வலது தோளில் குருதி கசிய சக வீரனின் உடையில் உடல்நடுங்க குழப்பத்துடன் தேவியைப் பார்த்தபடி நின்றிருந்த விஷாலியைக் கண்டதும் அனைவரும் திகைத்தனர்.
தேவியின் கைப்பேசி ஒலித்து அவர்களின் திகைப்பைப் போக்கியது.
தேவி கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்,
“சொல்லுங்க தேவராஜ்… விஷாலியக் காணும், அதான? கவலைப்படாதீங்க அவ இப்ப எங்க கூடத்தான் இருக்கா… நோ நோ… நீங்க அங்கயே இருங்க, ஐல் அப்டேட் யு… ஆமா… ஆமா… சரி… சரி!”
என்று கைப்பேசியை மீண்டும் தன் கால்சட்டைப் பைக்குள் வைத்தபடியே தேவி மற்றவர்களை நோட்டமிட்டாள்.
அருண் கையில் இருந்த வாளை அருகில் இருந்த சத்தீசிடம் கொடுத்துவிட்டு, மெள்ள விஷாலியின் அருகில் சென்று நின்றான்.
விஷாலி அவனை ஏறிட்டுப் பார்த்தாள், அவள் பார்வையில் ஒரு கெஞ்சல் இருந்தது, ஒரு ஏக்கம் இருந்தது…
”வலிக்குதா?”
என்றபடி அருண் தன் கைக்குட்டையை எடுத்து அவளது தோளில் கசிந்த குருதியைத் துடைத்துவிட்டான்.
வராகமிகிரர் விக்ரமின் கைக்காயத்தை இல்லாமல் ஆக்கியிருந்தார். அவர் விக்ரமைவிட்டு விஷாலியின் அருகில் வந்தார்.
வழக்கம் போலத் தன் கையால் அவர் விஷாலியின் காயத்தின் மீது தடவ குருதி வழிவது நின்று காயம் சட்டென ஆறியது, ஆனால், தீப்புண்ணைப் போல மெல்லிய கோடாக ஒரு தழும்பு மட்டும் இருந்தது. விக்ரமின் கையிலும் அப்படி ஒரு தழும்பு இருந்தது.
விஷாலி தன் இடது கையை முகத்திற்கருகே உயர்த்தி அத்தழும்பைப் பார்க்க, வராகமிகிரர் அவளை நோக்கி வாஞ்சையுடன் புன்னகைத்தார்.
“உங்களை வெட்டிய வாள்கள் சக்திவாய்ந்தவை, அவற்றின் காயங்களை முழுதாய் ஆற்ற இயலாது, இந்தத் தழும்பை ஒரு நினைவாக, ஒரு பாடமாக வைத்துக்கொள்ளுங்கள்…”
“சுவாமி-”
தேவி ஏதோ கேட்கத் தொடங்க, வராகமிகிரர் அவளைக் கைக்காட்டித் தடுத்தார்,
”கேள்விகளையும் விடைகளையும் பொறுமையாகப் பரிமாறிக்கொள்வோம், இப்போது இங்கிருந்து செல்வோமே?”
என்று அவர் கோயில் பிரகாரத்தைச் சுற்றித் தன் பார்வையை ஓட்டியபடியே கேட்டார்.
“சகர்கள் மறுபடி வந்துடுவாங்களா, சுவாமி?”
என்று அருண் அவரைப் பார்த்துக் கேட்க, அவர் அவனைப் பார்த்து ஒரு வசீகரப் புன்னகையை வீசினார்,
“இல்லை, உங்களைப் போல திக்ரசூதனும் இப்போது பெருங்குழப்பத்தில் இருப்பான், அவனுக்கு விடைகளைச் சொல்ல அங்கே ஒரு வராகமிகிரன் இருக்கிறானோ இல்லையோ! எப்படியோ இப்போதைக்கு அவர்கள் மீண்டும் தாக்கமாட்டார்கள்!”
”புறப்படுவோம்…”
என்று விக்ரம் வராகமிகிரரைப் பார்த்து ‘சரி’ எனத் தலையசைத்துவிட்டு நகர எத்தனிக்க, வேதாளப் பட்டனின் குரல் அவனைத் தடுத்தது,
“சுவாமி… சிம்மாசனம்?”
என்று அவன் தனக்குப் பின்னால் இருந்த கோயிலின் விமானத்தைச் சுட்டிக்காட்டியபடி வராகமிகிரரை வினவ,
“அதற்கென்ன? இந்த மகாமேருவைத் தாண்டி அதை யாராலும் எடுக்க இயலாது, அதைப் பற்றிய கவலையைப் பின்னர் பட்டுக்கொள்வோம்!”
வராகமிகிரர் அமைதியான குரலில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு விக்ரமைப் பார்த்து ‘செல்வோம்’ என்று கையசைத்தார்.
அவர்கள் கோயிலைவிட்டு வெளியே வந்தபோது அரியலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அவர்களுக்காகக் காத்திருந்தார்.
தேவி அவர் முன் சென்று காவலர் வணக்கம் செய்துவிட்டுப் பேசினாள். சத்தீசும் அவ்வாறே சென்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அருகில் நின்று கொண்டார்.
மற்றவர்கள் அமைதியாக அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டு தொலைவில் நின்றிருந்தனர்.
சற்று நேரத்திற்குப் பின் தேவி இவர்களிடம் வந்தாள்,
“எஸ்.பி. நம்மளை அவர் கூட வரச்சொல்றார், ஹையர் அப்ஸ் மினிஸ்டர்ஸ் மீடியானு எல்லோரும் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காங்களாம், நாம அவங்களுக்கு நிலைமையை விளக்கனும்…”
என்று அவள் சொல்ல, விக்ரம் சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு நிமிர்ந்தான்,
“நான் பார்த்துகுறேன், இரு…”
என்றுவிட்டு கண்காணிப்பாளரிடம் சென்றான். அருணும் அவனோடு சேர்ந்துகொண்டான்.
காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டவன் சற்று நேரம் ஏதோ பேசினான். பின் தனது கைப்பேசியில் அவன் யாரையோ அழைத்துப் பேசிக் கைப்பேசியை அவரிடமும் தர, அவரும் உடல்மொழியில் மரியாதை தெரிய பேசிவிட்டுக் கைப்பேசியை விக்ரமிடம் திருப்பிக்கொடுத்தார். பின் விக்ரமிடம் அவரது தோரனை மாறியிருந்தது. விக்ரமும் அருணும் அவரோடு கைக்குலுக்கிவிட்டுத் திரும்ப வந்தனர்.
“டன்! இப்போதைக்கு நாம போலாம், அவங்க ஹேண்டில் பண்ணிப்பாங்க, அப்புறம் பொறுமையா உயரதிகாரிகள் கூடவும் அமைச்சர்கள் கூடவும் பேசிக்கலாம்…”
என்று தேவியிடம் சொன்னபடி விக்ரம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையை நோக்கி நடந்தான்.
”இரு வரேன்…”
என்றபடி தேவி ஓடாத குறையாக சத்தீசின் அருகே சென்றாள். அவர் கோயிலுக்குள் அவர்களோடு போராடிய அந்த ஐம்பது காவல்வீரர்களையும் திரட்டி வைத்துக்கொண்டு அவர்களைப் பாராட்டி நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். தேவியும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் கண்காண்னிப்பாளரிடம் சென்று சம்பிரதாயமாக விடைபெற்றுக்கொண்டு வந்தாள்.
சத்தீசும் அவ்வாறே செய்துவிட்டு வந்தார். அவர் அந்தக் காவலர்வீரர்களின் விவரங்களை மறக்காமல் பெற்றுக்கொண்டிருந்தார்.
“போலாம்… ஆமா, யார் கூட பேசின ஃபோன்ல?”
என்றபடியே விக்ரமைச் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் தேவி.
“சீஃப் செக்ரட்டரி கிட்ட, அவர் எங்க அப்பாவோட ஃப்ரெண்டு, இப்போதைக்குச் சமாளிச்சுப்பார்!”
என்றபடியே விக்ரம் பின்னால் திரும்பி மற்றவர்கள் வருகிறார்களா என்று பார்த்தான்.
எல்லோரும் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.
”கேப் (cab) புக் பண்ணவா?”
என்று கேட்டபடியே அருண் நெருங்கி வந்தான்.
[the_ad id=”6605”]
“இந்தப் பாதி ராத்திரில இங்க கேப்லாம் கிடைக்காது, இருங்க, போலிஸ் கார் கேக்குறேன், அதுலயே போவோம்…”
என்று தேவி அவனுக்குப் பதில் சொன்னபடியே திரும்பி நடக்க எத்தனிக்க, வராகமிகிரர் புன்னகையுடன் அவள் முன் வந்து தடுத்தார்.
“நீங்கள் எங்குத் தங்கியிருக்கின்றீர்கள்?”
தேவி ’என்ன செய்யப் போகிறார்’ என்ற சந்தேகப் பார்வையுடன் அவரைப் பார்த்தபடியே தேவி தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் பெயரையும் முகவரியையும் சொன்னாள்.
வராகமிகிரர் கண்களை மூடி, நெற்றிப்பொட்டில் வலது கையை வைத்தபடி சில கேள்விகள் கேட்டு அந்த விடுதியின் அடையாளங்களை உறுதிபடுத்திக்கொண்டார்.
“சரி, செல்வோமா?”
என்று மெள்ளக் கண்களைத் திறந்தபடியே அவர் கேட்கவும், ‘எப்படி?’ என்பதைப் போல அவர்கள் அவரைப் பார்த்தனர்.
அவர் ஒன்றும் சொல்லாமல் செழியனையும் வேதாளப் பட்டனையும் புன்னகையுடன் ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் கைகளை உயர்த்திக் காற்றில் வட்டமிடுபவரைப் போலப் பெரிதாகச் சுழற்றினார்.
அவர்களைச் சுற்றியிருந்த பெரிய கோவிலும், வீடுகளும், கட்டடங்களும், மரமும், சாலையும், வண்டிகளும், வானமும் ஏதோ திரைச்சீலையில் வரையப்பட்ட ஓவியம் காற்றில் அசைவதைப் போல அலையலையாக அசைந்தன.
அசையும் போது அவற்றின் காட்சி மாற, அவர்களைச் சுற்றி அவர்களின் விடுதி அறையின் காட்சி அலையலையாய் ஆடியது இப்பொது…
சுற்றுச் சூழல் அலையாய் ஆடுவது நின்றபோது அவர்கள் விடுதி அறைக்குள் இருந்தார்கள். தேவி கண்கள் விரிய வாய் பிளந்தபடி திகைத்து நின்றிருந்தாள். மற்றவர்களுக்கும் அதே திகைப்பு இருந்தது, செழியனையும் வேதாளப் பட்டனையும் தவிர!
வராகமிகிரர் கையை இறங்கிவிட்டு தேவியைப் பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார்.
“ஓய்வெடுங்கள்… நாளை காலையில் ஆரவமரப் பேசுவோம்…”
என்றபடி அவர் நகரத் தொடங்க, தேவி அவரைத் தடுப்பதைப் போல அவர் முன் சென்று நின்றாள்.
“சுவாமி, இப்ப எங்களுக்குத் தேவை ஓய்வு இல்ல, விளக்கம்தான்…”
“சரி, உன் விருப்பம்… என்ன தெரிய வேண்டும், கேள்?”
வராகமிகிரர் புன்னகையுடன் பதில் சொன்னபடியே அங்கிருந்த ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டார்.
[the_ad id=”6605″]
எதை முதலில் கேட்பது என்ற குழப்பத்தில் தேவி சற்று யோசனையுடன் மௌனமாக நிற்க, மற்றவர்கள் ஆளுக்கொரு இருக்கையில் வராகமிகிரரைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
அருண் ஓசைப்படாமல் விடுதி வரவேற்பைத் தொடர்பு கொண்டு உணவு கிடைக்குமா என்று விசாரித்தான், பழச்சாறு வேண்டுமானால் ஏற்பாடு செய்து தர முடியும் என்று பதில் கிடைக்க, ‘என்னவோ ஒன்று, கொண்டு வாருங்கள்’ என்று முடித்தான்.
தேவி ஒரு முடிவிற்கு வந்தவளாக வராகமிகிரரை கூர்ந்து நோக்கினாள்,
“நீங்க செழியனையும் கூட்டிட்டு இந்த ரெண்டு நாளா எங்க போயிருந்தீங்க?”
“உன் அடுத்த கேள்விக்கான விடையைத் தேடி!”
வராகமிகிரர் ஒரு பெரிய சிரிப்புடன் பதில் சொன்னார்.
“என்- வாட்?”
என்று தேவி புரியாமல் அவரைப் பார்க்க, அவர் தன் சிரிப்பு மாறாமல் தொடர்ந்தார்,
“நீ அடுத்து என்ன கேட்க உத்தேசித்திருந்தாய்?”
தேவி தன் கையிலிருந்த மன்யாக்னியையும் விக்ரமின் தோளிலிருந்த காயத்தையும் ஏறிட்டாள்.
“விக்ரமனின் கையில் இருந்த மன்யாக்னி சகனைத் தாக்கவில்லை, உன் கைக்கு வந்தபின் அதுவே அவனைத் தாக்கியது…”
வராகமிகிரர் சொல்ல தேவி ‘ஆம்’ என்பதைப் போலத் தலையை ஆட்டினாள்,
“அதைவிட, விக்ரமனின் அக்னி கவசத்தைத் தாண்டி சகனின் வாள் எப்படித் தாக்கியது?”
தேவி சிந்தனையுடன் ஆமோதித்தாள்.
“இதற்கு விடை தேடித்தான் நானும் பட்டியும் இமாலயம்வரை சென்றோ-”
”அப்ப இதெல்லாம் நடக்கும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”
தேவி இடைவெட்டினாள்.
வராகமிகிரர் உடனே பதில் சொல்லாமல் அவளைச் சில நொடிகள் உற்றுப் பார்த்தார்.
“இன்னின்ன இப்படி இப்படித்தான் நடக்கும் என்று முன்பே அறிந்தவள் மாகாளி பராசக்தி ஒருத்திதான், நான்-”
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேதாளப் பட்டன் ‘க்ளுக்’ என்று ஒரு அமுக்குச் சிரிப்பு சிரித்தான்.
வராகமிகிரர் கண்கள் கனலாய் அவனை முறைத்தார். மற்றவரும் அவனைச் சற்றே குழப்பத்துடனும் சினத்தோடும் பார்த்தனர்.
“என்ன பட்டா? ஏன் இந்த ஏளனச் சிரிப்பு? தேவி மாகாளிக்கு முக்காலமும் தெரியும் என்பதில் உனக்கு ஐயமா?”
வாயிலிருந்து தீப்பொறி வராத குறையாக வராகமிகிரர் கேட்க, வேதாளப் பட்டன் பணிவுடன் வணங்கியபடியே எழுந்து நின்றான்,
“க்ஷம்யதாம் பிரபோ… க்ஷம்யதாம்! இச்சிறியேனின் துடுக்கைப் பொறுத்தருள வேண்டும், ஏதோ எண்ணி என்னவோ செய்துவிட்டேன்… அடியேனை மன்னித்துத் தாங்கள் தொடர வேண்டும்…”
என்று மிக வினயத்துடன் அவன் கேட்கவும், வராகமிகிரர் எதுவும் சொல்லாமல் அவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்தார். பின் அவனுக்குப் பதில் சொல்லாமல் தேவியைப் பார்த்துத் தொடர்ந்தார்,
“முக்காலமும் அறிந்தவள் தேவி பராசக்தி மாகாளி ஒருத்திதான் (அவர் கண்கள் மீண்டும் ஒரு நொடி வேதாளப் பட்டன் மீது சென்று திரும்பின,) அடியேனுக்கு இவை இப்படி நிகழும் என்று உறுதியாகத் தெரியாது, ஆனால், அன்று அந்த பெரும் பாழ் கட்டடத்தில் விக்ரமனின் கையில் இருந்த மன்யாக்னியிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கீற்று, அதன் திவ்யதேஜஸ், அங்கிருந்த சகரை ஒன்றும் செய்யாமல் மறைந்ததைக் கண்ட போதே எனக்குள் ஒரு ஐயம் பிறந்தது…”
சற்று இடைவெளி விட்டு அவர் தேவியை உற்றுப் பார்த்தார்,
“இப்படி நிகழும் என்று தெரிந்தே நான் உங்களை விட்டுச் செல்லவில்லை அம்மா!”
தேவியிடம் மன்னிப்பு கோரும் தொனியில் சொன்னார் அவர்.
தேவி சில நொடிகள் அவரை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்,
“ஸோ, இமய மலைக்குப் போய் என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”
“விடைகள்! காளிதாசன் மிக அழகாகக் கணித்து வைத்திருக்கிறான், தேவி மாகாளியும் துணை கொடுத்தாள்!”
வராகமிகிரர் சில நொடிகள் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தவரைப் போலக் காணப்பட்டார்.
“எ-”
தேவி பேச எத்தனிக்க வராகமிகிரர் கண்களைத் திறக்காமலே கை நீட்டி அவளைத் தடுத்தார், செழியனும் ‘அமைதி’ என்று கையசைத்தார்.
சில நொடி அங்கே அடர்ந்த மௌனம் குடி வந்தது. வராகமிகிரரே அதைக் கலைத்தார்,
”அம்மா, இந்த மன்யாக்னி விக்ரமருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? நீ யாரென்று உனக்குத் தெரியுமா?”
“நா தேவி-” என்று தொடங்கியவள், அவர் கேட்டதன் பொருள் சட்டென்று புரிந்தவளாய் மௌனமானாள்.
தன் கையிலிருந்த மன்யாக்னி மெள்ள வெப்பமேறுவதைப் போல உணர்ந்தாள். அது மிக மெல்லிய சிவப்பு நிற ஒளியோடு கண்களைக் கவரும்படி மிக இரம்மியமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது!
விக்ரமின் கணையாழியைத் தான் தொட்டபோது தன் கண்ணுக்குள் பளிச்சிட்ட காட்சிகளை அனிச்சையாக நினைவு கூர்ந்தாள் தேவி.
இன்று மாலை நடந்தவை போல அது தெள்ளத் தெளிவாக அவள் நினைவில் இருந்தது.
“சிறிது பாலையேனும் அருந்துங்கள், அத்தான்!” என்று அவள் அன்போடும் வாஞ்சையோடும் அந்த தங்கப் பால்கிண்ணத்தை நீட்டினாள்.
’வேண்டாம்’ என்று சொல்ல வாயெடுத்த விக்ரமாதித்யர் கவலை தோய்ந்த அவளது முகத்தைப் பார்த்தவுடன் தன் முடிவை மாற்றிக்கொண்டு அவளிடமிருந்து கிண்ணத்தை வாங்கி அதிலிருந்த சுவையூட்டிய பாலைச் சிறிது சிறிதாக அருந்தினார்.
“நீங்கள் ஓய்வெடுங்கள், அத்தான், நான் பிறகு வருகிறேன்…”
என்று அவரிடமிருந்து காலி கிண்ணத்தை வாங்கிக்கொண்டு எழுந்தவளை விக்ரமர் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“இரு தேவி, நீ அருகில் இருந்தால் இதமாய் இருக்கிறது!”
அவள் முகம் மலர கிண்ணத்தை அருகிலிருந்த சிறுமேசைமீது வைத்துவிட்டு, மயிற்பீலி விசிறியைக் கையில் எடுத்துக்கொண்டு விக்ரமருக்கு அருகில் கட்டிலில் அமர்ந்தாள்.
எதுவும் பேசாமல் ஆசையோடு விக்ரமரின் முகத்தைப் பார்த்தபடி, இருவருக்குமாக விசிறியபடி அவள் அமர்ந்திருந்தாள்.
[the_ad id=”6605”]
“சகர்கள் இன்னும் நம் எல்லையை விட்டுப் போகவில்லை…”
விக்ரமாதித்யர் உத்தரத்தை வெறித்தபடிச் சட்டெனத் தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் தொடங்கினார்.
சில மாதங்களுக்கு முன்புதான் உஜ்ஜைனிக்கு வடமேற்கே சகர்களுடனான போர் நிகழ்ந்திருந்தது என்பதை அவள் நன்கு அறிவாள். போர்க் காலத்தில் இவள்தானே தலைநகரின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொண்டாள்!
“ம்ம்…” என்றாள் மெல்ல.
“நேற்று எனக்கு வந்த கனவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா?”
“ம்ம்…”
“வராகமிகிரர் இன்று காலை பிரசன்னம் பார்த்தார்…”
“ம்ம்…”
அவளுக்குத் தலைநகரில் மரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தால் கூட தெரியும், விக்ரமருக்கும் இது தெரியும்!
“மாகாளி கேட்கும் பிரசாதம்…”
என்று விக்ரமர் முடிக்காமல் அமைதியானார்.
இப்போது அவள் காளியின் சன்னதியில் நின்றிருந்தாள். மாகாளியின் சிலை அவளை வாஞ்சையுடன் பார்த்துச் சிரிப்பதைப் போல இருந்தது.
விக்ரமர் அந்தப்புறத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
‘தாயே, இதோ, நீ கேட்ட பிரசாதத்தை நான் படைக்கிறேன்… என் கணவருக்கு என்றும் துணையிரு!’
அவள் கையிலிருந்த விக்ரமர் அவளுக்கு ஆசையாகப் பரிசளித்திருந்த அந்த மெல்லிய வளைந்த வாள் அங்கு எரிந்து கொண்டிருந்த தொங்கு தீபத்தின் ஒளியில் மின்னியது.
“மதனமாலை…”
தேவியின் உதடுகள் அனிச்சையாய் உச்சரித்தன.
வராகமிகிரரும் செழியனும் அவளைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். விக்ரமும் அருணும் விஷாலியும் வியப்போடு பார்த்தனர்.
“ஆம் தேவி, இந்த மன்யாக்னிக்காக மாகாளிக்கு உன்னையே பிரசாதமாக கொடுத்த அதே மதனமாலைதான் நீ!”
வராகமிகிரர் அவளை ஆமோதித்துச் சொன்னார்.
“ஆனா…”
என்று தேவி தயக்கத்துடன் இழுக்க,
“மன்யாக்னி உன் தியாகத்தால் கிடைத்த வரமம்மா… அதனால்தான் அது உன் கையில் இன்னும் அதிக சக்தி பெற்று இயங்குகிறது!”
“ஆனா… சகனோட ஆயுதம் எப்படி விக்ரமைத் தாக்கிச்சு?”
அருண் இடையிட, வராகமிகிரர் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, வேதாளப் பட்டனைப் பார்த்தார், அவன் ‘ஓ… சரி’ என்பதைப் போலத் தலையை ஆட்டினான்,
“விக்ரமாதித்யர் கிட்ட தோற்றுப்போன சகர்கள் திரும்ப அவங்க நாட்டுக்குப் போகல…”
என்று பட்டன் விக்ரமைப் பார்த்துக்கொண்டே தொடங்கினான்,
“கூர்ஜர நாட்டோட மேற்குல இருந்த ஒரு காட்ல அவங்க பாசறை அமைச்சுத் தங்கியிருந்தாங்க, அவங்க அரசர் ஹுமவர்கன் அந்தப் பாசறைலயே இறந்தார், தாய்நாட்டுக்குத் திரும்பப் போய் ஆட்சி பண்ணும்படி அவர் தன் மகன் திக்ரசூதன் கிட்ட சொன்னார், ஆனா, அவன் அதைக் கேக்கல, விக்ரமாதித்யரப் பழி வாங்காம பாரத தேசத்தோட எல்லையத் தாண்டமாட்டேன்னு சபதம் பண்ணிட்டு அவன் ஒரு யாஸ்னா பண்ணான்… அவங்களோட கடவுளுக்குத் தன்னைத் தானே அவன் அந்த யாஸ்னால பலிகொடுத்துக்கிட்டான்… அவன் வழிபட்ட கடவுள்- ஃபர்வாஷி…”
அவன் சற்று நிறுத்தி அவர்களை நோக்கினான், யாரும் எதுவும் சொல்லாமல் அவன் சொல்வதைக் கவனித்தனர்.
“ஃபர்வாஷி-ன்றது வேற யாருமில்ல, பராசக்திதான்!”
தொடரும்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.