Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ12_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  12_2

 

அதிகாலை இருட்டோடு துளசி கண் திறக்க, ஒருவரும் முழித்திருக்கவில்லை. விடியல் இருட்டைக் கிழிக்க முயற்சித்து கொண்டிருந்தது. அவளைப் போலவே. தலையணையில் தலை வைத்து நன்றாய் கால் நீட்டிப் படுத்திருந்தாள். வெள்ளை தலையணை? தலையணை, தாத்தா மடி போல் தோன்றியது. தாத்தா மடியில் இன்னும் ஒன்றிக் கொண்டாள்.

 



Advertisement

‘தாத்தாவா? அவர் எப்படி ஓடும் ரயிலில்?’ சில நிமிடங்கள் பிடித்தது அவள் நிலை புரிய.

 

மூர்த்தியின் மடியில் தலை சாய்த்து உறங்கியிருக்க, அவள் கீழே விழாமலிருக்க அவள் கை மேல் அணைப்பாய் பிடித்திருந்தான்.

Advertisement

 

Advertisement

அவள் சட்டென்று எழுந்து அமரவும் அவனும் எழுந்துவிட, திருட்டு முழி முழித்தாள். அவனைப் பார்க்கக் கூச்சமாய் போகத் தலையை அவன் புறம் திருப்பினாள் இல்லை! அவன் தொடுகை கூச்சம் தரவில்லை. அவன் என்ன நினைப்பானோ என்ற எண்ணம் தான் அவளைக் கூச வைத்தது. தன்னை தவறாய் நினைத்து விட்டிருப்பான் என்று முடிவே செய்துவிட்டாள்.

 

உபகரணங்களை எடுத்துக் கொண்டு பல் தேய்த்து முகம் கழுவச் சென்றுவிட்டாள். வேகு நேரம் சென்றும் இடத்துக்கு வரவில்லை. தேடிச் சென்றான்.

Advertisement

 

“இவ்வளவு நேரம் பிரஷ் பண்ணினா.. பல் எனாமல் தாங்காது”

 

திடீர் சத்தம் தூக்கி வாரிப் போட.. திரும்பிப் பார்த்தாளில்லை. “குட் மார்னிங்” என்றான்.

 

“ம்ம்..” வாய்க்குள்ளே முணுமுணுத்தவள், வாயை கழுவியதும் ஓட பார்த்தாள். “பேஸ்ட்டை கொடுத்திட்டு ஓடு” என்றான்.

 

பசையை நீட்ட, “இனிமேல் என் முகம் பாக்கமாட்டியா?” நீட்டியதை கையில் வாங்காமல் அவளையே பார்க்க..

 

மெல்லத் தலை நிமிர்ந்தது. இமை பிடிவாதமாய் கவிழ்ந்தே கிடக்க,

 

“பேசவும் மாட்டியா? நான் அவ்வளவு எல்லாம் மோசமானவன் இல்ல. தூக்கமில்லாம கஷ்டப்பட்ட நீ தூங்கினதும் டிஸ்ரப் பண்ண மனசு வரல. நைட் பூரா உருண்டுட்டே இருந்த.. விழுந்திட போறன்னு நினைச்சு தான் கைய பிடிச்சிருந்தேன்… கண்டிப்பா தப்பா..”

 

சட்டென்று உயர்ந்த கண் அவன் கண்ணோடு மோத.. அதற்கு மேல் அவனும் பேசவில்லை.

 

அவள் கையிலிருந்த களிம்பை அவன் வாங்கவும் வேகமாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள். படபடப்பு அடங்கவேயில்லை. ‘ஏன் இப்படிப் பேசவேண்டும்? என்னால் இவரைத் தவறாக நினைக்க முடியுமா? தவறு என் மேல் தானே..’

 

முதியவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை போலும். விழித்திருந்தார். முதியவர் பார்வை மாறியிருந்தது. அவன் மடியில் அவள் படுத்திருக்கவே அவர் எண்ணம் மாறிவிட்டது போலும். அமர்ந்திருந்தவளைப் பார்த்தவர்,

 

“முடியலியாமா?” என்றார் தன்மையாக.

 

ஏதோ சிரிப்பென்று எதையோ அசட்டுத்தனமாய் சிரித்து வைத்தாள்.

 

“தம்பிய கொஞ்ச நேரம் படுக்கச் சொல்லுமா.. பாவம் நைட் பூரா தூங்காமலே உட்கார்ந்திருந்தார். நீயும் அனத்திட்டே இருக்கவே தம்பி கண்ணசரவே இல்ல. கொஞ்ச நேரம் கை கால் நீட்டிப் படுக்கச் சொல்லுமா..”

 

“ம்ம்..” என்று தலையை ஆட்டி வைத்தாள்.

 

“சின்ன பொண்ணா இருக்க. பார்த்து இருந்துக்கோ. இருட்டுற நேரம் மல்லிப் பூவெல்லாம் வச்சுகிட்டு வெளியில தனியா போகாத. காத்து கருப்ப பார்த்து பயந்திட்ட போல…”

 

பாட்டியும் சொல்லுவார் இதையே… அன்று புரியாதது இன்று புரிந்தது. காத்தும்! கருப்பும்! பார்த்துவிட்டாளே!!

 

“எங்கனாலும் இருட்டின பிறகு வீட்டுக்காரோட போய்ட்டு வாமா. தனியா போகாத.” அவருக்குத் தெரிந்ததை அவள் காதில் போட்டு வைத்தார்.

 

‘வீட்டுக்காரரா?’ அப்படி ஒரு எண்ணம் அவளுக்குள் இல்லை என்றாலும் ஒன்றும் எதிர்த்துச் சொல்லவில்லை. அடுத்தடுத்து வரும் கேள்விகளை தவிர்க வாயை மூடிக்கொண்டாள்.

 

இருக்கைக்கு வந்தவனைப் பார்த்தாள். கையிலிருந்த காபி கப்பை அவளிடம் நீட்ட ஒன்றும் கூறாமல் வாங்கிக் கொண்டாள்.

 

ஜன்னலோடு புதைந்துகொண்டே, “நீங்க… நீங்க கொஞ்சம் நேரம் படுங்க. நான் ஓரமா உக்காந்துகிறேன்” கொஞ்சம் திக்கலும் தயக்கமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

 

புன்னகைத்தான். “எனக்குத் தூக்கம் வரல… நீ ஒழுங்கா உக்காந்துக்கோ.”

 

“கொஞ்ச நேரம் படுக்கலாமே..”

 

“இப்போ வேண்டாம். டையர்ட் ஆனா சொல்றேன். உனக்கு பசிக்குதா?”

 

‘மனிதனுக்கு என் வயிற்றை நிரப்புவது தான் முழு நேர வேலையோ?’ “ம்ம்கூம்… உங்களுக்குக் காபி?”

 

“நான் குடிச்சிட்டேன். நீ குடி”

 

சிறிது நேரம் அமைதி நிலவ.. பெரியவர் இடத்தை காலி செய்யவும்,

 

“நீங்கச் சொன்ன மாதிரி எல்லாம் நான் நினைக்கவே இல்ல.” என்றாள்.

 

“ம்ம்ஹும்ம்..”

 

“என்னால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு!”

 

அவளைப் பார்த்தான். ‘என்ன சொல்ல போகிறாரோ’ என்று அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

 

“சரி.. அதனால?”

 

“..” பதில் தெரியவில்லையே… விழித்தாள்.

 

“நான் அப்படி நினைக்கல. நினைச்சிருந்தா உன் அப்பா வீட்டுக்கு டிக்கெட் எடுத்து உன்னை சத்யன் மூலமா அங்க அனுப்பி இருப்பேன். இனி மேல் அப்படி எல்லாம் யோசிக்காத”

 

மீண்டும் மனம் அதே கேள்வியை கேட்டது. ‘ஏன் மூர்த்தி சார்?’ இம்முறையும் பதில் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஜன்னல் வழி வெளியே வெறித்தாளே தவிரக் கேள்வி கேட்க விழையவில்லை.

 

மனம் அவளையும் அறியாமல் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது. இருவரும் வாழ்கையில் இணைவதை அவள் மனம் ஒரு விழுக்காடு கூட சம்மதிக்க போவதில்லை. இருந்தும் அவளை அறியாமலே அவள் மனம் அவன் புறம் சாய்ந்தது.

 

அனைவருக்குள்ளும் ஒரு சுமுக மனப்பான்மை நிலவ அன்றைய பயணமும் நன்றாகவே சென்றது. பக்கத்துப் பக்கத்து இருக்கையிலிருந்து மற்ற பிள்ளைகளும் வந்துவிட, அவள் நேரம் அவர்களோடு இனிமையாகவே கழிந்தது. அவளுக்குள் பதுங்கி கிடந்த குட்டி டார்சன் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. சிறுவர் என்று கூட பாராமல் ‘போங்காட்டம்’ ஆடினாள். அவர்களோடு வம்பிழுத்தாள். துணைக்கு முதியவரை அழைத்துக் கொண்டாள்.

 

பிள்ளைகளும், அவள் கதை கேட்டு, ‘அக்கா அக்கா’ என்று ஒட்டிக்கொண்டனர். பாட்டுப் பாடினாள். பிள்ளைகள் ஆடினர். தமிழ் நாட்டிற்குள் ரயில் நுழையவும் ரயில் ஊர் பேர் தெரியாத குட்டி ரயில் நிலையத்தில் நின்றுவிட்டது. அரசியல் பெருந்தலை ஒருவர் ‘சிகிச்சை பலனில்லாமல் இறந்து போகவே’ குறைந்தது அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் ரயில் அசையாது என்றுவிட்டனர்.

 

என்ன செய்ய? மாற்றி மாற்றி முகம் பாத்து அமர்ந்திருந்தனர்.

 

“உன் பேர் என்னமா? கேட்கவே இல்ல பாரேன்..” முதியவர் கேட்டார். மிகவும் சாதாரண கேள்வி. நொடியில் பதில் வந்து விழுந்திருக்க வேண்டாமா? அவளுக்கு அவள் பெயரை உச்சரிக்கவும் பிடிக்கவில்லை. ‘கோமல்’ என்ற உச்சரிப்பே மறக்க முயலும் கௌரவை நினைவு படுத்தியது.  மூர்த்தி தான் பதில் சொல்லவேண்டும் என்பது போல் புத்தகத்தில் முகம் புதைத்திருந்தவனைப் பார்த்தாள்.

 

அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவள் முகம் பார்த்துக் கொண்டே.. “துளசி” என்றான், நெற்றி சுருங்கி புருவம் இரண்டும் உயர. ‘பிடிச்சிருக்கா?’ என்ற முகபாவம். பிடிக்கவேண்டுமே என்ற எதிர்பார்ப்பு.

 

முகம் புன்னகையில் மலர.. “ரொம்ப” என்றாள்.

 

அவன் முகம் பூரித்துப் போனது. “துளசி” இருவர் உதடும் ஒன்றாய் முணுமுணுத்துக் கொண்டது.

 

பார்த்துக் கொண்டிருந்த முதியவருக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கும்.. ‘ஒத்த பேரு சொல்ல இத்தனை அலப்பறையா?’வென்று!

 

நின்று கொண்டிருந்த ரயிலை விட்டு பலர் வெளியே நடை மேடையில் சுற்ற ஆரம்பித்தனர். அந்த பலரில் இவர்களும் அடக்கம். குட்டி ரயில் நிலயத்தை இருவருமாக வலம் வந்தனர். நிலவு ஒளியில் அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து கதை பேசினர்.

 

“உங்களுக்கு மக இல்ல தானே..?” என்றாள் பேச்சினிடையே.

 

“இன்னும் இல்ல.. ஏன் திடீர்னு?” என்றான். அவள் கேட்பது என்னவென்று தெரிந்தும் கேட்டான்.

 

“இருந்திருந்தா உங்க கூட இருந்திருப்பாளே.. அது தான் கேட்டேன். உங்களுக்குப் புரியாது. இது எனக்கான கேள்வி” என்றாள்.. பெரிய கண்டுபிடிப்பின் உற்சாகத்தோடு.

 

“ஓஹ்..”

 

“இன்னும் ஒண்ணு கேக்கட்டா?” ஆவலாய் கேட்க

 

“ம்ம்.. கேளேன்..” என்றான்.

 

“உங்க கணக்கு வாத்தியார் சொட்டத் தானே?” மீண்டும் கண்டுபிடித்துவிட்ட தோரணை.

 

“ஆங்? என்ன?” சத்தியமாக இந்த கேள்வி அவனுக்குப் புரியவில்லை! அவனுக்கு ஏது கணக்கு வாத்தியார்?

 

“அவர்னா உங்களுக்கு ரொம்ப பிரியமா?”

 

அவன் குழம்பிதான் போனான். “என்ன..?” என்ன உளருகிறாய் பெண்ணே?

 

“அவர் உங்க சொந்தமா?”

 

“துளசி…”

 

“சொல்லுங்க மூர்த்தி சார்”

 

“எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே புரியல மா!”

 

“அப்போ அந்த சொட்டைக்காக என்னை காப்பாத்தலியா?” உள்ளுக்குள் ஏதோ ஒரு நிம்மதி.

 

“இதுவும் உனக்கான கேள்வினு சொல்லாத… யாரு அந்த சொட்டை?”

 

“எழில் சித்தி.. எனக்குப் பார்த்த மாப்பிள்ளை!”

 

ஒரு நிமிட அமைதி!

 

கேசத்தை மெல்ல வருடிக் கொண்டான். “அவன் சொட்டைன்னு உனக்கு யாரு சொன்னது?”

 

“கணக்கு வாத்தி எப்படி இருப்பான்? நானே கண்டு பிடிச்சேன்..”

 

“நான் நினைச்சத விட புத்திசாலியா இருக்கீயே..”

 

“ஆமா.. ஆமா… நான்..” இலக்கில்லாமல் பேச்சு எங்கெங்கோ சுற்றித் திரிந்தது. ஆனால் ‘நான் தான் உன் சொட்டை கணக்கு வாத்தி’ என்று வாய் திறந்தான் இல்லை.

 

கிச்சடி என்ற பெயரில் கிடைத்த எதையோ உண்டு காலை நேரம் வயிற்றை நிரப்ப.. அடுத்து அடுத்து வந்த உணவுகளை உண்டு மாள்வதா… உண்ணாமல் பசியோடு வாழ்வதா என்ற கடினமான முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

மொத்த பயணிகளும் சோர்ந்து போக.. ரயில் கிளம்பும் முன் நடைபாதையிலிருந்த காலி பெட்டிக் கடையின் சொந்தக்காரருக்கு மட்டும் சொல்லொன்னா உவகை.

 

எப்படியோ ஒரு வழியாய் இரயில் பயணம் முடிந்தது. இறங்கும் வேளை சிறுவர்கள் துளசியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்க, முதியவர் மூர்த்தியைத் தனியே அழைத்து, “சாரி தம்பி.. பாப்பா உங்க மனைவின்னு தெரியாம எதேதோ பேசிட்டேன். ரொம்ப சின்ன பொண்ணு. இன்னும் குழந்த முகம் கூட மாறல. ரொம்ப சேட்டை போல.. சின்ன பொண்ணு இல்லையா… அது தான் குறும்புத்தனம் இன்னும் மாறல. எதுக்கெடுத்தாலும் முறைக்காம பக்குவமா சொல்லுப்பா.

பாவம்.. உன்ன பார்த்தா ரொம்ப பயம் போல.. உன் கிட்ட பேசவே பயப்படுது குழந்த. உனக்கும் சின்ன வயசு தான்… பார்த்து குடும்பம் நடத்து.

மனைவிங்கறவ அழகான கண்ணாடி பாத்திரம் மாதரி. போட்டு உடச்சிடாத! கைய விட்டு போன பிறகு அது மதிப்பு உணர்ந்து பிரயோஜனம் இல்ல. பசி அறிஞ்சு ஒரு வாய் சோறு போட தாய்க்கு அப்பறம் தாரம் தான் தம்பி!” பெருமூச்சோடு சொல்லிச் சென்றார்.

 

அவன் மறுத்துப் பேசவே இல்லை. சுமார் அறுபது மணி நேரப் பயணம். இரயில் சிநேகம் முடிவடைந்தது. அதே அறுபது மணிநேரப் பயணம் மூர்த்தி-துளசிக்குள்ளாக ஏகப்பட்ட மாறுதலை ஏற்படுத்தியிருந்தது.

 

நட்பு தலைதூக்கியிருக்க.. உரிமை எட்டிப் பார்க்க.. தயக்கம் விட்டு போயிருக்க மூர்த்தி, துளசி என்ற இரு ஜீவன்களை அந்த நீளமான இரயில் பயணம் புது பயணத்திற்கு தயார் செய்துவிட்டிருந்தது.

 

ரயில் சிநேகம் ரயில் சிநேகம்

ரயில் சிநேகம் ரயில் சிநேகம்

முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது

முகமே இல்லாதது அறிமுகமே இல்லாதது

விதையும் இல்லாமல் நிலமும் இல்லாமல் மரமாய் உண்டாவது

 

ரயில் சிநேகம் ரயில் சிநேகம்

ரயில் சிநேகம் ரயில் சிநேகம்

 

வாழ்க்கை இங்குக் கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆராவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் என்ன வேறு பாரம்

 

நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை எங்கே தெரியவில்லை

இன்று மட்டும் உங்கள் கையில் உள்ளது

வாழ்க்கை உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது.

(1989 இரயில் சிநேகம் என்ற தொலைக்காட்சி தொடரின் தலைப்பு பாடல்)

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!