Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ16_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  16_2

 

அன்று காலை 7:40க்கு வானொலிப் பெட்டியை திருகிக்கொண்டிருந்தாள். ‘தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்’ ஆரம்பித்துவிட்டிருந்தது. அடுத்த பத்து நிமிடம் அதைத் தான் கேட்பாள். நிகழ்ச்சியில் ஒரு தகவலும் அதையொட்டி ஒரு நகைச்சுவையும் இருக்கும். அது முடிந்ததும் அதைப் பற்றி ஒரு மணி நேரம் மூர்த்தியிடம் பேசுவாள்.

 



Advertisement

சரியாக 7:50 வானொலிப் பெட்டியிடமிருந்து எழுந்தவளிடம், “துளசி… இன்னைக்கு காலேஜ் பார்க்க போறோம்.. கிளம்பு” என்றதும், அவளுக்குத் தான் ‘ஐயோ’ என்றிருந்தது. எத்தனை அடம்பிடித்தாலும் அவன் விடமாட்டான் என்று தெரியும். இத்தனை நாட்களில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். என்றும் சிட்டாய் பறப்பவள் ஆற அமர கிளம்பினாள்.

 

பிரெசிடென்சி கல்லூரி வளாகத்தில் பைக் நிற்கவும் “இங்கேயா?” பெண்ணிற்கு மயக்கமே வந்து விட்டது. இத்தனை பெரிய கல்லூரியிலா?

Advertisement

 

Advertisement

“இங்கேயே தான்” என்றான்.

 

அவள் பராக்கு பார்த்துக் கொண்டே மெதுவாக நடக்க.. முன்னே சென்று கொண்டிருந்தவனை.. “மூர்த்தி சார்” என்ற அழைப்போடு ஒருத்தி அவனருகில் ஓட்டமும் நடையுமாய் வர… இவனும் வாயெல்லாம் பல்லாய், “ஹாய் ரதி..” என்று அவளை நோக்கிச் சென்றான். பார்த்துக்கொண்டிருந்தவள் அவர்கள் அருகில் செல்லவில்லை. அருகிலிருந்த மரத்தடியில் நின்றுவிட்டாள்.. ஏதோ வேடிக்கை பார்ப்பது போல்.

Advertisement

 

அது வேலை நேரம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டமில்லை. ஆங்காங்கே இளவட்டமும் வேலையாட்களும் தென்பட்டனர். கண் எங்குச் சுற்றினாலும் நொடிக்கொரு முறை மூர்த்தியின் மேலும் அந்த பெண்ணின் மேலும் பதிந்து சென்றது. நல்ல முக லட்சணம்.. நல்ல உயரம், மூர்த்தியின் காது வரை இருந்தாள். சிரித்த முகமாய் இருவரும் பேசிக் கொண்டிருக்க.. இவளுக்குள் ஏதோ ஒரு பிடித்தமில்லா உணர்வு. அவள், மூர்த்தியை ’மூர்த்தி சார்’ என்று அழைத்ததால் கூட இருக்கலாம்.

 

வீட்டிற்கு வந்த பின்னும் அதிசயமாகத் துளசி பேசவே இல்லை.

 

“என்ன அச்சு என் குட்டி பொண்ணுக்கு? சத்தத்தையே காணம்? உடம்பு எதுவும் சரி இல்லையா துளசி?” நடு கூட ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்துகொண்டே அவன் கேட்க.. பதிலில்லை.

 

முந்தியின் நுனி அவள் விரலில் சுற்றி இழுபடவுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது. வேறு ஏதோ காரணம் என்று!

 

“என்ன துளசி மா? என்ன ஆச்சு? என் கிட்ட சொல்ல மாட்டியா?”

 

“எனக்கு அந்த காலேஜ் வேண்டாம் மூர்த்தி சார்..” கோபமும் ஆதங்கமும் தாங்கிய வார்த்தைகள்.

 

“ஏன் மா?”

 

“வேண்டாம் மூர்த்தி சார்!”

 

[the_ad id=”6605″]

 

“அது ரொம்ப ப்ரெஸ்டீஜியஸ் காலேஜ் துளசி. அட்மிஷன் முடிஞ்சு மாசம் ஒண்ணாச்சு! இப்போ ஃப்ர்ஸ்ட் இயர் திறக்குது. நீ என்ன நினைச்ச.. ஒரு வருஷம் பிரேக் விட்டுட்டு, போய் நின்னதும் கிடைச்சிதுனா? இது கிடைக்க நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? இப்போ வேண்டாம்ன்னு சொன்னா.. நான் கேட்டு.. சீட் கொடுத்த பிரின்சிபால் முகத்தில நாளைக்கு எப்படி முழிப்பேன்? சரி, இப்போ இங்க வேண்டாம்னா வேற எங்க போறது? ஏன் வேண்டாம் அத சொல்லு?” பொறுமையாக தான் பேசினான். ஆனால் அவள் தான் எதையும் காதில் வாங்கும் நிலையிலில்லை.

 

“அது பசங்களும் படிக்கிற இடம்.. எனக்கு ஆம்பிளைங்க இருக்க இடம் வேண்டாம்” இன்னும் முந்தியிலிருந்து பார்வை உயரவில்லை.

 

“துளசி…”

 

“ம்ம்?”

 

“என்னை பாரு..”

 

“சும்மா அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காதீங்க.. நான் போக மாட்டேன்னா போக மாட்டேன் தான்! வர வர நீங்க என்னை சின்ன பாப்பா மாதிரி நடத்துறீங்க..” முகம் பார்த்து அவள் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தாள்.

 

“நான் அப்படி நடத்தல… நீ தான் அப்படி நடந்துக்கிற! ஆம்பளை வேண்டாம் சொல்ற… ஆனா நீ ஒரு ஆம்பள கூட தான் இருக்க..”

 

“பச்… நீங்க வேற!”

 

“அத தான் நானும் சொல்றேன். எல்லாருமே பொறுக்கி கிடையாது. தோழமையோட… சகோதர பாசத்தோட பழகிறவங்களும் இருக்காங்க. உலகம் தெரிய வேண்டாமா? பயந்து எத்தன நாள் என் பின்னாடியே ஒளிஞ்சுக்க போற!”

 

“எனக்கு உலகம் தெரியவேண்டாம்.. யாருடைய பாசமும் வேண்டாம். நான் சாகிற வரைக்கும் உங்க பின்னாடியே ஒளிஞ்சுக்க எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல!” வார்த்தைக்கு வார்த்தை பதில் வைத்திருப்பவளிடம் என்ன பேசி புரியவைக்க?

 

அவனும் அவளுக்குக் குறைவில்லாமல் பேசினான். “சரி… நாளைக்கே நான் செத்து போயிட்டா..?” நியாயமான கேள்விதான் ஆனால் சற்று காரம் அதிகம்! அதை தாங்கிக்கொள்ள பெண்ணுக்குத் தெம்பு வேண்டாமா?

 

பேச்சு அப்படியே நின்று போனது. அவள் இதயமும்! ‘மூர்த்தி இல்லாமல் போனால்?’ மூர்த்தி சார், அவள் சுவாசம் ஆகிற்றே… என்ன செய்வாள்? எப்படி அவர் இப்படி பேசலாம்? கோபமும் வருத்தமும் முட்டிக்கொண்டு வர, அவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

 

அவன் பின்னோடு செல்லவில்லை. முதல் சண்டை! இருவருக்கும் அவரவர் நியாயம். அனல் சற்றும் குறையவில்லை!

 

அவள் உலகம் தெரியாத அப்பாவியாக வளர்ந்து நிற்பது போதும் என்பது அவன் எண்ணம். ஏகப்பட்ட சிபாரிசில் கல்லூரியில் இடம் வாங்கியிருந்தான். குழந்தை எழுந்து நடக்க முற்படும் வேளை விழத்தான் செய்யும். தூக்கியே வைத்திருந்தால் நடை பழக வேண்டாமா? கூட்டுக்குள்ளேயே இருந்தால் பட்டாம்பூச்சி மாண்டு போகாதா? சொன்னால் புரிந்துகொள்ளாத பிள்ளையை எதற்கும் கொஞ்சவா முடியும்?

 

முடியும் என்றது மூர்த்தியின் மனது. இரவு உணவிற்கு அவள் வரவில்லை. அவளுக்குப் பசிக்குமே. அவன் கோபம் பத்து நிமிடம் நீடிக்கவில்லை. மாலை கடற்கரை சென்று மீன் வாங்கி வந்தான், அவளுக்காக. மணக்க மணக்க மீன் குழம்போடு காத்திருக்க அவள் வரவே இல்லை.

 

என்ன செய்ய.. கொஞ்சி.. கெஞ்சி சமாளிக்க வேண்டுமே..

 

“துளசி மா..” என்று கதவைத் தட்டிக் கொண்டு நின்றான். எப்படியோ அவள் கையிலும் காலிலும் விழுந்து.. “எனக்கு பசிக்குது.. நீ சாப்பிடாட்டி நான் பட்டினியா படுத்திடுவேன்” என்று மிரட்டி உணவை உள்ளுக்குள் இறக்கினான்.

 

பத்து நிமிடம் கூட சண்டையை பிடித்து வைக்கத் தெரியாத அவன் துளசியா இது? இன்னும் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை.

 

“என்ன கோவம் துளசி மா..?”

 

“ஒண்ணும் இல்ல”

 

“உன்னோட ஒண்ணும் இல்லைல நிறைய இருக்க மாதிரி இருக்கே..? என் கிட்ட கூட உன் மனச மறைக்க முடியுமா?” கேள்வி சரியாக வேலைச் செய்தது.

 

“நீங்க அப்டி பேசினது எனக்கு பிடிக்கல?” என்றாள் தணியாத கோபத்தோடு.

 

என்ன பேசினான்? நினைவில் இல்லையே?

 

“காலேஜ் போக சொன்னது ஒரு குத்தமா துளசி? என்ன பேச்சு பேசிற? நான் உனக்கு கெடுதல் நினைப்பேனா?”

 

‘அது இல்ல..”

 

“அப்போ என்ன..?”

 

கண்ணில் குளம் கட்டிக் கொண்டு அவள் முறைக்கவும் அவனுக்கு உதித்தது. ஆயிரம் சாரி கேட்டு.. இனி அப்படியான வார்த்தையை உபயோகிப்பது இல்லை என்று சத்தியம் செய்து ஒருவழியாய் அவளை சமாதானப் படுத்தினான்.

 

நாட்கள் சென்றது. அவனும் எப்படி எல்லாமோ கேட்டுவிட்டான். அவள் விடுதி செல்ல மாட்டவே மாட்டேன் என்றுவிட்டாள்.

 

கல்லூரி திறக்க இருதினங்களே இருக்க மீண்டும் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. “ரொம்ப அடம் பிடிக்கிற துளசி..”

 

“நான் இல்ல… நீங்க தான் அடம் பிடிக்கிறீங்க. என் பேச்ச கேக்கவே மாட்டேங்கறீங்க! எனக்கு இந்த காலேஜ் பிடிக்கல!” மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“நீ போகத் தான் போற. வீட்டில இருந்து தேவ இல்லாததை எல்லாம் யோசிக்க நான் விட மாட்டேன்”

 

“அப்போ வேற காலேஜ்-ல சேர்த்து விடுங்க!”

 

“என் அப்பனா காலேஜ் வச்சு நடத்திறான் கேட்டதும் சீட் குடுக்க? நாளைக்கு ஹாஸ்டல் போற.. ரெண்டு நாள்ல இடத்தைப் பழகிக்கோ.. அப்போ தான் காலேஜ் போக வசதியாயிருக்கும். சொன்னா கொஞ்சமாது கேளு. வாரத்துக்கு ஒரு தரம் வரேன். டாக்டர பாக்க கூட்டிட்டு போக வரும் போது வெளியில கூட்டிட்டு போறேன்…” அவன் சத்தம் உயர்த்தினான். அவன் பேசப் பேச அவளுக்குக் கோபம் தான் அதிகமாகியது.

 

“மாட்டேன்.. உங்களுக்கு என்னை வச்சுக்க பிடிக்கலனு சொல்லுங்க போறேன். இல்ல நான் ஹாஸ்டல் போக மாட்டேன். பையனுங்க இருக்க காலேஜ் வேண்டவே வேண்டாம்..” அடத்தின் உச்சியில் இருந்தாள்.

 

“என்ன துளசி மா… செல்லம் இல்ல… புரிஞ்சுக்கோ. மாடி வீட்டு மாமி வந்தா உன்ன யாருன்னு அவங்களுக்கு சொல்லுவேன்? தப்பா பேச மாட்டாங்களா?”

 

அவன் இறங்கி வர அவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. “என்னை ஏமாத்திட்டீங்க மூர்த்தி சார்.. உங்களுக்கு என்னை பிடிக்கல!”

 

“துளசி மா.. என் குட்டி பொண்ண பிடிக்கிறனால தானே யாரும் ஒண்ணும் சொல்லிட கூடாதுன்னு பாக்கவேண்டி இருக்கு.”

 

“போங்க மூர்த்தி சார்… யார் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் நான் ஹாஸ்டல் போக மாட்டேன். இந்த காலேஜுக்கும் போக மாட்டேன்”

 

“கண்டவங்க கண்ட மாதிரி பேச என்னால அனுமதிக்க முடியாது துளசி!”  சத்தம் மீண்டும் உயர்ந்தது.

 

“அவங்க சொல்றதுக்காக எல்லாம் நான் உங்க மனைவியா ஆக நினைக்க மாட்டேன் மூர்த்தி சார்.” அவள் வாதத்தை முன் வைத்தாள்.

 

“பச்… துளசி மா… நான் அந்த அர்த்ததில பேசவே இல்ல!”

 

[the_ad id=”6605″]

 

பேச்சு தவறான திசை நோக்கிச் செல்வது தெரிந்தது. அவன் அதற்கு மேல் பேசவில்லை. அவன் அமைதியாகவும்.. அவன் முகம் நோக்கினாள். அமைதலாக, “எனக்கு நிஜமாவே ரொம்ப பயமா இருக்கு மூர்த்தி சார்… வேண்டாம் மூர்த்தி சார்” கண்ணில் நீரி கோர்க்க அவளின் பயத்தைக் கூறவுமே.. ‘சர்ப்ரைஸ்சாவது ஒன்றாவது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

 

“உன்ன நான் தனியா விடுவேனா? அதுக்கு தானே பாடாபட்டு அங்க அட்மிஷன் வாங்கினேன். அங்க நீ வந்தா தானே நான் உன்ன என் கண் பார்வையில வச்சுக்க முடியும் துளசி? என்னை மீறி யாரும் உன் கிட்ட அங்க வர மாட்டாங்க துளசி மா!”

 

“ஏன் மூர்த்தி சார்.. அங்க தான் நீங்களும் படிக்கிறீங்களா?” மூக்கை உறிஞ்சினாள்.

 

“இல்ல துளசி.. படிக்கல. படிப்பு சொல்லி தரேன்..”

 

கண் விரிந்தது. “நீங்க மேக்ஸ் ப்ரொஃபசரா?”

 

“இல்ல அசிஸ்டென்ட் ப்ரொஃபசர்.”

 

“எல்லாம் ஒண்ணு தான்! அப்போ ஏன் வீட்டில இருக்கீங்க?”

 

“உனக்காக லீவ எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்கேன்..”

 

‘பேராசிரியர்’ என்ற ஒற்றை வார்த்தை சூழலை தலை கீழாக மாற்றியது.

 

“ஜாலி ஜாலி… நான் உங்க கூடவே பைக்ல காலேஜ் போவேனே…” பெண்ணை கையில் பிடிக்க முடியவில்லை.

 

“இவ்வளவு பெரிய விஷயத்த என்ட்ட சொல்லவே இல்ல நீங்க.. மக்கு மூர்த்தினு சந்தேக பட்டேனே அப்போவாது சொல்லி இருக்கலாமே!”

 

“காலேஜ்-ல வச்சு உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு நினைச்சேன்.. சொல்லு காலேஜ் ஜாயின் பண்ற தானே?”

 

“ஓ…” பெண் முகமெல்லாம் பல்லாய் போனது. அவனோடே வீட்டிலும் இருக்கலாம். கல்லூரியிலும் இருக்கலாம் என்ற எண்ணமே அவளை மீண்டும் அவள் நிலைக்கு கொண்டுவந்தது.

 

“நான் காலேஜ் போக ஒத்துக்கிட்டேன் இல்ல.. இப்போ குல்பி-காரன் வருவான் வாங்கி தரணும்!” பேச்சில் அளவிட முடியா துள்ளல்.

 

“ம்ம்கும்… இல்லேனா நீ வாங்கிறதே இல்ல பாரு..”

 

பயம் போன திசை தெரியவில்லை. துளசி அவதாரத்திற்கு மீண்டும் வந்தாள். “போங்க மூர்த்தி சார்!” செல்லம் கொஞ்சினாள்.

 

கல்லூரி குழப்பம் முடிந்தது. இது தெரிந்திருந்தால் கல்லூரியில் வைத்தே அங்கு வேலை செய்வதை கூறியிருப்பானே. இன்னும் விடுதி பாக்கி இருக்கிறது? அவள் இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. என்ன சொல்லி இவளுக்குப் புரியவைப்பது என்றே அவனுக்குப் புரியவில்லை. சின்ன பெண் இப்பொழுது தான் நிம்மதியாக உறங்கவே ஆரம்பித்திருக்கிறாள். சிறகு விரிக்க ஆரம்பித்ததும் அது ஒடிந்து விடுமோ என்ற பயம் வேறு.

 

அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி! வாய்க்குள் ஏதோ பாடிக்கொண்டே ஊஞ்சலில் உல்லாசமாய் ஆடிக்கொண்டிருந்தாள். இப்படிப் பாடிக் கொண்டிருப்பவளிடம் என்ன சொல்லமுடியும்?

 

சிறிது நேரத்திற்கெல்லாம் குல்பி மணி அடிக்க.. அலமாரியில் புத்தகம் அடுக்கிக்கொண்டிருந்தவன், “துளசி மா.. குல்பி வந்திடுச்சு பாரு. பர்ஸ்ச எடுத்திட்டி போய் வாங்கிக்கோ..” என்றவன் அவன் வேலையில் மூழ்கி போனான்.

 

பர்ஸ்சை அவனிடம் கொடுத்தவள், “நீங்களே எடுத்து கொடுங்க. எனக்கு ரெண்டு குல்பி வேணும்… ஒவ்வொரு கைக்கும் ஒண்ணு!” அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடினாள்.

 

பார்த்தவனுக்கு ‘இங்கேயே வைத்துக் கொண்டால் என்ன’ என்ற ஆசை எட்டிப் பார்த்தது. எப்படியும் யாரும் தவறாய் பேசவில்லை. மனைவி என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்றானாலும் இவள் தான் அவன் மனைவியும் கூட..

 

[the_ad id=”6605″]

 

இரண்டு குல்பியோடு வந்தாள். ஒன்றை வாயிலும் ஒன்றைக் காயிலுமாக கொண்டுவந்தவள்.. ”இது உங்களுக்கு.. போனா போகுது சாப்பிடுங்க..” என்றாள் பெருந்தன்மையோடு.

 

“எனக்கு வேணும்னா நான் சொல்லி இருப்பேனே… நீ ஆசையா வாங்கினத சாப்பிடு. எனக்கும் வாங்கணும்னு நினைச்சிருந்தா.. மூணு வாங்க வேண்டியது தானே..”

 

“மூணு வாங்க நான் காசு கொண்டு போகலியே.. பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு கணக்கு வாத்தியாரா இருக்கீங்க..” குல்பியை சூப்பிக் கொண்டே பர்ஸ்சை திறந்து மீதி பணத்தை வைத்தவளுக்கு அடுத்த வார்த்தை தொண்டைக்குள் சிக்கித் தவித்தது.

 

ஏனாம்?

 

“நம்ம பாண்டியன் சொந்தக்கார பையன் தான். பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு டௌன்-ல கணக்கு வாத்தியாரா இருக்கானாம்.” சித்தி கூறியது காதில் ஒலித்தது.

 

கண் பர்ஸ்சை விட்டு இம்மி நகரவில்லை. கண்ணில் ஊற்று புறப்பட எதிரில் எல்லாம் மங்கலாக ஆரம்பித்தது.

 

“சரி சுந்தரி.. சொல்லு இந்த கூஜா-ட்ட.. இங்க இருந்து அவர் போகத்துக்குள்ள என்னைப் பார்த்து அவர் சிரிச்சிட்டா, அவர் எனக்கு தான்னு!” சுந்தரியிடம் இவள் கூறியது உள்ளுக்குள் எதிரொலித்தது.

 

நெஞ்சாங்கூடு ‘ஓ’வென்று அலறியது. இன்று வரை உணராத வேதனை இது.

 

பர்ஸிலிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை. அதிலிருந்த வண்ணப்படத்தில் மூர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். இதயத்தை யாரோ பிசைவது போன்ற வலி!

 

வாயிலிருந்து கைக்கு மாறிய குல்பி, கையில் கரைந்து சொட்டியது. அப்படியே அவள் இதயமும்!

 

“நான் இங்கிருந்து போறேன்.. மூர்த்தி சார்” வலிக்க வலிக்க.. கூறியேவிட்டாள்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!