Skip to content
Post Views: 736
அத்தியாயம் – 27
அந்தக் கோட்டையை நெருங்க நெருங்க , அதன் முழு அழகைக் கண்டு பிரமித்துப் போனார்கள் நால்வரும் . அந்த விலங்குகள் அவர்களை அந்தக் கோட்டைக்கு அருகே இறக்கி விட , அவர்கள் கோட்டையை நோக்கி நடக்கத் தொடங்கினர் . அவர்கள் அந்தக் கோட்டைக்குள் புகுந்து , சுற்றிலும் பார்த்தபடி செல்ல , பலநூறு ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இல்லாமல் வசித்து வந்த உயிரினங்கள் அனைத்தும் அவர்கள் நால்வரையும் கண்டு பயந்து ஓடத் தொடங்கின . அதையெல்லாம் கண்டு கொள்ளாது , அவர்கள் வேகமாக தங்கள் பாதையில் செல்லத் தொடங்கினர் .
Advertisement
அந்த இடத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்தும் , அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை .
நந்தினி , “ இந்தக் கோட்டையில இருக்கிற ஓர் இடத்தைக் கூட விடாதீங்க , எல்லா இடத்தையும் தேடுங்க ! லூனா நீ என்கூட வா , ஆதி , ஆரி நீங்க ரெண்டு பேரும் ஒரு பக்கம் தேடுங்க ” என்றாள் .
அவர்கள் இருவரும் சென்று விட , நந்தினி வேகமாக அங்குப் பக்கத்திலிருந்த , ஓர் ஆள் மட்டுமே நுழையக் கூடிய அளவுக்கு இருந்த ஒரு சிறு கதவின் அருகே சென்றாள் .
Advertisement
லூனா , “ நந்தினி ! அங்க எதுக்கு போற ? நாம இந்த பக்கம் போகணும் ” என்று கூற , நந்தினி அவளிடம் , அந்தக் கதவின் மேல் பகுதியைக் காட்ட , அதில் ‘ 121 ’ என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது .
Advertisement
லூனா , “ கண்டுபிடிச்சிட்டியா நந்தினி ? அப்புறம் ஏன் ஆதியையும் ஆரியனையும் அந்த பக்கம் அனுப்புன ?” என்று கேட்டாள் .
நந்தினி , “ ஒவ்வொரு தடவையும் , அவங்களோட உயிர வச்சி விளையாடுறதுல எனக்கு விருப்பம் இல்ல . அதான் அவங்கள வேறு இடத்துல தேடற மாதிரி அனுப்பி விட்டேன் ” என்றாள் . நந்தினியின் மனது லூனாவிற்கு புரிந்தது . ஏனென்றால் , அவளுக்கும் அந்த எண்ணம் தோன்றி இருந்தது .
நந்தினியும் லூனாவும் அந்த அறைக்குள் நுழைய , அங்கு அவர்களுக்கு ஒரு புது உலகம் காட்சி அளித்தது . அதில் அவர்களது கண்களைக் கவர்ந்தது , ஒரு பெரிய சிலையும் அதற்குப் பக்கத்தில் இருந்த ஓர் உயரமான கோட்டையும் தான் . அந்தக் கோட்டை அவர்களுக்கு வித்தியாசமாகப் பட்டதற்குக் காரணம் என்னவென்றால் , அந்தக் கோட்டை முழுவதும் கதவுகளால் நிறைந்திருந்தது . எத்தனை கதவுகள் இருக்கும் என்று எண்ண முடியாத அளவுக்கு அத்தனை கதவுகள் இருந்தன .
Advertisement
அவர்கள் அந்தச் சிலைக்கு வெகு அருகில் நெருங்கியதும் , வழக்கம் போல அந்த சிற்றரசர் உயிர் பெற்றுப் பேசத் தொடங்கினார் .
“ எனது பெயர் நிகேடர் . ஆர்ட்டர் கிரகத்திற்கு உங்களை வரவேற்கின்றேன் . ஆனால் , ஈரின் கல்லை அடையும் இறுதிக் கட்டத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் , என் கேள்விக்கு விடை அளிக்க வேண்டும் . விடையளிக்கத் தவறினால் உங்கள் நினைவுகளை நீங்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் ” என்று நிகேடர் கூற , நந்தினி தன் முடிவு சரியானது தான் என்று நினைத்துக் கொண்டாள் .
நிகேடர் தொடர்ந்து , “ உங்களுக்கு முன்னால் இருக்கும் இந்தக் கோட்டையில் , ஆயிரம் கதவுகள் இருக்கின்றன . ஒவ்வொரு நொடிக்கும் , இவை ஒரு குறிப்பிட்ட முறையில் திறக்கவும் மூடவும் செய்யும் . முதல் நொடியில் , மூடியிருக்கும் அனைத்து கதவுகளும் திறந்து விடும் . இரண்டாவது நொடியில் , இரண்டால் வகுக்கக் கூடிய எண்களைக் கொண்ட கதவுகள் திறந்திருந்தால் மூடிவிடும் , மூடியிருந்தால் திறந்து விடும் . மூன்றாவது நொடியில் மூன்றால் வகுக்கக் கூடிய எண்களைக் கொண்ட கதவுகள் அதே போல் மாறிக்கொள்ளும் . இதே போல் ஆயிரம் நொடிகள் தொடர்ந்து இந்த செயல்பாடு நடந்தால் , இறுதியில் எத்தனை கதவுகள் திறந்திருக்கும் ? எத்தனை கதவுகள் மூடியிருக்கும் ? இதற்குப் பதில் சொல்ல உங்களுக்குச் சரியாக ஒரு நிமிடம் தான் காலக்கெடு . அதற்கு நீங்கள் பதில் அளிக்காவிட்டால் அதன் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் ” என்று கூறிவிட்டு , அவர் மறுபடியும் சிலையாக மாறினார் .
அவர் சிலையாக மாறியதுமே , அவர்கள் காலைச் சுற்றி இருந்த இடம் முழுவதும் புதை குழியாக மாறியது . சிறிது சிறிதாக அவர்களது உடல்கள் தரைக்குள் இறங்க ஆரம்பித்தன .
லூனா , “ இதிலிருந்து நம்ப சக்திகளப் பயன்படுத்தி வெளிய போக முடியாது , நந்தினி . பதில் சொல்றது தான் ஒரே வழி ” என்றாள் .
நந்தினி , “ ஒவ்வொரு நொடிக்கும் Alternate ஆகிட்டே இருந்தா கடைசியில அந்த கதவுகள் எப்படி இருக்கும்னு எப்படி யோசிக்கிறது ? ஒவ்வொரு கதவா யோசிச்சா , நாம அதுக்குள்ள இறந்துவிடுவோம் ” என்றாள் .
லூனா , “ நந்தினி நீ இதுவரைக்கும் கஷ்டமான ஐந்து கட்டங்கள தனியாளா தாண்டி இருக்க , இப்பவும் உன்னால முடியும் ” என்று ஊக்கப்படுத்தினாள் .
நந்தினி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு , யோசிக்கத் தொடங்கினாள் . “ இத சால்வ் பண்றதுக்கும் ஏதாச்சும் சிம்பிளான வழி இருக்கும் . சரி இப்ப நமக்கு நல்லாத் தெரிஞ்சது என்னனா , முதல் கதவ முதல் நொடியில் திறந்ததுக்கு அப்புறமும் அது alternate ஆகாது . ஏன்னா ஒன்றுக்கு factor- உம் ஒன்னு தான் . அப்பக் கண்டிப்பா ஆயிரம் நொடிகளுக்கு அப்புறமும் முதலாவது கதவு திறந்து தான் இருக்கும் . ஆனா மீதி இருக்கிற 999 கதவுகள் ?” என்று எண்ணியவளுக்கு , மயக்கம் வருவது போல இருந்தது .
பிறகு ஏதோ தோன்ற , மனசுக்குள் சிறு கணக்கைப் போட்டாள் . அதன்பின் அவள் முகம் மலர , லூனாவிடம் , “ ஆன்சர கண்டுபிடிச்சிட்டேன் , லூனா ” என்றாள் .
“ எதை செய்றதா இருந்தாலும் , கொஞ்சம் சீக்கிரம் செய் , நந்தினி ” என்று கழுத்து வரை மண்ணில் புதைந்திருந்த லூனா கூற ,
நந்தினி வேகமாக , “ முப்பத்தி ஒன்று கதவுகள் திறந்திருக்கும் , 969 கதவுகள் மூடியிருக்கும் ” என்று கத்தினாள் . அதன் பிறகு அவர்கள் அந்த புதை குழியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டனர் .
பிறகு லூனா , “ நந்தினி , இப்ப அந்தப் பார்ச்மென்ட் எங்க இருக்கு ?” என்று கேட்கவும் , சரியாக அதே நேரத்திற்கு , அந்தக் கோட்டை இடிந்து விழத் தொடங்கியது .
நந்தினி , “ எனக்கு ஓர் இடம் சந்தேகமா இருக்கு . நான் அங்க போய் பாக்குறேன் . நீ இங்க இருந்து கிளம்பு ” என்றாள் .
லூனா , “ கண்டிப்பா உன்ன தனியா விட்டுட்டு , நான் இங்கேயிருந்து போக மாட்டேன் நந்தினி ” என்று தன் மறுப்பைத் தெரிவிக்க ,
நந்தினி , “ எனக்கு ஒன்னும் ஆகாது , லூனா . அப்படி ஆனாலும் , நீ தான் ஆதியையும் ஆரியனையும் பாத்துக்கணும் . இத நான் நந்தினியா சொல்லல , க்ரிசான்டாவா உனக்குக் கட்டளையிடுறேன் ” என்று கூறியவுடன் , பல்லைக் கடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் லூனா .
இங்கு நந்தினி வேகமாக முப்பத்தி ஒன்றாவது அறைக்குச் சென்று பார்க்க , அங்கே ஒரு பெட்டி இருந்தது . நந்தினி அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பார்ச்மென்ட்டை எடுக்க , சரியாக அந்த நேரம் ஒட்டுமொத்த கோட்டையும் இடிந்து விழுந்தது .
அதே நேரம் , அந்த அறையிலிருந்து லூனா வெளியேறியவுடன் ஆரியனும் , ஆதியும் அவளிடம் ஓடி வந்தனர் . இவ்வளவு நேரம் இருவரும் எங்கே என்று தேடிக் களைத்தவர்களின் கண்களில் லூனா பட , அவளைக் கேள்வியால் துளைத்தனர் .
ஆதி , “ லூனா ரெண்டு பேரும் எங்க போனீங்க ? நந்தினி இப்ப எங்க ?” என்று கேட்க ,
ஆரியன் , “ எதை செய்றதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ய மாட்டியா ?” என்று கோபமாகக் கேட்டான் .
லூனா , “ ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா நான் சொல்றத கேளுங்க ” என்று கூறியவள் , நடந்தது அனைத்தையும் கூறினாள் .
அதைக் கேட்ட ஆதி , “ என்ன லூனா ? அவ சொன்னான்னு அப்படியே விட்டுட்டு வந்துட்ட ?” என்று கேட்டு விட்டு , வேகமாக அந்த அறைக்குள் நுழைய , அங்கே வெறும் கற்குவியல் தான் இருந்தது .
ஆதி , “ சனா ” என்று அலறியவாறே , அந்தக் கற்குவியலை நெருங்க , அதே நேரம் , அங்கிருந்த ஒவ்வொரு சின்னஞ்சிறு கல்லும் பறக்கத் தொடங்கியது . அனைத்துக் கற்களும் நீங்கி விட , அங்கு நந்தினி ஒரு சக்தி வளையத்துக்குள் நின்றிருந்தாள் .
நந்தினியைக் கண்டதும் , ஆதி அவளைத் தாவிக் கட்டிக் கொண்டான் .
“ ஒன்னும் இல்ல ஆதி , காம் டவுன் ” என்று நந்தினி கூற , “ இனிமேல் என்ன விட்டுட்டு போன , உன்ன கொன்னுடுவேன் ” என்று ஆதி மிரட்ட , நந்தினி புன்னகைத்தாள் .
அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேற , அங்கு ஆரியனும் , லூனாவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளாத குறையாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் . அதைக் கண்ட நந்தினிக்கு , தானாகவே பெருமூச்சு எழுந்தது .
நந்தினியைக் கண்ட ஆரியன் , அவளிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொள்ள , அவனிடம் வந்த நந்தினி , “ இந்த ஒரு தடவை கோச்சுக்காதடா , அடுத்த முறை கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து போகலாம் ” என்று கூற , அப்படியும் அவன் கோபம் குறையாமல் இருந்தான் .
“ சரி எப்படி ஆன்சர் கண்டுபுடிச்சேன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்படக் கூடாது ” என்று கூற ஆரியன் சிறிது இறங்கி வந்தான் .
“ சரி … சரி … சொல்லு ” என்று ஆரியன் பெருந்தன்மையாகக் கூற , நந்தினி தான் முதலில் யோசித்ததை அவர்களிடம் விளக்கமாகக் கூறினாள் .
ஆதி , “ அப்புறம் எப்படி அரை நிமிஷத்துல எத்தனை கதவு திறந்திருக்கும்னு கண்டுபிடிச்ச ?” என்று கேட்க ,
நந்தினி , “ கொஞ்சம் சிம்பிளான விஷயம் தான் . வேற விதமா யோசிச்சா , இதுக்கு ஈஸியா பதில் சொல்லிடலாம் . சரி இப்ப கதவு திறக்கிறது O- னும் , கதவை மூடுறத C- னும் வச்சுக்குவோம் . அப்ப ஒரு கதவோட கோட் எப்பயுமே இந்த ரெண்டு லெட்டர்ஸ்ல தான் இருக்கும் . உதாரணத்துக்கு இரண்டாவது கதவோட கோட் OC (1,2), ஒன்பதாவது கதவோட கோட் OCO (1,3,9). இது மாதிரி தான் ” என்றாள் .
“ சரி அதுக்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம் ?” என்று கேட்டான் ஆரியன் .
நந்தினி , “ அந்த code- அ உன்னிப்பா கவனிச்சீங்கனா , ஒரு விஷயம் தெரியும் . அதாவது O- ன்ற code, கண்டிப்பா odd number ( ஒற்றைப்படை எண்கள் ) இடத்துல தான் வரும் . அப்டினா எந்த நம்பர்க்கெல்லாம் factor odd number- ல இருக்கோ , அந்த நம்பர்ல இருக்கிற கதவு கண்டிப்பா திறந்திருக்கும் ” என்றாள் .
லூனா , “ அப்ப odd number- ல factors இருக்குற நம்பர்லாம் எப்படி தேடுறது ?” என்று கேட்டாள் .
அதற்கு நந்தினி , “ இந்த கேள்விக்கான பதில் பார்ச்மென்ட்ல தான் இருக்கு ” என்றாள் . அதைக் கேட்டு மூவரும் விழிக்க , நந்தினி , “ அதாவது square numbers. அந்த நம்பர்க்கெல்லாம் எப்பவுமே odd number- ல தான் factors இருக்கும் . உதாரணமாக பதினாறோட factors 1,2,4,8,16. அப்ப கண்டிப்பா அந்த கதவு தெறந்திருக்கும் . இப்படியே பார்த்தா ஆயிரத்துக்குள்ள இருக்கிற பெரிய square number 961. அப்ப அதோட square root முப்பத்தி ஒன்னு . இத வச்சு தான் நான் முப்பத்தி ஒரு கதவு திறந்திருக்கும்னு சொன்னேன் ” என்றாள் .
அனைவரும் அவளிடம் தங்கள் வாழ்த்துக்களைக் கூறிய பின் , ஆதி , “ அடுத்த பார்ச்மென்ட்ல என்ன இருக்குன்னு பாரு , ஆரியா ” என்று கூற , லூனா porthole- ஐ உருவாக்கத் தொடங்கினாள் .
ஆரியன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு காகிதத்தில் , அதை டீகோட் செய்து எழுத , அதற்குள் தன் வேலையை முடித்திருந்த லூனா , “ சீக்கிரம் வாங்க , இந்த porthole மூடுவதற்குள்ள நாம போகணும் ” என்றாள் .
(1) – …. . ……. .-.. .- … – ……. … – .- –. . ……. -.– — ..- ……. -.-. — ..- .-.. -.. ……. … . .
(2) .. ……. .- — ……. – …. . ……. ..-. .. -. .- .-.. ……. –. ..- .- .-. -.. .. .- -.
(3) .– . ……. -.. . — .- -. -.. ……. – …. . ……. – …. .-. . . ……. .- -. -.. ……. – …. . ……. – …. .-. . . …
(4) .– . ……. – …. .-. . . ……. … .–. .-. . .- -.. ……. .- -.-. .-. — … … ……. – …. . ……. ..- -. .. …- . .-. … .
(5) .– . ……. .- .-. . ……. .. -. ……. . …- . .-. -.– – …. .. -. –. ……. -.– — ..- ……. -.-. — ..- .-.. -.. ……. … . .
(6) – .. — . –..– ……. -. ..- — -… . .-. … –..– ……. .- -. –. .-.. . … –..– ……. .– . ……. . -..- .–. .-. . … … ……. ..- …
(7) .– . ……. .- .-. . ……. – …. . ……. — -. . … ……. .– …. — ……. — .–. . -. ……. – …. . ……. ..- -. .. …- . .-. … .
(8) – . .-.. .-.. ……. ..- … ……. – …. . ……. – …. .-. . . ……. .- -. -.. ……. –. . – ……. .– …. .- – ……. -.– — ..- ……. .– .- -. –
(9) — .-. ……. . .-.. … . ……. -.. . .- – …. ……. .. … ……. – …. . ……. ..-. .. -. .- .-.. ……. .–. . -. .- .-.. – -.–
அனைவரும் விரைவாக அதற்குள் நுழைய , மீண்டும் ஆர்ட்டர் கிரகத்துக்கு வந்தனர் . அந்தப் பனிப் பிரதேசத்தில் நின்றிருந்த தங்களது வாகனத்துக்குள் அவர்கள் ஏற , அந்த விண்வெளி வாகனம் அந்தக் கிரகத்தை விட்டுக் கிளம்பியது . அனைவரும் மறுபடியும் ஒன்று கூட ஆரியன் அந்தக் காகிதத்தைப் பார்த்து விட்டு நந்தினியிடம் கொடுத்தான் . அதைப் படித்த அனைவரும் எந்த உணர்வையும் காட்டாமல் , அதை மறுபடியும் முழுமையாக ஒருமுறை பார்த்தனர் .
The last stage you could see
I am the final guardian
We demand the three and the threes
We three spread across the universe
We are in everything you could see
Time, Numbers, angles, we express us
We are the ones who open the universe
Tell us the three and get what you want
Or else death is the final penalty
ஆரியன் , “ இதுல சந்தோஷமான ஒரு விஷயம் என்னன்னா , இதுல எடுத்தோன The last stage you could see- னு போட்ருக்கு . அப்படின்னா இதுக்கப்புறம் எந்த பார்ச்மென்ட்டும் கிடையாது . அதே மாதிரி I am the final guardian – ன்னு இருக்கு . அப்ப இது தான் கடைசி லெவலும் ” என்றான் .
ஆதி, “ஆனா, நம்ப தான் ஏழு சிற்றரசர்களோட லெவல்ஸையும் தாண்டிட்டோமே. அப்ப இது யாரோடது ?” என்று கேட்டான்.
நந்தினி, “அகஸ்டஸ்” என்றாள்.
“ We demand the three and the threes, We three spread across the universe – அப்படின்னா ஒரு மூணு நம்பர கேக்குறாங்க . அதுமட்டுமில்லாம அதுக்கு சம்பந்தப்பட்ட வேற ரெண்டு நம்பரையும் சேர்த்து கேக்குறாங்க . அந்த மூணு நம்பரும் இந்த பிரபஞ்சம் முழுக்க பரவி இருக்குமாம் ” என்றாள் நந்தினி .
ஆதி , “ We are in everything you could see, Time, Numbers, Angles we express us – அப்படின்னா அந்த மூன்று நம்பர , நாம நம்மளோட அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம் . இன்னும் துல்லியமாக சொல்லனும்னா , அந்த நம்பர்ஸ் நாம பாக்குற நேரம் , எண்கள் , அப்புறம் Angles ( கோணம் ) இதுலலாம் கூட இருக்கும்னு போட்ருக்கு ” என்றான் .
லூனா , “ Tell us the three and get what you want, Or else death is the final penalty – எனக்கு தெரிஞ்சு இது இறுதிக் கட்டம்றதால ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நெனைக்கிறேன் . அவங்களுக்கு வேண்டிய மூண சொன்னா நமக்கு தேவையானது கிடைக்கும் . இல்லனா , மரணம் தான் இறுதி தண்டனைனு போட்ருக்கு ” என்றாள் .
இறுதி வாசகத்தைக் கண்டு அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்து விட , நந்தினி , “ We are the ones who open the universe – இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க ?” என்று கேட்டாள் .
ஆரியன் உடனே , “ ஆமா , இந்த பிரபஞ்சம் என்ன வீடா ? அதைச் சாவி போட்டு தொறக்குறதுக்கு ?” என்று கேட்டான் .
ஆதி, “உங்க எல்லாருக்கும் இந்த வித்தியாசம் தெரிலயா ?” என்று கேட்க, அனைவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.
ஆதி, “இதுவரைக்கும் நாம பார்த்த பார்ச்மென்ட் எல்லாத்துலயும் பத்து வரி இருக்கும். ஆனா, இதுல ஒன்பது வரி தான் இருக்கு” என்றான்.
நந்தினி அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் . அவள் மனதில் , ‘ The key to the universe ’ மற்றும் ‘ Nine Lines’ என்ற வாக்கியங்களே மாறி மாறி ஓட , சிறிதும் சந்தேகம் இல்லாமல் அவளுக்கு அந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது . தான் கண்டுபிடித்த பதிலோடு , மற்ற வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க , அனைத்தும் சரியாகப் பொருந்திப் போனது .
பிறகு நந்தினி , “ நாம தேடுற பதில் 369” என்றாள் . மற்ற மூவரின் முகத்திலும் ‘ எப்படி ’ என்ற கேள்வி நிறைந்திருக்க ,
நந்தினி , “ இதுக்கு ஒரே வரியில் பதில் சொல்லிடலாம் . அவங்க கேட்டதே Three and the threes தான் . அப்ப அந்த நம்பர்ல மூணோட multiples தான் இருக்கணும் . நேரம்னு பார்த்தா , ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கு . அத add பண்ணா 6 (2+4) கிடைக்கும் . அதே மாதிரி ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிஷம் இருக்கு . அத add பண்ணாலும் 6 (6+0) தான் வரும் .
இதே clock – ல பார்த்தீங்கன்னா , அது 3,6,9,12 (1+2=3 ) இதைச் சுத்தி தான் வந்துட்டே இருக்கும் . இதே நம்பர்ஸ பார்த்தீங்கன்னா எல்லா நம்பரும் , ஏதோ ஒரு step – ல இந்த 369 – க்குள்ள வந்திடும் .
இதே angles – ல சொன்னோம்னா , முக்கோணத்தோட , மொத்த angle 180 (1+8=9) . இதே மாதிரி சதுரத்துக்கு பார்த்தோம்னா 360 (3+6=9).
சோ இது மாதிரி எல்லா விஷயத்துலயும் இந்த மூனுன்ற நம்பர் வரும் . இன்னும் சொல்லப்போனால் , ஒவ்வொரு அணுவும் உருவாக அடிப்படை பொருட்கள் Electron, Proton மற்றும் Neutron . அதுவும் மூன்று பொருட்கள் தான் ” என்றாள் .
“ வாவ் ! ஆனால் இதை எப்படி கண்டுபிடிச்ச ?” என்று ஆரியன் கேட்க ,
“ The key to the universe- இத வச்சு தான் . Tesla அப்பவே 369 பத்தி சொல்லியிருக்காரு . இந்த மூணு நம்பரையும் முழுசா புரிஞ்சுகிட்டா இந்த பிரபஞ்சத்தையே புரிஞ்சிக்கலாம்னு சொல்லி இருக்காரு . புராணக் கதைகளில் கூட 369 கோட்பாடு வரும் . இன்னும் எக்ஸாக்டா சொல்லனும்னா பிரபஞ்சத்தோடு ரகசியத்தை கண்டுபிடிக்கணும்னா , அத Energy, Vibration, Frequency இது மூணு மூலமா தான் யோசிக்கணும்னு Tesla சொல்லி இருக்கார் ” என்றாள் .
லூனா , “ நந்தினி சொல்றது கரெக்ட்டு தான் . கயா கிரகத்துல இருக்குற ஏழு சிற்றரசர்கள் , பேரரசர் , செலினா இவங்க ஒன்பது பேரையும் சேர்த்து ‘ The prime nine’ – னு சொல்லுவாங்க ” என்றாள் .
லூனாவும் நந்தினி கூறியதை ஒத்துக்கொண்ட பிறகு , ஆதியும் ஆரியனும் சரி என்று தலையாட்டினர் . அதற்குப் பின் ஆரியன் அந்த எண்களை அந்த பார்ச்மென்டில் செதுக்கினான் . அந்த எழுத்துகள் மறைந்து , சில எண்கள் தோன்ற , அதை லூனாவிடம் கொடுத்தான் ஆரியன் .
அதைக் கண்ட லூனாவின் வழக்கமான எந்த உணர்வையும் காட்டாத முகத்தில் கூட அதிர்ச்சி தென்பட்டது .
நந்தினி , “ லூனா , என்னாச்சு ஏன் இப்படி அதிர்ச்சியா பார்க்குற ?” என்று கேட்டாள் .
தன்னை சமாளித்துக் கொண்ட லூனா , “ இந்தத் தடவை நாம போக போற கிரகம் , கயா கிரகம் ” என்றாள் .
மற்ற மூவரின் முகத்திலும் அதிர்ச்சி பரவ , சிறிது நேரத்தில் நந்தினி தெளிந்தாள் .
நந்தினி , “ என்ன ஆனாலும் பரவாயில்லை , நாம அந்தக் கிரகத்துக்குப் போறோம் ” என்று ஒரு முடிவுடன் கூற ,
ஆதி , “ சனா , அங்க ப்ரொமேத்தியஸ் இருப்பார் . இப்ப ஈரின் கல் கூட நம்மகிட்ட இல்ல . எப்படி அவர சமாளிக்கிறது ?” என்று கேட்டான் .
நந்தினியின் கண்களில் கோபம் ஏறியிருக்க , “ இனி நான் யாருக்கும் பயப்படுறதா இல்ல , நாம கயா கிரகத்துக்கு போறோம் ” என்று அழுத்தமாகக் கூறினாள் .
அவளை இதுவரை இப்படிப் பார்த்திராத அனைவரும் திகைக்க , ஆதி அவளைச் சமாதான படுத்த வந்தான் . அவனைத் தடுத்த லூனா , அவனை அந்த வாகனத்தைச் செலுத்துமாறு கண்ணசைவில் கூற , ஆதி எழுந்து சென்றான் . ஆரியனும் அந்த பார்ச்மென்ட்டை , தான் வைத்திருந்த மற்ற பார்ச்மென்ட்களுடன் வைக்கச் சென்றான் .
நந்தினி அப்படியே அமர்ந்து இருக்க , அவள் அருகில் வந்து அமர்ந்த லூனா , “ நந்தினி உன் நிலைமை எனக்கு புரியுது . ஆனால் , இது தான் உன்னோட destiny . உன்னோட அப்பாவும் அம்மாவும் இறந்ததற்கும் ஒரு காரணம் இருக்கு . அத மட்டும் மறந்துடாத நந்தினி ” என்றாள் .
நந்தினியின் மனதும் சிறிது சமன்பட்டிருக்க , சம்மதமாகத் தலையசைத்தாள் . லூனா , “ சரி நந்தினி , இனி நாம பிராக்டிஸ் பண்றதுக்கு நேரம் இருக்காது . அதனால நான் Combat Tactics ( சண்டை யுக்திகள் ) எல்லாத்தையும் உன் நினைவுகளோடு சேர்த்துடறேன் ” என்றாள் . நந்தினி சம்மதமாகத் தலையசைக்க , அவர்கள் இருவரும் பயிற்சி அறைக்குச் சென்றனர் .
இப்படியே அவர்கள் பயணம் தொடர , இறுதியில் அவர்கள் கயா கிரகத்திற்கு வந்தனர் . மறுபடியும் அனைவரும் ஒன்று கூட ,
லூனா , “ இந்த தடவை நாம எந்த இடத்துக்கு போறது ? மத்த கிரகம் மாதிரி , நாம இங்க அதிக நேரம் தேட முடியாது . யாராச்சும் ஒருத்தர் பார்த்து விட்டாலும் , ப்ரொமேத்தியஸுக்கு விஷயம் தெரிந்து விடும் ” என்று கூற ,
ஆரியன் , “ எங்க யாரையும் யாருக்கும் தெரியப் போறது இல்ல , அப்புறம் ஏன் கவலைப் படனும் ?” என்று கேட்க ,
அவனை முறைத்த லூனா , “ ஆனா ப்ரொமேத்தியஸுக்கு நான் இந்தக் கிரகத்தை விட்டுப் போனது தெரியும் . திரும்பி நான் இங்கே வர்றப்ப பொசய்டனோட வந்தால் , சந்தேகம் வராதா ?” என்று கேட்க ,
ஆதித்யன் , “ சரி , இப்ப கயா கிரகத்துல நமக்குத் தெரிஞ்சு ரெண்டு கோட்டை இருக்கு . ஒன்னு வெலாரிஸ் கோட்டை , இன்னொன்னு கடலுக்கு அடியில் இருக்கிற கோட்டை . இது ரெண்டுல நாம எங்க போறது ?” என்று கேட்டான் .
நந்தினி , “ இந்த ரெண்டுமே இல்லை ” என்று கூற , மூவரும் அவளைப் புரியாமல் பார்த்தனர் . நந்தினி , “ என்ன தான் இந்த இடங்கள் முக்கியமானதா இருந்தாலும் , நமக்கு வேண்டியது அகஸ்டஸோட சிலையும் செலினாவோட சிலையும் இருக்கிற இடம் தான் ” என்று கூற , மற்ற மூவரும் ஒருமித்த குரலில் , “ எழுவர் மலை ” என்றனர் .
ஆதியும் , ஆரியனும் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்கச் செல்ல , நந்தினி லூனாவிடம் , “ லூனா , இப்போ செலினா எங்க தான் இருக்கார் ? இன்னும் சில நாட்கள்ல கன்வர்ஜென்ஸ் வரப்போகுதுனு சொல்ற , அப்புறம் ஏன் அவர் தன்னை வெளிக்காட்டி கொள்ள மாட்றார் ?” என்று கேட்க ,
“ அவர கடைசியா போன தடவை , கன்வர்ஜென்ஸ் அப்பதான் பார்த்தோம் . அதுக்கப்புறம் அவருக்கு என்ன ஆச்சுன்னு யாருக்குமே தெரியாது . சில பேர் அவங்க சோல் பாக்ஸ்ல தன்னைத் தானே மறைத்துக் கொண்டதா சொன்னாங்க ” என்றாள் லூனா .
அதற்குப் பிறகு நந்தினி , பொசய்டனின் அறைக்குச் சென்றாள் . அங்கு பொசய்டன் நிர்மலமான முகத்துடன் படுத்துக் கிடக்க , அவரது கையைப் பிடித்த நந்தினி , “ இனிமேல் தான் உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது , பொசய்டன் . சீக்கிரம் எந்திரிச்சு வாங்க ” என்று கூறிவிட்டுச் செல்ல , அவரது கைவிரல்கள் அசைந்தன .
கட்டுப்பாட்டு அறைக்கு வந்த நந்தினி , அங்கு எல்லோரும் தயாராக இருப்பதைக் கண்டு , திரையைப் பார்த்தாள் . அதில் கயா கிரகம் காட்சியளிக்க , அதைப் பார்த்த நந்தினியின் உடல் சிலிர்த்தது . இதுவரை கனவிலும் , மற்றவர் நினைவுகளில் மட்டுமே பார்த்த கிரகம் இன்று முழுமையாக தன் கண்ணெதிரிலே நிற்பதைப் பார்த்தாள் நந்தினி .
லூனா, அந்த வாகனத்தின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே, “ நமக்கு எவ்வளவு நேரம் இருக்கும்னு தெரியல , எல்லோரும் வேகமா தயாராகுங்க ” என்று கூறியவுடன் , நந்தினி வேகமாகத் தனது அறைக்குச் சென்று , மூமூவை எடுத்து வந்தாள் . அவளது எண்ணம் அனைவருக்கும் புரிய , அமைதியாக நின்றனர் .
சில நிமிடங்களில் அவர்கள் கயா கிரகத்துக்குள் நுழைய, லூனா வாகனத்தின் முழு வேகத்தையும் தாண்டி, எழுவர் மலையை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள். பிறகு, அவர்கள் சில நொடிகளில் எழுவர் மலைக்கு வந்துவிட, அதன் அழகை இரசிக்க கூட நேரமில்லாமல், ஒவ்வொருவராக அதற்குள் நுழைய , அங்கு உயிரற்ற பெரிய சிலையாக செலினா காட்சியளித்தார் . அவருக்கு முன்னால் இருந்த சிறிய சிலையின் தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு இருக்க , அது ‘ அகஸ்டஸ் ’ என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர் .
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நால்வரும் யோசிக்க . அந்தச் சிலைக்கு முன்னால் ஒரு six pointed star ( ஆறு முனைகளுடைய நட்சத்திர வடிவம் ) ஒன்று வரையப்பட்டிருப்பதைக் கண்டாள் நந்தினி . அதில் ஒரு முனையில் ஏதோ ஒரு தாள் இருப்பது போல் தெரியவும் , நந்தினிக்கு அந்த யோசனை சட்டென்று உதித்தது .
நந்தினி , “ ஆரி மத்த அஞ்சு பார்ச்மென்ட்டையும் குடு ” என்று கேட்டவுடன் , அவனும் தன்னிடம் இருந்தவற்றை எடுத்துக் கொடுத்தான் . நந்தினி அவற்றை மீதமிருந்த ஐந்து முனைகளில் ஒவ்வொன்றாக வைத்தாள் . சில நொடிகளில் ஆறு பார்ச்மென்ட்டும் ஒளிர ஆரம்பிக்க , அதனுடன் சேர்ந்து அந்த star- உம் ஒளிர்ந்தது .
பின்னர் , அந்த star – க்கு நடுவிலிருந்த hexagon ( அறுகோணம் ) மட்டும் மேலே உயர்ந்தது . நந்தினியையும் , மூமூவையும் தவிர மற்ற மூவரும் உயரப் பறக்க , ஆரியன் , “ ஆஆ …” என்று கத்தியது , அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது . பின்னர் , அவர்கள் மூவரும் உடலைச் சிறிதளவு கூட அசைக்க முடியாத நிலைக்குச் சென்றனர் .
அகஸ்டஸ் சிலை வடிவத்திலிருந்து உயிர் பெற்று எழுந்து வந்து , “ என் பெயர் அகஸ்டஸ் . கயா கிரகத்தின் முதல் பேரரசன் நான் . செலினாவால் உருவாக்கப்பட்டு , டைட்டனை அழித்தவன் . ஈரின் கல்லைத் தேடி வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ! இனி உங்களுக்கும் ஈரின் கல்லுக்கும் இடையில் நான் மட்டும் தான் இருக்கிறேன் ” என்றார் .
பின்னர் தொடர்ந்து , “ அதற்கு முன் நாம் ஒரு சிறு விளையாட்டு விளையாட வேண்டும் . இரண்டு முறை விளையாடும் அந்த விளையாட்டில் , ஒரு முறை நீங்கள் வென்றால் கூட ஈரின் கல் உங்களுக்குக் கிடைக்கும் . இரண்டு முறையும் நீங்கள் தோல்வியைத் தழுவினால் , உங்கள் அனைவரின் மரணமும் இங்கு நிகழும் என்பது சர்வ நிச்சயம் . இப்போது விளையாட்டின் விதிமுறைகள் இதுதான் .
(1) இதில் இரண்டு நபர்கள் மட்டுமே விளையாட முடியும் .
(2) இந்த ஒருவர் மாற்றி ஒருவர் முறை வைத்து விளையாட வேண்டும் ” என்று கூறியவுடன் ,
அந்த அறுகோணத்தில் சின்ன சின்ன வீரர்கள் போலத் தோற்றம் அளிக்கும் சிற்பங்கள் தோன்றின .
அதையடுத்து அகஸ்டஸ் , “(3) இந்த விளையாட்டில் எத்தனை வீரர்கள் இருக்கலாம் என்பதும் , ஒரு முறையில் அதிக பட்சமாக எத்தனை வீரர்களை நகர்த்தலாம் என்பதும் உங்கள் விருப்பம் .
(4) இறுதி வீரனை அந்த அறுகோணத்திலிருந்து நகர்த்துபவர் தான் வெற்றி பெற்றவர் .
(5) ஈரின் கல் வேண்டுமென்றால் , வெற்றி பெற்ற முறையையும் விளக்கி கூற வேண்டும் ” என்றார் .
அவர் கூறிய விதிமுறைகள் அனைத்தையும் புரிந்து கொண்ட நந்தினி , அந்த விளையாட்டுக்குச் சம்மதித்தாள் .
“ இந்த விளையாட்டில் உள்ள ட்ரிக்கை எப்படியாவது முதல் முறையே கண்டுபிடித்துவிட வேண்டும் ” என்றும் நினைத்துக் கொண்டாள் . அவளுக்குத் தைரியம் அளிப்பது போல மூமூ அவள் தோளில் அமர்ந்தது .
அகஸ்டஸ் தனது பதிலை எதிர்பார்ப்பதை உணர்ந்து , நந்தினி , “ மொத்தம் இருபத்து ஐந்து வீரர்கள் , ஒரு முறையில் அதிகபட்சம் ஐந்து வீரர்களை கர்த்தலாம் . நீங்களே முதலில் தொடங்குங்கள் ” என்று தன்னை அறியாமலே கயா கிரக மொழியில் கூறினாள் .
அகஸ்டஸ் புன்முறுவலுடன், “ஒன்று” என்றவுடன், ஒரு வீரர் அந்த அறுகோணத்தில் இருந்து வெளியே வந்தார். நந்தினி சிறிது நேரம் யோசித்து விட்டு, “நான்கு” என்றாள்.
அடுத்து இருவரும் வேக வேகமாகச் சொல்லத் தொடங்கினர்.
அகஸ்டஸ், “இரண்டு”,
நந்தினி, “ஒன்று”,
அகஸ்டஸ், “ஐந்து”,
நந்தினி, “மூன்று”,
அகஸ்டஸ், “மூன்று” என்றார்.
மீதமிருந்த வீரர்களின் எண்ணிக்கையைக் கண்டு நந்தினி , அதிர்ந்து விட்டாள் . சதுரங்கத்தில் Checkmate என்பார்களே , அந்த நிலையில் தான் நந்தினி இருந்தாள் . அந்த அறுகோணத்தில் சரியாக ஆறு வீரர்கள் இருந்தார்கள் .
இதில் ஏதாவது ஏமாற்று வேலை இருக்குமா என்று யோசித்தவள் , இதுவரை அவளும் அகஸ்டஸும் நகர்த்திய வீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாள் . எல்லாவற்றையும் சேர்த்து இருபத்து ஐந்து வந்தது . இப்போது அவளால் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை மட்டும்தான் நகர்த்த முடியும் . எப்படியும் இந்த முறை அகஸ்டஸ் வெற்றி பெறுவார் என்று அவளுக்குப் புரிந்தது .
வேறு வழியின்றி , நந்தினி , “ இரண்டு ” என்றாள் .
அகஸ்டஸ் , “ நான்கு ” என்று கூறி , முதல் முறை வெற்றி பெற்றார் .
நந்தினி மிகவும் சோர்வாக உணர்ந்தாள் . இதுவரை எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் , அதிலுள்ள லாஜிக்கை கண்டுபிடித்து விடுபவள் , இப்போது நண்பர்களின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் , அவளால் அமைதியாக யோசிக்க முடியவில்லை . ஏழு கட்டங்களில் வெற்றி பெற்று விட்டு , இறுதிக் கட்டத்தில் தோல்வி பெறப் போவதை நினைத்து வருந்தினாள் .
அப்போது திடீரென்று அவள் மனதில் , “ நான்கு – இரண்டு ”, “ இரண்டு – நான்கு ” என்ற சொற்கள் , மாறி மாறி ஒலிக்க , அதற்குப் பின் அவளுக்கு அகஸ்டஸ் எப்படி வெற்றி பெற்றார் என்ற சூட்சுமம் விளங்கியது . அதில் சிறிது நேரம் மறைந்திருந்த அசாத்திய தைரியம் வெளிவர ,
நந்தினி , “ பேரரசர் அகஸ்டஸ் ! இந்த முறை முப்பத்து இரண்டு வீரர்கள் . அதிகபட்சமாக ஆறு வீரர்களை நகர்த்தலாம் ” என்று கூற , அகஸ்டஸ் தனது முறையைத் தொடங்கப் போனார் .
அவரை இடைமறித்த நந்தினி , “ அகஸ்டஸ் , இந்த விளையாட்டை ஒருவர் மாற்றி ஒருவர் விளையாட வேண்டும் என்று கூறினீர்கள் . அப்படியென்றால் சென்ற முறை தாங்கள் தான் முதலாவதாக வீரர்களை நகர்த்தினீர்கள் . இந்த முறை நான் தானே ஆரம்பிக்க வேண்டும் . வெற்றி பெற்றவர்தான் அடுத்த முறை தொடங்க வேண்டும் என்று தாங்கள் கூறியதாக எனக்கு நினைவில்லையே ?” என்று கேட்க , அகஸ்டஸின் கண்களில் மெச்சுதல் தென்பட்டது .
அவளையே தொடங்குமாறு சைகை காட்ட ,
நந்தினி , “ நான்கு ” என்றாள் .
அகஸ்டஸ் , “ இரண்டு ”,
நந்தினி , “ ஐந்து ”,
அகஸ்டஸ் , “ மூன்று ”,
நந்தினி , “ நான்கு ”,
அகஸ்டஸ் , “ ஒன்று ”,
நந்தினி, “ஆறு” என்றாள்.
மீதம் ஏழு வீரர்கள் எஞ்சி இருந்தார்கள் . இந்த முறை அகஸ்டஸ் நந்தினி விரித்த வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டார் .
அகஸ்டஸ் சிரித்துக்கொண்டே , “ வெற்றி பெற்றுவிட்டாய் , க்ரிசான்டா . இதுவரை உனக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துச் சோதனைகளையும் நீ வென்று விட்டாய் . இப்போது நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று கூறினால் , நீ ஈரின் கல்லை அடைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்றார் .
அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தினி , தான் வெற்றிபெற்ற விதத்தைச் சொல்லத் தொடங்கினாள் .
“ இத தலைகீழா யோசிச்சப்ப தான் எனக்கு புரிஞ்சது . அதாவது அதிகபட்சமாக அஞ்சு வீரர்களைத் தான் நகர்த்த முடியும்ன்றப்ப , என்னைய ஆறுன்ற இடத்துக்குக் கொண்டு வந்தீங்க . இன்னும் சரியா சொல்லணும்னா அதுக்கு முன்னாடியே , ஆறோட multiples – ஆன 12, 18, 24 இப்படியே என்னைக் கொண்டு வந்து கடைசியில நிப்பாட்டிட்டீங்க . அதுக்கு நான் நகர்த்த சொல்ற நம்பருக்கு complementary- ஆ நீங்களும் சொன்னீங்க .
இப்ப நான் நான்குனு சொன்னா , நீங்க ரெண்டுனு (6-4) சொன்னீங்க . நான் ஒன்னுனு சொன்னா , நீங்க ஐந்துன்னு (6-1) சொன்னீங்க . அந்த டெக்னிக்கை புரிஞ்சுகிட்டேன் . அதே விஷயத்தை நம்பரை மாத்தி உங்களோட விளையாடினேன் . இதுல இன்னொரு விஷயம் என்னன்னா , யார் இந்த விளையாட்ட முதல்ல ஆரம்பிக்கிறார்களோ அவங்களுக்கு நூறு சதவீதம் வெற்றி வாய்ப்பு உண்டு ” என்றாள் .
அவள் தலையைப் பரிவுடன் தடவிய அகஸ்டஸ் , “ இந்த கயா கிரகத்தின் பேரரசியாக பொறுப்பேற்பதற்கு உனக்கு முழு அருகதையும் இருக்கிறது , க்ரிசான்டா . ஈரின் கல்லை நல்ல வழியில் பயன்படுத்து ” என்று கூறிவிட்டு , பழையபடி சிலையாக மாறினார் .
அந்த அறுகோண மேடைக்கு நடுவில் ஒரு பிளவு ஏற்பட்டுத் திறந்தது . அதிலிருந்து ஒரு பெட்டி வெளிவர , அதே சமயம் அந்த இடத்தில் பறந்து கொண்டிருந்த ஆதி , ஆரியன் மற்றும் லூனா தரையில் இறங்கினர் .
நால்வரின் கண்களும் அந்த அழகிய பெட்டியை ஆராதிக்க , அந்தப் பெட்டியை நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டனர் . நந்தினி மெல்ல கை நடுக்கத்தோடு , அதைத் திறக்க , அதைப் பார்த்த அனைவரின் தலையிலும் இடி இறங்கியது போலிருந்தது . ஏனெனில் அதில் எதுவுமே இல்லை .
நந்தினிக்கு மயக்கம் வருவது போல் இருக்க , அதே சமயம் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பினாள் . அங்கு கம்பீரமாக நின்று கொண்டிருந்தவனைப் பார்த்த லூனாவின் இதழ்கள் , தானாகவே , “ ப்ரொமேத்தியஸ் ” என்று உச்சரித்தது .
நால்வரும் அதிர்ந்து நிற்க , ப்ரொமேத்தியஸ் , “ வா ! க்ரிசான்டா , வா ! உனக்காகக் கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றேன் . லூனா , க்ரிசான்டாவை இங்கு அழைத்து வந்ததற்கு என் நன்றிகள் . நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தேடிய ஈரின் கல் இல்லாதது போல் தெரிகிறதே , பரவாயில்லை பல ஆண்டுகளாக நான் செலுத்தாமல் வைத்திருந்த கடனை இப்போது திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் ” என்று கூறியவன் , மின்னல் வேகத்தில் தன் சக்தியைக் கொண்டு நந்தினியைத் தாக்க , ஆதியும் , லூனாவும் வந்து அவளைக் காப்பாற்றுவதற்கு முன் , மூமூ வந்து அதைத் தாங்கி நந்தினியைக் காப்பாற்றியது .
நந்தினியின் , “ மூமூ ” என்ற அலறல் , அந்த மலை முழுவதும் எதிரொலித்தது .
error: Content is protected !!