கோயிலின் சன்னதியை நோக்கி மெள்ள அணிவகுத்து நெருங்கிய சகர் படையின் தலைமையில் அவனைப் பார்த்ததும் விக்ரமின் முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சி பரவியது, கோவத்தினால் அவனது மூச்சு சற்றே விரைவானது.
சகர்களின் அரசனான திக்ரசூதன் விக்ரமை ஏளனப் புன்னகையுடன் பார்த்தபடி நெருங்கினான்.
விக்ரம் அந்த அர்த்த மண்டபத்தின் மேலிருந்து கீழே செல்வதற்கான வழி எங்கிருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை பார்வையைச் சுற்றவிட்டான்.
“விக்ரம், சம் திங் இஸ் நாட் ரைட்…”
என்று தேவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே விக்ரம் சில அடிகள் பின்னால் வந்து கடகடவென ஓடி அந்த முதல் தளத்திலிருந்து கீழே குதித்தான்.
”விக்ரம்ம்ம்ம்…” என்று அலறியபடி தேவி விளிம்பில் நின்று எட்டிப் பார்த்தாள்.
சுமார் நாற்பதடி உயரத்திலிருந்து குதித்தவன் பூனையைப் போல இலாவகமாக உடலைச் சுருட்டியபடித் தரையில் இறங்கி, அதே வேகத்தில் ஒரு குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்றான்.
சற்றும் தாமதிக்காமல் அருணும் தான் இருந்த இடத்திலிருந்து ஓடி வந்து விக்ரமைப் போலவே குதித்து உருண்டு அவன் அருகில் நின்றான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் குதித்து உள்ளே வரும் சகர் படைக்கு எதிரில் நிற்பதைக் கண்டு வியப்பில் திகைத்து நின்றாள் தேவி. சத்தீசும் அவள் அருகில் வந்து கீழே எட்டிப்பார்த்தார்.
“வாவ்!”
என்றபடி அவரும் இரண்டடி பின்னால் செல்ல, தேவி தலையைச் சிலுப்பியபடி அவரைத் தடுத்தாள்,
“வாட் சத்தீஷ், நீங்களும் குதிக்கப் போறீங்களா? கால ஒடச்சுப்பீங்க!”
என்றாள் முகத்தைக் கடுப்பாக வைத்துக்கொண்டு.
“பட், மேடம்-”
“அவங்க கிட்ட ஏதோ சக்தி இருக்கு, சத்தீஷ், அவங்களப் பார்த்து நீங்க ஏமாந்துடாதீங்க… நம்மால இங்கேருந்து குதிச்சு அவங்க மாதிரி ஒன்னும் ஆகாம எழுந்து நிக்க முடியாது!”
என்று தேவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேதாளப் பட்டன் புன்னகையுடன் அவள் அருகில் வந்தான்.
“கீழ போகனும், அவ்ளோதான? யாமிருக்க பயமேன்?”
என்றான் வலது கையால் அபய முத்திரை காட்டியபடி.
இதற்குள் கீழே நின்ற விக்ரமையும் அருணையும் சகர் படை முன்னும் பின்னும் சூழ்ந்திருந்தனர்.
திக்ரசூதன் விக்ரமிடமிருந்து ஒரு பத்தடி தொலைவிலேயே நின்றுகொள்ள, அவன் பின்னால் வந்த சகர் படை விக்ரமை நோக்கி முன்னேறியது.
அருண் விக்ரமின் முதுகிற்கு முதுகு காட்டியபடிப் பின்னாலிருந்து அவர்களை நெருங்கிய சகர்களை நோக்கியபடிப் கையில் வாளுடன் தயாராக நின்றான்.
விக்ரம் அருகில் வந்த முதல் சகனை வெட்டி வீழ்த்தவும் தேவியும் சத்தீசும் அவர்கள் அருகில் வந்து சேர்ந்து கொள்ளவும் சரியாக இருந்தன.
வேதாளப் பட்டன் மண்டபத்தின் மேலிருந்த மற்ற காவலர்களையும் கீழே கொண்டு வந்து விட்டான்.
அவர்கள் ஆளுக்கொரு திசையில் முன்னேறியபடிச் சகர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தனர்.
சகர் படையின் ஒரு பகுதி இவர்களைச் சூழ்ந்திருக்க, இன்னொரு பகுதி கோயிலின் விமானத்தைச் சூழத் தொடங்கியது.
ஒரு சில சகர்கள் கருவறையின் வெளிச்சுவர் மீது ஏற முயன்று கொண்டிருந்தனர்.
“சத்தீஷ்…”
என்று சண்டையிட்டபடியே அழைத்தாள் தேவி. சத்தீசும் ஒரு சக வீரனைச் சமாளித்தபடியே சற்று அவள் அருகில் வந்தார்.
“அவங்க கோயிலுக்குள்ள போக ட்ரை பண்றாங்க, நமக்கு இன்னும் ஆள் வேணும், நான் சொல்ற மாதிரி பண்ணுங்க…”
என்று சண்டையின் ஊடே அவரிடம் பேசினாள் தேவி.
அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட பின் சத்தீசு வேதாளப் பட்டனைத் தேடிக் கண்களை ஓட்டினார், அவன் சக வீரர்களை இரண்டு மூன்று பேராகக் கொத்தாகத் தூக்கி உயரத்தில் கொண்டு கீழே போட்டுக் கொன்று விளையாடிக்கொண்டிருந்தான்!
“வே- மிஸ்டர். பட்டன்ன்ன்…”
என்று அவனை நோக்கி உரக்க அழைத்தார் சத்தீசு, கைக்கு இரண்டு பேராக நான்கு சகர்களைத் தூக்கியபடிக் கிட்டத்தட்ட விமானத்தின் உயரம் அளவிற்கு உயரத்தில் இருந்தவன் அங்கிருந்தே சத்தீசைப் பார்த்து ‘என்ன?’ என்று சைகை காட்டினான், இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து, அவன் பிடித்திருந்த சகர்கள் கூச்சலில்லாமல் மௌனமாகக் கீழே விழுந்து தெறித்துப் பின் சில நொடிகளில் கறுப்பு நீராவி போலக் காற்றில் கரைந்தனர்.
பட்டன் சத்தீசின் அருகில் வந்து தரையிறங்கினான்,
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்?”
“எ-”
சத்தீசு தொடர்வதற்குள் இரண்டு சகர்கள் கையில் ஈட்டியுடன் அவரை நெருங்க, பட்டன் எகிறி அந்த இருவரின் மார்பிலும் தன் கால் முட்டிகளால் உதைக்க, அவர்கள் சில அடி தொலைவில் சென்று விக்ரமின் காலடியில் விழுந்தனர். விக்ரம் தான் போரிட்டுக்கொண்டிருந்த வாக்கிலேயே அவர்களின் மீதும் ஒரு வீசு வீச இருவரும் துண்டானார்கள்!
பட்டன் கைகளைத் தட்டியபடிப் புன்னகையுடன் சத்தீசின் பக்கம் திரும்பினான்.
“என்னை வெளில கூட்டிட்டுப் போங்க… அங்க நிக்குற போலிஸ்கிட்ட!”
என்றார் அவர்.
“டீ பிரேக்கா?”
என்று சற்றே கிண்டலாகக் கேட்டவன், மெள்ளப் பின்னால் நெருங்கிய அந்தச் சக வீரன் சத்தீசின் முதுகைத் தன் ஈட்டியல் துளைப்பதற்கு முன் அவரின் தோள்களைப் பிடித்து மேலேறினான், ஏறிய வாக்கிலேயே அவன் சத்தீசை இலேசாய் உலுக்க அவரது கால்கள் அந்தச் சகனின் முகத்தில் வலுவாக உதைத்தன…
கோயிலின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்த அந்த உயர்தர குளிரூட்டப்பட்ட மகிழுந்தின் அருகில் வேதாளப் பட்டன் சத்தீசைச் சுமந்தபடி காற்றில் மிதந்து வந்து இறங்கியதை அங்கிருந்த அனைவரும் கண்கள் விரியப் பார்த்தனர். இருட்டி இருந்ததால் கயிறு கட்டி இறங்குகிறார்கள் என்று சிலர் தம் பகுத்தறிவைச் சமாதானப்படுத்திக்கொண்டனர்.
அந்த மகிழுந்து அரியலூர் காவல்துறைக் கண்காணிப்பாளருடையது (SP), இரண்டு உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் சில ஆய்வாளர்கள் சூழ நின்றபடி அவர்களுக்குக் கட்டளைகள் கொடுத்துக்கொண்டிருந்த அவரும் தன் பேச்சை நிறுத்திவிட்டு இவர்களை வியப்புடன் பார்த்தார்.
சத்தீசு நேராக அவர் முன் சென்று காவலர் வணக்கம் (சல்யூட்!) செய்தார்.
“சர்! இன்ஸ்பெக்டர் சத்தீஷ், ஸ்பெஷல் கமாண்டோஸ், ஆர்ம்ட் போலிஸ், சர்!”
என்று இயல்பான விறைப்புடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
கண்காணிப்பாளரும் தலையசைத்து அவரது வணக்கத்தையும் சுயவறிமுகத்தையும் ஏற்றுக்கொண்டு ‘மேலே சொல்லுங்கள்’ என்பதைப் போல அவரைக் கவனத்துடன் பார்த்தார்.
“சர், தேவி மேடம் உள்ளதான் இருக்காங்க-”
“ஆமா, என்னோட அவங்க போன்ல பேசினாங்க, ஆனா அவங்க சொன்னது எனக்கு முழுசா விளங்கல…”
என்று அவர் சிந்தனையோடு சொன்னார்.
“ஆமா சர், இங்க நடக்குறது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான நம்ப முடியாத விஷயந்தான்… பட் சர்…”
என்று சத்தீசு தயங்க, கண்காணிப்பாளர் ‘என்ன?’ என்று கேள்வியுடன் அவரைப் பார்த்தார்.
“சர், உள்ள ஒரு யுத்தமே நடந்துட்டு இருக்கு, ஸோ என்னால இப்ப விளக்கமா எதையும் சொல்ல முடியாது, நான் சொல்றா மாதிரி செய்ய நீங்க உங்க கமாண்டோஸ்கு ஆர்டர் போடனும்…”
என்று சத்தீசு தயங்கித் தயங்கிச் சொன்னார்.
சில நொடிகள் மௌனமாக இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது கையால் மோவாயைச் சொறிந்தபடி யோசித்தார் கண்காணிப்பாளர்.
“ஆல் ரைட்! சுதர்ஷன், உங்க பட்டாலியன அசெம்பிள் பண்ணுங்க, க்விக்!”
என்று அருகில் நின்றிருந்த உதவி கண்காணிப்பாளரிடம் ஆணையிட, அவரும் “சர்!” என்று உடலை ஒருமுறை விறைத்துவிட்டுத் தன் கையிலிருந்த தொடர்புக் கருவியில் ஆணைகள் கொடுத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
சில நொடிகளில் அங்கு சுமார் நாற்பது ஐம்பது காவலர் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
“ப்ரொசீட்!”
அந்த அணியை நோக்கிக் கை நீட்டியபடி சத்தீசுக்கு அனுமதி அளித்தார் கண்காணிப்பாளர்.
“சர்!”
என்று மீண்டும் ஒரு காவலர் வணக்கம் வைத்துவிட்டு அந்த அணியின் முன் சென்று நின்றார் சத்தீசு.
அணிவகுப்பில் விறைப்பாக நின்றிருந்தவர்களைப் பார்த்து “அட் ஈஸ்” என்றார், அவர்கள் சற்றே இளகி நின்றபடி இவரைக் கவனித்தனர்.
“ஃப்ரெண்ட்ஸ், நான் இன்ஸ்பெக்ட்ர சத்தீஷ், நானும் கமாண்டோதான், ஆர்ம்ட் காம்பேட் எக்ஸ்பர்ட்! உங்க உதவி ரொம்ப அவசியமா தேவைப்படுது, நான் சொல்றதைக் கவனமா கேளுங்க…”
என்று அவர்களை நோக்கிப் பேசத் தொடங்கினார் சத்தீசு.
சகர் பற்றியும், அவர்களின் பலம் பலவீனம் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் சுருக்கமாக ஆனால் தெளிவாகச் சொன்னார்.
“இப்ப உள்ள நாலு கமாண்டோஸ் இருக்காங்க, தே ஆர் எக்யுப்ட்! நீங்க ரெண்டு ரெண்டு பேரா உள்ள வாங்க, நாங்க வீழ்த்துற சகர்களோட ஆயுதங்களை உங்களுக்குத் தரோம், தென் யூ கேன் என்கேஜ்! சரியா?”
என்று சத்தீசு பேசி முடிக்க, அவர்கள் ஒரே குரலாக “சர், எஸ் சார்!” என்று உறுமினர்.
சத்தீசு அவர்களை நோக்கிக் கட்டைவிரலைக் காட்டிவிட்டுக் கண்பாணிப்பாளரிடம் திரும்பினார்,
”இன்ஸ்பெக்டர், வெறும் கத்தி ஈட்டிகளையும் இந்த ஒரு பட்டாலியனையும் வெச்சுக்கிட்டு சமாளிச்சிடுவீங்களா? உள்ள அவங்க நூத்துக்கணக்கா இருப்பாங்க போலத் தெரியுதே? அண்ட் தே கீப் கம்மிங்!”
என்று சத்தீசைப் பார்த்துக் கேட்டார் கண்காணிப்பாளர்.
“சர்! உள்ள விக்ரம் சாரும் அருண் சாரும் இருக்காங்க… அவங்க-”
என்று தயங்கி நிறுத்தினார், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.
”சார், எதுக்கும் நீங்க இன்னும் நிறைய போலிசைக் கொண்டு வாங்க…”
என்று வேதாளப் பட்டன் இடையில் புகுந்தான்.
அனைவரும் அவன் பக்கமாகத் திரும்பினர்.
“சார், இந்தக் கோயிலுக்கு அடில ஒரு பொருள் இருக்கு, அதை எடுக்கத்தான் இவங்க இங்க வந்திருக்காங்க, அதைத் தடுக்க வேண்டியது எங்களோட கடமை…”
“சர், ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ, நான் இவங்களோட உள்ள போறேன், இவர் உங்களுக்கு எல்லாத்தையும் விளக்குவார்!”
என்று சத்தீசு இடைமறித்தார்.
கண்காணிப்பாளர் வேதாளப் பட்டனை சந்தேகத்துடன் பார்த்தபடியே சத்தீசுக்கு அனுமதி அளித்தார்.
“என்ன பொருள்?”
”விக்ரமாதித்யரோட சிம்மாசனம், சார்! அது இந்தக் கோயிலுக்கு அடில இருக்கு, இதைக் கட்டின ராஜேந்திர சோழர் அதை அடில வெச்சுதான் மேல இந்தக் கோயிலையே கட்டியிருக்காரு…”
என்று விளக்கினான் வேதாளப் பட்டன்.
“விக்ரமாதித்யனா? இந்த வேதாளக் கதைகள்லலாம் வருவாரே, அந்த விக்ரமதித்யனா?”
என்று அருகில் இருந்த ஒரு காவலர் வியப்பும் சந்தேகமும் கலந்த குரலில் கேட்டார்.
“அவரேதான்… உள்ளதான் சண்ட போட்டுக்கிட்டு இருக்கார்…”
என்றவன், ‘அந்த வேதாளம் நான்தான்’ என்று இவர்களிடம் சொல்லலாமா வேண்டாவா என்று ஒரு நொடி யோசித்துவிட்டுச் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தான்.
“விக்-”
“சார், இப்ப அதெல்லாம் முக்கியமில்ல, நான் சொல்ல வந்ததைக் கேளுங்க…”
என்று ஏதோ கேட்கத் தொடங்கிய இன்னொரு காவலரை இடைமறித்துச் சொன்னான் வேதாளப் பட்டன்.
‘சரி சொல்லு’ என்று கண்காணிப்பாளர் கையசைக்க, பட்டன் தொடர்ந்தான்,
“கவனமா கேளுங்க, சிம்மாசனம் கோயிலுக்கு உள்ள இல்ல, அடில இருக்கு, ஐ மீன், ஃபவுண்டேஷனுக்கு அடில…”
என்று அவன் பீடிகையோடு இழுக்க, அனைவரும் அவனைக் கவனமாகப் பார்த்தபடிக் கேட்டுக்கொண்டனர்.
“இந்த கோவிலோட ஆர்க்கிடெக்சர் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன், இது மோர்ட்டாரோ இல்ல வேற வகையான சிமெண்ட்டோ வெச்சுக் கட்டப்படல… டன் கணக்குல கனமான பாறைகளைக் கச்சிதமா வெட்டி ஒன்னுமேல ஒன்னா வெச்சு அடுக்கிருக்காங்க…”
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் அனைவரும் அவனைக் கவனித்தனர்,
“இந்த விமானம் பல நூறு டன் எடையுள்ளது… அதோட வெயிட்லதான் அது நிக்குது… ஆயிரம் வருஷமா… எந்த நிலநடுக்கமும் இதை ஒன்னும் செய்ய முடியாது…”
“ஸோ?”
என்று கண்காணிப்பாளர் பொறுமையிழந்து கேட்டார்.
“சார், அடில இருக்குற சிம்மாசனத்தை எடுக்கனும்னா மொத்த கோயிலையும் கலைக்கனும்… யூ கெட் இட்? ஒன்னு மேல ஒன்னா அடுக்கப்பட்ட மிக கனமான பாறைகள்… இந்தக் கோயிலை சும்மா அப்படியே இடிச்சுத் தள்ள முடியாது… அடில தோண்டிப் போயும் சிம்மாசனத்தை எடுக்க முடியாது… மொத்த கோயிலையும் கலைக்கனும்… உச்சிலேர்ந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு பாறையா நகர்த்தனும்… செம்ம கிளவர்ல?”
என்று பட்டன் சோழக் கட்டடப் பொறியாளர்களையும் ராஜேந்திர சோழரையும் மெச்சியபடியே சொன்னான்.
“அப்ப இவங்களால சிம்மாசனத்தை நெருங்க முடியாது?”
என்று கண்காணிப்பாளர் சற்றே ஆசுவாசமாகக் கேட்டார்.
“இல்ல, முடியும்! அதான் இப்ப சிக்கலே! அதுக்குத்தான் சொல்றேன், நீங்க எவ்ளோ முடியுமோ அவ்ளோ கமாண்டோஸைக் கொண்டு வாங்க…”
என்றான் பட்டன் பரப்பரப்புடன்.
“நீ சொல்றத பாத்தா மிலிட்ரியத்தான் கூப்டனும்!”
என்றார் கண்காணிப்பாளர் அயர்ச்சியுடன்.
பட்டன் அவரைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சட்டெனப் பறந்து கோயிலுக்கு உள்ளே வந்தான்.
உள்ளே இரண்டு இடங்களில் போர் நடந்துகொண்டிருந்தது.
விமானத்தின் அருகிலும், மேலுமாக சகர்கள் குழுமியிருக்க, அருணும், சத்தீசும், உள்ளே வந்த காவலர் படையும் அவர்களோடு போரிட்டு அவர்களை விமானத்தின் உச்சிக்கு ஏறவிடாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தனர்.
இன்னொரு புறம் வடக்குப் பிரகாரத்தில் விக்ரமும் தேவியும் இன்னொரு சகர் படையோடு தனியாய் மோதிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்த சகர் படையில் ஒரு வீரன் மட்டும் தனித்துத் தெரிந்தான். விக்ரமின் வாள் வீச்சுகளிலிருந்து நளினமான அசைவுகளால் தப்பியபடி விக்ரமோடு போரிட்டான். மற்ற வீரர்களைப் போல அவனும் உடல் முழுதும் கறுப்பு உடையும் முகத்தில் கறுப்பு முகமூடியும் அணிருந்திருந்தாலும், அவனிடம் ஏதோ வேறுபாடு தெரிந்தது.
இந்தச் சிந்தனையில் விக்ரமின் கவனம் சற்றே சிதற, அந்த சக வீரன் சற்றும் தாமதிக்காமல் விக்ரமின் மார்பைக் குறிவைத்துத் தன் வாளைப் பாய்ச்சினான்.
“விக்க்க்ரம்ம்ம்ம்…”
சண்டையிட்டபடியே அந்த வீரனை ஓரக்கண்ணால் பார்த்த தேவி தான் சண்டையிட்டுக்கொண்டிருந்த வீரனை ஒரே வீச்சில் வீழ்த்திவிட்டு, விக்ரமின் பக்கமாகத் திரும்பி அந்த வீரனின் மீது தன் வாளை ஆத்திரத்துடன் வீசினாள்.
ஒரு மெல்லிய பொன்னிற ஒளியாக விக்ரமின் உடலைச் சூழ்ந்திருந்த அக்னி கவசம் அந்த வீரனின் வாள் விக்ரமின் மார்பைத் துளைக்காமல் தடுத்தது, ஆனால், தேவியின் வாள் அந்த வீரனின் கையில் கீறியது, விக்ரமும் தேவியும் ஒரு நொடி வியப்பில் உறைந்தனர்-
தேவி வெட்டிய இடத்திலிருந்து அவன் கையில் இரத்தம் வழிந்தது!
சக வீரர்களை இவர்கள் நூற்றுக்கணக்கில் கொன்று குவித்துக்கொண்டிருந்தனர், ஆனால், ஒருவனின் உடலிலிருந்தும் இதுவரை ஒரு துளி குருதி கூட சிந்தியது கிடையாது. வெட்டி வீழ்த்தினால் அவர்களின் உடல் கறுப்புக் கற்பூரத்தைப் போலக் காற்றில் கரைந்துவிடும், அவ்வளவுதான்!
ஆனால்…
கையில் அடிபட்டதும் அந்த வீரன் தன் வாளைத் தவறவிட, அவனைப் பின்னுக்கு நகர்த்தியபடி விக்ரமின் முன் வந்து நின்றான் சகன் திக்ரசூதன்!
அவன் முகமூடி அணிந்திருக்கவில்லை. அவன் முகத்தில் இருந்த ஏளனப் புன்னகையைப் பார்த்தவுடன் விக்ரமின் மனத்திலிருந்த குழப்பம் மறைந்து பெருஞ்சினம் குடிகொண்டது.
விக்ரம் ஆவேசத்துடன் தன் மன்யாகினியை அவனை நோக்கி வீசினான்.
அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறாமல் மன்யாக்னியின் வீச்சுகளிலிருந்து மெள்ள நகர்ந்து கொண்டான்.
இதற்கிடையில் வேதாளப் பட்டனும் இன்னும் சில காவலர் வீரர்களும் விக்ரமையும் தேவியையும் சூழ்ந்திருந்த வீரர்களைக் கனிசமான அளவு தீர்த்துக்கட்டியிருந்தனர்.
மிச்சமிருந்த ஒரு சிலரும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு விக்ரமையும் திக்ரசூதனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.
தேவியும் பட்டனும் கூட நின்று அவர்கள் சண்டையை வேடிக்கைப் பார்த்தனர்.
திக்ரசூதன் தன் கையில் இருந்த வாளை வீசவில்லை, விக்ரமின் ஆவேச வீச்சுகளைத் தவிர்த்தவாறு இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டிருந்தான்.
தன் வாள் வீச்சில் சிக்காமல் அவன் நகர்வதைப் பார்த்து விக்ரமின் ஆவேசம் மேலும் வலுவானது.
“விக்ரம்…”
தேவி அவனைச் சமாதானப்படுத்துபவளைப் போல மெள்ள அழைத்தாள்.
விக்ரம் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை, இவனை ஒரே வீச்சில் வெட்டிக் கொன்று விட வேண்டும் என்று எண்ணியவனாய் வாளைச் சுழற்றியபடி அவன் மீது தாவினான் விக்ரம்…
எகிறியபடியே வாளைத் தன் வலது புறம் சுழற்றித் தலைக்குமேல் கொண்டு சென்று, முதுகில் இருக்கும் தூணியிலிருந்து அம்பை உருவும் அசைவில் வாளை முன்னால் கொண்டு வந்து பலத்துடன் ஒரு பெரிய வீச்சாக வீசினான் விக்ரம்-
மன்யாக்னியில் ஈரத்தைப் போல ஒட்டி வழிந்துகொண்டிருக்கும் அந்தப் பொன்னிற ஒளி வாளுக்கு முன் ஒரு ஒளிவாளைப் போலக் கீற்றாக இறங்கியது-
‘ஸ்ஸ்விய்ய்ய்’ என்ற ஓசையுடன் காற்றைக் கிழித்தபடி அந்த வாளும் மின்னலாக இறங்கியது-
ஒரு நொடி அங்கே ஒரு வெளிச்சப் பரவல்-
வெப்பமும் ஓசையும் இல்லாமல் ஒளி மட்டும் கொண்டு ஒரு குண்டு வெடித்ததைப் போல இருந்தது அந்த வெளிச்சப் பரவல்…
திக்ரசூதன் துண்டாகித் தரையில் கிடப்பான் என எதிர்பார்த்த தேவியின் கண்களுக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது!
அவன் தன் ஏளனப் புன்னகை மாறாமல் நின்றுகொண்டிருந்தான், மன்யாக்னியின் முனை அவன் தோளில் இறங்கி அங்கேயே நின்றிவிட்டிருந்தது, ஒரு மயிரிழை கூட அது அவனைக் கீறவில்லை!
விக்ரம் மன்யாக்னியின் கைப்பிடியைப் பிடித்தபடி, தன் வாள் வீச்சின் இறுதி நிலையில், கால்கள் முட்டியிடப் போகின்றவனைப் போல வலது கால் முன் வைத்தபடியும், இடது கால் பின்னாலும் சற்றே வளைந்திருக்க, உடலைக் கொஞ்சம் முன்பக்கமாய் குனிந்தபடி இருந்தவன், மெள்ள நிமிர்ந்து பெருங்குழப்பத்துடன் திக்ரசூதனைப் பார்த்தான்.
திக்ரசூதன் இவனைப் பார்த்து இப்போது பெரிதாக நகைத்தான், சட்டெனத் தன் வாளை விக்ரம் மீது அவன் வீச, அது விக்ரமின் அக்னி கவசத்தைத் தாண்டி அவனது இடதுகையில் தோளுக்கருகே வெட்டியது!
வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குருதி கொப்பளிக்க, தேவி “விக்க்க்ரம்ம்ம்…” என்று கத்தியபடி அவனை நெருங்கினாள்.
அதற்குள் திக்ரசூதன் தன் வாளை இரண்டாவது வீச்சிற்குத் தயாராய் ஓங்கிவிட்டிருந்தான், இம்முறை அவனது குறி விக்ரமின் மார்பு!
குருதி கொப்பளிக்கும் கையுடன், குழப்பம் கொப்பளிக்கும் முகத்துடன் அசையாமல் உறைந்து நின்றிருந்த விக்ரமின் மார்பைக் குறிவைத்து திக்ரசூதனின் வாள் மின்னலென இறங்கியது…
“விக்க்ரம்ம்ம்…”
என்று தேவி அவனை நெருங்குவதற்குள் திக்ரசூதனின் வாள் தன் வீச்சை முடித்திருந்தது…
ஆனால், விக்ரம் வெட்டுப்படாமல் நகர்ந்திருந்தான் – நகர்த்தப்பட்டிருந்தான்!
சகனின் வாள் வீச்சிற்குச் சிக்காமல் விக்ரமைப் பிடித்துத் தள்ளியபடி அங்கே செழியன் நின்றிருந்தார்!
நடப்பது என்ன என்று புரிந்துகொள்ளுமுன் செழியன் விக்ரமின் கையிலிருந்த மன்யாக்னியைப் பறித்து தேவியிடம் வீச, அவள் அவன் அருகில் ஓடி வந்தபடியே தன் கையிலிருந்த வாளைப் போட்டுவிட்டு அதைப் பிடித்துக்கொண்டாள்-
சட்டென்று சமாளித்துக்கொண்டவனாய் திக்ரசூதன் தன் வாளை மீண்டும் வீச, தேவியும் அனிச்சைச் செயலாய் தன் கையிலிருந்த மன்யாக்னியை வீசினாள்…
இருவரின் வாளும் ஒன்றோடொன்று ‘க்ளாங்’ என்று உரக்க மோதின-
தேவி சற்றும் தாமதிக்காமல் தன் வாளைப் பின்வாங்கி மீண்டும் சகன் மீது வீச, அவனும் அடுத்த வீச்சிற்காகத் தன் வாட்கையை உயர்த்தியிருந்தான், அதனால் ஏற்பட்ட திறப்பில் தேவியின் கையில் இருந்த மன்யாக்னி திக்ரசூதனின் மார்பில் வெட்டியது!
மன்யாக்னி வெட்டிய இடத்தில் கறுப்புநிற நீராவி போல ஒரு மெல்லிய புகைப்படலம் எழ, திக்ரசூதன் ‘ஸ்ஸ்ஸ்…’ என்று அடிக்குரலில் உறுமியபடிப் பின் வாங்கினான்.
தேவிக்கும் அது வியப்பாக இருந்தது, இருந்தாலும் அவள் சற்றும் தாமதிக்காமல் அடுத்த வீச்சிற்குத் தயாரானாள்…
அவள் கையிலிருந்த மன்யாக்னியின் ஒளி பொன்னிறத்திலிருந்து இளஞ்சிவப்பாய் மாறியிருந்தது…
திக்ரசூதன் ஒரு நொடி வியப்பிலும் குழப்பத்திலும் உறைந்து நின்றவன், அடுத்த நொடி தன் இடது கையைக் காற்றில் ஒரு பெரிய வட்டம் வரைபவனைப் போல வீச, அவனும் அவனைச் சூழ்ந்து நின்றிருந்த சக வீரர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தனர்.
வேதாளப் பட்டன் சட்டெனத் திரும்பி கோயிலின் விமானத்தை நோக்க, அங்கிருந்த சகர்களும் மறைந்துவிட்டனர் என்பதை உணர்ந்தான்.
அங்கிருந்த எல்லா சகரும் நொடியில் மறைந்துவிட்டிருந்தனர், ஒரே ஒருவனைத் தவிர!
திக்ரசூதனுக்கு முன் விக்ரமோடு சண்டையிட்டு, தேவியினால் கையில் வெட்டுபட்ட அந்த ஒரு சக வீரன் மட்டும் அங்கு மேலும் கீழும் சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தான்.
செழியன் விக்ரமின் வெட்டைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு அவனைத் தாங்கியபடி நின்றிருக்க, வராகமிகிரர் அவர்களை நெருங்கி வந்தார்.
விக்ரமையும் செழியனையும் வராகமிகிரரையும் தன் கையில் சிவப்பாய் ஒளிர்ந்துகொண்டிருந்த மன்யாக்னியையும் அடுத்தடுத்துக் குழப்பத்துடன் பார்த்த தேவியின் கண்கள் இறுதியாக அங்கே தனியாக நின்றுகொண்டிருந்த அந்த சக வீரன் மீது நின்றன.
அவன் நடுங்கும் கைகளுடன் தன் முகமூடியைக் கழட்டினான்…
விஷாலி!
[இரண்டாம் பாகம் முற்றும்]
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.