Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 11 (Final of Part-1)

விக்ரம் கண்விழித்த போது தலை மிக கனமாய் இருப்பதாய் உணர்ந்தான்.

 

முதலில் சில நொடிகள் அவனுக்கு எதுவும் புரியவில்லை, பின் மெள்ள தொடர்வண்டியில் சென்றதும், இருட்டில் அவசர அவசரமாக இறங்கியதும் நினைவிற்கு வந்தன.

 



Advertisement

செழியன்! செழியன்தான் எழுப்பி அழைத்துச் சென்றார்.

 

விக்ரம் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவன் இருந்த அறை சிறியதாய் இருந்தது. அறையின் முக்கால்வாசி அவன் இருந்த கட்டிலே நிறைத்திருந்தது. அது ஒரு சுமாரான தங்கும் விடுதியின் அறை என்பதை உணர்ந்துகொண்டான்.

Advertisement

 

Advertisement

அருகில் இருந்த மேசையில் புதிய தண்ணீர் புட்டி வைக்கப்பட்டிருந்தது. விக்ரம் அதன் “சீல்”ஐ உடைத்துத் திறந்து ஒரு மடக்கு தண்ணீர் குடித்தான்.

 

சட்டென அவனுக்கு விஷாலியின் நினைவு வந்தது.

Advertisement

 

’விஷாலியும் அருணும் டிரெயின்லயே இருந்தாங்களே? இப்ப எங்க இருப்பாங்க?’

 

விக்ரமின் மனக்கண்ணில் தொடர்வண்டியின் சன்னல் வழி பார்த்த காட்சி தோன்றியது – விஷாலியும் அருணும் அமைதியாக தங்கள் “பெர்த்”தில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

 

“கிளம்பியாச்சா?”

 

அறைக்கு வெளியே செழியனின் குரல் கேட்டது.

 

[the_ad id=”6605″]

 

விக்ரமிற்கு அவர் மீது ஆத்திரம் பொங்கியது. சட்டென இடதுதோளில் எறும்பு கடித்தது போல ஒரு வலி – செழியன் அவனைக் குறுவாளால் குத்தியது நினைவிற்கு வந்தது. விக்ரமின் வலதுகை அனிச்சையாக இடது தோளை வருடியது. விக்ரம் சட்டையை விலக்கிப் பார்த்தான், அங்கு கத்தி குத்தியதற்கான அடையாளம் எதுவும் இல்லை! வலி கூட தனது கற்பனைதான் என்று தோன்றியது!

 

செழியன் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்?

 

“முதல்ல கீழ போய்ச் சாப்பிடுவோம், அப்புறம் விக்ரமை எழுப்பி அவன் நிலைமையை அவனுக்குச் சொல்லனும்… நீதான் அந்த வேலையச் செய்யனும்…”

 

செழியனோடு பேசியவரின் குரல் சரியாகக் கேட்கவில்லை.

 

”விக்ரம் என் மேல கோவமா இருப்பான்மா, நான் சொன்னா கேட்டுக்கமாட்டான், என்னை இப்ப நம்பவும்மாட்டான்… நீதான் பேசனும் அவன்கிட்ட!”

 

“சார், பண்றதுலாம் நீங்க, நான் போய் பேசனுமா?”

 

சற்றே கோவத்துடன் உரக்கப் பேசியதில் அவளின் குரல் விக்ரமிற்குக் கேட்டது. தேவி!

 

தேவியா? இவளும் செழியனும் சேர்ந்துதான் என்னை இங்கே கொண்டு வந்தார்களா? ஏன்?

 

விக்ரம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அறையின் கதவு திறந்து ஒரு பையன் உள்ளே வந்தான்.

 

விக்ரம் அமர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தவுடன் “சல்யூட்” செய்தான்,

 

“குட் மானிங்கு சாஅர்… ஏமைன்னா காவாலியா சாஅர்?”

 

விக்ரமிற்கு அவன் பேசியது தெலுங்கு என்று புரிய சில நொடிகள் ஆயின.

 

“நாம– இதி எக்கட?” என்றான் அவசரத் தெலுங்கில்.

 

“ஹனுமந்தா ஹோட்டல் சாஅர்… ட்ரீ ஸ்டாரு… அன்னி வராங்கல்லோ பெஸ்ட்டு ஹோட்டலு சாஅர்!”

 

”ஓ, எழுந்தாச்சா விக்ரம்?”

 

பையன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே செழியன் உள்ளே வந்தார்.

 

”விக்ரம்…”

 

அவர் பின்னாலேயே தேவியும் வந்தாள்.

 

”மிஸ்டர் செழியன், என்ன இதெல்லாம்? ஏன் என்னை மயக்கம்போட வெச்சுக் கூட்டிட்டு வந்தீங்க? விஷாலியும் அருணும் எங்க? தேவி, நீகூட என்கிட்ட சொல்லாம இவரோட சேர்ந்து திட்டம் போடுறியா? என்ன நடக்குது இங்க?”

 

விக்ரம் படபடவெனப் பொறிந்துதள்ளினான்.

 

”நேனு தருவாதா ஒஸ்தானு, சாஅர்…”

 

பையன் இலேசாய் பயந்து நழுவிக்கொண்டான்.

 

”கோவப்படாத விக்ரம், கொஞ்சம் அமைதியா இரு… நாங்க எல்லாத்தையும் விளக்குறோம்…”

 

தேவி அவனருகில் அமர்ந்துகொண்டாள். அவனது தோளில் கைவைக்க வந்தவளை விக்ரம் இலேசான எரிச்சலோடு தட்டிவிட்டான்.

 

தேவி திரும்பிச் செழியனைப் பார்த்து முறைத்தாள்.

 

செழியன் அசராமல் மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தார்.

 

“உன்கிட்ட சொல்லாம உன்னை இப்படி இங்க கூட்டிட்டு வந்தது தப்புதான், மன்னிச்சுடு! ஆனா, உன்கிட்ட விளக்கமா சொல்லிக் கூட்டிட்டு வரா மாதிரி நிலைமை இல்ல, அதான் இப்படிப் பண்ண வேண்டியதாயிடுச்சு…”

 

“என்ன சார் நிலைமை கிலைமைன்னுட்டு… இப்ப விஷாலியும் அருணும் எங்க? முதல்ல அதைச் சொல்லுங்க!”

 

விக்ரம் சமாதானம் ஆவதாக இல்லை.

 

[the_ad id=”6605″]

 

“அவங்க பத்திரமா இருக்காங்க விக்ரம்… திரும்பிச் சென்னைக்குப் போயிட்டிருப்பாங்க, இன்சுபெக்டர் தேவராஜ் அவங்க கூடவே இருப்பார், சென்னைக்குப் போனதும் அவங்க செக்யூரிட்டிய அதிகப்படுத்தச் சொல்லிருக்கேன்…”

 

தேவி மெல்லிய குற்றவுணர்ச்சியோடு விக்ரமைப் பார்த்தாள்.

 

“உங்க செக்யூரிட்டிலாம்-”

 

“எல்லா விவரமும் தேவராஜ்க்குத் தெரியும்… சகவீரர்களோட ஆயுதங்களைத்தான் வெச்சுப்பாரு அவரு… நீ கவலைப்படாத!”

 

”அப்படி என்னத்தான் நிலைமை? சொல்லித் தொலைங்க!”

 

விக்ரமின் குரலில் இருந்த எரிச்சலைப் பார்த்துவிட்டுத் தேவி கட்டிலைவிட்டு எழுந்துகொண்டாள். ’நீங்களே சொல்லுங்க!’ என்பதைப் போலச் செழியனை முறைப்போடு பார்த்தாள்.

 

“இப்போதைக்கு என்னை நம்பு விக்ரம், நான் பொறுமையா உனக்கு விளக்கம் தரேன்… இப்ப நாம சீக்கிரமா கிளம்புறது நல்லது!”

 

”என்னைக் கத்தியால குத்திட்டு ’என்னை நம்பு’னு சொல்றீங்க? எப்படி முடியும் செழியன்?”

 

விக்ரம் சட்டையை விலக்கி இடது தோளைக் காட்டினான். அங்குக் கத்திக்குத்திற்கான அடையாளம் இல்லை. செழியன் பெரிதாகச் சிரித்தார்.

 

விக்ரமின் எரிச்சல் அதிகமானது அவன் முகத்தில் தெரிந்தது.

 

“நீ என்னை நம்புவியா மாட்டியா, விக்ரம்?”

 

தேவி கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு கேட்டாள்.

 

விக்ரம் எதுவும் சொல்லாமல் அவளை உற்றுப் பார்த்தான்.

 

பின் மெல்ல ’சரி’ என்று தலையை ஆட்டினான்.

 

”நல்லது! சரி, இப்ப விக்ரம் முழிச்சுட்டதால நாம அவனையும் கூட்டிட்டு வெளில போய்ச் சாப்பிடுறது நல்லதில்ல, இங்கயே வரவழைச்சு பிரேக்பாஸ்ட்ட முடிச்சுப்போம்…”

 

செழியன் யோசனையுடன் சொன்னார்.

 

”அத நான் பார்த்துக்குறேன், நீங்க முதல்ல விக்ரம்க்கு விளக்கம் சொல்லுங்க!”

 

தேவி கடுமையுடன் சொல்லிவிட்டு, விக்ரமைப் பார்த்து ’வரேன்’ என்று கண்ணால் பேசிவிட்டு அறையைவிட்டுச் சென்றாள்.

 

அவள் சென்றபின் அங்குச் சற்று நேரம் அமைதி நிலவியது.

 

பின் செழியன் தொண்டையைச் செறுமி அமைதியைக் குலைத்தார்.

 

“விக்ரம், நீ முதல்ல எழுந்து குளிச்சுக் கிளிச்சு தயாராகி வா… அப்புறம் நாம பேசலாம்!”

 

செழியன் சொல்லியபடியே அறையின் ஓரத்தில் சுட்டிக்காட்ட அங்கு விக்ரமின் சிறிய பெட்டி பெரிய பெட்டி இரண்டுமே இருந்தன.

 

விக்ரம் எதுவும் சொல்லாமல் செழியனை விரோதமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்துகொண்டான்.

 

பெரிய பெட்டியை எடுத்து அங்கிருந்த மேசைமேல் வைத்துத் திறந்தான். உள்ளிருந்து காலைக்கடன்களை முடிக்கத் தேவையான பொருள்களையும் ஆடைகளையும் எடுத்து வைத்தான். பற்பசை, பல்துலக்கி (பிரஷ்!), சவுக்காரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டு ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு அறையோடு இருந்த குளியலறைக்குள் சென்றான்.

 

விக்ரம் குளித்துமுடித்து வெளிவந்த போது செழியன் படுக்கையில் அமர்ந்து காப்பி குடித்துக்கொண்டிருந்தார்.

 

அவனுக்காகவும் ஒரு கோப்பைக் காப்பி ஆவிபறக்கக் காத்திருந்தது.

 

விக்ரம் எதுவும் பேசாமல் அந்தக் காப்பிக் கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

 

”விக்ரம்… இப்ப நாம வாராங்கல்-ல இருக்கோம்…”

 

செழியன் மெள்ளப் பேச்சைத் தொடங்கினார்.

 

“ம்ம்ம்… தெரியுது!”

 

விக்ரமின் குரலில் ஆர்வமின்மை தொனித்தது.

 

“விக்ரமாதித்யரோட வாள் இங்கதான் இருக்கு!”

 

செழியன் உறுதியான குரலில் சொன்னார்.

 

விக்ரமின் முகத்தில் சட்டென ஒரு வியப்புக்குறி தோன்றி மறைந்தது. ’எப்படி?’ என்ற கேள்வி இருந்தது அவன் பார்வையில்.

 

“மத்திய பிரதேசத்துல இப்ப இருக்குற உஜ்ஜைனி விக்ரமாதித்யர் கட்டிய உஜ்ஜைனி இல்ல! இங்க, இந்த இடம்தான் உண்மையான உஜ்ஜைனி…”

 

செழியன் சொன்னதும் விக்ரமின் வியப்பு அதிகரித்தது. கையில் இருந்த காப்பிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

 

செழியன் ஒரு மெல்லிய புன்னகையுடன் மேலே தொடர்ந்தார்.

 

”உஜ்ஜைனி மத்திய பிரதேசத்துல இருக்குனு ஆய்வாளர்களும் வரலாற்றாளர்களும் நம்ப வைக்கப்பட்டிருக்காங்க… உஜ்ஜைனி பத்தின முதல் ஆய்வு 1892-ல வந்துச்சு… ராபர்ட் ஸ்மித்-னு ஒரு வெள்ளக்கார அதிகாரி விக்ரமாதித்யர் கதைகளைப் படிச்சு ஆர்வம் வந்து உஜ்ஜைனியத் தேடினாரு, அவர் ஊகிச்ச இடம் ஆந்திரால இருக்குற இந்த ஊர்தான்… ஆனா, அவர் ஆய்வு வெளிவந்த அடுத்த ஆண்டே அது தவறு உஜ்ஜைனி மத்திய பிரதேசத்துலதான் இருக்குனு சில உறுதியான ஆதாரங்களோட வேறொரு ஆய்வு வெளிவந்துச்சு, இலக்ஷ்மன் சர்மா-ன்னு பம்பாய் யூனிவர்சிட்டி பேராசிரியர் ஒருவர் எழுதின ஆய்வு… அதுக்கப்புறத்துலேர்ந்து எல்லா ஆய்வும் தொல்லியல் தேடலும் மத்திய பிரதேசத்துலயேதான் நடந்துச்சு… இதுவரைக்கும் 16 பேர் உஜ்ஜைனி பத்தியும் விக்ரமாதித்யர் பத்தியும் பி.எச்.டி ஆய்வு செஞ்சிருக்காங்க…”

 

விக்ரம் ’இதைலாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க’ என்பதைப் போல ஆர்வமின்றி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

செழியன் அதைக் கவனிக்காதவர் போலத் தொடர்ந்தார்.

 

”அதனால, இதுதான் உஜ்ஜைனி, விக்ரமாதித்யரடோ வாள் இங்கதான் இருக்கு!”

 

“இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியும்?”

 

விக்ரம் கேட்டதற்குச் செழியன் ’ஆம்’ என்று தலையசைத்தார். அவன் அடுத்து என்ன கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்தவர் போலப் புன்னகைத்தார்.

 

”அப்புறம்-”

 

“அப்புறம் ஏன் கல்வெட்டு, மத்திய பிரதேசம்னு என்னை அலையவிட்டீங்க? அதான?”

 

விக்ரம் எரிச்சலுடன் ’ஆமாம்’ என்று தலையசைத்தான்.

 

“ஒரேயொரு காரணம்தான்…”

 

செழியன் நிமிர்ந்து விக்ரமைக் கூராகப் பார்த்தார், ”பட்டி!”

 

“பட்டி?”

 

[the_ad id=”6605″]

 

விக்ரம் எதுவும் புரியாமல் கேட்டான்.

 

”சாப்பிடலாமா?”

 

செழியன் பதில் சொல்லும்முன் கதவைத் திறந்துகொண்டு தேவி உள்ளே வந்தாள். அவளோடு ஆய்வாளர் சத்தீசும் வந்தார்.

 

விக்ரமைப் பார்த்ததும் சத்தீசு நட்புடன் புன்னகைத்தார். விக்ரமும் பதிலுக்குப் புன்னகைத்துத் தலையை ஆட்டினான்.

 

விக்ரம் செழியனைப் பார்க்க, அவர் சாப்பிடத் தயாரானார்.

 

“முதல்ல சாப்பிட்டுட்டுக் கிளம்புவோம், போற வழில மீதியச் சொல்றேன்…”

 

செழியன் தனக்கான உணவுப் பொட்டலத்தைப் பிரித்தபடியே சொன்னார்.

 

“ஆமா… கார் தயாரா இருக்கு… சாப்பிட்ட உடனே கிளம்பிடலாம்”

 

தேவி விக்ரமிற்கும் சத்தீசிற்கும் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொடுத்தபடியே சொன்னாள். பின் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.

 

நால்வரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டனர். தேவி அடிக்கடி வாஞ்சையுடன் விக்ரமைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் சன்னமாக ஒரு மன்னிப்புக் கோரும் பாங்கும் இருந்தது.

 

உண்டு முடித்ததும் அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பினர். மகிழுந்தில் ஏறும்போது பின்னால் அந்த ஆயுதப் பொட்டலம் இருப்பதை விக்ரம் கவனித்தான்.

 

சத்தீசுதான் வண்டியை ஓட்டினார். தேவி முன்னால் அமர்ந்திருக்க, விக்ரமும் செழியனும் பின்னிருக்கையில் இருந்தனர்.

 

“விக்ரமாதித்யர் ’நாடாறு மாதம் காடாறு மாதம்’னு மாத்தி மாத்தி அரசாண்ட கதையை உனக்குச் சொல்லிட்டேன்ல?”

 

செழியன் பேச்சைத் தொடங்கினார்.

 

“பட்டியப் பத்தி என்னவோ சொல்ல வந்தீங்களே, முதல்ல அதச் சொல்லுங்க!”

 

”பட்டிய நம்பக் கூடாது விக்ரம்!”

 

“உங்கள மட்டும் ரொம்ப நம்பலாமோ?”

 

“விக்ரம்!” தேவியின் குரலில் மெல்லிய அதட்டல் இருந்தது.

 

“இரு தேவி, நானே பேசிக்குறேன்!”

 

செழியன் சொல்லிவிட்டு விக்ரமை நோக்கிச் சற்றுத் திரும்பி அமர்ந்துகொண்டார்.

 

”என்னை நம்பலாமா வேண்டாமான்னு இன்னும் கொஞ்சம் நேரத்துல நீயே தெரிஞ்சுப்ப விக்ரம்! உன்னையும் விஷாலியையும் கொலை பண்ண நடந்த முயற்சியெல்லாம் பட்டியாலதான் நடந்துச்சுனு இப்ப நான் சொன்னாலும் உன்னால நம்ப முடியாம போகலாம்!”

 

விக்ரமால் உண்மையாகவே அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. ஆனால், வராகமிகிரரும் ’பட்டியை நம்பாதே’ என்று அன்று அவனை எச்சரித்தது நினைவிற்கு வந்தது. ஆனால், வராகமிகிரரே நம்பிக்கைக்குரியவரா என்று தெரியவில்லையே? அவ்வப்போது எங்கிருந்தோ வருகிறார், சட்டெனக் காணாமல் போய்விடுகிறார்! விக்ரமிற்கு எல்லாம் குழப்பமாக இருந்தன.

 

“பட்டிய கூட வெச்சிக்கிட்டு என்னால உங்கக்கிட்ட உஜ்ஜைனியோட உண்மையான இடத்தைச் சொல்ல முடியல… வாள் பத்தின விவரத்தையும் சொல்ல முடியல… அதனாலத்தான் அருங்காட்சியகம், மத்திய பிரதேசம்னுலாம் சொல்லி ஒரு போலியான திட்டம் போட்டேன்!”

 

விக்ரம் அவரையே தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“நாம எல்லாரும் இங்க வந்துட்டா பட்டியக் கழட்டிவிட முடியாது! அதனாலத்தான் விஷாலியையும் அருணையும் உஜ்ஜைனி போறா மாதிரி போகச் சொல்லிப் பட்டியையும் அவங்க கூட அனுப்பினேன்…”

 

“பட்டிய நம்ப முடியாதுனு சொல்லிட்டு விஷாலியையும் அருணையும் அவனோட ஏன் அனுப்பி வெச்சீங்க?”

 

விக்ரம் சற்றே கோவமாகக் கேட்டான்.

 

“விஷாலியும் அருணும் பட்டியோட இல்ல விக்ரம், அவங்க இப்ப சென்னைக்குப் போயிட்டு இருப்பாங்க…”

 

தேவி திரும்பிப் பார்த்துச் சொன்னாள்.

 

“ஆமா, நாம வாராங்கல்ல இறங்கினதும் அவங்கள அடுத்த நிறுத்தத்துல இறங்கச் சொல்லிச் சொல்லிட்டேன், அங்கேர்ந்து அவங்க கார்ல சென்னைக்குப் போறதுக்கான ஏற்பாட்டையும் முன்னாடியே பண்ணிட்டோம்… அதோட, வண்டில அவங்களுக்குப் பதிலா அவங்க இடத்துல இரெண்டு போலீஸ்காரங்க படுத்துக்கிட்டு இருப்பாங்க, தேவராஜ்க்குப் பதிலா இன்னொருத்தர்! பட்டிக்கு இன்னும் நாமலாம் அந்த வண்டில இல்லன்றதே தெரிஞ்சிருக்காது! அவன் மத்திய பிரதேசத்துல இருக்குற உஜ்ஜைனிக்கு ஜெப்பூர் எக்சுபிரசுல போய்ட்டு இருப்பான்!”

 

செழியன் விளக்கமாகச் சொன்னார்.

 

விக்ரமிற்கு ஒருபுறம் தெளிவானது போல் இருந்தாலும் இன்னொருபுறம் மேலும் குழப்பங்கள் அதிகரித்தன.

 

சட்டென விஷாலியைத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம் என்று தோன்ற உடனே தன் கைப்பேசி தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான்.

 

”நான் விஷாலிகிட்ட பேசனும், தேவி, கால் பண்ணிக்குடு!”

 

தேவி திரும்பி அவனைச் சங்கடத்துடன் பார்த்தாள். பின் அவளது பார்வை செழியன் மீது விழுந்தது. செழியன் விக்ரமிற்குப் பதில் சொன்னார்.

 

“வந்து… இப்ப விஷாலி நல்லாத் தூங்கிட்டு இருப்பா விக்ரம்-”

 

”தூக்கமா? மயக்கமா?”

 

தன்னைப் போல அவளையும் எதுவும் சொல்லாமல் மயக்கமடைய வைத்துதான் கொண்டு செல்கின்றனர் என்பதை விக்ரம் சட்டென உணர்ந்துகொண்டான். அருணும் இதற்கு உடந்தையா? விக்ரமிற்கு இப்போது அருண் மீதும் கோவம் வந்தது.

 

“வேற வழியில்ல விக்ரம்… சக வீரர்கள் உங்களைக் கண்டு பிடிக்குறது அந்த மோதிரத்தை வெச்சுதான்னு நான் நினைக்குறேன்… அந்த மோதிரத்துக்கும் உனக்கும் விஷாலிக்கும் உள்ள தொடர்பை அவங்களும் உணர்ந்துக்குறாங்க… அதனாலத்தான் என்னால உன்கிட்டயும் விஷாலிகிட்டயும் என்னோட திட்டத்தைச் சொல்ல முடியல… உங்கள மயக்கநிலைல கூட்டிட்டு வர வேண்டியதா இருந்துச்சு!”

 

செழியனின் விளக்கம் விக்ரமைச் சமாதானப்படுத்தவில்லை. அவன் செழியனைத் தவிர்த்துவிட்டு மீண்டும் தேவியைப் பார்த்தான்.

 

“அருணுக்காவது கால் பண்ணு!”

 

“முதல்ல வந்த காரியத்தை முடிச்சிடுவோம் விக்ரம்… அப்புறம் உனக்கே பல விஷயம் தெளிவாகும்!”

 

செழியன் கனிவோடு சொன்னார்.

 

”விக்ரம், உன்னால என்னையும் அருணையும் கூடவா நம்ப முடியாது?”

 

தேவியின் குரலில் இலேசான கடுமை இருந்தது.

 

விக்ரம் பதில் பேசாமல் தோளைக் குலுக்கிவிட்டு வண்டிக்கு வெளியே பார்வையைச் செலுத்தினான்.

 

வெளியே பெரும்பாலும் காலி இடமாகவே இருந்தது. தரை முழுக்க காட்டுச் செடிகளும், ஆங்காங்க சிறு சிறு சதுரமாக வயல்களும் தெரிந்தன.

 

[the_ad id=”6605″]

 

சாலையில் முன்னால் சற்றுத் தொலைவில் இருபுறமும் நீண்ட சிதைந்த மதில்சுவர் தெரிந்தது.

 

விக்ரம் அந்த மதில்சுவரையும் அதன் முடிவில் தெரிந்த சிறிய கோட்டையையும் பார்த்துக்கொண்டே வந்தான்.

 

வண்டி அந்த மதில்சுவரைத் தாண்டி விரைந்தது.

 

“உஜ்ஜைனி!”

 

செழியன் உற்சாகமாகச் சொன்னார்.

 

விக்ரம் திரும்பி அவரை முறைத்துவிட்டு மீண்டும் வெளியே பார்த்தான்.

 

வண்டி வாராங்கல் கோட்டைக்கு அருகே நின்றது. செழியன் இறங்கிச் சென்று அவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கினார்.

 

சத்தீசு வண்டியை நிறுத்திவிட்டு வரச் சென்றார்.

 

தேவியும் விக்ரமும் மட்டும் வாசலருகில் நின்றனர்.

 

கண்ணுக்கு முன் வெட்ட வெளியில் வாராங்கல் கோட்டையின் இடிபாடுகள் தெரிந்தன.

 

“கோட்டை எங்க?”

 

விக்ரம் கேட்டான்.

 

“இதான் கோட்டை! அதோ, அந்த நாலு தோரண வாயில் மட்டும்தான் முழுசா இருக்கும், மத்ததெல்லாம் உடைஞ்சுதான் கிடக்கும்… மொகலாயர்கள் கைவண்ணம், ஒன்னுவிடாம உடைச்சிருப்பாங்க!”

 

தேவி அந்தப் பெரிய மைதானத்தில் ஆங்காங்கு குவிந்திருந்த உடைந்த தூண்களையும், கோட்டைக் கற்களையும், மைதானத்தின் விளிம்பில் நான்கு திசையிலும் திசைக்கொன்றாய் அழகிய வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகச் சுமார் முப்படி உயரத்தில் நின்ற தோரண வாயில்களையும் காட்டிச் சொன்னாள்.

 

அவளது குரலில் வருத்தமும் கோவமும் கலந்து இருந்தன.

 

“உடைஞ்சதுலேர்ந்து பொறுக்கி எடுத்து ஒரு சின்னச் சிவன் கோயிலும் ஒரு மண்டபமும் கட்டி வெச்சிருக்காங்க, மத்த எதையும் ஒன்னும் பண்ண முடியல!”

 

செழியன் சொல்லியபடியே வந்து அவர்களோடு சேர்ந்துகொண்டார்.

 

“இங்க நம்மளத் தவிர யாருமே இல்ல போல?”

 

விக்ரம் அந்த இடம் காலியாக இருப்பதைக் கவனித்தான்.

 

“இன்னிக்கு வாரநாள், பகல் நேரம் வேற, கூட்டம் கம்மியாத்தான் இருக்கும்!”

 

தேவி சொல்லிக்கொண்டே நோட்டம்விட்டாள். கூட்டம் குறைவு என்று அல்ல, ஒருத்தருமே அங்கு இல்லை என்பதை உணர்ந்தாள். அதையே விக்ரமும் சொன்னான்.

 

“கூட்டம் கம்மியா இருந்தா பரவால்ல, யாருமே இல்லையே!”

 

”எல்லாம் நீ இங்க வரனும்னுதான் விக்ரம்!”

 

செழியன் புன்னகையுடன் சொன்னார். இருவரும் அவரைக் கேள்வியுடன் பார்த்தனர்.

 

“மாகாளியின் சித்தம்!” என்று கண்ணை மூடிக் கைகளை நெஞ்சுக்கு அருகே குவித்து வணங்கினார்.

 

”சரி போலாமா?” கண்களைத் திறந்தபடிக் கேட்டார்.

 

“சத்தீஷ் வந்துரட்டுமே…”

 

தேவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே சத்தீஷ் அவர்களை நோக்கிப் பரபரப்புடன் ஓடி வருவதைக் கவனித்தாள்.

 

”என்ன ஆச்சு சத்தீஷ்?”

 

அருகில் வந்து நின்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தவனைக் கேட்டாள்.

 

சத்தீசின் இடது கையில் அந்த ஆயுதப் பொட்டலம் இருந்தது. அது கிழிக்கப்பட்டிருந்தது. அவரது வலது கையில் ஒரு வாளைப் பிடித்திருந்தார்.

 

சத்தீசு கையிலிருந்த வாளால் தனக்குப் பின்னால் சுட்டிக் காட்டினார். சற்று தொலைவில் கறுப்பு உடையணிந்த சகவீரர்களின் சிறுபடை ஒன்று அணிவகுத்து வந்து கொண்டிருந்தது!

 

அவர்கள் சுமார் இருநூறு பேர் இருப்பார்கள் எனத் தோன்றியது. அவர்கள் எந்த அவசரமும் இன்றி சீராய் இவர்களை நோக்கி முன்னேறி வந்தனர்.

 

தேவி சட்டென சத்தீசின் கையிலிருந்த பொட்டலத்திலிருந்து ஒரு ஈட்டியையும் வாளையும் உருவி எடுத்துக்கொண்டாள்.

 

“செழியன், நீங்களும் விக்ரமும் போய் வாளை எடுங்க, நாங்க இவங்களைத் தடுக்கப் பார்க்குறோம்!”

 

தேவி சண்டைக்குத் தயாராக கால்களைச் சற்று அகல வைத்துக்கொண்டு, உறுதியான நிலையில் நின்றுகொண்டபடி சொன்னாள். சத்தீசும் அவளுக்கருகில் அதே போல நின்றுகொண்டார்.

 

”என்ன விளையாடுறியா நீ?”

 

விக்ரம் கோவமாகத் தானும் ஒரு ஈட்டியை எடுத்துக்கொள்ள முனைந்தான்.

 

செழியன் அவனைத் தடுத்தார்.

 

“இரு விக்ரம்! தேவி, உங்க ரெண்டு பேரால இவங்களைத் தடுக்க முடியாது! இங்க நிக்குறதும் வீண், என் கூட வாங்க!”

 

தேவியின் தோளைத் தொட்டு அழைத்தார்.

 

[the_ad id=”6605″]

 

“நீங்க போங்க, நாங்க முடிஞ்சவரை இவங்களைத் தடுக்குறோம்…”

 

செழியன் கடகடவெனச் சிரித்தார். மூவருமே அவரை முறைத்தனர்.

 

“புரியாமப் பேசுற… இது உஜ்ஜைனி! இதோ, இந்த நாலு தோரண வாயில்களும் உஜ்ஜைனியின் எல்லையைக் குறிக்கும் தோரணங்கள்! மாகாளியின் அருளோடு பேரரசர் விக்ரமாதித்யர் நிறுத்தின திக்விஜய வீரத்தோரணங்கள் இவை! இதுக்குள்ள அந்த சகர்களால வரவே முடியாது! அதனாலத்தான் சொல்றேன் நீங்க இங்க நின்னு சண்டை போட வேண்டிய அவசியமே இல்லை, என்னோட வாங்க…”

Thoranam - Warangal
வாரங்கல்லின் நான்கு தோரண வாயில்களில் ஒன்று…

“இல்ல-”

 

தேவி பதில் சொல்வதற்குள் அவளது கைப்பேசி சிணுக்கியது. இடது கையில் இருந்த வாளை சத்தீசிடம் கொடுத்துவிட்டுக் கைபேசியை எடுத்துப் பேசினாள். பேசப் பேச அவளது முகத்தில் கலவரம் குடிகொண்டது.

 

எதிரே வரும் படையைப் பார்த்தும் கலவரப்படாத அவள், கைப்பேசியில் பேசும்போது கலவரப்பட்டதை எண்ணி விக்ரமும் பரப்பரப்பானான்.

 

“யாரு தேவி? என்னாச்சு”

 

“அ- அருண்… அருண்தான் விக்ரம்…”

 

கைப்பேசியை அணைத்துப் பையில் போட்டபடியே சொன்னவளின் குரலில் வாட்டமும் நடுக்கமும் இருந்தன.

 

“என்ன ஆச்சு? அருண் என்ன சொன்னான்? இப்ப எங்க இருக்காங்க அவங்க? விஷாலி முழிச்சுட்டாளா?”

 

அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்ட விக்ரமைத் தேவி மிகுந்த கவலையுடன் பார்த்தாள்.

 

“வி- விஷாலி அருணோட இல்ல…”

 

அவள் மெல்லத் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

 

“வாட்? என்ன ஆச்சு? எங்க இருக்காளாம்? சொல்லு தேவி…”

 

விக்ரம் அவளைத் துரிதப்படுதினான்.

 

“வந்து- விஷாலிய… விஷாலியப் பட்டி கடத்திட்டுப் போய்ட்டான்னு சொன்னான் அருண்… ஆனா, அவனுக்கு உறுதியாத் தெரியல!”

 

விக்ரமின் முகத்தில் கோவமும் ஆத்திரமும் வெடித்தன. அவனது பார்வை செழியனை நோக்கித் திரும்பியது.

 

”உங்களால-”

 

“விக்ரம், தப்புதான், இப்படி நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கல, ஆனா, இப்ப அதைப் பத்திக் கவலைப்பட நமக்கு நேரமில்ல, உள்ள போவோம் முதல்ல…”

 

அவர் பேசியபடியே தொலைவில் வந்துகொண்டிருந்த சகர் படையைச் சுட்டிக் காட்டினார்.

 

”இனியும் எப்படி சார் நான் உங்களை நம்பி உங்க கூட வருவேன்னு நினைக்குறீங்க?”

 

விக்ரம் கோவம் பொங்கக் கேட்டான்.

 

செழியன் அசராமல் பதில் சொன்னார்.

 

“இன்னும் கொஞ்சம் நேரத்துல நீயே எல்லாத்தையும் புரிஞ்சுப்ப விக்ரம், இப்ப உன் கூட விவாதிக்கவோ உனக்கு விளக்கவோ நேரமில்ல, வா…”

 

சொல்லிவிட்டு அவர் விக்ரமின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார்.

 

தேவி நீட்டிப் பிடித்த ஈட்டியையும் வாளையும் இறக்கியபடி அவர்களை நோக்கி வரும் சகர் படையையும் சத்தீசையும் பார்த்தாள்.

 

சத்தீசும் இவளைப் பார்த்துத் தோளை ஒருமுறைக் குலுக்கிவிட்டுச் செழியனைத் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்.

 

தேவியும் அவர்களைத் தொடர்ந்தாள்.

 

அவர்கள் அந்தத் தோரண வாயிலைத் தாண்டி உள்ளே சென்றனர். செழியன் விக்ரமின் கையை விட்டுவிட்டு அந்த மைதானத்தின் நடுவில் இருந்த தூண் குவியலை நோக்கி விறுவிறுவென நடந்தார்.

 

மற்ற மூவரும் எதுவும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

செழியன் ஒரு தலை உடைந்த சிலையின் அருகில் போய் நின்றார்.

 

இவர்களும் அவர் அருகில் சென்றனர்.

 

[the_ad id=”6605″]

 

மூவரும் மைதானத்தைச் சுற்றி நோட்டம் விட்டனர். தொலைவில், மைதானத்தின் விளிம்பில் அந்த நான்கு தோரண வாயில்கள் மட்டும் கம்பீரமாக எந்தச் சிதைவும் மின்றி நின்றுகொண்டிருந்தன. கண்ணில் பட்ட மற்ற எல்லாவற்றிலும் சிதைவின் கோரத் தாண்டவந்தான் முதன்மையாகத் தெரிந்தது.

 

தோரண வாயிலுக்கு வெளியே சற்று இடைவெளிவிட்டு அந்தச் சகர் படை நின்றுவிட்டதையும் கவனித்தனர்.

 

தூண்களும், உத்தரங்களும், கற்பலகைகளும் அழகான நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், யானை, குதிரை, யாளி, நடன மங்கையர், காலாட்படை, குதிரைப் படை, யானைப் படை, தேர்ப் படை, தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், பூதங்கள், தெய்வங்கள் என்று கட்டைவிரல் அளவுமுதல் ஏழு எட்டடி உயரம்வரை வகைவகையான சிற்பங்கள் நிறைந்திருந்தன.

அனைத்திலும் சொல்லி வைத்தைதைப் போலத் தலையும், கையும், காலும் உடைக்கப்பட்டிருந்தன!

 

குறைந்தபட்சம் மூக்கின் நுணியாவது உடைக்கப்பட்டிருந்தது.

?

போரின் வேகத்தில் உடைத்ததைப் போல் அன்றி, இவற்றை உடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு ஒரு படையே இங்கு முகாமிட்டு உடைத்தைதைப் போல தீர்மானமாக உடைக்கப்பட்டிருந்தன!

 

தேவியின் கண்முன் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்தக் கோரச் செயல் இன்று நடப்பதைப் போலக் காட்சியாய் விரிந்தது. அவளது மூக்குத் துவாரங்கள் புடைத்து விரிந்தன. மொகலாயர்கள் மீது அவளுக்கு அளவு கடந்த கோவம் வந்தது.

 

”ஏன் இப்படி எல்லாத்தையும் உடைச்சி வெச்சிருக்காங்க!”

 

சத்தீசு சிந்தனையோடு கேட்டான்.

 

“மொகலாயர்கள்! வெறி பிடிச்ச காட்டுமிராண்டிகள்!”

 

தேவி ஆத்திரத்தோடு சொன்னாள்.

 

”எல்லாத்தையும் மொகலாயர்களேவா உடைச்சாங்க?”

 

சத்தீசு கேட்க,

 

“ஆமா… இந்த ஒரு சிலையைத் தவிர!”

 

செழியன் தான் பார்த்துக்கொண்டிருந்த தலையில்லாத சிலையைப் பார்த்தபடியே பதிலளித்தார்.

அப்பொழுதுதான் அவர்கள் அந்தச் சிலையைக் கவனித்தனர். அது ஒரு போர் வீரனின் சிலை. அசலான அளவில் ஆறடிக்குச் சற்று உயரமாய், கையில் உருவிய வாளுடன் கம்பீரமாய் நிற்கும் சிலை. அதன் தலை மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அச்சிலையின் அமைப்பும் வேலைப்பாடுகளும் அங்கிருந்த மற்ற சிலைகளிலிருந்து ஏதோ ஒருவகையில் மாறுபட்டிருப்பதை விக்ரம் தேவியால் கூட உணர முடிந்தது. எது என்று அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!

 

”இது…?”

 

தேவி கேள்வியுடன் அந்தச் சிலையை நெருங்கிப் பார்த்தாள்.

 

”நீங்களே தெரிஞ்சுப்பீங்க… இந்தா விக்ரம்…”

 

செழியன் புதிரோடு சொல்லிவிட்டுத் தன் பையிலிருந்து அந்தக் கணையாழியை எடுத்து நீட்டினார்.

 

விக்ரம் ஒரு நொடி அதை உற்றுப் பார்த்தான். பின் செழியனை விரோதத்துடன் முறைத்தபடியே அதை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான் (பிடுங்கிக்கொண்டான்!). அதைத் தொடும்போதே அவன் உடலில் சில்லென்று ஒரு உணர்ச்சி பரவியது.

 

செழியன் ”ம்ம்…” என்றார்; ’போட்டுக்கொள்’ என்ற சைகையுடன்.

 

விக்ரம் மெல்ல அதைத் தன் விரலில் அணிந்துகொண்டான்.

 

அந்தக் கணையாழி அவன் விரலில் அமர்ந்த அடுத்த நொடி அந்த இடத்தில் மாற்றம் நிகழ்ந்தது.

 

அங்கிருந்த இடிபாடுகள் மறைந்து அவர்கள் ஒரு மாளிகையின் மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். பொன்மயமான அதன் கட்டடங்களின் ஒளியால் அந்த இடமே மஞ்சள் நிறத்தொனி பெற்றது. கனவில் இருப்பதைப் போல உணர்ந்தனர். மாளிகையின் கட்டடங்களைத் தாண்டித் தொலைவில் அந்தத் தோரண வாயில்கள் காட்சி அளித்தன. அவை இன்னும் உயரமாய் இருப்பதைப் போலத் தோன்றின. முழுக்க தங்கத்தால் செய்தவை போல வெயிலில் தகதகவென மின்னின.

 

”ஹ்ஹா…” சத்தீசு தன்னையும் அறியாமல் வியப்பில் மெல்ல ஒலியெழுப்பினார். தேவியும் வியப்பில் ஆழ்ந்திருந்தாள்.

 

விக்ரமிற்கு எல்லாம் பழகிய இடம் போல இருந்தது.

 

அவர்களுக்கு முன் இருந்த வீரனின் சிலை நிஜமான மனிதனின் உடலாக மாறியிருந்தது. தலை வெட்டப்பட்டு முண்டமாய் இருந்த கழுத்தில் உறைந்த இரத்தம் இருந்தது. ஆனால், அந்த உடலிலிருந்து ஒரு பொன்னிற ஒளியும் வீசியது. எல்லாவற்றையும் விடக் கண்ணைப் பறித்தது அதன் கையில் இருந்த வாள்தான். நெருப்பில் காய்ச்சிய இரும்பைப் போல வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது அவ்வாள்.

 

”மன்யாக்னி!”

 

விக்ரமின் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.

 

விக்ரம் மெள்ளக் கையை நீட்டி அந்த உடலின் கையிலிருந்து அந்த வாளை எடுத்தான். அதைக் கையில் பிடித்த நொடி அவனுக்குப் பல விடயங்கள் புரிந்ததைப் போல இருந்தது!

 

தேவியும் சத்தீசும் நடப்பது எதையும் நம்ப முடியாமல் திணறினர்.

 

விக்ரமின் முகத்தில் ஒரு நிறைவும் சிரிப்பும் மலர்ந்தன.

 

விக்ரம் மெல்ல திரும்பிச் செழியனைப் பார்த்தான்.

 

செழியனின் முகத்திலும் தீர்க்கமான புன்னகை இருந்தது. விக்ரம் அவரைப் பார்த்ததும் செழியன் மெள்ள அவன் முன் ஒரு காலை மடக்கி மண்டியிட்டார்.

 

வலது கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு குனிந்து தன் தலையை அவன் காலில் பதித்தார்.

 

விக்ரம் மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்வோடும் அவரை அழைத்தான்,

 

[the_ad id=”6605″]

 

“பட்டி!”

 

செழியன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தார், அவரது கண்களில் கண்ணீர் மெல்லிய அருவியாய் வழிந்துகொண்டிருந்தது.

 

“அண்ணா!”

[முதல் பகுதி முற்றும்] 

தொடரும்…

 

Author during his Warangal visit… 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!