Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 32(Epilogue)

அத்தியாயம் – 32

 

சில வருடங்களுக்குப் பிறகு….

கிரகம் : பூமி



Advertisement

 

  அந்தத் திருமண மண்டபம் முழுவதும், உறவினர்களால் நிரம்பி வழிந்தது. அங்கு வைத்திருந்த பெரிய ஃப்ளெக்ஸில், ‘ஆரியன் வெட்ஸ் மதுமதி’ என்று அலங்காரத்துடன் எழுதப்பட்டிருந்தது.

   ரிசப்ஷனில் நின்றிருந்த சுந்தரம்- ஜெயந்தி தம்பதியினர், திருமணத்துக்கு வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

   உள்ளே அமர்ந்திருந்த உறவினர்களுக்குத் தேவைக்கேற்ப உதவி செய்து கொண்டிருந்தனர் கண்ணன், துர்கா, ஸ்ரீதர் மற்றும் சித்ரா. ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் அந்த எழுபது வயதிலும், தங்களது கொள்ளுப்பேரன் ப்ரொமேத்தியஸை, சுருக்கமாக மேத்தியுவை கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

Advertisement

   அங்கு மணமகன் அறையில், ஆதித்யன், “டேய் ஆரியா, கடைசில அஞ்சு வருஷம் மதுமதி பின்னாடி அலைஞ்சு, அவள சம்மதிக்க வச்சிட்டியே. இனிமே என்ஜாய் பண்ணுடா” என்று கூற,

   ஆரியன், “போன ஜென்மத்துல எனக்காக உயிர குடுத்துருப்பான்னு நினைக்கிறேன்டா. அதுக்காக இந்த ஜென்மத்துல என்னைய கொல பண்றதுலயே குறியா இருக்கா. இருந்தாலும், என் மதி மாதிரி யாராச்சும் உண்டா ?” என்று மகிழ்ச்சியுடன் கூற,

   ஆதி, “டேய் இப்போவே ஐஸா.. பொழச்சுக்குவடா” என்று கிண்டலாகக் கூறினான்.

Advertisement

  ஆரியன், “உனக்கென்னப்பா ? சின்ன வயசுல இருந்து  லவ் பண்ணின உன் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட. நான் அப்படியா ?” என்று கேட்க,

  “சரி சரி, ரொம்ப பேசாத. நேரமாயிடுச்சு, வா போகலாம்” என்று கூறி அழைத்து வர, இரு இணைபிரியா நண்பர்களும் பட்டு வேட்டி சரசரக்க மணமேடையை நோக்கி நடந்து வந்தனர்.

   மணமகள் அறையில், நந்தினி, “அப்பாடா இப்பயாச்சும் உனக்குக் கல்யாணம் நடக்கப் போகுது. அஞ்சு வருஷம் என்னையும் என் ஹப்பியையும்  ஒவ்வொரு பிரச்சனைக்கும் கூப்பிட்டு… அப்பப்பா… நெனச்சுப் பார்க்கவே முடியல… இனிமே அந்தப் பிரச்சனையெல்லாம் கிடையாது. நீயாச்சு ஆரியாவாச்சு”  என்றாள்.

   மதுமதி, “சண்டையே போடாமல் லவ் பண்றதுல என்னடி கிக் இருக்கு ? நீங்களும் தான் இருக்கீங்களே ?” என்று கேட்க,

   நந்தினி, “நான் தென்றலாக வீசும் காற்று, நீ புயலாக வரும் சூறைக்காற்று. ஆனால், இரண்டும் காற்று தானே ?” என்று கவிதை நடையில் பதில் கூற, மதுமதி சிரித்தாள்.

  பின் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்த ஒரே டிசைன் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு, தேவதைகள் போல நடந்து வந்தனர்.

  (மதுமதி யாரென்று குழம்பும் வாசகர்களுக்கு அவள் நம்முடைய லூனா தான்.)

பின்னர் அங்கே இரு மனமும் சங்கமித்து, ஒரு மனமாக மாறும் திருமண வைபோகம் நடைபெறப் பெற்றோர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் ஆகியோருடைய ஆசியுடன், திருமணப் பந்தத்தில் அடியெடுத்து வைத்தனர் ஆரியனும், மதுமதியும்.

   அதே இல்லறத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆதித்யனும், நந்தினியும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொண்டனர். பிறகு அனைவரும் பிரிந்து செல்ல, மாலை அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

   மதுமதி அன்றிரவு பால் சொம்புடன் ஆரியனின் அறைக்குள் நுழைந்தாள். (இதற்குப் பிறகு நாம் அங்கிருந்தால் நாட்டில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதால் நாம் வெளியேறிவிடுவோம்)

கிரகம் : கயா

  இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கயா கிரகத்தில், வெலாரிஸ் கோட்டையில் பிரம்ம கிரந்தத்தில் க்ரிசான்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் நின்றிருந்த அக்கிலஸ், அவளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

  கன்வெர்ஜன்ஸ் முடிந்து, சரியாக ஐந்து வருடங்கள் முடிந்திருந்தன. அப்போது ஆதியைப் பிரிவது நந்தினிக்கு வேதனையாக இருந்தாலும், அவளது காதலைவிட அவனது உயிர் முக்கியம் என்பதால், அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஆனால், அவள் அந்த வேதனையில் மூழ்கி போகாமல், ப்ரொமேத்தியஸின் தியாகத்தை நினைத்து, அதை பயனற்றதாக ஆக்காமல், க்ரிசான்டாவாக தன்னை மாற்றிக்கொண்டு, கயா கிரக பேரரசியாக பொறுப்பேற்றாள். வல்கனுடன் மற்ற சிற்றரசர்களும் அவளுக்கு அனைத்தையும் எடுத்துக்கூற, கயா கிரகம் மீண்டும் செழிப்புறத் தொடங்கியது.

  க்ரிசான்டா பிரம்ம கிரந்தத்தில் இருந்த டைட்டனின் நினைவுகளையும் தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுடன் சேர்த்து செலினாவே வியக்கும் அளவிற்கு, கயா கிரக தொழில்நுட்பத்தை மேம்படுத்தினாள். ஆனால், அவளுக்குள் மறைந்திருந்த சோகத்தை அக்கிலஸ் மட்டுமே புரிந்துக்கொண்டான். என்னதான் க்ரிசான்டாவிற்கு அக்கிலஸின் காதல் புரிந்தாலும், அவள் அவனை ஒரு நண்பனாகவே எண்ணினாள். இதையறிந்த அக்கிலஸும், அவளுக்கு ஒரு தோழனாக தோள் கொடுத்தான்.

  பிரம்ம கிரந்தத்திலிருந்து மீண்ட க்ரிசான்டாவுக்கு, அன்று அவள் செலினாவிடம் கூறியது  நினைவு வந்தது.

   “அவர்களது கடந்தகால நினைவுகளை மாற்றிவிடுங்கள் செலினா” என்று கூறிவிட்டு, சில கோரிக்கைகளை வைக்க, அவற்றைச் செலினா நிறைவேற்றி இருந்தார். அதனுடன் சேர்த்து அவர்களின் கடந்த காலத்தையும் மாற்றி அமைத்தார். துர்காவுக்கும் கண்ணனுக்கும் பெரியவர்கள் விருப்பப்படியே திருமணம் நடந்ததாகவும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நந்தினி என்று பெயர் வைப்பதாகவும், நந்தினியும், ஆதியும் சிருவயது முதல் ஒன்றாக வளர்வதாகவும்,  லூனாவுடைய உருவ அமைப்பையும் பண்புகளையும் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்குவதாகவும் என்று ஒரு புது  வரலாற்றை உருவாக்கினார்.

  என்னதான் ஆதியுடைய கடந்த காலத்தை மாற்றி இருந்தாலும், அவனுடைய காதல் அவனுடைய மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. அதனால் அவனுக்கு, முன்னர் நடந்த அனைத்தும், அவனுக்கு ஒரு கற்பனை கதையாக தோன்றியது. 

 கிரகம் : பூமி

   ஆதித்யனின் அறையில் அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, நந்தினி ப்ரொமேத்தியஸைத் தூங்க வைத்தாள்.

   அந்தப் புத்தகத்தின் கடைசி வரியாக, “என்றாவது ஒருநாள் அக்கிலஸின் காதலை க்ரிசான்டா உணர்வாள்” என்று எழுதிய ஆதித்யனை நெருங்கிய நந்தினி,

  “அப்பாடா முடிச்சுட்டீங்களா? ஒரு வருஷமா என்னை விட உங்களுக்கு இந்தக் கதை தான் முக்கியமா போயிடுச்சு” என்று கோபித்துக் கொள்ள,

  ஆதித்யன், “உன்னைவிட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை, நந்து. ஆனா இந்தக் கதைய எழுதி முடிச்ச உடனே தான் ஒரு திருப்தி” என்றபடியே அந்தப் புத்தகத்தை மூடி வைத்து விட்டு,

  “பையன் தூங்கிட்டானா?” என்று கிசுகிசுப்பாய் கேட்டபடியே சிரிப்புடன் அவளைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.

   அந்தப் புத்தகத்தின் அட்டையில், இரண்டு வார்த்தைகள் தங்க நிறத்தில் ஜொலித்தன. அவை இன்டர்ஸ்டெல்லர் காதல்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!