Skip to content
Post Views: 3,927
படபடப்பும் பயமுமாய் மெசேஜை திறந்தாள்.
ஸ்டார் ஹெல்த் இன்ஷுரன்ஸ் டாக்குமெண்ட் அனுப்பி இருந்தான்.
அவன் அரசு ஊழியன் என்பதால் அவனுக்கு மாத ஊதியத்தில் இன்ஷுரன்ஸ் பிடித்தம் செய்யப்படும். அவன் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என்று இந்த காப்பீட்டை ஐந்து லட்சம் வரை மருத்துவ செலவிற்கு பெற முடியும். எந்த தனியார் மருத்துவமனையில் வேண்டுமானாலும் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு குழந்தை இல்லை ஒன்பது குழந்தை பெத்து வளர்க்க மன்னரால் முடியும்! பொண்டாட்டியை வைத்து வாழ துப்பில்லாம நான் கல்யாணமும் பண்ணல, பிள்ளை குட்டி வளர்க்க வக்கில்லாம நான் பிள்ளை பெத்துக்கவும் முயற்சி பண்ணல என்று வாய்ஸ் நோட் வேறு அனுப்பியிருந்தான்.
Advertisement
குறுகி அமர்ந்து விட்டாள். தான் முந்திரிக் கொட்டையாக இருக்கிறோமே என்று நொந்து கொண்டாள். அழுகையாக வந்தது.
தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டாள். தான் ஒரு அரைவேக்காடு என்பது அவளுக்கு துலாம்பரமாய் புரிந்தது மாற்றிக் கொள்ள தான் வரவில்லை.
மாற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறாள் ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியவில்லை.
Advertisement
ஜென்மத்தோடு பிறந்தது செருப்பால் அடித்தாலும் மாறாது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அது போல் தான் சுபியும். அவள் வளர்ந்த விதம் அல்லது வளர்த்துக் கொண்ட விதம்.
Advertisement
அவள் இன்னும் உலகத்தை அறியவில்லை. பிறந்த வீட்டிலும் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள் புகுந்த வீட்டிலும் மகாராணியாக நடத்தப்படுபவள் அதனால் தானோ அவளுக்கு நிதர்சனம் புரியவில்லை.
தான் அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் என்று ஒரு நிமிடம் யோசித்தால் போதும் அவள் தன் நிலை உணர்ந்து கொள்வாள்.
வசதியில் பெரியவளா? கல்வியில் பெரியவளா? அறிவில் பெரியவளா? ஆள் மட்டுமே கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறாள் அது ஒரு பெரிய தகுதி அல்லவே…
Advertisement
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் மனைவியை மனுஷியாய் மதித்து நடக்கும் ஆண்கள் இங்கே குறைவு…
பாடப்புத்தகத்தை படித்தால் அறிவு வளர்ந்து விடுமா? வாழ்க்கை புத்தகத்தையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.
“——————–“
கணவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள்.
அவள் சாரி சாரி என்று கேட்டு அனுப்பிய எந்த மெசேஜும் அவன் பார்க்கவில்லை.
கோவை கொடியில் பூச்சிகள் அரிப்பதால் மருந்து வாங்க அவன் கள்ளக்குறிச்சி சென்று விட்டான்.
மதிய உணவிற்கு கூட அவன் வீட்டிற்கு வரவில்லை.
கணவனை காணாது அவள் கலங்கி அமர்ந்திருந்தாள்.
சுபி உட்கார்ந்தே இருக்காதம்மா ஒன்னு ரெண்டு வேலையை செய்! என்றார் பாப்பாத்தி.
பாப்பாத்தி இதுதான் மாமியார் அதிகாரமா? பூமாலை சுருக்கென்று கேட்டார்.
நீங்க சும்மா இருங்க எனக்கு தெரியும்.உட்கார்ந்தே இருந்தா உடம்பு சுகப்படாது.
குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும் அப்போதான் பசிக்கும். சாப்பிடறது ஜீரணமாகும். சுகப்பிரசவம் ஆகணும்னா இப்படி குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்துதான் ஆகணும்!
சரிங்க அத்தை என்று நல்ல பிள்ளையாய் பாத்திரம் தேய்க்க போனவளை தடுத்த பாப்பாத்தி அதை நான் பார்த்துக்கிறேன் நீ வீடு பெருக்கு என்றார்.
மாமியார் சொன்னதை எல்லாம் செய்தாள்.
அவர் நான்கு குழந்தை பெற்றவர் அல்லவா தனது கர்ப்ப கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சுபியும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டாள்.
ஜெயராமன் பிறக்கும் போது எனக்கு பதினாறு வயசு. குழந்தையை தூக்க தெரியாம தூக்கி குழந்தை தலை தொங்கி உரம் விழுந்துடுச்சு!
அய்யயோ அப்புறம்?
குழந்தை துடியா துடிக்கிறான், திறந்த வாய் மூடல. பால் குடிக்கல….னக்கு பால் கட்டிக்கிச்சு.
அப்புறம் தச்சர் தெரு வீராயி கிழவி வந்து பார்த்துட்டு குழந்தைக்கு உரம் விழுந்திருக்குன்னு சொல்லி வேட்டியில் குழந்தையை போட்டு உருட்டி எண்ணெய் வைத்து லேசா கழுத்து வயிறுன்னு நீவி விட்டு…. அப்புறமா தான் குழந்தை அழுகையை நிப்பாட்டினான்.
குழந்தைன்னா கஷ்டம் இல்லத்தை? பயத்துடன் கேட்டாள்.
அப்படி எல்லாம் இல்லை…. குழந்தைனா நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம்னு அர்த்தம்.
நமக்காகவே நாம எவ்வளவு நாள் வாழ்ந்திட முடியும்? வாழ்க்கை போர் அடிக்காம இருக்கணும்னு கடவுள் கொடுக்கிற பரிசு தான் குழந்தை என்று அவளுக்கு புரியும்படி சிரிப்புடன் கூறினார் மாமியார்
ம்ம்ம்ம்ம் என்றாள் மென்மையாய் வயிற்றை நீவியபடி.
“————————“
சாயந்திரம் நான்கு மணி போல் வீட்டிற்கு வந்தான் மன்னர்.
என்னப்பா காலையிலும் சாப்பிடல,மதியமும் சாப்பாட்டுக்கு வரல இப்போதான் உடம்பு சரியாகி இருக்கு ஏன் இப்படி அலையுற? மகனின் உடல் நலனை எண்ணி வருத்தப்பட்டார் பாப்பாத்தி.
காலையிலே வெயிலுக்கு முன்ன மருந்து அடித்தால் தான் பூச்சி சாவும். மருந்து வாங்கிட்டு கள்ளக்குறிச்சியிலே ஹோட்டலில் நாலு இட்லி சாப்பிட்டேன்.
நானும் காத்தானுமா மருந்து அடிச்சு முடியவே இரண்டு மணி கிட்ட ஆயிடுச்சு.
ஒரு விஷயமா கதிர் வீட்டுக்கு போனேன். ஆண்டாள் அத்தை கெட்டியா பிடிச்சுகிச்சு சாப்பிடாம போக கூடாதுன்னு ஒரே அடம். இந்தக் கதிர் பயலும் வம்படியா உட்கார வச்சுட்டான். அத்தை வச்ச வெந்தய குழம்பு அவ்வளவு டேஸ்ட் என்றான்.
தாயுடன் பேசிக் கொண்டிருந்தவனை ஓரமாய் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சுபி.
நீங்க சாப்பிட்டீங்களா? அப்பா சாப்பிட்டாச்சா? உங்க மருமக சாப்பிட்டாளா?
நாங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு என்றார்.
ம்ம்ம்ம்ம்ம் என்று கேட்டுக்கொண்டே கையில் இருந்த பையை தாயிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்.
ஆரஞ்சு,பேரீச்சை, பாதாம் பவுடர் எல்லாம் வாங்கி வந்திருந்தான்.
இந்த சிவப்பரிசி புட்டை கொண்டு போய் உன் புருஷனுக்கு கொடு என்று மருமகள் கையில் கொடுத்து விட்டுப் போனார் பாப்பாத்தி.
குளியல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்டது.
அவன் குளிக்கிறான் என்று கையில் இருந்த பிளேட்டை டேபிளில் மூடிவைத்து விட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் சுபி.
குளித்து உடைமாற்றி வந்தவன் டேபிளில் இருந்த பிளேட்டை கையில் எடுத்துக் கொண்டான்.
அவள் படுத்திருந்த விதம் அவனுக்குள் பிசைந்தது.
உள்ளுக்குள் அவ்வளவு கோபமும் வருத்தமும் மண்டிக்கிடந்தது தான் என்றாலும் மனம் கேட்கவில்லையே…. சுப்பு ஏன் படுத்திருக்க? எழுந்து உட்கார்! என்றான்.
அதற்காகவே காத்திருந்தவள் போல் பட்டென்று எழுந்தமர்ந்தாள்.
ய்யோ என்னடி இப்படி பட்டு படக்குனு எழுந்து உட்காருற…. பதறிவிட்டான்.
ஸாரி என்றாள் அவன் முகம் பார்க்க இயலாமல்.
சரி என்றான்.
ஸாரி என்றாள் மறுபடியும்.
நான் தான் சரின்னு சொல்லிட்டேனே…
நான் ஏன் தான் இப்படி இருக்கேன்னு தெரியல. வேணா நாலு அடி அடிச்சுக்கோங்க என்றவளுக்கு முணுக்கென்று கண்ணீர் அருவி கரைப்புரண்டு தளும்பியது.
ஒரு அடிக்கே தாங்க மாட்ட.. நாலு அடி அடிக்கணுமா?அதுவும் குழந்தை வயித்தில் இருக்கும்போது. சிரிப்புடன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
சாரி என்றாள் வெளி வராத குரலில்.
அதுதான் சரின்னு சொல்லிட்டேனே அவள் தலையில் முட்டினான் ஆதுரமாய்.
எல்லாரும் உங்களை ஆஹா ஒஹோன்னு சொல்றாங்க எனக்கு தான் உங்க அருமை புரியல…. மெய்யான வருத்தம் அவள் குரலில்.
அதுதானே உலக வழக்கம் என்றான் மென் சிரிப்புடன்.
அவள் புரியாமல் பார்க்க…. வெளியில் இருந்து பார்க்கிறவங்களுக்கு தெரியும் அருமை பெருமை வீட்டு மனுஷங்களுக்கு தெரியாது அதை சொல்ல வந்தேன். என்றவன் மீண்டும் சிரித்தான்.
ஒரே நொடியில் அவள் முகம் விழுந்து விட்டது. பாப்பாத்தி அடிக்கடி சொல்வாரே மன்னர் அதிகம் பேச மாட்டான் ஆனால் சுருக்கென்று பேசி விடுவான் என்று.
மனையாளின் வாடிய முகம் கண்டு சுதாரித்துக் கொண்டவன் தன் தோள் வளைவில் அவளை சாய்த்துக் கொண்டான்.நாம அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க. ஸோ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்ல…. நீங்க நல்ல ஹாஸ்பண்டா தான் இருக்கீங்க நான் தான் உங்களை புரிஞ்சுக்கல.
நல்லா யோசித்து பார்த்தால் நான் எந்த வகையிலும் தகுதியானவ இல்லை. நீங்க வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா உங்க வாழ்க்கை நிம்மதியா இருந்திருக்கும் என்று உணர்ந்து கூறினாள்.
எங்கே உட்கார்ந்து யோசித்த? தோட்டத்து மாமரத்தடியிலா? வேப்பமரத்தடியிலா? சிரிப்புடன் ஒரு ஸ்பூன் புட்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான்.
போதும். கொஞ்சம் சாப்பிட்டுட்டேன். தேங்காய் போட்டிருக்கு நிறைய சாப்பிட வேண்டாம்னு அத்தை சொன்னாங்க.
ஓ என்றவன்….. நாலு ஸ்பூன் புட்டு சாப்பிட்டுவிட்டு பிளேட்டை டேபிலில் வைத்தான்.
ரியலி சாரிங்க என்றாள் கட்டிலில் அமர்ந்தவன் கரம் பற்றி.
சும்மா சும்மா ஸாரி கேட்டு கடுப்படிக்காத சுப்பு. உண்மையிலே உணர்ந்திருந்தா இனிமேல் ஸாரி கேட்க கூடிய சூழ்நிலை வராமல் பார்த்துக்கோ அது போதும் என்றான் அழுத்தமாய் அவள் கரம் பற்றி.
“————————-“
இரவு படுக்கையில் அவனை அவ்வளவு நெருக்கிக் கொண்டு படுத்தாள்.
அவளாக நெருங்குவது அபூர்வம்.ஏனோ இன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வந்து விட்டது போலும்.
ஏய்… வயித்தை போட்டு அழுத்தாதேடி! மென்மையாய் கடிந்து கொண்டான்.
அவள் எதுவும் பேசவில்லை அவன் இடையில் கைபோட்டு நெருக்கி படுத்தவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.
அவளுக்கு ஏதோ நெருடல். பாதுகாப்பற்ற உணர்வு என்று உணர்ந்து கொண்டான்.
சுப்பம்மாக்கு என்னாச்சு? என்னம்மா… பிரசவத்தை நினைத்து பயப்படறியா? மெல்ல அவள் தலையை வருடினான்.
ம்கூம் என்று மறுப்பாய் தலையசைத்தாள்.
அம்மா வீட்டுக்கு போகணுமா? அவள் கரம் பற்றி தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான்.
அவசரமாய் இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
நீங்க சொன்ன மாதிரி இனிமேல் சாரி கேட்க வேண்டிய சூழ்நிலை வராமல் இருக்கணுமேன்னு பதட்டமா இருக்கு. திரும்ப ஏதாவது சொதப்பிடுவேனோன்னு பயமா இருக்கு.
சரி அப்படியே சொதப்பிட்டாதான் என்ன? புருஷன் பொண்டாட்டினா சண்டை சச்சரவு இல்லாமல் வாழ முடியாது. அப்படி வாழணும்னா சினிமாவிலும் கதைகளிலும்தான் சாத்தியம்.
ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ…. நமக்குள்ள எந்த பிரச்னை வந்தாலும் இந்த ஜென்மத்துல உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவுதான்.
நான் ஏதாவது அதிக பிரசங்கி தனம்மா பண்ணிட்டா மறுபடியும் கோவிச்சுக்குவீங்களா? பயத்துடன் கேட்டாள்.
ஆமா கண்டிப்பா கோவிச்சுக்குவேன் ஆனா சுப்பம்மாவை வெறுத்திட மாட்டேன். அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தான்.
அவன் பேச்சில் ஓரளவு தெளிந்தாள். உண்மையில் அவளுக்குள் இருந்த பயம் அது தான். தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவானோ என்ற பயம்.
இப்போது மன நிம்மதியுடன் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
நம்ப முடியலையே…. சுப்பு இன்னைக்கு ஒரு தினுசா இருக்காளே…. டாக்டர் வேற மூனு மாசத்துக்கு கவனமா இருக்க சொல்லி இருக்காங்களே… மன்னரு என்னடா உனக்கு வந்த சத்திய சோதனை… ரகசியமாய் பேசி முத்தமழை பொழிந்தான்.
கட்டிலில் கூட அவளை கண்ணியமாய் நடத்தும் மன்னாதி மன்னன் அவன். அவளுக்கு விருப்பம் இல்லை என்று லேசாய் அதிருப்தி கொண்டு ம்ச் என்று சத்தம் கொடுத்தால் தீண்டவே மாட்டான். அவள் உணர்வுகளுக்கு அவ்வளவு மதிப்பளிப்பான்.
அவளிடம் சோர்வு தெரிந்தால் அவளை நாட மாட்டான்.
அவள் கண்களைக் கொண்டே அவள் உணர்வுகள புரிந்து கொள்வாள். அவளுக்குத்தான் அந்த புரிதல் இன்னும் கை வரப் பெறவில்லை.
கணவனை எண்ணி அவளுக்கு கர்வமாக தான் இருந்தது. “சோத்துக்கு சண்டை வராத வீட்டில் கூட சுகத்திற்காக சண்டை வரும்” என்று கேள்விபட்டிருக்கிறாள்.
ஆசை பொங்க கணவனின் நெற்றியில் இதழ் பதித்தவள் நிறைய பொண்ணு பார்த்தாங்ககளாம் வேண்டாம்னு சொல்லிட்டீங்களாமே…. என்னை எப்படி ஓகே பண்ணீங்க? அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்துக் கொண்டாள். ஏனோ இன்று அவளுக்கு அவ்வளவு ஆர்வம் அதை தெரிந்து கொள்ள.
இதை கேட்க உனக்கு நாலு மாசம் ஆகியிருக்கு? குறும்புடன் கண்சிமிட்டினான்.
சமாளிக்காம பதிலை சொல்லுங்க போலீசு! விடை தெரிய வேண்டி பரபரத்தாள். எல்லா பெண்களுக்கும் இருக்கும் கேள்வி தானே அது!
நீ செம்ம பிகருன்னு தான் என்றான் சிரிப்புடன்.
ஹைய்ய…. இந்த மொக்கை தானே வேண்டாங்கிறது, வெட்கத்துடன் அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்.
எனக்கு அழகான சுப்புவை விட மனிதபிமானம் கொண்ட சுப்புவை ரொம்ப பிடிச்சுது என்றான். அவளை மென்மையாய் அணைத்தபடி.
புரியல என்பது போல் பார்த்தாள்.
சொல்லிடவா? அவள் ஆர்வத்தை தூண்டினான்.
சொல்லுங்க!
சொல்லட்டுமா? கண் சிமிட்டினான்.
அய்யோ உங்களை… சிணுங்களுடன் அவள் அடிக்க தொடங்கினாள்.
ஏய்… நோ வயலன்ஸ்… கைகளை தூக்கி சரண்டரானான்.
இப்போ சொல்லுவீங்களா? மாட்டீங்களா? பாவமாய் கேட்டாள்.
அவள் கேட்ட விதமும் அவள் முக பாவமும் அவனை என்னவோ செய்தது!
போடி என் வீக்னஸ் நீதான்! ஏதோ ஒரு விதத்துல மன்னரை சாய்த்து விடற… பெருமையாய் சலித்துக் கொண்டவன்
இரு வரேன் என்று மெல்ல அவளை விலக்கி கபோர்ட் திறந்து ஒரு துணியை அவளிடம் நீட்டினான்.
அது கருநீல வண்ணமும் வெள்ளையும் கலந்த காட்டன் ஷால்.
இது…. யோசனையுடன் அவனை பார்த்தாள்.
அவன் சிரிப்பு பொங்க அவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.
சட்டென்று மின்னல் வெட்டியது. இந்த ஷாலுக்காகவே அந்த சுடிதார் வாங்கியவளாயிற்றே.
கருநீல வண்ணம் கொண்ட ஷாலில் அலை அலையாய் வெள்ளை நிறம் விரவியிருந்த டிசைன் அவளுக்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது.
அடியேய் ஷாலுக்காக சுடிதார் வாங்குவாங்களா? பேண்ட் மெட்டிரியல் ஒர்தா இல்லை என்று தேவிகா திட்டினாள்.
போக்கா எனக்கு பிடிச்சிருக்கு என்று வம்பு செய்து வாங்கினாள்.
காலேஜில் தோழிகள் எல்லாம் ஷால் சூப்பரா இருக்கே… உனக்கு மட்டும் எப்படி டிசைன்ஸ் கிடைக்குதோ என்று பாராட்டினார்களே…
இது உங்க கையில…. அவள் திகைப்புடன் நெற்றியில் கோடு விழ யோசனையில் ஆழ்ந்தாள்.
—————-தொடரும் ———-
தொடர்ந்து இந்த கதைக்கு ஊக்கம் கொடுத்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் சித்துவின் நெஞ்சார்ந்த நன்றி. இது ஒரு சாதாரண கதை. என் கதைகளில் அழுத்தமான காதல் காட்சிகளோ, விருவிருப்பான திருப்பங்களோ, மிகப்பெரிய வர்ணனைகளோ இருக்காது.ஆனாலும் தொடர்ந்து இந்த கதைக்கு கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு நன்றி 🙏. எளிமையாக எழுதுவது தான் எனது வழக்கம். நீங்களும் நானும் பேசினால் எப்படி இருக்குமோ எனது வசனம் அப்படித்தான் இருக்கும்.இந்த கதைக்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் நான் எதிர்பாராதது. இந்த எபிசோடு குட்டி பிளாஷ்பேக். என் கதைகளில் கண்டிப்பாக பிளாஷ்பேக் இருக்கும் அது கனமானதாக இருக்கும். பிளாஷ்பேக் தான் கதையை நகர்த்திச் செல்லும். இந்த குட்டி பிளாஷ்பேக்கும் கவித்துவமாக இருக்கும் என்று நம்புகிறேன். படித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.
error: Content is protected !!