இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-3
அன்று விசேஷ நாள் என்பதால் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைப்பெற்று கொண்டிருந்தது. கருநீல நிறத்தில் இளஞ்சிவப்பு நிற பாடர் வைத்த பட்டுப்புடவை அணிந்து காற்றில் அலைபாயும் தன் கூந்தலை பின்னலிட்டு மல்லிகை சரத்தினை சூடி, காதில் நர்த்தனமாடும் ஜிமிக்கியும் கழுத்தில் குடியிருக்கும் சங்கிலியும் இரு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் இசைப்பாட கொலுசொலிகளின் கானத்துடன் தன் தந்தை சந்தான கிருஷ்ணனின் கைகளை இறுக்கமாக பற்றி பலநூறு கதைகள் பேசியவாறு கோயிலின் பிரகாரத்தை சுற்றி கொண்டிருந்தாள் இருபத்தி நான்கு வயதான ஆழினி.
அவர்களுக்கு பின்னால் தன் அன்னை ஆதிலட்சுமியுடன் நடந்தவன்
“சாதரணமாவே அவளோட அலப்பறை தாங்காது இதுல இன்னிக்கு இந்தம்மா பொறந்தநாளு வேற என்னென்ன கூத்து பண்ணப்போறாளோ….” என்று கூறி சத்தமாக புலம்பிய இன்பனின் குரலை கேட்டவள்
“எதாவது சொன்னியா தம்பி?” என்று வினவிய ஆழினியை கண்டு முறைத்தவன்
Advertisement
“பாம்பு காது டி உனக்கு…. இம்புட்டு டிஸ்டென்ஸ்ல அதுவும் இவ்வளவு கூட்டத்துல உன் காதுல நான் சொல்றது விழுதுன்னா நீ இங்கிருக்க வேண்டிய ஆளே கிடையாது…. நீ நர்ஸுக்கு படிக்காம பேசாம சிபிஐக்கு படிச்சிருக்கலாம்….” என்று இன்பன் கூற, அவன் தலையில் அடித்தவர்
“வாயை வச்சிக்கிட்டு சும்மா இருடா…. பி.எஸ்.சி நர்சிங் முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா உங்க அப்பாவும் அவளும் எம்.எஸ்.சி நர்ஸிங் முடிச்சிட்டு வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் கல்யாணத்தை பத்தி பிளான் பண்ணுவோம்னு சொல்றாங்க இதுல நீ சி.பி.ஐக்கு படிக்க சொன்னா அதையும் படிக்குறேன்னு வந்து நிப்பா…. இதெல்லாம் தேவையா இப்போ?” என்று ஆதிலட்சுமி கோபமாக கூற, அவர் கூறியதை கேட்டு சந்தான கிருஷ்ணனும் ஆழினியும் சிரித்து கொண்டிருந்தனர்.
“ஆதிம்மா, நம்ம பொண்ணு படிச்சு நல்ல உத்தியோகத்தில் இருந்தா நமக்கு தான பெருமை…. ஏன் அவளோட கல்யாணத்தை பத்தியே பேசுற?” என்று வினவிய தன் கணவனை முறைத்தவர்
Advertisement
“இங்க பாருங்க உங்களுக்காக தான் நான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன்…. நம்ம ஆழினி நர்ஸிங் சேர்ந்ததே எனக்கு பிடிக்கல, ‘நர்ஸிங் கோர்ஸ் வேணாம் இன்ஜினியரிங் பண்ணு இல்லன்னா டீச்சிங் ஃபீல்ட் போன்னு’ சொன்னேன் ஆனா என் பேச்சு கேக்காம ‘நர்சிங் தான் படிப்பேன்னு’ ஒத்த காலுல நின்னா…. சரி அவள் இஷ்ட்டப்படி படிக்கட்டும்னு நாலு வருஷம் சும்மாயிருந்தா எம்.எஸ்.சி பண்ணப்போறேன்னு வந்து நின்னா…. சரி அதையும் பொறுத்து போனா இப்போ வேலைக்கு போயிட்டே பி.எச்.டி படிக்கப்போறேன்னு வந்து நிக்குறா…. உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கா இல்லையா?” என்று ஆதிலட்சுமி மூச்சுவிடாமல் பேசி முடிக்க, அவர் கைகளை பற்றியவள் அருகிலிருந்த கோயில் மண்டபத்தில் அமர்ந்து அவரருகில் அமர, அவ்விருவருடன் சந்தான கிருஷ்ணனும் இன்பனும் அமர்ந்து கொண்டனர்.
Advertisement
“தாயே ஆதிலட்சுமி, இப்படி மூச்சுவிடாம பேசி உன் எனர்ஜியை எதுக்கு வீணாக்குற? நானென்ன கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொன்னேனா? படிச்சு முடிச்சிட்டு கல்யாணம் பண்றேன்னு தான சொல்றேன்…. அதுவுமில்லாம கல்யாணமென்பது ஆயிரம் காலத்து பயிறு தாயீ…. அதை பொறுமையாத்தான் நாம பயிறிடனும், அவசரப்பட்டு பயிறிட்டோம்னு வையேன் பர்ஸ்ட்டாயிடும்….” என்று ஆழினி நக்கலாக கூற, அவளது வாயில் பட்டென்று அடித்தவர்
“வெள்ளிக்கிழமை அதுவுமா என்ன பேச்சு இது ஆழினி? நீ படிச்சு முடிச்சு கிழவியாகிட்டு வரவரைக்கும் உனக்காக ஒருத்தன் காத்துக்கிட்டு இருப்பானா? உன் வயசு பொண்ணுங்க எல்லாரும் கையில ஒன்னும் வயித்துல ஒன்னும்னு இருக்குறாங்க நீ என்னடான்னா இப்படி பேசுற….” என்று ஆதிலட்சுமி கோபமாக கூற, அவரிடம் ஆழினி ஏதோ கூற வருவதற்குள்
“ஆழினி, அம்மா சொல்றதுல என்ன தப்பிருக்கு? உனக்கென்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிடப்போறோம்? உனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளையை தான பார்க்க போறோம்…. குறிப்பா கல்யாணத்துக்கு அப்புறமும் நீ வேலைக்கு போறதுக்கும், படிக்கிறதுக்கும் சமதம் சொல்ற பையனை தான் நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்…. எங்களுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும்மா…. இல்ல, யாரையாவது லவ் பண்றதுனாலும் சொல்லு அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்….” என்று சந்தான கிருஷ்ணன் பொறுமையாக கூறிய கூற்றை கேட்டு இன்பன் சத்தமாக சிரிக்க, அவனை ஆழினி தீயாய் முறைத்து கொண்டிருந்தாள்.
Advertisement
“லவ் பண்றதுக்கெல்லாம் உங்க பொண்ணு செட்டாகமாட்டா…. அவளொரு புத்தக புழு…. காலேஜ்ல அவளோட படிக்கிற பையன் லவ் பிரொப்போஸ் பண்ண வந்தப்போ ‘வாட் இஸ் சி.பி.ஆர்னு’ கேட்டு அந்த அண்ணனை தலைத்தெரிக்க ஓடவிட்ட கதை மறந்துடுச்சா தகப்பா?” என்று இன்பன் நக்கலாக வினவ, அவனை தீயாய் முறைத்த ஆழினியின் கைகளை பற்றியவர்
“ஆழினிம்மா, அவன் பேசுறதெல்லாம் காதுல வாங்காத…. நாங்க சொல்றதை மட்டும் யோசிடா…. அடுத்த வருஷம் உன் புருஷனோட உன் பர்த்டேவ நாம செலப்ரேட் பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம்…. நானும் அப்பாவும் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கட்டுமா?” என்று ஆதிலட்சுமி கொஞ்சலாக வினவ, அவள் கூறியதை கேட்டவள் சிறிது யோசனைக்கு பிறகு
“சரி…. உங்க இஷ்ட்டம்….” என்று ஆழினி கூறியதை கேட்டு சந்தான கிருஷ்ணனும் ஆதிலட்சுமியும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
“அப்பாடா…. என் ரூட் கிளியராகிடுச்சு….” என்று இன்பன் கூறியதை கேட்டு அவன் காதை திருகியவர்
“என்னடா சொன்ன? ரூட் கிளியரா? உன் லவ்க்கு நாங்க ஓகே சொன்னதுக்கு காரணமே நீலவேணியை எங்களுக்கு பிடிச்சதுனால தான், உனக்காக ஒன்னும் நாங்க ஓகே சொல்லல…. கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட்டாகி வேலை கிடைச்சாலும் பி.இ படிச்சதோட நிறுத்தாம எம்.பி.ஏ படிக்குற வழியை பாரு…. அதுதான் ஃபியூச்சர்க்கு நல்லது….” என்று ஆதிலட்சுமி கூறியதை கேட்டு அதிர்ந்தவன்
“எதே? படிக்கனுமா? வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்? ஹலோ தகப்பரே, இதெல்லாம் நீங்க கேக்கமாட்டீங்களா?” என்று இன்பன் பாவமாக வினவ
“மனைவி சொல்லே மந்திரம்னு வாழ பழகிக்கிட்டேன் மகனே…. என்னை இதுல கூட்டு சேர்க்காத….” என்று சந்தான கிருஷ்ணன் கூறியதை கேட்டு சிரித்தவள்
“அம்மா அவனை விடும்மா, அவன் கண்டிப்பா எம்.பி.ஏ படிப்பான் அதுக்கு நான் கியாரண்டி…. டேய் இன்பா, நம்ம எல்லாரையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுடா….” என்று ஆழினி கூற
“ம்க்கும்…. என்னை செல்ஃபி ஸ்டென்டா யூஸ் பண்றதே உனக்கு வேலையா போச்சு….” என்று இன்பன் புலம்பியவாறு அவர்களுடன் சேர்ந்து சுயப்படம் எடுத்துக்கொண்டான்.
சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியின் நடுவில் நின்று இருவரது தோள்களையும் தன் கரங்களால் அணைத்தவாறு ஆழினி நின்றிருக்க, ஆதிலட்சுமியின் அருகில் நின்றிருந்தவன் தன் தாயை அணைத்தவாறு நின்று புகைப்படம் எடுத்திருந்தான்.
தன் அலைபேசியின் தொடுதிரையிலிருக்கும் அப்புகைப்படத்தை கண்டு கண்கள் கலங்கியவள் தன்னருகில் நின்றிருந்த அன்னை மற்றும் தந்தையின் நிழற்படத்தை வருடிய அந்நொடி அவளது கண்ணீர் துளிகள் யாவும் திரையை நனைத்திருந்தது. ஆழினியின் பிறந்தநாளை அவளது தாய் தந்தையருடன் கடைசியாக கொண்டாடிய நாள் மட்டுமல்லாது அவள் இறுதியாக அவர்களுடன் மகிழ்ச்சியாக எடுத்து கொண்ட புகைப்படமும் இதுதான்.
கடந்த கால நிகழ்வை நினைத்து அழுகையில் கரைந்தவள்
“அம்மா….” என்று சத்தமாக அழைத்தவாறு அறைக்குள் நுழைந்த அவளது மகன் ஆதவ் கிருஷ்ணனின் குரலை கேட்டதும் தன் கண்களில் வழிந்த கண்ணீரை வேகமாக துடைத்து கொண்டாள்.
தன் கைகளுக்கு பின்னால் எதையோ மறைத்து வைத்து தன்னெதிரில் அமர்ந்திருந்த அன்னையை கண்டு அழகாக சிரித்தவன்
“ஹாப்பி பர்த்டே அம்மா….” என்று ஆதவ் கிருஷ்ணன் அவ்வறையே அதிரும் வண்ணம் சத்தமாக கூறி தன் கையில் மறைத்து வைத்திருந்த வெள்ளை காகிதத்தை ஆழினியிடம் அளித்திருந்தான்.
தன் அன்னை ஆழினியின் கைகளை பிடித்தவாறு ஆதவ் கிருஷ்ணன் நின்றிருக்க அவ்விருவரை சுற்றி வானவில், பட்டாம்பூச்சி, பல வண்ண நிறத்திலான பூக்கள், சூரியன், நிலா, நட்சத்திரம், குருவிகள், மரங்கள் என தன் பிஞ்சு கைகளால் வண்ண வண்ண நிறங்களை கொண்டு வரைந்த ஓவியத்தை கண்டதும் ஆழினியின் கண்கள் பிரகாசமாக மின்னியது.
ஆழினியின் மடியில் அமர்ந்தவன் படத்தை சுட்டிக்காட்டி
“இது நீ…. இது நான்…. இங்க பாரு, நமக்கு மேல ரெயின்போ வரைஞ்சிருக்கேன்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு சிரித்தவள் அவனது கன்னத்தில் ஆழமாக முத்தம் வைத்து
“தாங்க்யூ சோ மச் ஆது கண்ணா…. இதுவரை யாரும் எனக்கு இந்த மாதிரி கிஃப்ட் கொடுத்ததில்ல தெரியுமா? ரொம்ப ரொம்ப சூப்பராயிருக்கு….” என்று ஆழினி கூறியதை கேட்டு கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்து வைத்தான் மாயக்கண்ணன்.
நீலவேணியுடன் அறைக்குள் நுழைந்தவன் ஆதவ் கிருஷ்ணனை முறைத்தவாறு
“டேய் பப்பாளி, நம்ம மூணுப்பேரும் சேர்ந்து வந்து சொல்லலாம்னு தான சொன்னேன்? அதுக்குள்ள இங்க வந்துட்ட? நாங்க வர வரைக்கும் வெய்ட் பண்ணமாட்டியா?” என்று வினவிய இன்பனை கண்டு சிரித்தவன்
“நீ அம்மாவுக்கு கிஃப்ட் ரெடி பண்றேன்னு வேணி அத்தை கிட்ட லவ்ஸ் பண்ணிட்டு இருந்த…. நீங்க சர்ப்ரைஸ் பண்றதுக்குள்ள விடிஞ்சிடும்னு தான் நான் அம்மாவுக்கு விஷ் பண்ணி கிஃப்ட் கொடுத்துட்டேன்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு இன்பனும் நீலவேணியும் கூச்சத்தில் நெளிய, அவ்விருவரையும் ஆழினி குறுநகையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
தன் தமக்கையின் மடியில் அமர்ந்திருந்த சிறியவனை தூக்கி தலைமேல் சுற்றியவன்
“ஏய் பப்பாளி, நீ ஸ்கூல்ல பண்ண சேட்டையை உன் அம்மா கிட்ட நான் சொல்லட்டா?” என்று வினவிய இன்பனை முறைத்தவன்
“நீ வீட்டுல பண்ண சேட்டையை உன் அக்கா கிட்ட நான் சொல்லட்டா?” என்று தானும் சலைத்தவன் இல்லை என்பதை போல் ஆதவ் கிருஷ்ணன் வினவ
“நீங்க ரெண்டுபேரும் எதுவும் சொல்லவேண்டாம் ஆழினி அக்காவுக்கு வேலைக்கு டைம் ஆச்சு சீக்கிரம் வாங்க கேக் கட் பண்ணலாம்….” என்று நீலவேணி கூறியதை கேட்டு அனைவரும் கூடத்தை நோக்கி சென்றிருந்தனர்.
கூடத்திலிருந்த மேசையில் ஆழினிக்கு பிடித்த ப்ளூபெரி கேக் வைக்கப்பட்டிருப்பதை கண்டவள்
“இப்போ இந்த செலப்ரேஷன் தேவையா? ஏதோ சின்ன குழந்தைக்கு பண்ற மாதிரி பண்றீங்க….” என்று ஆழினி கூற
“ஆது ஆசைப்பட்டான் ஆழினி அக்கா அதான்…. அவனுக்காக இந்த வருஷம் உங்க பர்த்டேவ செலப்ரேட் பண்ணலாமே….” என்று நீலவேணி கூற, அவளருகில் நின்றிருந்த இன்பனும் ஆமென்பதை போல் தலையசைத்து வைத்தான்.
தன் பெற்றோர்களின் இழப்பிற்கு பிறகு ஆழினி மட்டுமல்லாமல் இன்பனும் தங்களது பிறந்தநாளை கொண்டாட விரும்பியதில்லை. அன்றாட நாட்களை போல் அந்த நாளையும் எப்பொழுதும் போல் கடந்துவிடுவர். இன்று தன் பிறந்தநாளை கொண்டாட விரும்பும் அவளின் மகன் ஆதவ் கிருஷ்ணனுக்காக ஆழினியின் மனம் சிறிது சமாதானமடைந்தது.
சிறிது நேரத்தில் நீலவேணியின் பெற்றோர்கள் ஆறுமுகமும் ராணியும் அவ்விடத்திற்கு வருகை புரிய, ஆழினியின் பிறந்தநாள் விழாவும் ஆரம்பமானது. ஆதவ் கிருஷ்ணனின் வலது கரத்தினுடன் தன் வலது கரத்தினை கோர்த்தவள் கேக்கை வெட்ட, மற்ற அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட ஆரம்பித்தனர். கேக்கிலிருந்து சிறிய துண்டினை எடுத்து தன் பிஞ்சு கைகளால் தன் அன்னைக்கு ஊட்டியவன் அவளது கன்னத்தில் முத்தம் வைக்க, அவனது நெற்றியில் இதழ் பதித்தவள் தன் மகனுக்கு கேக்கை ஊட்டியிருந்தாள்.
இன்பன் மற்றும் நீலவேணியிடம் வாழ்த்தை பெற்று பரிசுகளை வாங்கியவள் ஆறுமுகம் மற்றும் ராணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டாள். பிறந்தநாள் விழா இனிதே நிறைவுபெற, தன் மடியில் அமர்ந்து கேக்கை உண்ணும் ஆதவ் கிருஷ்ணனின் தலையை கோதியவள் தன்னெதிரில் அமர்ந்திருந்தவரிடம்
“மாமா…. நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்…. ராணி அத்தை நீங்களும் இங்க வந்து உட்காருங்க….” என்று ஆழினி கூறியதை கேட்டு ஆறுமுகம் மற்றும் ராணி மட்டுமல்லாது இன்பனும் நீலவேணியும் அவளை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தனர்.
“இன்பாவுக்கும் நீலாவுக்கும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிடலாம்னு நான் ஆசைப்படுகிறேன் மாமா…. நீங்களும் அத்தையும் என்ன நினைக்குறீங்க?” என்று ஆழினி கூறியதை கேட்டு அதிர்ந்தவன்
“ஆழினி, இப்போ எங்க கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்று இன்பன் தன் பற்களை கடித்துக்கொண்டு வினவ, அவனை தீயாய் முறைத்தவள்
“அவசரமில்ல அவசியம்…. நீங்க சொல்லுங்க அத்தை…. உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு நாம கல்யாண வேலையை பார்க்கலாம்….” என்று ஆழினி கூறியதை கேட்டவர்
“இல்ல ஆழினி…. உனக்கு….” என்று ராணி ஏதோ கூற வருவதற்குள்
“நீ சொல்ற மாதிரியே பண்ணிடலாம் ஆழினி…. நம்ம குடும்ப ஜோசியர் கிட்ட நான் பேசுறேன்….” என்று ஆறுமுகம் கூற, அவர் கூறியதை கேட்டவள் மனநிறைவாக புன்னகைத்து வைத்தாள்.
“அப்போ நீங்களும் அத்தையும் ஜோசியர் கிட்ட பேசிட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க மாமா…. முடிஞ்சா நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிடுங்க…. எனக்கு ஷிப்ட்க்கு டைம் ஆச்சு நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்….” என்று ஆழினி கூறிவிட்டு ஆதவ் கிருஷ்ணனுடன் அறைக்குள் சென்றுவிட, அவள் சென்ற திசையை பார்த்துவிட்டு தன் கணவரை முறைத்தவர்
“என்னங்க நீங்க, ஆழினி சொன்னதெல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு இருக்கீங்க? ஆழினியோட வாழ்க்கை சரியானதுக்கு அப்புறம் தான் இன்பனுக்கும் நீலாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நாம பேசி வச்சோமே அதை மறந்துட்டீங்களா?” என்று வினவிய ராணியை கண்டு சிரித்தவர்
“ஆழினி வாழ்க்கை சரியாகும்னு நம்பி நாம பொறுமையா இருந்ததுனால தான் இத்தனை வருஷம் வேஸ்ட்டா போச்சு….” என்று ஆறுமுகம் கூறியதை கேட்ட மற்ற முவரும் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
“என்ன மாமா சொல்றீங்க எங்களுக்கு ஒன்றும் புரியல….” என்று வினவிய இன்பனிடம்
“நாம இத்தனை நாள் பொறுமையா பேசிட்டு இருந்ததுனால தான் ஆழினி எதுக்கும் பிடிக்கொடுக்காம பேசுறா…. ஆதவுக்கு அப்பா வேணும் குறிப்பா ஆழினி வாழ்க்கை நல்லாயிருக்கனும் அதுக்கு ஆழினியோட விருப்பத்தை நாம கேட்டுட்டு இருந்தோம் அவள் மட்டுமில்ல நீங்க ரெண்டுப்பேரும் கடைசிவரை இப்படியே தான் இருப்பீங்க….” என்று ஆறுமுகம் கூறியதை கேட்டு குழம்பியவள்
“நீங்க என்னத்தான் சொல்ல வரீங்க அப்பா…. எனக்கு ஒன்னும் புரியல….” என்று நீலவேணி கூற
“முதல ஆழினி சொன்ன மாதிரி உங்க கல்யாணத்துக்கு நாள் குறிப்போம்…. கொஞ்ச நாள் கழிச்சு ‘இன்பன் நீலா கல்யாணம் அன்னைக்கு இன்பனோட அப்பா அம்மா ஸ்தானத்துல நீயும் உன் புருஷனும் தான் இருக்கனும் இல்லன்னா இந்த கல்யாணம் நடக்காதுன்னு’ நாம சொல்லுவோம்…. அப்படி சொன்னா ஆழினி நம்ம வழிக்கு வந்து தானாகனும்….” என்று ஆறுமுகம் உறுதியாக கூறியதை கேட்டு இன்பனின் மனம் குழப்பத்தில் சுழன்று கொண்டிருந்தது.
“இது சரிப்பட்டு வருமா மாமா? எனக்கென்னவோ பயமாயிருக்கு….” என்று இன்பன் தயக்கமாக கூற
“பயந்தா எதுவும் வேலைக்காகாது இன்பா…. ஆழினியோட வாழ்க்கையை அப்படியே விட சொல்றீங்களா? ஆழினி என் ஃபிரண்டோட பொண்ணு மட்டுமில்ல எனக்கும் பொண்ணும் தான்…. அவளோட கடந்த காலம் எப்படி வேணாலும் இருக்கட்டும் ஆனா எதிர்காலம் நல்லாயிருக்கனும் அதுதான் நமக்கு முக்கியம்…. நீங்க போய் முதல கிளம்புங்க, ஆழினியை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வாங்க நாம மத்த விஷயத்தை பத்தி பேசுவோம்…..” என்று ஆறுமுகம் கூறியதை கேட்டு நன்றியுடன் அவரை பார்த்து தலையசைத்து அறைக்குள் சென்றவன் சிறிது நேரத்தில் தயாராகி வெளியில் வர, ஆதவ் கிருஷ்ணனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இன்பனுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தாள் ஆழினி.
மருத்துவமனைக்கு வந்தவள் செவிலியர் அறையில் தன் கைப்பையினை வைத்துவிட்டு அவளுக்கென நியமித்திருக்கும் வார்டுகளிலுள்ள நோயாளிகளின் மருத்துவ பதிவை பார்வையிட்டு கொண்டிருக்க
“ஆழினி சிஸ்டர், உங்களை டாக்டர் ராஜவேல் அவரோட கேபின்க்கு வர சொன்னாங்க….” என்று ஒரு செவிலியர் கூறியதை கேட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கு சென்ற மருத்துவரின் அனுமதியை பெற்று அறைக்குள் நுழையும் ஆழினியின் வருகைக்காக காத்திருந்தான் விஜய சிவமாறன்.
ஒளி வீசும்….
