Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஎன் தாய்மொழி தமிழிசை

தமிழிசை 01

  1. தமிழிசை 01

யார் மீது கோபமோ, சூரியன் தன் மொத்த உஷ்ணத்தையும் புவி மீது காட்டிக் கொண்டிருந்தான்.

குவைத் ஜிலீப் நகரப் பகுதியின் அப்பாசியா குடியிருப்புப் பகுதியில் இருந்த லேபர் கேம்பில் பத்துக்கு பன்னிரண்டு அடியில் தன்னைக் குறுக்கி இருந்தாலும் பங்க் படுக்கைகளின் உதவியுடன் தன்னுள் ஆறு பேரைத் தங்க பெருமனதாய் அனுமதி அளித்த லேபர் ஹவுஸிங்கின் மூன்று பெட்கள் காலியாகயிருக்க, மிகுதி மூன்று பெட்டுகளில் படுத்திருந்து மறு நாள் பொழுதை எண்ணி மனதில் மௌனமாய் குதூகலித்துக் கொண்டிருந்தனர் மூவர்.



Advertisement

“பார்த்தி!” என்ற முதலாமவன் சேகரின் அழைப்புக்கு “ஹ்ம்ம்..” என்று பதில் மாத்திரம் கொடுத்த, பார்த்தி என்கிற பார்த்திபன், தலைக்கு கீழ் இரு கைகளையும் மடித்து வைத்து கண்களை மூடி மல்லாந்து படுத்திருந்த தன்னிலையை மட்டும் மாற்றவே இல்லை.

Advertisement

வெகு நாட்களுக்குப் பிறகு இவ்வளவு ஓய்வாகப் படுத்திருக்கிறான். அந்த இதம் ஒன்று என்றால் இன்னும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் கழித்து தாய்நாட்டை நோக்கிப் பறக்கப் போகும் சுகமான கனவுகள் அவன் கண்களைத் திறக்க விடவில்லை.

Advertisement

அதை உணர்ந்த சேகரும் அவன் மோன நிலையைக் கலைக்காது, “நாளைக்கு இந்நேரம் நீ நம்ம நாட்டுல இருப்பேல?” என்றான் கொஞ்சமே ஏக்கமாய்.

Advertisement

அவரால் இன்னும் இரு வருடங்கள் கழித்து தான் சொந்த நாட்டிற்கு செல்ல இயலும். அதில் வந்த ஏக்கமே அது.

கண்மூடி இருந்தாலும் அவன் குரலில் தொனித்த ஏக்கமே அவன் மனநிலையை சொல்லி விட, மெதுவாய் எழுந்து அமர்ந்து கொண்டான் பார்த்திபன்.

“ஆமாண்ணா.. நாளைக்கு இதே நேரம் அங்க இருப்பேன், அப்புறம் ஒரு மாசம் கழிச்சு இதே நேரம் இங்க இருப்பேன். அவ்ளோ தான்.” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

அதைக் கேட்ட சேகர் “ப்ச்..” என்று சலித்துக் கொண்டான்.

“என்னண்ணே இவளோ சலிச்சுக்கிற? நான் திரும்ப வர்றதுல உனக்கு அப்படி என்ன கஷ்டம்?” அவன் சலிப்பு எதற்கு என்று தெரிந்தும் கேலியாகக் கேட்டான்.

“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல பார்த்தி. டாக் சேகருக்கு நீ திரும்ப இங்க வாற எண்டு கவலையில்லை. உனக்குப் பதிலா தனக்கு ஊருக்குப் போற சான்ஸ் கிடைக்கேல எண்டு தான் கவலை” என்று தானும் கேலியாய் இழுத்தான் இவர்களுடன் தங்கியிருக்கும் இளங்கீதன்.

அவன் இலங்கையில் இருந்து பிழைப்புத் தேடி, இவர்களைப் போலவே இங்கு வந்தவன். அவனும் இன்னும் இரண்டு நாட்களில் தாய் நாட்டுக்கு செல்ல உள்ளான்.

அவன் பேச்சில் அவனை முறைத்த சேகர், “உன்கிட்ட நான் அப்படி சொன்னனாடா?” என்று பல்லைக் கடித்தான்.

“ஏன் நீர் சொல்லாட்டி எனக்கு ஒண்டும் விளங்காதோ? உம்மட மனசுல என்ன ஓடுது எண்டு எனக்கு வடிவாத் தெரியும். இவனுகள் ஊருக்குப் போனா,  குடும்பத்தைப் பார்த்துட்டு தங்கட காதலிமார கண்ணால சைட் அடிச்சிட்டு வருவங்கள். இதே நான் போனா இன்னொரு குட்டி சேகரை புரடியூஸ் பண்ணிட்டு வருவேன் எண்டுதானே நினைச்சுக் கொண்டு இருக்கிறியள்?” நக்கலாகக் கேட்டவனில் கடுப்பாகி சேகர் அவன் மேல் பாய்ந்து விட்டான்.

அவன் அப்போதும் அடங்காமல், “ஐயோ நான் உம்மட மனுஷி இல்ல. மாறி நினைச்சு என்னை ஒண்டும் செய்து போடாதயும்” என்று அலறியவனை வாயில் குத்தும் முயற்சியில் சேகருக்குத் தன் மனக்கவலை பின்னால் சென்றது.

அதற்காகத்தான் வேண்டுமென்றே அவனை கீதம் வம்பிழுத்தான் என்று தெரிந்த பார்த்தியும் இருவரையும் விலக்காது சிரித்தபடியே அவர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு கண்டங்களில் இருந்து வேறுபட்ட மொழி பேசும் தொழிலாளர்கள், அத்தனை பேரும் தம் சொந்த தேசம் துறந்து, இங்கே வந்திருக்கக் காரணம் ஒன்றே ஒன்று தான்.

“வறுமை”

குடும்பத்தின் கீழான பொருளாதார நிலை, கடன் என்று பல நெருக்கடிகளால் சொந்த நாட்டில் பிழைக்க வழி இன்றி, இங்கே வந்து பொருளாதார ரீதியில் தம் குடும்பத்தை உயர்த்திக் கொண்டாலும் அந்த சந்தோஷத்தைத் தாண்டி, அவர்களைப் பிரிந்து இருக்கும் வலி எப்போதும் நெஞ்சின் பின்னே மறைந்திருக்கும்.

அந்த வலியும் ஏக்கமும் அனைவருக்கும் உண்டு என்பதால், ஒருவர் வாடும் போது மற்றவர் அதை வேடிக்கை பார்க்காது, இப்படியே ஏதாவது ஒரு வகையில் ஆதரவாக இருந்து,  மனதளவில் மற்றவர் துவண்டு விடாது காத்து நிற்பர்.

இந்த சாபம் எல்லாம் என்று தீரும் என்ற விடையில்லா கேள்விக்கு விடை காண முயற்சிப்பதை விட, இங்கிருக்கும் வரை மற்றவர் உணர்வுகளைப் புரிந்து, அதை மதித்து ஒற்றுமையாக வாழ்வதே சாலச் சிறந்தது என்று அங்கு வந்த பின் கற்றுக் கொண்டவர்கள் ஏராளம்.

ஒரு வழியாக இருவரின் சண்டையும் முடிந்து சேகர் தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டவன், விளையாட்டை விடுத்து தன்னிலும் சிறியவர்களின் எதிர்காலத்தைக் குறித்து பேச ஆரம்பித்தான்.

“கீதன்! பார்த்தி! ரெண்டு பேரும் கேட்டுக்கோங்க. நான் விளையாட்டுக்குப் பேசல. உண்மையா உங்க மேல இருக்க அக்கறையில தான் சொல்றேன். ரெண்டு பேருமே குடும்பத்துக்குனு ஓரளவு உங்க கடமையை செய்து முடிச்சிட்டீங்க. இனி உங்களப் பாருங்க. உங்களை நம்பி இருக்க பொண்ணுங்களைப் பாருங்க. அதை விட்டுட்டு இங்க திரும்பி வந்து, அடுத்த ரெண்டு வருஷத்துல திருப்பி போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அசால்டா நினைச்சுட்டு இருந்தீங்கனா,  உங்க வாழ்க்கை இதே சுழற்சில தான் திருப்பி திருப்பி ஓடிட்டு இருக்கும்.

இதுவரைக்கும் குடும்பத்தை விட்டு இங்க வந்து அதிக சம்பளம் தராங்கனு நீங்க சம்பாதிச்சது அத்தியாவசியத்துக்கு. ஆனா அது முடிஞ்சப்புறமும் இங்கதான் வந்து சம்பாதிப்போம்னு நினைக்கிறது,  இப்போ உங்களால ஊர்ல இருக்க உங்க குடும்ப ஆடம்பரத்த தக்க வச்சிக்க. ஆடம்பரம் என்னைக்குமே திருப்தியாகாது, இன்னும் வேணும்னு தோணிக்கிட்டே இருக்கும். நீங்களும் இங்கேயே தேங்கி நின்னுடுவீங்க. உங்க வாழ்க்கைய வாழ மாட்டீங்க.

“சரி உங்க வாழ்க்கை உங்க இஷ்டம்னு விட்டாலும், உங்களை நம்பி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அதுவும் பார்த்தி நீ! தமிழ் உன் ஒருத்தனை நம்பி எட்டு வருஷமா எந்தக் கேள்வியும் கேட்காம உன் இஷ்டத்துக்கு விட்டுட்டு  இருக்கா. நீ இன்னும் அஞ்சு வருஷம் இங்கேயே அக்ரீமண்ட் போடுறேன்னு சொன்னாலும் அந்தப் பொண்ணு எந்தக் கேள்வியும் கேட்கமாட்டா. அதுக்குனு நீ அதையே சாதகமாக்கிட்டு உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காத.”

“நல்ல முடிவா எடு. கல்யாணம் பண்ணிட்டு உங்க தேவைக்கேற்ற மாதிரி ஒரு வேலையை ஊரிலேயே தேடிக்கிட்டு சந்தோசமா வாழப் பாரு. உனக்கும் அதே தான் சொல்லுவேன் கீதன்” முழு நீளமாய் பேசி முடித்தார் அவர்.

அவரின் அறிவுரை சரியே என்றாலும் இருவரும் கொண்டிருப்பது இரு வேறு எண்ணங்கள்.

கீதன் இங்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவன் இங்கு வருவதற்கு முன்பே அவனின் அத்தையின் மகளை ஒருதலையாக காதலித்தான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அப்போது அவனிடம் அப்படியான எண்ணங்கள் இல்லை. அதனால் இவனைக் கண்டும் காணாமல் விட்டு விட்டாள்.

ஆனால் இவன் விடாது முயற்சி எடுத்து, இங்கு வந்த பின்னும் அத்தையோடு பேச எடுக்கும் சந்தர்ப்பங்களில் அவளுடனுமே ஓரிரு வார்த்தைகள் பேசி, அவள் மனதைக் கரைத்து இப்போது இரண்டு வருடங்களாக தன் காதலை இருதலை ராகமாக மாற்றிக் கொண்டுள்ளான்.

அவனுக்கு இவ்வருடம் திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடுதான் என்றாலும் அவன் காதலி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இன்னும் கொஞ்சம் இவன் சம்பாதித்த பின் திருமணம் செய்து கொண்டால், தமது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று, அவள் சொல்ல அது சரியே என்று இவன் கேட்டுக் கொண்டான்.

பார்த்தி இங்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகின்றது. இடையில் ஒருமுறை நாட்டுக்கு சென்று வந்தான். அவனுக்கும் இவ் வருடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைதான். ஆனால் திருமணம் செய்த பின் அங்கு தங்கி விடுவதில் விருப்பம் இல்லை. குறைந்தது இரு வருடங்களாவது இங்கு தங்கி வேலை செய்ய வேண்டும் என்பதே அவன் விருப்பம்.

ஆனால் அவனின் உயிரானவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லை.

இவன் ஒன்று கேட்டால் எதையும் யோசிக்காது தலையாட்டுபவள், ஒன்றிரண்டு விடயங்களில் மட்டும் பிடிவாதமாக நின்று விடுவாள். அதில் இதுவும் ஒன்று.

இப்போதும் இவன் கேட்டு  திருமணத்துக்கு அவள் முற்று முழுதாக மறுப்பு சொல்லவில்லை. திருமணம் செய்தாக வேண்டும் என்றால் அவன் இங்கே எல்லா ஒப்பந்தங்களையும் முடித்துவிட்டு ஊரிலேயே தங்க வேண்டும்.

இல்லை, இன்னும் இரு வருடங்கள் இங்கே உழைக்க வேண்டும் என்றால் இரண்டு வருடங்கள் முடிந்து வந்தபின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகக் கூறி விட்டாள்.

அவளுக்கு அவன் எங்கு, எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லாம் கருத்தில்லை. இந்தியாவில் இருந்து அவன் தரும் சொற்ப பணத்தில் குடும்பத்தை நடத்தி விடும் வல்லமை அவளுக்கு உண்டு.

ஆனால் திருமணம் என்ற ஒன்று நடந்து விட்டால், அவன் அவளுடன்தான் இருக்க வேண்டும். அதில் அவள் அத்தனை உறுதியாக இருக்கிறாள்.

இரு முறை அவளிடம் இது பற்றிக் கேட்ட பார்த்தி, அவள் உறுதியில் மூன்றாம் முறை இதைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. அதுதான் அவன். அவள் சம்மதம் இன்றி அவளை வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அவன் மனமே அவனை வெறுத்து ஒதுக்கி விடும்.

இவன் இறுதிவரை இதே உறுதியோடு இருந்திருக்க பலதைத் தடுத்திருக்கலாம். ஆனால் என்ன செய்வது? மனிதர்களும் அவர் தம் சூழ்நிலைகளும் எல்லா சமயங்களிலும் ஒன்று போல இருப்பதில்லையே!

எதிர்காலம் தெரியாதவன் ஆகையால் சேகரிடம் தன் மனதை, அதில் இருப்பவள் மீது தான் கொண்ட நேசத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான் பார்த்தி.

“உனக்கே தெரியும்லண்ணே, பதினஞ்சு வயசு முடிஞ்சும் முடியாமலேயே என் தோள்ல குடும்ப சுமைய சுமக்க ஆரம்பிச்சுட்டேன். அன்னையிலிருந்து கிட்டத்தட்ட பதின்மூணு வருஷம் என் குடும்பம் எங்கேயும் தலை குனியாம இருக்கணும்னு அந்தந்த வயசுல வர ஆசைகளுக்கு எல்லாம் மனசை அடிமையாக விடாம, இதெல்லாம் என்னை திசை திருப்பிடும்னு எனக்கு நானே ஒரு கடிவாளத்தப் போட்டு ஓடிட்டு இருந்தேன். அப்படியிருந்தும்  என் கட்டுப்பாடு எல்லாம் கட்டவிழ்ந்து நான் சறுக்கின ஒரே இடம், என் தமிழ்!” என்றான் மென்மையிலும் மென்மையாக.

எல்லோரைப் போல அவனும் அவளைத் தமிழ் என்று தான் அழைப்பான். அவளுக்கு என்று எந்த விஷேச அழைப்பும் அவனிடம் இல்லை. ஆனால் அவள் பெயரை மற்றவர்கள் உச்சரிப்பதற்கும் அவன் உச்சரிப்பதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கும்.

தமிழ் மொழியில் ‘ழ்’ என்ற எழுத்தே சற்று அழுத்தமான உச்சரிப்பைக் கொண்டது. ஆனால் பார்த்தி அவனின் தமிழின் பெயரை உச்சரிக்கும் போது மட்டும் அந்த ‘ழ்’ அதன் அழுத்தத்தை இழந்து அமைதியாகிப் போகின்றதோ என்ற மாயை தோன்றி விடும்.

அவன் வகுத்துக் கொண்ட எல்லைகளால் எட்டு வருடங்களாகியும் இன்னுமே கூட அவளிடம் முழுவதும் வெளிப்படுத்தாத காதலும் ஏக்கங்களும் அவனுள் கொட்டிக் கிடக்கிறது.

அந்த சுக எண்ணங்கள் நெஞ்சை வந்து தாக்க ஏகாந்தத்தில் சஞ்சரித்தவனை,

“க்கும்.. க்கும்..” என்று தொண்டையைக் கனைத்துக் கலைத்தான் கீதன்.

அவனின் கனைப்பில் சிறு மூரலுடன் தொடர்ந்து பேசினான் பார்த்தி.

“இதெல்லாம் இப்போதைக்கு என் வாழ்க்கைல வேணாம்னு நான் ஒதுக்கினதுல முதல் இடத்துல இருந்ததே காதல்தான். அதை உடைச்சுட்டு என் வாழ்க்கைக்குள்ள வந்தவ அவ. ஆனா அது தப்போனு என்னைக்கும் என்னை அவ நினைக்க வச்சதே இல்ல. நீங்க சொன்ன மாதிரி எந்த விஷயத்திலயும் அவ என்னைக் கேள்வி கேட்டதே இல்ல. தாலி கட்டலனாலும் அவளுக்கு என் சம்பாத்தியத்துல எல்லா உரிமையும் இருக்குனு எல்லா கணக்குமே அவகிட்ட சொல்லுவேன். நான் சொல்லுறேன்றதுக்காக கேட்டுட்டு இருப்பாளே தவிர, ஒத்த ரூபாக்கு கூட என்கிட்ட கேள்வி கேட்க மாட்டா. என் சாப்பாட்டு செலவு குறைஞ்சா மட்டும்தான் அவளுக்குக் கோபம் வரும், சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிறேனோனு.” அவள் அன்பில் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான்.

“இங்க நிறைய பேர பார்த்திருக்கேன்  ணா. கட்டின பொண்டாட்டிக்கு பயந்து, காதலிக்கிற பொண்ணுக்கு பயந்துட்டு சம்பளத்தை குறைச்சு சொல்லி, வீட்டுக்கு கொடுக்கிற காசை குறைச்சு சொல்லியும், அந்த தொகையைக் கூட ஏன் அவ்வளவு கொடுத்தேனு அவங்க கேட்டுனு நிறைய பார்த்திருக்கேன். எனக்கு அப்படி ஒரு சூழ்நிலையை என் தமிழ் கொடுத்ததே இல்லண்ணா. நம்ம  எதிர்காலத்துக்கு என்ன வச்சிருக்கேன்ன கேள்வியைக் கூட  என்னைக் கேட்டது இல்ல அவ! அந்தளவு தூரம் என் மேல நம்பிக்கை வச்சவளுக்கு நான் நல்ல வாழ்க்கையைக் குடுக்கணும்ல? கஷ்டம்னு வந்ததும் பணத்துக்கு என்ன பண்ணுறதுனு, எங்க அம்மா திகைச்சு நின்ன மாதிரி அடுத்தது என்னனு எந்தக் காலத்துலயும் அவ நின்னுடக் கூடாது.

நான் இல்லாத காலத்துல எங்க பசங்ககிட்ட கூட அவ எதையும் எதிர்பார்த்து நின்னுடக் கூடாது. இதுவரைக்கும் என் குடும்பத்துக்கு வேண்டியது எல்லாம் திருப்தியா செய்துட்டேன். அம்மா பேர்லயும் இன்சூரன்ஸ் எல்லாம் பக்காவா பண்ணிட்டேன். இனி ஒரு ரெண்டு  வருஷம் அவளுக்காக கொஞ்சம் சேர்க்கணும். அவளோ தான் ணா. அதைத் தாண்டி அவளைப் பிரிஞ்சு ஆடம்பரத்துக்கு சம்பாதிக்கிற அளவுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல.” என்று அவன் சொல்லி முடிக்கக் கேட்டிருந்த இருவரும் அவனைப் பெருமை பொங்கப் பார்த்திருந்தனர்.

“யெப்பா டேய். நீ நிப்பாட்டடா. இன்னும் நீ எனக்கு முன்னால இப்பிடி  லவ்வாங்கியா கதைச்சியெண்டா ஒரு ஒப்பரேஷன செஞ்சு போட்டு, தங்கச்சி தமிழுக்கு நான் சக்காளத்தியா மாறிப் போடுவேன் போல கிடக்கு” கீதன் சொல்ல பார்த்தி பல்லைக் கடித்தவன், அவன் மேல் தலையணையை விட்டெறிந்தான்.

“பேச்சப் பாரு பரதேசி! நீங்க இன்னும் நாலு சேர்த்துப் போட்டிருக்கலாம்ணா இவனுக்கு”

“விடுடா பார்த்தி. இவன் வாயாலேயே  ஒரு நாள் இவன் செமத்தியா வாங்கிட்டு நிப்பான். அன்னைக்கு இவனைப் பார்த்து நம்ம திருப்தியா சிரிச்சுக்கலாம். இவனை விட்டுட்டு நீ போய் மறுபடி ஒரு தடவை, உன் பெட்டி எல்லாம் சரியா இருக்கா? எல்லாம் எடுத்து வச்சியானு செக் பண்ணிக்கோ”

“ஓமோம்.. பிள்ளையளுக்கு எண்டு சாட்டு சொல்லி மனுஷிக்கு அவர் வாங்கித் தந்த கண்டோஸ் (சாக்லேட்) எல்லாம் எடுத்து வச்சனியோ எண்டு ஒருக்காப் பார். எங்க நீ அதை விட்டுட்டுப் போடுவியோ எண்டுதான் அந்த மனுஷன் உந்தப்பாடு படுது.”

“டேய்! உன்னை இன்னைக்கு கொன்னு குடல உருவிப் போடல?” என்று சேகர் கீதனை நெருங்க, இருவரின் சண்டைகளில் சிரித்துக் கொண்டே சேகர் சொன்னது போல் தன்னுடமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!