Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ16_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  16_1

 

 “ஓய்… காலையில வாசல் தெளிச்சிட்டு கோலம் போடாம என்ன செய்யற?”

 



Advertisement

தலைவாசலுக்கு இருபுறமும் வராண்டா இருக்க.. இடையே இருந்த படிகள் ஒன்றில்.. தன் நாடிக்கு கைகொடுத்து அமர்ந்திருந்தவளிடம் காபியை நீட்டிக் கொண்டே கேட்க.. அவள் காதில் என்ன விழுந்ததோ.. “இருங்க மூர்த்தி சார்” என்று காம்பவுண்ட் கேட்டிற்கு வெளியே ஓடியவள், நாளிதழ் போடும் பொடியனோடு உள்ளே வந்தாள்.

 

வாசல் தெளித்து.. பெருக்கியிருந்தாள். கோலமாவும் அருகில் இருக்க.. கோலம் மட்டும் மிஸ்ஸிங்!

Advertisement

 

Advertisement

“போடு… நீ தானே என் கோலத்தை நேத்து அழிச்ச.. இப்போ நீயே போடு. அப்போ தான் உனக்கு மத்தவங்க கஷ்டம் தெரியும்..” என்றவள் அவன் கோலமிட்ட பின்பே அனுப்பினாள்.

 

“ஏன் துளசி அவன் வேலையை கெடுத்துகிட்டு?”

Advertisement

 

“அவன் மத்தவங்க வேலைய கெடுக்கும் போது அத அவன் யோசிச்சு இருக்கணும் மூர்த்தி சார். கொஞ்சம் கூட உணர்வே இல்லாம பேப்பரை தூக்கி விட்டெறியறான். நாளையில இருந்து ஒழுங்கா கேட்-ல பேப்பர சொருவி வச்சிட்டு போவான் பாருங்க!” என்றவள் முகத்தில் ஒரு வித தீவிரம்.

 

“சின்ன பையன் துளசி…” பதினைந்து வயது பையனுக்குப் பரிந்துகொண்டு வந்தான்.

 

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது மூர்த்தி சார்! பாட்டி  சொல்லுவாங்க!”

“..”

“பரவால மூர்த்தி சார்… நல்லா தான் போட்டிருக்கான் இல்ல?”

 

“உன்னளவுக்கு இல்ல துளசி” என்று ஒரு பெரிய பனிக்கட்டியை அவள் தலை மீது வைக்க.. பெண் பூரித்துப் போனாள். “நீங்க நேத்து கவனிக்கவே இல்லன்னு நினைச்சேன் மூர்த்தி சார்.. பார்த்தீங்களா?” ஆசையாய் அவன் முகம் பார்க்க.. அவன் என்ன சொல்லுவான்?

 

“அழகா இருந்துது துளசி மா..” என்றனவனுக்கு அதில் ஒரு சந்தேகமும் கூட.. “அது பூ தானே?” குரலிலும் முகத்திலும் கேள்விக்குறியோடு பார்த்தான்.

 

“மூர்த்தி சார்!!” கண் உருட்ட..

 

“ச்ச.. சா… அது பூவான்னு சந்தேமே இல்ல துளசி! நான் கேக்கணும்னு நினைச்சது.. அதுக்கு எதுக்கு எல்லா இதழிலையும் பொட்டு வச்சிருந்தன்னு?”

 

“அதுவா? புள்ளி வச்சு கோலம் போட்டா.. அது இஷ்டத்துக்கு நாம நெளிய வேண்டியிருக்கு. அதனால பூ வரைஞ்சிட்டு அதுக்கு புள்ளி வச்சேன்” பெருமை எடுத்துவிட்டாள்.

 

“அசத்திற துளசி..”

 

“போங்க மூர்த்தி சார்.. பொய் சொல்றீங்க..” பெண் வெட்கத்தில் நெளிய.. பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் ஜோராய் போனது.

 

“நிஜம் தான் துளசி..  அசத்திற” என்றான்.  பெண் பூரித்துப் போனாள்..

 

“இதுக்கே அசந்திட்டா எப்பிடி மூர்த்தி சார். கலர் பொடி வாங்கி தாங்க.. இன்னும் அசந்திடுவீங்கனா பாருங்களேன்..” கண்களில் மின்னல் தெறித்தது.

 

அவனைக் கொள்ளையிட்டு கபளிகரம் செய்தது அவள் பேச்சும்… அவளின் மின்னும் விழிகளும்.

 

அன்று ஆரம்பித்து தினமும் அவன் திட்டமிட்டபடி ஒவ்வொரு வேலையாய் முடித்தனர். நாட்களும் அழகாய் நகர்ந்தது. காலை எழுந்து அவள் கோலமிட்டு.. பால் காய்ச்சவும்.. அவன் காபி போட.. இருவரும் கொல்லைப் புற திண்ணையில் ஒன்றாய் பேசிக்கொண்டே அதை அருந்த.. அவர்களைக் காண காகமும் வந்து விடும்! இப்படி தான் இருவருக்கும் தினமும் பொழுது புலரும்.

 

ஒரு மணி நேரம் இருவரும் பேசிக்கொண்டே வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து.. புதிதாய் நட்ட செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி என்று நேரத்தை இணைந்தே செலவிட்டனர். பஞ்சமில்லா பேச்சும் சிரிப்பும்.

 

பால்காரன் முதற்கொண்டு முக்குக்கடை காந்தி அக்கா வரை இருவரையும் கணவன் மனைவி என்றே நினைத்தனர். பால்காரனின் ‘பொஞ்சாதி’ செய்த வேலை!

 

தினமும் எங்காவது கூட்டிச் செல்வான்.. ‘தெரிந்த ஒருவரை பார்க்கப்போகிறேன் வருகிறாயா?’ என்ற பெயரில். அரசாங்க மருத்துவமனை, சிறைச்சாலை, அனாதை இல்லம், வாழ்வில் அடிமட்டத்தில் இருப்பவர் என்று யாரையாவது பார்க்கக் கூட்டிச் செல்வான்.

 

பலதரப்பட்ட மக்கள்.. இடம் என்று எதையாவது காட்டுவான். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்பதை அவளுக்கு உணர வைத்தான். சின்ன பெண் என்பதாலோ.. இயற்கையிலேயே போராடும் குணம் உள்ளதாலோ, அவள் மனம் பழையதை அசை போடுவதை நிறுத்தியிருந்தது. .அன்று மாலை.. துளசியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.

 

 

[the_ad id=”6605″]

 

“மூர்த்தி சார் … கண்ணு அரிக்குது!” என்று சிணுங்கினாள்.

 

அவன் வண்டி ஓட்டிக்கொண்டிருக்க.. பின்னால் அமர்ந்திருந்தவளின் கண் கட்ட பட்டிருந்தது.

 

“அரிக்கட்டும்… நீ பேசாம உக்காரு” என்றான்.

 

“மூர்த்தி சார்.. கண்ணு வேர்க்குது!”

 

“பரவால!”

 

“எங்க போறோம்?”

 

“பேசமா உக்கார். இல்ல தள்ளி விட்டுடுவேன்..”

 

கெட்டியாகக் கம்பியையும் அவன் சட்டையையும் கைகள் இறுக்கிப் பிடித்திருந்தது. கண்ணைக் கட்டி இரண்டு நிமிடம் ஆகவில்லை. ஐந்தாயிரம் ‘மூர்த்தி சார்’ வந்து விட்டது.

 

இப்பொழுது தான்… இந்த தெருவுக்குள் நுழையும் முன் தான் அவன் கைக் குட்டையால் அவள் கண்ணைக் கட்டினான். எங்கோ கூட்டிச் செல்கிறான். எங்கு என்று தெரிந்து கொள்ள ஆசை அவ்வளவு தான். சொல்லாவிட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு அவனோடு எங்கு வேண்டுமென்றாலும் சென்றுவிடுவாள் துளசி. நெஞ்சமெல்லாம் மூர்த்தி… சுவாசமெல்லாம் மூர்த்தி. ஒரே வீட்டில் அவனுடனான வாழ்க்கை செய்த மாயை! அவனின் குட்டி பெண் அவள்.

 

வண்டியை ஓரம் நிறுத்தி அவளை இறக்கியவன், “ஒரே மண்ணா இருக்கும்… கை பிடிச்சிட்டு வா. நான் கட்ட அவுக்கிற வரைக்கும் பொறுமையா வா..” என்று கைபிடித்துக் கூட்டிச் சென்றான்.

 

அவளும் பொறுமையோடு நடந்துகொண்டே… “எங்க போறோம் மூர்த்தி சார்? நதி ஓரமா? ஒரே மணலா இருக்கு. நடக்கவே முடியல” வளவளத்தாள்.

 

“நீ பார்க்கும் போது தெரியும்! இப்போ செருப்ப கழட்டு”

 

சொன்னதெல்லாம் செய்தாள்.

 

“கொஞ்சம் புடவைய கணுக்காலுக்கு மேல தூக்கிப் பிடி”

 

ஏகப்பட்ட கட்டளைகளோடு அவளை நீரில் நிற்கச் கூட்டிச் சென்றான்.. நீர் பட்ட நொடி, கால் சில்லிட்டது. கண்கட்டைப் பிரிக்க… உடலில் ஒரு சிலிர்ப்பு. மலைத்து நின்றுவிட்டாள்.

 

“இது தான் மெட்ராசோட மெரினா பீச்”

 

இது தான் கடலா? முடிவில்லையா இதற்கு? உண்மையிலேயே பரந்து விரிந்து கிடந்தது.

 

“எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். வாரத்துக்கு ஒரு தரம் கண்டிப்பா இங்க வந்திடுவேன். இந்த அலை ஓசை மனசுக்கு இதமா இருக்கும்”

 

ஹப்பா… என்ன ஒரு அழகு! கண்ணை மூடினாள், உண்மையிலேயே அந்த அலையின் ஓசை இதமாய் தான் இருந்தது.

 

நீளமான கடற்கரையும்.. காலை முத்தமிட்டுச் சென்ற அலைகளும், அவள் கண்களை விரிக்கத்தான் செய்தது. வாய் பிளக்க, “மூர்த்தி சார்..” என்றாள்.

 

காலடியில் இருக்கும் மண் அரித்துச் செல்லப் பட…. அதற்கும் மூர்த்தி சாரை தான் அழைத்தாள்.

 

மூர்த்தி சார்! எதற்கும் எதிலும் மூர்த்தி சார்!

 

“என்ன துளசி…. சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா?”

 

“ரொம்ப மூர்த்தி சார்” என்றாள். “இத விடப் பெரிய சர்ப்ரைஸ் ஒண்ணு இருக்கு” என்று பீடிகை போட்டான்.. அது தரவிருக்கும்  தலைவலி தெரியாமல்.

 

நீண்ட நேரம் அவள் நீரில் பாதம் பதித்து நிற்க,  அவளுக்குத் தனிமை தந்து, தள்ளிச் சென்று அமர்ந்தான். அவளுக்குத் தனிமை பிடிக்கவில்லை போலும் அவனருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள்.

 

இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவனுக்குள் ஏதேதோ எண்ணவோட்டம். அனைத்தும் துளசியைச் சுற்றி. அவள் எதையுமே யோசிக்கவில்லை. கண் அங்கு ஓடிக்கொண்டிருந்த நண்டின் மேலும், அவர்கள் அருகில் வந்தும், கால் நனைக்காமல் சென்ற அலைகள் மீதும் தான்.

 

[the_ad id=”6605″]

 

நண்டின் மேல் அலை அடிக்க நண்டு காணாமல் போனது. ‘ஐயோ’ என்று அவள் நினைத்து முடிக்கும் முன் மண்ணுக்குள்ளிருந்து நண்டு எழுந்து ஓடியது. யாருக்குத் தான் வாழ்வில் போராட்டமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.

 

நண்டே போராடும் பொழுது நாம் போராட வேண்டாமா? பொன் புடமிட்டால் தானே ஒளிரும்?

 

சலிக்காமல் அலையும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே தான் இருந்தது. கண் மூடி அந்த அலையின் இசையை உள்வாங்க.. அடங்காத அலையின் இரைச்சல்.. அடங்காத அவள் உள்ளக் குமுறலை வருடி கொடுத்தது. மூர்த்தியும், மனநல மருத்துவரும் அவளுக்கு உதவ ஒரு மாறுதல் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. மூர்த்தியின் மாயமோ மருந்தின் மாயமோ மூன்று நாட்களாகக் கனவில்லாமல் நன்றாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

 

ஒரு நாள், “நீ உன் ரூம்ல படு துளசி… கதவ சாத்த வேண்டாம். நான் இங்க ஊஞ்சல்-ல படுத்திருக்கேன். உள்ள இருந்து பார்த்தாலே தெரிவேன். நிம்மதியா தூங்கு” என்றான்.

 

மறு நாள், “கதவ சாத்தி வச்சுக்கோ… நான் ஹால்ல தான் படுத்திருப்பேன்” என்றான்.

 

அன்றும் பயமில்லாமல் தூங்கினாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முயற்சி எடுத்தான். ஒரு வாரம் முடியும் தருவாயில் தனியே கதவை தாழ்ப்பாளிட்டு உள்ளே தூங்கியிருந்தாள்.

 

தனியே அனத்தலின்றி படுக்கவும் விடுதி பார்க்க அழைத்துச் சென்றான். வேலை செய்யும் பெண்களுக்கான இடம். காலை ஐந்தரைக்கு வெளிக் கதவு திறக்கப்படும். இரவு ஒன்பதுக்குப் பூட்டப்படும். மிகவும் பாதுகாப்பான இடம் என்றனர், அவனுக்குத் தெரிந்தவர்கள். மூன்று வேளை உணவு கிடைக்கும். காலை உணவோடு மத்திய உணவும் கிடைத்துவிடும்.. டப்பா கட்டிக் கொள்ளலாம். அவரவர் அறையை அவரவர் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். அவரவர் துணியை அவர்களே துவைத்துக் கொள்ளவேண்டும். மற்றதெல்லாம் விடுதியின் பொறுப்பு.

 

[the_ad id=”6605″]

 

“உள்ள போய் பார்த்திட்டு வா துளசி” என்றதிற்கு “மாட்டேன்” என்றுவிட்டாள். வீட்டிற்கு வந்த பின் “செல்ல மாட்டேன்” என்று அவனோடு ஒரே சண்டை. அவன் மசியவில்லை. சென்று தான் ஆக வேண்டும் என்று விட்டான்.

 

“நான் சின்ன பொண்ணு மூர்த்தி சார். ஊர் உலகம் தெரியாது. என்னை ஏமாத்தி தூக்கிட்டு போயிடுவாங்க! இங்கேயே இருக்கேன்..” கெஞ்சியும் பார்த்துவிட்டாள்.

 

“உன்ன…?? ஏமாத்தி!!?? உக்கும்.. நீ ஏமாந்திட்டாலும்! கிளம்பு!” என்றுவிட்டான்.

 

“பச்..” அலுத்துக்கொண்டாள்.

 

“என்ன?” என்றதுக்கு

 

“என் பர்ஃபார்மன்ஸ் பத்தலியா?” விழுந்து போன முகத்தோடே கேட்டாள்.

 

“ம்ம்கூம்.. பத்தல. கிளம்ப ரெடியா இரு!” என்றுவிட்டான். ஆனால் அவளுக்கு அங்குச் செல்லும் எண்ணம் துளி கூட இல்லை. எப்படியும் அவளை அவன் அழவிட மாட்டான். தூக்கிச் சென்று விடவும் மாட்டான். இப்படியே இங்கேயே இருந்து விட வேண்டும் என்பது தான் அவளின் எண்ணம்.

 

அவனும் மறு நாளே அவளைக் கிளம்பச் சொல்லவில்லை. கல்லூரி திறக்கும் வரை அவளுக்கு அவகாசம் இருந்தது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!