Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 08

விஷி… விஷி… என்னாச்சு?”

 

அனைவரும் பரப்பரப்பானார்கள்.

 



Advertisement

“மறுபடி மயக்கமா?”

 

விஷாலி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

Advertisement

 

Advertisement

“மயக்கமெல்லாம் இல்ல, ஆனா, தல இலேசா சுத்திச்சு, மண்ட கனமா இருக்கு!”

 

நெற்றியைக் கசக்கிக்கொண்டாள். தேவியும் ஆதரவாய் அவள் தலையைப் பிடித்துவிட்டாள்.

Advertisement

 

“சரி, அமைதியா வாங்க வீட்டுக்குப் போய் மத்ததலாம் பேசிக்கலாம்!”

 

விக்ரம் சொன்னான்.

 

வண்டி வீட்டிற்குள் வந்து நின்றது. அவர்கள் இறங்கி உள்ளே சென்றனர்.

 

அருண் அருகில் வந்த பணியாளிடம் ஏதோ சொல்ல அவன் பரபரப்பாய் உள்ளே ஓடினான்.

 

“விஷாலி நீ போய் ஓய்வெடுத்துக்கோ-”

 

அருண் முடிக்கும் முன் அவள் இடைவெட்டினாள்,

 

“இல்ல, நானுன் உங்களோடையே இருக்கேன், இல்லேனா நீங்க என்ன விட்டுட்டுப் போக பிளான் பண்ணிடுவீங்க!”

 

அவள் பேச்சு சின்னக் குழந்தையைப் போல இருந்தது.

 

“உன்ன விட்டுட்டுப் போக முடியாது… நீதான் முக்கியம், கவலைப்படாம போய் ஓய்வெடு…”

 

[the_ad id=”6605″]

 

 

செழியன் சொன்னது வெறுமனே அவளைச் சமாதானம் செய்வதற்காகச் சொன்னதைப் போல இல்லை.

 

விக்ரம் அவரை ஏறிட்டுப் பார்தான், அவர் ’பொறுமை’ என்பதைப் போலக் கையைக் காட்டினார்.

 

விஷாலி மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் அறையை நோக்கிச் சென்றாள். உள்ளே வந்திருந்த ஆயுதம் தாங்கிய தனியார் காவலரில் ஒருவர் விஷாலியைப் பின்தொடர்ந்தார்.

 

தேவி அவரிடம் கண்களால் ஏதோ சொன்னாள், அவரும் தலையை மிடுக்காக ஆட்டிவிட்டுச் சென்றார்.

 

விஷாலி படியேறிச் செல்லும்வரை அமைதியாகவே இருந்தனர்.

 

“விஷாலிய விட்டுட்டுப் போக முடியாது விக்ரம்!”

 

செழியன் அமைதியைக் கலைத்தார்.

 

“ஆபத்துனு தெரிஞ்சும் அவளக் கூட கூட்டிட்டுப் போகனுமா?”

 

விக்ரம் குரலில் கோவம் இருந்தது.

 

“அதான… அவ இங்கயே இருக்கட்டும், நான் பாத்துக்குறேன்…”

 

அருண் வாஞ்சையுடன் சொன்னான்.

 

தேவி “கிளுக்” என்று ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

 

அருண் அவளை ’என்ன?’ என்பதைப் போல முறைக்க, ’ஒன்றுமில்லையே’ என்பதைப் போலத் தோளைக் குலுக்கினாள்.

 

“விக்ரம், நீங்க மட்டும் விக்ரமாதித்யன் இல்ல, விஷாலிக்கும் இதுல தொடர்பு இருக்கு…”

 

“என்ன தொடர்பு?”

 

“என்னவா இருக்கலாம்னு எனக்கு சில ஊகங்கள் இருக்கு, இப்போதைக்கு நான் எதையும் சொல்ல விரும்பல!”

 

“உஜ்ஜைனி போறதுக்கான திட்டம் என்ன? நான் டிக்கெட் போடவா?”

 

அருண் கேட்கச் செழியன் அவனைத் திரும்பிப் பார்த்து ‘வேண்டாம்’ என்று தலையை ஆட்டினார்.

 

“உஜ்ஜைனி போறதுக்கு முன்னாடி நாம சில விஷயங்களத் தெளிவாக்கிக்கனும்… அவசரப்பட வேண்டாம்!”

 

“எனக்கும் அது சரின்னுதான் படுது… நானும் டிபார்ட்மெண்ட்ல சொல்லி அங்க நம்ம பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணனும், எனக்கென்னவோ இங்கவிட அங்க ஆபத்து அதிகமா இருக்கும்னு தோனுது…”

 

தேவி சொல்ல செழியன் ஆமோதித்துத் தலையசைத்தார்.

 

விக்ரம் ஏதோ சொல்ல முயலச் செழியன் அவனைத் தடுத்துப் பேசினார்,

 

“எனக்கும் சில ஏற்பாடுகள் செய்யனும் விக்ரம்… நான் சொல்றதக் கேளுங்க… இப்ப நீங்களும் போய் ஓய்வெடுங்க, நான் போய்ட்டு மாலை வரேன், மத்தத அப்புறம் பேசிக்கலாம்…”

 

விக்ரம் ஏதும் சொல்லாமல் அவரையே உற்றுப் பார்த்தான்.

 

“ஆங்- அப்புறம், அருணும் நம்ம கூட வரனும்… அதனால் உங்க பிசினசைக் கவனிக்குற பொறுப்ப வேற யார்கிட்டயாவதுதான் கொடுக்க ஏற்பாடு பண்ணனும் நீங்க! வரேன்!”

 

[the_ad id=”6605″]

 

செழியன் சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றார்.

 

விக்ரம் அருணைப் பார்க்க அருண் தோளைக் குலுக்கினான்.

 

அருண் அருகிலிருந்த பணியாளுக்குச் செய்கை செய்யச் செழியனைக் கொண்டு செல்ல மகிழுந்து தயாரானது.

 

“அருண் நீ பாஸ்கரன் சார்கிட்ட பேசு, முடிஞ்சா சாயங்காலம் இங்க வரச் சொல்லு அவர, அப்படியே நம்ம வக்கீல் சுந்தர்ராமனையும் கூப்பிடு…”

 

“நாம எங்க போகப் போறோம்னு சொல்ல? விக்ரமாதித்யரோட வாளை எடுத்துட்டு வரப் போறோம்னே சொல்லவா?”

 

அருணின் குரலில் கிண்டலும் எரிச்சலும் இருந்தன. விக்ரம் அவனைத் தீவிரமாக முறைத்தான்.

 

“சரி சரி… நானே சமாளிச்சுக்குறேன்… நீட்ற எடத்துல கையெழுத்துப் போட்ரு, சரியா!”

 

அருண் சொல்லிவிட்டுத் தன் கைப்பேசியை உசுப்பியபடியே நகர்ந்தான். பட்டியும் எதுவும் பேசாமல் தனக்கான அறை நோக்கிச் சென்றான்.

 

தேவி எழுந்து வந்து விக்ரமின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

 

“நீயும் ஏதோ ஏற்பாடு பண்ணனும்ன?”

 

“அதெல்லாம் பண்ணிக்கலாம்… கொஞ்சம் நேரம் உன் கூட தனியா இருக்கனும்னு தோனிச்சு!”

 

தேவி விக்ரமின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

* * *

 

மாலை விக்ரமும் அருணும் அவர்களது அலுவலக அதிகாரிகளையும் வக்கீலையும் சந்தித்து அவர்கள் இல்லாத போது நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கைமாற்றினர்.

 

அவர்கள் அலுவலக சந்திப்பை முடித்த சிறிது நேரத்தில் தேவியும் செழியனும் வந்தனர்.

 

“பேசி வெச்சிக்கிட்டு ஒன்னா வரீங்களா?”

 

அருண் புன்னகையோடு அவர்களை வரவேற்றபடியே கேட்டான்.

 

“ஆமா… நான்தான் செழியனை பிக்-அப் பண்ணிட்டு வரேன்…”

 

அவர்கள் வந்து அமர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்குக் குடிக்கப் பானங்கள் பரிமாறப்பட்டன.

 

“முடிவு பண்ணிட்டீங்களா?”

 

செழியன் தனக்கு வைக்கப்பட்ட நீர்மோரைச் சிறிது குடித்துவிட்டுக் கேட்டார்.

 

“நாங்க என்ன முடிவு பண்றது? அதான் நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டுப் போய்ட்டீங்களே!”

 

அருண் சலிப்புடன் சொன்னான்.

 

“சரி உஜ்ஜைனிக்கு எப்படிப் போறோம்?”

 

செழியன் அருணின் சலிப்பைக் கவனிக்காதவர் போலக் கேட்டார்.

 

விக்ரம் அருணைப் பார்த்தான்.

 

“பறந்து…”

 

அருண் விமானம் பறப்பதைப் போல கையால் செய்கை செய்தான்.

 

“டிரெயின்லயே போவோமே…”

 

செழியன் மெல்லிய புன்னகையோடு சொன்னார்.

 

 

[the_ad id=”6605″]

 

“ஏங்க? விமானம்னா இரெண்டே மணி நேரம்தான்… இங்க ஏறினா அங்க இறங்கிடலாம்… இண்டோர் போய்ட்டு அங்கேர்ந்து டிரெயின்லதான் போயாகனும், அது ஒரு இரெண்டு மணி நேரம் ஆகும்!”

 

அருண் இலேசான எரிச்சலோடு சொன்னான்.

 

“விக்ரம் நெனச்சா சார்டர்டு பிளைட் எடுத்துக்கிட்டுப் போய்ட்டு வந்துடலாம்!”

 

தேவி சற்றே பெருமையோடு சொன்னாள்.

 

“இப்ப வேகமா போறது முக்கியமில்ல… பொறுமையாவே போவோம்… முடிஞ்சவரை யார் கவனத்தையும் கவராமப் போவோம், அதான் முக்கியம்!”

 

செழியன் தேவியைப் பார்த்தார், அவளும் ‘சரிதான்’ என்பதைப் போல மெல்லத் தலையசைத்தாள்.

 

“டிரெயின்னா ஒரு நாளைக்கு மேல ஆகும்!”

 

அருன் சலிப்போடு சொன்னான்.

 

“ஆகட்டும், அந்த ஒரு நாள் நமக்குத் தேவை… விக்ரமும் விஷாலியும் அந்த மோதிரத்துல என்னதான் இருக்குனு அதுக்குள்ள தெரிஞ்சுக்க முயலட்டும்… எனக்கும் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கு உஜ்ஜைனில… அதனால…”

 

செழியன் கேள்வியோடு விக்ரமைப் பார்த்தார்.

 

விக்ரம் சற்று அமைதியாகச் சிந்தனையில் இருந்தான்.

 

பின்னர் “சரி” என்று தோளைக் குலுக்கினான்.

 

“நாளைக்குச் சாயங்காலம் ஜெய்ப்பூர் எக்சுபிரசுல டிக்கெட் போடு அருண்!”

 

செழியன் சொல்ல அருண் வேண்டா வெறுப்பாய்த் தலையசைத்தான்.

 

செழியன் அவனது எரிச்சலைக் கண்டு புன்னகைத்தார்.

 

“சரி உடனே கிளம்பி உஜ்ஜைனி போறோம்னே வெச்சுக்குவோம், அங்க போய் என்ன பண்ணுவோம்? எங்கனு போய் வாளைத் தேடுவோம்?”

 

செழியனின் கேள்வி அருனைச் சற்றே திணற வைத்தது.

 

“அதுக்குத்தான உங்கக்கிட்ட வந்தோம்… நீங்கதான் சொல்லனும் அதை!”

 

அருண் சமாளித்துக்கொண்டு பதில் சொன்னான்.

 

“சொல்றேன்… ஆனா, அதுக்கு நீங்கலாம் நான் சொல்றபடி கேட்கனும்… அப்பத்தான் என்னால உங்கள சரியா கூட்டிட்டுப் போக முடியும்!”

 

செழியனின் முகத்தில் இலேசான வெற்றிப் பெருமிதம் இருந்தது.

 

“ஹ்ம்ம்ம்…”

 

தேவி பெருமூச்சுவிட்டாள். விக்ரம் மெல்ல நகைத்துக்கொண்டிருந்தான்.

 

“சரி ஒத்துக்குறேன்… சொல்லுங்க அங்க போய் எப்படி வாளைக் கண்டுபிடிப்போம்?”

 

அருண் உணர்ச்சியற்றுக் கேட்டான்.

 

“இப்போதைக்கு எனக்கும் உறுதியா தெரியல… ஆனா, விஷாலிகிட்டதான் நமக்கான வழி இருக்குனு தோனுது!”

 

“விஷாலி இன்னும் எழுந்துக்கலையா?”

 

தேவி கேட்டபடியே வாசலுக்கருகில் இருந்த காவலர்க்குச் செய்கை காட்ட அவர் தன் கையில் இருந்த தொலைதொடர்பு கருவியில் விஷாலியின் அறை வாசலில் இருந்த காவலரோடு பேசினார்.

 

பின் தேவியின் அருகில் வந்து பணிவுடன் ஏதோ சொல்லிச் சென்றார்.

 

“விஷாலி முழிச்சுட்டுதான் இருக்காளாம், அவளக் கூப்டு விக்ரம்!”

 

தேவி சொல்ல விக்ரம் அருகில் அருந்த பணியாளுக்குச் செய்கை செய்தான்.

 

சற்று நேரத்தில் விஷாலி அங்கு வந்தாள்.

 

விருந்துக்குச் செல்பவளைப் போல அழகாய் உடையணிந்திருந்தாள். கருநீல வண்ணத்தில் நீண்ட ராஜஸ்தானி உடையை அணிந்திருந்தாள். கூந்தலையும் அழகாக வாரி ஒய்யாரமாகப் பிண்ணலிட்டிருந்தாள்.

 

அருண் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்தான்.

 

“மேடம் எங்கயாவது வெளில போறீங்களா?”

 

தேவி கிண்டலாகக் கேட்டாள்.

 

“உஜ்ஜைனி? நீங்களாம் இன்னும் கிளம்பலயா?”

 

[the_ad id=”6605″]

 

விஷாலி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 

“நாம என்ன உஜ்ஜைனிக்கு ஷாப்பிங் பண்ண போறோம்னு நெனச்சியா? விக்ரமாதித்யர் மா… வாள்… மந்தாகினி…”

 

அருணும் கிண்டலாகச் சொல்ல, விஷாலி அவனை முறைத்தாள்.

 

“அது மந்தாகினி இல்ல, மன்யாக்னி… இவனலாம் கூட வெச்சுக்கிட்டு நீ ரொம்ப கஷ்டப்படப் போற நீ!”

 

விஷாலி விக்ரமைப் பார்த்துத் இலேசாகத் தலையில் அடித்துக்கொண்டு சொன்னாள்.

 

“ம்க்கும்…”

 

செழியன் தொண்டையைச் செறுமினார். விஷாலி அவரைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

 

“கொஞ்சம் தீவிரமா பேசுவோமா?”

 

“ஓ…” என்றபடியே விஷாலி விக்ரமிற்கு அருகில் மெத்தை இருக்கையில் அமர்ந்தாள் (விழுந்தாள்!).

 

“உஜ்ஜைனிக்குப் போறது பெரிசில்ல, அங்க போய் வாளை எங்கனு தேடப் போறோம், அதான் இப்ப கேள்வி!”

 

செழியன் விஷாலியையே பார்த்துக்கொண்டு பேசினார்.

 

“சரிதான்! நீங்கதான் எதாச்சு கல்வெட்டு கில்வெட்டப் பார்த்துச் சொல்லனும்…”

 

விஷாலியின் குரலில் குறும்பு தெறித்தது.

 

“சொல்லலாம்… ஆனா அதுக்கெல்லாம் அவசியம் இல்லனு தோனுது எனக்கு…”

 

செழியன் நிதானமாகச் சொன்னார். அவரது பார்வை தீவிரமாய் விஷாலியின் மீது இருந்தது.

 

விஷாலியின் விளையாட்டுத்தனம் மெல்ல குறைந்தது. அவளும் சற்று தீவிரமானாள்.

 

“நீங்க பேசுறதப் பார்த்தா எனக்குத் தெரியும்னு சொல்றா மாதிரி இருக்கே?”

 

குழப்பத்துடன் கேட்டாள்.

 

“மாதிரிலாம் இல்ல, உனக்குத்தான் தெரியும்னு அவர் உறுதியாவே சொல்றார்!”

 

தேவி இடைவெட்டினாள்.

 

“என்னது? எனக்கென்ன தெரியும்?”

 

செழியன் பதிலேதும் சொல்லாமல் அந்தக் கணையாழியை எடுத்து நீட்டினார்.

 

விஷாலி சற்று நேரம் அதையே உற்றுப் பார்த்தாள்.

 

பின் மெள்ள அதை வாங்கக் கையை நீட்டினாள்.

 

விக்ரம் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டு அவள் தோள்களை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டான்.

 

விஷாலி சட்டென எட்டி அந்தக் கணையாழியைப் பிடித்துக் கைக்குள் இறுக்க மூடிக்கொண்டாள்.

 

“ரத்னாங்கீஈ…”

 

“மன்னா…”

 

“கோமளவல்லி…”

 

விஷாலியின் மூளைக்குள் சடசடவெனக் காட்சி மின்னல்கள் வெட்டின.

 

“குழம்பாத விஷாலி… கவனத்தை ஒரு நிலைப்படுத்த முயற்சி பண்ணு… ஏதாச்சு ஒரு விஷயத்துல கவனம் செலுத்து…”

 

விஷாலிக்குச் செழியனின் குரல் அசரிரீ போலத் தொலைவில் கேட்டது.

 

விக்ரம் இப்போது அவள் தலையைப் பிடித்துக்கொண்டான்.

 

அவள் கண்முன் மாறும் காட்சிகளைப் பிடிக்க முயன்றாள். தலை வெடித்துவிடும் போல வலித்தது.

 

சட்டென அந்தக் காட்சி நிலைத்தது.

 

கனவு காண்பது போல…

 

நள்ளிரவு. இருட்டோடு இருட்டாய்க் காளி கோயிலின் நிழல் தோற்றம். ஒரே ஒரு பக்கத்து விளக்கு மட்டும் காற்றோடு மன்றாடி எரிந்துகொண்டிருந்தது.

 

தொலைவில் நரிகளின் ஊளையும் கோட்டான்களின் அலறலும் கேட்டன.

 

காற்றின் குளிர் எலும்புவரை ஊடுருவித் தொட்டது.

 

விஷாலியின் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது.

 

கோயிலின் வாசலில் யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

 

“பட்டி…”

 

விஷாலியின் வாய் முணுமுணுத்தது.

 

யாரோ கோயிலிலிருந்து வெளியே வருகிறார்…

 

“மன்னர்! பேரரசர் விக்ரமாதித்யர்…”

 

விக்ரமாதித்யர் மெள்ளத் தன் வாளை உருவுகிறார்…

 

பட்டி அமர்ந்தபடியே யாசகம் பெறுபவனைப் போலக் கைகளை முன்னால் நீட்டுகிறார்…

 

 

[the_ad id=”6605″]

 

மன்னர் தன் வாளை ஓங்குகிறார்… அது நெருப்புத் தனல் போல அந்த நள்ளிரவில் மெல்ல ஒளிர்கிறது…

 

மன்னர் வாளை வீசுகிறார்…

 

“மன்னாஆஆ!”

 

விஷாலி அலறினாள். அவள் உடலின் நடுக்கம் அதிகமாகிவிட்டிருந்தது.

 

செழியன் பாய்ந்து அவள் கையிலிருந்து மோதிரத்தைப் பிடுங்கினார்.

 

விஷாலி மெல்ல அடங்கினாள். அவளது உடலின் நடுக்கம் மெல்ல மெல்லக் குறைந்தது.

 

வீட்டின் பணியாள்கள் சற்று தொலைவில் நின்றபடி இவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அருண் அவர்களை நிமிர்ந்து பார்த்து முறைத்தான். அவர்கள் மெல்ல நழுவினர்.

 

ஒருவன் மட்டும் ஒரு புட்டியில் குளிர்ந்த நீரை எடுத்துவந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.

 

தேவி அதை வாங்கித் தன் கையில் ஊற்றி விஷாலியின் முகத்தில் தெளித்தாள்.

 

விஷாலி மெள்ள இயல்பானாள்.

 

நிமிர்ந்து அமர்ந்தவள் நேராகச் செழியனைப் பார்த்தாள்.

 

அவளது முகத்தில் இலேசான அச்சம் பரவியிருந்தது. தீவிரம் கூடியிருந்தது.

 

“மகாகாளி கோயில்!” என்றாள்.

 

செழியன் புன்னகையுடன் “சரி” என்று தலையசைத்தார்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!