அவர்களைச் சுற்றி இருந்த காட்சி அலையடித்து ஓய்ந்த போது அவர்கள் வாராங்கல் கோட்டைக்கு வெளியே நின்றிருந்தார்கள்.
அதைப் பார்த்தவுடன் திக்ரசூதனின் முகத்தில் குழப்பமும் கோவமும் தாண்டவமாடின.
விக்ரம் புன்னகைமாறாமல் திக்ரசூதனின் தோளில் வைத்த கையால் அவனை மெள்ள உந்தினான்,
“வா… திக்ரசூடா…”
விக்ரம் முன்னால் இருந்த தோரண வாயிலை நோக்கி நடக்க எத்தனிக்க, திக்ரசூதன் அசைந்துகொடுக்காமல் நின்றான்.
“தயங்காம வாப்பா… உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்… ஏதாச்சு பண்றதுனா கங்கைகொண்ட சோழபுரத்துல உன் படை மொத்தத்தையும் வெட்டி வீழ்த்தினா மாதிரி உன்னை வீழ்த்தியிருப்பேனே… இப்ப ஆட்டமே வேற… வா…”
”விக்ரம், என்னையா நடக்குது இங்க? நீயும் வராக்ஸும் செமயா ஏதோ பிளான் பண்ணிருக்கீங்க போல? ஏன் எங்களுக்குலாம் சொல்லல?”
தேவி கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் பொய்யும் கலந்த ஒரு கோவத்தோடு விக்ரமை முறைத்தாள்.
“சாரி மா… இதெல்லாம் சட்டுனு தோனி, சட்டுனு முடிவு பண்ண விஷயம்… உங்கக்கிட்ட சொல்ல நேரம் அமையல… தப்புதான்… பர்கிவ் மி… இப்ப எல்லாத்தையும் விளக்கிடுறோம்! திக்ரா, வா…”
விக்ரம் தேவியிடம் கெஞ்சலாகக் கேட்டுவிட்டு மீண்டும் திக்ரசூதனை முதுகில் கை வைத்து உந்தினான்.
“விக்ரமா… என்னால் இந்தத் தோரண வாயிலைத் தாண்டி வர இயலாது என்பது உனக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாததைப் போல விளையாடுகிறாயா? உன்னிடம் தோற்ற அவமானத்தில்தான் என் தந்தை தாய்நாடு திரும்பாமல் இறந்தார், இப்போது என்னையும் அதே அவமானத்திற்கு நீ ஆட்படுத்துகிறாய்! எங்கள் குலம் வீர குலம்… போரில் தோற்று வாழ்வதைவிட இறப்பதே மேல் என்ற கொள்கை உடையவர்கள் நாங்கள்… அந்த வீரத்தின் அருமை புரியாமல்தான் நீ என்னைத் தோற்கடித்தும் கொன்றுவிடும் தைரியமின்றிக் கோழையாக இருக்கிறாய்…”
திக்ரசூதன் மனித உருவில் இருக்கும் நெருப்புச்சுவாலையைப் போல கோவத்தில் கொதித்தான்.
“திக்ரா… உன்ன அவமானப்படுத்தனும்னு நான் நினைக்கல… உன்ன என் விருந்தாளியாத்தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்… என்னை நம்பி என்னோட வா…”
திக்ரசூதனின் கோவத்தையும் அவமான உணர்ச்சியையும் பார்த்து விக்ரமின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்திருந்தாலும், அவனது குரல் நிதானமாக வாஞ்சையோடு இருந்தது.
”நீ உண்மையில் என்னை விருந்தாளியாக எண்ணுவதாக இருந்தால் என்னகு ஒரு உதவி செய், என்னைத் தோற்கடித்த நீயே உன் வாளால் என்னை வெட்டி வீழ்த்திவிடு, அதற்கு உனக்குத் துணிவில்லை என்றால் வாளை என்னிடம் தா, நானே என் கதையை முடித்துக்கொள்கிறேன்…”
திக்ரசூதன் தனது கோவத்தில் சிறிதும் குறையாமல் வீம்பாய் நின்றான்.
“ஹே… என்ன நீ ஓவரா பேசிட்டு இருக்க… விக்ரம் உனக்கு மனசில்லனா வாளை என்கிட்ட குடு, இவன ஒரே வெட்டா வெட்டிப் போட்டுறேன்… சும்மா இவன்கிட்டப் போய் அன்பா பேசிட்டு…”
தேவி திக்ரசூதனை முறைத்தபடி விக்ரமை நோக்கிக் கைநீட்டினாள்.
விக்ரம் அவள் கையை மெள்ள இறக்கிவிட்டு, மீண்டும் திக்ரசூதனின் தோளில் நட்புடன் கைவைத்தான்,
“திக்ரா… விக்ரமாதித்யனா நான் எத்தனையோ போர்ல எத்தனையோ பேரை வெட்டி வீழ்த்தியிருக்கேன், என் தம்பி பட்டியின் தலைய நானே வெட்டிருக்கேன், என் தலைய நானே வெட்டிக் காளிக்கு அரிகண்டம் கொடுத்திருக்கேன்… உன்ன வெட்டி வீழ்த்த துணிவில்லாமலோ, தெம்பில்லாமலோ நான் உன் கூட பேசிட்டு இருக்கல… இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லனு புரிஞ்சதாலத்தான் நான் உன்னோடு பேசிட்டு இருக்கேன்… உனக்கும் அது புரியனும்… அதுக்கு நீ உள்ள வரனும்… வா…”
விக்ரம் திக்ரசூதனைக் கூர்மையாகப் பார்த்தபடி நின்றான். அவனை நகரச் செய்ய அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
திக்ரசூதன் எதுவும் பேசாமல் விக்ரமை முறைத்தபடி நின்றான்.
“ஹ்ம்ம்ம்… சரி, நீ உள்ள வர வேணாம், என் கேள்விக்குப் பதில் சொல்லு… எதுக்காக நீ உன்னையும் உன் படைகளையும் யாஸ்னால தியாகம் பண்ணிக்கிட்டு மறுபடி வந்த?”
விக்ரம் கேட்டதும் திக்ரசூதன் சில நொடிகள் அவனைக் கண்ணோடு கண் பார்த்தபடி நின்றான். பின் ஆழ்ந்த சிந்தனையோடு பேசினான்,
“உன்னைப் பழி வாங்க… பிற நாடுகளைப் போரில் வீழ்த்துவது எங்கள் மரபு… போரில்தான் எங்களுக்குப் பெருமை… உங்களைப் போல தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளும் அரசர்கள் அல்ல நாங்கள்… நாங்கள் போர்க்குடிகள்… வெற்றி அல்லது மரணம், இந்த இரண்டில்தான் பெருமை எங்களுக்கு… அப்படித்தான் மத்தியதரை நாடுகளை எல்லாம் வென்று உன் நாட்டிற்குள் நாங்கள் வந்தோம்… ஆனால், நீ வெறும் வீரத்தை மட்டும் கொள்ளாது பலவகை மாய வித்தைகளையும் வைத்திருந்தாய்… உன்னிடம் என் தந்தை தோற்றார்… போர்க்களத்தில் சாகும் வீரமரணத்தை நீ அவருக்குத் தரவில்லை… புண் வந்து நோய்வாய்ப்பட்டு இறக்கும் கீழ்த்தரமான சாவு அவரை ஆட்கொண்டது… அந்த அவமானத்தால் அவர் என்னையும் நாடு திரும்பச் சொன்னார்…
“என் படையில் கால்நடைகளைப் பராமரிக்கும் கடைகோடி வீரனுக்குக் கூட இந்தத் தோல்வியோடு தாய்நாடு திரும்ப மனமில்லை… ஒன்று உன்னோடு மீண்டும் போரிட்டுப் போரிலேயே இறப்பது, அல்லது தற்கொலை செய்து கொள்வது ஆகிய இரண்டு தேர்வுகளே எம்முன் இருந்தன… நான் தற்கொலையைத் தியாகமாக மாற்றினேன்… கலியுகத்தில் நீ உன் மாய வித்தைகளின் வீரியம் குறைந்து இருப்பாய் என்று கணித்தேன்… அப்போது உன்னைப் பழிவாங்கவே யாஸ்னாவில் எங்களை நாங்களே தியாகம் செய்துகொண்டோம்… எங்கள் தெய்வம் ஃபர்வாஷியின் அருளோடு உன்னை எதிர்ப்பதே எங்கள் திட்டம்…”
“ஆனா நீ நெனச்சது நடக்கல… கலியுகத்துல நான் பலவீனமாவும், நீ உன்னோட ஃபர்வாஷிக்குப் பண்ண யாஸ்னாவோட சக்தில பலம் பெற்றும் இருப்பனு போட்ட கணக்கு எங்கயோ தப்பாகிடுச்சு… சரியா?”
திக்ரசூதன் ’ஆம்’ என்று யோசனையுடன் தலையசைத்தான்.
”திக்ரா… என்கிட்ட மாய வித்தைகள் இருக்குனியே, அதெல்லாம் என்னோட தெய்வம் மாகாளியின் அருள்… உன் திட்டம் எங்க தப்பாச்சுனு நான் சொல்றேன், என்னோட மாகாளிதான் உன்னோட ஃபர்வாஷியும்!”
விக்ரம் சொன்னதைக் கேட்டதும் திக்ரசூதனின் முகத்தில் வியப்பும் குழப்பமும் கடலலைகளைப் போல வீசின.
விக்ரம் புன்னகையுடன் தொடர்ந்தான்,
[the_ad id=”6605″]
“இதக் கண்டு புடிச்சது வேதாளப் பட்டன்தான்… அவனால எல்லா மொழிகளையும் புரிஞ்சுக்க முடியும், நீ உன் மொழில ‘ஃபர்வாஷி’னு சொல்றதும் நாங்க எங்க மொழில ‘மாகாளி’னு சொல்றதும் அவன் மூளைக்குள்ள ஒரே அர்த்தத்துலதான் கேட்கும்… மாகாளியா எனக்குச் சக்திகளக் கொடுத்து உன்னைத் தோற்கடிக்க வெச்சு, ஃபர்வாஷியா உனக்கும் வரம் கொடுத்து என்னைப் பழி வாங்க ஒரு வாய்ப்புகொடுத்து, மறுபடி மாகாளியா உன்னைத் தடுக்க என்னையும் இந்தக் கலியுகத்துல அதே விக்ரமாதித்யனா அதே சக்திகளோட வர வெச்சு… இந்த விளையாட்டுலாம் ஏன்னு புரியலைல? மாகாளியோட, உங்க ஃபர்வாஷியோட நோக்கம்தான் என்னனு கேட்கத் தோனுதுல?”
விக்ரம் கேள்வியோடு திக்ரசூதனைப் பார்க்க, அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
“எல்லாத்துக்கும் பதில வேதாளப் பட்டன் வெச்சிருக்கான்… என்கூட உள்ள வந்தீனா நீ அதைத் தெரிஞ்சுக்கலாம்… நான் உன்னை அவமானப்படுத்தல, என் துணிவுலயும் பலத்துலயும் எந்தக் குறைச்சலும் இல்லனு நீ தெரிஞ்சுப்ப… நம்மளோட பழிவாங்குற விளையாட்டையும் நாம நல்ல முறைல முடிச்சுக்கலாம்…”
விக்ரம் சொன்னபடியே தோரண வாயிலை நோக்கிக் கைக்காட்டினான்.
திக்ரசூதன் விக்ரமையும் அந்தத் தோரண வாயிலையும் சில முறை மாறி மாறிப் பார்த்துவிட்டுப் பின் அதை நோக்கி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்.
விக்ரம் தேவியையும் அருணையும் பார்த்துப் புன்னகையுடன் கண்ணடித்துவிட்டு திக்ரசூதனைத் தொடர்ந்தான்.
தோரணவாயிலை நெருங்கிய திக்ரசூதன் உள்ளே செல்லத் தயங்கி நிற்க, அவன் பின்னால் வந்த விக்ரம் அவன் முதுகில் கைவைத்து மெல்ல அழுத்த இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றவரும் உள்ளே வர, முன்பு அவர்கள் பார்த்தது போல அந்த நான்கு தோரண வாயில்களுக்கு உட்பட்ட அந்த இடம் ஒரு பொன்மயமான ஒளியுடன் அழகிய சிறு நகரமாக விளங்கியது.
நான்கு தோரண வாயில்களையும் இணைக்கும் கூட்டல் குறி வடிவ பாதை ஒன்று இருக்க, அதன் நாற்சந்தியில் விக்ரமாதித்யரின் தங்க சிம்மாசனம் ஒரு சிறிய தங்கக் குன்றைப் போல மேலும் பிரகாசமாய் ஒளிவீசி அமர்ந்திருந்தது.
அதன் அருகில் பெரிதாக எதையோ சாதித்துவிட்டவனைப் போல பெமிதமும் பூரிப்பும் கலந்த சிரிப்பு நிறைந்த முகத்தோடு வேதாளப் பட்டன் நின்றுகொண்டிருந்தான்.
இவர்கள் வருவதைப் பார்த்ததும் விக்ரமை நோக்கி மெல்லக் குனிந்து வணங்கினான். பின் திக்ரசூதனையும் அவ்வாறே வணங்கினான்.
“வாங்க வாங்க… சகர்களின் அரசனாகிய திக்ரசூதருக்கு வந்தனம்… உஜ்ஜைனி பேரரசர் விக்ரமாதித்யர் தன் அன்புப் பரிசாய் இந்தச் சிம்மாசனத்தை உங்களுக்கே வழங்க முடிவு செய்துள்ளார்!”
வேதாளப் பட்டன் சிம்மாசனத்தை நோக்கிக் கையைக் காட்டியபடித் திக்ரசூதனைப் பார்த்துச் சொன்னான்.
“வாட்? என்ன விளையாடுறீங்களா? இவ்ளோ நாள் அலைஞ்சு திரிஞ்சு, அடிச்சுப்புடிச்சு இதைலாம் கண்டுபிடிச்சுக் காப்பாத்திக் கொண்டு வந்து இவன்கிட்டயே சொளையா தூக்கிக் கொடுக்குறேன்னு சொல்றீங்க?”
திக்ரசூதனையும் அருணையும் முந்திக்கொண்டு தேவி பொறிந்து தள்ளினாள்.
”த்தோ பாருங்கோ மேடம்… இதுல நேக்கு ஒன்னும் தெரியாது, த்தோ நிக்கறாரே என்னோட பாஸ், சாக்ஷாத் மிஸ்டர் விக்ரமாதித்யன், எல்லாம் அவரோட டிசிஷன், நீங்க எதானு ஷொல்றதா இருந்தா அவரண்ட பேசிக்கோங்கோ…”
வேதாளப் பட்டன் கிண்டல் தொணிக்கச் சொல்ல, தேவியின் கோவம் இன்னும் அதிகமாகியது.
“டேய், மறுபடி இப்படி ஐயர் பாஷைல பேசின… முதல்ல உன்ன வெட்டிப் போட்டுட்டுதான் அடுத்ததப் பார்ப்பேன்…”
தேவி பல்லைக் கடித்துக்கொண்டு கோவமாகச் சொல்வதைப் போலச் சொன்னாலும், வேதாளப் பட்டனின் செயற்கையான அந்தப் பேச்சு நடையைக் கேட்டு அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ளச் சிரமப்படுகிறாள் என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
“பொறுமை… பொறுமை… வேதாளப் பட்டன் சில விளக்கங்கள் வெச்சிருக்கான், அதைலாம் கொஞ்சம் பொறுமையாக் கேளு… அப்புறம் வேணும்னா கோவப்படு…”
விக்ரம் தேவிக்குப் பதில் சொல்லியவாறே திக்ரசூதனையும் பார்த்தான். அவன் ‘சரி’ என்று மெல்லத் தலையசைத்தான்.
விக்ரம் வேதாளப் பட்டனை நோக்கிச் செய்கை காட்ட, அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினான்,
“அதாவது, சக்திலயே சிறந்த சக்தி தியாகம்தான்னு நம்ம மகாராஜா விக்ரமாதித்யர் கண்டு பிடிச்சிருக்கார்… நேத்து இரவு விஷாலிக்கும் அருணுக்கும் நடந்த சர்ச்சைக்கு அப்புறம் இந்த அரிய கண்டுபிடிப்பு அவருக்குத் தோனியிருக்கு… 32 பதுமைகளின் தலைமைப் பதுமையான ரத்னாங்கின்ற பதுமை சொன்ன ஒரு கதை அவருக்கு ஞாபகம் வந்ததுல இந்த விஷயத்தை அவர் கண்டுபிடிச்சிருக்காரு… முந்தாநாள் கங்கைகொண்ட சோழபுரத்துல நடந்த சண்டைல விக்ரமரால மன்யாக்னிய வெச்சு திக்ரசூதரை தாக்க முடியல, ஆனா திக்ரசூதர் விக்ரமரோட அக்னி கவசத்தையும் தாண்டி அவரைக் காயப்படுத்தினார், அதைலாம் விட அதே மன்யாக்னிய வெச்சு தேவி திக்ரசூதரைக் காயப்படுத்தினாங்க… இதைலாம் அலசி ஆராய்ந்த போது அவரவர்களின் சக்தி அவரவர் செய்த தியாகத்தால வந்ததுனு நாங்க புரிஞ்சிக்கிட்டோம்…
“விக்ரமருக்கு மன்யாக்னி கிடைக்க காரணம் அவரது பட்டத்து அரசி மதனமாலையாரோட தியாகம், அவர் விக்ரமருக்காகத் தன்னைத் தானே மாகாளிக்கு அரிகண்டம் கொடுத்துக்கிட்டாங்க, நம்ம தேவி அக்காதான் மதனமாலையார்… அதனாலத்தான் விக்ரமர் கைல இருக்குறதோட அதிக வீரியத்தோட அவங்க கைல மன்யாக்னி செயல்பட்டுச்சு… அதே மாதிரி, நம்ம திக்ரசூதரும் தன் குலப் பெருமைக்காகவும், தன் தந்தையோட புகழுக்காகவும் தன்னைத்தானே யாஸ்னா பலிகொடுத்துக்கிட்டவர், அதனாலத்தான் விக்ரமரோட கைல இருந்த மன்யாக்னியால அவரைத் தாக்க முடியல… அதே நேரம், திக்ரசூதனுக்கு அருள் பண்ணின ஃபர்வாஷி நம்ம மாகாளியேதான், அதனாலத்தான் சிவன், விஷ்ணு, இந்திரன் அருள் பெற்ற படைகளால மட்டுமே தாக்க முடியும்ன்ற ஆற்றல் பெற்ற அக்னி கவசத்தை மீறி திக்ரசூதரால விக்ரமரைத் தாக்க முடிஞ்சுது… சரியா…”
“ஆனா, மறுபடி விக்ரமால எப்படி திக்ரசூதனை மன்யாக்னி வெச்சுத் தாக்க முடிஞ்சுது?”
தேவி ஆர்வத்தோடு இடையிட்டாள், வேதாளப் பட்டன் போலியான அயர்ச்சியோடு கண்களை உருட்டினான்,
“நான்தான் கோவையா சொல்லிக்கிட்டு வரேன்ல, அதுக்குள்ள ஏன் அவசரப்பட்டு குறுக்குக் கேள்வி கேக்குறீங்க?”
“சரி சரி, சொல்லு… சொல்லித் தொலை…”
[the_ad id=”6605″]
தேவி கிண்டலான அலுப்புடன் பதிலளித்தாள்.
வேதாளப் பட்டன் பொய்க்கோவத்துடன் அவளை முறைத்துவிட்டுத் தொடர்ந்தான்,
திக்ரசூதன் இவர்களைப் பார்த்து தலையை இடமும் வலமுமாக ஆட்டிக்கொண்டான்!
“தியாகம்! அதான் விடை! தியாகந்தான் உயர்ந்த சக்தினு புரிஞ்சுக்கிட்ட விக்ரமாதித்யர் தனக்கு உரிய இந்த சிம்மாசனத்தையும் ஆட்சியையும் திக்ரசூதனுக்கே தரதா முடிவு பண்ணார்… அந்தத் தியாகத்தின் சக்தியாலத்தான் அவரால திக்ரசூதனை ஜெயிக்க முடிஞ்சுது…”
தேவி ஏதோ கேட்க வந்து கேட்காமலே அமைதியானாள்.
வேதாளப் பட்டன் அவளை எள்ளலான புன்னகையுடன் பார்த்தான்,
“மறுபடி குறுக்குக் கேள்வியா? கேளுங்க… கேட்டுத் தொலைங்க…”
“வேணா சாமி… நான் எதுவுமே பேசல… அதான் எல்லாம் முடிவு பண்ணிட்டீங்களே, அப்புறம் எதுக்கு வளவளனு பேசிட்டு… இவனத் தூக்கி அந்த சிம்மாசனத்துல உக்கார வெச்சுட்டு வாங்க, வீட்டுக்குப் போவோம்… வேற ஏதாச்சு உருப்படியான வேலை இருந்தா பார்ப்போம்…”
தேவி ஆயாசத்துடன் சொன்னாள்.
“ஹே… டென்ஷன் ஆகாத மா… கொஞ்சம் பொறுமையா கேளு… உனக்கே நான் பண்ண முடிவு சரினு தோனும்…”
விக்ரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
தேவி ஆர்வங்காட்டாமல் ‘சரி, தொடருங்கள்’ என்று சைகை காட்டினாள். வேதாளப் பட்டன் தொடர்ந்தான்,
”தேவி அக்கா என்ன கேக்க நெனச்சாங்கனு எனக்குத் தெரியும்… ‘கலியுகத்துல திக்ரசூதனைத் தடுக்கனும், விக்ரமாதித்யரோட செங்கோல் ஆட்சி ஓங்கனும்னுதான் மாகாளி இவ்ளோத்தையும் நடத்துனா, நாமளும் மாஞ்சு மாஞ்சு அங்கயும் இங்கயும் ஓடினோம்… கடைசில அதெல்லாம் ஒன்னுமே இல்லேன்ற மாதிரி இப்படிப் பொசுக்குனு, இந்தப்பா இத நீயே வெச்சுக்கோ’னு கடல மிட்டாயக் கொடுக்குறா மாதிரி சிம்மாசனத்தைத் தூக்கிக் கொடுக்குறது நியாயமா?’ இதான் அவங்க கேள்வி… சரியான கேள்வி… இவ்ளோ பெரிய சிம்மாசனத்தைத் தூக்கிக் கொடுக்க முடியுமா? திக்ரசூதரைத்தான் தூக்கி இது மேல உக்கார வெக்கப் போறோம்… ஹா ஹா”
அவன் நகைச்சுவைக்கு அவனே சிரித்துக்கொள்ள, மற்றவர்கள் அவனை குத்திக் கிழிப்பதைப் போல முறைத்துப் பார்த்தனர்,
“சரி சரி… ஜோக்ஸ் அபார்ட்! இங்கதான் விக்ரமாதித்யரோட இரண்டாவது பெரிய கண்டுபிடிப்பு வருது… இது கலியுகம், இப்ப ஆட்சி அதிகாரம் இதுக்குலாம் பொருள் மாறிப் போச்சு… இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாடி இருந்தா மாதிரி இப்ப இங்க அரசாட்சி நடக்கல… அரசுனு சொல்லிக்கிட்டு இங்க ஆளுற அமைப்புக்கும் முழுசா அதிகாரம் இல்ல… ஆட்சிமுறையும் அதிகார மையமும் மாறிப் போச்சு… இதுல விக்ரமாதித்யர் ஆட்சியா இருந்தா என்ன, திக்ரசூதர் ஆட்சியா இருந்தா என்ன? இந்த சிம்மாசனத்துல ஏறி உக்காந்துக்கிட்டு நான் பேரரசன்னு பேருக்குச் சொல்லிக்கலாம், அதனால் ஒன்னும் மாறிடப் போறது இல்ல… இத உணர்ந்துதான் விக்ரமாதித்யர் சிம்மாசனத்தையும் ஆட்சியையும் திக்ரசூதருக்கே தந்துடலாம்னு முடிவு பண்ணிட்டார்… இதுல-”
தேவி கண்களை உருட்டுவதைக் கண்ட வேதாளப் பட்டன் தன் பேச்சை நிறுத்திக்கொண்டு அவளைக் கவனித்தான்,
அவள் ‘என்ன?’ என்பதைப் போல அயர்ச்சியுடன் கைகளை உயர்த்த,
“மறுபடி ஏதாச்சு கேள்வி இருக்கா? இருந்தா தயங்காம கேளுங்க…”
“ஒரு கேள்வியும் இல்ல… நீ உன் விரிவுரையச் சட்டுபுட்டுனு முடிச்சிக்கிட்டேனா புண்ணியமாப் போகும்… போய் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவேன்… பசிக்குது எனக்கு!”
”ஹ்ம்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டுட் தொடர்ந்தான் வேதாளப் பட்டன்,
“எவ்ளோ பெரிய விஷயம் பேசிட்டு இருக்கோம், ஒரு காவல் அதிகாரியா, விக்ரமரோட பட்டத்து அரசியா பொறுப்பா கவனிக்காம சின்னபுள்ள மாதிரி பசிக்குது, தாகமெடுக்குதுனு… ச்ச! சரி, கவனிங்க… கலியுகத்துல வந்து தோன்ற திக்ரசூதருக்கும் அருள் பண்ணிட்டு, விக்ரமரையும் வரவெச்சிட்டு, வாள் சிம்மாசனம்னு தேட வெச்சு, இப்ப இதுக்குலாம் அர்த்தமே இல்லனு தோனுறா மாதிரி மாகாளி ஏன் பண்ணா? அவளோட விளையாட்டு என்ன? இந்த நுட்பத்த விக்ரமாதித்யர் கண்டு பிடிக்கல, அடியேன் கண்டுபிடிச்சேன்… நான் படிச்ச பல பட்டங்கள்ல பிசிக்ஸும் ஒன்னு… இயற்பியல்னு தமிழ்ல அழகாச் சொல்லலாம்… அதுல ‘எண்ட்ரோபி’னு ஒரு கான்செப்ட் இருக்கு… ஒரு அமைப்போட ஒழுங்கின்மைதான் இந்த எண்ட்ரோபி… பாலைக் காய்ச்சினதுக்கு அப்புறம் அத மறுபடி பச்சைப் பாலா மாத்த முடியாது, ஏன்னா காய்ச்சின பாலோட எண்ட்ரோபி பச்சைப் பாலோட எண்ட்ரோபியவிட அதிகம், இப்படி எண்ட்ரோபி அதிகரிக்கும் போது அந்த அமைப்பின் ஒழுக்கின்மை அதிகரிக்குது… ஒழுங்குலேர்ந்து ஒழுங்கின்மைக்குப் போறதுதான் இந்த இயற்கையோட இயல்பு., நியதி… இந்த மொத்தப் பிரபஞ்சமும் ஒரு இயற்பியல் அமைப்பு… அதோட எண்ட்ரோபி அதிகரிச்சுட்டே வருது… இந்த பிரபஞ்சத்தையும் உலகத்தையும் படைச்சது கடவுள்தான், மாகாளிதான், ஆனா, அவ படைச்ச இயற்கை அவ படைச்ச விதிக்குட்பட்டே தன் ஒழுங்கின்மைல அதிகரிச்சுட்டே வந்திருக்கு, வருது…
”இதனால் இந்த உலகத்தின் மீதான மாகாளியின் கட்டுப்பாடு குறைஞ்சுட்டே வருது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாடி நம்ம கண் முன்னாடி வந்து நம்மை வழிநடத்திய மாகாளி ஏன் இப்பலாம் வரது இல்ல? ஆயிரம் ஆண்டுக்கு முன்னாடி வரைக்கும் கூட கடவுள் நேரடியா இந்தப் பூமில வாழுற சில மக்களோட பேசி அவங்களை வழி நடத்தியிருக்கார், ஆனா, அந்தத் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கு… சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கடவுளின் வழிநடத்தல் நேரடியா இல்லாம குறியீடுகல் மூலம், அசரீரி, கனவு இப்படி தாக்கம் குறைஞ்சு நிகழ்ந்திருக்கு… பிரபஞ்சத்தோட எண்ட்ரோபி அதிகமாக அதிகமாக அதைப் படைச்ச கடவுளாலயே அதைக் கட்டுப்படுத்த முடியல… அப்படினு நான் நினைக்குறேன்!
“பிரபஞ்சத்தைப் படைச்ச கடவுளாகவே இருந்தாலும் இந்தப் பிரபஞ்சத்தோட இடைவினை நிகழ்த்தும்போது அவங்களும் இந்தப் பிரபஞ்சத்தின் விதிக்குக் கட்டுப்பட்டவங்களா ஆயிடுறாங்க… அதனாலத்தான் திக்ரசூதர் பழிவாங்குற எண்ணத்தோட தன்னை யாஸ்னால பலியிட்டுக்கிட்டப்ப ஃபர்வாஷியான காளியால அவருக்கு வரம் தராம இருக்க முடியல… அவருக்கும் வரத்தைக் கொடுத்துட்டு, அவரைத் தடுக்க விக்ரமாதித்யரையும் மாகாளி அமைக்க வேண்டியதா போச்சு… ஆயிரத்து எழுநூறு ஆண்டுக்கு அப்புறம் திக்ரசூதர் உலகையே அடக்கி ஆளும் எண்ணத்தோட வருவாரு, அவர் ஆட்சிக்கு உலகம் கட்டுப்பட்டா அதுல நீதி நியாயம்லாம் இருக்காதுனு மாகாளி கணக்குப் போட்டா… ஆனா, எண்ட்ரோபி அவ கணக்கை மாத்திடுச்சு…
“திக்ரசூதர் விக்ரமரைத் தோற்கடிச்சு இந்த சிம்மாசனத்துல உக்காந்தாலும் அதனால இந்த உலகத்தோட போக்குல பெரிய மாற்றம் நிகழ்ந்துடப் போறதில்ல… இப்ப இருக்குற உலகோட எண்ட்ரோபி ரொம்ப அதிகம்… ஆனா, ஓரளவு பாரத நாட்டுல அவரோட இன்ஃப்ளூயன்ஸ், தாக்கம், இருக்கும்… ஆனா, நாங்க உணர்ந்துகிட்டா மாதிரி திக்ரசூதரும் உணர்ந்துப்பாருனு நாங்க நம்புறோம்… அதனால் அவர் ஆட்சி பண்ணாலும் தீமைகள் பெருசா ஓங்கி வளர்ந்துடப் போறதில்ல… அதனாலத்தான் விக்ரமாதித்யர் தனக்கு உரிய ஆட்சிய இவருக்கே தர முடிவு பண்ணிட்டார்…”
வேதாளப் பட்டன் சொல்லி முடித்து அங்கிருந்தவர்களைப் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சியில் இருந்தார்கள்.
”ஓ, எதற்கும் உதவாது என்று தெரிந்து இதை எனக்குத் தர முடிவு செய்துள்ளீர்கள், இதில் ஏதோ பெரிய தியாகம் என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறீர்கள்!”
திக்ரசூதன் ஏளனமாகச் சொல்ல, வராகமிகிரர் அவனருகில் வந்தார்,
“தவறு திக்ரசூதா… பட்டன் கூறியவை ஒருபுறம் உண்மை என்றாலும், இந்த சிம்மாசனத்திற்கு என்று ஒரு பண்பு இருக்கிறது… இதில் அமர்பவர்களின் நல்ல குணங்களை இது பல மடங்காகப் பெருக்கும்… சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டெடுத்த போஜன் என்ற அரசன் இதன் மீது அமர முற்பட்டபோது இதிலிருந்த பதுமைகள் அவனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தன, இதில் அமரும் பண்பு உனக்கு இருக்கிறதா என்று அவனைச் சோதித்தன… அவனும் தனக்கு அப்பண்பு இருக்கிறது என்று அவைகளுக்கு நிறுவிக் காட்டினான், பின்னரே அவை அவனை இதில் ஏறி அமர அனுமதித்தன, போஜன் தனக்குப் பின் இதில் அமரத் தகுதியானவர் என்று இராஜேந்திர சோழரைத் தேர்வு செய்து அவரிடம் இதைக் கொடுத்தான், ஆனால், அவர் இதில் அமரத் தனக்கு உரிமையில்லை என்று பெருந்தன்மையுடன் இதை தான் கட்டிய கோயிலின் கீழ் வைத்துப் பாதுக்காக்க ஏற்பாடு செய்துவிட்டார்… நல்லவர் அமர்ந்தால் அவரது நன்மையைப் பாரெங்கும் பரப்பும் இச்சிம்மாசனம் தீய எண்ணத்தோடு அமர்பவர்களின் தீய எண்ணங்களை அப்படிப் பரப்பாது… எனவேதான், இதில் நீ அமர்ந்தாலும் பரவாயில்லை என்று விக்ரமர் முடிவு செய்தார்… எல்லாவற்றுக்கும் மேலாக, நீ தீயவன் இல்லை என்று விக்ரமர் உறுதியாக நம்புகிறார்… தன்னைப் போலவே உன்னையும் எண்ணித்தான் இச்சிம்மாசனத்தை அவர் உனக்கு அளிக்க முன்வந்துள்ளார்…”
திக்ரசூதன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விக்ரமைப் பார்த்தான்,
“சரி, உங்கள் பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன்… இந்த சிம்மாசனத்தில் நானே அமர்ந்து என் ஆட்சியை உலகெங்கும் பரப்புகிறேன், அது உண்மையான அதிகாரம் கொண்ட ஆட்சியாக இருந்தாலும் சரி, மக்களின் மனத்தில் இருக்கும் நன்மை-தீமைகளை முடிவு செய்யும் சூசக ஆட்சியாக இருந்தாலும் சரி…”
திக்ரசூதன் சிம்மாசனத்தில் ஏறப் போனான்,
“திக்ரா… கொஞ்சம் பொறு… இந்த சிம்மாசனம் இப்ப முழுமையில்லாம இருக்கு, இத இப்படியே உனக்குப் பரிசளிப்பது முறையில்ல…”
என்றபடி விக்ரம் வேதாளப் பட்டனுக்குச் செய்கை காட்ட, அவன் நேராக விஷாலியின் அருகின் வந்து நின்றான்,
“மேடம், முப்பத்திரண்டு பதுமைகளும் நீங்கதான்… வாங்க… ப்ளீஸ்…”
என்று அவன் சிம்மாசனத்தை நோக்கிக் கைக்காட்ட, விஷாலி தயங்கியபடி அதன் அருகில் சென்றாள்.
”ஏறுங்க!” என்று வேதாளப் பட்டன் ஊக்குவிக்க, விஷாலி மெள்ள முதல் படியில் கால் வைத்தாள்.
[the_ad id=”6605″]
அவள் முதல் படியில் கால் வைத்ததும் அப்படியில் முதல் பதுமையின் உருவம் தோன்றியது. விதையிலிருந்து செடி வளர்வதைப் போல படியில் அப்பதுமையின் வடிவம் சட்டென வளர்ந்து பொலிவுற நின்றது.
கையில் தீபமேந்தி நின்ற ’பிரபாவதி’ என்ற அப்பதுமை தன் அழகிய பெரிய விழிகள் விரிய புன்னகைத்தது.
விஷாலி ஒரு சில நொடிகள் அதை ஆர்வத்தோடு பார்த்தபடி நின்றாள், பின் அடுத்த படியில் காலை வைத்து ஏறினாள்.
உடனே இரண்டாவது படியில் கந்தர்ப்பசேனா என்ற பதுமை கையில் பதாகையுடன் தோன்றி நின்று புன்னகை பூத்தது.
விஷாலி குதூகலத்தோடு மூன்றாவது படியில் கால்வைக்க அங்கு அபராஜிதா என்ற பதுமை தோன்றியது.
விஷாலி ஒவ்வொரு படியாகக் கால்பதித்து ஏற ஏற ஒவ்வொரு படியிலும் அப்படிக்குரிய பதுமை தோன்றியது.
அநங்கஜெயா, வித்யாதரி, இந்துமதி, மஞ்சுகோஷா, ஹரிமத்யா, லீலாவதி, சுகப்பிரியா, காமகாரிகா, ஜெயசேனா, போதவதி, மதனசேனா, சிருங்காரகலிகா, நரமோகினி, சுகேசி, விலாசரசிகா, காமத்துவஜா, குரங்கநயனா, மனோகரி, சௌபாக்யமஞ்சரி, பத்மாட்சி, ரூபகந்தா, இலாவண்யலகரி, மலையவதி, ஹம்சபிரபோதா, வித்யுத்பிரபா, பிகஸ்வரா, நிருபமா…
என்று விஷாலி முப்பதாவது படிவரை துள்ளித் துள்ளி ஏறினாள். ஒவ்வொரு படியின் பதுமை தோன்றி அவளைப் பார்த்துச் சிரித்தபோது அவளது உற்சாகம் இரட்டிப்பாகியது.
முப்பதாவது படியில் வந்து தயங்கி நின்றாள்.
“தைரியமாக ஏறம்மா…”
என்று வராகமிகிரர் சொல்ல, விஷாலி அதுவரை இருந்த உற்சாகம் வடிந்தவளாய் சற்றே தயக்கத்துடன் முப்பத்தொன்றாவது படியில் கால் வைத்தாள்.
அங்கு கோமளவள்ளிப் பதுமை கையில் மங்கலச் சின்னமாக வாளுடன் தோன்றியது. அதன் முகத்தில் புன்னகை இல்லை.
விஷாலி சில நொடிகள் அதை உணர்ச்சியற்றுப் பார்த்தபடி நின்றுவிட்டுப் பின் மெள்ள கடைசி படியான முப்பத்திரண்டாவது படியில் கால் வைத்து ஏறினாள்-
எதுவும் நிகழவில்லை. படி வெறுமையாகவே இருந்தது.
அதற்குரிய பதுமை தோன்றவில்லை.
கோமளவள்ளிப் பதுமை குற்றவுணர்வோடு விக்ரமை ஏறிட்டது,
“என்னை மன்னித்துவிடுங்கள் மகாராஜா… எனது பேராசையால் நான் சகர்களுக்குத் துணைபோனேன்… என் பொறாமையால் ரத்னாங்கியைப் பலிகொடுத்துவிட்டேன்… என்னை மன்னித்துவிடுங்கள் மகாராஜா…”
என்று கழிவிரக்கம் மிக்க குரலில் சொன்னது. மானிடப் பெண்ணாக இருந்திருந்தால் அதன் கண்களில் நீர் சுரந்திருக்கும். பதுமை என்பதால் அதன் முகம் உணர்ச்சியற்று இருந்தது!
ரத்னாங்கி இல்லை என்பதை விக்ரம் முன்பே உணர்ந்திருந்தான். விஷாலி முப்பத்திரண்டு பதுமைகளின் அம்சமாக இருந்தாள், அவளுக்குள் ரத்னாங்கியும் கோமளவல்லியும் ஆதிக்கம் செலுத்த முயன்று தம்முள் போட்டியிட்டன, அதனால் மற்றப்பதுமைகள் அமைதியாக இருந்துவிட்டன என்பவற்றை விக்ரம் நேற்று இரவில் அறிந்துகொண்டான்!
திக்ரசூதன் விஷாலியைக் கடத்தியபோதும் இதை உணர்ந்தேதான் கடத்தியிருந்தான், சிம்மாசனம் கிடைகக்வில்லை என்றாலும் பதுமைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விக்ரமிற்கும் சிம்மாசனம் பயனளிக்காமல் செய்துவிட அவன் திட்டம் தீட்டியிருந்தான், ஆனால், கோமளவள்ளிப் பதுமை அவனோடு கூட்டு சேர்ந்துகொண்டு ரத்னாங்கியைப் பலியிடச் செய்துவிட்டது, அதற்கு பிறகும் விஷாலியை அதுதான் ஆட்டிவைத்தது, நேற்றைய இரவில் அருணை வம்பில் மாட்டிவிட்டதும் அதுதான் என்பதை விக்ரம் தெரிந்துகொண்டிருந்தான்.
அருண் மீது விஷாலி பழி சுமத்தியபின் தேவி அருணைக் கூட்டிக் கொண்டு சென்றுவிட, இதற்கு மேலும் அமைதி காத்தல் தகாதென மற்றப் பதுமைகள் கோமளவள்ளிப் பதுமையின் ஆதிக்கத்தை மீறி விக்ரமிடம் உண்மையைக் கூறியிருந்தன. கோமலவள்ளியும் தன் தவற்றை உணர்ந்து வருந்தத் தொடங்கியிருந்தது.
இதெல்லாம் தெரிந்திருந்தும், இப்போது சிம்மாசனத்தில் மற்றப் பதுமைகளை நேரில் கண்டு, ரத்னாங்கி மட்டும் இல்லாததைக் காண்கையில் விக்ரமிற்கு நெஞ்சு பிசைந்தது.
கோமளவல்லிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்ரம் திகைத்து நின்றான்.
செழியன் முன்வந்து பேசினார்,
”தாமதமாக உணர்ந்தாலும் உன் தவறை நீ உணர்ந்துகொண்டாய், அது போதும்… நீங்கள் முப்பத்திரண்டு பேரும் சமமானவர்கள், படிகளில்தான் ஏற்றத்தாழ்வு உள்ளதே தவிற உங்களுக்குள் நம் பேரரசர் என்றும் ஏற்றத் தாழ்வு காட்டியதில்லை… உங்களைத் தன் பிரிமான மகள்களைப் போலத்தான் அவர் பாவித்தார் என்பதை நான் அறிவேன்… பொறாமையை விட்டொழி, அது என்றைக்குமே நல்லது தராது…”
”விடு பட்டி… நீ செய்தது பெரிய தப்புதான் கோமளவள்ளி, ஆனா, இப்ப நீ அத உணர்ந்துட்ட, அது போதும், நான் உன்ன மன்னிக்க ஒன்னுமில்ல… ரத்னாங்கிய இழந்துட்டோம்… இனிமே இந்த சிம்மாசனம் முழுமை அடையாது… நான் திக்ரசூதனுக்குக் கொடுத்த வாக்கும் நிறைவேறப் போறதில்ல…”
என்று விக்ரம் வருத்தமாகச் சொன்னான்.
“அண்ணா… கவலப்படாதீங்க…”
செழியன் விக்ரமைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மற்ற பதுமைகளை நோக்கி தலையசைத்தார்,
முதல் படியில் நின்ற பிரபாவதிப் பதுமை ஒருமுறை திரும்பி கோமளவள்ளியை அச்சத்துடன் பார்த்துவிட்டு மீண்டும் விக்ரமை நோக்கியது,
“மகாராஜா… ரத்னாங்கி முழுதாக அழிந்துவிடவில்லை… (விஷாலியைக் காட்டி) இவருள் நாங்கள் இருந்தபோது ரத்னாங்கியும் கோமளவள்ளியும் ஆதிக்கம் செலுத்த முந்தியதால் மற்றவர் அமைதியாக விலகி நின்றுவிட்டோம்… கோமளவள்ளி சகர்களோடு கூட்டு சேரத் திட்டம் போட்டபோதும், ரத்னாங்கியை அழிக்க முனைந்த போதும் நாங்கள் அவளை எதிர்க்கும் துணிவின்றி வாளாது இருந்தோம், ஆயினும் எங்களில் ஒருத்தியான ரத்னாங்கியை எங்களில் ஒருத்தியே அழிப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்க எம் மனம் ஒப்பவில்லை… எனவே, கோமளவள்ளி அறியாமல் நாங்கள் எங்களுக்குள் ரத்னாங்கியைப் பதுக்கிக் கொண்டோம், எங்கள் ஆற்றல்களின் சிறு சிறு பகுதிகளைச் சேர்த்து ஒரு போலி ரத்னாங்கியை உருவாக்கினோம்… சகர்கள் பலியிட்டது அந்தப் போலி ரத்னாங்கியைத்தான்… நிஜ ரத்னாங்கி எங்களுள் இருக்கிறாள்…”
என்று தயங்கித் தயங்கிக் கூறிய பிரபாவதிப் பதுமை மற்ற பதுமைகளை நோக்க, அவை அனைத்தும் கண்களை மூடி வலதுகையை நெஞ்சில் வைத்துக்கொண்டன-
பதுமைகளின் நெஞ்சு மெலிதாய் ஒளிரத் தொடங்க, விஷாலியின் உடலும் மெலிதாய் ஒளிரத் தொடங்கியது…
விஷாலியின் உடலைச் சூழ்ந்த ஒளி மெள்ளத் திரண்டு ஒரு கோளமாகி முப்பத்திரண்டாவது படியில் சேர, அங்கு ரத்னாங்கிப் பதுமை கையில் பூர்ண கும்பத்துடன் வளர்ந்து தோன்றியது…
”வந்தனம் மகாராஜா…” என்று ரத்னாங்கிப் பதுமை சொல்லவும், முழு சிம்மாசனமும் அதிக பொலிவோடு ஒளிர்ந்தது.
விஷாலி மீண்டும் பழைய உற்சாகத்துடன் ரத்னாங்கிப் பதுமையை ஒரு முறை வாஞ்சையுடன் தடவிப் பார்த்துவிட்டு, சிம்மாசனத்தைவிட்டுக் கீழ் இறங்கி வந்தாள்.
அங்கிருந்த அனைவரையுமே ஒரு மகிழ்ச்சியும் உற்சாகமும் தொற்றிக்கொண்டது.
“மகாராஜா?”
என்று வேதாளப் பட்டன் கேள்வியுடன் விக்ரமைப் பார்க்க, விக்ரம் வராகமிகிரைப் பார்த்தான்,
“சுவாமி… இன்னும் ஒரே ஒரு செயல்தான் பாக்கி…”
வராகமிகிரர் ‘ஆம்’ என்று தலையசைத்தவாறே தெற்கு தோரணவாயிலை நோக்கித் தன் கையை உயர்த்த, அது பூமியை விட்டுப் பெயர்ந்து அந்தரத்தில் நின்றது… வராகமிகிரர் தன் உயர்த்திய கையைத் திருப்ப, தெற்கு தோரணவாயிலும் அந்தரத்தில் மிதந்தபடியே 180 பாகை சுழன்றது, பின் மீண்டும் வராகமிகிரர் கையை இறக்க, தோரணவாயில் பழைய படி மண்ணுக்குள் புதைந்து பூமியில் நிலை பெற்று நின்றது – ஆனால், முன்னுக்குப் பின்னாக!
பின் வராகமிகிரர் அதே போல மேற்கு தோரணவாயிலை நோக்கித் தன் கையை உயர்த்தித் திருப்பி இறக்க, அதுவும் அந்தரத்தில் உயர்ந்து சுழன்று மீண்டும் தரையிறங்கி நிலைபெற்று நின்றது.
தேவி, அருண், திக்ரசூதன் முதலியோர் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வேதாளப் பட்டன் விளக்கினான்,
“இதுதான் நம் மகாராஜாவின் மூன்றாவது அரிய கண்டுபிடிப்பு! தோரண வாயில்களுக்குள் இருக்கும் பகுதி விக்ரமரின், சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளும் அரசரின் ஆட்சிக்குட்பட்டது, அது முழுதும் உஜ்ஜைனியாகும்… நாம் தோரண வாயில்களை பாரத தேசத்தின் நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டோம் நினைவிருக்கிறதா? ஆனால், விக்ரமர் வேறு திட்டம் வகுத்துவிட்டார்… இப்போது வடக்கு தெற்கு தோரணவாயில்களும், கிழக்கு மேற்கு தோரணவாயில்களும் ஒரே திசையை நோக்கி இருக்கின்றன, அதாவது, வடக்கு வாயிலில் நுழைந்து தெற்கு வாயில் வழியாக வெளியேற வேண்டுமென்றால் பூமியையே ஒரு சுற்று சுற்றி வர வேண்டும்… இப்படித்தான் கிழக்கு-மேற்கு வாயில்களும்… ஆக, இந்த நான்கு தோரணவாயில்களுக்கு உட்பட்ட பகுதிதான் உஜ்ஜைனி என்றால், அதுதான் விக்ரமரின் ஆட்சிக்குட்பட்டது என்றால், இப்போது முழு பூமி உருண்டையும் உஜ்ஜைனிதான், முழு உலகமும் விக்ரமரின் ஆட்சிக்கு உட்பட்டதுதான்…
“அந்த ஆட்சியையும் அவர் திக்ரசூதர்க்குப் பரிசாக அளித்துவிட்டார்… இனி திக்ரசூதர் பாடு, இந்த உலகத்தின் பாடு, வாங்க நாம் கிளம்புவோம்…”
என்றபடியே வேதாளப் பட்டன் தெற்கு வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்…
”இரு பட்டா… திக்ரசூதனை சிம்மாசனத்துல அமர்த்திவிட்டுப் போவோம்!”
விக்ரம் அவனைத் தடுக்க, திக்ரசூதன் பெரிதாக நகைத்தான்.
“விக்ரமா… இனி நான் அதில் அமர்ந்து என்ன செய்யப் போகிறேன்? எதைச் சாதிக்கப் போகிறேன்? என் நோக்கம் உன்னைப் பழிவாங்குவது, நீ தியாகம் என்று அதனை ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டாய்… வேதாளப் பட்டன் சொன்னதைப் போல, இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கின்மை நம் திட்டங்களை மாற்றிவிட்டன… இந்த சிம்மாசனத்தில் அமர்வதால் நான் உன்னை எவ்வகையில் பழிவாங்கிவிட முடியாது… ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளுக்கு முன் நீ என் தந்தையைக் கொல்லாமல் கொன்றாய், அவர் அவமானத்தோடு ஒரு நோயாளியாய் இறந்தார், இன்று நீ என்னைக் கொல்லாமல் கொல்கிறாய்… ஆனால், நான் எந்த அவமானத்தையும் உணரவில்லை… உன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை… உன் மாய வித்தைகளைவிட, உன் வாளின் பராக்கிரமத்தைவிட இது வலிமையானதாக இருக்கிறது… இதை வெல்ல நான் கற்கவில்லை… இனி கற்றுக்கொள்கிறேன்… இந்தப் புரிதலையே உன் பரிசாக நான் எடுத்துக்கொள்கிறேன்… நன்றி!”
விக்ரமின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வெளியேற முனைந்தவனை வராகமிகிரரின் குரல் தடுத்தது,
”திக்ரசூதா… மிகச் சிறப்பாகச் சொன்னாய்… உன்னைக் கண்டு என் மனம் நெகிழ்கிறது… என்னோடு வா… நான் உனக்கு குருவாய் வழிகாட்டுகிறேன்… மொட்டாய் மலர்ந்திருக்கும் உன் மனப்பக்குவத்தை முழு மலராய் விரியச் செய்கிறேன்… அதற்கு முன்…”
விக்ரமைப் பார்த்தவர்
“விக்ரமா, இந்த சிம்மாசனத்துக்கு உரியவனும் தகுதியானவனும் நீ ஒருவன் மட்டுமே… நீயே அதில் ஏறி அமர்… உன் ஆட்சியாகவே இக்கலியுகம் நலம் பெறட்டும்… பொய், வஞ்சம், பொறாமை முதலிய தீய குணங்கள் மக்கள் மனத்திலிருந்து மெள்ள அழிந்து மீண்டும் ஒரு கிருத யுகம் உன்னாலேயே பிறக்கட்டும்… செல் விக்ரமா…”
என்று தன் கையை உயர்த்தின் ஆசி வழங்கினார்.
விக்ரமும் அவரை வணங்கிவிட்டு, தேவியின் கையைப் பிடித்துக்கொண்டு சிம்மாசனத்தில் ஏறப் போனான்…
அவர்கள் ஒவ்வொரு படியாக ஏற அப்படியின் பதுமை அவர்களுக்கு வாழ்த்து கூறியது.
முப்பத்திரண்டு படிகளையும் ஏறி அவர்கள் இருவரும் சிம்மாசனத்தில் அமர்ந்தனர்.
விஷாலி நாணத்துடன் தயங்கித் தயங்கி அருணின் அருகில் வந்து நின்றாள்.
ஒரு சில நொடிகள் ஏதும் பேசாமல், எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவளைப் பார்த்த அருண், பின் முகமெல்லாம் புன்னகையாக அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
”உலகின் பேரரசர்… மாகாராஜ விக்ரமாதித்யர் வாழ்க!”
என்று வேதாளப் பட்டன் குரல் எழுப்ப, முப்பத்திரண்டு பதுமைகளும் அதை எதிரொலித்தன.
விக்ரமும் தேவியும் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி அனைவரையும் பார்த்து ஒரு புன்னகையை வீசினர்.
“சரி, எவ்ளோ நேரம் இப்படியே இங்க உக்காந்துட்டு இருக்கப் போறோம்? எனக்குப் பசிக்குது, பிரேக்பாஸ்ட் சாப்பிடவே இல்ல!”
என்று தேவி அலுத்துக்கொண்டாள்.
“ஹாஹா… சரி வா போகலாம்…”
என்று விக்ரம் எழுந்து கொள்ள, இருவரும் கீழிறங்கி வந்தார்கள்.
“அப்புறம்?”
அருண் கேட்டபடியே அருகில் வந்தான், விஷாலியின் கையை விடாமலே!
“அப்புறம் என்ன? அவ்ளோதான்… கிளம்புவோம்… பேக் டு பியிங் விக்ரம்! மீண்டும் விக்ரம்!”
விக்ரம் சொன்னபடியே சிம்மாசனத்தை நோக்கிக் கையை நீட்ட, அது சிறிய பொம்மையைப் போலச் சுருங்கி அவன் கைக்குள் வந்தது.
“ஆமா… ஆபிஸ் என்ன ஆச்சுனே தெரியல… போய்ப் பார்க்கனும்…”
அருணும் பரபரப்பாக கிளம்ப முனைந்தான்.
“உலகத்தையே உங்க கைல கொடுத்தாச்சு, தம்மாத்தூண்டு ஆபிஸ் பத்தி கவலப்படுறீங்களேடா! சில்லி பாய்ஸ்!”
விஷாலி அவர்களைச் சீண்டினாள்.
சிரிப்பிற்கு நடுவே வராகமிகிரரும் திக்ரசூதனும் விடைபெற்றுக் கொண்டு கிளம்ப, தேவி வேதாளப் பட்டனைப் பார்த்தாள்,
“தம்பி, லிஃப்ட் ப்ளீஸ்… கொஞ்சம் சென்னைல கொண்டு போய் விட்றேன்…”
“தாராளமா… கிட்ட வாங்க…”
வேதாளப் பட்டனை அனைவரும் நெருங்க, அவன் அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
“பட்டா… நேரா ஒரு நல்ல ஹோட்டல் கிட்ட போ…”
என்று தேவி கூறி முடிக்கவும் அவர்களைச் சுற்றி இருந்த வாராங்கல் கோட்டை அலையலையாய் மறையவும் சரியாக இருந்தது!
[முற்றும்]
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.