Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 10

மோதிரத்தை அணிந்தவுடன் விக்ரமின் மூளைக்குள் காட்சி மின்னல்கள் வெட்டின.

 

விக்ரம் அந்தப் பிரவாகத்தில் தன்னை இழந்துவிடாமல் நிறுத்திக்கொள்ள முயன்றான்.

 



Advertisement

ஏதேனும் ஒரு காட்சியில் மனத்தை ஒருமுகப்படுத்தப் போராடினான்.

 

விக்ரமின் உடல் நடுங்குவதையும் கால்கள் தள்ளாடுவதையும் பார்த்து அருணும் செழியனும் அவனை நெருங்கிப் பிடித்துக்கொண்டனர்.

Advertisement

 

Advertisement

விக்ரமின் போராட்டம் தீவிரமானது. தன்னால் இதைத் தாங்க இயலாது என்று அவன் முடிவுகட்டிய நொடி சட்டென அது அடங்கியது. ஒரே ஒரு காட்சி மனத்தில் நிலைபெற்றது.

 

அவள் இவனது காலடியில் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

Advertisement

 

“எழுந்திரு மதனா… மஞ்சத்தில் என்னருகில் உட்கார், வா…”

 

விக்ரம் வற்புறுத்தினான். அவள் “வேண்டாம்” என்று நாணத்தோடு தலையாட்டினாள்.

 

“அடம் செய்யாதே மதனா… நீ எழவில்லை என்றால் நானும் கீழே அமர்ந்துகொள்வேன்…”

 

விக்ரம் பொய்யான கோவத்தோடு கொஞ்சலாகச் சொன்னான்.

 

அவள் பெரும் தயக்கத்துடன் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவளது அகண்ட கண்கள் தீட்டப்பட்டிருந்த அஞ்சனத்தினால் இன்னும் நீண்டு அகண்டு தெரிந்தன. குளிர்ந்த நீல நிறத்தில் அவளது இரு கண்களும் ஒரு பெருங்கடலைப் போலத் தோன்றின.

 

கண்களுக்கு மேல் அழகாய் வளைந்த புருவங்கள் மலைகளைப் போலவும், அவற்றின் நடுவே அவள் இட்டிருந்த சிவந்த திலகம் அம்மலைகளுக்கு இடையில் மாலையில் கடலில் இறங்கும் அந்திச் சூரியனைப் போலவும் தோன்றியது விக்ரமிற்கு.

 

அவள் கண்களைக் காணக் காணத் தான் அதில் கரைந்து கலந்துவிட வேண்டும் என்று தோன்றியது.

 

“தேவி…” விக்ரம் ஆசையுடன் அழைத்தான்.

 

சட்டென அவனது நிலை மாறியது.

 

தலையை உதறிக்கொண்டு கண்களைத் திறந்தவன் முன் அவர் பளிச்சென்ற கவர்ச்சியான புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார்.

 

அவரை அடையாளம் கண்டுகொள்ள விக்ரமிற்கு ஒரு நொடி ஆயிற்று,

 

“வராகமிகிரர்!”

 

“ஆம் விக்ரமா… ஒரு வழியாக உன் கணையாழியைக் கைவிரலில் அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாய்… மகிழ்ச்சி!”

 

அவர் ஆசிர்வதிப்பதைப் போலக் கையை உயர்த்தினார்.

 

 

[the_ad id=”6605″]

 

விக்ரம் அனிச்சையாகக் கைகளைக் கூப்பி அவரை வணங்கினான்.

 

“நீங்க…”

 

விக்ரமின் முகத்தில் கேள்வியும் குழப்பமும் அப்பியிருந்தன.

 

”இந்தப் பட்டி என்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?”

 

அவரது குரலில் கிண்டல் இருந்தது. அவர் பட்டியைப் பார்த்த பார்வையில் ஒரு விரோதம் தெரிந்தது.

 

பட்டியும் அவரைக் கண்ணுக்குக் கண் பார்க்காமல் நெளிந்தான்.

 

“அது சரி, அவன் உன்னைப் பற்றியே உனக்கு முழுசாய்ச் சொல்லவில்லை… என்னைப் பற்றியா சொல்லப்போகிறான்! சரி விக்ரமா, இப்போதைக்கு என் வேலை குறைவு உன் வேலைதான் அதிகம்… நீ முதலில் உனது வாளை அடைய வேண்டும்”

 

அவர் பேசியபடியே செழியனைப் பார்த்து “சரியா?” என்பதைப் போலத் தலையசைத்தார், செழியனும் “சரி” என்று தலையசைப்பிலேயே பதில் சொன்னார்.

 

“சகர்கள் இப்படிக் கூட்டமாக வந்து உங்களைத் தாக்குவார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை… அவர்கள் தங்கள் நகர்வுகளைத் துரிதப்படுத்துகிறார்கள், நாமும் விரைந்து செயல்படுவதுதான் நல்லது…”

 

“அப்ப உடனே உஜ்ஜைனி போகனும்னு சொல்றீங்க?”

 

தேவி குறுக்கிட்டுக் கேட்டாள்.

 

வராகமிகிரர் அவளை வாஞ்சையுடன் பார்த்தார்.

 

“ஆம் அம்மா… நான் இங்கு வந்ததன் நோக்கம் ஒரு முக்கிய தகவலை உங்களுக்குச் சொல்வதுதான்…”

 

வராகமிகிரரின் பார்வை தரையைத் துழாவியது. அவரது பார்வை நின்ற இடத்தை அனைவரும் கவனித்தனர்.

 

“இவற்றைப் பத்திரமாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பயணத்தில் இவை கட்டாயம் தேவைப்படும்…”

 

அவர் அங்குக் கிடந்த ஈட்டிகளையும் குறுவாள்களையும் அம்புகளையும் சுட்டிக்காட்டினார்.

 

சகவீரர்களை அவர்கள் கொண்டு வந்த இந்த ஆயுதங்களால் மட்டுமே கொல்ல முடிந்தது என்பது தேவிக்கும் நினைவிற்கு வந்தது. அப்போதுதான் அவள் இன்னொன்றையும் கவனித்தாள்.

 

இவர்கள் கைபட்ட ஆயுதங்கள் தவிர மற்றவை அந்த வீரர்களோடே மறைந்து போயிருந்தன!

 

”ஆம்… உங்கள் கைபட்டதால் இவை உங்களுடையவை! எனவேதான் இவை மறையவில்லை!”

 

அவளது எண்ணத்தைப் படித்தவர் போல தெளிவாய்ப் பதில் சொன்னார்.

 

“சீக்கிரம் போகனும்னா-”

 

அருண் சொல்லிமுடிக்கும் முன் வராகமிகிரர் இடைவெட்டினார்,

 

“விமானம் வேண்டாம்! தொடர்வண்டியிலேயே செல்லுங்கள்… அதுதான் நல்லது!”

 

[the_ad id=”6605″]

 

வராகமிகிரர் மீண்டும் செழியனைப் பார்த்துத் தலையசைக்க அவரும் பதிலுக்குத் தலையசைத்தார்.

 

பட்டி ஏதோ சொல்ல வந்து வராகமிகிரர் அவனைக் கவனித்ததும் மௌனமானான்.

 

“எச்சரிக்கையாக இரு விக்ரமா…” வராகமிகிரர் பட்டியைப் பார்த்தபடியே சொன்னார்.

 

“மீண்டும் சந்திப்போம்!”

 

கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்துவிட்டுக் கடகடவெனத் திரும்பி நடந்தார்.

 

அவர் போகும்வரை அனைவரும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். வராகமிகிரர் செல்லும்போதே பட்டியும் தனக்கான அறைக்குள் சென்றான்.

 

“அருண் நீ போய் உஜ்ஜைனிக்கு டிக்கெட் போடு, நாளைக்குச் சாயங்காலம் ஜெய்ப்பூர் எக்சுபிரசுல…”

 

செழியன் அருணுக்குக் கிட்டத்தட்ட ஆணையிட்டார்.

 

அவன் இலேசான கோவத்தோடு அவரை முறைக்க விக்ரம் “செய்” என்று அவனுக்குக் கண்ணால் சொல்லி அனுப்பினான்.

 

“இவ்ளோ பெரிய ஈட்டி, வாளைலாம் எப்படி டிரெயின்ல கொண்டு போறது?”

 

விஷாலி சிந்தனையோடு கேட்டாள்.

 

“அதான… என்னதான் நான் போலிசுனாலும் இதைலாம் என்னனு சொல்லி எடுத்துப் போக முடியும்?”

 

தேவியும் அவளோடு சேர்ந்துகொண்டாள்.

 

“கவலையே படாதீங்க, இதைலாம் கொண்டு போக நான் ஏற்பாடு பன்றேன்… இப்ப இதுலாம் ஆயுதம் இல்ல ஆர்டிபேக்ட்ஸ்! தொல்பொருள்! ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு போறோம்னு சொல்லிடுவோம், நான் டிபார்ட்மெண்ட்ல பேசி அனுமதி வாங்கிக்குறேன்…”

 

செழியன் நம்பிக்கையுடன் சொன்னார்.

 

“சரி விக்ரம் நீங்க ஓய்வெடுங்க, காலைல கிளம்புறதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சிடுங்க, நானும் போய்ட்டுச் சில வேலைலாம் முடிச்சுட்டு நாளைக்கு மதியாணமா வரேன்…”

 

செழியன் கிளம்ப விக்ரம் அவரைத் தடுத்து நிறுத்தினான்.

 

“இதைக் கைல வெச்சுக்கோங்க!”

 

விக்ரம் அவரிடம் ஒரு சகர் வாளை எடுத்துக்கொடுத்தான்.

 

“எனக்கு இது தேவைப்படாது, அப்படியேனாலும் இப்படி நாப்பது அம்பது பேர் வந்தங்கான்னா இது இருந்தாலும் ஒன்னுதான் இல்லாட்டியும் ஒன்னுதான், இது இங்கயே இருக்கட்டும்… நீங்க இதைலாம் பேப்பர்ல சுத்திக் கட்டிவைக்கச் சொல்லுங்க… நாளைக்குப் பார்ப்போம்!”

 

செழியன் அங்கிருந்து புறப்பட்டார்.

 

“இவர்கிட்ட ஏதோ இரகசியம் இருக்கு…”

 

தேவி சிந்தனையோடு செழியனைப் பார்த்தபடியே மெள்ளச் சொன்னாள்.

 

“ஆமா தேவ்ஸ், இவங்கள்ல யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாதுனே தெரியமாட்டேங்குது!”

 

விஷாலி தேவியின் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

 

”செழியனைத் தேடி நாமலாத்தான் போனோம், பட்டிதான் தானா நம்மளைத் தேடி வந்தவன்…”

 

விக்ரம் வீட்டின் உள்பக்கம் பார்த்தபடி சொன்னான்.

 

“ச்ச… பட்டியப் பார்த்தா ரொம்ப நல்லவனா தெரியுதுண்ணா… எப்பவும் கொஞ்சம் பயந்த மாதிரியே நிப்பான், அப்பாவியா இருக்கான்! நான் சத்தமா பேசினாக்கூட பயந்துடுவான் போல!”

 

விஷாலி பரிவுடன் சொன்னாள்.

 

“ம்ம்ம்…”

 

விக்ரம் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டான். தேவியைப் பார்த்து ’நீ என்ன சொல்ற?’ என்பதைப் போலப் புருவத்தை உயர்த்தினான்.

 

“இரண்டு பேருமே நமக்கு அவ்வளவா பழக்கமில்லாதவங்க… இரண்டு பேர்கிட்டயுமே எச்சரிக்கையா இருப்போம்! அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போறாரே அந்த சாமியார், அவர்கிட்டயும் ஜாக்கிரதையா இருக்கனும்!”

 

தேவியின் குரலில் கண்டிப்போடு கிண்டலும் கொஞ்சம் கலந்திருந்தது.

 

“டிக்கெட் போட்டாச்சு… அடுத்து உஜ்ஜைனில தங்க ஏற்பாடு செய்யனும்… வண்டி வேற தேவைப்படும்ல?”

 

அருண் அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டே வந்தான்.

 

“அதெல்லாத்தையும் நீயே கவனிச்சுக்கோ அருண்! இந்த ஆயுதத்தைலாம் பொட்டலம் கட்டச் சொல்லனும்…”

 

விக்ரம் இல்ல மேலாளரை அழைத்துப் பேசினான்.

 

“அருண், நான் இன்னிக்கு இங்கயே தங்கலாம்னு இருக்கேன், நீயும் இங்கயே இருக்குறது நல்லதுனு படுது எனக்கு!”

 

தேவி அருணிடம் சொல்ல அவன் “சரி” என்று தலையசைத்தான்.

 

“எனக்கு இங்க தங்குறது ஒன்னும் புதுசில்ல, மாசத்துல பாதிநாள் நான் இங்கதான் இருப்பேன், எங்க வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லனும்னு கூட தேவையில்ல அவங்களே புரிஞ்சுப்பாங்க!”

 

“ஆமாமா, ஓசில சாப்பாடும் தண்ணியும் கிடைக்குதுனு இங்கயேதான் இருப்பான்!”

 

விஷாலி கிண்டலாகச் சொன்னாள். அருண் அவளை அடிப்பவனைப் போலக் கையோங்க அவள் தேவியின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.

 

“ரெண்டு பேரும் என்னை ஆளைவிட்டீங்கன்னா நல்லது!”

 

தேவி நகர்ந்துகொண்டாள்.

 

அன்றிரவு விக்ரமுடன் அருணும் விஷாலியுடன் தேவியும் தங்கினர்.

 

எந்தச் சிக்கலும் இன்றி இரவு கழிந்தது.

 

[the_ad id=”6605″]

 

மறுநாள் மதிய உணவுவரை பயணத்திற்கான ஏற்பாடுகளில் கழிந்தது. தேவி தனது பணியாள் மூலம் தனக்குத் தேவையான உடைகளையும் பொருள்களையும் விக்ரம் வீட்டிற்குக் கொண்டு வரச் செய்திருந்தாள். அருணின் பாதி உடைகளும் பொருள்களும் விக்ரம் வீட்டிலேயேதான் இருந்தன!

 

செழியன் மதிய உணவுக்கு அவர்களோடு கலந்துகொண்டார். அவரும் ஒரு சிறிய பெட்டியும் ஒரு பெரிய பெட்டியுமாக வந்திருந்தார்.

 

மேலும் அவர் உஜ்ஜைனி பற்றியும் அங்கிருக்கும் காளி கோயில்கள் அரண்மனைகளைப் பற்றியும் சில குறிப்புகள் கொண்டு வந்திருந்தார்.

 

உணவின் போது அவற்றை இவர்களுக்குச் சொல்லி விளக்கினார்.

 

பட்டி மிகுந்த ஆர்வத்தோடு செழியனின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் சொல்வதை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டான்.

 

உணவிற்குப் பின் தேவி காவல்துறை ஆணையரைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள்.

 

அனைவரும் சிறிது நேரம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர். விஷாலி தனது உடைகளைத் தேர்வு செய்ய உதவ வேண்டும் என்று அருணை அழைத்துக்கொண்டு சென்றாள்.

 

விக்ரம், செழியன், பட்டி மட்டும் இருக்க விக்ரம் செழியனிடம் விக்ரமாதித்யர் பற்றிக் கேள்விகள் கேட்டான்.

 

“விக்ரமாதித்யரோட வாள் பத்திச் சொல்லுங்க சார்?”

 

“அவரோட வாள் பத்தி அதிகமா குறிப்புகள் இல்லை விக்ரம்… அன்னிக்கு அருங்காட்சியகத்துல காட்டினேன்ல அது ஒன்னுதான் எனக்குத் தெரிஞ்ச குறிப்பு! அது கூட “மன்யாக்னி”ன்ற பேரைக் கேட்ட பிறகுதான் அந்தச் “சினத்தீ”ன்றது இந்த வாள் பெயரா இருக்கலாம்னு தோனிச்சு! நமக்குத் தெரியாம இந்த மாதிரி எத்தனை குறிப்பு இருக்கோ!”

 

“ம்ம்ம்… அவர்கிட்ட வேறென்ன இந்த மாதிரி சிறப்பு பொருள்லாம் இருந்துச்சு?”

 

“வேதாளம்! விக்ரமாதித்யர்னா அடுத்து நம்ம நினைவுக்கு வரது வேதாளம்தானே?”

 

“வேதாளம்னா? அது பேய் மாதிரியா, இல்ல…?”

 

“கிட்டத்தட்ட! ஆனா, சில குறிப்புகள்ல “வேதாளப் பட்டன்”னும் இருக்கு, விக்ரமாதித்யரின் அவையில் ஒன்பது தலைசிறந்த நபர்கள் இருந்தாங்க – நவ ரத்தினங்கள் – அவங்கள்ல ஒருத்தரா வேதாளப் பட்டனும் குறிக்கப்படுறார்… அதனால், வேதாளம் மனுஷனாவும் இருக்கலாம்!”

 

“ஓ…”

 

பட்டியும் இவர்கள் பேச்சைக் கவனித்துக்கொண்டு இருந்தான்.

 

“அப்புறம்?”

 

விக்ரம் கதை கேட்கும் ஆர்வத்தில் இருந்தான்.

 

“ம்ம்ம்… ஆங்- விக்ரமாதித்யரோட சிம்மாசனம் சக்திவாய்ந்தது! அது இந்திரன் அவருக்குப் பரிசா கொடுத்தது…”

 

செழியன் சொல்லும்போதே விக்ரமின் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிந்தது. அவன் அந்தச் சிம்மாசனத்தின் மீதுதான் அமர்ந்திருந்தான். வரிசையாகப் படிகள். படிக்கு ஒன்றாக ஒரு பதுமை நின்றுகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒரு எழிலோடு, கையில் சாமரம், குடை, விளக்கு என்று ஒரு மங்கலச் சின்னத்தோடு ஒய்யாரமாய் நின்றன.

 

முப்பத்திரண்டு படிகள். முப்பத்திரண்டு பதுமைகள்.

 

[the_ad id=”6605″]

 

“மன்னா…”

 

விக்ரமிற்கு அருகில் முப்பத்திரண்டாவது படியில் கையில் பூர்ணகும்பத்துடன் நின்ற அந்தப் பதுமை சிணுங்கலோடும் பொய்யான கோவத்தோடும் விக்ரமை அழைத்தது. நான்கடியே இருந்த அதன் சினமும் சிணுங்கலும் விக்ரமிற்கு மிகவும் பிடித்தன. ஒரு குழந்தையைப் பார்க்கும் வாஞ்சையுடன் அதைப் பார்த்தான்.

 

“ரத்னாங்கி…”

 

“விக்ரம்?”

 

செழியனின் அழைப்பில் விக்ரம் நனவிற்கு மீண்டான்.

 

“சார்… அந்தச் சிம்மாசனம் இப்ப எங்க இருக்கு?”

 

விக்ரம் ஒருவித பரப்பரப்புடன் கேட்க, செழியன் கடகடவென நகைத்தார்.

 

“முதல்ல வாளைத் தேடிக் கண்டுபிடிப்போம் விக்ரம்!”

 

“நாங்க தயார்!”

 

விக்ரம் பதில் சொல்வதற்கு முன் விஷாலியின் குரல் கேட்டது.

 

விஷாலி குதூகலமாய் இருந்தாள். இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அண்ணனோடும் அருணோடும் தேவியோடும் பயணம் போகிறோம் என்ற உற்சாகம்தான் அவளிடம் மேலோங்கி இருந்தது!

 

“தேவி இன்னும் வரலயா?”

 

அருண் கேட்டபடியே செழியனைப் பார்த்து ஏதோ சமிஞ்சை செய்தான்.

 

”வந்துடுவா, கிளம்பிட்டேன்னு எனக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே செய்தி அனுப்பினா!”

 

”நீ ஒருவாட்டி மேனேஜர்கிட்டலாம் பேசிடு விக்ரம். நாம கிளம்பத் தயார் ஆவோம். 5.40-க்கு வண்டி!”

 

அருண் அவர்களைத் துரிதப்படுத்தத் தொடங்கினான்.

 

விக்ரமும் தலையாட்டிவிட்டுக் கைப்பேசியுடன் எழுந்து சென்றான்.

 

விக்ரம் பேசிவிட்டுத் திரும்பி வந்தபோது தேவியும் வந்திருந்தாள். அவளோடு இரண்டு பேர் வந்திருந்தனர்.

 

“இவரு இன்சுபெக்டர் தேவராஜ், இவர் இன்சுபெக்டர் சத்தீஷ், எங்க கமாண்டோ குழுல இருக்குறாங்க, மேலே காம்பேட் (melee combat – அருகாமை / கைச் சண்டை) எக்ஸ்பெர்ட்ஸ்…”

 

தேவி அவர்களை அறிமுகப்படுத்தினாள்.

 

“இவங்களும் நம்ம கூட வராங்க! நான் இவங்களுக்குச் சக வீரர்களைப் பத்திச் சொல்லிருக்கேன்…”

 

தேவி சொல்லிவிட்டு அருகில் தாளில் போட்டலம் கட்டப்பட்டிருந்த ஆயுதங்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினாள்.

 

“இதெல்லாம் அவசியந்தானா?”

 

விக்ரம் சிந்தனையுடன் கேட்க,

 

“நான் வெறும் இரெண்டு பேர்தானானு கேட்க நெனச்சேன்… நீ அவசியமான்னு கேக்குற?”

 

அருண் பதில் கேள்வி கேட்டான்.

 

”சரி சரி…”

 

விக்ரம் சமாதானமானான்.

 

“இவங்களுக்கு டிக்கெட்டு?”

 

விஷாலி தேவியைப் பார்த்துக் கேட்கத் தேவி அருணைப் பார்த்தாள்.

 

“போட்டாச்சு! ரெண்டு டிக்கெட் கூடுதலாப் போடச் சொல்லி தேவி முன்னாடியே சொல்லிட்டா!”

 

“ஓ, மேடம் எங்கக்கிட்டலாம் சொல்லாம தனியாவே பிளான் போடுறீங்களோ?”

 

“போட்டா என்ன தப்பு? இங்க நீ போலிசா நான் போலிசா?”

 

தேவி பொய்யான முறைப்போடு விக்ரமை எதிர்க்க அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

 

அவர்கள் பேசி முடித்து இரண்டு மகிழுந்துகளில் கிளம்பி சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கடந்து சென்னை செண்டரல் இரயில் நிலையத்தை வந்தடைய சரியாக மாலை ஐந்து மணியானது.

 

ஜெய்ப்பூர் விரைவுவண்டி இவர்களுக்காகவே காத்திருப்பதைப் போல நடைமேடையில் நின்று கொண்டிருந்தது.

 

குளிர்சாதனப் பெட்டியை அடைந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

குளிர்சாதனப் பெட்டியில் ஒரு சிற்றறைக்கு (கேபின்) நான்கு இருக்கைகளே இருந்தன. ஒரு சிற்றறையில் விக்ரம், தேவி, செழியன், ஆய்வாளர் சத்தீஷ் ஆகியோரும், சற்றுத் தள்ளி இருந்த இன்னொரு சிற்றறையில் அருண், விஷாலி, பட்டி, ஆய்வாளர் தேவராஜும் அமர்ந்துகொண்டனர்.

 

வண்டி சரியாக 5.40-க்குக் கிளம்பியது.

 

அவர்களது பயணம் எந்தச் சிக்கலும் இன்றி அமைதியாகச் சென்றது.

 

விஷாலி தேவராஜைக் கேள்விகளால் துளைத்தெடுத்தாள் அவர் படிப்பு, வேலைக்குச் சேர்ந்தது, காவல்துறை பயிற்சி, கமாண்டோ சிறப்புப் பயிற்சி, அவர் பங்கேற்ற தாக்குதல்கள் என்று அவரைப் பேட்டி எடுப்பவள் போலக் குடைந்தாள். அவரும் தட்டவும் முடியாமல் தப்பிக்கவும் முடியாமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார். அருண் அதை வெகுவாக இரசித்துக்கொண்டு வந்தான்.

 

விக்ரம் இருந்த அறையில் செழியன் தேவிக்கு விக்ரமாதித்யரைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார்.

 

ஒன்பது மணியளவில் வண்டி தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திர மாநில எல்லைக்குள் நுழைந்தது.

 

செழியன் தேவியின் பேச்சு விக்ரமிற்கு அலுப்புத்தட்டியது. மேலும் முந்தைய தினங்களின் அசதியும் குளிர்சாதனத்தின் சுகமும் சேர்ந்துகொள்ள அவன் அமர்ந்தபடியே உறங்கினான்.

 

விக்ரமின் கனவில் அந்த அழகானப் பெண் வந்தாள்.

 

அவளது அந்த அகண்ட நீல விழிகளையே இரசித்துக்கொண்டிருந்தவன் அவளது முழு முகத்தின் அழகையும் இரசிக்க எண்ணிச் சற்றுப் பின்னால் நகர்ந்தான்.

 

அவளது முகம் தேவியின் முகமாகத் தெரிந்தது.

 

“தேவி…” “மதனா…”

 

விக்ரமின் மனத்தில் அந்த இரு பெயர்களும் மாறி மாறி ஒலிக்க அவன் மெல்லிய குழப்பத்தில் ஆழ்ந்தான்.

 

”விக்ரம்… விக்ரம்…”

 

செழியன் அவனை அவசரமாக உலுக்கி எழுப்பினார்.

 

“விக்ரம் எழுந்திரு… அபாயம்! எழுந்திரு விக்ரம்…”

 

விக்ரம் கண் திறந்தபோது செழியன் பரபரப்பாக இருந்தார்.

 

அவர்களின் சிற்றறையில் தேவியும் சத்தீஷும் இல்லை. வண்டி நின்றிருந்தது.

 

“விளக்கமா சொல்ல இப்ப நேரமில்ல விக்ரம்… நாம் உடனே இறங்கனும், எழுந்திரு வா…”

 

செழியன் அவனைத் துரிதப்படுத்தினார். விக்ரம் எழுந்துகொண்டான்.

 

செழியன் தனது சிறிய பெட்டியையும் ஒரு ஈட்டிப் பொட்டலத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறினார். விக்ரமும் தனது கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்தான்.

 

“என்ன சார் ஆச்சு? ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்கீங்க? மத்தவங்கலாம் எங்க?”

 

”வண்டிக்குள்ள சகவீரர்கள் எக்கச்சக்கமா இருக்காங்க விக்ரம்! மத்தவங்களாம் இறங்கிட்டாங்க, நாமளும் இறங்கிடுவோம்…”

 

செழியன் அவனைப் பரபரப்போடு இறக்கிக் கூட்டிச் சென்றார். விக்ரமிற்கு எதுவும் பிடிபடவில்லை, அவசரத்தில் எதுவும் புரியவில்லை, செழியனைப் பின் தொடர்ந்தான்.

 

அவர்கள் இறங்கிய சில நொடிகளில் வண்டி மீண்டும் புறப்பட்டது.

 

விக்ரம் நகரும் வண்டியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனைக் கடந்து சென்ற பெட்டியின் அந்தக் கண்ணாடிச் சன்னலுக்குள் இருந்த திரைச்சீலை மெல்ல விலக, விக்ரம் அதைக் கவனித்தான்.

 

உள்ளே விஷாலியும் அருணும் தங்கள் சிற்றறையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

 

“சார்…”

 

என்று விக்ரம் செழியனை நோக்கிப் பின்னால் திரும்ப, அவர் கையில் ஒரு குறுவாளுடன் நின்றிருந்தார்.

 

விக்ரம் எதுவும் பேசுவதற்குமுன் அவர் சட்டென அந்தக் குறுவாளை அவனது இடது தோளில் ஊசி போலக் குத்தினார்.

 

விக்ரம் மெள்ள நிலைகுலைந்து மயங்கி விழுந்தான்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!