Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ05 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  05

 

நாட்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் நகர்ந்தது. கௌரவ் வீட்டில் அதிகம் இருப்பதில்லை. இன்னும் நொண்டிக் கொண்டே தான் நடந்தான். வேலை தேடுவதாக கூறினான். கோமல் வெளியே செல்ல மறுத்துவிட்டாள். ஏனோ பார்த்த அனைவருமே கயவர்களாய் போனதால் கூட இருக்கலாம்.

 



Advertisement

தனிமையில் நேரம் கழிந்தது. எந்த தனிமை அவள் கழுத்தை நெரித்ததோ.. அதே தனிமையை இன்று விரும்பி தோழியைப் போல் ஏற்றுக்கொண்டாள். மாலை வீட்டின் பின்னால் இருந்த துணி துவைக்கும் பாறையில் அமர்ந்திருந்தாள். ஒரு தட்டையான கருங்கல் பாறை. கொஞ்சம் சிரமப்பட்டால் தூக்கலாம்.. சிரமப்பட்டு தூக்க முடியாமல் அதைத் தூக்கி.. இடம் மாற்றி சுவர் அருகில் வசதியாய் போட்டுக் கொண்டாள்.

 

தினமும் ஒவ்வொரு இடமாக மாற்றிப் போட்டுக் கொள்வாள். முன்பெல்லாம் அசைக்க கூட முடியாது. பாடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாய் தள்ளி.. நகர்த்த வேண்டும். இரண்டு வார கடும் பயிற்சி… இன்று தூக்கிக் கொண்டு நடந்தாள் பத்தடி தூரம். சுவரோரம் போட்டும் விட்டாள்.

Advertisement

 

Advertisement

எதையோ வென்ற உணர்வு. ‘அடுத்து இருபது அடி இதைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டாள். மன பலம் மட்டும் இந்த உலகிற்கு போதாது என்று கற்றதால் ஏற்பட்ட எண்ணம்.

 

அவள் உடலளவிற்கு அந்த கருங்கல்லே போதுமானதாய் இருக்க, கால்களைக் கட்டிக்கொண்டு அதன் மேல் அமர்ந்து கொண்டாள்.

Advertisement

 

இன்று, சிந்தனை அவள் தாத்தா பாட்டியை நோக்கியே சுற்றியது. பட்டாம்பூச்சியாய் திரிந்த காலம் அது. அம்மா அப்பா நினைவில் இல்லை. அவர்களோடு சொல்லிக் கொள்ளும் படியான நினைவுகள் என்று அவளுக்கு எதுவுமே இல்லை. அவள் வாழ்வில் கலந்தது அவள் தாத்தா, பாட்டி, சுந்தரி – அவள் உயிர்த் தோழி, கருப்பன் – அவள் நாய்க்குட்டி, மற்றும் அவளின் ஆடு, மாடு, கோழி, வாய்க்கால்  தோட்டம் துரவு… அவளின் கயிற்று ஊஞ்சல்.

 

அவளின் கயிற்று ஊஞ்சல்… மனம் அந்த கயிற்றை வருடி நின்றது. அந்த ஒற்றை கயிற்றில் கூட தாத்தாவின் அளவில்லா பாசத்தைப் பார்க்கலாம்.

 

தாத்தா கட்டிக் கொடுத்த நீளமான ஊஞ்சல். அவள் கை அந்த கயிற்றில் பட்டு வலிக்க கூடாதென்று தாத்தா அவர் பழைய வேட்டியைக் கிழித்து அவள் கை படும் இடமெல்லாம் சுற்றி விட்டிருந்தார். சின்னவள் கையில் ஒரு கீறலைக் கூடப் பட விடாமல் பார்த்துக் கொண்டார். ஒரு போதும் ‘நான் உனக்கு இதைச் செய்வேன் அதைச் செய்வேன்’ என்றோ ‘அதை.. இதை எல்லாம் செய்தேன்’ என்றோ கூறியதே இல்லை. அந்த ஊஞ்சலோடு வானில் பறப்பாள். தன்னையும் அறியாமல் முகம் புன்னகையை உதிர்த்தது.

 

வீட்டின் முன் இருக்கும் அந்த மாமரம். அந்த உயரமான கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்று ஊஞ்சல். இவளுக்கும் இவள் தோழிகளுக்கும் பிடித்த பொழுது போக்கு.

 

“இன்னும் மேல.. இன்னும் வேகமா…” ஆசை அடங்கியதே இல்லை. காலை நீட்டி கிளையின் இலையைத் தொட ஆசை… தொட்டதேயில்லை. கிளையின் உயரம் அப்படி.

 

[the_ad id=”6605″]

 

“போடி உனக்கு ஆட்ட நான் ரெண்டு சொம்பு பத-நீர் தான் குடிக்கணும்” சுந்தரி அலுத்துக் கொண்டாலும் ஊஞ்சலை ஆட்டி விடுவாள்.

 

அவள் கருப்பன் வெறும் ஆறு மாத குட்டி.. அவள் கையில் அது மூன்று மாத குட்டியாய் கிடைத்தது. எலும்பும் தோலுமாய் இருந்த குட்டி இன்று கண்ணைப் பறிக்கும் கருப்பு நிறத்தில் கொழு மொழுவென்று மாறியிருந்தது.

 

அவள் ஊஞ்சலில் ஆட அதுவும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அவள் பின்னோடு ஓடும்.

 

“டேய் கருப்பா அக்காவ பிடி பாப்போம்..” அவள் எங்குச் சென்றாலும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு வாலை அட்டிக் கொண்டே அவள் பின்னோடு ஓடும்.. அவளின் செல்ல குழந்தை அது. அவளோடு உண்டு.. உருண்டு புரண்டு.. நக்கி.. கால் மாட்டில் உறங்கிய செல்ல குழந்தை.. இன்று சுந்தரியின் நாய்க்குட்டியாய் மாறிப் போனது. ‘அது’ என்று அழைக்க விடமாட்டாள் தோழிகளை. ‘அவன்’ இல்லை ‘கருப்பன்’ மட்டும் தான். அவனுக்குப் பட்டாம் பூச்சியைப் பார்த்தால் என்னாகுமோ தெரியாது… அதன் பின் ஓட ஆரம்பித்துவிடுவான். அவளும் தான்.

 

வீட்டின் முன் ஏழு இதழ் மஞ்சள் மலர் பூந்தோட்டம் வைத்திருந்தாள். மணமிருக்காது ஆனால் அதில் தேன் இருக்குமோ என்னமோ.. படை எடுத்துக்கொண்டு வெளிர் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளும் இளம்-பச்சை நிற வண்ணத்துப் பூச்சிகளும் வரும். இறக்கையில்லா பட்டாம்பூச்சியாய் அவளும் அவள் கருப்பனும் வண்ணத்துப்பூச்சிகளோடு பறந்து திரிந்த நாட்கள் அவை.

 

புன்னகை முகமாய் யோசித்துக் கொண்டிருந்தவள் முகம் வாடிப்போனது. கருப்பனை மனம் தேடியது.

 

‘ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் மீண்டும் அந்த பட்டாம் பூச்சியாய் மாற முடியாதா? ஊஞ்சலில் ஆகாசத்தை நோக்கி இறக்கை இல்லாமல் பறக்க முடியாத?’ என்ற ஏக்கம் எட்டிப் பார்த்தது.

 

தவறான பார்வை, அருவருப்பான உறவு என்று எதுவும் இல்லாமல் இன்பமாய் பேசி சிரிக்கும் தனக்கென்ற ஒரு உறவு.. ஒரு வாழ்வு..? ஏன் தனக்கு அமையவில்லை என்று மனம் விம்மியது. அவள் வாழ்வில் வசந்தமாய் இருந்த அனைவரும் சிந்தனையை எட்டிப் பார்த்துச் சென்றனர். அவள் பள்ளி வாத்தியார்கள் கூட அதில் அடக்கம்.

 

ஏனோ அவள் இன்ப கனவில் கௌரவ் இருக்கவே இல்லை. அவன் யார் அவளுக்கு? கணவனா? இன்னும் புரியவே இல்லை.. மற்ற ஓநாய்களுக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. எல்லோரும் போல அவனுக்கும் அவளிடம் ஒரே ஒரு தேவை தான் இருந்தது. மற்றவர்கள் அடித்தனர்.. இவன் கருப்பு மணி மாலையைக் காட்டி ‘ப்ளீஸ்’ என்றான். இப்பொழுது அதுவும் அவனுக்கு நிராகரிக்க படவே அவன் இரவு வெகு நேரம் கழித்துத் தான் வீட்டிற்கு வந்தான். பேசுவது கூட அரிதாகிப் போனது.

 

தில்லியிலிருந்த வேளை கௌரவ் ஆசையாய் பேசுவான். மகாராஷ்டிரா வந்த பின்னும் இரண்டு வாரம் காதல் மொழி அவள் உள்ளத்தை நிறைத்தது. அதன் பின் மாதங்கள் ஐந்து ஓடிவிட்டது. காயங்கள் மேல் காயங்கள் மட்டும் நிரந்தரமாய் போனது. அந்த ஐந்து மாதமும் அவன் இல்லை. தில்லியிலிருந்து கூட்டிவந்ததோடு சரி!

 

தாத்தாவோடு இருந்த போதும் சரி, சொந்தங்களோடு இருந்த போதும் சரி, ஒருவர் அவளைத் தொட்டுப் பேசியது இல்லை.

 

ஆனால் இன்று? பார்த்தவன் எல்லாம் தயவு தாட்சன்னியம் இன்றி அவளை வேட்டையாடினான்!

 

வாழ்க்கை தடம் மாறி போனதை நினைக்க கண் கரித்து கொண்டு வந்தது.

 

தன்னையே தன் அனுமதி இல்லாமல் தீண்டி… மறுப்பு தெரிவித்தால் அதற்கும் அடி வாங்கி… என்ன வாழ்விது?

 

ரிஷியிடமிருந்து அடி விழும்.. அதுவும் கௌரவ் வந்த பின் தான்! ஒரு முறை அவன் அவளை அணைத்தது கூட இன்று ஒன்றுமில்லாமல் போனது! கண்டிப்பாக அந்த அணைப்பில்.. அந்த தொடுகையில் வக்கிரம் இருக்கவில்லை. ஒரு ஆதங்கம்.. கையை விட்டு போய்விடுவாளோ என்ற தவிப்பு மட்டும் தான்! இன்று தெரிந்தென்ன லாபம்?

 

வீட்டை விட்டு கௌரவோடு வந்திருக்கவே கூடாது! மனம் பகிரங்கமாய் உரைத்தது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒர் கால் இருந்தது நிஜம். ஆனால் படகென்று நினைத்தது தான் புதைகுழியாய் போனது.

 

தில்லியில் கால் மிதித்த மூன்று மாதம் சென்றபின் தான் கௌரவை பார்த்தாள். கௌரவ்..? கௌரவ் தனக்கு யார் என்ற கேள்வி அவளுக்குள் எழ ஆரம்பித்தது. கணவன் ஸ்தானத்தில் அவனை ஏற்றி வைக்கவே முடியவில்லை. கருப்பு மணி மாலையைத் தாலி என்று கட்டினான். இரு வாரம் காதல் பேசினான். அடிபட்டுப் படுக்கையில் விழுந்தான்.. அதோடு அவள் வாழ்வும் வீழ்ந்து போனது.

 

தனிமையில் அதிகம் யோசித்தாள். நடந்த அவலங்களை சீர்படுத்திப் பார்க்க ஆரம்பித்தாள். எங்கு ஆரம்பித்தது? இத்தனை தைரியமாக வேட்டையாட எப்படி தன்னை தேர்ந்தெடுத்தார்கள்?

 

இயற்கையிலேயே அறிவாளி பெண். வலிகள் குறையவும் மூளை விழிக்க ஆரம்பித்தது. எங்கு ஆரம்பித்தாலும் கணக்கு கௌரவ் என்றவன் முன் முட்டி நின்றது.

 

அவனைக் காணும் வரை எல்லாம் சரியாகத் தான் சென்றது. தவறியது எங்கே…? ஒத்துக்கொள்ள விருப்பமில்லை என்றாலும் உண்மை அது தான்! அது கசத்தது!

 

[the_ad id=”6605″]

 

“என்று நீ வீட்டை விட்டு ஒருவனோடு வெளியே சென்றாயோ அன்றே உன் வாழ்வு சீரழிந்து போனது. எல்லாம் உன் மடத்தனம்!” சத்தமாக சொல்லிக்கொண்டாள்.

 

‘வீட்டு மனிதர்களின் இரண்டு சுடு சொல் வலித்தது. என்றாவது கன்னம் சிவத்தது. அதற்கெல்லாம் துடித்தேனே…’ விரக்தியாய் சிரித்து கொண்டாள்.

 

‘மீண்டும் வீட்டிற்கே போய் விடலாமா?’ எண்ணம் எழுந்தது. தன் அவல நிலையை நினைத்தவளுக்கு அந்த முடிவை எடுக்க முடியவில்லை. சித்தி நடு கூடத்தில் அப்பா கழுத்தில் சுருக்கு கயிறை மாட்ட வைத்துவிடுவாள்.  இருந்தும் ஒரு முறை கௌரவிடம் கேட்டு பார்த்தாள்…

 

“நான் இங்க சந்தோஷமாகவே இல்ல கௌரவ். நான் அப்பா வீட்டுலேயாவது பாதுகாப்பா இருந்தேன். அங்க இருந்து வந்த பிறகு தான் புரியுது நான் வந்தது தப்புன்னு! என்னால உன்ன ஒரு துணையா கூட பாக்க முடியல. அப்புறம் தானே வாழ்க்கைத் துணையா? நடந்ததை மாத்த முடியாது. இங்க இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. எந்த உறவையுமே என்னால உன் கிட்ட உணர முடியல. முன்ன ஒரு ஃப்ரெண்டா தெரிஞ்ச… இப்போ அப்படிப் பட்ட உணர்வு கூட இல்ல. சாரி கௌரவ் நான் போகணும். என்னை அனுப்பி வை.” என்றாள்.

 

“நான் கட்டின கருப்பு மணி? நம்ம உறவு?” என்றான்

 

“நமக்கு உறவுன்னு ஒண்ணு இருந்திருந்தா அது வெறும் படுக்கையில மட்டும் தான். பத்தோட பதினொன்னு நீ! அப்படிப் பட்ட உறவுக்கு மதிப்பு இல்லை கௌரவ். எனக்கு அப்பா அம்மா தான் இல்ல. ஆனா நான் ஒரு நல்ல அன்பான குடும்ப சூழல்ல வளர்ந்தவ. என் தாத்தா பாட்டிய பார்த்து வளர்ந்தேன். குடும்பம்.. கணவன் மனைவி-னா என்னன்னு தெரியும் கௌரவ். 

 

இது கண்டிப்பா குடும்பம் இல்ல கௌரவ். குடும்பம்னா அதுல அன்பு, காதல், இன்பம், துன்பம், புரிதல், பாதுகாப்பு, தோழமை, விட்டுகொடுத்தல்.. இப்படி நிறைய இருக்கும். இங்க ஒன்னே ஒண்ணு தான் இருக்கு. எனக்கு அது பிடிக்கல! நான் அப்பா வீட்டுக்கு போறேன்.. என்னை விட்டுடு” என்றாள்.

 

அவன் கதறினான். “நீ இல்லாமல் போனால் நான் நடமாடும் சடலம்” என்றான்.

 

நான் என்றோ சடலம் ஆக்கப்பட்டேனே என்றாள்.

 

ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும். எல்லாம் சரி செய்து விடலாம் என்றான்.

 

பொறுத்தது பொறுத்தாய்.. இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளக் கேட்டான்.

 

“ஒரு வாரம்.. ஒரே ஒரு வாரம் பொறுத்துக்கோ… நீயே எதிர்ப்பாக்காத அளவு நம்ம நிலை மாறிடும். நீ கனவில கூட நினைத்துப் பார்க்காத வாழ்க்கையை நான் உனக்குக் கண்டிப்பா தருவேன்!”  சத்தியம் செய்தான்.

 

நம்பாத பார்வை அவள் பார்க்க…

 

“சத்தியமா.. எல்லாம் சரி ஆகிடும். உன்னை காலேஜ்-ல சேத்து விடுறேன். முன்ன மாதிரியே நம்ம சந்தோஷமா இருக்கலாம்… கொஞ்சம் டைம் குடு. அவசர படாத..  வேலை இல்லையா அது தான் உன் கூட பேசக் கூட முடியாம சுத்திட்டு இருக்கேன். உன்ன நல்லா வச்சுப்பேன்.. உன் மனம் போல நீ இருக்கலாம்… கொஞ்சம் டைம் தா.. சரி பண்ணிடலாம்!” என்றான் கண்ணில் உயிரைத் தேக்கி.

 

முன்பு போல் சந்தோஷமா? இவனோடா? எப்பொழுது? அப்படி ஒன்று அவள் நினைவில் இல்லை. இருந்தும் சரி என்றுவிட்டாள். சரி என்ற அன்றிலிருந்தே ஒரு வாரத்துக்காகக் காத்திருக்கிறாள். மாற்றம் பார்ப்பதாற்கா இல்லை இங்கிருந்து செல்வதற்கா? அவளுக்கு இன்னும் புலப்படவில்லை.

 

அவன் சொல்லியதோடு நிறுத்தவில்லை. எதேதோ சிந்தனையில் வெளியே சுற்றித்திரிகிறான்.

 

இதெல்லாம் நடந்து இரண்டு நாள் இருக்கும்… அதைத் தான் அசை போட்டுக் கொண்டிருக்கிறாள் கருங்கல்லில் அமர்ந்துகொண்டு.

 

அன்று நேரத்திற்கே வீட்டிற்கு வந்தான்.

 

கௌரவ், “கோமல்..” என்றான் காதல் ததும்ப.. ஏனோ அவளுக்கு காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றியது போல் இருந்தது.

 

 

[the_ad id=”6605″]

 

 

ஒவ்வொரு முறையும் இவன் இப்படிக் கூப்பிடுவான். அதன் பின் என்ன ஆகுமோ தெரியாது.. பின்னோடு ஓநாய்கள் வரிசை கட்டி வந்து நிற்கும் அதன் கூர் பற்களோடு!

 

“வெளியில போய்ட்டு வரலாமா? நீயும் வீட்டில எவ்வளவு நேரம் தான் தனியா இருப்ப?”

 

அவள் கிளம்ப… “இதைப் போட்டுக்கோ… அதைப் போட்டுக்கோ..” என்று சர்வ அலங்காரத்தோடு தான் கூட்டிச் சென்றான்.

 

வழியில், தோழி என்று ஒருத்தியை அறிமுகப் படுத்தினான். சாந்தினி என்றான். அவள் கரம் பிடித்துக் கொண்டு எட்டு வயது மதிக்கத் தக்க சிறுமி ஏதோ கனவோடே நின்றிருந்தாள். கோமலின் கல்லூரி கனவு போல் ஏதோ ஒரு கனவு!

 

“உங்க பேரென்ன?” கோமல் சிறுமியைக் கேட்க… அவளுக்கு இவள் பேசியது புரியவில்லை. ஏதோ பெங்காலியில் பதில் சொன்னாள். இவளுக்குப் புரியவில்லை.

 

சாந்தினி இவர்களைப் பார்த்துக்கொண்டே கௌரவோடு ஏதோ பேசிக்கொண்டிருக்க, கோமல் சிறுமி தலை வருடிக் கொண்டிருந்தாள். இருவருக்கும் பேசிக்கொள்ள மொழி தெரியவில்லை. 

 

கௌரவோடும் நல்ல விதமாகவே பேசினாள் சாந்தினி. இருவருக்கும் முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. சும்மாவே மராட்டி புரியாது.. இதில் அவர்கள் பேசும் வேகத்திற்குத் தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் மண்டையில் ஏறவில்லை! கௌரவும் சாந்தினியும் சிறுமியோடு அவள் மொழியில் ஏதோ பேசி சிரித்தனர்.

 

கௌரவிடம் எப்படி ஒட்ட முடியவில்லையோ அதே போல் இவளிடமும் ஒட்ட முடியவில்லை. மூவரையும் பார்த்து நின்றாள்.

 

“நீ ரொம்ப அழகு கோமல்.” என்று இவள் அழகில் அவள் லயித்துச் சொன்னாள். ‘அது தானே என்னைச் சீரழித்தது!’ வெறும் கசந்த புன்னகை மட்டுமே பதிலாய் உதிர்த்தாள்.

 

“பாப்பா பேரென்ன?” சிறுமியைப் பார்த்துப் புன்னகை முகமாய் கோமல் கேட்க..

 

“ஆமாயா..” என்றாள்.

 

“உங்க பொண்ணா?”

 

அவள் சிரித்தாள். பேச்சை வளர்க்க விருப்பமில்லை போலும்!

 

“அழகு குழந்த..” என்றாள் சிறுமி கன்னம் வருடி

 

“ஆமா… உன்ன மாதிரி வருவா…” என்றாள் அவள்.

 

[the_ad id=”6605″]

 

அருகிலிருந்த இடத்திற்குச் சென்றனர். கூட்டிச் சென்ற இடம் கூட்டமாக இருந்தது. பெண்களும் ஆண்களும் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றினார்கள் இவள் கண்களுக்கு.

 

ஆண்கள் கண்ணில் ஒரு வித போதையும் மயக்கமும்… பார்த்திருக்கிறாள் இப்படி பட்ட அருவருப்பான பார்வையை. பெண்கள் உடை முகத்தைச் சுளிக்க வைத்தது.

 

ஏன்.. சாந்தினியுமே அப்படி தான் இருந்தாள். உடல் வளைவுகளைப் பகிரங்கமாய் காட்டும் சல்லடை புடவை கட்டு. அளவுக்கு அதிகமாய் நாசியைச் சுருங்க வைக்கும் வாசனைத் திரவியம். கண்ணை உருத்தும் அளவு தலை கொள்ளா மலர் சரம். நெற்றியை சுருக்க வைக்கும் அதிக ஒப்பனை படிந்த முகம். பளீர் உதட்டுச் சாயம். எல்லா விதத்திலும் கொஞ்சம் அதிகம் தான். கோமலுக்கு, இப்படிப் பட்ட மனிதர்களும் புதிது.. இப்படிப் பட்ட இடமும் புதிது. அதனால் அந்த இடம் பற்றி அவளுக்கு ஒன்றும் புரிந்ததற்கான அறிகுறி இல்லை!

 

பணத்திற்க்காக மனிதம் விற்கப்படும் என்பது அவளுக்குத் தெரியவில்லை!

 

கோட்டைச் சுவரோ என்று தோன்றச் செய்த கட்டிடம் முன் வந்தார்கள். அவன் தட்ட.. அந்த இரும்பு கதவில் முகம் மட்டும் தெரியும் அளவு திறக்கப் பட்டது.

 

நின்று கொண்டிருந்தவனைக் கண்டதும் அத்தனை பெரிய கதவில் நடுவே சின்ன கதவு மட்டும் திறந்தது. பார்த்ததும் திரைப்படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலின் கதவு தான் கோமலுக்கு நினைவில் வந்தது. உள்ளே நாற்பது அடி தூரம் செல்ல.. அடர்த்தியான மரங்கள் நடுவே அந்த தீப்பெட்டி போன்று அடைத்து நின்ற வீட்டைக் காக்க ஒரு இரும்பு கிரில். இருபக்கமாக திறக்கலாம். சங்கிலியும் பூட்டும் கொண்டு காக்கப் பட்டிருந்தது.

 

உள்ளே என்ன பொக்கிஷமோ..? அதைக் காத்துக் கொண்டிருந்தது அந்த கோட்டை!

 

பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ஒருவரும் அனுமதி இன்றி உள்ளே வர முடியாது… உள்ளிருந்து வெளியே செல்ல முடியாது.

 

“இது என்ன கௌரவ்.. தங்க புதையல் ஒளிச்சு வைக்கிற இடமா?” என்று கிளுக்கென்று சிரித்தாள்.

 

அவளைப் பார்த்தவன், “தங்க விக்கிரங்க இருக்க இடம்..” என்றான்.

 

‘என்ன..?’ என்பது போல் தான் பார்த்தாள்.

 

உள்ளே செல்ல ஏனோ மனம் இடங்கொடுக்க வில்லை.

 

“வேண்டாம் கௌரவ்… என்னமோ மாதிரி பண்ணுது. இங்க ஏதோ சரி இல்ல.. வா போலாம்” என்றாள்.

 

“ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்.. வா” என்றான்.

 

உள்ளே நுழைந்தும் நடுவே முற்றம் இருக்க.. பெண்கள் சிலர் துணி துவைப்பதும்… சிலர் கதை பேசுவதும் என்று இடமே பெண்களால் நிறைந்திருக்க.. மூச்சு வெளி வந்தது. கூடே வந்தவள் சிறுமியோடு உள்ளே சென்றுவிட்டாள்.

 

சுற்றும் முற்றும் இவள் பார்த்துக்கொண்டே நடக்க.. பத்து வயது சிறுமி திறந்திருந்த கிரில் வழி வெளியே ஓட முயல.. விழுந்த அறையில் சிறுமி எங்கோ போய் விழுந்தாள். திமிறத் திமிற ஒருவன் அவள் வயிற்றோடு கைகொடுத்து ஆட்டுக்குட்டியைத் தூக்குவது போல் தூக்கிச் சென்றான்.

 

கையையும் காலையும் உதறி… அழுது கொண்டே ஏதோ கூறினாள் சிறுமி. சிறுமி இவளிடம் முறையிட்டது போல் தான் தோன்றியது. அந்த நீர் கோர்த்த கண்ணும்.. அதன் வலியும்.. மூச்சடைத்தது. பேசிய மொழி புரியவில்லை.. ஆனால் அவள் கதறல்? எதையோ நினைவு படுத்த வயிற்றை இழுத்துப் பிடித்தது.  இவளைப் போலவே மொழி தெரியா பூமியில் மாட்டிக்கொண்டதா குழந்தை?

 

[the_ad id=”6605″]

 

 

பின்னால் சங்கிலியின் ஓசை கேட்க.. திரும்பிப் பார்த்தாள். மீண்டும் பூட்டுத் தொங்கி கொண்டிருந்தது. குழந்தையை எங்கு இழுத்துச் சென்றார்களோ… சத்தம் குறைந்து.. சிறிது நேரத்தில் கேட்கவே இல்லை.

 

நடந்த நிகழ்வு அவளை மட்டும் தான் அசைத்ததா? ஏன் ஒருவர் கண்ணிலும் அது படவே இல்லை. மனம் ஐந்து மாதம் முன் சென்று அங்கேயே நின்றது. இதுவும் குள்ள நரி கூட்டமா? இது என்ன விடுதியா? எதற்கு இத்தனை பெண்கள் ஒரே இடத்தில்?

 

இதை எல்லாம் தாண்டி வந்ததாலோ.. என்ன முயன்றாலும் இங்கு தான் முடிவு என்றதாலோ… இதை விட இன்னும் அனுபவித்தாயிற்று என்றதாலோ.. மூக்கை நுழைத்தால் நான்கு நாள் இருட்டு அறையில் உணவின்றி கிடக்கவேண்டும் என்றதாலோ.. பெண்கள் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர் என்பதை கோமல் அறிய நியாமில்லை.

 

“வா கௌரவ்… போகலாம்… எனக்கு பயமா இருக்கு.. வா கௌரவ்..” பெண் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். அவளுக்காகவும்.. அரும்பு நிலை கூட தாண்டாத சின்னஞ்சிறு மொட்டுக்காகவும் கண்கலங்கினாள்.

 

“ஒன்னும் இல்ல கோமல்… அது அவங்க பொண்ணு தான். சொன்ன பேச்சை கேட்காம சேட்டை செஞ்சிருப்பா… அதுக்கு தான் அடி விழுந்திருக்கும். நீ எதுக்கு அத எல்லாம் பாக்கிற? வா” என்று கை பிடித்து இழுத்துச் சென்றான்.

 

“இது கௌஷி”, என்று நடுத்தர வயது பெண்ணை அறிமுக படுத்தினான்.

 

ஏனோ அவளைப் பார்த்ததும் தொண்டைக்குள் ஏதோ மாட்டிய உணர்வு. அவள் பார்வை இவளை அங்கம் அங்காமாக கூறு போட உடல் கூசியதோடு பயத்தில் முகம் சிவக்க ஆரம்பித்தது.

 

கோமலை ஆராய்ச்சி பார்வையோடு சுற்றி வந்த புதியவள் முகத்தில் பரம திருப்தி. பார்வையால் கோமலை விழுங்கிக்கொண்டே.. அவனைப் பாராட்டுவது போல் பேச..

 

கௌரவ் நெளிந்தான். கோமல் உடல் கூசிப் போனாள்..

 

அவன் இளித்தான். இவள் எச்சில் விழுங்கினாள்.

 

அவன் தலை சொறிந்தான். இவள், உடல் வியர்க்க… பலம் எல்லாம் வடிய.. தலை கிறங்க நின்றிருந்தாள்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!