Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 09

தமிழிசை 09

பார்த்திபன், தன் பழைய முதலாளி சூப்பர்மார்க்கட் ஓனரைப் பார்த்து வருவோம் என்று தன் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தான்.



Advertisement

அப்படியே அங்கே வேலையில் இருக்கும் ஆனந்தனையும் பார்த்து விட்டு வருவதுதான் பிளான்.

முறைக்கு ஆனந்தனை வீட்டில் சென்று பார்க்க வேண்டும். ஆனால் செல்வம் வீண் சண்டை வலிப்பார் என்பதால், கடையில் வைத்தே பேசிவிட்டு வருவோம் என்று முடிவெடுத்திருந்தான்.

Advertisement

Advertisement

நேற்றுப் போல் இல்லாமல் வீடே அமைதியாக இருந்தது.

நேற்றைய தினமே ராஜேஷ் மற்றும் நிர்மலா ஊருக்கு சென்றிருக்க, நிரஞ்சனா தருண் மற்றும் மித்து மூவரும் தங்கள் வீட்டுக்கு சென்றிருந்தனர். குடியிருக்கும் வீட்டை வெறுமையாகப் போட்டு வைக்க முடியாதே!

Advertisement

அடுத்து இந்த வீட்டு வாசிகளில் வரதனும் வேலைக்கு சென்றிருந்தான். அவன் மகன்களும் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர்.

இப்போது எஞ்சி இருப்பது பார்த்தியும் பர்வதமும் சித்ராவும் மட்டும்தான். நேற்றைய அலையின் மிச்சமாக சித்ரா,  முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலைய, பர்வதம் அவளிடம் சமாதானம் பேசி ஓய்ந்து போனவர் கொல்லைப்புறம் நட்டு வைத்திருந்த வல்லாரைக் கீரையைப் பறித்து வர சென்றிருந்தார்.

தாயைக் கண்ணில் காணாத பார்த்தி,

“அண்ணி! அம்மாவை எங்க?” என்று கேட்டு அவள் பதில் வேண்டி நிற்க, அவளோ இவன் பேசியது தன் காதிலேயே விழாதது போல் பாவித்து வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

கேட்கவில்லையோ என நினைத்து மீண்டும் கேட்கப் போன பார்த்தி,

“இங்கதான் நாம நல்லதைப் பேசினாலும் தப்பா போகுதே! இனி யாரும் சாப்டியானு கேட்டா கூட ஆமா, இல்லனு பதில் சொல்ல நம்ம வாயைத்  திறக்கக் கூடாது.” என்று அவள் சத்தமாக முணுமுணுத்தது கேட்டு,

‘நேத்துப் பேசின பிரச்சனை நேத்தையோட முடிஞ்சுது. இன்னைக்கு அவங்ககிட்ட நானாதான பேசினேன்? அதுக்கு இப்பிடிதான் நாகரிகமே இல்லாம நடந்துப்பாங்களா? என்ன  ஆளு இவங்க?’ என்று அதிருப்தியானவன்,

‘ஒருவேளை அம்மாவும் இப்படித்தான் பேசாமல் இருப்பாரோ?’ என்ற சந்தேகத்தோடே,

“அம்மா!” என்று சத்தமாக அழைத்தான்.

அவர் அப்படி எந்த வன்மத்தையும் காட்டாது, “என்னப்பா?” என்று கொண்டே கீரைக்கட்டுடன் வந்தார்.

“நான் வெளிய போயிட்டு வரேன் மா. எதுவும் வாங்கிட்டு வரணுமா?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா. மதிய சமையலுக்கு எல்லாம் ஃபிரிட்ஜ்ல இருக்கு. நீ வேணும்னா பசங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வா. ரெண்டு பேருக்கும் ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும்.”

“சரிம்மா..” என்றவன் நகரப்போக, சித்ரா நாராசமாக வாயைத் திறந்தாள்.

“ஒன்னும் வேணாம் த்தை. என் பசங்களுக்கு வாங்கிக் குடுக்க நானும் என் புருஷனும் உயிரோடதான் இருக்கோம்.”

பார்த்திக்கு ச்சீ என்றானது அவளின் குணம்.

முன்னரே அவள் குணம் தெரியும்தான் என்றாலும் தாய் அலைபேசியில் பேசும் போது, “சித்ரா இப்போ ரொம்ப மாறிட்டா!” என்று சொன்னதை வைத்து, பிள்ளைகள் வளர  வளர அண்ணியின் குணம் மாறி விட்டது என்று கொஞ்சமே கொஞ்சம் நம்பியிருந்தான்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால்தான்  தெரிகிறது, முன்னிலும் மோசமாய் அவள் மாறி நிற்கிறாள் என!

அவனுக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படி ஒரு குணத்தோடு இருப்பவளை மருமகள் மாறிவிட்டாள் என்று தாய் எப்படி நம்புகிறார் என்பதுதான்.

அதற்கான விடையை அடுத்தடுத்த நிமிடங்களிலேயே கண்டு பிடித்தும் விட்டான்.

“ஏன் சித்ரா, விடிஞ்ச பொழுதுல இப்பிடி பேசுற? அவன் அண்ணன் பசங்களுக்கு அவன் வாங்கித் தரக்கூடாதா?” பர்வதம் தாக்கலாய் கேட்க,

“அண்ணன் புள்ளங்க என் புள்ளங்க  மாதிரினு நினைச்சா, பார்த்தி என் பசங்களுக்கு என்னவும் வாங்கிக் குடுக்கலாம். ஆனா அப்பிடி அவன் நினைக்கலையே. வாழ வழியில்லாம அவன் வீட்டுல வந்து ஒதுங்கின போலதான நேத்து என்னையும் என் புருஷனையும் மரியாதை இல்லாம பேசினான். அதுமாதிரி என்  பிள்ளைங்களுக்கு பிஸ்கட்டையும் சாக்லேட்டையும் வாங்கிக் கொடுத்துட்டு, வாங்கித் தின்ன விசுவாசத்துக்கு அவங்களையும் அடிமையா இருக்க சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்பிடி! உங்க மூத்த புள்ளைக்கு ஒரு விடிவு காலமே வர மாட்டேங்குது. அவர் வாங்குற அஞ்சு பத்து சம்பளத்தை,  வயித்துக்கும் குழந்தைங்க படிப்புக்கும் போடுறதே பெரிய பாடா இருக்கு. இதுல எங்க இருந்து தனியா வீடு எடுத்து வாடகைக்கு செலவு பண்ண? அதாலதான் நானும் அவரும் இங்க இருந்து எல்லார் வாயிலயும் அரைபடுறோம்.” என்று முந்தானையை எடுத்து மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டு குலுங்க, பர்வதம் முகத்தில் அப்பட்டமான வருத்தமும் கவலையும்.

‘ஆக பரிதாபத்தை சம்பாதித்து சம்பாதித்துத் தாயை நன்றாகத் தன் பக்கம் இழுத்து விட்டிருக்கிறார், அண்ணி!’ பார்த்தி புரிந்து கொண்டிருந்தான்.

பர்வதம் வேறு யாரேனும் பெண்கள் குடும்பக் கஷ்டத்தை சொன்னாலே, உருகி விடும் ஆள்.

அந்நேரம் கணவர் இருந்தவரை தான் இருந்த நிலை அவருக்கு நினைவில் தோன்றி விடும்.

சொல்லப்போனால் பார்த்தி என்றொருவன் சம்பாதிக்க ஆரம்பித்த பின்தான், தன் கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் பாக்கியமே அவருக்குக் கிடைத்தது.

அதற்கு முன் அவர் கணவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. வரதன் மட்டும் சம்பாதித்துக் கொண்டு இருந்த போது, காசு கொடுக்கல் வாங்கல்களை எல்லாம் அவனே பார்த்துக் கொள்வான். இவர் இவருக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கணக்குகள் சொல்வது மட்டும்தான் இவர். தாய்க்குத் தொட்டுப் பார்க்கக் கூட ஐம்பது ரூபா கொடுத்த வரலாறு இல்லை வரதனிடம்.

ஆனால் பார்த்தி, ஒரே ஒரு முறை கணக்கைக் கேட்டுத் தேவையானளவுக்கு கொஞ்சம் அதிகமான தொகையை அவரிடம் கொடுத்துவிட்டு கணக்கும் அவரே, காசும் அவரே என்று விட்டு விடுபவன் தான் தனியாக சேமிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தான். வெறுங்கையோடு தாயை இருக்கவிட்ட வரலாறு அவனிடம் இல்லை.

தனக்கொரு பொறுப்பான மகன் இருந்ததில் தன் வாழ்க்கை கடைசி காலத்திலாவது இப்படி மாறியிருக்க, அப்படி மாற வாய்ப்பில்லாத பெண்களைப் பார்த்தால் பர்வதம் மனதில் கழிவிரக்கம் தோன்றி விடும்.

வெளிப் பெண்களுக்கே இப்படி என்றால் தன் மருமகள் கலங்கினால் தாங்குமா அவருக்கு?

“அப்படியெல்லாம் உன்னை இங்க யாரும் நினைக்கல மா,  சித்ரா.” என்று அவளுக்கு சமாதானம் சொல்ல ஆரம்பிக்க, இதையெல்லாம் பார்க்க சகிக்காத பார்த்தி…

“நான் போயிட்டு வரேன் மா.” என்று விட்டுக் கிளம்பினான்.

அதில் மகனிடம் திரும்பினார்.

“நீ இன்னும் சாப்பிடலேயே ப்பா?”

“வெளிய பார்த்துக்கிறேன் மா” என்றவன் செல்வதில் அவசரம் காட்ட,

அவரோ, “போகும் போது கேட்கக் கூடாது, தூரமாவா…” என்று அவர் இழுக்க,

“நான் வேலை பார்த்த கடைக்குப் போறன். முதலாளியைப் பார்த்திட்டு அப்படியே ஆனந்த் அண்ணாவாயும் பார்த்துப் பேசிட்டு வரேன்.” என்றவும் துணுக்குற்றார் பர்வதம்.

“அ… அவனோட எ…என்ன பேசப் போற?”

தடுமாறிய தாயை ஊன்றிப் பார்த்தான், பார்த்தி.

“அவரோட நான் எதைப்பற்றிப் பேசக்கூடாதுனு நீங்க நினைக்கிறீங்க?”

அவன் கேள்வியில் திகைத்த பர்வதம், “நான் அப்பிடி எதுவும் நினைக்கலயே ப்பா. நீ பேசுறது தெரிஞ்சு செல்வம் அண்ணே எதுவும் பிரச்சனை பண்ணுவாரோனு தான் கேட்டேன்.”

“ஹ்ம்ம்.. அவர் பிரச்சனை பண்ணுவாருனுதான் கடைக்குத் தேடிப்போறேன். இல்லனா வீட்டுக்கே போயிருப்பேனே!” பெருமூச்சு விட்டவன்,

“நான் வரேன்.” என்றுவிட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் சித்ரா அழுததையே மறந்தவளாக…

“அத்தை! எனக்கென்னவோ பார்த்தி கல்யாண விஷயத்தைப் பத்தி பேசத்தான் தமிழோட அண்ணனைப் பார்க்கப் போறானா இருக்கும்னு தோணுது.” என்ற பர்வதமும் அதை நினைத்தே மனதில் உழன்று கொண்டிருந்தவர் மருமகளைத் திகிலாய் பார்க்க…

அவளோ, “அத்தை! தமிழைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, பார்த்தி மறுபடி குவைத் போவான்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. அவன் போகலனா என்னாகும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அதால அவன்கிட்ட பேச வேண்டியதைப் பேசிடுங்க. இல்லனா நீங்கதான் கஷ்டப்படுவீங்க!” என்று தேன் குழைத்து அவருக்கு நல்லது சொல்வது போல் பேசி விட்டு நகர்ந்தவள் முகத்தில் துளியும் நன்மைக்கான அடையாளம் இல்லை.

பர்வதமும் மருமகள் சொன்னதே  சரியென, மகனிடம் பேச வேண்டிய அவசியம் உணர்ந்தவருக்கு விஷயத்தை பார்த்தியிடம் சொல்லவும் பயமாக இருந்தது. என்ன ஆட்டம் ஆடப் போகிறானோ என்று உள்ளூர நடுங்கிப் போனார்.

ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ஒருவாறு மனதைத் திடப்படுத்தி, மகன் எப்போது வருவான் என்று அவர் காத்திருக்க அந்தோ பரிதாபம் அவருக்கு எதிராக இருந்தது காலமும் நேரமும்.

தமிழ் கேட்டும் தன் முடிவில் நின்று  இறங்கி வராத பார்த்தியின் மனதை அடியோடு மாற்றியது, அவனின்  தாய்மொழியானவளின் அவல நிலையும் ஆனந்தனின் அன்பான வேண்டுகோளும்.

                               *******

பார்த்திக்கு என்று இங்கே பைக்கெல்லாம் இல்லை. சைக்கிள் ஓடும் வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனுக்குத் தனக்கென்று தனியாக வாகனம் ஒன்றை வாங்கும் அளவு எல்லாம் என்றுமே கையிருப்பிருந்ததில்லை.

குவைத் சென்ற பின் ஒரு புது பைக் வாங்கியிருந்தான் தான். ஆனால் அது அவனுக்கு இல்லை. தந்தையின் தயவால் சேர்ந்த கடன்காரனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தான்.

அதன் பின் தனக்கென்று ஒன்றை இங்கே வாங்கி விட வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவே இல்லை. இங்கேதான் என்று மொத்தமாக வந்த பின் வாங்கிக் கொள்வோம் என்று இருந்தான்.

நேற்றுத் தருண் சொல்லி இருந்தான், எங்கேனும் செல்ல வண்டி வேண்டுமென்றால் தன்னுடையதை எடுத்துக்கொள்ள சொல்லி.

ஆனால், இவனுக்குத் தெருவில் இறங்கி நடக்கவேண்டும் போல் இருக்க, பிறந்த மண்ணின் வாசத்தை நுகர்ந்து கொண்டும் எதிரில் இவனை அடையாளம் கண்டு நலம் விசாரித்தவர்களுக்கு புன்னகை முகமாகப் பதில் சொல்லிக் கொண்டும் நடையிலேயே சூப்பர் மார்க்கெட்டை அடைந்தான்.

அவன் முதல் முறை மூட்டை தூக்கிய இடம் என்று சிறுமையாய் பார்க்கத் தோன்றவில்லை. யாரின் கையையும் எதிர்பாராமல் என் அம்மாவையும்  தங்கையையும் கௌரவமாக வாழ வைக்கத் துணையாக இருந்த ஸ்தாபனம் என்ற நன்றியுணர்வோடு இன்றைய காலத்துக்கு ஏற்ப மாறிப் புதுப் பொலிவோடு நின்ற கட்டத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் நிதானமான ரசனையைக் கெடுக்கும் வகையில் உள்ளே இருந்து அரக்கப் பறக்க ஓடி வந்து கொண்டிருந்தான், ஆனந்தன்.

அவனைக் கண்டு பார்த்தி புன்னகையை விரிக்க, அவசரத்தில் இருந்த அவனால் இவனுக்குப் பதில் புன்னகையைக் கூடக் கொடுக்க முடியவில்லை. அதே நேரம் தன் பிரச்சனையையும் சொல்ல முடியவில்லை.

“வா பார்த்தி! முதலாளியைப் பார்க்க வந்தியா? அவர் உள்ளதான் இருக்காரு. நீ போய் பாரு. எனக்கொரு வேலை நான் கிளம்புறேன்.” என்று அவனிடம் கேட்ட கேள்விக்கு எல்லாம் தானே பதிலை சொல்லிக் கொண்டு அவன் பைக் பக்கம் நகர, ஆனந்தனின் குணம் அத்துப்படியாய் தெரிந்த பார்த்தி, அவனைக் குழப்பமாகப் பார்த்தவன் அவன் பின்னோடே சென்று அவனைத் தடுத்தான்.

“அண்ணா! எதுவும் பிரச்சனையா?” என்ற, அவனைப் பார்க்கக் கூட செய்யாத ஆனந்தன்…

“அப்பிடிலாம் ஒன்னும் இல்ல பார்த்தி. நான் இன்னும் அரை மணித்தியாலத்துல வந்துடுவேன். நீ உள்ள போ!” என்று கொண்டே பைக்கை ஸ்டார்ட் பண்ண, பார்த்தி யோசிக்கவே இல்லை. அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டான்.

ஆனந்தன் திரும்பிப் பார்க்க, “எனக்கு உங்களைத் தெரியும்ணா. என்கிட்ட  உங்க பதட்டத்தைப் பார்த்தா, என் சம்மந்தமாதான் ஏதோ பிரச்சனைன்னு தோணுது. நானும் கூட வரேன் ணா!” என்று சரியாகக் கணித்து அவன் பேச, ஆனந்தன் எதுவும் பேசவில்லை. இவனை அழைத்து செல்வது தான் சரியென்று தோன்ற, பெருமூச்சோடு பைக்கை நகர்த்தினான்.

பார்த்தி நினைத்தது செல்வம் குடித்து விட்டு வீட்டில் ஏதோ ரகளை செய்கிறார் போல என!

ஆனால் செல்வம் இம்முறை அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி தகதிமி ஆடிக்கொண்டிருந்தார்.

ஆனந்தன் பைக் அவன் வீட்டை அடைய, அவர்கள் வீட்டின் முன் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டே பார்த்தி சற்று திகைத்தவன், அடுத்து தமிழ் இருந்த நிலை கண்டு உயிர் மொத்தமும் உறைந்து போக ஆனந்தன் வண்டியை நிறுத்தும் முன்னமே வண்டியில் இருந்து குதித்து அவளிடம் தாவியிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!