Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தாய்மொழி 17

தமிழிசை 17

இன்று நீ உலகை ரசித்தது போதும், எனக்கும் வாய்ப்புக் கொடு என சூரியனோடு சண்டையிட்டுத் தன் உரிமையைப் பெற்று வான வீதியில் உலா வந்த நிலவுமகளின் உற்சாகம் யன்னல் வழியாகத் தன்னை ரசனையாகக் காணாது கல்லையும் மண்ணையும் போல் பார்த்து நின்றிருந்த பார்த்தியின் பார்வையில் மொத்தமும் வடிந்து போனது.



Advertisement

பட்டு வேட்டி சட்டையில், திருமண இரவுக்கான மெல்லிய அலங்காரத்தில் இருந்த அறையில் நின்று கொண்டிருப்பவனின் இந்த இடிந்து போன தோற்றத்துக்கான காரணத்தை அறிய வேண்டி நிலவு அவன் யன்னலோரம் தேங்கி நிற்கத் தன்னவளோடு பகிர முடியாத பாரத்தை உன்னோடு பகிர்வேனா என்பதுபோல் யன்னல் கதவை நிலவின் முகத்துக்கு நேரே அடித்துச் சாற்றியவன், தன்னுணர்வே இன்றி வந்து கட்டிலில் அமர்ந்தான்.

கைகளால் தலையைத் தாங்கி அமர்ந்தவனுக்கு நெற்றியோரங்கள் எல்லாம் விண்டு வலிப்பதைப் போல இருந்தது.

Advertisement

Advertisement

அதை விட மனம்… ஆயிரம் யானைகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி நிற்க, அதனடியில் அவன் சிக்கிக் கொண்டது போல் தாங்கொணா வலியில் தத்தளித்தது.

அவன் கண் முன் இருக்கும் பிரச்சனைக்கு அவனிடம் தீர்வு இருக்கிறதுதான். சாத்தியமாகக் கூடிய ஒரே ஒரு தீர்வும் அதுதான்.

Advertisement

ஆனால் அது அவன் தமிழுக்கு எதிரானது.

‘அப்படி என்ன பாவம் செய்து பிறந்தேன் என்று எனக்கு மட்டும் இத்தனை அவலங்களை அள்ளித் தருகிறாய் இறைவா?

இத்தனை நாளும் நீ கொடுத்த எல்லாக் கஷ்டங்களையும் என் முயற்சியால்தானே சமாளித்தேன்? அதையன்றி உன்னிடம் எனக்காக என்று நான் கேட்டது என் தமிழை மட்டும்தானே? அதைக் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டு அந்த சந்தோஷத்துக்கும் முழுமை என்ற ஒன்றைக் கொடுக்க மனம் வரவில்லையே உனக்கு!

இப்படி ஒரு வாழ்க்கையைத்தான் உன்னால் எனக்குக் கொடுக்க முடியும் என்றால் என்னைக் கருவிலேயே கொன்றிருக்கலாமே நீ!’ என்று மனதில் இறைவனிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தவன், அறை வாசலில் அரவம் கேட்கவும் தமிழ்தான் வருகிறாள் என்றுணர்ந்து விரைந்து கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டான்.

தன் உணர்வுகள் எதுவும் முகத்தில் தெரியாதவண்ணம் கையைக் கொண்டு கண்ணையும் மறைத்துக் கொண்டான்.

வாழ்க்கையின் லட்சியங்களை வறுமை தின்று தீர்த்திருக்க, அதன் பின் பெரிதாக இலக்கு என்ற ஒன்றே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தவனுக்குத் தமிழைத் தன்னவளாக்குவது ஒன்றே பெரும் லட்சியமாக இருந்தது.

இன்று அது நிறைவேறி அவள் பாதத்தில் அவன் காதலின் அதிதீவிரத்தையும் அவளுக்கான அவனின் அதீத உணர்வு வெளிப்பாடுகளையும் காதலோடு கலவியும் சேர்த்து சமர்ப்பிக்கும் இரவில் அவளிடம் தன்னை ஒளிக்கும் நிலை கொடுத்த வேதனை அவன் தொண்டையை இறுகப் பற்றி நெருக்கியது.

கண்ணோரம் துளிர்க்கவும் செய்தது.

அதைக் காட்டிவிடாதபடிக்கு மூடியிருக்கும் விழிகளை இமை கொண்டு இன்னும் அழுத்தினான்.

தலை குனிந்தபடி உள்ளே வந்த தமிழ் கதவைத் தாழிட்டுத் திரும்பியவள், கட்டிலில் மல்லாந்து கிடந்தவனைக் கண்டு புருவம் சுருக்கினாள்.

மதியம் பேசியதைப் போலவே இப்போதும் அவன் தொடர்ந்திட்டால் என்ன செய்வது என்ற இன்பத் தவிப்போடு உள்ளே நுழைந்தவளுக்கு தான் வந்தது தெரிந்தும் அசப்பின்றிப் படுத்திருப்பவனைக் காணக் குழப்பமாகத்தானே இருக்கும்?

ஒருவேளை உறங்கி விட்டானோ என்று அவனருகில் சென்றவள் தயக்கத்துடன், “பா…பார்த்தி!” என்றழைத்தாள்.

அவள் குரலில் இருந்த தயக்கம் அவன் முகத்தில் அறைந்தது.

‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? முதல்நாள் என்னோடு அறையைப் பகிர வந்திருக்கும் அவளை முறையாக வரவேற்று சகஜமாக உணர வைக்க வேண்டிய கடமையை சொந்தப் பிரச்சனைக்காகத் துறந்து, அவளை இங்ஙனம் அவமரியாதை செய்வது அழகா? நீயெல்லாம் என்ன ஆண்மகன்?’

மனசாட்சி சூடாய் கேட்கவும் எழுந்தமர்ந்தவன்,

“வா தமிழ்… உட்காரு.” என்றான் குற்றவுணர்ச்சியில் குறுகிவிட்ட குரலில்.

தமிழுக்கு இது தன் பார்த்தி தானா என்ற சந்தேகம் வந்து விட்டிருந்தது. அவன் மனநிலை சரியில்லை என்பதை ஒரே பார்வையில் அறிந்து கொண்டிருந்தாள்.

திருமணம் செய்வது என்று முடிவான நாளில் இருந்து இறக்கை கட்டாத குறையாகப் பறந்து திரிந்தவனின் இந்த வாட்டம் எதனால் என்று அவளுக்குப் புரியவே இல்லை.

“என்ன ஆச்சு? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” நெற்றியில் கைவைத்து அக்கறையாகக் கேட்டவளின் கையை விலக்கி விட்டவன்,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை, தமிழ். அலைச்சல் அதிகம். அதான் சோர்வா இருக்கு.”

சிரமமேதுமின்றி அது பொய்யென்று அவள் கண்டுபிடிக்குமளவு பொய் சொன்னவனை உறுத்து விழித்தவள்,

“இந்தக் காரணத்தை வேற யாரு சொன்னாலும் நம்பலாம். இருபத்துநாலு மணித்தியாலம் ஓய்வே இல்லாம வேலை பார்த்திட்டு, அடுத்த நாள் பார்ட் டைம் ஜாப் இருக்குனு கூப்டா கொஞ்சம் கூட களைப்பைப் பற்றி யோசிக்காம ஓடிப் போற நீங்க சொல்றதைதான் நம்ப முடியாம இருக்கு.” என்ற பார்த்தி பார்வையை சுவரை நோக்கித் திருப்பினான்.

“எதையோ என்கிட்ட சொல்லக் கூடாதுனு நினைக்கிறீங்க. பரவால்ல, உங்களுக்கு சொல்லணும்னு தோணுறப்போ சொல்லுங்க. இல்ல வேணாம்னா கூட ஓகே. ஆனா அதை நேரா சொல்லிட்டுப் போங்க. அதைவிட்டுட்டு நமக்கிடையில இப்பிடி பொய்யெல்லாம் வேணாம் பார்த்தி.” என்று கட்டிலில் ஊன்றியிருந்த அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அழுத்த, அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

தோல் படை தாண்டி அவள் என்புகள் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்து கொள்ளும் அளவு இறுக்கி அணைத்துக் கொண்டவனால் தமிழின் நுரையீரலில் சுவாசப் பற்றாக்குறை.

என்ன இப்படித் தவிக்கிறான் என்று மனம் கிடந்து தவித்தது அவளுக்கு!

அதை சொல்லப் பிரியப்படாதவனிடம் விடாப்பிடியாகக் கேட்கவும் மனமில்லை.

அதனால் தன்னால் முடிந்தவரை அவனுக்கு ஆறுதலாக இருக்க எண்ணி அவன் முதுகைத் தடவிக் கொடுத்தவள், அவன் பிடரியையும் வருடிக் கொடுத்தாள்.

“இதென்ன பார்த்தி இப்பிடிக் கிடந்து தவிக்கிறீங்க? இது நீங்க இல்லையே! தவிச்சு நிக்கிற எல்லாரையும் தாங்கிப் பிடிச்சு நிக்கிறவருதான என் பார்த்தி? என் கழுத்துல தாலி கட்டினதாலயே அவரு காணாம போயிட்டாரா?”

அவளில் இருந்து விலகி அவள் முகம் பார்த்தவன் குனிந்து அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்துத் தன்னிரக்கத்தில் புன்னகைத்தான்.

“ஆமா… அப்பிடியே உன் கழுத்துல அறுபது பவுன்ல கனமா தாலி செஞ்சு போட்டதுல தன் சொத்து மொத்தத்தையும் கரைச்சு பழைய பார்த்தி காணாம போயிட்டான். ஏன் தமிழ் நீ வேற? இந்த மஞ்சள் கயிறை தங்கமா மாத்த எத்தனை வருஷம் ஆகப் போகுதோ?” நிராசையோடு அங்கலாய்த்தவன் வாயில் பட்டென்று ஒரு அடி வைத்தாள் தமிழ்.

“என்ன பேச்சுப் பேசுறீங்க நீங்க? மஞ்சள் கயிறா இருந்தாலும் தங்கத்தில இருந்தாலும் தாலி, தாலிதான். தங்கத்துல இல்லாததால இதோட மதிப்பு குறைஞ்சு போயிடாது. இன்னொருதடவை இந்த மாதிரிப் பேசிட்டு என்கிட்ட வந்தீங்கனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று கொந்தளித்தவளை ஆசை பொங்கப் பார்த்தான்.

அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்லத்தான் தான் நினைத்ததற்கும் மேலாக அவளுக்கு இன்னும் சிறப்பாக செய்து பார்க்க வேண்டும் என்று அவனுக்குள் வெறியே கிளம்பியது.

கோபத்தில் சிவந்து நின்றவளின் கன்னங்களைத் தன் கைச்சிறைக்குள் எடுத்துக் கொண்டவன் அவள் விழிகளுக்குள் ஊடுருவி,

“உனக்கு எல்லாமே ஒண்ணா இருக்கலாம் தமிழ். ஆனா எனக்கு அப்பிடியில்லை. உனக்கு நிறைய செய்யணும். இந்தக் கழுத்துல குறைஞ்சது பதினோரு சவரன்லயாச்சும் தாலிச் செயின் செய்து போட்டு அழகு பார்க்கணும். முடிஞ்சா அதுக்கு மேலயும் செய்யணும். ஆனா…” என்று அவன் கண்கள் வேதனையைக் காட்ட, தாங்குமா அவளுக்கு?

தானாகவே அவன் மார்மீது சாய்ந்து அவன் நெஞ்சை வருடி விட்டவள்,

“இதுக்குத்தான் உங்களைப் போட்டு இப்பிடி வருத்திக்கிறீங்களா? குவைத் போயிருந்தா இதெல்லாம் சீக்கிரமா செய்திருக்கலாம் இங்க இருக்கிறதுனால செய்ய லேட் ஆகும்னு நினைக்கிறீங்க அப்பிடித்தான? அப்படியெல்லாம் இல்லைங்க, எங்க இருந்தாலும் உங்களால உழைச்சு முன்னேற முடியும். முன்னேறுறதுக்கு முதல் தேவை, உழைக்கிறதுக்கு சோம்பல் படாத குணம். அது உங்ககிட்ட நிரம்பவே இருக்கு. நாம இங்க சம்பாதிச்சே நல்லா வாழ்ந்திடலாம்.” என்றவள் மொழி கேட்டு அவன் இதழ்களில் விரக்திப் புன்னகை.

“இங்க உழைச்சுலாம் நல்லா வாழ முடியாது தமிழ்.” கசப்பாய் சொன்னவன் மனதுக்குள்,

‘அதுக்கேத்த மாதிரி சுமைய என் தலையில ஏத்தி வைக்கலயே!’ என்று அரற்றினான்.

“இருந்துட்டுப் போகட்டும். நல்லா வாழ முடியலனா அடிப்படைத் தேவைகளோட மட்டும் வாழ்ந்திட்டுப் போவோம். எனக்கு நீங்க பக்கத்துல இருக்கணும். அது ஒண்ணு போதும் நான் நல்லா வாழ!”

அவன் மார்பில் நாடியைக் குற்றி காதல் கசிந்துருக அவன் முகம் நோக்கி சொன்னவளைக் காணக் காண அவன் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

சாதாரணமாகத் தன் பார்வைக்கே தடுமாறுபவள் இன்று முதலிரவில் தானாகத் தன்னை நெருங்கியணைத்து பேசிக் கொண்டிருக்கிறாள்.

எல்லாம் எதற்காக? அவன் வருத்தத்தை உடனே களைந்து விட வேண்டும் என்பதற்காக.

ஆனால் உடனடியாகக் கலைந்து போகும் சோகமா அவனது? ஓவென்று ஒப்பாரி வைத்துக் கத்தினாலும் தீராதே!

நீ கேட்கும் ஒன்றை செய்ய முடியாத துரதிஷ்டசாலி உன் கணவன் என்று அவள் பாதத்தில் விழுந்து கதற வேண்டும் போல் எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டான்.

ஒன்றாக இருக்கக் கிடைக்கும் இந்த சொற்ப நாட்களில் போலியாகவேனும் ஒரு சந்தோஷத்தை அவள் அனுபவித்துக் கொள்ளட்டும்.

என்னால் உனக்குக் கொடுக்க முடிந்தது அது ஒன்றைத்தான். மன்னித்துக் கொள் என் தங்கமே! மனதோடு கதறிக் கரைந்தான்.

“என்னங்க இன்னும் என்ன யோசனை? மதியம் எல்லாம் நல்லாதான இருந்தீங்க? இடையில யாராச்சும் எதுவும் சொன்னாங்களா?”

“யாரும் ஒன்னும் சொல்லலைமா. எனக்குத்தான் திடீர் யோசனை. சரி விடு. இனி எதையும் யோசிக்க வேணாம். விதி அழைச்சுட்டுப் போற பாதையில கண்ணை மூடிப் போவோம். இப்போ தூங்கலாமா?” என்றவனை இன்னதென்றே பொருள் விளங்கா பார்வையோடு நோக்கியவளைக் கண்டு உள்ளம் நைந்து போனவன்,

“நமக்கு நிறைய நேரம் இருக்குத் தமிழ். எதுக்கும் அவசரப்பட வேணாம்.” என்று பொடி வைத்துப் பேசியவன் மனதில் காரணமே இல்லாமல் ஒரு நடுக்கம் தோன்றியது. நேரம் வராமலே போய் விடுமோ?

அந்த நடுக்கத்தை நடுநிலை செய்ய அவளை இறுக அணைத்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன் அவளை மார்பில் சாய்த்துக் கொண்டு உறங்க முயற்சித்தான்.

அவன் அணைப்பின் கதகதப்பு அவளுக்குத் தான் சேர வேண்டிய இடம் சேர்ந்து விட்டோம் என்ற நிம்மதியைத் தர, அவள் அடுத்த ஐந்து நிமிடத்திலேயே உறங்கிப் போனாள்.

ஆனால் அவனோ நெஞ்சை முட்டி நின்ற வேதனைகளை ஆற்றுப்படுத்த வழியின்றிப் பலதையும் யோசித்தபடி விழித்துக் கிடந்தான்.

அந்த யோசனைகளில் எல்லாம் முற்றும் முழுதாய் நிறைந்திருந்தவள் அவன் தாய்மொழியானவள் தான்!

தன் கையணைவில் சுகமாகத் துயில் கொண்டிருப்பவளுக்குத் தெரியாதே, இந்த இதம் இன்னும் பத்துநாட்கள் கூடக் கிடைக்காது என்று!

நினைத்தமாத்திரம் இந்த நெருக்கத்தைக் கூட அவளுக்குப் பழக்கவேண்டாம், தள்ளிப் படுக்க வைப்போம் என்று மனம் ரம்பம் போல் அறுத்தாலும் அதையும் செய்து அவள் மனதை இன்னும் நோகடிக்க வேண்டாம், அத்தோடு அவனுக்கும் ஒரே ஆறுதல் இதுதானே என்று தன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டு உறங்காமல் விடிய விடிய அவள் முகம் பார்த்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!