Skip to content
Post Views: 4,038
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு….
இடம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம்….
மன்னரு, பெரம்பலூர் டு திருச்சி ஹைவேசில் விமன்ஸ் காலேஜ் பஸ் ஆக்சிடென்டாம் இன்ஸ்பெக்டர் அவசரப்படுத்த மன்னரோடு இன்னுமொரு கான்ஸ்டபிள் பிரவீனும் ஜீப்பில் ஏறிக் கொண்டனர். இருவருமே துடிப்பு மிக்க இளைஞர்கள்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விளக்கு கம்பத்தில் மோதி தாறுமாறாய் இழுத்து சென்று சாலையில் இருந்து தடம் புரண்டு பள்ளத்தில் சரிந்து ஆபத்தான நிலையில் நின்றது பேருந்து.
Advertisement
இவர்கள் ஸ்பாட்டுக்கு செல்வதற்குள் மூன்று ஆம்புலன்ஸ் வந்திருந்தது.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் பெரும்பாலான மாணவிகளுக்கு பலத்த அடி. பேருந்து நிலை தடுமாறியதில் கம்பிகளில் மோதியும் ஜன்னலில் தலை இடித்தும் பிடிமானம் இல்லாமல் உருண்டும் அடிபட்டிருந்தனர்.
எங்கும் அழுகுரல்…. வலியின் ஈனஸ்வர முணகல். சுமாராய் அடிப்பட்டிருந்த மாணவிகள் பலத்த அடிபட்ட மாணவிகளை ஓடி தூக்கினர் அவர்களுக்கு முதலுதவி செய்தனர்.
Advertisement
இன்னும் தனியாத பதட்டத்துடன் கல்லூரி நிர்வாகத்திடம் போனில் பேசிக்கொண்டு நின்றார் ஓட்டுநர்.
Advertisement
நடுத்தர வயது மனிதராக கண்ணியமான தோற்றத்தோடு தான் இருந்தார்.
எப்படி ஆக்சிடென்ட்? இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.
சார் கியர் மாத்தவே முடியல… சடனா லாக் ஆகிடுச்சு! ஒரு ஆம்னி பஸ்சுக்கு வழிவிட சைடு கொடுத்து ஒதுங்கும் போது கண்ட்ரோல் இல்லாம இப்படி ஆகிடுச்சு என்றவருக்கு தலையில் அடி கன்னத்தில் சிராய்ப்பு.
Advertisement
எத்தனை ஸ்டூடண்ட்?
முப்பத்திரண்டு பேர் சார்.
காலை நேரம் பீக் அவர் என்பதால் சாலையில் பரபரப்பு. வாகனங்களில் செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர். மக்கள் கூட்டம் சேர தொடங்கிவிட்டனர்
போலீசார் அடிப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்து கொண்டிருந்தனர்.
போக்குவரத்தை சீர் செய்து ஒரு புறம் அனுப்பிக் கொண்டிருந்தனர். முதல் ஆம்புலன்சில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
நிவி நிவி…. ரொம்ப வலிக்குதாடி! கொஞ்சம் பொறுத்துக்கோடி ஹாஸ்பிடல் போயிடலாம்.
கையில் பலத்த அடிபட்டிருந்த நிவேதா என்ற மாணவிக்கு இடது தோள் பட்டையில் எலும்பு முறிவு போலும். வலியில் கதறினாள்.
அடிபட்டவர்களுக்கு இணையாக அழுது கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண்…
அந்த பெண்ணை திரும்பி பார்த்தான் மன்னர். அவளுக்கும் நெற்றியில் சிராய்ப்பு, முழங்கையில் சிராய்ப்பு. அதை பெரிது படுத்தாமல் தோழிகளுக்கு ஓடி ஓடி உதவி செய்து கொண்டிருந்தாள்.
நிவேதா இவளோடு முதலாம் ஆண்டு B. com படிக்கும் நெருங்கிய தோழி…
சார் ப்ளீஸ் சீக்கிரம் ஹாஸ்பிடல் கொண்டுப்போகலாம்…! பரபரத்தாள். தோழியின் கதறல் கண்டு அவள் கண்களில் அவ்வளவு வலி.
ம்மா எப்போ என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்! அடிபட்டு ரத்தம் ஒழுகிட்டு இருக்கவங்களை பர்ஸ்ட் பேட்ச் அனுப்பிட்டோம். இதோ இப்போ கிளம்பிடலாம் என்றார் முதலுதவிக்கு வந்தவர் சற்று எரிச்சல் படார்ந்த குரலில்.
ஆக்சிடென்ட் என்பது இந்த மாணவிகளுக்கு புதியதாக இருக்கலாம்… ஒரு நாளைக்கு எத்தனை விபத்தை பார்க்கிறார்கள் எத்தனை பேருக்கு முதல் உதவி செய்கிறார்கள் எத்தனை உயிரிழப்பை கண்கூடாக காண்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையில் இது சாதாரணம்.
நிவி… நிவி என்று அழுது கொண்டே அவளின் கரத்தை பற்றிக் கொண்டாள்.
ம்ம்மா… இப்படி படுக்க வைக்க கூடாது. கையை அசைக்காதீங்க என்று முதலுதவி செய்தவர் மெத்தென்ற சிறிய தலையணையை அணைவாக தோளில் வைத்தார். மன்னர் ஓடிவந்து அப்படியே தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைக்க உதவி செய்தான்.
அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க என்று டிரைவரிடம் கெஞ்சுதலாய் கேட்டுக் கொண்ட அந்த பெண்ணும் அழுது கொண்டே தோழியுடன் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டாள்.
அவள் கவனம் முழுவதும் தோழியில் தான் இருந்தது. கழுத்தில் இருந்த ஷால் நழுவி விழுந்ததை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
செய்தி கிடைத்து மாணவிகளின் பெற்றோரும் வரத் தொடங்கினர்.
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் கூறியது போல் அழும் தோழிகளைக் கண்டு அவர்களுக்காக அழும் அந்த இளம் பெண்ணை வெகுவாக ரசித்தான் மன்னர்.
தோழிக்காக அவளது பதட்டமும் கதறலும் அவளின் மனிதாபிமானத்தை காட்டியது.
கீழே கிடந்த ஷாலை எடுத்துக் கொண்டான்.
“———————“
மன்னர் நம்ம GH போய் கண்டிஷன் என்னன்னு பார்த்து ரிப்போர்ட் கொடுக்கணும் என்றார் இன்ஸ்பெக்டர்.
பலத்த அடி படாத மாணவிகளை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூட்டி சென்று விட்டனர்.
அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்து ஷாலை கொடுத்துவிட்டு அவளிடம் நாலு வார்த்தை பேசி பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மருத்துவமனையை நோக்கி சென்றான் மன்னர்.
இவர்கள் மருத்துவமனையை சென்றடையும் போது அங்கே அந்தப் பெண் இல்லை. அடிபட்ட நிவேதாவின் அப்பாவும் அண்ணனும் வந்திருந்தனர்.
உங்க பெண்ணோட தோழி எங்கே என்றா கேட்க முடியும்? சற்று ஏமாற்றமாய் இருந்தது மன்னருக்கு. ஏனோ அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
சினிமா ஹீரோ போல் அந்தப் பெண் எந்த ஊர்?எந்த ஏரியா என்றெல்லாம் தேடி அலையும் ரோமியோவாக அவன் இல்லை.
ஆனாலும் அந்த பெண்ணின் மீது ஒரு பிரியம்.
சிறு குழந்தை போல் அவள் உதட்டை பிதுக்கி அழுத காட்சி இன்னும் கண் முன் நின்றாடுகிறது. பிறர் வலியை தன் வலியாய் எண்ணும் அந்த போக்கு அவனை மிகவும் கவர்ந்திருந்தது.
அந்த வட்டமான முகமும் அலை பாய்ந்த கண்களும் அவளின் மதிப்பு மிக்க கண்ணீரும் அவனுள் ஆழமாக இறங்கி இருந்தது.
அவ்வளவுதான் நாட்கள் செல்ல செல்ல மன்னர் அதை மறந்து விட்டான். அவன் பணி சூழல் வேறெதிலும் கவனம் செலுத்தும் நிலையில் அவன் இல்லை.அதற்காக அவளை மறந்து விட்டான் என்று அர்த்தமல்ல அந்த நிகழ்வை மறந்து விட்டான்.
ஒரு சிலரை வாழ்வில் ஒருமுறைதான் சந்தித்திருப்போம் ஆனால் அந்த முகம் நம்மில் ஆழப் பதிந்துவிடும்,அது ஏன் என்ற காரணம் தான் நமக்கு புரியாது. அதுபோலத்தான் அந்தப் பெண்ணின் பெயர் தெரியாது ஊர் தெரியாது ஆனாலும் அந்தப் பெண்ணை வாழ்வில் என்றும் மறக்க முடியாது என்ற நிலையில் தான் இருந்தான் மன்னர்.
“————————-“
அவனுக்குத் திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண் பார்க்கும் படலத்தில் சட்டென்று அந்தப் பெண்ணின் முகம் வந்து நின்றபோது உள்ளுக்குள் அதிர்ந்து விட்டான்.
அவளை நினைத்து உரலை இடிப்பது இது தானோ..?
ஏனோ பார்க்கும் எந்த பெண்ணும் அவனை பாதிக்கவில்லை. பனிரெண்டு பெண்களை பார்த்து விட்டு வந்து விட்டான் அவனுக்கு திருப்தி இல்லை.
ஒரு நாள் தரகர் மூலம் வந்த புகைப்படத்தை பார்த்தவன் இன்பமாய் அதிர்ந்து விட்டான். மெல்லிய பூகம்பம் அவனுக்குள் நிகழ்ந்துவிட்டது.
உண்மையாய் நேசித்தால் அந்த நேசத்திற்கு மதிப்பு இருக்குமோ……?!
இன்னும் அவனால் நம்ப முடியவில்லை…. அது எப்படி மன்னர் உனக்கேத்த மகாராணியாக இவள் வந்திருக்கா….! உச்சகட்ட இன்ப அதிர்ச்சி அவனுக்கு.
ஒரு கணம் சிறு பயமும் கூட தோன்றியது. இந்தப் பெண் வேறு அன்று பார்த்ததை விடவும் அழகாக இருக்கிறாளே… சின்ன பெண்ணாவும் இருக்கா நம்மை பிடிக்குமா?
ஏன் பிடிக்காது? அதெல்லாம் பிடிக்கும்! பிடிக்கணும்…. தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். எதற்கும் இருக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டுதலும் வைத்தான். சுடலைமாடசாமி அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கணும் பிடித்தால் கிடா வெட்டி படையல் போடுகிறேன்.
பெண் பார்க்கும் வைபவத்திற்காக அவ்வளவு ஆவலாக காத்திருந்தான். விடலை பருவத்தில் வராத படபடப்பும் குறுகுறுப்பும் 29 ஆம் வயதிலேயே அவனுக்கு வந்தது தான் வியப்பு!
அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.
யார் என்ன என்று பார்க்கும் மனநிலையிலா அன்று அவள் இருந்தாள்?
அவன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடித்திட இயலாது.
உன்னை மூன்றாண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை. ஏன் சொல்ல வேண்டும்? ஒரு கெத்து தான்.
ஜொள்ளு என்று நினைத்து விட்டால்? திட்டமிட்டு இந்த பெண்ணை தேடிப் பிடித்ததாக கருதிவிட்டால்? எது எப்படியோ அவன் மனதின் ஓரத்தில் தேக்கி வைத்த நினைப்பு அவனுக்கு நிஜமாகிவிட்டது.
பெற்றவர்களாய் பார்த்து நடத்தி வைத்த திருமணம்…. இவள் தான் உன் வாழ்க்கை துணை என்று தலையில் எழுதி இருக்கிறது…. என்று தனக்கு தானே ஜம்பமாய் கூறிக்கொண்டான்.
ஆனால் திருமணத்திற்கு முன்பே அந்த ஷாலை மட்டும் அவள் கண்ணில் படாமல் பாதுகாத்து வைத்து விட்டான்.
மூன்று ஆண்டுகளில் ஒரு ஐந்து ஆறு முறையாவது அந்த ஷாலை எடுத்து பார்த்திருப்பான்.
வெறித்தனமாய் காதல் வளர்க்க எல்லாம் அவனுக்கு நேரமில்லை மயிலிறகாய் அந்த ஷாலை தொட்டு வருடும் போது பிரித்தறிய இயலாத ஏதோ ஒரு உணர்வு அவன் இளமைக்குள் மெல்லிய வெப்பமூட்டும்
கோயில் திருவிழா,அரசியல் கூட்டம் என்று பந்தோபஸ்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டத்தில் அந்தப் பெண் இருக்கிறாளா என்று மனதின் ஓரம் ஒரு நப்பாசை இல்லாமல் இல்லை.
எது எப்படியாகினும் மனதில் நின்ற பெண் மனைவியாகிவிட்டாள்.
இவ்வளவு நாள் சொல்லாத ரகசியத்தை இதோ இன்று சொல்லிவிட்டான்.
அவள் நெற்றியின் இடது புற தழும்பை மெல்ல நீவினான். அன்று அவளுக்கு அடிப்பட்ட தழும்பு.
சரியான ஃபிராடு போலீஸ். அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.
ஸ் ஆ…. நான் என்ன ஃபிராடு பண்ணினேன்? பழம் தானா நழுவி பாலில் விழுந்துச்சு என்றான் அட்டகாசமான சிரிப்புடன்.
ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுன்னு ஏமார்ந்துட்டேன் என்றாள் அவன் காதை திருகி.
ஏய் இரு இரு…! நான் என்னமோ திட்டம் போட்டு உன்னை கார்னர் பண்ணி, லவ் டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி பேசுற…. கொஞ்சம் எகிறி விட்டான்.
அப்போவே என் ஏழாம் அறிவு சொல்லுச்சு இந்த போலீஸ் ஒரு மாதிரின்னு…..அதுதான் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னேன் முகத்தை அத்தனையாய் முறுக்கி கொண்டாள்.
சொல்லுவ…. உதட்டை பிடித்து இழுத்தவன் “இந்த போலீசு ஒரு மாதிரின்னா என்ன மாதிரியாம், சொல்லு கேட்போம்”. பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டான்
அவள் பொய்யாய் முறைக்க….
என்னடி ஆன்டி ஹீரோ மாதிரி பார்க்கிற? நான் யதார்த்வாதி என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அதுதானே பார்த்தேன் நீங்க ஹீரோவா இருந்துட்டாலும் உதட்டை முறுக்கி, தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டாள்.
ஏன் நாங்களாம் ஹீரோ மெட்டீரியல் இல்லையா?
பெண் பார்க்க வந்தப்போ என்ன பேச்சு பேசின நீ! வடை போச்சேன்னே நான் முழிச்ச முழி இருக்கே…. அவ்வளவு வெட்க சிரிப்பு அவனிடத்தில்.
பாரேன் இந்தப் போலீசுக்கு வெட்கம் எல்லாம் வருது! முகவாயில் கையூன்றி கேலி பேசினாள்.
ஏன் இந்த போலீசு வெட்கம் கெட்டவனா? செல்லமாய் அவள் தலையை பிடித்து ஆட்டினான்.
இனி என்ன பேசி என்ன ஆகப்போகுது? முடியனூருக்கு வாழ்க்கைப்பட்டு வந்து இந்த போலீசுகூட குப்பை கொட்டணும்னு என் தலையில் எழுதி இருக்கு…. உதட்டை வளைத்து நொடித்துக் கொண்டாள்.
ரொம்ப சலிச்சுக்காதடி நான் தான் ஏமார்ந்துட்டேன். அடுத்தவங்களுக்கு ஒண்ணுன்னா இப்படி பதறுறாளே, நமக்கு ஒன்னுன்னா எப்படி துடியா துடிப்பான்னு நினைச்சேன், எவ்வளவு தங்கமான பொண்ணு இறைவா எனக்கு கொடுன்னு கேட்டேன்! கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பிறகு தானே தெரியுது…. ஒரு வாயாடி மங்கம்மாவை பிடிவாதம் கொண்ட சுப்பம்மாவை கட்டி இருக்கேன்னு.
அப்படியா?இந்த வாயாடி மங்கம்மாவை தொட்டா கையை உடைத்து விடுவேன்…. அவன் கரத்தை விலக்கி விட்டாள்.
ஏய் இது வாயாடி மங்கம்மா இல்லை என் பொண்டாட்டி சுப்பம்மா.
ரைமிங்காக்கும்… வெடித்து வந்த சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கிக் வைத்தாள்.
அவன் மனதை தான் பாதித்திருக்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு அடிக் கரும்பாய் இனித்தது.
அவள் பார்வையில் ஏதோ ஒன்று புதிதாக புலப்பட்டது. அவனும் ஒரு மாதிரியாய் தான் பார்த்து வைத்தான்.
ஹலோ என்ன லுக்கு? என்ன லவ் மேரேஜா பண்ணிக்கிட்டோம் இப்படி கிடந்து வழியறிங்க…. சிலுப்பிக் கொண்டாள்.
வாயை மூடு! இப்போ ரைட் ராயலா லவ் பண்றோம் என்றவன் வலிக்காமல் மென்மையாய் அதேசமயம் காதலின் அழுத்தத்தோடு அவளை அணைத்துக் கொண்டான்.
அடுக்கடுக்காய் நான்கைந்து முத்தத்தை முகம் முழுவதும் இட்டு நிரப்பினாள்.
இன்று அவனை அவ்வளவு பிடித்தது.
அவளுக்குள் புது நம்பிக்கை பிறந்தது. தப்பும் தவறுமாய் ஒன்று கிடக்க ஒன்று செய்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ முடியும் என்ற தைரியம் வந்தது.
எப்படியும் தன்னை கொண்டவன் தடம் புரளாமல் கரம் பற்றி இறுதிவரை அழைத்துச் செல்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு வலுவாக தோன்றியது.
சரி…நான் உங்களுக்கு கிடைக்காமல் போயிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?படக் படக்கென இதயம் துடிக்க அத்தனை ஆவலாய் அவன் முகம் பார்த்து கேட்டாள்.
கிடைக்கலன்னா தற்கொலையா பண்ணிக்க முடியும்? இல்ல தெருத்தெருவா தேடி அலையதான் முடியுமா? தான் யதார்த்தவாதி என்று தன் பதிலால் மீண்டும் நிரூபித்தான்.
அவளுக்கு லேசாய் முகம் சுணங்கி விட்டது என்றாலும் சுதாரித்து ஏற்றுக் கொண்டாள். அவன் சொல்வதும் உண்மைதானே…
“———————-“
இந்த ஷாலை தொலைச்சுட்டு நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?நிறைய டாப்புக்கு இதை நான் மேட்ச் பண்ணி போட்டுப்பேன். என்னோட ஃபேவரட் ஷால் இது!
எனக்கும் தான் என்றான் விஷமமாய் கண்ணடித்து.
ஹலோ இது என்னோடது… ஷாலை எடுத்து அணைத்துக் கொண்டாள்.
ஹலோ இது என்னோடது சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டான்.
——–தொடரும்———-
என்னப்பா பிளாஷ்பேக் ஓகே தானே? பிளாஷ்பேக் எழுதும்போது ஒருவித மெல்லிய படபடப்பு தோன்றும். பிளாஷ்பேக் என்றாலும் அது நியாயம் செய்யும் விதமாக இருக்க வேண்டும் அல்லவா?
error: Content is protected !!