Skip to content
Post Views: 1,373
கலைச்செல்வன் வந்து சென்றது ஏதோ புயலடித்து ஓய்ந்தாற் போல இருந்தது.
“ஏன்டா பஞ்சாயத்து பண்ண வேற நல்ல ஆளு கெடைக்கலையா ஒனக்கு. அவேன் அந்த அடி அடிக்கிறியான் கல்லுருண்ட மாதிரி நிக்கித… எம்மவனை அடிக்காதடானு சொல்றதுக்கு என்ன? “என்று செல்வத்தின் அம்மா கத்த
“அடேயப்பா ஒரு அடி அடிச்சதுல கோணிக்கிட்டானா ஒங்க பேரன். அவேன் மட்டும் எம்புள்ளைய நாக்கு மேல பல்ல போட்டு பேசலாம் .அத்த கேட்க மாட்டீங்க ஒருத்தரும். அதுசரி அவளை இங்க மனுசியா மதிச்சாத் தான.” என்று இலக்கியாவின் அம்மா வேதனையாக பேச
“ஆமாமா அவ செஞ்சதுக்கு தூக்கி வச்சு கொஞ்சணும் அவளை” என்று நொடித்தவரோ, “எவனையோ இழுத்துக்கிட்டு போயி…”என்று நீட்டி முழக்கினார்.
Advertisement
“அவ அப்படி னு தான் தெரியுதுல்ல எதுக்கு அவளைக் கூப்பிட மறுபடியும் போனீங்க. வரலைனு சொன்னவளை எதுக்கு வம்படியா கூட்டி வந்தீங்க? “என்று கொந்தளித்தார் அவர்.
“என்ன பண்றது உம்புருஷன் சம்பாத்தியம் அப்படி. அவளை எல்லாம் நத்திப் பொழைக்க வேண்டிது இருக்கு.”
“இருக்குல்ல, அப்ப எல்லாரும் அவ பேச்சைக் கேட்டு இருங்க இல்ல அவளை பத்திவிடுங்க எங்கிட்டும் எம்மவ பொழைச்சுக்குவா. அத்த விட்டுட்டு எம்பேரன “என்று விசும்பி அழுது விட்டவர், “அந்த பிஞ்சு ஒங்களை என்ன செஞ்சுச்சு அத்த பேசுற நீங்க எல்லாம் நல்ல கெதிக்கு போயிடுவீங்க “என்று சாபமிட்டேச் சென்றார் அவர்.
Advertisement
இலக்கியா இவர்களைப் பற்றி எல்லாம் யோசித்திடாமல் மகனோடு அமர்ந்திருந்தாள் .
Advertisement
********
இலக்கியா வீட்டில் இருந்து வந்த கலைக்கு கோபம் தீரவே இல்லை.
காத்த முத்து பயந்து கொண்டே தான் அவனோடு வந்தான்.
Advertisement
“ஆத்தா பிரியாணி அண்ணே வாங்கி குடுத்துச்சு. இது பெரியப்பனுக்கு தட்ட கொண்டாத்தா நானும் இங்கனயே அள்ளி போட்டுக்குறேன்” என்று சொல்லியபடி உணவுப் பொட்டலங்களை எடுத்து வைக்க
“ஏன்டா அவனுக்கு ?”என்று இழுத்தார் கலையின் அன்னை தனம்.
“அவரு” என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், “பஞ்சாயத்துல ஒரு சடவாகிப் போச்சுத்தா. அதேம் கோவத்துல இருக்காரு” என்றான் மெல்லிய குரலில்.
“ஒன்னைய மெதிக்கலையா? “என்று அசட்டையாக கேட்க
“ஏனாத்தா ஒனக்கு அம்புட்டு ஆவலாதி ?”என்று சிரித்தவன், “நாந்தேன் வாங்கிருக்கணும் அதுக்கு பதிலா அங்கருந்த பய வாங்கிட்டியான். செவுள பாத்து ஒன்னு விட்டாரு பாரு எங்காதே கொய்யினுடுச்சு போ” என்றவன், “அவனும் கோக்குமாக்கா பேசிப்புட்டான்த்தா” என்று முருகன் பேசியதை ஒன்று விடாமல் சொல்லி முடிக்க
“அந்தப் புள்ளைய பெத்தவக என்ன பூவா பறிச்சுட்டு இருந்தாய்ங்க. பொசகெட்ட பயலுக வரமொறை இல்லாம பொம்பளைப்புள்ளைய பேசி இருக்கான். நானா இருந்தேன் நாக்க இழுத்து வச்சு அறுத்துருப்பேன். அதுசெரி ஏ வளப்பு அப்படி எல்லாம் பேசுமா என்ன…?”என்று தன் வளர்ப்பையும் பெருமை பேசிக் கொண்டார்.
“சாப்புடுத்தா…அண்ணே ஏற்கனவே டென்ஷன் ல போயிருக்கு” என்றவன் பிரியாணியை வெளுத்து வாங்க
“ஏன்டா அவேன்” எனும் போதே, “அவரு என்னைக்கு கடையில கறிக்கஞ்சி குடிச்சாரு. நீ ஆக்குனதுதேம்” என்றவன் ,”ஆனாலும் த்தா அண்ணே ஒடம்பு ஏதோ மெலிஞ்சுகிட்டே போறாப்ள இருக்கு என்னன்னு கவனி” என்றான் காத்தமுத்து.
“ஹ்ம்ம் “என்று இழுத்துப் பெருமூச்செறிந்தவர், “இருந்து இருந்து ஒத்த கலியாணத்தை பண்ணி அவேன் பட்ட வேதன அம்புட்டு, நா வேற ஆரச் சொல்ல? “என்றார் வேதனையுடன்.
“அதுக்காவண்டி அவரு ஒடம்பை பாக்காம இருப்பீகளா. என்னன்னு கவனித்தா” என்றவன், _நானும் போற பக்கம் எல்லாம் பொண்ணு பாக்குறேன் மனுஷன் மசிய மாட்டேங்காரு. இந்தா இன்னைக்கு வரச் சொல்லுச்சே அந்த பொண்ணு கூட அம்சமான புள்ளதேம். ஆனா கலியாணம் ஆகிப் போச்சு” என்றான்.
“யாருக்கு எங்க அம்சம் கூடி இருக்கோ அங்கதான்டா அமையும் நீ விடு” என்றவர் உண்டு முடித்து விட்டு பாத்திரங்களை எடுத்துச் சென்றார்.
கலைச்செல்வன் மனைவியின் புகைப்படம் முன்பு அமர்ந்திருந்தான்.
‘ஒனக்கு ஆரைப் பத்தியும் கவலை இல்லை. நிம்மதியா போயாச்சு. ஏன்டி என்னைய விட்டு போன… நான் என்ன செஞ்சேன் ஒனக்கு. ?’என்று இறந்த மனைவியை ஆற்றாமையுடன் பார்த்தான்.
‘இதுல சத்தியம் வேற வாங்குற நீயி, ஏன்டி ஒன்னைய மறந்துட்டு வேற கலியாணம் பண்ணனுமா நானு. என்ன தேவைக்கு, செய்ய முடியாது போடி. விட்டுப் போனல்ல நா வேணாம்னு விட்டுட்டு போனவளுக்கு என்ன அக்கறை வேண்டி கெடக்கு. ஆசை நெறவேறலைனா பேயா அலைவாங்களாம் நீயும் அலைடி எனக்கென்ன. நீ பெத்த புள்ளைய கூட எனக்குனு தராம போனல்ல நீ பேயாவே அலை எனக்கென்ன வந்துச்சு. ?’முறுக்கிக் கொண்டான் புகைப்படத்தில் இருப்பவளைக் கண்டு.
‘நீ இல்லாம போயிட்ட இங்க என்னை கல்யாணம் பண்ண சொல்லி சீவன வாங்குதாக. அதுல ஒனக்கென்ன அக்கறை.? ஒன்னைய கெட்டியே ஒறக்கம் கெட்டுத் தவிக்கிறேன் இதுல இன்னொன்னு’ என்று சலித்தவன், ‘இதுல ஒங்காத்தா .அதேன் ஏ ஐத்த (அத்தை) சொல்லுது நா கல்யாணம் பண்ணிக்கிட்டா நீயி எனக்கு மவளா வந்து பொறப்பியாம். அதுக்கு நா கல்யாணம் பண்ணிக்கணுமாம். எனக்கெல்லாம் ஒரு சோடி இருக்கும்ன்ற? ‘என்று நொடித்தான்.
மனதின் ஆழத்தில் அவளின் நினைவுகள் சுழல, அவளோடு பேசுவதாய் நினைத்துப் புலம்பி அப்படியே பின்னிரவில் உறங்கியும் போனான் கலைச்செல்வன்.
வெளியே தான் விறைப்பு கடுகடுப்பு எல்லாம் உள்ளே சிறு குழந்தையின் மனம். ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத குணம். தான் விரும்பிய பெண்ணவள் வேறொருவனை விரும்பியது முதல் ஏமாற்றம் என்றால் அவளே மனைவியாக வந்தும் வாழக் கொடுத்து வைக்காமல் இறந்து போனது அடுத்த ஏமாற்றம் அவனுக்கு.
இலக்கியாவிற்கோ அன்பான அழகான கணவன் கண்நிறைந்த குழந்தை. அன்பே வடிவான மாமனார் மாமியார் என அனைவரும் கிடைத்தும் அதை சொற்ப காலத்திலேயே இழந்து விட்ட துயரம். அன்பான கணவன் சந்தீப்பிற்கு தேதி குறிப்பிடாத மரணம் அவன் தோளில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் என்று தெரியும். அவன் வேலை அப்படி நாட்டிற்காக அவன் எப்போதும் தன்னை இழக்க தயார் நிலையில் இருந்தான். முழுக்க முழுக்க காதலைக் கொட்டிக் கொடுத்த மனைவியோடு வாழ்ந்து விட்ட அதிர்ஷ்டசாலி. தன் காதலின் அச்சாரத்தை பூமியில் விட்ட நிம்மதியில் அவன் வீரமரணம் அடைய மகனோ அற்ப ஆயுளோடு இருந்தான். தன்னை தன் பெற்றோரே புரிந்து கொள்ளாமல் இருந்தபோதிலும் மாமியார் மாமனார் என்ற அலட்டல் இல்லாமல் மகளைப் போல பாதுகாத்த அந்த தம்பதியையும் இழந்த சோகம் எல்லாம் தாங்கிக் கொண்டு இன்னும் இரும்பு மனிதியாய் நிற்கும் அவளின் மனதிடம். தன் கணவனின் இறுதி ஆசைக்காக போராடும் போராளி.
இருவரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலி எங்கே என்று தான் விதி தேடிக் கொண்டிருக்கிறது. காலமெனும் கையில் இருக்கும் சங்கிலியை இழுத்துவருமா விதி.
*********
இளந்தென்றல் வீச காலை புலர்ந்திருக்க கலைச்செல்வன் வீடே பரபரவென்று இருந்தது.
“என்னத்துக்கு இம்புட்டு ஆர்பாட்டம் பண்றாக? “சலித்தபடி எழுந்து வந்தான் கலைச்செல்வன்.
“ம்மோவ் என்னத்துக்கு இம்புட்டு சலம்புத, தூங்க விடுதியா நீயி ?”என்று கொட்டாவி விட்டவனை பார்க்காமல், “ஏ முத்து எல்லாத்தையும் வண்டியில ஏத்து “என்றார் சத்தமாக.
“கேட்டா பதில் சொல்ல மாட்டியா நீ? “என்று கடிந்து கொள்ள
“என்னத்த சொல்ல? எம்மவனுக்கு தான் நா நெனைச்ச மாதிரி கலியாணம் கைகூடல அதுக்காவ வர்ற கலியாணத்துக்கு எல்லாம் போவாம கெடக்க முடியுமா? “என்று நீட்டி முழக்கினார்.
“ஆரம்பிச்சுட்டியா சர்த்தான் இன்னைக்கு பொழுது ஒங்கூட மல்லுக்கட்டத்தான” என்று நொடிக்க
“நீயி ஒண்ணும் எங்கூட மல்லுக்கட்ட வேணாம் ராசா .நா எங்கப்பன் முருவனை பாக்க திருப்பரங்குன்றம் போறேன். ரவைக்குத்தான் வருவேன்” என்றார் அவர்.
“ராத்திரி ஆவுமா என்னத்துக்கு கலியாணத்துக்கு போறவுக முகூர்த்தம் முடியவும் வெரசா வரத்தான.? பெறவு அங்கன என்ன சோலியாம் ? “
“ம்ம்க்கும் எல்லாத்தையும் பாடம் படிக்காக ஒனக்கு. போன வாரத்துல என்னடா சொன்னேன் எங்கண்ணனோட மச்சினி மகளுக்கு கலியாணம்னு சொன்னேனா இல்லையா? அங்க நாலு சாதி சனம் வரும் ஆற அமர பேசத்தான. அதுக்குத்தான் இம்புட்டு வெள்ளென கெளம்புதேன்.” என்று புடவை முந்தானையை உதறி பெருமிதமாய் ஒரு பாவ்லா காட்டி விட்டுச் செல்ல கலைச்செல்வனுக்கு சிரிப்பு வேறு வந்தது அவர் நடையில்.
“ஏ தனம் இந்த வேட்டி எப்புடி இருக்கு?”என்று வேகமாய் வந்தார் கலையின் தந்தை கணேசன்.
“அடேயப்பா பட்டு வேட்டி பளபளங்கு. பொண்ணு கிண்ணு பாக்கப் போறீரா பெரியப்பா.? என்னவோ ஒமக்கே கல்யாணம் மாதிரில்ல இருக்கு”
“அடேய் வந்தேன் நிமுத்திபுடுவேன். ஏதோ என் பொண்டாட்டி ஆசையா தந்தாளேனு உடுத்துனேன். தனம்..”என்று ராகமாய் இழுத்தபடி அவர் சமையலறை நகர
“எல்லாரும் இப்புடி கெளம்புனா வூட்டை ஆரு பாக்குறதாம்? அதான் அம்மை போகுதுல்ல ஒமக்கென்ன வீட்டுல மொடக்கத்தான…? “என்று அவரை சத்தமாக கலை அழைக்க
“ஏ நாந்தான் கூப்பிட்டேன். எங்கூட பொறந்தது எல்லாம் ஜோடி போட்டு வரையில நான் மட்டும் ஒத்தையில போய் நிப்பேனாக்கும்” என்றவர், “நீங்க என்ன பராக் பாத்துட்டு இருக்கீங்க போங்க போய் வண்டியை ரெடி பண்ணுங்க போங்க” என கணவனையும் அதட்டினார்.
“இந்தா போயிட்டேன்ல” என்ற கணேசன் மகன் எதுவும் கூறிவிடுவானோ என்று பயந்து வேகமாக வாசலுக்கு ச் சென்றார்.
“ஏன்த்தா அவருக்கு எந்த வண்டியை ஓட்ட தெரியுமாம்? இம்புட்டு வேகமா போறாரு” என்று காத்தமுத்து அதற்கும் வம்பு இழுக்க
“நீ ஓ வாப்பெட்டியை சாத்துடா” என்று அதட்டினார் தனம்.
“எல்லாம் ஆச்சு ஆச்சு” என்றவனோ, “பெரியப்பு வண்டியை எடுக்கிறேன்னு எங்கேயும் சாஞ்சு போட்றாத நான் வந்துட்டேன் ஏ பெரியப்போய்” என்று வாசலுக்கு அவனும் ஓடினான்.
“எல்லோரும் சேர்ந்து ஏதோ கோக்குமாக்கு பண்றீங்க அது மட்டும் என்னனு தெரியட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்று எச்சரித்து விட்டு கலை வெளியே செல்ல, அதுவரை ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்த காத்த முத்துவும் கணேசனும் அமைதியாக கிசுகிசுத்தனர்.
“நீயும் அவக கூட்டணி தானே இருக்கட்டும் பாத்துக்குறேன் டா” என்றதும்
காத்த முத்து பதறியபடி, “அண்ணா அப்படி எல்லாம் இல்லை அண்ணா” என்று அவனிடம் சொல்ல, “சரி சரி பத்திரமா போயிட்டு வாங்க நான் போய் ஐத்தைய பார்த்துட்டு வரேன்” என கிளம்பி விட்டான்.
“ஸ்ஸப்பா முடியலை. ஒத்த பொண்ண பாத்து ஏ வீட்டுக்கு மருமக கொண்டு வரங்காட்டியும் சீவேன் அத்துப் போயிரும் போல “என்று நொடித்துக் கொண்டார் தனம்.
“பெரியாத்தா வெரசுனு கெளம்பு வந்துடப் போறாரு” என்று காத்தமுத்து ஜீப்பை ஸ்டார்ட் செய்தான்.
“ஆமா மா, ஏ பேச்சி வீட்டை பாத்துக்கடி. மாடு கன்னுக்கு தண்ணி வச்சுரு. தீவனம் போட முனியன் வருவியான்” என்று சத்தமிட்டுக் கொண்டே கணவரோடு கிளம்பி விட்டார் தனம் திருப்பரங்குன்றம் நோக்கி.
கலைச்செல்வனுக்கேற்ற பெண்ணரசி கிடைப்பாளா??
….. தொடரும்.
error: Content is protected !!