வெளியே வந்த தருண், “ப்பா.. என்னா வெயிலு? இந்த வெயில்ல கடைக்கு போறதுக்கு கறி சோறே வேணாம்னு பச்சைத்தண்ணிய குடிச்சிட்டுப் படுத்துடலாம். நீதான் கேட்க மாட்டேங்குற.”
“அடப் போடா. நான் என்ன அதுக்கா எந்திரிச்சு வந்தேன்? அந்த சித்ரா பொண்ணு பேசினத மாப்பிள்ளை கேட்டுட்டான் போலருக்கு. ஆனா நாம இருக்கோம்னு பேசுறதுக்கு தயங்கிட்டு இருக்கான். அதான் உன்னை இழுத்துட்டு வந்தேன்.”
“ஐயோ! அப்போ தமிழும் கேட்டிருக்குமாண்ணா? அதான் உடனேயும் கிளம்பிச்சா? சும்மாவே அந்தப் புள்ளை எல்லாத்துக்கும் தயங்கி, ஒதுங்கி நிக்கும். அந்தப்புள்ள குணம் தெரிஞ்சுதான், நான் என் பொண்டாட்டிய சத்தம் காட்டாம இருனு அடக்கி வச்சேன். ஆனா… ப்ச்…”
“இல்ல தருண், தமிழுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தா உள்ள இருந்து சிரிச்சிட்டு வந்திருக்காது. அப்ப இருந்தே பார்த்தி முகம்தான் சரியில்லாம இருந்துச்சு. தமிழ் போனது அத்தையால. அத்தை அந்தப் பொண்ணைப் பார்த்து சிரிக்கக் கூட செய்யல.”
தருண், “என் கூட தானே அண்ணா இருந்த? எப்போ இவ்ளோவையும் கவனிச்ச?” என்றான் வியந்து.
“ஆமா.. இப்ப இதுதான் ரொம்ப முக்கியம் பாரு.” என்று முறைத்தவன்,
“பார்த்தி கேட்ட மாதிரி இவங்க மூணு பேருக்கும் என்னதான் பிரச்சனை? அவன் அந்தப் பொண்ணை விரும்புறான். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னும் உறுதியா நிக்கிறான். அதை ஏத்துக்கிட்டுப் போகாம, எதுக்கு சில்லறைத்தனமா இப்டி சீரியல் வில்லி வேலை எல்லாம் பார்த்திட்டு இருக்காங்க?
இத்தனைக்கும் அவன் ஒன்னும் அவனுக்கும் குடும்பத்துக்கும் உதவாத பொண்ணை ஒன்னும் பிடிச்சிருக்குனு சொல்லலயே. கல்யாணம் பண்ணி இருபது வருஷம் ஒண்ணா வாழ்ந்தவங்ககிட்ட கூட அவங்க ரெண்டு பேருக்கிடையில இருக்க புரிதல் இருக்காது. அப்படியிருக்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டு அவங்க வாழுற வாழ்க்கையைப் பார்த்து மனசு நிறைவோம்னு இல்லாம, வில்லத்தனம் பண்ணுறாங்களாம் வில்லத்தனம். அதுதான் சூட்டோட சூடா அவன் பேசுற எல்லாத்தையும் பேசிக்கட்டும்னு எழும்பி வந்துட்டேன்.”
“நானும் இதைப்பத்திதான் உங்கிட்ட பேசணும்னு இருந்தேன். சித்ரா அக்கா அவங்களை எல்லாம் கூட விட்டுடலாம்ணா, இந்த அத்தை ஏன் இப்பிடி இருக்காங்கனுதான் தெரில. மச்சான் வரதுக்கு முன்னமே நிரஞ்சனா அத்தைகிட்ட இந்த வருஷம் அண்ணா வரும் போது கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொன்னதுக்கு, ‘அவன் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு சொல்லியிருக்காங்க.’
அதுல இருந்து என் பொண்டாட்டி, அம்மான்னு கூட பார்க்காம சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எல்லாம் அத்தையை வறுத்தெடுத்துட்டே இருக்கா.
அதோட இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை முடிச்சே ஆகிறதுனு ஒரு வெறில சுத்திட்டிருக்கா. அத்தை இப்பிடி சொன்ன அடுத்த நாளே, ‘நான் ஆனந்த் அண்ணாகிட்ட போய் பேசுறேன். அவர் சொன்னா அண்ணா கேட்டுக்கும்’னு பிரச்சனையை முடிக்க சரியான வழியைக் கண்டுபிடிச்சு கிளம்பி நின்னவளை மச்சான் வந்ததும் மச்சான்கிட்ட ஒருதடவை பேசிட்டு போய் அவர்கிட்ட பேசிக்கலாம்னு எடுத்து சொல்லி நிறுத்தி வச்சிருக்கேன்.
எவ்ளோ நாள் அவளை சமாளிக்க முடியும்னு சத்தியமா எனக்குத் தெரியல. எனக்குத் தெரியாம எதையும் பெருசா பண்ணி விட்டுடுவாளோனு பயமாவே இருக்கு. தமிழ் அப்பா வேற எப்போ எப்போனு காத்திட்டிருக்கார் போல. இது எங்க போய் முடியப் போகுதோ?”
“ஹ்ம்ம்… சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் தெளிவா ஒரு முடிவெடுத்தாதான் இதுக்கு ஒரு முடிவு வரும். பார்த்தி இதுதான் அத்தான்’னு ஒரு முடிவை சொன்னான்னா, யாரு எதிர்த்தாலும் நான் கண்டிப்பா அவன் பக்கம் நிப்பேன். பாவம் டா, பிஞ்சு உடம்போட பாரம் சுமக்க ஆரம்பிச்சிட்டான். அவன் பாரத்தை இறக்கி வைக்க மனசில்லாத ஜென்மங்கள என்னனு சொல்ல? என் பொண்டாட்டியவும் சேர்த்துதான் சொல்லுறேன்.”
“நானும்தான் அண்ணா. மச்சான் முடிவை சொன்னா மட்டும் போதும்.”
“உனக்கு வேற வழி இல்லடி. நீ சப்போர்டுக்கு நின்னுதான் ஆகணும். நீ இல்ல முடியாதுனு சொல்ற அன்னைக்கு ராத்திரி நிரஞ்சனா அம்மிக்கல்லோட உன் தலைமாட்டுல நின்னுட்டிருப்பா.” என்றவன் சிரிக்க, தருண் அவனைத் திட்ட என்று அடுத்த ஒரு மணி நேரங்களை பார்த்திக்கு ஒதுக்கிக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே பொழுதைப் போக்காட்டிக் கொண்டிருந்தனர்.
வீட்டில்…
பாரத்தி அண்ணியின் மேல் இருந்த கோபத்தை அண்ணனிடம் தான் கொட்டினான்.
“அண்ணா! அண்ணி இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பேசினது உன் காதுல விழுந்துச்சுதான? அவங்க பேசினது சரினு தோணுதா உனக்கு?”
வரதனுக்கு எரிச்சலாக வந்தது. நான் பாட்டுக்கு எங்கேயோ ஓரமாக இருக்க, என்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஒவ்வொன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறானே இவன் என்று!
“இப்போ உனக்கு என்னதான் வேணும் பார்த்தி? நான்தான் எல்லாத்தையும் விட்டு ஒரு ஓரத்துல ஒதுங்கி இருக்கேன்ல? பிறகும் எதுக்கு என்னையே நோண்டிட்டிருக்க?”
இவனின் இந்த ஒதுக்கம் தலைச்சன் பிள்ளையாய் தான் இருக்க குடும்பம் மொத்தமும் பார்த்தியை முதன்மைப்படுத்திக் கொண்டாடுகிறதே என்ற தாழ்வுணர்ச்சியால் பார்த்தி தலையெடுத்த அன்றிலிருந்தே தொடங்கிய ஒன்றுதான்.
ஆனால் அதை வெளிக்காட்டினால் இன்னும் இவர்கள் பார்வையில் இறங்கிவிடுவோம் என்று சாமர்த்தியமாக அதை மறைத்து தன் இயல்பே இதுதான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நடித்து வாழ்கிறான்.
வரதன் பெருமூச்செறிந்தவன், “இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்ற?” என்றான் விட்டேத்தியாய்.
“அதை நீதான் யோசிக்கணும். இங்க நல்ல புத்தியோட இருந்த அத்தனை பேருக்கும் தெரியும், அண்ணி பேசினது தப்புன்னு! உனக்கு ஏன் அது தோணவே இல்லை?
அப்பிடி அவ இவங்களுக்கு என்ன பண்ணிட்டான்னு அவகிட்ட இவ்வளவு விரோதம் பாராட்டுறாங்க இவங்க? நான் இல்லாத இந்த நாலு வருஷத்துல இந்த வீட்டு பக்கம் வந்து இருக்காளா அவ? இல்ல, இங்க நான்தான் எல்லாமேன்ற மாதிரி ராஜ்ஜியம்தான் பண்ணிருக்காளா?
இன்னைக்கே கூட, நான் வருத்தமா பேசினதால மட்டும்தான் வீட்டுக்கு வந்தா. வந்த அப்புறமும் எவ்வளவு சங்கடப்பட்டுட்டு இருந்தானு பார்த்தீங்கதான எல்லாரும்? அதைப் பார்த்தும் எப்பிடி இப்பிடி பேச முடிஞ்சுது இவங்களால?
நல்லவேளையா என் கூட கிச்சன் வாசல் வரைக்கும் வந்தவ, மித்து கன்னத்துல ஏதோ இருந்துதுனு கழுவி விட சிங் பக்கம் போனதுல அவ காதுல இவங்க பேசின எதுவும் விழுகல. இல்லனா, நாளைக்கு என்னைக் கல்யாணம் பண்ணிட்டு கூட இந்த வீட்டு வாசல மிதிக்க மாட்டேன்னு நின்னிருப்பா. இவங்களுக்கு சொல்லி வை அண்ணா, இனிமே இந்த மாதிரி எல்லாம் பேச வேணாம்னு.” என்றவன் நியாயத்தை எடுத்துரைக்க…
சித்ரா அவனை அதர்மவாதியாக்கும் முயற்சியில் கண்ணீரைப் பொல பொலவெனக் கொட்ட ஆரம்பித்தாள்.
“இப்போ அப்பிடி என்ன நான் தப்பா சொல்லிட்டேன்னு உங்க தம்பி இந்தப் பேச்சுப் பேசுறாரு? நான் ரெண்டு பேரு பிரைவேசியைக் கெடுக்க வேணாம்ற நல்ல எண்ணத்துலதானே பேசினேன்? அதுக்கு இப்பிடி ஒரு பேச்சா?
எல்லாம் உங்களால தாங்க. போன மாதிரி வாடகை வீட்டுல தனியாவே இருந்திருக்கலாம். உங்க அம்மா, தங்கச்சி தனியா இருப்பாங்கனு பாதுகாப்புக்கு வந்து தங்கி, உங்க தம்பி எதைப்பத்தியும் கவலைப்படாம உழைக்க நீங்க வழி செஞ்சு குடுத்தீங்க.
ஆனா அதுக்கான உபகாரத்தை எல்லாம் நான்தான கேட்டுக்க வேண்டியதா இருக்கு! ஒரு வார்த்தை என் வாயில இருந்து வந்திடக் கூடாது, இங்க யாருக்கும். இவ்வளவு நாளும் உங்க தங்கச்சி என்னைக் கரிச்சிட்டே இருந்தா. இப்போ உங்க தம்பியும்! என்ன சொல்லுறது, இருக்கப்பட்டவங்க பேச, இல்லாதவங்க கேட்டுக்கத்தான வேணும்? எலி வளையா இருந்தாலும் எங்களுக்குனு ஒரு தனி வளை இருந்தா இந்தப் பேச்சுலாம் வருமா?” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே, மகன்களை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் போய்விட்டாள்.
தேவையான அளவு பர்பாமென்ஸை அவள் முடித்து விட்டாள். இனி யார் அடிபட்டு, மிதிபட்டு செத்தாலும் அவளுக்குக் கவலையில்லை.
“இப்ப ரொம்ப சந்தோஷமா? இனி இதை சொல்லி சொல்லிக் காட்டியே, என்னை நிம்மதியா இருக்க விடமாட்டா அவ. எல்லாம் என் விதி! பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு நான் எங்கேயும் சாமியார் மடம் பார்த்து போயிடலாம்னு இருக்கேன். ச்சைக்..” என்று வெறுப்பாய் மொழிந்த வரதன், வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய…
பார்த்திதான் இருவர் செயலிலும் ஒன்றும் புரியாமல் திகைத்து அமர்ந்திருந்தான்.
நிரஞ்சனா, “அண்ணா! இதுக்குலாம் நீ உக்காந்து யோசிச்சிட்டு இருக்காத ண்ணா. இந்த வீட்டுல இந்த நாடகம்லாம் அடிக்கடி நடக்கிறதுதான். என்ன இத்தனை நாள் அம்மாவை மூளைச் சலவை செய்ய நடத்துவாங்க. இன்னைக்கு உனக்காக நடத்திருக்காங்க. அவ்வளவுதான் வித்தியாசம்!” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.
“இல்ல நிரஞ்சா, அவங்க சொன்ன அர்த்தத்துல நான் எதையும் பேசலனு எனக்குத் தெரியும். ஆனாலும் எப்பிடி இவங்க, அவங்க பேசின அர்த்தத்தையே மாத்தி என் மேலதான் முழுத் தப்புங்கிற மாதிரிப் பேசிட்டுப் போறாங்க!?” அதிருப்தியாய் முகம் சுழித்தான் அவன்.
“அதான் நான் சொன்னேனே, அவங்களுக்கு இதுலாம் ரொம்ப வருஷப் பழக்கம்னு! சொல்லப்போனா, நீ பார்த்தது அவங்க திறமையோட பத்து பர்சன்ட் கூட இல்ல.”
“உனக்குத்தான் எல்லாம் தெரியும்ற மாதிரிப் பேசாத, நிரஞ்சா! என்ன இருந்தாலும் சின்னவன் அண்ணின்னும் பார்க்காம, சித்ராவை இப்பிடி முகத்துக்கு நேரா பேசினது தப்புதான். அவனுக்கு வருத்தம்னா, அதை என்கிட்ட சொல்லிருக்கணும். நான் பக்குவமா பேசிருப்பேன் அவகிட்ட.”
“எந்தப் பக்குவத்தை சொல்லுறீங்க? தமிழ் உங்களைப் பார்த்து சிரிச்சப்போ, எதுக்கு வந்தேன்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தீங்களே, அந்தப் பக்குவத்தையா?” பார்த்தி சட்டெனக் கேட்டு விட, பர்வதம் பதில் சொல்ல முடியாது திணறினார்.
நிரஞ்சனா, உங்களுக்கு வேண்டியதுதான் என்பது போல் தாயைப் பார்த்து நிற்க, நிர்மலா தாய்க்கு உதவ வந்தாள்.
“அதில்ல பார்த்தி, சித்ரா எப்பிடிப்பட்டவளா இருந்தாலும் இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. ஆனா தமிழ் இங்கதான் வருவானு இன்னும் எதுவும் உறுதியாகலயே. அதான் அவளுக்காக சித்ராவைப் பேசி குடும்பத்துக்குள்ள வீணா சண்டை ஏன்னு யோசிக்கிறாங்க அம்மா!” என்றவும் பார்த்திக்கு வந்ததே கோபம்!
“என்ன, என்ன சொன்ன? தமிழுக்கும் எனக்கும் இன்னும் என்ன உறுதியாகல? தெளிவா சொல்லு!”
கேட்டுக்கொண்டே
அவன் எழுந்த வேகத்தில் இரண்டு பேர் அமரக் கூடிய அந்த பலமான தேக்கு மர, இருக்கை தன்னாலே பின்னால் நகர, நிர்மலாவும் அவனின் வேகத்தில் மிரண்டு தன் உடலைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.
“சின்னவனே! என்ன பண்ணுற நீ? அவ என்ன சிகிச்சைல இருக்கா, அவகிட்ட போய் உன் ஆவேசத்தைக் காட்டுற?” என்ற தாயின் அதட்டலில் தான் பார்த்தி, அவள் நிலை நினைவு வந்தவனாக கண்ணை இறுக மூடித் திறந்து தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டவன், தாய் மற்றும் தமக்கை இருவரையும் அழுத்தமாகப் பார்த்தான்.
“உங்க ரெண்டு பேர் மனசுலயும் என்ன இருக்குனு எனக்குத் தெரியாது. ஆனா என் மனசுல என்ன இருக்குன்றத தெளிவா, திருத்தமா, உறுதியா… உர்ர்றுதியா… நாலு வருஷம் முன்னவே நான் சொல்லிட்டேன். ஏன், இன்னும் நாப்பதாயிரம் வருஷம் கழிச்சு எரிச்ச என் சாம்பல பேச வச்சு கேட்டா கூட அதுவும் அதையேதான் சொல்லும்.
அதால, இந்த வருஷம் போகப் போக இவன் முடிவு மாறும். தமிழை விட்டுட்டு இன்னொரு பொண்… அப்பிடி எதுவும் நினைப்பு உங்க மனசுல இருந்தா அதை அழிச்சிட்டு என் மனைவின்ற இடத்துல தமிழை ஏத்துக்க மனசைப் பக்குவப்படுத்திக்கோங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்!” என்றவன் நிரஞ்சனாவிடம்,
“நீ ரூம் யூஸ் பண்ணப் போறியாடா?” என்று கேட்டான்.
“இல்லண்ணா, அத்தானும் அவரும் இப்போ வந்துடுவாங்க. அப்பிடியே சமையலைத் தொடங்கிடுவேன். நீ பாப்பாவை மட்டும் பார்த்துக்கோ.”
“ஹ்ம்ம்.. ஏதாவது வேணும்னா கேளு.” சொன்னவன் அறை நோக்கி நகர, இங்கே நிர்மலாவும் சித்ராவின் ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தாள்.
“அவளுக்காக அக்கானு கூடப் பார்க்காம என்னை எப்பிடிலாம் பேசுறான் இவன்? இனி நான் இங்க வரவே மாட்டேன்.” என்று அவள் அழுவதும் தாய் அவளுக்கு சமாதானம் சொல்வதும் என்று அறைக்கதவை மூடும் வரை பார்த்தியின் காதில் விழ, வெறுத்துப் போனான் அவன்.
‘ச்ச… வந்து ரெண்டாவது நாளே இவளோ பஞ்சாயத்து! பேசாம அங்கேயே இருந்து தொலைச்சிருக்கலாம்.’ என்று நினைத்த மறுநொடி, தன்னை நேரில் கண்டு உணர்ச்சி ததும்ப, விழி கலங்க பார்வையைத் தழைத்த தமிழின் பிம்பமும் சாதாரண தன் பார்வைக்கே செங்கொழுந்தாய் சிவந்து நின்றவளின் பிம்பமும் மாறி மாறித் தோன்றி அதன் பின் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை மறக்கடிக்கச் செய்திருந்தது.
அப்படியே வந்து கட்டிலில் விழுந்தவன், வெள்ளை ரோஜாப் பூங்கொத்தாய் உறங்கிக் கொண்டிருக்கும் தங்கை மகளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“இப்போ வந்ததாலதான இந்தக் குட்டி தேவதையை இவ்ளோ குட்டியா பார்க்க முடிஞ்சது. இல்லனா, நான் வரும் போது கொஞ்சம் பெருசா வளர்ந்திருப்பாங்களே இவங்க!” என்று அவள் உறக்கம் கெடாமல் முணுமுணுத்தவன் அவளை உச்சி முகர்ந்தான்.
அப்படியே அதே யோசனை தமிழிடம் தாவியது.
‘ஒருவேளை தமிழைத் திருமணம் செய்து விட்டு அவளை விட்டு விட்டுப் போன பின் அவளுக்குக் கர்ப்பம் உறுதியாகிக் குழந்தை பிறந்தால், தான் திரும்பி வரும் போது தன் குழந்தையும் வளர்ந்திருக்குமே! தமிழின் கர்ப்பகாலம், குழந்தையின் முதல் ஒரு வருட படிநிலை வளர்ச்சி எதையுமே அனுபவிக்கக் கொடுத்து வைக்காதே!’
அவன் கற்பனைகள் கட்டுப்பாடுகள் இன்றி விரிய அவன் மனசாட்சி,
‘நீ ஏன் அவ்ளோ யோசிக்கிற? நீ பாட்டுக்கு கல்யாணத்தை மட்டும் முடிச்சிட்டுப் போனேன்னா, அவ பாட்டுக்கு அவளாவே இருக்கப் போறா. அப்புறம் உன் பிளான்படி நீ ரெண்டு வருஷம் கழிச்சு வந்து மத்த சமாச்சாரத்தைப் பார்த்துக்கிட்டா, அவ மொத வாந்தி எடுக்கிறதுல இருந்து பிரசவ வார்டு வரைக்கும் கூடவே இருந்து பார்த்துக்கலாமே!’ என்று சாடியது.
‘தமிழ் காதலியா இருக்க வரைக்கும்தான் பார்த்தி கைகட்டி கண்ணியமா இருப்பான். என் மனைவிங்கிற பதவியோட ஒருநாள் முழுசா அவ என் பக்கத்துல இருந்துட்டா, அன்னைக்கே அவ முழுசா என் மனைவி ஆகிடுவா!”
மனசாட்சியை இடித்துப் பதில் சொன்னான் பார்த்தி.
இருவருக்குமே இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த ஒரு முழுநாள்தான், அவர்கள் வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கான முதலான, முடிவான, முக்கியமான நிபந்தனை!
ஆனால் அந்தநாளோ, தன்னை முழுமையாக இவர்களுக்கு ஒப்புக்கொடுக்க மறுத்து, இருவர் வாழ்விலும் பெரும் விரக்தியையும் வெறுமையையும் விதைக்கும் விளைநிலமாக மாறக் கங்கணம் கட்டிக் காத்திருக்கிறது.