Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 20

தமிழிசை 20

இருளில் மூழ்கிக் கிடந்த அறையில் கதவை ஒட்டித் தரையில் சுருண்டு கிடந்திருந்தாள், தமிழ்!



Advertisement

மணி இரவு பத்தரையைத் தாண்டி இருந்தது. உறக்கம் அவள் கண்களை பொட்டுக் கூட அணுகவில்லை.

கண்ணெதிரே தெரியும் தொலைபேசித் திரை எப்போது ஒளிரும் எனத் தவமாய் கிடந்தன அவை.

Advertisement

Advertisement

இன்று விடிகாலை ஐந்தரை மணி அளவில் பார்த்தி அவளிடம் விடை பெற்று சென்றிருந்தான்.

அவனின்றி நகரப்போகும் நாட்கள் பற்றிய வேதனையில் இருந்தவளை அதிகம் பாதித்தது அவன் அவளிடம் கடைசியாக விடைபெற்ற விதம்.

Advertisement

இப்போது நினைத்தாலும் நெஞ்சப் பரப்பெங்கும் நெருப்பில் வேகுகிறது.

பார்த்தி பேக்கிங் எல்லாவற்றையும் முன்தினமே முடித்திருந்தவன், அவிநாசியில் இருந்து ஆறு மணி பஸ்ஸில் கோயம்புத்தூர் செல்வதாக பிளான் செய்திருந்தான்.

அதற்காக அவனோடு சேர்த்து அந்த வீடும் நான்கு மணிக்கே விடியலைக் கண்டு சுழன்று கொண்டிருந்தது.

அவனிலிருந்து கண்ணைப் பிரிக்காது அவன் நகரும் திசையெங்கும் நகர்ந்து, அவன் நடமாட்டத்தை விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள், தமிழ்.

பார்த்தி மெதுவாகவே தன் வேலைகளை செய்து நேரத்தை நீட்டித்தவன் அடிக்கடி அவள் முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே இருந்தான்.

அழுதிடுவாளோ என்று அவன் செக் செய்ய, அவளோ ஒரு துளி கண்ணீரை சிந்தினாள் இல்லை.

தமிழிடம் விஷயத்தை சொன்ன மறுநாளே ஆனந்தனையும் பார்வதியையும் வீட்டுக்கு அழைத்து, தான் மறுபடியும் குவைத் செல்ல இருப்பதை பார்த்தி சொல்ல ஆனந்த் ஏன் இந்த திடீர் முடிவென்று கேட்டான்.

பார்த்தி ராஜேஷுக்கு சொன்னதையே அவனுக்கும் சொல்லி சமாளித்தான்.

ஆனந்த் தங்கைக்காக யோசித்தாலும் குடும்பத்தைத் தாங்கும் ஒரு ஆணாக, ‘ரெண்டு வருடம் வெளிநாட்டில் சம்பாதித்தால் பொருளாதார ரீதியில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைவர்.’ என்று பாதுகாப்பாக சென்று வா என்று அவன் பயணத்துக்கு நல்ல வார்த்தைகள் கூறினான்.

பார்வதிக்குதான் மனது கேட்கவில்லை. அவருக்கு அவள் செல்வது எல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் உடனே செல்வதுதான் ஏதோ போல் இருந்தது. மகள் ஒரு குழந்தை உண்டான பின் சென்றால் நன்றாக இருக்குமே என்பது அவர் எண்ணம்.

அதை தனிமையில் தமிழிடம் அவர் கேட்க, “அவருக்குத் தெரியும் மா எல்லாம்!” என்றிருந்தாள்.

அதற்கு மேல் அவராலும் என்னதான் செய்ய இயலும்?

“அவர் போறது உனக்குக் கஷ்டமாதான் இருக்கும். அதுக்காக கிளம்பும்போது கண்ணீரோட வழி அனுப்பி வைக்காத.” என்றதோடு முடித்துக் கொண்டிருந்தார்.

தாயின் அந்தக் கூற்றுக் கேட்டதிலிருந்து எங்கே துளி நீர் துளிர்த்தாலும் அவனுக்கு எதுவும் அபசகுனமாகிவிடுமோ என்று கண்களில் தொடர் உலர்ச்சியைப் பேணுகிறாள்.

தன் சமநிலையைக் குழப்பும் மனிதர்களிடம் கோபமுற்று இயற்கை, பேரிடர்களை நிகழ்த்தி பழிவாங்குவது போல் உடற்கூறியல் விதிகளுக்கு எதிராக இவள் ஆற்றும் இந்த செயலுக்கு பழிவாங்கும் சபதத்தை அவள் உடல் எந்திரங்களும் இரசாயனங்களும் எடுத்துக் கொண்டன போல.

அதுதான் பின்னாளில் அவள் கண்களில் கண்ணீரின் வற்றாத வெள்ளப்பெருக்கையும் உள்ளத்தில் நிற்காத வேதனைச் சுழலையும் நிலைக்க வைத்தனவோ?

தமையனிடம் கோபமாக இருந்த நிரஞ்சனாவிடமும் “ப்ளீஸ் நிரஞ்சா, அவர கோபமா வழியனுப்பி வைக்காத, எனக்கு அவர் சொல்ற காரணம் எல்லாம் சரியாத்தான் இருக்கு. நீ ரொம்ப யோசிக்காத எல்லா சரியாத்தான் நடக்கும்.” என்று கெஞ்சி சமாதானம் செய்திருந்தாள்.

எதைக் கட்டுப்படுத்தினாலும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதல்லவா? இறுதியில் அவர்கள் வெறுத்த அந்த நேரமும் வந்தது.

பார்த்தி பெட்டிகளை எல்லாம் வெளியே ஹாலில் கொண்டு போய் வைத்தவன், இறுதியாக தமிழிடம் வந்து நின்றான்.

இந்தப் பொருட்களைப் போல அவளையும் பொதி செய்து கையோடு கொண்டு செல்ல முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

இயலாமை கொடுத்த ஏக்கத்தோடு, “தமிழ்!” என்று அவள் கையைப் பற்ற, அவள் எழுந்து கொண்டாள்.

ஒருகையால் அவள் இடை பற்றித் தன்னோடு அணைத்தவன், மறு கையில் அவள் முகத்தைப் பொதிந்து கொண்டான்.

“தமிழ்!” அவன் குரலில் அத்தனை தவிப்பு… அளவில்லா ஏக்கம்…

“ஹ்ம்ம்…” அவள் குரலிலும் கலக்கம்… இதழ்களில் முயன்று கொண்டு வந்த அரைப் புன்னகை!

அவளின் நிலை காண சகிக்கவில்லை பார்த்திக்கு. தன் மார்போடு அவள் முகத்தை அழுத்திக் கொண்டவன்,

“அழணும்னா அழுதிடு தமிழ். எனக்காக மறைச்சிட்டுத் தவிக்காத.”

“அ…அழலாம் வரல. நீங்க பாதுகாப்பா போய்ட்டு வாங்க.” நேராக அவன் இதயத்துக்குள் ஒலித்தது அவள் குரல். ஆனால் பலன் என்ன?

“பொய் சொல்லாத தமிழ். நான் கிளம்பும்போது அழக்கூடாதுனு உன்னை நீயே கட்டுப்படுத்திக்கிறல? சரி இருக்கட்டும். நான் போய் இறங்கின உடனே உனக்கு கால் பண்றேன். அப்போ அழுதிடுறியா என்கிட்ட?” என்று அவள் முகம் நிமிர்த்திக் கேட்டான்.

“ம்ம்…” மெல்லிய குரலில் தலையாட்டியவளுக்கு இப்போதே வெடித்து வரும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டாள்.

பார்த்தி பிரிவின் ஆற்றாமையை மொத்தம் திரட்டி அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன், கண்களில் இருந்து துணி நீர் கசிந்து அவள் கன்னத்தில் பட்டு மோட்சம் அடைந்தது.

“எ…எதுக்கு இப்போ இந்தக் கண்ணீர்? ரெண்டு வருஷம்தானே? சீக்கிரம் போயிடும். அதுக்குப் பிறகு நம்ம சந்தோஷமா வாழலாம். ம்ம்?” அவனுக்கு சொல்வது போல் தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டவள் அவன் கண்களைத் துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட, கண்மூடிப் பெற்றுக் கொண்டான்.

அந்நேரம் வெளியே இருந்து நிரஞ்சனா அழைக்கவே நேரத்தைப் பார்த்தான் பார்த்தி. அவளும் அவனோடு சேர்ந்து கடிகாரத்தைப் பார்த்தவள், இனி இருவரும் இணைந்து இதே கடிகாரத்தில் நேரம் பார்க்க இரு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்று எழுந்த வேதனையை மறைத்து அவன் முகம் பார்க்க,

“டைமாச்சு தமிழ். நான்… நான் கிளம்புறேன் டா.” என்றான் கால நேரத்தை வெறுத்தவனாக.

மௌனமாகத் தலையசைத்தவள் அவன் பின்னோடு நகர்ந்தாள்.

கதவு வரை சென்றவனுக்கு என்ன தோன்றியதோ, கதவின் கைப்பிடி நோக்கி நீண்ட கையைப் பின்னே இழுத்துக் கொண்டவன், திரும்பித் தன் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டுத் தமிழைப் பார்த்தான்.

பார்த்தவன் பார்த்தபடி இருக்க அவன் கண்களின் பளபளப்பு கூடிக் கொண்டே போனது.

சுவாசப்பை சிற்றறையின் நெகிழ்வுத் தன்மையை மீறித் திணிக்கப்பட்ட வேதனையின் வெப்ப மூச்சில் தன் நெஞ்சம் வெடிக்காமல் இருக்கப் போராடிக் கொண்டிருந்த தமிழுக்கு அவன் வேதனைதான் அதிக சவாலைக் கொடுத்தது.

எதற்கு இந்தத் தவிப்பு? நிகழ்காலம் எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுக்க முயல்கிறதா?

“பார்த்தி! பிளீஸ்…” ‘என்னை உடைத்து விடாதே!’ என்று அவள் பார்வையில் கெஞ்ச, பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்டவன் கதறி விட்டான்.

“என்னால முடியல தமிழ். எனக்கு… எனக்கு எங்கேயும் போக வேணாம். உன்கூடவே இருக்கணும். என்னைப் போக வேண்டாம்னு சொல்லு, தமிழ்! என்னைப் போக விடாத, தமிழ்! என்னை உன்கூடவே வச்சுக்கோ தமிழ்!”

விடாது அரற்றிக் கொண்டு அவன் வடித்த கண்ணீர் கழுத்து வழி அவள் நெஞ்சுக் கூட்டை அடைந்து உள்ளிருக்கும் இதயத்துக்குள் அமிலமாய் இறங்கியது.

ஆனாலும் அவனுக்காகத் தன்னைத் தேற்றிக் கொண்டவள், ஆறுதலாக அவன் முதுகை நீவிக் கொடுத்தபடி பேசினாள்.

“கிளம்பும் போது இப்பிடி அழுதிட்டிருக்காதீங்க பார்த்தி. எனக்கு ஒரு மாதிரியா மனசைப் பிசையுது. அப்புறம்… உங்களைப் போக வேணாம்னு சொல்ல என்னால முடியாது. எனக்குத் தெரியும், போகாம இருக்க முடியும்னா நீங்க இந்த முடிவை எடுத்தே இருக்கமாட்டீங்க! அப்பிடியிருக்கப்போ நான் தடுத்தாலும் நீங்க போய்த்தான ஆவீங்க? அதான்… எனக்கு நான் தடுத்து அதை மீறி நீங்க போகக் கூடாது. அது சகுனம் அபசகுனம்னு என்னைப் போட்டு அறுக்கும்.” என்றிட, அவள் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்கும் புரியவே அதன் மேல் அவளைப் போட்டு வருத்த விரும்பவில்லை அவன்.

கண்களை அவள் தோள்களில் அழுத்தித் துடைத்துக் கொண்டவன் அவளை விட்டுப் பிரிந்தான்.

“வரேன் தமிழ். நீ வெளிய வர வேணாம். உன்னைப் பார்த்திட்டு வீட்டைத் தாண்டிப் போறது ரொம்ப கஷ்டமாயிடும். போற வழியில அப்டியே அத்தையையும் ஆனந்த் அண்ணாவையும் பார்த்திட்டுக் கிளம்புறேன்.” என்று ஏக்கத்தோடே அவளைப் பார்த்து விடை பெற்றிருந்தான்.

கடைசியாக அவன் பார்த்துச் சென்ற அந்தப் பார்வை கொடுத்த தாக்கத்தோடே அதே இடத்தில் தொய்ந்து விழுந்தவள்தான் யார் வந்து அழைத்தும் அசையவே இல்லை.

பார்த்தி சென்று சேர்ந்துவிட்டேன் என்று அழைத்து சொல்லும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஃபோனைப் பார்த்தவாறே படுத்திருந்தாள்.

சரியாக பதினொன்றரை மணிக்கு அவள் ஃபோன் அதிர்ந்தது. இனி உனக்குத் தேவையில்லை என்று பார்த்தி சொன்ன அதே பாடல்…

//பனித்துளி விழுவதால்

அணையாதே தீபம்

தொலைவிலே கிடைத்ததே

எனக்கான யாவும்

அவனோடு பேசும் போது

அது போல வார்த்தை ஏது

உன் தூரமும் என் தூரமும்

கண்கள் காணாமல்//

பாடலின் ஒரு வார்த்தை முடிவதற்குள்ளாகவே அழைப்பை ஏற்றிருந்தவளின் தவிப்பு, வார்த்தைகளின்றிக் கடத்தப் பட்டிருந்தது பார்த்திக்கு.

“தமிழ்! இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கியாமா?” என்ற, அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை.

“நீங்க பத்திரமா போய்ட்டீங்களா?” தன் கேள்வியைக் கேட்டாள்.

“ம்ம்… இப்போதான் செக்கிங் எல்லாம் முடிச்சு வெளிய வந்தேன். இனி கார் புடிச்சு ரூமுக்குப் போகணும்.” என்றான் சோர்வாக.

“டாக்சி பிடிக்க முன்னாடி சாப்பிட எதுவும் வாங்கிகிக்கோங்க. நீங்க வரதை வேற அவங்களுக்கு இன்னும் சொல்லல! ரூம்ல சாப்பிட எதுவும் இருக்குமோ தெரியாது.” என்ற அமைதியாகக் கேட்டுக் கொண்டவன்,

“நீ சாப்டியா?” என்ற அவளிடம் அமைதி.

அதிலே பதிலைத் தெரிந்து கொண்டவன், “நமக்கு விதிக்கப்பட்டது இதுதான்னு ஆகிப் போச்சுது, தமிழ்! சாப்பிடாம இருந்தா எல்லாம் எதுவும் மாறிடாது. ரெண்டு வருஷம் கழிச்சு நான் திரும்பி வந்து வாழ நீ வேணும். அதுக்காகவாவது உன்னைப் பார்த்துக்கோ, தமிழ்! நல்லா சாப்டு நேரத்துக்கு தூங்கி எந்திரி.” என்றான் அக்கறை தொனிக்க.

“இங்கிருந்து கிளம்பும்போது என்னைப் போக விட்டுடாத தமிழ்னு கதறி என்னை ஒரு வழி பண்ணிட்டு நாடு விட்டு நாடு தாண்டினவுடன நல்ல தெளிவா பேச்சு வருதில்ல உங்களுக்கு?” விடிகாலை அவன் உண்டு பண்ணிய கலக்கம் இன்னுமே மிச்சமிருந்தது குரலில்.

“ஹ்ம்ம்… இருக்கலாம் தமிழ், வாழ்க்கையைப் பத்தி எனக்கு நிறையக் கத்துக் குடுத்த இடம் இது. அதனால இந்தத் தெளிவா இருக்கலாம்.” என்றான் பெருமூச்சோடு.

“ஆனா என்னால இன்னும் தெளிய முடியலையே! நீங்க விட்டுட்டுப் போன இடத்தில இருந்து அசையக் கூட முடியல. கடவுள் நமக்கு மட்டும் ஏன் இப்பிடி…” பாதிப் பேச்சை விழுங்கிக் கொள்ளப் பார்த்திக்கும் வேதனையில் மனம் துவண்டு போனது.

“கடவுளை ஏன் தமிழ் பழி சொல்லுற? நம்புன மனுஷங்க வஞ்சிக்காம இருந்திருந்தாலே இது எதுவும் நடந்திருக்காது.” என்றவனுக்கு நடந்த எல்லாம் நினைவில் வர ஏர்போர்ட்டின் ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்து விட்டான்.

தமிழ் அப்போதும் என்ன நடந்தது என்று கேட்கவில்லை. சொன்னால் அவனுக்கு ஆறுதல் கிட்டும் என்றால் சொல்லட்டும். எதுவென்றாலும் அவன் இஷ்டமென்று அவனுக்காகவே பார்த்தாள்.

அவனாலும் அதற்கு தனியாக சுமக்க முடியவில்லை. அவளிடம் பகிர்ந்தாலாவது மனதின் துயரம் பாதியாகுமோ என்ற நப்பாசையில் மனம் திறந்தான்.

“என்கிட்ட சொல்லாம வீட்டுப் பத்திரத்தை பதிமூணு லட்சத்துக்கு அடமானம் வச்சிருக்காங்கடி.” என்ற, தமிழ் திகைத்து விட்டாள்.

“பதி…பதிமூணு லட்சமா? யாரு அத்தையா? பதிமூணு லட்சத்துக்கு அவங்களுக்கு என்ன தேவை இருந்திச்சு?”

“அவங்களுக்கு இல்ல தமிழ், அக்காக்காக வச்சு கொடுத்திருக்காங்க. அதுவும் எதுக்கு வச்சாங்கனு அவங்க சொன்ன காரணம், என்னை வாழ்க்கையை வெறுக்க வச்சிருச்சுடி.”

அவன் வெறுப்பாய் பேச தமிழுக்கு துணுக்குற்றது.

“பார்த்தி! அவ்ளோ தூரத்துல இருந்திட்டு இப்டி பேசாதீங்க பிளீஸ். எனக்குப் பயமா இருக்கு. எதுவா இருந்தாலும் நம்ம பார்த்துக்கலாம். மனசை விட்றாதீங்க.”

“முடியலயே தமிழ்! சொந்தம் பந்தம்னு பக்கத்துல யாரும் இல்லாம, மொழி புரியாத நாட்டுல ராத்திரி பகலா உடம்ப வருத்திக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதுடி ஒவ்வொரு ரூபாயும். அத அசால்டா ஒரு சாமியார்கிட்ட தூக்கி குடுத்துட்டேன்னு சொன்னா எப்டி இருக்கும் சொல்லு?”

“சாமியார்கிட்டவா?” என்று அதிர்ந்தவளுக்கும் இப்போது கோபம் பெருகியது. அவள் ஏதோ நிர்மலாவின் ட்ரீட்மெண்ட்காக வைத்திருப்பார் என்றுதான் நினைத்திருந்தாள்.

“ஆமா டி. ஆறு மாசம் முன்ன ‘அக்காக்கு குழந்தை இல்லாததுக்கு யாகம் செய்தா நல்ல பயன் இருக்குமாம். கேரளால இதுக்குனு ஆளுங்க இருக்காங்க. அவங்க வருஷத்துல ரெண்டு மூணு தடவை தமிழ்நாட்டுக்கும் வந்து போவாங்க. இந்த தடவை அவிநாசிக்கு வராங்க. ஏர்லியா புக் பண்ணி வச்சா அக்காக்கு யாகம் பண்ணிக் குடுப்பாங்க. என்ன பணம் கொஞ்சம் செலவாகும்’னு என்கிட்ட கேட்டாங்க. நான் நல்லா திட்டி விட்டுட்டேன்.

‘இதென்ன மன்னர் காலமா புத்திரயாகம் செய்தா பிள்ளை பிறக்கும்னு நம்ப? ட்ரீட்மெண்ட்கு எதுவும் காசு வேணும்னா மட்டும் என்கிட்ட கேளுங்க. என்னால முடிஞ்சத தரேன். மத்தபடி இதுமாதிரி காசைக் கொண்டு போய் ஏமாந்துட்டு வர நான் ஒத்துக்க மாட்டேன். அதுவும் இனி ட்ரீட்மெண்ட்னு சொல்லி நீங்க காசு கேட்டாலும் நம்ப மாட்டேன். அத்தான்கிட்ட கேட்டுத்தான் தருவேன்’னு சொல்லிட்டேன்.

அதுக்குப் பிறகு இவங்க அதைப் பத்தி என்கிட்ட பேசவே இல்லடி. நானும் புரிஞ்சிக்கிட்டாங்கனு விட்டுட்டேன். ஆனா இவங்க எனக்குத் தெரியாம பெரிய வேலை பண்ணி இருக்காங்க. அது நம்ம கல்யாணத்தன்னைக்குத் தான் எனக்குத் தெரிய வந்துச்சு.

அம்மா நான் சொன்னதை அக்காகிட்ட சொல்லியும் அக்கா பிடிவாதமா நின்னாளாம். இதுல அண்ணியும் அவங்க சொந்தக்கார பொண்ணு ஒருத்திக்கு அந்த யாகம் செய்து ஒரு வருஷத்துல குழந்தை பிறந்துச்சுனு சொல்லவும் அக்கா இன்னுமே அடமா நின்னிருக்கா.

‘எனக்கு குழந்தை பிறக்கிறதுக்கு இருக்கிற கடைசி வழி இதுதான். இதை செய்யலனா நான் செத்துருவேன்’னு அம்மாகிட்ட மிரட்டி இருக்கா. அதுக்குப் பயந்துதான் எங்க அம்மா எனக்குத் தெரியாம வீட்டுப் பாத்திரத்தை அடமானம் வைக்கிறதா முடிவு பண்ணி இருக்காங்க.

அப்படி வச்ச பத்திரத்தை ஒன்னு நான் அனுப்புற பணத்துல சிக்கனம் பிடிச்சு எடுக்கலாம். முடியாத பட்சத்தில என்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லி மீட்டுக்கலாம்னு பிளான் பண்ணிட்டு அத அக்காகிட்டயும் அண்ணிகிட்டயும் சொல்லி இருக்காங்க. நிரஞ்சனாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, அவ இவங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவானு அவளுக்கு எல்லாத்தையும் மறைச்சிருக்காங்க.

ஊர்ல வழக்கமா வட்டி தர அண்ணாகிட்ட பத்திரம் போனா, விஷயம் எனக்குத் தெரிய வந்துரும்னு வெளிய யாரும் வட்டிக்கு குடுக்குற நல்லவங்க இருக்காங்களானு எங்க அம்மா யாருகிட்ட தெரியுமா கேட்டிருக்காங்க? அண்ணிகிட்ட..!

அவங்களும் தந்திரமா தன்னோட சொந்தக்காரங்க ஒருத்தர் இருக்காருனு சொல்லி அம்மாவைக் கூட்டிட்டுப் போய் பத்திரத்தை வைச்சிருக்காங்க.

எதையும் சும்மா செய்யல அவங்க. இவங்க சூழ்நிலையை தனக்கு சாதகமா யூஸ் பண்ணிருக்காங்க.

யாகத்துக்கு ஏழு லட்சம் தேவைனு அம்மா சொல்லியிருக்காங்க. ஆனா இவங்க அம்மாக்குத் தெரியாம அவங்க சொந்தக்காரர்கிட்ட பதிமூணு லட்சத்துக்கு பத்திரத்தை ரெடி பண்ண வைச்சு அம்மாகிட்ட சைன் வாங்கிட்டு ஏழு லட்சத்தை அம்மாகிட்ட கொடுத்திட்டு அம்மாக்குத் தெரியாம அப்புறமா போய் ஆறு லட்சம் வாங்கி இருக்காங்க.

இதெல்லாம் எனக்கு விஷயம் தெரிஞ்ச அன்னைக்கு நான் அந்த வட்டிக்காரன்கிட்ட மொபைல்ல விசாரிக்க போன இடத்துலதான் அம்மாக்கே தெரிய வந்துச்சு.

இதுல அவன் போட்ட வட்டியைக் கூட இவங்க சரியா பாத்துக்கல. இரண்டு லட்சம் வட்டி போட்டு மொத்தமா பதினைஞ்சு லட்சத்துக்கு வீட்டு பத்திரத்தை வச்சிக்கிட்டு, எனக்கு கல்யாணம் நான் இனி குவைத்துக்குப் போகப் போறது இல்லனு தெரிஞ்ச உடனே தன்னோட அசலையும் வட்டியையும் தர சொல்லி நின்னிருக்கான்.

இல்லனா வீட்டை அவன் பேருக்கு கிரயம் பண்ணி வைக்க சொல்லி கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி இருந்தே பிரச்சனை பண்ணிட்டு இருந்திருக்கான்.

கல்யாணத்தன்னைக்கும் ‘எனக்கு ஒரு முடிவு சொல்றீங்களா? இல்ல, அங்க வந்து பிரச்சனை பண்ணவா?’னு அவன் போன் பண்ணி பேசவும்தான் இவங்க யாருக்கும் தெரியாம பின்னாடி போய் அவன்கிட்ட கெஞ்சிட்டு இருந்திருக்காங்க.

அது என் கண்ணுல பட்டதாலதான் இந்தளவிலயாச்சும் நம்ம தப்பிச்சோம்டி. இல்லனா ஒன்னுமே இல்லாம நாடு ரோட்டுல நின்னிருப்போம்.

நான் ஒரு மூணு லட்சம் சேர்த்து வச்சிருந்தேன்டி. அங்க தொழில் பண்ணுறதுனா தேவையேனு. கடைசியா அதையும் கொடுத்து, நான் வழக்கமா வட்டிக்கு வாங்குற அண்ணாகிட்ட இருந்து மீதிப் பணத்தையும் வாங்கி அவன்கிட்ட இருந்த பாத்திரத்தை மீட்டு இவர்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்.

இனி இந்தக் கடன அடைச்சு அங்க நம்ம பொழைக்கிறதுக்கும் கொஞ்சம் சேர்த்துட்டு வரணும், தமிழ்! அதுவரைக்கும் எனக்காக உன்னைப் பார்த்துக்கிட்டு பத்திரமா இரு, தமிழ்! அப்புறம்… இந்த விஷயம் உனக்குத் தெரிஞ்ச மாதிரிக் கூட யாருக்கிட்டயும் காட்டிக்காத. முக்கியமா நிரஞ்சாவுக்குத் தெரியவே கூடாது.” என்ற, அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“எப்பிடி பார்த்தி இவங்க யாரையும் எதுவும் கேட்காம சும்மா போக முடிஞ்சது உங்களால? இவங்க வீணடிச்ச ஒவ்வொரு ரூபாயும் நீங்க ரத்தம் சுண்ட சம்பாதிச்சது. அதுக்கான பதிலை அவங்ககிட்ட வாங்காம எப்பிடி நீங்க கிளம்பி போனீங்க?”

“கேட்டு என்ன தமிழ் பண்ண சொல்ற? சண்டை போட சொல்றியா? அப்பிடி போடுறதுனா யாரு கூட நான் சண்டை போடறது? என் அம்மா கூடவும் அக்கா கூடவுமா? அப்பிடி அவங்களை உடைக்கவா நான் இவ்ளோ நாளும் கஷ்டப்பட்டேன்?

அதோட அவங்க செய்தது மடத்தனம்னாலும் இப்போ அக்கா குழந்தை உண்டாகியிருக்கா. இந்த நேரம் நான் எதுவும் கேட்கப் போய் மாமாக்கு விஷயம் தெரிஞ்சு, அவரு எதுவும் அக்காகிட்ட பிரச்சனை பண்ணி அவளுக்கு எதுவும் ஆச்சுனா? டாக்டர் வேற கவனமா இருக்க சொல்லியிருக்காங்க. வேணாம் தமிழ். நம்ம யாரு கஷ்டத்துக்கும் காரணமா இருக்க வேணாம். விஷயம் தெரிஞ்சதுல இருந்து அம்மாகிட்ட முகம் குடுத்துப் பேசவே இல்ல. வரும் போது கூட வரேன்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டேன். அதுவே ஒருமாதிரி சங்கடமா இருக்கு தமிழ்.” என்ற, தமிழுக்கு முதல் முறை இவன் இவ்வளவு நல்லவனாக இருந்திருக்க வேண்டாமோ என்றிருந்தது.

“சரி… அம்மா, அக்காவை விடுங்க. உங்க அண்ணி… உங்க அண்ணி செய்ததை எப்பிடி மன்னிக்க முடிஞ்சது உங்களால? குறைஞ்சபட்சம் உங்க அண்ணன் காதிலயாவது இந்த விஷயத்தைப் போட்டிருக்கணுமா இல்லையா?”

“விஷயம் வெளிய தெரிய வந்தா செத்துடுவேன்னு சொல்றாங்க, தமிழ்! என் ரெண்டு பிள்ளையும் அம்மா இல்லாம வளரப் போறதுக்கான பாவம் உன்னைத்தான் சேரும்னு சொல்றாங்க.” சித்ராவின் செயலை நினைத்து அருவருத்தபடி சொன்னான்.

“ஹூம்… இங்க எல்லாரும் உங்களை எப்பிடி ஏமாத்தி பயன்படுத்திக்கலாம், மாட்டிக்கிட்டா என்ன செய்து உங்களை ஆஃப் பண்ணலாம்னு சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க. நீங்களும் பழிக்கும் பாவத்துக்கும் கட்டுப்பட்டு கட்டுப்பட்டே சிலுவை சுமந்துட்டிருக்கீங்க. ஆனா என்னால இது எதையும் ஏத்துக்கவே முடியல.” என்றவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக…

“இதுவரைக்கும் போனதுலாம் போகட்டும். இனி என்னை மீறி யாரும் உங்களை சுரண்டக் கூடாது. முடிக்க வேண்டியதெல்லாம் முடிச்சு உங்களை என்கிட்ட சீக்கிரம் கொண்டு வரணும் எனக்கு. அதுக்கு யார் என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லை. இனி இங்க என்னைத் தாண்டித்தான் எதுவும். இங்க வந்ததுக்கு அப்புறம் நீங்க யாருக்கு என்ன செய்யணுமோ நிறைவா செய்துக்கோங்க. அதுவரைக்கும் என்னை என் போக்குல விடுங்க. நான் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டேன்னு நம்பிக்கை இருந்தா சரின்னு சொல்லுங்க. இல்லனா விடுங்க. நீங்க வர பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆனாலும் பரவால்லனு வெயிட் பண்ணுறேன்.” என்றாள் ஒருவிதப் பிடிவாதக் குரலில்.

“தமிழ் என்னமா இது? உன் மேல நம்பிக்கை இல்லனு சொல்ல முடியுமாடி என்னால? இன்னைலருந்து நான் மொத்தமும் உன் கட்டுப்பாட்டுக்குக் கீழ வரேன். எதையாவது செய்து என்னை சீக்கிரமே அங்க மீட்டுக்கோடி!” என்றான் மொத்தமாய் அவளிடம் ஒப்புக் கொடுத்து.

“ம்ம்… சரி நேரமாகுது. ரூமுக்குப் போய்ட்டு கூப்பிடுங்க.”

“ம்ம்… நீயும் போய் சாப்பிடு, தமிழ். நான் டாக்ஸில போகும் போதே எல்லாருக்கும் கூப்டு வந்து சேர்ந்ததை சொல்லிடறேன். ரூமுக்குப் போனதும் சேகர் அண்ணாகிட்ட ஐஞ்சு நிமிஷம் பேசிட்டு உனக்குக் கூப்பிடுவேன். கையில ஃபோனை வச்சுக்கோ.”

“உங்களுக்குப் பயணம் பண்ணது களைப்பா இல்லையா? தூங்க வேணாமா நீங்க?”

“தூக்கமெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம் தமிழ். நாளான்னைக்குத்தானே வேலை! இப்போ உன்கூட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.” என்ற அவள் என்ன மறுக்கவா போகிறாள்?

மற்றவர்களுக்காக அவன் எடுத்துக் கொண்ட நேரம் முடிந்ததும் மறுநாள் விடியும் வரை பேசிக் கொண்டே இருந்தார்கள்.

 தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!