Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka ManimagudamUncategorized

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 5

கிரேக்க மணிமகுடம்

வரலாற்று நெடும்தொடர்)

5. உந்துரு போட்ட ஓட்டை…..

“தன் குடவாயில் அன்னோள்” என்று அகநானூற்றுப் பாடலும்,



Advertisement

“தேர்வண் சோழர் குடந்தை வாயில்” என்று நற்றிணையும் புகழும்

குடவாயில் என்ற குடந்தை…. பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கோவில்களின் நகரம் என்றும் சுந்தர சோழ சக்ரவர்த்தியின் காலம் வரை சோழ தேசத்தின் தலைநகராகவும் இருந்த பெரும் நகரம். வாசகர்களின் எளிய புரிதலுக்கு இன்றைய கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியே கதையில் வரும் குடந்தை. சோழர்களின் கருவூல அறை இங்கிருந்து தான் செயல்பட்டது என்கின்றனர் ஆராய்சியாளர்கள். இத்தகைய பெருமைக்குரிய குடந்தை நோக்கியே இளமாறன் சென்னி தேவனும், சோழ பட்டத்து இளவரசன் நெடுங்கிள்ளியும் தேரில் பயணித்து கொண்டிருக்கின்றனர்…..

Advertisement

இடதுபுறத்தில் பாய்ந்து வந்த பொன்னி மகள் இப்போது கரிகால் பெருவளத்து பேரரசன் கட்டிய கல்லணையில் பாதை மாறினாள். கல்லணையிலிருந்து வலப்புறமாக பிரிந்த பெரும் வாய்க்காலில் பீறிட்டு பாய்ந்த பொன்னி இப்போது தஞ்சை நோக்கி நம் வீரர்களுடன் பயணிக்க தொடங்கினாள். இடப்புறமாக பிரிந்து சிறு அணைக்கட்டின் தடுப்பில் மோதி அங்கிருந்து கொள்ளிடம் நோக்கி திரும்பிய அவளின் மறு உருவம்,… மெல்ல மெல்ல தேரில் நின்றுகொண்டிருந்த இளமாறன் கண்களில் இருந்து மறைந்து கொண்டிருந்தது….

Advertisement

நண்பா ஏன் அமைதியாக வருகின்றாய்… என்னோடு குடந்தை வருவதில் உனக்கு விருப்பம் இல்லையா? என்று மவுனம் கலைத்தான் நெடுங்கிள்ளி….

இல்லை இளவரசே… அப்படி இல்லை… தங்களின் தந்தை உருவாக்கி எதிர்வரும் தலைமுறைக்கு விட்டு சென்றிருக்கும் இந்த அணையும் அதன் கொள்ளை அழகும் என்னை திக்கு முக்காட செய்கின்றது… அதில் லயித்துவிட்ட மனதில் நான் தங்களை மறந்து விட்டேன் என்றான் இளமாறன்….

சரிதான் நண்பா…. உன் கண்கள் பதிந்த காட்சி போலதான் எனக்குள்ளும் புகாரின் பெரும் நகரும், சித்ரா பவுணமியில் நடந்த ரதத் திருவிழாவும் காட்சிகளாக விரிகின்றது….என்ற நெடுங்கிள்ளியின் முகத்தை உற்று நோக்கியபடி இருந்தான் இளமாறன்….

Advertisement

வேல்விழி தேவியின் எழிலை அவன் வர்ணிக்க தொடங்கியதும் இளமாறனின் இதயம் சூடானது… இருப்பினும் அடக்கிக்கொண்டு நெடுங்கிள்ளி கூறியவற்றை கேட்டவாறு பயணித்து கொண்டிருந்தான். அந்த வர்ணனைகளின் போக்கை மாற்ற விரும்பிய இளமாறன்…

நாம் இப்போது குடந்தை செல்வது ஏன்? என்று நெடுங்கிள்ளியின் பேச்சை திசை திருப்பினான் இளமாறன்….

நீ கேட்ட பின்புதான் எனக்கும் நினைவிற்கு வருகின்றது நண்பா…காந்தளூர் சாலையில் நம்முடைய குருவாக விளங்கிய அனந்தலிங்க சிவாச்சாரியார் குடந்தையில் இருக்கின்றார். அவரை கண்டு ஆசி வாங்கவும், சோழ தேசத்தின் ஆஸ்தான ஜோதிடர் சீத்தலைப் பெரும்நம்பியை காணவுமே இப்போது செல்கின்றோம். ஜோதிடரரை காண்பது அரசியல் காரணத்திற்காக, நம் குருவை காண்பது எதிர்வரும் காலங்களில் நம்முடைய நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள என்றான்.

நெடுங்கிள்ளி…..????!!! என்று அழைத்த இளமாறனை சட்டென்று திரும்பிப்பார்த்த இளவரசன்… புன்முறுவல் பூத்தான்… அப்பாடா… இப்போதாவது என்னை பெயர் சொல்லி அழைத்தாயே என்ற நெடுங்கிள்ளியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி….

இதை எதிர்பார்த்தே வார்த்தையை வலையாக வீசிய தனிப்படை தலைவன்…. நண்பா அரசியல் குறித்து பேசும் போது உன்னை மரியாதையாக நடத்துவதும், பதவியின் பெயரில் அழைத்து வணங்குவதும் சோழ தேசம் கற்றுக்கொடுத்த மாண்பு… அதை சோழ பிரஜையாக நான் கட்டாயம் செய்தே ஆகவேண்டும்… அதே வேளையில் பாலிய பருவத்து நட்பு என்றும் மாறாதது. அதை தேவைப்படும் நேரங்களில் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும் என்றான்….

பலே… பலே…. நீ நாகையின் துறையில் பல தேசத்து மக்களுடனும் பழகி தெளிந்து இருக்கின்றாய்… அழகாகவும், அர்தமுடனும் பேசுகின்றாய்… என்ற இளவரசன், கேள் நண்பா உன்னுடைய கேள்விகளை மித்திரனிடம் கேள் என்றான்….

ஒன்றும் பெரிது இல்லை நெடுங்கிள்ளி… நாகையிலிருந்து உறையூரை நோக்கி வரும் வழியில் தேசத்தின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன். எங்கும் சோழத்து பெருங்குடி மக்கள் அறிவிக்கப்படாத அடக்குமுறையில் இருப்பதை காண்கின்றேன். ஊர்கள் தோறும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊர்களின் எல்லைகளையும் சோதனை சாவடிகள் ஆக்கிரமித்து நிற்கின்றது. சோதனை எனும் பெயரில் மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்தனமான அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். இந்த நிலை உறையூரின் கோட்டைக்குள்ளும் இருக்கின்றதா இல்லை கோட்டத்தின் வெளியே உள்ள அடித்தட்டு மக்களுக்கு மட்டும் தானா? சில இடங்களில் மக்கள் கொலை செய்யப்பட்டதையும் கண்டேன் என்றான்….

நெடுங்கிள்ளியின் முகம் சட்டென்று மாறியது. குழப்ப ரேகைகள் ஓடி மறைந்த முகம், அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது. நண்பா… இது அரசியல் சதுரங்கம்… சதுரங்கத்தில் கொலைகளும், சாதுர்த்தியமும் மட்டுமே இலவசம்…. இந்த ஆட்டத்தில் என்னுடைய விருப்பமும் உள்ளது. மறுக்க முடியாது. ஆனால் என்னை பாதுகாக்கும் பொறுப்பு என் மாமாவிடம் உள்ளது… அரசன் இல்லாத தேசத்தை பங்கிட்டு கொள்ள துடிக்கும் உள்ளூர் எதிரியும், அயல் தேசத்திலிருக்கும் எதிரியும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து நிற்க, ஜோதிடம் கேட்கவும், ஆலோசனை பெறவும் பட்டத்து இளவரசன் பயணிக்க வேண்டிய அவசியம் இப்போது சோழத்தில் ஏற்பட்டுள்ளது. என்று நிறுத்தினான்….

உள்ளூர் எதிரியா? யாரது என்றான் இளமாறன்…

வேறு யார்? அன்று முதல் இன்றுவரை என்னை எல்லாவற்றிலும் வென்றுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் இளையராணியின் மகன். என் தந்தை செய்த ஒரே ஒரு தவற்றில் வந்து உதித்தவன்… நலங்கிள்ளி……. அயல்தேசத்தில் இருக்கும் எதிரியோடு உறவாடும் அவன் எண்ணம், ஏக்கம் அத்தனையும் சோழத்து சிங்காசனம் தான். எப்படியும் என்னை வீழ்த்திவிட திட்டமிடும் அவனால் எங்கேயும் எப்போதும் தொல்லைகள்… இப்போதும் கூட வேல்விழியை கவர்ந்து சென்று இருக்கின்றான். எனக்கும் பாண்டிய மன்னன் நன்மாறனுக்கும் பகையை மூட்டவே இப்படியொரு பாதகத்தை செய்துள்ளான். மாமா சோழத்து ஆபத்துதவிகளை ரகசியமாக அனுப்பி வேல்விழியை மீட்க ஏற்பாடு செய்துள்ளார். ஞானபிரம்மர் உன்னை வரச்சொல்லி ஓலை அனுப்பியது கூட இந்த சூழலில் உன்னால் மட்டுமே எனக்கு உதவ முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் தான் என்று கருதுகின்றேன் என்றான்… நெடுங்கிள்ளி….

நலங்கிள்ளி

இளமாறன் சற்று குழம்பினான் என்றாலும் சுதாரித்து கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ஆயினும் துளியும் தன்னுடைய குழப்பங்களை முகத்தில் காட்டாதவன்… ஆச்சரியமாக கேட்பது போல இன்னமும் நெடுங்கிள்ளியை தூண்டி கேள்வி எழுப்பினான்….

கிள்ளி… தேசத்தின் வளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தில் விளையுமா? நீ மக்களின் அரசனாக…..மக்களால் விரும்பி ஏற்கப்படும் போது அல்லவா சுபீட்ச நிலை நாட்டில் நிலவும்… எனக்கு தெரியும் நீ சர்வாதிகாரத்தை ஒருபோதும் விரும்பாதவன்… மக்களை மிகவும் நேசிப்பவன்… ஆனால் இன்று உன் பெயரால் சர்வாதிகாரம் சோழ மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதோ?!! என்று அஞ்சுகின்றேன்… சூழ்ச்சிகளுக்கும், தவறான அரசியல் பாடங்களுக்கும் ஆளாகிவிடாதே… இது உன் மீது நான் வைத்துள்ள அன்பால், நம்பிக்கையால் கூறும் கருத்து… மேலும் என்னால் ஆனவரை உனக்கு துணை நிற்கின்றேன்… என்றான் இளமாறன்…

நன்றி நண்பா… உன்னைப்போல் ஒரு சுத்த வீரன் என்னோடு இருக்கும் போது எனக்கு எந்த குறையும் வராது.. மேலும் நீ என் தந்தையோடு வெண்ணிப் போரில் களமாடியவன்…. என் தந்தையின் தீவிரமான நம்பிக்கைக்கு உரியவன். இன்றுவரை எந்த தேசத்திலும் அரசபடை தவிர்த்து தனிப்படை ஒன்று இருந்தாக எனக்கு தோன்றவில்லை… அப்படி ஒரு விசுவாச படையை நீ நிறுவவும், அதற்கு நீயே தலைவனாக இருக்கவும் என் தந்தை விரும்பி இருக்கின்றார் என்றால் அது எவ்வளவு அற்புதமான விடயம். என் தந்தையின் பூரண அன்பை பெற்றவன் என்பதால் எனக்கு உன்மீது அளவற்ற அன்பும், நட்பும் உள்ளது… இப்போது நம்பிக்கையும் உள்ளது என்ற நெடுங்கிள்ளி… நண்பா… அதோ நாம் குடந்தையை நெருங்கி விட்டோம் என்று நினைக்கின்றேன் என்றான்…

அதே வேளையில் குடந்தை ஜோதிடர் சீத்தலை பெரும்நம்பியின் மாளிகையில்……பருத்த தன் தொப்பையை தடவிக்கொண்டே மோவாயை சொரிந்து கொண்டிருந்தார் சீத்தலை பெரும்நம்பி… அப்போது புரவி ஒன்று வேகமாக வரும் குழம்பொலி கேட்டது….

சீத்தலை பெரும்நம்பி இருக்கையில் இருந்து எழுந்து வாயில் கதவை திறந்தார்… வாயில் மாடத்தில் நின்றபடியே அந்த வெறிச்சோடிய தெருவை பார்த்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், கருப்பு குதிரை ஒன்றில் முன்கூடுமியும், குள்ள உருவமுமாக ஒருவன் அந்தணர் வேடத்தில் வந்து கொண்டிருந்தான்….

சீத்தலை பெரும்நம்பியின் முகத்தில் பிரகாச ஒளி பரவியது… வந்தவன் உறையூர் எல்லையில் ஆலமரத்தில் இருந்து இறங்கியவன்… இளமாறன் இருக்கும் வரை நெல்லும்,முத்தும் நாவாயில் ஏறப்போவதில்லை என்று கூறியவன்….. கண நேரத்தில் சீத்தலை பெரும்நம்பி மாளிகையை அடைந்தவன்…. குதிரையில் இருந்து துள்ளி குதித்து இறங்கி பதட்டமும் பரபரப்புமாக அவரை நெருங்கினான்…

குருவே… நெடுங்கிள்ளியும் இளமாறனும் தங்களை காண வந்து கொண்டிருக்கின்றனர்… அதே வேளையில் வேல்விழியை சோழ ஆபத்துதவிகளிடமிருந்து இளமாறன் காப்பாற்றிவிட்டு நெடும்கிள்ளியிடம் நாடாகமாடி, அவனுடனேயே உங்களை காண வருகின்றான்.. இளமாறன் இருக்கும் வரை நம்முடைய எதிர்கால திட்டங்கள் எதுவும் நிறைவேறாது என்று படபடப்புடன் கூறினான்….

அந்தணர் வேடமிட்ட ஒற்றன்…. ய் நம்பி

என்ன சொல்கின்றாய்??… ஆதிரை நம்பி. இளமாறன் எங்கே அங்கு வந்தான்???… வேல்விழியை எப்படி அவன் சந்திக்க நேர்ந்தது??? பனைப்பூ பேரழகன் அறிந்தால் எப்படி தாங்குவான்? மொத்த திட்டத்திலும் ஓட்டை போட இந்த இளமாறன் உந்துரு எங்கிருந்து வந்தது என்று சீத்தலை பெரும்நம்பி வேதனை அடைந்தார்.

அன்னங்கள் நீலக்கடலில் பறக்க துவங்கிவிட்டதாகவும் செய்தி கிடைக்கப் பெற்றேன் குருவே…. அநேகமாக அவை அதிவிரைவில் புகாரை அடையுமென நம்புகின்றேன் என்றான் ஆதிரை நம்பி என்னும் சீத்தலை பெரும்நம்பியின் நம்பகமான சீட ஒற்றன்…..அதே வேளையில் புரவிகள் பூட்டிய சோழ ரதம் அந்த தெருவில் நுழைந்தது…

தொடரும்….

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!