Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Part – I – Epilogue

பேரரசர் விக்ரமாதித்யர் அரவமின்றித் தனது கொலுமண்டபத்திற்கு வந்தார்.

 

ஒரு மூலையில் இருந்த ஒரேயொரு நந்தாவிளக்கின் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் கொலுமண்டபம் சற்றே இருட்டில் ஆழ்ந்திருந்தது. எல்லாம் நிழலுருவமாகவே காட்சியளித்தன.

 



Advertisement

விக்ரமாதித்யரின் மனநிலைக்கும் அந்தச் சூழலுக்கும் பொருத்தமாக இருந்தது.

 

விக்ரமாதித்யர் ஓசைபடாமல் நடந்து தனது அரியாசனத்தை நெருங்கினார். அதன் படிகளில் இருந்த பதுமைகள் விறைத்து நின்றிருந்தன. எல்லாம் உறங்குகின்றன போலும்!

Advertisement

 

Advertisement

விக்ரமாதித்யர் அவற்றைத் தொந்திரவு செய்ய விரும்பாதவராய் மெல்ல அந்த அரியாசனத்தின் படிகளில் ஏறினார்.

 

உண்மையில் அவருக்குத்தான் தொந்திரவில்லாத சூழல் தேவைப்பட்டது. அந்தப் பதுமைகளும் அதை அறிந்திருந்தன, எனவே அவை உறங்குவதைப் போலவே நின்றன, பேரரசர் வந்ததைத் தாங்கள் கவனித்ததாக அவை காட்டிக்கொள்ளவில்லை.

Advertisement

 

பேரரசர் விக்ரமாதித்யருக்கு அது நன்றாகப் புரிந்தது. அவர் புன்னகையுடன் படிகளில் ஏறி உச்சியிலிருந்த இருக்கையில் மெல்ல அமர்ந்துகொண்டார்.

 

அருகில் முப்பத்திரண்டாவது படியில் கையில் பூர்ண கும்பத்துடன் விறைப்பாக நின்ற ரத்னாங்கிப் பதுமையைப் பார்த்தார்.

 

“பதுமைகள் உறங்குவீர்களா ரத்னாங்கி?”

 

இரகசியம் பேசும் ஒற்றனைப் போல அதிக சத்தமின்றி மெல்லக் கேட்டார்.

 

ரத்னாங்கி மெள்ளத் தன் விழிகளைத் திறந்து பார்த்தது.

 

”ஓ, மகாராஜர்… வர வேண்டும், வர வேண்டும்… ஜெய விஜயீபவ!”

 

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சொன்னது. விக்ரமாதித்யர் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.

 

அங்கு வரும் போது அவர் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த சிந்தனைகளும் கவலைகளும் அவரது மகள் போன்ற அந்தப் பதுமையின் முகத்தைப் பார்த்ததும், அதன் கிண்டலான பேச்சைக் கேட்டதும் போன இடம் தெரியாமல் காணாமல் போயின.

 

பேரரசர் விக்ரமாதித்யர் நாடி வந்ததும் இதைத்தானே!

 

“நான் வந்தது உனக்குத் தெரியாதா? நீதான் முக்காலமும் உணர்ந்தவளாயிற்றே?”

 

விக்ரமாதித்யரும் குரலில் சற்று கேலியைக் கூட்டியே கேட்டார்.

 

“மன்னிக்க வேண்டும் மகாராஜா… அடியேனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் கிடையாது! நடந்து முடிந்தவற்றை மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்னால்… அவற்றையும் கதையாகக் கேட்பவருக்குச் சொல்லும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும் என்னால்…”

 

தலையைக் குனிந்து போலியான பணிவோடு சொன்னது ரத்னாங்கி.

 

“அடடா… நான் எதிர்காலத்தைப் பற்றி உன்னிடம் கேட்கலாம் என்றுதானே வந்தேன்!”

 

விக்ரமாதித்யரும் போலியான கவலையோடு சொன்னார்.

 

“தேவி பராசக்தி உஜ்ஜைனி மாகாளியின் அருள்பெற்ற, மூவுலகையும் ஒரு குடைகீழ் ஆளும் விக்ரமாதித்யரின் எதிர்காலத்திற்கு என்ன குறை வந்துவிடப் போகிறது மகாராஜா?”

 

ரத்னாங்கி இப்போது சற்று உண்மையான கவலையோடே சொன்னது.

 

“யார் கண்டார் ரத்னாங்கி? தேவி பராசக்தி, மாகாளி மனத்தில் நம்மை வைத்து என்னென்ன விளையாட்டு விளையாட எண்ணுகின்றாளோ? அவளுக்கே வெளிச்சம்! மூவுலகையும் ஆளும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தவள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று வேஷதாரியாய்த் திரியும் தண்டனையையும் கூடவே கொடுத்திருக்கிறாளே? காடாறு மாதம் திரிகையில் வணிகனாய், கவிஞனாய், வீரனாய், ஏன் பிச்சை ஏற்கும் கிழவனாய்க் கூட வேடமிட்டுத் திரிகிறேன்… வர வர தட்சனாயனம் முடிந்து மீண்டும் அரசனாய் இந்தச் சிம்மாசனத்தில் அமரும் போது இதுவும் ஒரு வேடமாகத்தான் தோன்றுகிறது ரத்னாங்கி…”

 

விக்ரமாதித்யர் அலுப்போடு சொன்னார்.

 

“எந்த வேடம் போட்டாலும் உத்தராயனத்தில் உஜ்ஜைனிக்கு வரும்போது ஏதாவது நாட்டின் இளவரசி ஒருத்தியை மனைவியாக அழைத்து வர மட்டும் நீங்கள் தவறுவதில்லை மகாராஜா… இந்த அலுப்பு உண்மைதானா?”

 

ரத்னாங்கியின் தொனியில் மீண்டும் கிண்டலும் கேலியும் ஓங்கின.

 

விக்ரமாதித்யர் ரத்னாங்கிப் பதுமையைச் சற்று முறைத்துப் பார்த்தார். அடுத்த நொடி மெலிதாய்ச் சிரித்தார்.

 

“என்னவோ மகாராஜா, ஆனால், உங்கள் கதைகளைச் சொல்ல எங்களுக்கு அலுக்கப்போவதில்லை…”

 

ரத்னாங்கி உற்சாகமாய்ச் சொன்னது.

 

“அக்கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளத்தான் நானும் ஆவலாய் உள்ளேன் ரத்னாங்கி!”

 

“நடந்தவைதான் எனக்குத் தெரியும் என்று நான்தான் சொல்லிவிட்டேனே அரசே! நடக்கப்போவதையும் சொல்லும் ஆற்றல் ஒருவனுக்கு உள்ளதே, அவனும் உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டவன்தானே? அவனை அழைத்துக் கேளுங்கள் மகாராஜா…”

 

ரத்னாங்கி கேள்வியுடன் விக்ரமாதித்யரைப் பார்த்தது.

 

விக்ரமாதித்யர் தலையை மெள்ள மேலும் கீழும் ஆட்டினார்.

 

“கேட்காமலா இருப்பேன்? அவனை எப்போதோ கேட்டுவிட்டேன்! ’காளிமாதா எனக்கு ஒரு பணி கொடுத்திருக்கிறாள் மகாராஜா, அதை முடித்துவிட்டு வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்’ என்று கூறி எங்கோ சென்றுவிட்டான் அந்த வேதாளப் பட்டன்!”

 

விக்ரமாதித்யர் அலுப்புடன் சொன்னார்.

 

ரத்னாங்கி ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றது.

 

”சரி, நீ உன் உறக்கத்தைத் தொடர், என் கவலையை நானே பட்டுக்கொள்கிறேன்!”

 

விக்ரமாதித்யர் வந்தபடியே ஓசையின்றி எழுந்து இறங்கிச் சென்றார்.

 

அன்று ஆனி கடைசி. உத்தராயணம் முடிவு. அத்தோடு விக்ரமாதித்யரின் ’நாடாறு மாதம்’ அரசாளும் காலமும் முடியும் நாள்.

 

அன்று இரவுணவிற்குப் பின் பட்டி தேரோட்ட அவர் காளி கோயிலுக்குச் சென்றார்.

 

காளியின் பாதத்தில் தனது அரசச் சின்னங்களைக் கழற்றி வைத்துவிட்டுக் காடாறு மாதம் செல்வது அவரது வழக்கம்.

 

சில சமயம் காடாறு மாதத்தில் பட்டியும் அவரோடு திரிவான். சில சமயம் வேதாளப் பட்டன் உடன் இருப்பான்.

 

விக்ரமாதித்யர் இல்லாத ஆறு மாதமும் ஆட்சிப் பொறுப்பு குருவான வராகமிகிரர், ஆஸ்தானக் கவியான காளிதாசர் மற்றும் சேனாதிபதியான அமரசிம்மர் ஆகியவரின் கையில் இருக்கும். பட்டி உஜ்ஜைனியில் இருந்தால் மகாமந்திரியாக அவனும் ஆட்சியைக் கவனித்துக்கொள்வான்.

 

அன்று விக்ரமாதித்யர் யாரையும் உடன் அழைத்துச் செல்லும் மனநிலையில் இல்லை. தனியாகவே செல்லத் திட்டமிட்டிருந்தார். அவரது மனத்தில் அண்மைக்காலமாக பல கேள்விகள் உறுத்திக்கொண்டிருந்தன. இந்த ஆறு மாதக் காலத்தில் அவற்றைப் பற்றி ஏகாந்தத்தில் சிந்திக்க விரும்பினார்.

 

”இந்தக் காடாறு மாதம் நாடாறு மாதம் ஏற்பாடு அலுத்துவிட்டது பட்டி… போகக் கூடிய எல்லா இடத்திற்கும் போய்வந்தாகிவிட்டது… கூத்தில் வேடம் கட்டுபவனைப் போல மாறி மாறி வேடம் கட்டி அலுத்துவிட்டது…”

 

விக்ரமாதித்யர் மேகமற்ற ஆடி மாத வானை வெறித்தபடிப் பேசினார். பட்டி பதிலேதும் சொல்லாமல் தேரைச் செலுத்தினான்.

 

ஒரு நாழிகையில் வண்டி காளி கோயிலை நெருங்கிவிட்டிருந்தது.

 

பட்டி வண்டியை நிறுத்திய பின்தான் விக்ரமாதித்யர் கோயிலைக் கவனித்தார்.

 

“சரிதான், நீ எனக்குப் பதில் சொல்லமாட்டாய், நான் அன்னையிடமே வினவுகிறேன்… அவள் சொல்வாள்…” விக்ரமாதித்யர் வண்டியிலிருந்து குதித்து இறங்கிக் கோயிலை நோக்கி விரைந்து நடந்தார்.

 

பின்னால் பட்டி வருகிறானா இல்லையா என்று அவர் கவனிக்கவில்லை.

 

ஊருக்கு வெளியே ஒரு சிறிய மைதானத்தில் இருந்த அந்தக் கோயிலின் அந்த நள்ளிரவின் பயங்கரத் தோற்றத்தையோ தொலைவில் கேட்கும் கோட்டான் நரிகளின் இரத்தத்தை உறைய வைக்கும் ஊளைகளையோ அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

 

அவர் கண்ணிலும் மனத்திலும் நிறைந்தது கருவறையில் தெரியும் காளியின் உருவந்தான்.

 

கருவறைக்குள் இரண்டு மூன்று சிறிய அகல்விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் மங்கிய ஒளியில் உஜ்ஜைனி மகாகாளியின் வடிவம் அழகும் பயங்கரமும் கலந்து ஒருவித ஈர்ப்புடன் காட்சியளித்தது.

 

விக்ரமாதித்யர் தாயைப் பார்த்த குழந்தையைப் போல விடுவிடுவென உள்ளே சென்றார்.

 

கருவறைக்கு அருகில் சென்று நின்றவர் அடுத்து எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே சிலை போல நின்று காளியின் முகத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

மகாகாளியின் இதழ்கள் மெல்ல அசைந்து புன்னகைத்தன.

 

“விக்ரமா…”

 

வெளியிலிருந்து செவி வழியாக மனத்திற்குள் கேட்கிறதா, அல்லது மனத்திலிருந்து செவிக்குக் கேட்கிறதா என்று புரியாமல் ஒலித்தது அந்தக் குரல். எல்லாத் திசையிலிருந்தும் வருவதாய் ஆனால் எதிரொலிகள் அற்ற ஒரே குரலாய் வருணிக்க முடியாத இசையின் சத்தமாய் ஒலித்தது அந்தக் குரல்.

 

“தாயே…” விக்ரமாதித்யர் மனத்திற்குள் நினைத்தார்.

 

“மகனே! உன் மனத்தை அழுத்தும் வினாக்களை யாம் அறிவோம்… அவற்றைத் தோற்றியதும் யாமே அவற்றிற்கு விடையாவதும் யாமே, நீ உன் கவலைகளை விட்டுவிடும் காலம் வந்துவிட்டது!”

 

அந்தக் குரலைக் கேட்கக் கேட்க விக்ரமாதித்யரின் மனம் பூரித்தது, உடலில் புளகம் பூத்தது. மனம் சிந்தனையற்று ஒருமுகப்பட்டது.

 

“விக்ரமாதித்யா! நீ சக அரசன் ஹுமவர்கனைப் போரில் வென்று வாகை சூடிவிட்டாய், ஆனால், அவனது மகன் திக்ரசூதனை மறந்துவிட்டாய்! சகர் மீண்டும் வருவர் விக்ரமா… ஆனால், இப்போது போல அவர்கள் மனிதர்களாய் வரமாட்டார்கள், தீமையின் மொத்த வடிவாக வருவார்கள்… அவர்களை அழிக்க எமது ஆயுதமாக நீதான் செயல்பட வேண்டும் விக்ரமா…”

 

“தங்கள் சித்தம் எனக்குக் கட்டளை தாயே”

 

விக்ரமாதித்யர் தனது பல கேள்விகளுக்கு இப்போதே விடைகிடைத்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தார்.

 

”மகனே! துரிதப்படாதே! சகர்கள் இப்போது வரப்போவதில்லை, திக்ரசூதன் யாரும் எண்ணியும் பார்க்காத ஒரு தீய மாந்தரீகத்திற்குத் தன்னை ஒப்புவித்துக்கொண்டுள்ளான், இன்றிலிருந்து ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் கழித்துக் கலியுகத்தின் உச்சத்தில் அவன் தன் முழுப் பலத்தோடு மீண்டு வருவான், அவனோடு சகர்ப்படையும் தோன்றி வரும்…”

 

“ஆனால் தாயே…?”

 

விக்ரமாதித்யரின் மனத்தில் எழுந்த வினாவிற்கு அவர் கேட்கும் முன்பே விடை வந்தது.

 

“ஆம்! நீ ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரம்பெற்றுள்ளாய், பட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் பெற்றான். அவனோடு நீயும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ எண்ணி அவன் யோசனைப்படி நாடாறு மாதம் காடாறு மாதம் என்று திரிகிறாய்… விக்ரமா, சகர்கள் மீண்டும் வரும் பொழுது நீதான் இருக்க வேண்டும்… எனவேதான் யாம் உனக்கோர் ஆணை தரப் போகிறோம்…”

 

“எதாயிருந்தாலும் உடனே நிறைவேற்ற சித்தமாய் இருக்கிறேன் தாயே!”

 

“யாம் அறிவோம் விக்ரமா! நீ இப்பொழுதே எமக்கு நவகண்டம் தர வேண்டும்! யாம் உமக்களித்த வாளால் உன் தலையை நீயே கொய்து எமக்குப் பலியிடு! எமது அருள் பெற்ற உன் தலையை, பராக்கிரமும் தேஜசும் நிறைந்த விக்ரமாதித்யனின் தலையை எமக்குப் பலியிடுபவன் பெறக் கூடிய பலன்களை நீயே பெற்றுக்கொள்… பட்டியை யாம் வெளியே நிறுத்தியிருக்கின்றோம், அவனது கையில் உன் தலையைக் கொடு, மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்… சகன் திக்ரசூதன் கலியுகத்தில் வரும்பொழுது நீயும் வருவாய்… உம்மை யாம் வழிநடத்துவோம்… ஜெய விஜயீ பவ!”

 

பெரும்புயலும் மழையும் காற்றும் ஓய்ந்ததைப் போலச் சட்டென ஒரு அமைதியை உணர்ந்தார் விக்ரமாதித்யர். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மகாகாளியை வணங்கினார்.

 

எழுந்து வெளியே வந்தார். பட்டி கோயிலின் வாயிலுக்கு எதிரே தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் போய் நின்றார்.

 

பட்டியின் முகத்தில் பரவசமான புன்னகை குடிகொண்டிருந்தது.

 

விக்ரமாதித்யர் அருகில் வந்து நின்றதும் பட்டி மெள்ளக் கண்களைத் திறந்தான்.

 

முகத்தில் தவழும் புன்னகை மாறாமல் விக்ரமாதித்யரை நோக்கி யாசகம் கேட்பவனைப் போலத் தன் இருகைகளையும் நீட்டினான்.

 

விக்ரமாதித்யரும் புன்னகை தவழும் முகத்தோடு மெள்ளத் தனது இடையில் இருந்த மன்யாக்னியை உருவினார்.

 

அந்த நள்ளிரவின் இருட்டில் அந்த வாள் பொன்மயமான மஞ்சள் நிறத்தில் இரம்மியமாக ஒளிர்ந்தது!

 

* * * * * * * *

  

(முதல் பாகம் முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!