானே…!!

பெண்ணே இறையின் மாபெரும் விந்தையல்லவா…!!

அந்த நடத்துனரின் சீழ்கையொலியில் திரும்பியவள் கண்கள் யதேச்சையாக எனைப்பார்க்க…

Advertisement

என் கண்கள் அவள் கருவிழியெனும் காந்தத்தில் ஈர்க்கப்பட்டு, கருந்துளைக்குள் (black hole) மாட்டிய வெள்ளொளி (light) போல் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

ஆனால்…

ஒரு நிமிடம்…

இதோ அவளும் பார்க்கிறாள்….

என்னை நன்றாகத் தெரிந்ததுபோலவே…

அவள் விழிகள் ஏதோ சொல்லிவிடத் துடிக்கின்றன…

நிமிடத்திற்கு குறைந்தது ஒரு நூறு யோசனைகள் அதில் ஓடுகின்றன போல….

அவ்விமைகள்….
பட்டாம்பூச்சியென சிறகடித்தன…

அவள் என்புறம் திரும்புவதும்… முன்புறம் திரும்புவதும் என சில நாடகங்கள் அங்கே அரங்கேறின…

இவள் என்னை அறிந்தவளோ ??

ஒருவேளை நம்மை விரும்புகிறாளோ ??

என்று கற்பனை செய்த அறியா சிறு மூளைக்கும், நலிந்துபோன இதயத்துக்கும் இல்லையென்ற சொல்லை முழுதாய் தாங்கிடும் திறன் இருக்குமா எனும் ஐயம் வேறு வந்து தொலைத்தது.

இதோ அந்த பேருந்துப் பயணம் முடியும் தருணம் வரப்போகிறது…

இந்த தேவதையை நான் தவறவிடப் போகிறேன்.

இந்த ஒருமணி நேரப் பயணம் அவ்வபோது என் நினைவு அடுக்குகளுக்கு வந்து வேறு இம்சிக்குமே….

அடுத்த சீழ்கையொலி….
நான் திரும்பிப் பார்க்காமல்…

மீண்டும் என் மனதிற்கு வலி கொடுக்காமல்…
பின்பக்க வழியில் இறங்கிவிட்டேன்…

ஆச்சர்யங்களின் மொத்த குவியல் தானே வாழ்க்கை…!!!

இதோ முன் படிக்கட்டு வழியே அவளும் இறங்கி நிற்கிறாள்.

மிட்டாய் கண்ட குழந்தைபோல் துள்ளிக்குதித்தது இதயம்.

ஆனாலும் உள்ளூர ஒரு பயம்…

எங்கே உறவுக்காரப் பெண்ணாய் இருந்து உள்ளூரில் ஏதும் கலகம் செய்துவிடப் போகிறாள் என்று…

அவள்…

ஒன்று… இரண்டு… மூன்று…
ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து என்னை நெருங்கிவிட்டாள்.

நீங்க…
ரதியின் தம்பி தானே… என்றாள்.

நான் ஆமாம் என்றேன்…

இது என்னடா புது குழப்பம் என்று மூளைக்குள் மணியடித்தது.

நான் உங்க அக்கா கூட படிச்சேன்…
வீட்டுக்கு தான் வர்றேன்…
அடுத்த மாதம் திருமணம்… பத்திரிக்கை கொடுக்க வந்தேன்…
பஸ்லேயே சொல்லப் பாத்தேன், நீங்க கவனிக்கலை என்றாள்.

ஹைட்ரஜன் பாலூனாய் பறந்த தேகம் பொத்தென்று கீழே விழுந்து உடைந்துபோனது பொம்மையாக….

முற்றுப்புள்ளி
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!