Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி- இறுதி அத்தியாயம்

யாதுமாகி #40

 வினிதா கதவை தட்டி விட்டு அறையின் வாயிலில் தயங்கி நின்றாள்.

 வாம்மா ஏன் வெளியில் நிற்கிற? தங்கையை அழைத்தான்.

 ஓடி வந்தவள் அண்ணனின் மடியில் முகம் புதைத்தாள்.



Advertisement

 அண்ணா ஸாரி அண்ணா…அம்மா பேசினது மன்னிக்க முடியாத குற்றம். நான் அவங்க பேசினதை அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி சப்போர்ட் பண்ணல.

 நாம அன்னலட்சுமி பாட்டி வளர்ப்பு அண்ணா.நம்ம சிந்தனை,பேச்சு, பழக்க வழக்கம் எதிலுமே குற்றம் குறை இருக்காது.

சத்தியமா நான் அண்ணியை சந்தேகப்பட்டது இல்லை. அண்ணி அம்மாவுக்கு சமம் என்று சொல்லுவாங்க.நான் நேத்ரா அண்ணியை அம்மாவை விட ஒரு படி மேல வச்சு தான் பார்க்கிறேன்.

Advertisement

 வினி நான் உன்னை குற்றம் சொல்லலை. நடந்தது உனக்கும் தெரியும்! அந்த அர்த்தத்தில் பேசிட்டேன்.நீ வருத்தப்படாதடா மனசுக்கு கஷ்டமா இருக்கு.

Advertisement

 அண்ணா நிஜமாவே நீ என்னை தவறாக நினைக்கல தானே…? வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

 இல்லம்மா கண்டிப்பா இல்ல.. நீ என்னோட ரத்தம், என்னோட தங்கை,உன்கிட்ட குற்றம் குறை இருக்காதுடா. அவள் முகம் நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டான்.

 அண்ணா நான் சாகுற வரைக்கும் எனக்கு உன்னோட உறவு வேணும்.அப்பாக்கு பிறகு என் பிறந்த வீட்டு சொந்தம் நீ மட்டும் தானே…

Advertisement

நீயும் அண்ணியும் வந்து நின்றால் தான் என் வீட்டு விசேஷத்தில் சபை நிறையும்.

 இந்த ஆஸ்தி அந்தஸ்தை விட என் பிறந்தவன் உறவு தான் எனக்கு பெருசு! மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 வினி எனக்கு என் இரண்டு தங்கைகளும் இரண்டு கண்கள்.

 உனக்கு எப்பவுமே அண்ணன் இருக்கேன்டா. அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

எனக்கு தெரியும் எங்க அண்ணன் மனசு பத்தி… அண்ணனை கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள்.

தியா எங்கே?

அவங்க அப்பா,பாட்டி கூட விளையாடறா..

மாப்பிள்ளை வந்திருக்காரா?

 ஆமா…எங்க மாமியாரும் வந்திருக்காங்க.

எனக்கு தெரியலையே… வா போய் பார்ப்போம்!

 அண்ணா நாங்க ஊருக்கு கிளம்புறோம்!

 என்னடா… இந்நேரத்துலயா?

டிரைவர் இருக்காருண்ணா.

சரி வா.. போய் வந்தவங்களை கவனிப்போம்! தங்கையை கரம் பற்றி அழைத்து சென்றான்.

 சந்தோஷ் கௌரியிடம் நலம் விசாரித்தான்.

 ஆன்ட்டி நீங்க சன்டே தான் கிளம்பனும் சொல்லிட்டேன். மாப்ள நீங்க உங்க ஆபீஸில் லீவ் சொல்லிடுங்க! உரிமையாய் கட்டளையிட்டான்.

இல்ல விஷ்ணு லீவு இல்ல… முக்கியமான ப்ராஜெக்ட் டெட்லைனில் இருக்கு. சந்தோஷ் தடுமாறினான்.

ஹலோ மாப்பிள்ளை,மாமியார் வீட்டுக்கு வந்துட்டு ஒரு வேளை சாப்பிட்டு எஸ்கேப் ஆகிடணுமா? லாஸ் ஆஃப் பே போடுங்க.கண் சிமிட்டி சிரித்தான்.

மைத்துனனும், மாப்பிள்ளையும் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்கு சென்றனர்.

 குழந்தைக்கு அன்ன பிரசன்னம் பண்ணும் போது ஜோதி பிரச்சனை பண்ணியது,நேத்ரா கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றது வரை சந்தோஷிற்கு தெரிந்திருந்தது.

விஷ்ணு மூன்றாவது முறையாக அதே கதையை சந்தோஷிடமும் பிணைந்தான்.

சந்தோஷிற்கும் மாமியாரை பற்றி தெரியும் என்பதால் விஷ்ணுவின் பேச்சை ஆமோதித்தான்.

 விஷ்ணு இது எல்லாம் நீங்க எனக்கு சொல்லவே வேண்டாம். இது உங்க குடும்ப பிரச்சனை. தெளிவாக பதில் உரைத்தான் சந்தோஷ்.

பிரச்சனைன்னு எதுவும் இல்லை.கொஞ்சம் தள்ளி நின்று உறவாடினா லேடிஸ்குள்ள மனஸ்தாபம் வராது இல்லையா? அதுக்கு தான் இந்த முடிவு.

எங்க முடிவு பார்த்து நீங்க தவறா எதுவும் நினைச்சிடக் கூடாது இல்லையா… வீட்டு மாப்பிள்ளை உங்களுக்கு இதை சொல்லணும். அதுதானே முறை.

உண்மையிலேயே ஹேப்பியா இருக்கு விஷ்ணு.நல்ல முடிவு. என்ஜாய்!தம்சப் காண்பித்தான் சந்தோஷ்.

“——————”

 யாரும் ஜோதியுடன் பேசுவதில்லை. வேலைக்காரர்கள் வரைக்கும் ஜோதியின் பேச்சு அரசல் புரசலாக தெரிந்திருந்தது.

 இதெல்லாம் ஒரு பொம்பளையா? தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

சென்னையில் படிக்கும் இளைய மகள் அஸ்விதா ஜோதிக்கு போன் செய்து கண்ணாபின்னாவென்று திட்டி தீர்த்தாள்.

 நீ ஏம்மா இன்னும் வறட்டு கௌரவம் பார்த்துட்டு இருக்க? மனுஷன் அடுத்த கிரகத்திற்கு குடியேற ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்.இந்த காலத்திலும் வசதி, அந்தஸ்து, அது இதுன்னு இத்துப்போன காரணத்தை சொல்லிட்டு இருக்க.

நீ பேசின பேச்சு சாகுற வரைக்கும் மறக்காது. அண்ணன் உன்னை ஜென்மத்துக்கும் மன்னிக்காது. என்னமோ பண்ணி தொலை! நாய் வலை நிமிர்த்த முடியாது.

 ஆனா ஒன்னு அண்ணன் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏத்துப்போம்.

விஷ்ணு அண்ணா எதையும் சரியாதான் செய்யும். எனக்கு அண்ணன் முக்கியம். நீ என்னை கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை மா, கடகடவென பொறிந்து விட்டு போனை வைத்து விட்டாள் இளைய மகள்.

“—————-”

 விஷ்ணு வீட்டுக்கு அதிகம் வருவதில்லை. வாரம் இரண்டு மூன்று முறை மாமியார் வீட்டுக்குபோய் விடுவான்.கேஸ் விஷயமாக வெளியூர்களுக்கு சென்றுவிடுவான். பாட்டி,அப்பாவை பார்க்க தோன்றும் போது மட்டுமே வீட்டுக்கு வருவான்.

எப்படி இருந்த குடும்பம், பாவி மக இந்த குடும்பத்தோட சந்தோஷத்துக்கு குழி வெட்டிட்டாளே….ஒத்த பிள்ளை வாழ்க்கையை சந்தோஷமா வாழ விடலையே…இவ போய் தொலைந்தாலாவது என் பேரன் வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும். வாய்விட்டு பொறுமினார் அன்னம்.

அரண்மனை போன்ற இந்த வீட்டுக்கு வாரிசு.இந்த வீட்டில் கிளை கிளையாய் தழைத்து வாழ வேண்டியவன் வீட்டிற்கு வரவே விரும்பவில்லையே…..என் மகன் மனசு எவ்வளவு கொதிக்கும்? எண்ணி எண்ணி ரத்தக்கண்ணீர் வடித்தார் வேணு.

“—————-”

 விஷ்ணு என்ன தான் மெனக்கெட்டு தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாலும் கணவனின் மனதில் ஏதோ இருக்கிறது என்று நேத்ரா உணர்ந்துதான் இருந்தாள்.

சொல்லக்கூடிய விஷயம் என்றால் கண்டிப்பாக சொல்லி இருப்பார் நான் சங்கடப்படுவேன் என்று எண்ணியே தவிர்த்து இருக்கிறார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

 என்ன ஏது என்று தோண்டி துருவி, கிண்டி கிளறி கணவனை நோகடிக்கும் சராசரி மனைவியாக அவள் இருக்கவில்லை.அவன் போக்கில் விட்டு விட்டாள்.

உறங்காத இரவுகளாகவும் விடியாத பொழுதுகளாகவும் ஜோதியின் நாட்கள் நெருஞ்சில் முள் போல் ஆனது.

உணவு குறைந்து, உறக்கம் குலைந்து, உடல் மெலிந்து போனார் ஜோதி.

அவரின் பிறந்த வீட்டு உறவுகளும் அவர் பேசியது தவறு என்று குற்றம் சாட்டினர். விஷ்ணுவை பகைத்துக்கொள்ளாதே என்று அவருக்கு உபதேசம் செய்தனர்.

 தன் புறம் யாருமில்லை என்று எண்ணும்போது அவருக்கு வாழ்க்கை சூனியமாக தெரிந்தது. எல்லார் மீதும் கோபம் வந்ததே தவிர தான் பேசியது தவறு என்று ஒரு நொடி கூட அவருக்கு உரைக்கவே இல்லை.

“——————-”

 வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. சுரேன்,வாசு என்று மாறி மாறி வந்து பார்வையிட்டனர்.சில திருத்தங்களை சொல்லி சென்றனர்.

 என்ன நடக்குது இங்கே? யாரை கேட்டு இந்த முடிவு எடுத்து இருக்கான்? ஜோதி கூடத்தில் நின்று கூப்பாடு போட்டார்.ஒரு ஈ,காக்கா கூட என்னவென்று கேட்கவில்லை.

அழுகையிலும்,அவமானத்திலும் சுருண்டு படுத்தார்.

என் கதி தான் என்ன? என்னை ஒதுக்கி வைத்து விட்டார்களா? நான் யாருக்கும் தேவையில்லாதவளாகி போனேனா… குலுங்கி குலுங்கி அழுதார்.

“——————-”

 நேரம் சரியில்லை அது இதுன்னு பசப்புறார் மாப்பிள்ளை. நிச்சயம் ஏதோ நடந்திருக்கு. இல்லைனா இத்தனை நாள் நேத்ரா இங்கே இருக்க அவர் சம்மதிக்கவே மாட்டார். சரியாக யூகித்து பாயிண்டை பிடித்தார் வெங்கி.

 எதுவா வேணா இருக்கட்டும். அது அவங்க குடும்ப விவகாரம்.அதை நாம கண்டுக்க கூடாது. கணவரிடம் கட்டளையாய் சொல்லிவிட்டார் வேதம்.

இல்லாட்டா மட்டும் உன் மாப்பிள்ளை வாயை திறந்து என்ன ஏதுன்னு சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பார். வெங்கி நொடித்துக் கொண்டார்.

 நம்ம கிட்ட சொல்லி ஆகப்போவது என்ன?அவங்க புருஷன் பொண்டாட்டி சந்தோஷமா இருந்தா சரி என்றார் வேதம்.

“—————-”

 நேத்ரா நாம சனிக்கிழமை திருநள்ளாறு போறோம். உங்க அம்மா அப்பா வராங்களா கேளு…?குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த கணவனின் பேச்சில் அவனையே உறுத்து பார்த்தாள் நேத்ரா.

 போறோம்னா….?அத்தை,மாமா பாட்டியெல்லாம் வராங்களா?

 இல்லை… வாசு, சுரேன் ஃபேமிலியோட வராங்க.

அவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.ஆனால் உள்ளுக்குள் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. இருந்தாலும் இந்த மனுஷனுக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாது… என்று புகைந்து கொண்டு இருந்தாள்.

“—————-”

 விஷ்ணு குரல் கேட்ட மாத்திரம் வேகமாய் வெளியில் வந்தார் ஜோதி.

விஷ்ணு தந்தைக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அன்னம் ஈசி சேரில் சாய்ந்து கொண்டு அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாரும் உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நான் ஒருத்தி இந்த வீட்ல இருக்கேன்.இன்னும் உயிரோடு தான் இருக்கேன்.அவன் தான் இள இரத்தம் முறுக்கிட்டு அலையறான், பெரியவங்க நீங்க ஒத்து ஊதிக்கிட்டு இருக்கீங்களா?குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும் என்று புத்திமதி சொல்றத விட்டுட்டு அவனுக்கு தூபம் போட்டு விடறீங்க.

 அவன் எதுக்கு தனிக்குடித்தனம் போகணும்? நான் பெத்தவ…ஏதோ புத்தி பேதலிச்சு கூட குறைய நாலு வார்த்தை பேசிட்டேன். அதை சகிச்சுக்க முடியாதா? அதுக்கு தனி குடித்தனம் போயிடுவானா?

 அவன் தனி குடித்தனம் போக  நான் விடமாட்டேன்.

 இந்த சொத்து, சுகம் எல்லாம் யாருக்காக? இவன் ஒருத்தனுக்கு தானே…ஜோதி வியாக்கியானம் பேச…

 அப்பா நாளைக்கு திருநள்ளாறு போறேன்.“பிடித்த சனி ஒழியட்டும்னு தலை மூழ்க போறேன்!” விறுவிறுவென கிளம்பி வெளியில் போனான்.

அவன் தன்னை தான் பிடித்த சனி என்று சொல்கிறான் என்று புரியாதவர் இல்லை ஜோதி.

“—————-”

 வெங்கியும் வேதமும் மகளை கணவனோடு கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

 விஷ்ணு குடும்பத்தோடு நண்பர்கள் குடும்பமும் சேர்ந்து கொள்ள வேன் திருநள்ளாறு நோக்கி பயணித்தது.

 கருப்பு வஸ்திரம் அணிந்து, தலைக்கு நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் தேய்த்து நளதீர்த்தத்தில் நீராடினர் நேத்ராவும் விஷ்ணுவும்.

 நீராடி பீடை கழித்து, வெள்ளை எருக்கு திரியிட்டு ஒன்பது தீபம் ஏற்றி தர்பாரண்யஸ்வேவரை வழிபட்டு,பிரசாதமாக கொடுத்த எள்ளு சாதம் வாங்கி சாப்பிட்டு நண்பர்கள் குடும்பத்துடன் அரட்டை அடித்து கவலை மறந்தான் விஷ்ணு.

 அவனுக்கு இந்த வழிபாடு மன அமைதியையும், தெளிவையும் கொடுத்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவன் முகத்தில் ஒளியை கண்ட நேத்ராவின் முகமும் மிளிர்ந்தது.

“——————”

 குரு பெயர்ச்சி முடிந்த மறுநாள் நேத்ரா, குழந்தையோடு வீட்டுக்கு வந்தான்.

 போர்டிகோவில் காரை நிறுத்தியவன் நேத்ரா இந்த பக்கம் வா! என்று தோட்டத்தை சுற்றி பின்பக்கம் அழைத்து சென்றான்.

 இங்கே எதுக்கு? என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்க?வியப்பாய் கேட்டாள்.

மூன்றாவது தளத்திற்கு செல்ல பின் வாசல் வழியே படிக்கட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

என்னங்க இதெல்லாம் புதுசா இருக்கு? புரியாமல் பார்த்துக் கொண்டே மாடி ஏறினாள்.

 மூன்றாவது தளம் பெயிண்ட் அடிக்கப்பட்டு ரம்யமாய் இருந்தது.

பெயிண்ட் எல்லாம் பண்ணி இருக்கீங்க சொல்லவே இல்லை? கோபமாய் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

ஹாலில் சோபா, டிவி வைக்கப்பட்டிருந்தது.

கீழ்த்தளத்தை தவிர எங்கும் கிச்சன் இல்லை. இப்போது மூன்றாவது தளத்தில் மாடுலர் கிச்சன் தயாராகி இருந்தது. சமையலறைக்கு தேவையான அனைத்தும் இடம்பிடித்து இருந்தது.

 என்னங்க இதெல்லாம்? புரியாமல் கேட்டாள்.

உள்ளே போய் பார் புரியும்!என்றான்.

 நேத்ராவின் சீர்வரிசை பாத்திரங்கள் அங்கே அடுக்கப்பட்டு இருந்தது.

 அவர்கள் படுக்கை அறை மட்டுமே அட்டாச்டு பாத்ரூம் கொண்டதாக இருக்கும். இப்போது அனைத்து அறைகளும் அட்டாச்டு பாத்ரூம் வசதி கொண்டதாய் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

ஒரு அறையில் அன்னம் பாட்டியின் உடைமைகள் இருந்தது.

பிளைவுட் வைத்து சிறிய பூஜை அறை தயார் செய்யப்பட்டு புதிய சாமி படங்கள் மாட்டப்பட்டு இருந்தது.கூடவே பொன்னுசாமி கவுண்டர் படமும் சந்தன மாலையுடன் காட்சியளித்தது.

 நேத்ராவிற்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது, கொஞ்சம் புரியாமலும் இருந்தது.

 என்ன ஆச்சு? புருவம் உயர்த்தி ஒற்றை வார்த்தையில் கேட்டாள்.

ஒன்னும் ஆகல… கொஞ்ச நாளைக்கு நாம தனி குடித்தனம் இருக்கலாம். எங்கோ பார்த்தபடி கூறினான்.

 எதுக்கு தோணுச்சு?

இதென்ன கேள்வி? தோணுச்சு வந்துட்டோம்… தோளை குலுக்கினான்.

 பாட்டி இங்கே…நம்ம கூடவா?

 அவங்க நம்ம கூட தான் இருப்பேன்னு பிடிவாதமா சொல்றாங்க…என்ன செய்ய? சாதாரணம்போல் சொன்னான்.

 நேத்ரா நல்ல நேரம் முடியறதுக்குள்ள பால் காய்ச்சும்மா! அன்னம் பாட்டி பால் சொம்புடன் வந்து நின்றார்.

பேரனை என்கிட்ட கொடுத்துட்டு போம்மா. வேணு வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.

நேத்ரா பால்காய்ச்சி பூஜை அறையில் வைத்து சுவாமிக்கு தீபாராதனை செய்ய… அனைவரும் மனமுருக வழிபட்டனர்.

 அனைவரும் பால்குடித்து விட்டு ஒருவர் முகம் மற்றொருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

பாட்டி சமையலுக்கு ஆள் சொல்லி இருக்கீங்களா?

ம்ம்ம்ம்….கொஞ்ச நேரத்தில் மேலவீதி கோணையன் பொண்டாட்டி சுபத்ரா வருவா.

சைவம் அசைவம் ரெண்டுமே நல்லா சுத்த பத்தமா செய்வா. சமையல் காண்ட்ராக்டில் வேலை பார்த்தவ. மாசம் ஆறாயிரம் கேட்கிறா.

இருக்கட்டும் பாட்டி கொடுத்துடுவோம்!

 சமையலுக்கு ஆள் வேண்டாம் பாட்டி நானே சமைக்கிறேன், நேத்ரா ஆர்வமாய் கூறினாள்.

எனக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்ற ஜோக் இது இல்ல. எங்க உயிர் சம்பந்தப்பட்டது…விஷ்ணு நெஞ்சை பிடித்துக் கொண்டு சொல்ல நேத்ரா உட்பட அனைவரும் சிரித்து விட்டனர்.

 பருத்தி எடை போட சேலத்திலிருந்து ஒரு பார்ட்டி வருது. நான் குடோனுக்கு கிளம்பனும் என்று வேணு எழ அப்பா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று மனைவியை இழுத்துக்கொண்டு அவர் பாதம் பணிந்தான்.

இனிமேலாவது நிம்மதியா, சந்தோஷமா இருங்க என்று மனதார வாழ்த்தினார்.

 அன்னம் பாட்டியிடமும் ஆசி பெற்றுக் கொண்டனர்.

“——————”

 இரவு படுக்கையில் யோசனையினூடே படுத்திருக்கும் மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டான்.

நெடுங்காலம் தொலைத்த நிம்மதியை மீட்டெடுத்தார் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு.

  அவன் கண்களில் தெரிந்த சாந்தம் முகத்தில் தெரிந்த நிம்மதி நேத்ராவிற்கு ஏதோ ஒரு குறிப்பை உணர்த்தியது.

என்ன என் தேவியார் மண்டைக்குள்ள ஏதோ குறுகுறுன்னு உருட்டி விளையாடுது? அவள் கன்னம் பற்றி லேசாக கிள்ளினான்.

என் யோசனை என்னன்னு உங்களுக்கு தெரியாத மாதிரி கேக்குறீங்க? கோபமாய் முறைத்தாள்.

 எதுக்கு தனிக்குடித்தனம் வந்தோம்னு கேட்டால் நேரம் சரியில்லை என்று சொல்ல போறீங்க அவ்வளவுதானே? எள்ளலாய் கேட்டாள்.

அதேதான்….உனக்கே பதில் தெரிந்திருக்கே! அவள் முகத்தை மீட்டியது அவனது ஆட்காட்டி விரல்.

 சரி உங்க பதிலை நம்பிட்ட மாதிரி நடிக்க முயற்சி பண்றேன். ஏன்னா நீங்க எது செய்தாலும் என் நல்லதுக்கு தான் செய்வீங்க! காதலுடன் அவன் விழி நோக்கினாள்.

தேங்க்ஸ்…. இந்த நம்பிக்கையை உயிருள்ளவரை காப்பாற்ற முயற்சி பண்ணுவேன்.அவள் இமை குடை மீது முத்தம் வைத்தான்.

 நான் தான் வேண்டும் என்று என்னை விரும்பி வந்தவளை நான் கஷ்டப்பட விடுவேனா?

 இவனையா காதலித்தோம்? இவனை கட்டிக் கொள்ளவா ஒத்தை காலில் நின்றோம்? என்ற நினைப்பு உனக்கு வராதபடி உன்னை பார்த்துக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

 குழந்தை பால் மறந்த உடனே மேற்கொண்டு படிக்கிறதுனாலும் சரி, வேலைக்கு போறதுனாலும் சரி உன் விருப்பம்.

 என்ன லாயர் சார் இவ்வளவு மாற்றம்?கொஞ்சம் கிள்ளுங்க! இது நிஜம் தானான்னு கன்பார்ம் பண்ணிக்கிறேன். அவன் மார்பில் கோலமிட்டாள்.

நறுக்கென்று அவள் கன்னத்தில் கடித்து நிஜம் என்பதை உணர்த்தினான்.

ஸ் ஆ…. கோபமும் வெட்கமும் அவளுக்கு போட்டியிட்டது.

உனக்கு யாதுமாகி இருக்கணும் என்கிறது தான் நம்ம காதலுக்கு நான் செய்யும் மரியாதை.

 எனக்கு நீங்க யாதுமாகி நிற்பீங்கன்னு உங்களை முதன் முதலா பார்த்தபோதே முடிவு பண்ணிட்டேன்.

 அதன் பிறகு காரணம் என்னவென்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை.

“——————–”

 மரங்களின் சலசலப்பில் மாமரத்து அடியில் சுகமான காற்றை நுகர்ந்து கயிற்று கட்டிலில் படுத்து ஆகாயம் பார்த்த வேணுவிற்கு மனம் அவ்வளவு அமைதியாக இருந்தது.

அன்று விஷ்ணு சொன்னவுடன் உடல் அதிர்ந்தது. இன்று நிம்மதியாக இருக்கிறது.

 அப்பா இனியும் ஒரே குடும்பமாக இருக்கிறது சரியா வராது. நான் தனிக்குடித்தனம் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

 என்னப்பா இப்படி சொல்ற? வேணு பதறினார்.

 எங்களை விட்டு போறதா முடிவு பண்ணிட்டியா? தழுதழுத்தார்.

அப்பா என் சம்பாத்தியத்தில் என் பொண்டாட்டி பிள்ளையை வைத்து என்னால் வாழ முடியும்! சுரேன் வீடு கீழ் போர்ஷன் காலியாயிருக்குன்னு சொல்றான்.ஆனால் நான் அங்கே போக போறது இல்லை. நம்ம வீட்டிலேயே மாடியில் தனியாக இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

 உண்மையை சொல்லனும்னா எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை. என்னை உயிரா வளர்த்த பாட்டிக்காக பார்க்கிறேன். இந்த வயசுக்கு மேல் ஊரு விட்டு ஊரு கூட்டிட்டு போய் அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல.

 நீ எங்கே போனாலும் என்னையும் கூட்டிட்டு போன்னு சொல்றவங்களை எப்படி விட்டுப் போக முடியும்?

பாட்டி மூச்சுக்கு பிறகு கண்டிப்பா இங்கே இருக்கமாட்டேன். விழியில் திரண்ட நீருடன் குரல் அடைத்து நின்ற மகனை காண சகிக்கவில்லை வேணுவிற்கு.

உன் இஷ்டம் போல் செய் ராஜா என்றார் இயலாமையுடன்.

நேரம் சரியில்லை கொஞ்ச நாள் விலகி இருக்கனும்னு நேத்ராக்கு சொல்லி இருக்கேன்.இதையே ஊருக்குள்ள யாரு கேட்டாலும் சொல்லுங்க!

 பாட்டிக்குப் பிறகு பிரணவ் படிப்பை காரணம் காட்டி நான் வெளியில் போயிடுவேன்.

போயிடுவியா? அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா… ஜோதி ஆவேசமாய் பின்னால் நின்று கத்தினார்.

 விஷ்ணு நீ போ! மகனை அனுப்பிவிட்டு மனைவி புறம் திரும்பினார்.

 இந்த வயசுக்கு மேல் உன்னை டைவர்ஸ் பண்ணி குடும்ப மானம் காத்துல பறக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.

 இனி என் மகன் விவகாரத்தில் நீ வாய் திறக்கவே கூடாது. அதிகம் பேசின கொன்னு மாட்டிடுவேன் ஆட்காட்டி விரலை உயர்த்தி எச்சரித்துவிட்டு போனார்.

“——————-”

 நேத்ரா அன்னம் பாட்டியிடம் துருவி துருவி கேட்டு பார்த்தாள்.

அவர் விஷ்ணுவிற்கு பாட்டி அல்லவா அவரிடம் இருந்து எந்த தகவலையும் பெயர்க்க முடியவில்லை.

 சின்னஞ்சிறுசுக சந்தோஷமா இருக்கட்டுமேன்னு பெரியவங்க நாங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தோம் என்று சொன்ன பதிலையே வெவ்வேறு மாடுலேஷனில் சொல்லி வெறுப்பேற்றினார்.

திருடி… பேரன் சொன்னதில் நம்பிக்கை இல்லாம பாட்டியை விசாரிக்கிறியா?அவள் காதை பிடித்து திருகினான் விஷ்ணு.

நம்பிக்கை இல்லாம இல்லை, ஒரு ஆர்வக்கோளாறு தான். கண்சிமிட்டி சமாளித்தாள்.

ஆர்வக்கோளாறு தானே…வா நான் தெளிவுப்படுத்துறேன். இடையோடு இறுக்கிக்கொண்டு பள்ளி அறைக்கு சென்றான் காதல் பாடம் படிக்க.

“—————”

 வெங்கி வேதம் தம்பதியருக்கு நேத்ரா நிம்மதியாய் தனிக்குடித்தனம் போய்விட்டாள் என்ற செய்தி மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது. மாப்பிள்ளை மீது அளவற்ற மரியாதை கூடியது.

நேத்ராவும் மாமியார் வீட்டுக்குப் போவதில்லை, ஜோதியும் இவர்கள் வீட்டிற்கு வருவதில்லை.

 மங்கலம், சுபத்ரா யாராவது குழந்தையை வைத்துக்கொண்டு தோட்டத்தில் விளையாடினால் ஜோதி ஏக்கமாய் பேரனை பார்ப்பார். கலங்கும் விழியை யாரும் அறியாமல் மறைத்துக் கொண்டு கெத்தாக போய்விடுவார்.

 உடல் இளைத்து, கண்கள் இடுங்கி அவர் தோரணை மாறியிருந்தாலும் கர்வம் மட்டும் இம்மியும் குறையவில்லை.

அவருக்கு மன்னிப்பு கேட்க மனமில்லை, விஷ்ணுவும் மறந்து மன்னிக்க தயார் இல்லை. காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

“—————–”

 வினிதா அஸ்விதா ஊருக்கு வந்தால் அண்ணன் வீடே கதி என்று இருந்தனர்.

 நேத்ரா தாய்போல் நாத்தனார்களை அரவணைத்து சிறப்பான விருந்து உபசாரம் செய்து அவர்கள் மனம் கோணாது வேண்டியது செய்து அனுப்புவாள்.

 ஜோதியால் மகள்களை கண்டிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலவில்லை. மகள்கள் இருவரும் முகம் கொடுத்து பேசினால் தானே? தாயை அவ்வளவு வெறுத்தனர்.

 லிட்ரேச்சர் மேம்… இப்படி முழு நேர குடும்பத் தலைவியா மாறிட்டா எப்படி?கொஞ்சம் புருஷனையும் கவனிக்கிறது… மையலுடன் இழுத்தணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

நான் கவனிக்காமலா எழுபத்தாறு கிலோ இருக்கீங்க? அவனை சீண்டி விட்டாள்.

 அடியேய்….நீ இவ்வளவு மக்கா இருந்தா நீ வளர்ந்த மாதிரி பிரணவும் சிங்கிளா தான் வளரனும்! அவள் இடையில் சிற்றெறும்பாய் ஊர்ந்தது அவன் தந்த விரல்கள்.

வெயிட்….அடுத்து என்ன சொல்ல போறீங்கன்னு நான் சொல்றேன்.

 ஆல்ரெடி முப்பத்தொன்னு ஆகுது. என் பிரெண்ட்ஸ் எல்லாம் ரெண்டு குழந்தைங்க பெத்து செட்டில் ஆகிட்டாங்க அதுதானே?

எதே…. ரெண்டா? அடியேய் பொன்னுசாமி கவுண்டர் சொத்து கோடி கோடியா குவிந்து கிடக்குதுடி.ஒரு அஞ்சு ஆறாவது ட்ரை பண்ண வேண்டாமா? மோகமுடன் அவன் தேடலை தொடங்கினான் அவர்கள் முக்தி பெறட்டும் நம் கதை இதோடு முற்று பெறட்டும்.

———-சுபம் ———

 இது ஒரு நிஜ சம்பவத்தை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டது. என் நெருங்கிய தோழியின் அக்கா கல்லூரி விரிவுரையாளர். அவர் மாமியார் இப்படித்தான் மருமகள் கருவுற்றபோது கண்டபடி பேசி பிரச்சனை செய்து விட்டார் தோழியின் அக்கா தற்கொலைக்கு முயன்று… அவரைக் காப்பாற்றி தனி குடித்தனம் வைத்தனர்.

 மீண்டும் ஒரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

என்றும் அன்புடன் 💞சித்து 💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!