Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ11_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  11_1

 

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (Post-traumatic stress disorder, PTSD) என்பது ஒரு மனநிலை சார்ந்த பாதிப்பு. இது ஒருவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை போன்ற  நிகழ்வுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

PTSD பாதிப்பு கொண்டவர்களுக்கு தொல்லையூட்டும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நிகழ்வுகளுடன் தொடர்புடைய கனவுகள், மனம் அல்லது உடல் அழுத்தம் முதல், மன அதிர்ச்சி தொடர்பான தாக்கங்கள் வரை இருக்கலாம்.



Advertisement

மன அதிர்ச்சி ஏற்படுத்திய எண்ணங்களை / செயல்களைத் தவிர்க்க முயலுதல், தன்னை பற்றி மற்றவர் எவ்வாறு நினைப்பார் மற்றும் உணர்வார் என்பதை யோசித்தல்,  இந்த வகை மன அழுத்தத்தின் அறிகுறிகளில் சில.

தற்கொலை செய்துகொள்ளும் மற்றும் சுயமாகக் காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகம். மனநல மருத்துவர் உதவியோடு இதை குணப்படுத்த/கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும் என்கிறது மருத்துவம்.

….. ….. …..

Advertisement

 

Advertisement

சத்யனின் திருமணம் விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. மணமகன் முகத்தில் நூறு வாட்ஸ் மலர்ச்சியென்றால்.. மூர்த்தியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம். இரண்டு நாளில் இவனுக்கு என்ன ஆனது என்று நட்பு வட்டம் பார்த்தாலும்… அவன் சிரிப்பும் பேச்சுமே அவர்களைக் கட்டிப்போட்டது. அவனின் மலர்ந்த முகமும் அதனால் அங்கேயே நிரந்தர குடியுரிமை வாங்கியிருந்த கன்னக்குழியும் பார்க்க அத்தனை அழகு.

 

பேச்சும் சிரிப்பும் நட்பு வட்டத்தோடு இருந்தாலும் பார்வை அவன் துளசியை நொடிக்கொரு முறை தழுவிச் சென்றது.

Advertisement

 

குட்டி லட்சுமணனை மடியில் வைத்துக்கொண்டு.. நந்தினி கையை பிடித்துக் கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். பார்த்தவன் மனதில் சாரல். இப்படி ஒரு முகத்தைக் காணத் தானே நேற்று முதல் காத்திருந்தான்.

 

ஒரு மணி நேரம் முன் வரை, எதிலுமே கலந்து கொள்ளமுடியாமல் நின்றிருந்தவளைப் பார்த்த மூர்த்திக்கு அவளிடம் என்ன பேசி.. எப்படி அவளைச் சரி செய்ய என்றே புரியவில்லை. படி தாண்டும் வரை இருந்த அவள் தெம்பெல்லாம் வடிந்துவிட.. கார் சத்யன் வீட்டை அடையுமுன் மயங்கியிருந்தாள்.

 

மருத்துவமனையில், “என்ன ரிலேஷன்?” என்ற கேள்வி எழுந்ததும், நொடி தாமதிக்காமல், “மனைவி” என்றான்.

 

“ரெண்டு மூனு நாளா ஒழுங்கா சாப்பிடலையா? ஃபாஸ்டிங்கா? டிஹைட்ரேஷன்! ஒரு பாட்டில் சலைன் ஏத்திடலாம். இப்படி பட்டினி எல்லாம் இருக்க விடாதீங்க” என்றதோடு நிறுத்தவில்லை மருத்துவர்.

 

“அவங்க பிளட் பிரஷர்? இந்த வயசில அப்படி என்ன பிரச்சினை? ஓவர் ஸ்ரெஸ் மிஸ்டர்.மூர்த்தி. ரொம்ப டென்ஷன் குடுக்காதீங்க.” என்று தொடர்ந்த மருத்துவரின் ஆலோசனை மழையில் குடையில்லாமல் நனைந்தே போனான்.

 

அவள் கண் விழிக்கவும் மனநல மருத்துவரின் முறை. நல்ல வேளை அவர், அவள் வாயைத் தான் கிளறினார். 

 

சில பல மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து ஆறு மாதமோ ஒரு வருடமோ கண்டிப்பாக எந்த தடையுமின்றி மனநல மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்றார்.

 

“PSTD சிம்டம்ஸ் இருக்கு. கன்ரோல்ல இருக்கு. குணப்படுத்திடலாம். ஆனா உங்க ஒத்துழைப்பு வேணும். உடல் அளவிலும் கஷ்டப்பட்டு மன அளவிலும் பாதிக்க பட்டிருக்கனால பார்த்து ஹாண்டில் பண்ணினுங்க. இத பத்தி யோசிக்க விடாதீங்க. உடற் பயிற்சி, சத்தான ஆகாரம், அரவணைப்பு, மனசு வேற எதுலயாவது…” என்று ஆரம்பித்தவர், ‘தானும் மழை பொழிவதில் சளைத்தவன் இல்லை’ என்று நிரூபித்தார்.

 

சத்யன் வீட்டில் கோமல், மூர்த்தியின் சொந்தம் என்றே அறிமுக படுத்தினான். சத்யனின் குடும்பம், கோமலை அன்போடு கவனித்துக் கொண்டாலும் திருமண வீட்டில் அவள் பின்னோடு அலைய முடியாதே. தனித்தே நின்றாள். அவளைச் சுற்றி கூட்டமிருந்தபோது மனம் தனிமைக்குச் சென்றது. அங்கு கௌரவ் வீறிட்டான். அவன் அழிய வேண்டியவன் தான். இருந்தும் அவன் துடித்தது இன்று அவளை அசைத்தது. அன்றிருந்த வெறி அடங்கிவிடவே இன்று தனிமையில் வந்து அவளைப் பாடாய்ப் படுத்தினான். உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் என்ற மனதின் கேள்விக்கு பதிலில்லை அவளிடம்.

 

கௌரவின் வீறிடல்.. அதோடு அவளின் கேவல்கள் என்று ஒவ்வொரு நிகழ்வும் வரிசை கட்டி மூளையை அரித்தது. தேவை தான் அவனுக்கு இன்னும் செய்தாலும் தகும் என்றது அதே மனம். கலவையான உணர்வு அவளை முழுவதுமாக உட்கொள்ள ஆரம்பித்திருந்தது.

 

அழகி, அலங்காரத்தோடு கண்ணைப் பறிக்க.. ஆர்வமாக அவளைப் பல கண்கள் வருட, உடலும் உள்ளமும் கூச அவளால் கூட்டத்தோடு நிற்கவும் முடியவில்லை தனிமை தேடிச் செல்லவும் பயம்.. மீண்டும் யாரவது கூட்டிச் சென்றுவிட்டால்? மனதளவில் பெரிய போராட்டம். வாய் வார்த்தையாகச் சொல்லிவிட்டாள் தான்.. ‘தான் இன்பமாய் வாழப் போவதாக!’ ஆனால் முதல் நாளே இப்படிச் சொல்லத் தெரியாத உணர்வுகளோடு போராடி நிற்பாள் என்று அவள் கண்டாளா என்ன?  அவனை கொன்றுவிட்டால் எல்லாம் முடிந்து போகும் என்ற அவள் எண்ணம் முற்றிலும் தவறாய் போனது. முன்பாவது அவளுக்கு தவறு இழைக்கப்பட்டது என்ற எண்ணம் மட்டும் தான்… இப்பொழுது அவளும் தவறு இழைத்துவிட்டாளோ என்ற ஐயம் சேர்ந்து கொண்டது.

 

அவமானம்.. ஒருவர் முகமும் பார்க்க முடியாத நிலை. யாரேனும் உற்றுப் பார்த்தால்.. தன்னை தெரிந்தவனோ என்ற அருவருப்பு உடலைக் கூச வைத்தது. ஒருவரிடமும் நெருங்கவும் முடியவில்லை. தனித்து நிற்கவும் முடியவில்லை. மூர்த்தியைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க, அவளால் அவனிடமும் செல்ல இயலவில்லை.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத் தயங்கித் தயங்கி அமர்ந்திருந்தவளின் போராட்டம் புரிய, சத்யனின் தமக்கை மகள், நந்தினியைத் தூக்கி வந்தவன் துளசி அருகில் அமர்ந்துகொண்டான்.

 

“உங்க ட்ரெஸ் ரொம்ப அழகா இருக்கே…” இவள் தான் ஆரம்பித்தாள். சின்னவள் பதில் பேசவில்லை.

 

“உங்க கைல மருதாணி சிவப்பா இருக்கே… அம்மா வச்சு விட்டாங்களா?”

 

“பாட்டி” என்றாள் சிறுமி.

 

“இவங்க யாரு..? உங்க ஃப்ரெண்டா?” என்று மூர்த்தியைப் பார்த்தாள். மிக அருகில் அமர்ந்திருந்தான். முதன் முதலில் பார்த்த போது இப்படி தான் இருந்தான். அதே புன்சிரிப்பு.. கன்னக்குழி.. முறுக்கி விட்ட மீசை.. அதையும் தாண்டி தெரிந்த அந்த முகத்தின் மென்மை. என்னவெல்லாம் கற்பனை… என்ன என்ன சபதங்கள்? அர்த்தம் புரியாமலே பேசிய பேச்சுகள்.. எச்சிலோடு உணர்வுகளை விழுங்கிக்கொண்டாள். அந்த அசட்டு பேச்செல்லாம் இவர் கேட்டிருந்தால்? முகம் சட்டென்று மாறிப்போனது.

 

“இவ்வளவு பெரியவங்க எப்டி ஃப்ரெண்டா இருப்பாங்க? இவங்க என்னோட மூத்தீ மாமா..” நந்தினி மூர்த்தி கழுத்தை கட்டிக்கொண்டே அவள் மாமாவை  அறிமுகப் படுத்தி வைத்தாள்.

 

“அப்போ உன் மாமா கூட நான் ஃப்ரெண்ட் ஆகிகட்டுமா?”

 

“ஓஹ்..” என்றவன், தன் பிஞ்சு கையால் மாமனின் கன்னம் வருடி, “இந்த ஆண்டி கூட ஃப்ரெண்ட் ஆறிங்களா? ரொம்ப குட் ஆண்டி..” என்று பரிந்து கொண்டு வந்தாள்.

 

“என் நந்து குட்டி சொன்னா சரி தான்! இன்னைல இருந்து நான் உங்க ஆண்டியோடு ஃப்ரெண்ட்” என்றான்.

 

“அப்போ கை குடுத்துக்கோங்க..” இருவர் கையையும் இணைத்து வைத்தாள் சிறுமி.

 

முரட்டு கைக்குள் அடங்கிப் போனது பஞ்சு போதி. எல்லாம் சரியாக நடந்திருந்தால் இதே நாளில் இவளின் கையை உரிமையோடு பிடித்திருப்பானே..

 

‘அவர் தான் என் புருஷன்.. அவருக்கு நான் வரிசையா ஒம்பது பசங்கள பெத்துப் போடத் தான் போறேன்… அவர் என்னைப் பார்த்து சிரிச்சுட்டே இருக்கத நீ பாக்க தான் போற!’ சம்பந்தமே இல்லாமல் சபதம் இருவருக்கும் நினைவில் வந்தது. இந்த சிரிப்பை அன்றே சிரித்திருக்கக் கூடாதா.. இவர் தான் அவளின் சொட்டை வாத்தி என்று அன்றே தெரிந்திருந்தால்..

 

‘இனி விடமாட்டேன்’ என்று கையில் அழுத்தம் கொடுக்க.. அவன் முகம் பார்த்து கஷ்டப்பட்டு உதட்டை இழுத்துப் பிடித்தாள். கண் பனித்தது.

 

“மூத்தி மாமா.. போதும் கைய விடுங்க.. ஆண்டிக்கு வலிக்குது” என்று நடப்பிற்கு கூட்டி வந்தவள் வாய் மூடினாள் இல்லை.

 

நான்கு வயது குட்டி பெண் படு சுட்டி… பத்தே நிமிடத்தில் துளசி கழுத்தைக் கட்டிக்கொண்டு ஐக்கியமாக.. இவனுக்கு அங்கு வேலை இல்லாமல் போனது. 

 

“நான் உங்களுக்கு மம்மம் ஊட்டட்டுமா?” என்று ஆரம்பித்த குட்டி மகள்.. கோமல் கையில் சோறிட்டு நெய்யிட்டு பிசைந்து ஊட்டி… “நண்டு வருது நரி வருது….” என்று மாறி மாறி கிச்சு கிச்சு மூட்ட.. இருவரும் சிரிப்பில் மூழ்கிப் போய்விட்டனர்.

 

அரை மணி நேரத்தில் அங்கு வந்த சத்யனின் தமக்கை, “இங்க தான் இருக்கீங்களா ரெண்டு பேரும்.. உங்க சிரிப்பு சத்தத்துக்குத் தான் கண்டுபிடிச்சேன்” என்று வந்தவள் அவள் இடுப்பிலிருந்த லட்சுமணனை துளசி மடியில் இறக்கிவைத்துவிட்டு, “கொஞ்சம் பார்த்துக்கிறியா? இவன தூக்கிட்டே வேலை செய்ய முடியல..” என்று கன்னம் வழித்து முத்தமிட்டுச் சென்றாள்.

 

குழந்தையின் மழலையும்.. நான்கு வயது நந்தினியின் துருதுரு பேச்சும் யாரைத் தான் கொள்ளை கொள்ளாது? கோமல் முகமெல்லாம் புன்னகை.

 

“வீட்டில ஆடி ஓடி திரியும் போது உனக்குத் தெரியுமா அடுத்த நாள் இருட்டா விடியும்னு? இங்க யார் சிரிப்பும் நிரந்தரம் இல்ல. அழுகையும் நிரந்தரம் இல்ல. நேத்து மாதிரி நாளைக்கு இருக்காது. மேல எழும்பற அலை இறங்கித் தான் ஆகணும். இறங்கின அலை மேல எழும்பி தான் ஆகணும். வாழ்க்கையில பிரச்சினையும் அப்படி தான். வந்த இடம் தெரியாம போய்டும்.

 

உன் நிம்மதி.. உன் சந்தோஷம் உன் கையில தான் இருக்கு. மத்தவங்க என்ன யோசிப்பாங்க.. நம்மள தப்பா நினைப்பாங்களான்னு யோசிக்கவே யோசிக்காத! மத்தவங்க நம்ம வாழ்க்கைக்குத் தேவை தான்… ஆனா நம்ம வாழ்க்கையை நாம தான் வாழணும்.. அவங்கள வாழ விடக் கூடாது. நிம்மதி போய்டும்!

 

நீ ஏமாந்தன்னு நினைக்காத. சாமர்த்தியமா ஏமாத்திட்டான். நீ அவன் கூட போகலன்னா உன்ன விட்டு இருப்பான்னு நினைக்காத, அப்பவும் தூக்கி இருப்பானுங்க. நடந்து முடிஞ்சத நினைச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத! இதுல உன் தப்பு எங்கேயுமே இல்ல. பொண்ணுகள மதிக்கத் தெரியாத இந்த சமுதாயத்து மேல தப்பு… கட்டுபாடோட வாழ தெரியாதவன் செய்த தப்பு.. குற்றத்துக்கு உடனே தண்டனை கொடுத்து இத எல்லாம் இந்த நாடு பொறுத்துக்காதுனு உணர்த்தாத சட்டத்து மேல தப்பு. இங்க உன் தப்பு எங்க வந்துது? நினைச்சு நினைச்சு அழாத! நீ என்ன அழுதாலும்.. நடந்த எதையுமே மாத்த முடியாது. ஒரு பாடமா எடுத்துக்கோ. ஒட்டின தூசின்னு நினைச்சு தலை முழுகீட்டு அடுத்து என்ன பண்றதுன்னு யோசி. வாழ்ந்து பார்… நல்லா தான் இருக்கும்! உலகத்தில நல்லவங்களும் இருக்காங்க. உன் மேல உண்மையான அன்ப காட்ட ஆட்கள் இருக்காங்க. உனக்குத் துணையா எப்பவும் நான் இருப்பேன்! கலங்காத! நிமிர்ந்து நில்லு…”

 

நிலவு ஒளியில் அலங்கரிக்கபட்ட மொட்டை மாடியில்.. தனிமையில் நிலவை வெறித்து நின்றவளுக்கு எடுத்துக் கூறினான்.

 

யாரோ செய்த தவறுக்கு அவள் பலியாக விரும்பவில்லை. போராடி வாழ்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதில் தெளிவாக தான் இருந்தாள்.

 

மூர்த்தி அவள் உறவில்லாமல் இருக்கலாம்.. ஆனால் நல்ல மனிதன். அவன் நீட்டிய கரம் பிடித்துவிட்டாள், ஏன் உதவுகிறாய் என்று காரணம் கேட்கத் தோன்றவில்லை. இவனும் (இல்லை இல்லை.. அவளுக்கு மூர்த்தி என்றுமே ‘இவர்’ தான்!) அவனைப் போல் இருக்கலாம் என்ற எண்ணம் துளி கூட வரவில்லை. கண்டிப்பாக கரை சேர்ப்பான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனை இறுகப் பிடித்துக்கொள்ள வைத்தது.

 

மூர்த்தி என்ற மனிதன் அவள் அனுமதி இல்லாமலே அவளுக்குள் இறங்கி அவளின் ‘இன்றியமையாதவன்’ ஆகிப்போனான். அவள் உணரவில்லை அவ்வளவு தான்.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!