Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நன்னிலவு நீ…தண்நிழல் நான்…-25

அத்தியாயம் – 25

“துகள் மண் நீரேறி குழையும், காற்றில் காயும், சூலையில் எரியும், ஆகாயம் உள்வாங்கி ஐம்பூதமும் அடக்கி கலம் கடமென உருபெறும். குயவனின் கரங்கள் கோணாது என்பது ஒற்றை திடம்.”

மாநாட்டின் மூன்றாம் நாள். காலைப் பொழுதில் பரவியிருந்த பனிமூட்டம் போல, ஆதிரையின் மனதிலும் ஒருவிதமான மந்தநிலை படர்ந்திருந்தது. ஆனால், அந்த மந்தநிலைக்கு அடியில் ஒரு பெரிய எரிமலை வெடிக்கக் காத்திருப்பதை அவள் உணர்ந்தாள். பேராசிரியர் அமர்ந்திருந்த அந்த ஓரத்தில் இருந்த இருக்கையை நோக்கி அவள் நடந்தபோது, ஒவ்வொரு அடியும் அவளை ஒரு மாபெரும் உண்மையை நோக்கி இழுத்துச் செல்வது போல இருந்தது.

ஆதிரையின் கண்கள் பேராசிரியரை ஏறிட்டன. அவர் களைத்துப்போயிருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் பேசிய விஷயங்கள் ஆதிரையை ஒரு முடிவற்ற தேடலில் ஆழ்த்தியிருந்தது. லீக்கும் சந்தியாவுக்கும் இடையில் என்ன நடந்தது? அந்த அழகான காதல எப்பொழுது முகிழ்ந்தது? இதையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவல் அவளது விவேகத்தை விஞ்சியிருந்தது.



Advertisement

“பின்ன என்னம்மா..லீயும் சான்டியும் உடனே கல்யாணம் பண்ணிக்கத் தீர்மானிச்சாங்க தெரியுமா? அந்த அளவுக்கு அவங்க காதல்ல ஒரு உறுதி இருந்தது,” என்று பேராசிரியர் பழைய நினைவுகளில் மூழ்கினார். அவரது குரலில் ஒரு தந்தைக்கே உரிய பெருமிதமும், அதே சமயம் ஒரு இழப்பின் வலியும் இழையோடியது.

“சார்… லீ சாருக்கு எப்போ லவ் வந்தது?” என்று ஆதிரை கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் நீ மித்ரன்கிட்ட கேட்டுக்கோமா… அந்த அழகான காதலை நீ மித்ரன் வாயால கேட்கணும்… உன்னிடம் அதை அவனாகக் கூறக் காத்திருக்கிறான் மா.”

அவன் தான் கல்யாணம் மொத்தத்தையும் முன்ன நின்னு நடத்தினான். அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்!” என்றார். அவன் தான் அவங்களுக்கு இடையில ஒரு தூதுவனா இருந்தான். கல்யாண ஏற்பாடுகள்ல இருந்து எல்லாத்தையும் கவனிச்சப்போ அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்! தன் உற்ற நண்பனுக்கும், உயிர் தோழிக்கும் நடக்குற கல்யாணம்னா சும்மாவா?”

Advertisement

பேராசிரியர் பேசப் பேச, அவரது  நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. சந்தியா உயிரோடு இருந்தபோது திருமண நாளன்று கூட மித்ரனை ஓட்டிய தருணங்கள் இப்போது அவர் கண்முன் சித்திரங்களாக விரிந்தன.

Advertisement

“என்ன மித்ரன், எங்களைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வழியிலிருந்து தள்ளவிட்டுட்டு நீ ஆதிரைக்கிட்ட போகணும், அதானே உன் பிளான்? அதுக்காகத் தான் இவ்வளவு அவசரமா எல்லாத்தையும் ஏற்பாடு பண்றியா?”

சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் புகழ்பெற்ற கிரேஸ் கதீட்ரல் தேவாலயத்தில் ஒருமுறை மோதிரம் மாத்திக்கிட்டாங்க. ஆனா, சான்டிக்கு நம்ம ஊர் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. அதனால அங்கேயே இருக்குற ஸ்ரீ லக்ஷ்மி கணபதி கோவிலிலும் மிக எளிமையா ஒரு கல்யாணம் நடந்தது.”

” ஒரு மல்லிப்பூ மாலை, ஒரு புடவை, குங்குமம்னு என் பொண்ணு மகாலட்சுமி ஆட்டம் நின்னாமா… நிறைந்த மஞ்சள் குங்குமம் தாலியோட நீடூழி வாழுங்கன்னு தானேமா வாழ்த்தினேன்! ஆனா விதி வேற மாதிரி எழுதிடுச்சு…” என்று சொல்லிப் பேராசிரியர் திடீரென்று குழந்தையைப் போலக் கதறி அழ ஆரம்பித்தார்.

Advertisement

ஆதிரை பதறிப்போனாள். ஒரு முதிர்ந்த மனிதர், அறிவார்ந்த பேராசிரியர் இப்படித் தன் முன் உடைந்து போவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.. அவளது கண்களிலும் கண்ணீர் தளும்பியது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி மௌனமாக நின்றாள். பேராசிரியர் அந்த நாளை விவரிக்கத் துவங்கினார்…

சான் பிரான்சிஸ்கோவின் அந்த விடியற்காலை பொழுதில், ஹெயஸ் வேலி (Hayes Valley) பகுதி மெல்லிய பனிமூட்டத்தில் நனைந்திருந்தது. 2011 ஜூலை மாதத்தில் அந்த நாள்… அன்று மாலை மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக லீ அதிகாலையிலேயே கிளம்ப வேண்டியிருந்தது. லீக்கு இசையின் மீது தீராத காதல் உண்டு. அதை விட சமூக சேவையிலும். குறிப்பாக, ஆட்டிசம் மற்றும் மனநலச் சவால்கள் கொண்ட குழந்தைகளுக்கு ‘இசை சிகிச்சை’ (Music Therapy) அளிப்பதில் அவர் UCSF (University of California, San Francisco) மருத்துவமனையின் மனநலத் துறையில் முனைவர் கெவின் மேக் உடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

ஆனால், வீட்டில் சூழல் வேறாக இருந்தது. சந்தியா அப்போது மூன்று மாத கர்ப்பிணி. அன்று அவளுக்கு உடல்நிலை மிக மோசமாக இருந்தது. விடாத வாந்தியும், தலைசுற்றலும் அவளை நிலைகுலைய வைத்திருந்தது.

“லீ… ப்ளீஸ், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் போகாதீங்க. எனக்கு ஏதோ பயமா இருக்கு,” என்று மழலை மாறாத குரலில் கெஞ்சினாள் சந்தியா. லீயின் கையைத் தன் இரு கைகளாலும் இறுக்கப் பற்றிக் கொண்டாள். அவளது பிடியில் ஒருவிதமான பதற்றம் இருந்தது.

லீ தவித்துப் போனான். ஒரு பக்கம் கஷ்டப்படும் தன் மனைவி, மறுபக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் புன்னகைக்காகக் காத்திருக்கும் அந்த நிகழ்ச்சி. “சான்டி… டாக்டர் கெவின் மேக் எனக்காக அங்க காத்துட்டு இருப்பாருமா. அந்தப் பசங்களுக்காக நான் அங்க இருந்தே ஆகணும். ஆனா உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு…” என்று தடுமாறினான்.

லீ உடனே மித்ரனை அழைத்தான். “மித்ரன்… சான்டிக்கு உடம்பு முடியல. ஆனா நான் உடனே UCSF கிளம்பணும். ப்ளீஸ் வரியா?”

பத்தே நிமிடங்களில் மித்ரன் அங்கே இருந்தான். சந்தியாவின் அருகில் அமர்ந்து அவளது தலையை வருடினான். “சான்டி, ஏன் இப்படி சின்னக் குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற? லீ போயிட்டு வரட்டும். அந்தப் பசங்களுக்கு அவன் அங்க இருக்கிறது எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும்ல?”

மித்ரனின் வார்த்தைகள் சந்தியாவைச் சற்று அமைதிப்படுத்தின. தன் நண்பன் அருகில் இருப்பதால் வந்த தைரியத்தில், மெதுவாக லீயின் கையை விடுவித்தாள். “சீக்கிரம் வந்துடுங்க லீ…” என்று வழியனுப்பி வைத்தாள்.

மித்ரனும் லீயும் அங்கிருந்து கிளம்பினார்கள். லீயை அந்த UCSF ஷட்டில் பேருந்தில் ஏற்றிவிட்டு, அவனுக்கு ஒரு விடைபெறல் புன்னகையை வீசினான் மித்ரன்.

பேருந்து நகரத் தொடங்குகிறது. …லீ ஜன்னல் ஓரம் அமர்ந்து, கையில் இருந்த அந்த இசை நிகழ்ச்சிக்கான கோப்புகளைப் புரட்டுகிறான். டாக்டர் கெவின் மேக் அவனது அருகில் அமர்ந்து ஏதோ ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஹெயஸ் வேலி பகுதியின் அந்தச் சந்திப்பில், பேருந்து மிதமான வேகத்தில் கொஞ்ச தூரம் தான் சென்று கொண்டிருக்கிறது.

திடீரென்று…

எதிர்பாராத திசையிலிருந்து ஒரு பிரம்மாண்டமான செமி-ட்ரெய்லர் (Semi-trailer) லாரி, கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்தை நோக்கிப் பாய்கிறது. மரண ஓலங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. அடுத்த நொடி… உலகம் தலைகீழாக மாறுகிறது.

பேருந்து ஒரு பக்கமாகச் சரிந்து பயங்கரமாக மோதுகிறது. இரும்புச் சட்டங்கள் நசுங்கும் சத்தம் அந்தப் பகுதியையே அதிர வைக்கிறது. ஜன்னல் கண்ணாடிகள் சிதறி லீயின் உடலில் பாய்கின்றன.

மித்ரன் சற்றுத் தொலைவில் தன் காரில் திரும்பச் சென்று கொண்டிருந்தபோது, அந்த விபத்தின் சத்தம் கேட்டு உறைந்து நின்றான். அது லீ சென்ற பேருந்துதான் என்று தெரிந்ததும் அவன் இதயம் நின்று போனது போலிருந்தது.

அவன் ஓடிச் சென்று பேருந்தின் சிதைந்த கதவைத் திறக்க முயன்றான். உள்ளே புகை மூட்டம். லீ இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டான். லீயின் கண்கள் பாதியளவு திறந்திருந்தன. டாக்டர் கெவின் மேக் அங்கேயே உயிரற்றுக்கிடந்தார்.

மித்ரன் கதறி அழுதபடி லீயைத் தூக்க முயன்றான். “லீ! கண்ணைத் திற லீ! நான் வந்துட்டேன்!”

லீ மிகச் சிரமப்பட்டுத் தன் கையை உயர்த்தினான். அவனது விரல்கள் நடுங்கின. எரியும் அந்தப் பேருந்துக்குள் இருந்து மித்ரனை வெளியே தள்ளுவது போல ஒரு சைகை செய்தான். அவன் கண்கள் சொல்லாமல் சொன்ன செய்தி: “சந்தியாவை நீதான் பார்த்துக்கணும்.”

மித்ரனைப் பார்த்து ஒரு மெல்லிய, தைரியமான ‘தம்ப்ஸ் அப்’ காட்டினான் லீ. அதுதான் அவன் தன் நண்பனுக்குக் கொடுத்த கடைசி அங்கீகாரம். அடுத்த கணமே, அந்தப் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து ஒரு பயங்கரமான வெடிப்புச் சத்தம்!

நெருப்புப் பிழம்புகள் பேருந்தைச் சூழ்ந்தன. மித்ரன் தூக்கி எறியப்பட்டான். அவன் கண்முன்னாலேயே லீயின் உருவம் நெருப்புக்குள் மறைந்தது.

ஆதிரையிடம் இதையெல்லாம் சொல்லும்போது பேராசிரியர் கதறி அழுதார்.

“மித்ரன் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அழுத அழுகை இன்னும் என் காதுல கேக்குதுமா… அவன் தலையில அடிபட்டு ரத்தம் கொட்டிட்டு இருந்தது, ஆனா அதை அவன் உணரவே இல்லை. ‘நான் எப்படி சான்டியைப் பார்ப்பேன்? அவ கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்? லீயை விட்டுட்டு வந்துட்டேனே… நான் ஏன் உயிரோட வந்தேன்?’னு அவன் துடிச்ச துடிப்பு… ஒரு பைத்தியக்காரன் மாதிரி கத்தினான் ஆதிரை.”

“மித்ரன் தான் சான்டியைச் சம்மதிக்க வச்சான் ஆதிரை. ‘நீ போ லீ, நான் பார்த்துக்கிறேன்’னு மித்ரன் சொன்ன அந்த வார்த்தைதான் இன்னைக்கும் அவனை ஒரு குற்ற உணர்வுச் சிறையில அடைச்சு வச்சிருக்கு.”

“சான்டிக்கு உடம்பு முடியலன்னு லீ அங்கேயே இருந்திருந்தா… அன்னைக்கு அவன் அந்தப் பஸ்ஸுல போயிருக்க மாட்டான். மித்ரன் கூப்பிட்டதாலதான் லீ போனான்னு மித்ரன் நினைக்கிறான். சான்டியை அவன்கிட்ட இருந்து பிரிச்சது தான் தான்னு அவன் தன்னைத் தானே வருத்திக்கிட்டான் …,” என்று பேராசிரியர் சொன்னபோது, ஆதிரை சிலையாக நின்றாள்.

விபத்து நடந்து சில மணிநேரங்கள்… மருத்துவமனையின் தாழ்வாரத்தில் மித்ரன் ஒரு பிணத்தைப் போல அமர்ந்திருந்தான். அவனது ஆடைகளில் லீயின் ரத்தக் கறையும், புகையின் வாடையும் அப்படியே இருந்தது.

சந்தியா மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டாள். கண் விழித்தபோது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “லீ எங்கே? மித்ரன்… லீயைக் கூப்பிடு…” என்று அரற்றினாள். யாரிடமும் பதில் இல்லை. மெல்ல மெல்ல உண்மை அவளுக்குப் புரியத் தொடங்கியபோது, அவளது அலறல் அந்த மருத்துவமனை முழுவதையும் உலுக்கியது.

“லீ…!” என்று கத்தியபடி அவள் மயங்கி விழுந்தாள். அடுத்த ஒரு வாரம் அவள் ஒரு உயிரற்ற உடலைப் போலவே இருந்தாள். இடையில் விழிப்பதும், “லீ வந்துட்டாரா?” என்று கேட்பதும், பின் அழுது அழுது மீண்டும் மயங்குவதுமாக இருந்தாள்.

அவள் தேடியது மித்ரனைத்தான். ஆனால் மித்ரன் அவள் முன்னால் வரவில்லை. அவனால் வர முடியவில்லை. “நான் மட்டும் லீயை அன்னைக்கு அனுப்பாம இருந்திருந்தா… நான் மட்டும் அன்னைக்கு அடம் பிடிச்ச சான்டியைத் தடுத்து நிறுத்தாம இருந்திருந்தா…” என்கிற குற்ற உணர்வு அவனை ஒரு இருட்டு அறைக்குள் முடக்கியது.

சந்தியா ஒரு வாரத்திற்குப் பிறகு மெல்லத் தேறினாள். தன் வயிற்றில் வளரும் அந்தச் சிறு உயிருக்காகத் தன்னைத் தேற்றிக்கொண்டாள். அவளே மித்ரனைத் தேடிச் சென்றாள்.

மித்ரன் ஒரு மூலையில் தாடியும் அழுக்குச் சட்டையுமாக, கண்களில் ஒளியிழந்து அமர்ந்திருந்தான். சந்தியா அவன் அருகில் சென்று அவன் கைகளைப் பற்றினாள்.

“மித்ரன்… என்னைப் பார்,” என்றாள் மிக நிதானமான குரலில்.

மித்ரன் தலை நிமிரவில்லை. ” சந்தியா.. என்னை மன்னிச்சிடு. நான் தான் லீயை அன்னைக்குக் கட்டாயப்படுத்தி…”

“போதும் மித்ரன்!” என்று அவன் பேச்சைத் தடுத்தாள் சந்தியா. “இந்தக் குற்ற உணர்வு உனக்குத் தேவையில்லாதது. லீ ஒரு மேன்மையான காரியத்துக்காகப் போனார். அது விதியோட விளையாட்டு. இதுல உன் மேல எந்தத் தப்பும் இல்லை. ஆனா, இனி நாம ஒண்ணா இருக்க முடியாது மித்ரன்.”

மித்ரன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். நான் லீயோட சொந்த ஊருக்கே போகப்போறேன். என் பிள்ளை அவன் அப்பா பிறந்த மண்ணுல, அவரோட நினைவுகளோட வளரணும்னு ஆசைப்படுறேன். அங்கே லீயோட அம்மா, அப்பா இருக்காங்க. அவங்களுக்கு நான் தான் இப்போ ஆறுதல்.”

சந்தியா மித்ரனின் கண்களை நேராகப் பார்த்துக் கூறினாள்:

“நீ நம்ம நாட்டுக்குத் திரும்பிப் போ மித்ரன். அங்கே ஆதிரை உனக்காகக் காத்துட்டு இருப்பா. உன்னோட இந்த இருண்ட மௌனம் அவளோட வாழ்க்கையை அழிச்சிடக் கூடாது. மித்ரன், உன் வாழ்க்கையில எங்க பேரோ, இல்ல எங்களோட இந்தத் துயரத்தோட நிழல் கூட விழக்கூடாது. என்னை நீ தொடர்பு கொள்ளவே கூடாது.. …இது என் லீ மேல சத்தியம். நீ ஆதிரையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும். அதுதான் நீ லீக்குச் செய்யுற உண்மையான மரியாதை.”

மித்ரன் எவ்வளவோ தடுத்தும் சந்தியா கேட்கவில்லை. தன் கணவனின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, அவனது வேர்களைத் தேடி அவள் சென்றுவிட்டாள்.

“அப்படித்தான்மா அவன் இந்தியா வந்ததும் உன்னை மணந்ததும்…” பேராசிரியர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தொடர்ந்தார். “இந்தியா வரும்போது அவன் தன்னிடம் இருந்த எல்லா வாசத்தையும் தொலைத்திருந்தான். ஒரு மலருக்கு நிறம் இருக்கலாம், ஆனால் மணம் இல்லை என்றால் அது எப்படி இருக்குமோ, அப்படித்தான் மித்ரனும் இருந்தான். அந்தச் சமயத்தில்தான் நீ அவன் வாழ்க்கைக்குள் வந்தாய். நீ அவனுக்கு வெறும் மனைவியாக மட்டும் வரவில்லை ஆதிரை… நீ அவனுடைய சுவாசமாகவே மாறிப்போனாய்.”

பேராசிரியர் ஆதிரையின் கண்களை ஊடுருவிப் பார்த்தார். “நீயும் கண்மணியும் அவனுக்கு என்னவாக இருந்தீர்கள் என்று நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. உறைந்து போன ஒரு கடலில் விழுந்த முதல் சூரியக் கதிர் போலத்தான் நீங்கள் அவன் வாழ்க்கையில் நுழைந்தீர்கள்.

ஆதிரைக்கு இப்போது எல்லாம் தெளிவாக விளங்கிற்று மித்ரன் , அவன் மனதுக்குள் ஒரு தராசு இருந்தது.

“அந்தப் பக்கம் லீயும் சந்தியாவும் இருந்தார்கள். அவர்களின் துயரம், லீயின் தியாகம், சந்தியாவின் அந்தப் பாரமான சத்தியம்… இதையெல்லாம் ஒரு தட்டில் வைத்திருந்தான். அந்தத் துயரத்திற்கு ஈடாக, மறுதட்டில் என்னையும் கண்மணியையும் வைத்திருந்தான். லீயைத் தொலைத்த அந்த வலியின் கனம் குறையக் கூடாது என்பதற்காகவே, என்னிடம் காட்டும் அன்பை அவன் கட்டுப்படுத்தினான்.” ஆதிரையின் இதயம் விம்முவது அவளுக்கே கேட்டது.  அவன் எப்போதும் தன் உணர்வுகளைக் கடிவாளம் போட்டு வைத்திருந்ததன் விளக்கம் புரிந்தது. அவள் இதுவரை மித்ரனை ஒரு பிடிவாதக்காரனாகப் பார்த்தாள். ஆனால் அவன் ஒரு ‘துயரத்தின் காவலனாக’ இருந்திருக்கிறான்.

“அவனால் எல்லாம் செய்ய முடிந்தது ஆதிரை. ஆனால் அந்தத் தேவதை சந்தியாவின் தோழமையை அவன் இழந்திருந்தான் பார்…

“அப்படித்தான்மா அவளைப் பிரிந்து அத்தனை  வருடம் இந்தியாவில் இருந்தவனை, அன்று வந்த அந்த ஒரே ஒரு மெசேஜ் அப்படியே புரட்டிப்போட்டது. ‘இனி என்னால் காத்திருக்க முடியாது…’ (Can’t wait any more) – இதுதான் அந்தச் செய்தி. சந்தியாவிற்கு ஏதேனும் பயங்கரமாக நடந்திருந்தால் தவிர, அவள் அப்படி மித்ரனை அழைக்க மாட்டாள் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால்தான்மா அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல், உன்னையும் கண்மணியையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே ஓடிவந்தான்.”

பேராசிரியர் தன் நரைத்த கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். “இங்கே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, என் மகள் சந்தியாவை அந்தப் கொடிய நுரையீரல் புற்றுநோய்  நோய் தாக்கியிருந்தது. சுவாசிக்கும் காற்றின் வழியே மெல்லப் பரவி, ஒருவரின் வாழ்வாதாரமான மூச்சுக் காற்றையே கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து அழிக்கும் கொடிய பாதிப்பு அது.  ஆனால் அவள் யாரிடமும் அதைச் சொல்லவில்லை. தன் கணவன் லீ இல்லாத இந்த உலகில், தன் கடமைகளை முடித்துவிட்டு அவனிடமே செல்ல அவள் தயாராகிவிட்டாள்.”

“ஆனால் அவள் கண்களை மூடும் அந்த இறுதி நொடியில் கூட, அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது ஆதிரை. ‘நான் லீயைப் பார்க்கப் போகிறேன்’ என்ற அந்த மகா மகிழ்ச்சியுடன் என் மகள் கண்களை மூடினாள். போவதற்கு முன்னால், அவள் செய்த காரியம்… தன் உயிரின் உயிரான மகன் கவினை, அவளுடைய அன்பிற்குரிய மித்ரனிடமே ஒப்படைத்ததுதான். ‘கவினை நீயே பார்த்துக்கொள் மித்ரன்’ என்று சொல்லிவிட்டு, அந்த மகராசி கிளம்பிவிட்டாள்.”

ஆதிரைக்கு இப்போது எல்லாம் தெளிவாக விளங்கிற்று. ஒரு சாதாரணமான பொய் அல்ல இது; ஒரு அசாதாரணமான சூழலில், ஒரு உன்னதமான சத்தியத்திற்குத் தலைவணங்கித்தான் மித்ரன் தன் கடந்த காலத்தைத் தனக்குள் புதைத்திருக்கிறான். தன் மனைவியிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்தத் தோழமையின் ரகசியம் ஒரு புனிதமான பாரமாக அவனை அழுத்தியிருக்கிறது.

சந்தியாவின் அந்த ஒற்றை வரிச் செய்தி—அது ஒரு சாதாரண அழைப்பல்ல, அது ஒரு மரண வாக்குமூலத்தின் தொடக்கம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், எதைப் பற்றியும் யோசிக்காமல், எவருக்கும் விளக்கம் சொல்லாமல் அவன் புயலெனக் கிளம்பி வந்திருக்கிறான்.

ஆதிரையின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால், இப்போது எதையுமே கேட்கத் தோன்றவில்லை. விளக்கங்கள் யாவும் அந்த மரணத்தின் முன் அர்த்தமற்றுப் போயின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!