Skip to content
Post Views: 1,169
இலக்கியா அப்படி கேட்டதும் கலைச்செல்வன் புருவம் சுருக்கினான்.
‘சற்று முன் சண்டை போட்டவள் தானே இவள்’ என்று யோசிக்க,” இலக்கி அமைதியா இரு மா நான் கூட்டிட்டு வர்றேன்” என்றார் அவளின் பெரியப்பா பெருமாள் சாமி.
கலைச்செல்வனோ,”பொண்ணுகளைப் பார்த்து எனக்கென்ன பயம்த்தா. நான் பொதுவா இந்த பஞ்சாயத்து எல்லாம் பண்றதில்லை. ஏ முத்து போவலாம் வண்டியை எடு” என்க
“மிஸ்டர் காத்த முத்து நீங்க தான் இந்த ப்ராப்ளம் தீர்க்க உங்கண்ணா வருவார்’னு சொன்னீங்க. ஸோ சொன்ன வார்த்தை மீறாம கேட்டதை செய்து கொடுக்கச் சொல்லுங்க” என்றாள் அவளும் நகராமல்.
Advertisement
“இதென்னடா பெரிய ரப்சரா இருக்கு.?” என்று நெற்றியைக் கீறிக் கொண்டவன், காத்தமுத்துவைத் தான் முறைத்தான்.
“ஏண்ணே பேசுவோம் ண்ணே” என்று அவன் பம்ம.
“ஒனக்கு பொறவு இருக்கு தீவாளி” என்று பல்லைக் கடித்தவன்,” எல்லாரையும் வரச் சொல்லுங்க பஞ்சாயத்து எங்க?” என்று வேட்டியை மடித்துக் கட்டினான்.
Advertisement
“பெரியப்பா கூட்டிட்டு வாங்க” என்றவளோ அவனைத் தாண்டி நடந்து சென்றாள்.
Advertisement
‘இந்த புள்ளைக்கு இருக்க ஆகாத்தியத்தைப் பாரேன்’ என்று முனகியபடியே நடக்க,” இதோ அங்கே தான் தம்பி” என்று அழைத்துச் சென்றார் அவர்.
நடுக் கூடத்தில் இரண்டு மூன்று நீளிருக்கைகள் கிடக்க, அதில் ஒவ்வொன்றிலும் ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
இலக்கியா,”சங்கர் சேர் எடுத்துட்டு வாங்க” என்றதும் ஒருவன் வேகமாய் சுழல் நாற்காலி ஒன்றைத் தூக்கி வந்தான்.
Advertisement
“உட்காருங்க மிஸ்டர் கலைச்செல்வன்” என்று இலக்கியா கூற
‘இவளுக்கு நான் பஞ்சாயத்து பண்ண வந்தேனா இல்லை எனக்கு இந்த புள்ள பண்ண வந்துச்சா? நெத்திப் பொட்டுல அடிச்ச மாதிரி பேரைச் சொல்லுது அகராதி தான்’ என்று முறைத்தான் அவளை.
‘அதானே உங்க பேரு’ என்ற பார்வை அவளிடத்தில்.
“அண்ணே நான் முருகன். எங்க வீட்டைப் பத்தி ஒங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் இருந்தாலும் சொல்லிடுறேன். அது இலக்கியா ஒரு காலத்தில் எந்தங்கச்சி” என்றான் விட்டேற்றியாக
“இப்ப என்னவாம் ஒறவுக்கு ஒடம்புக்கு முடியலையா? எப்ப இருந்தாலும் கூடப் பொறந்தவ அக்கா தங்கச்சி தானே ?!”என்று கடுப்படித்தான் கலை.
“கண்டவனை இழுத்துட்டு போன நாயெல்லாம் அக்கா தங்கச்சி னு சொல்ல முடியுங்களா…?”
“இந்தாரு முருகா அந்த புள்ள என்ன செஞ்சுச்சுனு நா கேட்க வரல. இப்ப பஞ்சாயத்து என்ன . அதை மட்டும் பேசு” என்று பட்டுக் கத்தரித்தாற் போல பேசினான் கலை.
“எங்க வூட்ல கொஞ்சம் பணமொடக்கம் ஆகிப் போச்சுண்ணே”
“ஏய் அவரு ஒனக்கு மாமேன் மொறையாவுதுடா” என்று அதட்டினார் பெருமாள்சாமி.
“இப்போ இது ரொம்ப முக்கியம்” கலைக்கு எரிச்சல் அத்தனை வந்தது. அப்படியே இலக்கியாவை ஒரு பார்வை பார்க்க ,அவளோ ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்றாள்.
“யாத்தே சரியான ரௌடி போல” என்று பார்வையை திருப்பிக் கொண்டான்.
இலக்கியா சட்டென எழுந்து நின்றாள் .
“வெல் மிஸ்டர் முருகன். நீங்க என்னை தங்கையா நினைச்சாலும் சரி, நினைக்காட்டியும் சரி என் கிட்ட இருந்து ஒரு நயா பைசா கூட கிடைக்காது. எனக்கு சேர வேண்டிய பங்கை யாருக்கும் நான் தர வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சதா? உனக்கு உண்டான சொத்துக்களை நான் கேட்டாலோ அல்லது உரிமை கொண்டாட வந்தாலோ கேட்கலாம். என்ன மிஸ்டர் கலைச்செல்வன் நான் சொல்றது கரெக்ட் தானே.?!” என்று கலையிடம் அவள் திரும்ப,” சரி தான்” என்றான் அவனும்.
“அதெப்படி சரி ஆகும் உனக்குன்னு வேலை இருக்கு, உன் புருஷனோட சொத்து இருக்கு, நான் என்ன அதிலயா பங்கு கேட்டேன் உனக்கு தான் அவ்வளவு இருக்கே இதில் ஏன் பங்குக்கு வர்ற நீ ?”என்று முருகன் எகிற
“இதை நீ கேட்கவே ரூல் கிடையாது. என் அப்பா, தாத்தா சுயமா சம்பாதிச்சது. அதைக் கூட நானா கேட்கலை என் தாத்தா எனக்காக என்ன எழுதி வச்சாரோ அதில் நீ தலையிட வேண்டாம் தான் சொல்றேன்.”என்றாள் அழுத்தமாக.
“என்னவோ எல்லாம் சேர்த்து குடும்பமா வாழற மாதிரி சொத்து சொத்துனு அலையற. ஒத்த மரம்தான. பொட்டச்சிக்கு எதுக்கு அவ்வளவு சொத்து?” என்று அவன் கத்த
“முருகா வாயடக்கி பேசுடே அதென்ன மட்டு மருவாதி இல்லாம பேசற பொம்பளைப்புள்ளைய. ஓ தொனியே சரியில்லையே ஏ மாமோய் என்ன கமுக்கமா நிக்குதீரு ,மவளை இந்த ஏசு ஏசுதான் என்னவோ எவனுக்கு வந்த விருந்தோனு நிக்குறீக என்ன சங்கதி?” என்று இலக்கியாவின் தந்தை செல்வத்திடம் திரும்பினான் கலைச்செல்வன்.
“அவேன் கேட்குறதுலயும் குத்தமென்ன மாப்ள. ஏதோ எங்கப்பாரு கடைசினு உயிலை எழுதி வச்சுட்டு போயிட்டாரு. அதுக்காவ அதையே செஞ்சா ஆச்சா.? எம்மவனுக்கு எழுதுனது எதுல காணும் “என்று அவரும் மகனுக்கு ஆதரவாய் பேச
“இத்த நீங்க ஒங்க அப்பாரு கிட்டதேன் கேட்கணும் மாமோய். எந்த வக்கீலு கிட்ட போனாலும் அந்தப் புள்ளைக்கு சாதகமாகதேன் கேஸு முடியும். அவரு தெளிவா எழுதி இருக்கார் மாத்த நெனைச்சீகன்னா அம்புட்டு பேரையும் அள்ளிக் கொண்டு போய் உள்ள வச்சுபுடுவாய்ங்க. பஞ்சாயத்து எங்கன போனாலும் நிக்காது.நல்ல வேளை உசுலம்பட்டி ,அரசம்பட்டிக்கு பஞ்சாயத்துக்கு போகல நீங்க. இந்நேரம் முருவன் பேசுன பேச்சுக்கு செமக்க வாங்கிருப்பியான்” என்ற கலை,” ஏம்த்தா நீயும் தான் அண்ணேன்னு வுட்டுக் குடுக்கலாம்ல ஓ ஒடன்பெறப்புத்தான?!” என்று இலக்கியாவிடம் கேட்க
“அது கஷ்டம். கூடப் பிறந்தாலும் வாயும் வயிறும் வேற வேற தானே?!” என்றாள் அவள் பதிலுக்கு.
“சரித்தான். மாமோய் இதுக்கு மேல பேச ஆவாது. அந்தப் புள்ள சொத்துக்கு நீக தொங்காதீக. கெடைக்கவும் கெடைக்காது. “என்றவன்,” மறுவடிக்க மறுபடியும் பெரச்சனை பண்ணா இந்த நம்பருக்கு கூப்புடுத்தா நா பாத்துக்கிடுதேன்” என்று அவளிடம் தனது கைபேசி எண்ணைத் தந்துவிட்டு கிளம்பினான்.
“இதுக்கு எதுக்கு இம்புட்டு தொலைவு வரணும் பொம்பளை புள்ளைய பாத்து மயங்குறவரு போல அதேம் பொட்டச்சி பஞ்சாயத்து பேச மாட்டேன்னு சொல்றாரு. இது தோலு” எனும் போதே முருகனின் கன்னம் பழுத்திருந்தது.
“அடிச்சு மென்னிய நிமுத்திப்புடுவேன் ஆரு கிட்ட பேசுற.?” என்று வேட்டியை மடித்துக் கட்டி நாக்கைத் துருத்தி எச்சரிக்க, செல்வம் தன்னால் அரண்டு நின்றார்.
“ஏய்யா யோவ் பெத்தப்புள்ளைய வரமொறை இல்லாம பேசுதான். கேட்டுக்கிட்டு ஒலக்கை மாதிரி நிக்க, நீயெல்லாம் என்னத்த அப்பேன். இந்தாருடா இந்த எகத்தாளம் எல்லாம் வேற எவேன் கிட்டயும் வச்சுக்க எங்கிட்ட ஓ பவுசை காட்டுன முதுவுத்தோலை உரிச்சுப்போடுவேன்.” என்று மீண்டும் எச்சரித்து விட்டுச் செல்ல, முருகன் திகிலடித்தாற் போல நின்றிருந்தான் கண்களில் கண்ணீரோடு.
“என்னண்ணே பொசுக்குனு கையை நீட்டிப்புட்ட?” என்று காத்த முத்து படபடப்புடன் கேட்க
“அவேன் பேச்சுக்கு சங்கறுக்காம வந்தேனேன்னு சந்தோஷப்படு. மொதோ ஒன்னைய வெளுக்கணும் டா” என்று அவனிடமும் கோபம் குறையாமல் பேச
“நானென்ன செஞ்சேன்?” என்று அவன் கேட்க
“இந்த கருமத்துக்குத்தேன் பொம்பளைப்புள்ள பஞ்சாயத்தே வேணாம்னு சொன்னேன்” என்று குதிக்க
“சரித்தான்” என்றவனிடம்,” எவனாவது ஏதாவது இப்படி கோக்குமாக்கா பேசிப்புடுவான் அப்பறம் நமக்கு சுள்ளுனு ஏறும் கையை நீட்டிடுவேன் இன்னமேட்டுக்கு இந்த மாதிரி பஞ்சாயத்து கூப்புடு ஒன்னைய கெட்டி தொங்கவிடுதேன்” என்று வழி முழுக்க அவனைத் திட்டிக் கொண்டே வந்தான்.
காத்தமுத்தோ,”செரிண்ணே செரிண்ணே பொங்காத நீயி. எண்ணே எண்ணே நிப்பாட்டு நிப்பாட்டு இங்கன கொடல் கொழம்பு நல்லா இருக்கும் சாப்புட்டு போவோம் காலையில இருந்து கொலைபட்டினி” என்றதும் அவனை ஏகத்துக்கும் முறைத்து விட்டு வண்டியை நிறுத்தினான்.
உணவு விஷயத்தில் மற்றவர்கள் எப்படியோ கலைச் செல்வன் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லவே மாட்டான்.
“அப்புடியே ஓ பெரியாத்தாவுக்கும் வாங்குடா” என்று குரல் கொடுக்க,” சரிண்ணேன்” என்று காத்தமுத்து உணவகத்தின் உள்ளே போய்விட்டான். எதிரே ஜிகிர்தண்டா கடையைப் பார்த்ததும் கலைச்செல்வனுக்கு பழைய நினைவுகள் சுழன்றது.
“‘நீங்க சரியே இல்லை மாமு. எப்ப பார்த்தாலும் ஜிகிர்தண்டா கறி தோசை தான் வாங்கித் தர்றீங்க. எப்ப தான் இந்த பீட்சா பர்கர் எல்லாம் கண்ணில் காட்டுவீங்க?'” என்று செவியோரம் அவளின் குரல் ரீங்காரமாய் கேட்டது.
“எந்தங்கத்துக்கு இல்லாததா அடுத்த தடவை நீ கேட்டதே வாங்கித் தாரேன் மாமேன். இப்ப இதைக் குடிடா” என்று பதிலுக்கு அவன் கூறிய நினைவெல்லாம் வந்து போனது அவனுக்கு.
அந்த கடையில் இருந்து ஒருவன் இவனைப் பார்த்து முறைத்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவன் ,”என்னடா?” என்று இதுவரை இறக்கி விட்ட வேட்டியை மடித்துக் கட்ட அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
‘முதுகெலும்பு இல்லாத பயலுக’ என்று முனகியபடி நின்றான் கலைச்செல்வன்.
********
“ஏன் டி சீமைச் சிறுக்கி எம்புட்டு திண்ணக்கம் இருந்தா எம் பேரனுக்கு சொத்து இல்லைனு சொல்லுவ நீயி.” இலக்கியாவை கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.
“ம்மா என்ன பேசறீங்க நீங்க அமைதியா இருங்க” என்று இலக்கியாவின் அம்மா திட்ட
“என்னடி அமைதியா இருக்கணும் என்ன அமைதியா இருக்கணும். ஊர் முழுக்க நம்ம மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டு எவனையோ இழுத்துட்டு போவா. இவளுக்கு சொத்து வேற எழுதி வச்சிருக்காரு எங்கூட பெறந்தவரு. இத்த கேட்க நாதியில்லையா. எம்பேரன் இப்படி தெருவில நிக்குதானே?!” என்று ஒப்பாரி வைக்க இலக்கியா எதையும் கண்டு கொள்ளாமல் கிளம்பினாள்.
“எங்கடி போற பேசிட்டு இருக்கேன் எங்க போற…ஓஓஓ அந்த சீக்கு வந்த சனியனை பார்க்க போறீயா?!” என்று ஆங்காரமாய் கேட்க
“உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை” என்று கத்தி விட்டாள் இலக்கியா.
“ம்மா!” என்று அவளின் அம்மாவும் திணறிப் போய் மகளைப் பார்க்க
“ம்மா உங்க முகத்துக்காக விடுறேன். வேற ஏதாவது பேசினாங்க அவ்வளவு தான்” என்று கடுமையாக எச்சரித்து விட்டு கிளம்பினாள்.
“அந்த சனியன் செத்தும் தொலைய மாட்டேங்குது அண்ணி” என்று செல்வத்தின் அம்மாவிடம் அவர் சலித்துக் கொள்ள,” எங்க நாம போனாலும் அது போகாது போல இருக்குற பணத்தை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டு தான் எமன் கிட்ட போகுமோ என்னவோ?” என்று அங்கலாய்த்தார் செல்வத்தின் அம்மா.
இங்கே இலக்கியாவோ, மருத்துவமனையில் தன் மூன்று வயது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். அவனைச் சுற்றிலும் வொயர்களும் குழாயுமாக தொங்கியது. இந்த பெரியவர்களின் சாபத்தை வாங்கிய பிஞ்சு ஏதுமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது.
….. தொடரும்.
error: Content is protected !!