Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manaithakka Maanbudaivayal

அத்தியாயம் 14

அத்தியாயம் 14

லாவண்யாவின் உறவினர்கள் சிலர் குழந்தையை பார்க்க வந்திருக்க மருத்துவமனை அறையே சிறியது என்பதால் வெண்பா வெளியே வந்துவிட்டாள்.

உதயா பேருந்து நிலையம் வந்து இறங்கிவிட்டதால் அவளை அழைத்துவர மதி  சென்றிருக்க அவனுடன் நிலாவும் சென்றிருக்க அவர்கள் வருகையை எதிர்பார்த்த வண்ணம் அந்த வராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்.

மக்கள் தேனீ போல் சுறுசுறுப்பாய் அங்கும் இங்கும் போய் கொண்டிருக்க சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது.



Advertisement

அவளுக்கு எதிரே இருந்த அறையில் இருந்து வெளியே வந்த செந்தில்நாதனும் சரண்யாவும் தங்களுக்குள்ளே மும்முரமாய் எதோ பேசிக் கொண்டுவர அவர்களை விழியெடுக்காமல் பார்த்தாள் வெண்பா.

எந்த உணர்வும் இன்றி அவள் அழுத்தமாய் அவர்களையே வெறிக்க அது அவர்களை சென்றடைந்ததோ எதார்த்தமாய் இவள் புறம் பார்வையை திருப்பிய சரண்யா மகளை கண்டதும் திகைத்து நிற்க அவர் பார்வையை தொடர்ந்து தானும் அங்கே பார்த்த செந்தில்நாதனுக்கும் அதே நிலை தான்.

அவர்கள் பார்க்கவும் தன்னை மீட்டுக் கொண்டவள் அங்கிருந்து வேகமாய் நகர முற்பட அவரசமாய் வழிமறித்தனர்.

Advertisement

“பார்த்தும் கூட யாரோ மாதிரி போறியே வெண்பா..நாங்க அவ்வளவு வேண்டாதவங்க ஆகிடோமா வெண்பா..”

Advertisement

“எப்படியும் நீங்க என்னுட்ட பேச பிரியப்பட மாட்டீங்க..எதுக்கு உங்க முன்னாடி வந்து நின்னு உங்களை சங்கடப்படுத்தனும்னு தான்…”

“ஏன் டி இப்படி பேசுற..”

“நான் இருக்கேனா செத்துட்டேனானு கூட கண்டுக்காம இருந்தவங்களுட்ட வேற எப்படி பேசுவாங்க..”

Advertisement

அவள் கடுமையாய் சொன்னதில் சரண்யா கண் கலங்க, “என்னங்க இப்படி பேசுறா..” என்று கணவனை ஏறிட அவருமே மகள் பேச்சில் திடுக்கிட்டு தான் நின்றார்.உறவினர் ஒருவரை இங்கே அட்மிட் செய்திருக்க அவரை நலம் விசாரிக்க தான் வந்திருந்தனர்.

“இல்ல நான் தெரியாமல் தான் கேக்குறேன்..நான் என்ன செஞ்சிட்டேன்னு என்னை அப்படியே தூக்கி போட்டுடீங்க..இல்ல நடந்ததுல எதாவது என் தப்பு இருந்ததா..இல்ல நான் என் புருஷனோட இருப்பேன்னு சொன்னது குத்தமா..?அவர வேணாம்னு தூக்கி போட்டுட்டு நான் காலத்துக்கும் வாழா வெட்டியா உங்களோட இருந்தால் மட்டும் உங்களால நிம்மதியா இருந்திட முடியுமா..???முடியாது தானே..அதை நீங்க இத்தனை வருசம் ஆகியும் உணரவே இல்லைல..உங்களுக்கு உதய் மட்டும் போதும்னு நினைச்சீட்டீங்க..என்னை மறந்துட்டீங்க தானே..”

எவ்வளவு முயன்று குரல் கமற அழுகையை அடக்க முடியவில்லை.அவளது வார்த்தைகள் பெற்றோரை அம்பாய் தைக்க,

“இல்ல வெண்பா..உன்னை நினைக்காமல் நாங்க இருப்போமா..”

என்று பேச முற்படும்போதே,

“பொய்….நினைச்சு இருந்தீங்கனா..யாரோ மாதிரி இருந்திருக்க மாட்டீங்க..இப்போ கூட என்னை தேடி வந்தா பேசுறீங்க…எதர்ச்சையா பார்த்ததால தானே பேசுறீங்க…என் மாமியார் இறந்த போது கூட உங்களுக்கு துக்கம் விசாரிக்க தோணலைல.. நீங்க என்னை தேட மாட்டீங்களானு நானும் எதிர்பார்த்து பார்த்து ஏமாந்துட்டேன் ம்மா..”

அவர்களுக்கு நாகஜோதி இறந்த சமையத்தில் செய்தி அவர்களை சென்றடையாதது அவளுக்கு தெரியாது.அவர்கள் கோபத்தில் தான் வரவில்லை என்று எண்ணி இருந்தாள்.அதனை விளக்க தற்போது அவர்கள் முயன்றாலும் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பது புரிய செய்வது அறியாது திகைத்து நின்றனர்.ஆனால் அவளது கோபத்திற்கோ வேகத்திற்கோ அணைப்போட யாருமில்லை.

“அதிலும் உதய்…உதய் செஞ்சதை என்னால ஜீரணிக்கவே முடியல..உங்களுட்ட நிச்சயம் சொல்லாம இருந்திருக்க மாட்டான்..அவ்வளவு தானா உங்களுக்கு நான்..??இத்தனை வருஷம் செண்டு பார்க்கும் போதும் பார்வையாலே எட்டி வைக்கிறான்..நான் என்ன பண்ணிட்டேன்னு என்மேல அப்படி ஒரு வெறுப்பு அவனுக்கு..?? வீடு தேடி வந்து அப்படி பேசிட்டு போறான்..என் தம்பியை எந்த இடத்திலும் நான் விட்டுக் கொடுத்ததே இல்ல.ஆனால் அவன் அன்னைக்கு செஞ்ச விசயம்.. என் மாமனார் முகத்தை ஏறேடுத்து என்னால பார்க்க முடியல..ஒரு பொண்ணு தானே வந்து விருப்பம்னு சொன்னால் இப்படி தான் அவளை அவமானப்படுத்துவாங்களா..?? எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் குழி தோண்டி பொதைச்சிட்டு போயிட்டான்..”

அவள் பேச பேச கேட்க மட்டும் தான் முடிந்தது.பதில் பேச அவர்களுக்கு நா எழவில்லை.அவள் கத்தி ஆர்பாட்டம் எல்லாம் செய்யாததால் யாரின் கவனத்தையும் அது ஈர்க்கவில்லை.

இவர்களை கேள்வி கேட்கும் இவள் முதலில் பெற்றோரை தேடி செல்ல வேண்டியது தானே என்று தோண்றலாம்.உண்மையில் அவளுக்கு அவர்களது தற்போதைய நிலவரம் வரை அனைத்தும் அத்துப்படி.நாகஜோதி இறப்பிற்கு முன் அவள் அவளாகவே இல்லை.ஆனால் அவர் இறப்பிற்கு பின் பொறுப்புகள் அவள் எடுக்க நேரிட அதன்பின் தான் சுதாரித்தாள்.நாகஜோதி காரியத்திற்கு கூட அவர்கள் வராததை அவளால் ஏற்க முடியவில்லை.இனி அவர்களாய் தேடி வராமல் நாம் செல்ல கூடாது என்று மனதில் வைராக்கியம் எழுந்தது.ஆனாலும் அவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட முடியவில்லை.அவர்கள் நலனும் அவளுக்கு முக்கியமானதாய் பட செந்தில்நாதனின் நெருங்கிய நண்பரை தொடர்புக் கொண்டாள் அவர்களுக்கு தெரியக்கூடாது என்ற நிபந்தனையோடு..

அதன்பின் அவர்கள் ‘சரண்யா டெக்ஸ்டைலஸ்’திறந்தது முதல் தற்போது உதய் தவரூபனிடம் உதவி இயக்குநராய் இருப்பது வரை அனைத்தும் அவளுக்கு தெரியும்..அவளுக்கு தெரியாதது உதயா நடிக்கும் குறும்படம் உதயுடையது என்பது மட்டும் தான்.அதுவும் படம் வெளியானதும் தெரிந்துவிட முதலில் திகைத்தாலும் உதய் – உதயா இருவருக்கும் தெரியாத போது நாம் ஏன் சொல்லிக்கொண்டு என்று விட்டுவிட்டாள்.

இப்படி அவள் எந்த நிலையிலும் அவர்களை விடாமல் இருக்க அன்று உதய்யை வீட்டில் பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி.தன்னை காணத்தான் வந்துவிட்டான் என்று அவள் ஆர்வமாய் நினைக்க அதனை பொய்யாக்கி அவளை சுக்கு நூற்றாய் உடைத்துவிட்டான்.அதுவே அவளை மிகுந்த மன அழுத்ததில் ஆழ்த்தியது.அன்றைய காயத்தின் மிச்சங்கள் தான் இன்று இவர்களிடம் இப்படி பேச தூண்டியது.

அதற்குள் உதயாவை அழைக்க சென்ற மதியும் வந்துவிட தூரத்திலே இவர்களை பார்த்துவிட்டான்.வெண்பாவின் முகபாவனையே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த,

“அய்யோ..அன்னைக்கு உங்க அப்பா அம்மாவ பார்த்துட்டு வருவோமான்னு கேட்டதுக்கே என்னை அந்த காய்ச்சு காய்ச்சுனா..இப்ப அவங்களை என்ன சொல்றாளோ தெரியலையே..இப்ப தானே ஓரிரு வார்த்தை பேசி கொஞ்சம் நார்மல் ஆகுகிறாள்.அதற்குள் மறுபடியும் ஒரு சோதனையா..”

மனம் அதன் போக்கில் கடகடவென சிந்திக்க உதயாவின் கைப்பிடித்து நின்றிருந்த நிலா,

“அப்பா அது தாத்தா பாட்டி தானே..”

என்றாள் ஆர்வமாய்.வெண்பாவின் அலைபேசியில் நிறைய புகைப்படங்களை பார்த்திருக்கிறாள்.அவர்கள் யாரென்றே மகளுக்கு தெரியாமல் போய்விட கூடாது என்பதால் தாத்தா,பாட்டி,மாமா என்று உறவு சொல்லி தான் பழக்கி இருந்தாள் வெண்பா.

அப்போது தான் உதயா அங்கே பார்த்தாள்.சட்டென்று திரும்பி அண்ணனை பார்த்தவள், “என்ன ண்ணா..”

என்று கவலையாய் கேட்க,

“நான் பார்த்துகிறேன் உதயா..” என்றவன் சூழ்நிலை சரி இல்லாததால் நிலாவையும் உதயாவோடு அறைக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் அவர்களை நோக்கி விரைந்தான்.

மகளின் பேச்சினிலே அவர்கள் வாய் அடைத்து போயிருக்க மதிவாணனை பார்த்ததும் அவர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை..

“வெண்பா..” 

என்று அவள் அருகில் வந்தவன் அவர்களை பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் சங்கடமாய் புன்னகைக்க கணவனை கண்டதும்,

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல..வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா..”

என்க, “ஹே..இப்போ என்னாச்சுனு..”

என்று ஆரம்பிக்கும் போதே,

“கூட்டிட்டு போவீங்களா..மாட்டீங்களா..”

என்க அவன் மீண்டும் அவள் பெற்றோரை பர்க்கவும்,

“நான் போறேன்…” என்று விடுவிடுவென நடந்தாள்.

விக்கித்து நின்ற செந்தில்நாதனையும் சரண்யாவையும் பார்க்கவும் பாவமாய் இருக்க,

“அவ கோபத்தில் எதாவது பேசி இருப்பா..நீங்க வருத்தப்படாதீங்க..”

என்று அவசரமாய் கூறி மனைவியை பிடிக்க கிட்ட தட்ட ஓடினான்.

போகும் அவர்களையே பார்த்தபடி நின்ற செந்தில்நாதன் மனதில்,

‘தவறு செய்து விட்டோமோ..உதய்யை சமாதானம் செய்து மகளோடு இணக்கமாய் போகி இருக்க வேண்டுமோ..”

என்று நெருடியது.அவளது வார்த்தைகளைவிட அவள் மனதின் வேதனையே அவர்களை பெரிதும் பாதிக்க சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவர் மகனுக்கு அழைப்பு விடுத்தார்.

அவன் எடுத்ததுமே, “நீ உடனே கிளம்பி திருப்பூர் வா உதய்..”

என்றார்.

“அப்பா..நான் ஸூட்டிங்ல இருக்கேன்..எதாவது முக்கியமான விசயமா..நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கீங்கல்ல..”

“நல்லா இல்லடா..என் பொண்ணை பாத்து என் மனசு ரணமாகி கிடக்கு..இப்ப உன்னால உடனே வர முடியுமா..முடியாதா..”

“அக்காவை பார்த்தீங்களா..”

என்றான் ஆச்சரியமாக..சில நாட்களாய் குறிப்பாக காருண்யாவோடு பேசியபின் அவன் மனதை பெரிதும் ஆக்கிரமித்து இருந்தாள் வெண்பா.

அன்று அவளிடம் நல்லதாய் நாலு வார்த்தை பேசியிருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற உதயா வேறு பாதிப்பு அது இது என்றது மனதில் ஒரு பயத்தை கொடுத்தது. அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது கடவுளே என்று ஓயாது பிராத்தித்தான்.ஆனால் நேரில் மீண்டும் சென்று பார்க்க தைரியம் எழவில்லை.

தந்தையின் கறாரான பேச்சு இன்னும் பதட்டத்தை தர என்ன ஏதென்று கேட்க நேரமின்றி உடனே கிளம்பினான்.

படிக்கட்டில் வெண்பாவை பிடித்துவிட்ட மதி,

“நான் வர மாட்டேன்னு சொன்னேனா..எதுக்கு இவ்வளவு கோபம்..”

என்றவன் அவள் அப்பொழுதும் கடுகடுவென்றே இருப்பதை கண்டு எதுவும் பேசாமல் உதயாவிற்கு கால் செய்து,

“நாங்க வீட்டுக்கு போறோம் உதயா..தயாவிடம் சொல்லிடு..நீங்க கிளம்பும் போது சொல்லுங்க..வந்து அழைச்சுட்டு போறேன்..”

என்க, “தயா அண்ணாவிடம் சொல்றேன் ண்ணா..நான் அப்பா நிலா சேர்ந்து வந்திடுவோம்ண்ணா..உங்களுக்கு அலைச்சல் வேண்டாம்..”

என்று அவள் வைத்ததும் முறைப்புடன் வெண்பாவை அழைத்து சென்றான். வீடு வரும் வரை இருவரிடமும் மௌனம் திரை மட்டுமே..!!

வீட்டில் நுழைந்ததுமே தன் கையில் இருந்த பர்ஸை டேபிளில் வீசி உள்ளே செல்ல முனைந்தவளை கைப்பிடித்து,

“இரு..இப்போ என்னாகி போச்சுனு இவ்வளவு கோபப்படுற நீ..?”

என்றவன் “அவங்க பெரியவங்க வெண்பா..நாம விட்டு கொடுத்து போனால் தான் என்ன..”

என்க வேகமாய் அவன் புறம் திரும்பி,

“ஏன் விட்டுக் கொடுக்கணும்..விட்டுக் கொடுத்தே தான் என் பாதி வாழ்க்கை போச்சு..ஏன் உங்க அப்பா- அம்மா என்னை எவ்வளவு அலட்சியப்படுத்தினாங்க அப்பவும் நான் விட்டுக் கொடுத்து தான் போனேன்..நீங்க நல்ல மகன்னு பேரெடுக்க என்னை கைவிட்ட ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்காக விட்டு கொடுத்து தான் போனேன்…உங்களுக்கு பிடிக்காதுனு என்னோட சின்ன சின்ன ஆசைகள் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து தான் போனேன்..ஆனால் கடைசியா எனக்கு என்ன கிடைச்சுது பைத்தியக்காரிங்கிற பட்டத்தை தவிர..யப்பா..சாமி…நீங்க ரொம்ப உத்தமர் மாதிரி பேசவேணாம்..”

என்றாள் சுள்ளென்று..

அவள் பேச்சில் மனம் காயப்பட்டபோதும்,

“என்னை திட்டினால் உன் கோபம் குறையும்னா எவ்வளவு வேணுமானாலும் பேசிக்கோ வெண்பா..ஆனால் உன்னை மட்டும் வருத்திக்காத..உனக்கு மறுபடியும் எதாவதுனா சத்தியமா என்னால தாங்க முடியாது வெண்பா..இப்ப இந்த நிமிஷம் உன் ஹெல்த் தவிர வேற எதுவும் இந்த உலகத்தில் எனக்கு முக்கியம் இல்லம்மா..”

தணிவாய் கண்பார்த்து பேசியவனிடம் எங்கிருந்து கோபத்தை இழுத்து வைப்பது..? எதுவும் சொல்லாமல் அவள் பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

இன்று மட்டும் அல்ல..கடந்த இரண்டு வருடங்களாகவே அப்படி தான்.கோபம் கொண்டு அவள் என்ன பேசினாலும் சரி அதனை அமைதியாய் ஏற்று அவளை நிதானப்படுத்த தான் பெரிதும் போராடுவான். 

உண்மையில் முதலில் அவனுக்காக அவளும் தற்போது அவளுக்காக அவனும் என்று இருவருமே விட்டு கொடுத்து தான் இருந்தனர்.அதுவே பிரச்சனைகளையும் மீறி அவர்கள் இடையில் பிரிவினை என்ற ஒன்றே வரவிடவில்லை.சண்டையோ சமாதானமோ விருப்போ வெறுப்போ இத்தனை வருடங்களில் ஒருவரை விட்டு மற்றவர் இருந்ததே இல்லை.

‘கோபங்கிற உணர்ச்சியே மறந்துட்டாரா..இந்த மனுஷனை ரொம்ப தான் படுத்துகிறோமோ..”

என்று அவளே யோசித்து பார்த்திருக்கிறார்.

அவனது அந்த பொறுமையே கல்லாய் இறுகியிருந்த வெண்பாவின் மனதை கரைத்தது.அந்த அலாதி அன்பில் அவனோடான கசப்பான நிகழ்வுகள் போன ஜென்மம் நடந்ததுபோல் நினைவடுக்கில் புதைந்து மறைந்தது போல் வாழ்க்கையை அதன்போக்கில் வாழ பழகி இருந்தாள்.

இன்று பெற்றோரை பார்த்ததும் அவர்கள் மீதிருந்த கோபமும் தன் இயலாமையையும் அவன் மீது திரும்பியிருந்தது. 

வெண்பா ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலே இருக்க, ‘இப்போ எதை மனசுல போட்டு குழப்பிக்கிறாளோ தெரியலையே..”

என்று மதிக்கு தான் கவலையாய் போனது.

ஆழிக்கண்ணன்,உதயா,நிலா மூவரும் வீடு திரும்பும் வரையிலுமே இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் அவரவர் சிந்தனையிலே  அமர்ந்திருக்க பின்பு வெண்பா எதுவுமே நடவாததுபோல் பேசவும் இத்தோடு இதனை விட்டுவிட்டாள் என்றே நினைத்தான்.ஆனால் மனதில் ஒரு முடிவு எடுத்த பின்பே இந்த அமைதி என்பது அவனுக்கு தெரியவில்லை.

அன்று மாலை காலிங் பெல் சத்தம் கேட்டு யாரென்று பார்க்க சென்ற மதி நிச்சயம் தன் மாமனார் மாமியாரை எதிர்பார்க்கவில்லை.அதனை விழிகளில் தேக்கி,

“வ..வாங்க மாமா..வாங்க அத்தை..”

என்று அவர்களை வரவேற்றவன் அவர்கள் பின் நின்ற உதய் குமாரை அப்பொழுது தான் கவனித்தான். 

புருவங்கள் முடிச்சிட சட்டென்று அவன் முகம் இறுகி போனது.செந்தில்நாதன்,சரண்யா மீது அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை.ஆனால் உதய் வீட்டிற்கு வந்து பேசி சென்றதில் அவன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தான்.அதுவும் உதயா திருமணத்தை பற்றி பேச்சே எடுக்கவிடாமல் விரக்தியாய் விலகி போகிறாள்.அவள் சாக்குபோக்கு சொன்னாலும் நிஜமான காரணம் இவன் தான் என்பது கூடவா புரியாது.அதிலே இன்னும் கோபம் அதிகரிக்கவே செய்ய அதனை அவன் முகம் அப்படியே பிரதிபலித்தது.

அதனை உணர்ந்தாலும் உதய்யோ சற்றும் கண்டுக் கொள்ளவில்லை.ஏனெனில் அவன் இறங்கி வந்தது வெண்பாவிற்காகவும் உதயாவை காயப்படுத்திய குற்றவுணர்ச்சியாலும் தானே தவிர மதி மீது அவனுக்கு இன்னமும் அதே கோபம் இருந்தது.

இவ்வாறு மாமனும் மச்சானும் ஒருவரையொருவர் பார்வையாலே பஸ்பமாக்க ‘இதேதுடா..’ என்று செந்தில்,சரண்யா தான் கவலை கொண்டனர்.

மதியே எதிர்ப்பார்க்காத போது மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை பற்றி அறியாத ஆழிக்கண்ணன் பற்றி சொல்லவும் வேண்டுமோ..!!

என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தாலும் சுதாரித்து, “வாங்க சம்பந்தி..” என்று வரவேற்றவர் உதய்யை பார்க்க அன்று அவன் பேசியது மனக்கண்ணில் தோன்றினாலும் எதனையும் மனதில் வைத்து கோபம் காட்டும் நிலையை எல்லாம் தாண்டி பக்குவப்பட்ட மனிதராய் அவர் மாறிவிட்டதால்,

“வாப்பா உதய்..” என்றார் பெருந்தன்மையாய்..அது அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

உதயாவும் அங்கே தான் இருந்திருந்தாள்.இவர்களை கண்டதும் அங்கே நிற்க பிரியப்படாமல் அமைதியாய் உள்ளே சென்றுவிட அங்கே நிலவிய அசாத்திய மௌனத்தை உடைத்தது நிலா தான்.

“ஐ..தாத்தா..” 

என்று உற்சாகமாய் ஓடி அவர்களிடம் வந்த நிலா, “நீங்க என் தாத்தா பாட்டி தானே..ஏன் என்னை பார்க்க இத்தனை நாள் வரவே இல்லை…அம்மாட்ட கேட்டா ஏன்னே சொல்ல மாட்டாங்க..”

என்று அவள் உரிமையாய் பேச அவர்களுக்கு மனம் குளிர்ந்து போனது.மகளை விட பேத்தி மீது தாத்தா பாட்டி வைக்கும் பாசமே தனி தானே..!!

ஆசையாய் அவளை அருகில் நிறுத்தி திருஷ்டி முறித்து செல்லம் கொஞ்சி அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லி என்று கொஞ்ச நேரத்திற்கு நிலாவை தவிர எதுவுமே அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.தாத்தா பாட்டியிடம் பேசிவிட்டாலும் உதய்யை பார்ப்பதும் குனிவதுமாய் பேச தயங்க,

“ஏன் உன் தாத்தா பாட்டியை மட்டும் தான் தெரியுமா..இந்த மாமாவை உனக்கு யாருனு சொல்லலையா உங்க அம்மா..”

என்று சிரிப்போடு கேட்க,

“தெரியுமே..”என்று மெல்லமாய் வந்தது பதில்..

“அப்போ என் பேரு சொல்லு..”

என்று அவன் கன்னம் கிள்ள,

“உதய் மாமா..” என்று மீண்டும் தயக்கமாய் சொல்லி சரண்யாபின் மறைய அவள் முகத்தில் வந்து போன பாவனையை இரசித்து பார்த்தான்.

“நீங்க வேணாம் மறந்து போலாங்க..நாங்க அப்படி எல்லாம் யாரையும் மறக்க விட்ற மாட்டோம்..”

என்று வெண்பாவின் குரல் கேட்டு சட்டென்று அவளை திரும்பி பார்த்த உதய்,

“அக்கா..” என்று அவளை நோக்கி அடியெடுத்து வைக்க,

“அடடே..என்னையா கூப்பிட்டீங்க..உங்க கண்ணுக்கு இன்னைக்காவது நான் தெரியுறேனா..”

என்றாள் போலியான அதிர்ச்சியோடு..பேந்த பேந்தவென முழித்து நின்ற நிலாவை மதி உள்ளே உதயாவிடம் அனுப்பி வைத்தான்.

“உன் கோபம் புரியுது க்கா..நான் செஞ்சதை எது சொல்லியும் நியாயப்படுத்த விரும்பலை..தப்பு தான்..மன்னிச்சுடேன் க்கா..”

“அப்பா அம்மா சொல்லி அவங்களுக்காக நீ வந்து என்னுட்ட பேசணும்னு அவசியம் இல்ல சரியா..அவங்க என் அப்பா – அம்மா.. கோபப்பட்டாலும் அவங்களோட நானே சமாதானம் ஆகிப்பேன்..நீ அதுக்காக வந்து பேசணும்னு இல்ல..”

“ஏன் க்கா இப்படி சொல்ற..அப்ப நான் உனக்கு யாரும் இல்லையா..?? யாருக்காகவும் நான் வந்து பேசல..என் அக்கா எனக்கு வேணும்னு தான் பேசுறேன்..ப்ளீஸ்..தயவு செஞ்சு இப்டி யாரோ மாதிரி பேசாத…எல்லாத்திற்கும் ஸாரிக்கா..”

“ஸாரி கேட்டுட்டா..நீ பேசியது செஞ்சது எதுவும் இல்லேன்னு ஆகிடுமா..”

“ஆகாது தான்..வேற என்ன செய்யணும் சொல்லு..நீ என்ன சொன்னாலும் மறுப்பேச்சு பேசாமல் செய்றேன்..”

“அப்படியா..அப்போ முதல்ல என் மாமனாரிடம் போய் அன்னைக்கு பேசினதுக்கு மன்னிப்பு கேளு..”

என்க, “அவ்வளவு தானே..” என்று வேகமாய் ஆழிக்கண்ணனை நெருங்கி, “என்னை மன்னிச்சிடுங்க மாமா..அன்னைக்கு உங்களுட்ட நான் நடந்துக்கிட்ட விதம் ரொம்பவும் தப்பு தான்..”

என்று உளமாற கேட்டவன் போதுமா என்று தமக்கையை பார்க்க அவளோ தீர்க்கமான குரலில், “அவர் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி தர சொல்லி கேளு..”

என்று கூறி அனைவரையும் அதிர செய்தாள்.

அதுவரை வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்த அனைவரும் வெவ்வேறு விதமாக அதிர்ந்தனர் உள்ளே இருந்த உதயா உட்பட..

மதிக்கு மறுத்து பேச வாய் துடித்தாலும் வெண்பாவின் பார்வையில் பொறுமையை இழுத்து பிடித்து நிற்க, ஆழிக்கண்ணன் ‘ஏன் இப்படி என்று..’ பார்க்க,

செந்தில்நாதனும் சரண்யாவும்,  ‘இவள் பாட்டுக்கு சொல்கிறாளே..மாப்பிள்ளையும் சம்பந்தியும் என்ன நினைப்பார்களோ..’ என்று தவிப்பாய் பார்க்க உதய்யோ,

 “அக்கா..” என்றான் அதிர்ச்சியாய்..

அவள் பதில் பேசாமல் அழுத்தமாய் பார்த்து நிற்க,

“இது சரிவராதுக்கா..யாருக்கும் விருப்பம் இருக்காது..”

என்று அவன் உதயாவை மனதில் வைத்து கூற வெண்பாவோ,

“என் மேல நம்பிக்கை வைச்சிருக்கவங்க..என் முடிவை ஏத்துப்பாங்க…”

என்று ஸ்திரமாய் தன் பிடியில் நிற்க ஆழிக்கண்ணனை ஏறிட்ட உதய்,

“உதயாவை நான் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன் மாமா..”

என்று அவர் கண்களை நோக்கி கேட்ட அதே சமயம் உள்ளிருந்த உதயா,

“நீ கேட்டுட்டா..நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறியா..போனா போச்சுனு நீ வாழ்க்கை போடுற அளவுக்கு நான் தாழ்ந்து போகல..நீ எனக்கு வேணாம்..நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்..மாட்டவே மாட்டேன்..”

பல்லை கடித்து தனக்கு தானே அவள் சொன்ன பாவனையில் அருகில் நின்ற நிலா சற்று பயந்து தான் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!