Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 7.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 7

ஓர விழி பார்வையாலே

உயிர் வரை எரிக்கும்

அழகான காதல் தீ நீ!!!



Advertisement

 

அதே போல் அடுத்த நாளே கிளிசரனை வாங்கிக் கொண்டு வந்தான் செல்வா.

 

Advertisement

“இந்தா இதை ஊத்திக்கோ”, என்று அன்னம் கையில் செல்வா கொடுத்ததும் “அட பாவி குஞ்சு, இது உனக்கே நியாயமா டா?

Advertisement

சொன்னது மாதிரியே ஆசிட் வாங்கிட்டு வந்துட்டியா?”, என்று கேட்டாள் அன்னம்.

 

“என்னை அப்படி கூப்பிட்டா நிஜமாவே ஆசிட் ஊத்திருவேன். இது ஆசிட் எல்லாம் இல்லை. நீ அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லை பாட்டி. இதை போட்டா தன்னால கண்ணீர் வரும். இப்ப ஸ்டார்ட் பண்ணுவோமா?”

Advertisement

 

“இரு டா. கொஞ்சம் வயிறு கலக்குற மாதிரி இருக்கு. போயிட்டு வந்துறேன்”, என்று கழண்டு கொண்டாள் அன்னம்.

 

“அண்ணா இந்த கிழவியை நம்பலாமா? கவுத்துருமா?”, என்று கேட்டான் தினேஷ்.

 

“அதெல்லாம் பக்காவா பாட்டி நடிக்கும். அன்னைக்கு பாத்தல்ல? சூப்பரா நடிச்சது. ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர பாட்டிக்கும் ஆசை இருக்கு டா”, என்று சொன்னான் கதிர்.

 

அதன் பின்னர் அவர்களால் அன்னத்தை கண்ணில் காண முடிய வில்லை. ஒரு வழியாக அன்னத்தை தேடி பிடித்து சம்மதிக்க வைத்தான் கதிர்.

 

அன்று இரவு அனைவரும் சாப்பிட அமரும் போது தங்களுடைய நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

 

எல்லாரும் சாப்பிட அமர்ந்ததும் “டேய் குஞ்சு, பாட்டியை போய் கூட்டிட்டு வா டா”, என்றாள் வேணி.

 

“போ மா, உனக்கு வேற வேலையே இல்லை. அதுக்கு பசிச்சா அது வரட்டும்”

 

“செல்வா, இது என்ன பாட்டியை மரியாதை இல்லாம?”, என்று சொல்லி முறைத்தார் மதியழகன்.

 

“முறைப்பு மன்னார் சாமி, முறைக்க ஆரம்பிச்சிட்டார் பா”, என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே சென்றவன் ரூமில், பாட்டி என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.

 

கையில் அவன் கொடுத்த பாட்டிலை வைத்துக் கொண்டு எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தாள் அன்னம்.

 

“பாட்டி, நாம நடிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. அதை கொடு. நான் போட்டு விடுறேன்”, என்று சொல்லி அதை திறந்தான்.

 

“டேய் உன் தாத்தாக்கு நான் அழுதாலே பிடிக்காது தெரியுமா? அவ்வளவு பாசமா என்னை பாத்துகிட்டார். இப்ப எல்லாரும் சேந்து என்னை அழ சொல்றீங்களே? இது நியாயமா டா?”

 

“கவலைப் படாத, கதிர் அண்ணனுக்கு பையன் பிறந்தா தாத்தா பேரையே வைக்க சொல்றேன். சரி நீ சொதப்பிறாத”, என்று சொல்லி அதை போட்டு விட்டான்.

[the_ad id=”6605″]

“ரெடியா இரு பாட்டி. நான் கீழ போய் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான்.

 

கீழே சென்ற செல்வா, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு “அம்மா பாட்டிக்கு சாப்பாடு வேண்டாமாம்”, என்றான்.

 

“எதுக்கு டா?”, என்று கேட்டாள் வேணி.

 

“கேட்டேன், அதுக்கு ஏங்கி ஏங்கி அழுறாங்க”

 

“என்னது? அம்மா அழுதுட்டு இருக்கா?”, என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றார் மதியழகன். பின் அனைவரும் அங்கே சென்றார்கள்.

 

உள்ளே சென்றவர்கள் பதறிப் போனார்கள். அங்கே கண்கள் சிவந்திருக்க, கண்ணில் இருந்து கண்ணீர் வந்த வண்ணம் இருந்தாள் அன்னம்.

 

“இந்த பாட்டிக்கு கொஞ்சம் தான போட்டு விட்டேன். இது என்ன இப்படி நடிக்குது? உலக நடிப்பு டா சாமி”, என்று உள்ளுக்குள் நினைத்து தன்னுடைய அண்ணன்கள் இருவரையும் பார்த்தான் செல்வா. அவர்களும் புரியாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“ஐயோ, என்ன மா ஆச்சு?”, என்று அதிர்ந்து போய் கேட்டார் மதி.

 

“ஒண்ணும் இல்லை டா. நீங்க எல்லாரும் எதுக்கு இங்க வந்தீங்க? போங்க. போய் சாப்பிடுங்க”, என்று அழுது கொண்டே சொன்னாள் அன்னம்.

 

“அம்மா, நீ அப்பா இறந்தப்ப தான் அழுத. அதுக்கப்புறம் நீ அழுது நான் பாத்ததே இல்லை. இன்னைக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?”

 

“என்ன ஆகணும்? நான் சீக்கிரம் சாகணும்னு தான் வேண்டிக்கிட்டு இருக்கேன். வேற என்ன நினைப்பு எனக்கு இருக்க போகுது?”

 

“என்ன மா லூசு மாதிரி பேசுற?”

 

“நான் லூசு தான் டா. லூசு தான். லூசா இருக்க போய் தான் வாழ தெரியாம வாழ்ந்துருக்கேன்”

 

“அத்தை, என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் உங்களை எதுவும் கஷ்ட படுத்திட்டேனா?”

 

“உன்னை குறை சொன்னா என் நாக்கு அழுகிரும் கண்ணு. நீ எனக்கு மருமக இல்லை. இன்னொரு மக. ஆனா என் மக இருந்தும் இல்லாம போய்ட்டாளே?”

[the_ad id=”6605″]

“ஏமா, அன்னைக்கு சகுந்தலா அம்மான்னு கூப்பிட்டப்ப அவளை அப்படி திட்டின?”

 

“என்ன பண்ண சொல்ற? அவ குடும்பத்து மேல கோபம் இருக்கு தான். ஆனா பெத்த வயிறு பதறுதே. இப்ப கொஞ்ச நேரம் படுத்துருந்தேன். யாரோ செத்து போன மாதிரி கனவு வந்துச்சு. கனவுலே அழுதுருக்கேன் போல? என் மக அழாத மான்னு சொல்லி கண்ணீரை துடைச்சு விட்டா. அதுல இருந்து மனசு எதுவோ அடிச்சிகிது. எதுவோ பயமா இருக்கு டா மதி”

 

“அம்மா சாகுற மாதிரி கனவு கண்டா, கல்யாணம் நடக்கும்னு சொல்லுவாங்க. நீ கவலை படாத”

 

“எப்படி டா கவலை படாம இருக்க? என்னால முடியலையே. கொஞ்ச நேரம் அழுதுட்டு விட்டுருவேன். நீங்க போய் சாப்பிடுங்க”

 

“இப்படி அழுதுட்டு இருந்தா என்ன மா செய்ய முடியும்?”

 

“ஏன் மதி, நான் செத்ததுக்கு அப்புறம் உங்க அப்பாவை அவளை பாக்க கூடாதுன்னு சொன்ன மாதிரி என்னையும் என் மகளை பாக்க கூடாதுன்னு சொல்லிருவியா? என் பொணத்தைக் கூட என் மக பாக்க மாட்டாள்ல?”, என்று அன்னம் கேட்டதும் சாட்டையில் அடித்தது போல துடித்து போனார் மதி.

 

தாங்கள் சொல்லி கொடுத்ததை பேச வில்லை என்று நினைத்த பேரன்களுக்கு பாட்டியின் அடி மனதில் உள்ள வலி புரிந்தது.

 

“அம்மா”, என்று அதிர்ச்சியாக அழைத்தார் மதி. தன்னுடைய தந்தை இறந்ததும் இறந்த உடலை கூட சகுந்தலாவை பார்க்க கூடாது என்று தான் சொன்னது நினைவில் வந்தது. தான் பெரிய தவறு பண்ணியதாக இப்போது பட்டது மதியழகனுக்கு. ஏற்கனவே அவர் அந்த குற்ற உணர்வில் தான் இருந்தார்.

 

“பெற்ற தந்தையை பாக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நான் யார்? ஊர் காரங்க சமாதான படுத்துனதுனால சகுந்தலா அப்பாவைப் பாத்தா. இல்லைனா நான் பாக்கவே விட்டுருக்க மாட்டேனே? அந்த துரைராசு பண்ணுண தப்புக்கு, மொத்த குடும்பத்தையும் போக சொல்லிட்டேனே?”, என்று எண்ணியவருக்கு தலை வலித்தது.

 

இப்போது அன்னத்தின் ஆதங்கமும் புரிந்தது. மதியின் முகத்தையே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“உன்னை கஷ்ட படுத்தணும்னு நான் சொல்லலை மதி. எனக்கு என்னன்னு தெரியலைப்பா. சகுந்தலா நினைவாவே இருக்கு”, என்று சொல்லிக் கொண்டே மயங்கி சரிந்தாள் அன்னம்.

 

அனைவரும் பதறிப் போனார்கள். இதை யாருமே எதிர் பார்க்க வில்லை. “கதிர் காரை எடு”, என்று மதி சொன்னதும் அவன் விரைந்தான்.

 

அடுத்த கால் மணி நேரத்தில் அந்த தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டாள் அன்னம்.

[the_ad id=”6605″]

“அதிக மன அழுத்தம் தான் காரணம். வயசும் ஆகிருச்சுள்ல? அதனால எதிர்ப்பு சக்தி வேற கம்மியா இருக்கு. நல்ல  தூங்குறதுக்கு ஊசி போட்டுருக்கோம். எழுந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. அவங்களை அதிகம் யோசிக்க விடாதீங்க”, என்று மருத்துவர் காரணம் சொன்னார்.

 

“ஏங்க, சகு கிட்ட சொல்லுவோமா? அத்தை அவளைப் பாத்தா சரியாகிருவாங்க”, என்றாள் வேணி.

 

அது மதிக்கு புரிந்தாலும் அவருடைய தன்மானம் இடம் கொடுக்க வில்லை. அவர் தயக்கத்துடன் நிற்க அவர் அருகில் சென்ற கதிர், “நான் போய் கூட்டிட்டு வரேன்ப்பா. நீங்க வர வேண்டாம்”, என்று சொல்லி கிளம்பினான். தன்னால் தான் பாட்டிக்கு இப்படி ஆகி விட்டதோ என்று அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

 

அவன் கிளம்பும் போது “நானும் வரேண்ணா”, என்று அவனுடன் கிளம்பினான் தினேஷ்.

 

செல்வா தன்னுடைய அம்மா அருகில் சோகமே உருவாக அமர்ந்திருந்தான். அவன் மனது குழம்பி தவித்தது. “இந்த பாட்டி நடிக்குதா, இல்லை உண்மையிலே மயங்கிருச்சா? மயக்கம் உண்மையா இருக்கலாம். அது அத்தை மேல உள்ள பாசத்தால கூட இருக்கலாம். ஆனா தூங்குனேன், கனவு கண்டேன்னு சொன்னது நம்பும் படியாக இல்லையே”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

கதிரும் தினேஷும் வண்டியில் எரியட்டும் அங்கு வந்த மதி “அவங்க என் மேல உள்ள கோபத்துல ஏதாவது சொன்னா பெருசா எடுத்துக்காதீங்கப்பா. பொறுமையா சொல்லிட்டு வந்துருங்க”,என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

“பாட்டியை நடிக்க தான சொன்னோம். ஆனா இப்படி ஆகிருச்சே அண்ணா”, என்றான் தினேஷ்.

 

“நானும் எதிர் பாக்கலை டா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நமக்கு நல்ல பிரண்ட் டா. பாட்டிக்கு எதுவும் ஆக கூடாது”

 

“ஒண்ணும் ஆகாதுண்ணா. ஆனா மாமா வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னு பயமா இருக்கு”

 

“பயப்படாத. எல்லாருக்கும் எல்லார் மேலயும் பாசம் இருக்கு. அதை அடுத்தவங்களுக்காக மறைச்சு வச்சிருக்காங்க. மிஞ்சி மிஞ்சி போனா அடிப்பாங்களா? பாட்டிக்காக வாங்கிக்கலாம் டா”

 

தேன்மொழி வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் கதிர். சுற்றிலும் இருள் போர்வை போர்த்தியிருந்தது. வெளியே எந்த நடமாட்டமும் இல்லை.

 

தன்னுடைய அறையில் இருந்த தேன்மொழி கார் சத்தம் கேட்டதும் “வேற எவனோ பொண்ணு பாக்க வந்துட்டானோ?”, என்று பதறிப் போனாள்.

 

“சே, இந்த நேரத்துல எப்படி வருவாங்க. இது வேற யாராவது இருக்கும். யாருன்னு பாப்போம்”, என்று எண்ணி ஜன்னல் வழியே பார்த்தாள்.

 

ஆனால் காரில் இருந்து இறங்கிய தினேஷைப் பார்த்ததும் “இவன் என்ன இங்க?”, என்று யோசிக்கும் போதே அந்த பக்கம் கதிர் இறங்கினான்.

 

“ஐயையோ நம்மளை பொண்ணு கேக்க தான் வந்துருக்கானோ?”, என்று பயந்து போனாள் தேன்மொழி. ஆனாலும் அவனுக்கு செய்து கொடுத்த சத்தியம் நினைவில் வந்து “இன்னைக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கா? ஏற்கனவே வீட்ல யாரும் என்கிட்ட பேசமாட்டிக்காங்க”, என்று எண்ணிக் கொண்டு அறைக்கு வெளியே நகர்ந்தாள்.

 

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த சண்முகம்மாளுக்கு, அவர்களைக் கண்டு ஒரு திகைப்பு வந்தாலும் “என்ன கண்ணுங்களா வெளியவே நின்னுட்டீங்க? உள்ள வாங்க”, என்று புன்னகையுடன் அழைத்தாள்.

 

சண்முகம்மாளைப் பார்த்து சிரித்த கதிர் “அத்தையைப் பாக்கணும் பாட்டி”, என்றான்,

 

“உன்ற அத்தையை பாக்க யார்க்கிட்ட கண்ணு கேக்கணும். உள்ளார வா, எம்மாடி சகுந்தலா யார் வந்துருக்கா பாரு?”, என்று சொல்லி உள்ளே குரல் கொடுத்தாள்.

 

“என்னங்க அத்தை?”, என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்த சகுந்தலா சத்தியமாக அவர்களை எதிர்பார்க்க வில்லை.

 

“ஒரு வேளை தேன்மொழி மனசை இவன் தான் கலைச்சிருப்பானோ? பொண்ணு கேக்க தான் வந்திருக்கானோ?”, என்று ஒரு மனது நினைத்தாலும் “என்னமா வளந்துட்டாணுங்க என் அண்ணன் பசங்க”, என்று மற்றொரு மனது பூரித்து போனது.

 

ஆனால் அதை வெளியே காட்டாமல் இருவரையும் பார்த்து முறைத்தாள் சகுந்தலா. “பையங்களை உள்ள கூப்பிடு மா”, என்றாள் சண்முகம்மாள்.

 

“போங்க அத்தை, அவங்க வழி மாறி வந்துருப்பாங்க. அவங்களுக்கு இந்த அத்தை எல்லாம் கண்ணுக்கு தெரியுமா? இது உங்க அப்பாவோட தங்கச்சி வீடு இல்லைப்பா. உங்க குடும்பத்துக்கு எதிரி வீடு”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

“அத்தை”, என்று அழைத்தான் கதிர்.

 

“அத்தையா நானாப்பா? நான் எல்லாம் உன்ற கண்ணுக்கு தெரியுறேனா? அத்தைன்னு சொல்றதுக்கு இத்தனை வருஷம் ஆச்சோ?”, என்று கேட்ட சகுந்தலாவின் கண்கள் அருவியை பொழிந்தது.

 

“அத்தை உங்க கோபத்தை எல்லாம் அப்புறம் காட்டுங்க. அடிக்க கூட செய்யுங்க. நாங்க வாங்கிக்கிறோம். நாங்க இப்ப முக்கியமான விஷயம் பேச தான் வந்தோம்”, என்று ஆரம்பிக்கவும் உள்ளே இருந்து அனைவரும் வந்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!