நாயகனோ நானறியேன் – நாயகன்22
அவரோ “இல்லைங்க தம்பி.. எங்களுக்கு இந்த போலீஸ், ஜெயில் எல்லாம் பழக்கம் இல்லைங்க.. என்னை விட்ருங்க தம்பி” என நடுங்கிய குரலில் கூற..
அவனோ சிரித்து “ஓஓ.. புரிஞ்சு போச்சு.. பணம் வேணும்னா கேளுய்யா.. அதுக்கு ஏன் பம்முற” என மீண்டும் அதிலேயே நிற்க..
சுப்பிரமணியன் “ஐயோ தம்பி.. யாருக்கு வேணும் இந்த பணம்.. அதும் கொலைப்பழி ஏத்துகிட்டு வர பணம்.. என்னை இதில எல்லாம் இழுக்காதிங்க” என முடிந்த அளவு திடமாகவே சொல்ல
பல வருட அரசியல் வாழ்வில் இருந்தவரையே மனம் மாற்றி.. மருமகனாகத் தன்னை ஏற்றுக் கொள்ள வைத்தவனுக்கு பணத்தைக் காட்டி இவரை ஒப்புக் கொள்ள வைக்க முடியாதா என்ற அவனது இறுமாப்பு தவிடு பொடியாக..
Advertisement
ஆத்திரமாக அவரைப் பார்த்து “ஓஹோ.. அவ்வளவு பெரிய மிராசு ஆகிட்டிங்களோ ஊருக்குள்ள.. சும்மா நடிக்காதய்யா.. நாலு மாசத்துக்கு முன்னாடி இடுப்புல வேட்டி இருக்கா இல்லையான்னு தெரியாத அளவு குடிச்சுட்டு குப்புறக் கிடந்தவன் தானே நீ.. ஒழுங்கா இதுக்கு ஒத்துக்கோ” என இத்தனை நேரம் தான் போட்டிருந்த பொறுமை முகமூடியைக் கழட்டி எறிந்தான் குமரன்.
தன் மகன் வயதை விடச் சிறியவன் தன் குடிப்பழக்கத்தை வைத்து தன்னை எடை போட்டிருக்க.. அப்போது தான் ‘அசிங்கமா இருக்கு.. உங்களை அப்பான்னு சொல்ல.. இது நல்லதுக்கு இல்லைப்பா.. விட்ருங்க’ என்ற மகனது புலம்பல் அவருக்கு நியாபகம் வந்தது.
இன்று அவன் சொன்னது போலத் தானே ஆகிவிட்டது.. குடிப்பவன் பணத்திற்காக எதையும் செய்வான் என்ற எண்ணம் தானே இதைத் தன்னிடம் கேட்கச் சொன்னது என நொறுங்கிப் போனார்.
Advertisement
வேதனையான முகத்துடன் “தம்பி.. எனக்கு உங்க பணம் வேண்டாம்.. என்னைப் பாத்துக்கற அளவு என் பையன் சம்பாதிக்கறான்.. இப்பத்தான் ஏகப்பட்ட குளறுபடிக்கு அப்புறம் என்ற மச்சினன் எம்பையனுக்குப் பொண்ணுத் தர சம்மதிச்சு இருக்கான்.. இந்த நிலையில நீங்க சொல்ற மாதிரி நான் உள்ள போனா.. என் குடும்ப மானமே போய்டும்.. உங்களுக்கு இதெல்லாம் சகஜமா இருக்கலாம்.. ஆனா என் பையன் வாழ்க்கையே வீணாப் போய்டும் தம்பி.. என்னை விட்ருங்க” என கிட்டத்தட்ட கெஞ்சினார்.
Advertisement
இத்தனைக்கு அப்புறமும் அவர் எதிர்த்து வாதிடாமல்.. ‘நீங்க பண்ணதுக்கு நான் ஏன்டா உள்ளே போகனும்’ என எதிர் கேள்வி கேட்காமல்.. கெஞ்சத் துவங்க.. குமரனுக்கு இவரது பயத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என இன்னும் இன்னும் தீர்மானமாகத் தோன்றியது.
அவரது பலவீனத்தைப் அவரது பேச்சில் உணர்ந்தவன் “ஓஓ.. பையன்.. அவன் இந்த கூட்டுறவு சொசைட்டியில வேலை பாக்கறான் இல்லை.. நல்லது” என அவன் யோசித்த விதமே.. அடுத்து மகனை வைத்து தன்னை சரிக்கட்ட முயற்சிக்கப் போகிறான் என தெள்ளெனத் தெரிந்தது.
அதைப் போலவே “நாளைக்கே உன் பையன் அங்க அடகுக்கு வந்த நகையைத் திருடிட்டான்னு வச்சுக்கோ.. இல்லை.. அதை ஒட்டி இருக்க ரேஷன் கடையில இருந்து ரேஷன் பொருளெல்லாம் திருடி உன் வீட்ல பதுக்கி வச்சுட்டான்னு வை.. அப்ப உன் குடும்ப மானம் போகாதாய்யா” என்றவன் மூளை முழுக்க முழுக்க.. எப்படியாவது இவரைப் பலி கொடுத்து தான் அந்த அரசியல்வாதியின் நம்பிக்கையைப் பெற்று சொத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
Advertisement
அவன் சொன்னதைக் கேட்டு சற்றும் யோசிக்காமல் அவன் காலைப் பிடித்து “தம்பி.. என் மகனை விடச் சின்னவர் நீங்க.. உங்க காலைப் பிடிச்சுக் கேட்கறேன்.. எங்களை விட்ருங்க.. நீங்க சொல்றபடி நடந்தா நாங்க எல்லாம் விஷம் குடிச்சு தான் சாகனும்” எனக் கண்கள் கலங்கக் கெஞ்சினார்.
மெதுவாக அவரைத் தூக்கி நிறுத்திய குமரன் “அட.. என்னய்யா நீ.. உன் பையன் வாழ்க்கைக்குப் போராட அப்பன் நீ இருக்க.. ஆனா எனக்கு நான் தான் இருக்கேன்.. இது எல்லாம் நடக்கும்னு சொல்லலை.. நடந்தா என்ன ஆகும்னு கேட்டேன்.. ஆனா நீ நான் சொன்னதுக்கு சம்மதிச்சா.. இது எதுவும் வராம பாத்துக்கலாம்.. யோசிச்சு சொல்லு” என்றபடி நடந்தான்.
சில அடிகள் சென்று திரும்பியவன் “நீ இதை வேற யார்கிட்டயாவது சொல்லி உதவி கேட்டா.. உன் பையனுக்கு நான் சொன்னதெல்லாம் நடக்கும்.. புத்திசாலித்தனமா நடந்துக்கோ” என மிரட்டிவிட்டுச் சென்றான்.
அமைதியாக வெளியே நடந்தவருக்கு மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.. மனம் முழுதும் தன் மகனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஒன்று தான் வியாபித்து இருந்தது.
கால்கள் தன்னை அறியாமலேயே மதுக்கடையை நோக்கிச் செல்ல.. கையில் இருந்த பணத்திற்கு பாட்டிலில் ததும்பும் அந்த அரக்கனை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
மனம் முத்துக் குமரனின் பேச்சிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.. அவர் பொறுப்பற்ற தந்தை தான்.. மதுவின் பிடியில் சிக்கி.. மனைவி குழந்தையைக் கண்டுகொள்ளாமல் திரிந்தார்.. மனைவி காட்டு வேலை செய்து மகனைப் படிக்க வைக்க.. விபரம் புரிந்த வயதில் ஸ்பாட் ஸ்பேனர் பிடிக்க ஆரம்பித்தான்.
அவனே சம்பாதித்து டிப்ளமோ சேர்ந்து படித்தான்.. சில சமயங்களில் மனைவியிடம் சண்டையிடும் போது.. தான் சம்பாதித்த காசைக் கொடுத்து அம்மாவைக் காப்பான் அவன்.. அவர் தகுதியை அவரே உணர்ந்த நாள்.. தன் சொந்த மச்சினன் தன் மகனைக் குடிகாரன் மகன் என விளித்து பெண் தர மறுத்தது தான்.
ஸ்பாட் எவ்வளவு பொறுப்பானவன்.. குணமானவன்.. அவனுக்கு தன்னால் இழிபெயரா என நினைத்தவர் அன்று மகனிடம் சத்தியம் செய்தார் இனி குடியைத் தொடமாட்டேன் என.. ஆனால் இத்தனை நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதன் சுவடுகளால் மகனுக்கு ஆபத்து நேருமோ என பயந்து போயிருந்தார்.
யாரிடமாவது சொல்லி உதவி கேட்கலாம் என்றால் குற்றம் செய்தவன் அரசியல்வாதி.. அதை தன் மீது சுமத்துபவன சட்டத்தைக் காக்க வேண்டியவன்.. இருவர் இடையில் தான் மீள முடியுமா.. எல்லாப் பக்கமும் வழி அடைத்தாற் போல இருந்தது.
ஏழை சொல் நிச்சயம் அம்பலம் ஏறாது.. முத்துக்குமரனின் செல்வாக்கும் அவர் அறிந்தது தான்.. எப்படி மகனை மீட்பது என யோசித்தவாறே இருந்தவருக்கு.. ‘தான் இருந்தால் தானே இத்தனையும்.. இல்லாமல் போனால் அவன் என்னை வைத்து மகனிடம் விளையாட முடியாதல்லவா’ என யோசித்தார்.
நேரம் ஆக ஆக அதே சிந்தனை வலுப்பெற.. ‘தான் இறந்தால் யாருக்கும் நட்டம் வரப் போவதில்லை.. இருந்து அவனுக்குப் பயன்படக் கூடாது’ என திண்ணமாகத் தோன்ற.. தவறான சந்தர்ப்பத்தில் அங்கே இருந்த கேபிள் வையர் சரியாகத் தென்பட.. தன் முடிவை முடிவு செய்து கொண்டார்.
கதவை இறுகச் சாற்றியவர்.. அதோடு தன் உலக வாழ்வை அந்த வையரால் முடித்துக் கொண்டுவிட்டார்.. இறக்கும் தருவாயில் மகன் நலமுடன் வாழ வேண்டும் என எண்ணியபடி அந்த உயிர் பிரிந்துவிட்டது.
காட்டு வேலைக்குச் சென்ற அவர் மனைவி.. திரும்ப வரும்போது.. என்றுமில்லாத திருநாளாய் கதவு பூட்டியிருக்க.. தட்டித் தட்டிப் பார்த்து சோர்ந்து போனவர்.. அக்கம் பக்கம் இருந்தவர்களை அழைக்க ‘போதையில் தூங்குவார்’ என எண்ணியபடியே அவர்களும் முயற்சிக்க.. பின் இறுதியில் கதவை நெம்பித் திறந்து உள்ளே போக.. உத்திரத்தில் சடலமாகத் தொங்கினார் சுப்பிரமணியன்.
ஸ்பாட்டிற்கு மொபைலில் அழைப்பு பறக்க.. அவன் வீடு வந்து சேர்ந்த போது.. காலையில் ஏக்கப் பார்வையோடு தன்னை வழியனுப்பி வைத்த தந்தை நடுவீட்டில் கண்ணை மூடிக் கிடந்ததைத் தான் கண்டான்.
‘தான் போனாலும் யாரும் நட்டப்படப் போறதில்லை’ என அவர் எண்ணி இவனை விட்டுச் சென்றிருந்தாலும்.. தந்தை என்ற மனிதரின் அருகாமையே அனைத்திற்கும் போதுமானதாக இருக்கும் என்பதை இனி அவருக்கு யார் சொல்லுவார்.
அவர் இறந்து போகையில் அருகில் மதுப்பாட்டில் திறக்கப்படாமல் இருக்க.. சத்தியத்தை மீறி குடிக்க முடியாமலும்.. குடியை மறக்க முடியாமலும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனைவராலும் முடிவெடுக்கப்பட.. முழுமுதற் காரணம் அவரோடு இறந்தும் போனது.
செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த நந்தாவின் கையைப் பற்றி கண் கலங்கினான் நந்தா.. முகிலும் நந்தாவும் அனைத்தையும் கவனிக்க.. ஆனால் அதை மறுத்த ஸ்பாட்டின் மாமா தானே அனைத்தும் செய்து ஒரு சிறு நிம்மதியை அனைவருக்கும் அளித்தார்.
தற்கொலை என்பதால் வெகுவிரைவில் அவரை நல்லடக்கம் செய்துவிட.. ஒரு மனிதர் இருந்த இடமும் இல்லை.. போன தடமும் இல்லை.
முத்துக்குமரனிற்கு அப்போது தான் மனம் நிம்மதி அடைந்தது.. இந்தக் கூறு கெட்ட மனிதர் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.. அவனும் அவர் இறப்புக்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிட்டான்.. இது பிரச்சனை ஆனாலும் அதை சமாளிக்க அவனுக்குத் தெரியும்.. ஆனால் தன் பேராசையால் ஒரு உயிர் போனது அவனை எவ்வகையிலும் பாதிக்காமல் போனதே கொடுமை.
திருமணம் முடிந்து நான்கு நாட்களே ஆன நிலையில் இறப்பு வீட்டிற்குச் செல்வதா என்ற வீட்டினரின் முணுமுணுப்பையும் மீறி.. நந்தாவும் மகிழும் ஸ்பாட்டின் வீட்டிற்கு சென்று திரும்பி வந்திருக்க.. முதலில் குளித்து வந்த மகிழ் நந்தாவிடம் சூடாக காஃபியை நீட்டினாள்.
அவன் இருந்த குழப்ப மனநிலைக்கு அது மிகவும் தேவையாய் இருக்க.. மகிழையும் அருகில் அமர்த்தியவன் “ஸ்பாட் இப்பத்தான் நிம்மதியா இருந்தான்.. அதுக்குள்ள அவங்கப்ப இப்படிப் போகனுமா.. நம்பவே முடியலை.. நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்ப ஏதோ சொல்ல வந்தார் மயிலு.. ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலையில சரியா பேச முடியலை” என தன் சந்தேகத்தை மனைவிடம் கூறி புலம்பிக் கொண்டிருந்தான்.
நந்தாவிற்கு ஸ்பாட்டின் அப்பா இறப்பில் சொல்லப்பட்ட காரணங்கள் எவையும் நம்பத் தகுந்தவையாக இல்லை.. இரண்டு நாட்கள் முன் தன்னிடம் என்ன பேச வந்திருப்பார் என நினைத்தவன்.. தனக்குள்ளேயே அந்த யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தான்.
இதைப்பற்றி ஸ்பாட்டிடன் பேசலாமா என அவன் எண்ணிக் கொண்டிருக்க.. அடுத்த நாள் அவனிடமிருந்தே நந்தாவிற்கு மொபைல் அழைப்பு வந்தது.
அதை ஏற்றுப் பேசியவன் முகம் மாறிப் போய்விட்டது….
நாயகன் வருவான்..
