Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ17 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  17

 

வெட்ட வெளி மாடி.. மாடி போல் வீடும் வெறுமை பூண்டிருக்க, வீட்டிற்குள் மூச்சு முட்டியது மூர்த்திக்கு. மனமோடு உடலும் சோர்ந்து போயிருக்க மனம் மாடி போலவே வெறுமையில்! துளசி இல்லாத வீடு பிடிக்கவில்லை. மாடியில் தான் ஒரு ஓரமாய் அமர்ந்திருக்கிறான்.

 



Advertisement

வீடு முழுவதும் அவள் சிரிப்பும் ‘மூர்த்தி சார்’ என்ற மத்தாப்பு சத்தமும் நிறைந்திருக்க.. அவனால் அங்கு இருக்கமுடியவில்லை. தன் தனிமையை விரட்டி அவனை முழுவதுமாக ஆட்கொண்ட கணிதம் கூட இன்று பிடித்தமில்லாமல் போனது.

 

அவள் சிரிப்பு சத்தம் சித்திரவதை என்றால்… அவள் கடைசியாக அழுத அழுகை? உயிரோடே அவனைக் கொன்று கொண்டிருந்தது.

Advertisement

 

Advertisement

குல்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எப்பொழுது சென்றாளோ தெரியவில்லை. மணி பத்தை தாண்டியிருக்க அவள் அறை திறந்திருந்தாலும் அரவமில்லை.

 

இருட்டு அறைக்கு வெளியே நின்று, “துளசி..” என்றான் மென்மை மாறாமல்.. பதில்லை என்றதும் தூங்கி இருப்பாள் என்று வெளி கேட்டை பூட்டிவிட்டு ஒவ்வொரு கதவாக அடைத்து வந்தவன் காலில் பிசுபிசுத்தது ரெட் ஆக்சைட் தரையில் உயிர்விட்டிருந்த குல்பி.

Advertisement

 

நெற்றி சுருங்க பார்த்தவனுக்கு புரியவில்லை. ஆசையாய் வாங்கியதை அங்கே போடக் காரணம்?

 

இடத்தை துடைத்துவிட்டு கொல்லைப்புற கதவைப் பூட்டப் போனவன் கண்ணில் பட்டது கிணற்றடியில் ஒரு உருவம். ‘துளசி?’ அவன் துளசியே தான்.. தன்னை மறந்து கிணற்றடியில் அமர்ந்திருந்தாள்.

 

ஏதோ ஒரு வாத்தியாரிடம் வாழ வேண்டிய வாழ்க்கை இல்லாமல் போனது பெரிதாய் தோன்றவில்லை. எவன் ஒருவனைக் கண்ட நொடியே தன் நிலை மறந்து.. மயங்கி.. கிறங்கி.. அவன் தான் வேண்டும் என்று சண்டையிட்டு, சபதம் போட்டு, அவனையே மான அவமானம் பார்க்காமல் சுற்றித் திரிந்து.. அவனுக்குப் பிள்ளை பெற்றுக் கொடுப்பது வரை கனவு கண்டாளோ.. அவன் தான் அவளுக்கானவன் என்று தெரிந்த பின் தள்ளி போகவேண்டிய நிலையை மனதார சபித்தாள்.

 

இதோ கைக்கெட்டும் தூரத்தில் கனவெல்லாம் கண்ணில் ஏந்தி, ஏதோ அவள் சிரிப்பில் தான் அவன் வாழ்வே அடங்கியுள்ளது போல் அவளையே சுற்றித் திரிபவன் தான் அவளின் சொட்டை வாத்தியா? ஐயோ.. இவன் சொட்டை கூட இல்லையே.. பார்த்த மாத்திரத்தில் மனதைக் கொள்ளையடிக்கும் வசீகரன் ஆகிற்றே..! ‘ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என்று கூற ஒரு காரணம் கூட இல்லையே..  இப்படி ஒரு விதியா? என்றாவது யாருக்காவது துரோகம் செய்துவிட்டேனா? ஏன் இப்படி எனக்கு? என்ன முயன்றும் அடக்க முடியாத உள்ள குமுறல் இவை.

 

“துளசி..” என்ன அழைத்தும் அவள் நகரவே இல்லை. என்ன நடந்தது? “துளசி மா?”

 

கைபிடித்துத் தூக்கி நிறுத்தவும் தான் அவள் உணர்வு மீண்டது. அவனைப் பார்க்கப் பார்க்க நெஞ்சாங்கூடு காலியான உணர்வு. இப்படி அவளைக் கண்ணுக்கு வைத்துத் தாங்காமல் இருந்தால் கூட விலகி சென்றுவிடலாம். இன்று வரை ஏதோ பரிதாபப்பட்டு பார்த்துக் கொள்வதாய் நினைத்தால்… மனம் முழுவதும் அவளை தாங்கிக்கொண்டல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறான்? 

 

“இருட்டில.. இங்க என்ன பண்ற துளசி? வா”

 

 

[the_ad id=”6605″]

 

“என் செல்ல குட்டி பொண்ணுக்கு என்ன ஆச்சு?” கொஞ்சிக் கொண்டே வந்தவன் அடுக்களை வெளிச்சத்தில் அவள் முகம் பார்க்கவும் பதறி போனான். “துளசி மா..?” சிவந்த முகத்தோடு உணர்வுகளை எல்லாம் உள்ளே அடக்கி நின்றவளை கண்டதும், வார்த்தை தொண்டையில் மாட்டிக் கொண்டு வலித்தது.

 

“துளசி? என்ன துளசி ஆச்சு…? ஏன் எதையோ பறி கொடுத்த மாதிரி நிக்கிற? துளசி….?” ஒரு மணி நேரத்தில் என்ன நடந்தது?

 

‘என்ன பறிகொடுத்தாய் துளசி? அனைத்தையுமே மூர்த்தி சார்!’ மனம் விம்மியது.

 

“என்ன(னை) பாரு” நாடி பிடித்து உயர்த்த… கண் உயரவும் சரசரவென்று கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் கொட்ட ஆரம்பித்தது. கட்டுப்படுத்தத் தெரியாத உணர்வுகள் அவளை அலைக்கழிக்க.. முழு வேகத்தோடும் அவன் நெஞ்சைப் பிடித்து தள்ள.. தள்ளிய வேகத்திற்கு அவள் தான் இரண்டடி பின் சென்றாள்.

 

“துளசி…  என்னை பயமுறுத்துற… என்ன ஆச்சு? சொன்னா தான் தெரியும். ஹாஸ்டல் வேண்டாமா…? போக வேண்டாம். இங்கேயே எப்பவும் போல இரு. இது உன் வீடு! போகச் சொல்லவே மாட்டேன்.. ப்லீஸ் பேசு துளசி.. என்ன மா ஆச்சு?”

 

“இல்ல…” உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் கத்தியே விட்டாள்.

 

“என்ன இல்ல?” அவன் துளசிக்கு என்ன ஆனது? பதறிப் போனான்..

 

“இல்ல… இது என் வீடா இருக்க எனக்கு கொடுத்து வைக்கல மூர்த்தி சார்..” கேவல் வேடிக்க.. அவள் மூச்சு விட திணற.. அவனுக்குத் தான் குழப்பம். என்ன நடந்தது? ஏன் இந்த பேச்சு? ஏன் இந்த கண்ணீர்? எங்கு தவறினான்… குழப்பம் மட்டுமே அவனுக்கு மிச்சம்!

 

“என்ன பேசுற துளசி? யார் சொன்னா? இது நம்ம வீடு துளசி மா!” அவள் கண்ணீர் அவனுக்குள் பயபந்தை இறக்கியது.

 

“நான் யார் மூர்த்தி சார் உங்களுக்கு?” சிவந்த கண்களில் கண்ணீரை மிஞ்சிய வலி.

 

“என்ன துளசி? ஏன் திடீர் சந்தேகம்?”

 

“சொல்லுங்க.. மூர்த்தி சார்..”

 

“என் குட்டி பொண்ணு நீ துளசி!”

 

“அப்படி மட்டும் தான் என்னை நினைக்கிறீங்களா?”

 

இதற்கு மேல் அவளிடம் மனதை எப்படி மறைக்க? கண்ணீர் வழிய அவள் அண்ணாந்து அவன் கண் பார்க்க… “நீ என் மூச்சு காத்து துளசி. என் இதயத்த இயக்குற உயிர் நீ. என் வாழ்க்கையோட நிறைவு. என் நிம்மதி நீ துளசி! நீ இல்லேனா நான் இல்ல துளசி” அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவன் உரைக்க… அவள் உடைந்தே போனாள்.

 

“நீங்க பார்த்து ஒத்துகிட்ட கோமு நானில்ல மூர்த்தி சார். அவ செத்து போய் வருஷம் ஆச்சு மூர்த்தி சார். நான் அசிங்கம் மூர்த்தி சார். உங்களுக்குத் தெரியாது.. ரொம்ப அசிங்கப் பட்டு அவமானப் பட்டு.. கேவல பட்டவ நான். என் கிட்ட நீங்க எதிர்பார்க்கிற எதுவுமே இல்ல மூர்த்தி சார்! உங்க பாசத்துக்கு எனக்கு தகுதியே இல்ல மூர்த்தி சார்!”

 

நின்ற இடத்திலேயே மண்டி இட்டு அழ.. அவனும் அவள் அருகில் மண்டி இட்டு அமர்ந்தான்.

 

“ஏன் துளசி இப்படி எல்லாம் பேசற? நான் உன் கிட்ட எதுவுமே எதிர்பார்க்கல. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி.. நீ எப்படி இருக்கியோ அப்படியே எனக்கு உன்ன பிடிக்கும். மனசார உன்ன விரும்பறேன் துளசி. காலத்துக்கும் எனக்கு இது போதும் துளசி மா. உன் கூட இருக்க ஒவ்வொரு நொடியையும் நான் ரசிச்சு வாழறேன். சத்தியமா எனக்கு நீ எப்படி இருக்கியோ அப்படியே போதும்.  இப்போ நீயும் நானும் வாழற வாழ்க்கை அதுக்கு சாட்சி. எனக்கு இது போதும் துளசி மா. முதன் முதலா உன்ன நான் பார்த்த போது இருந்த அதே துளசி தான் இன்னுமே.. எனக்கு உன் கிட்ட ஒரு வித்தியாசமும் தெரியல துளசி. எனக்கு நீ தான். இது தான் என் முடிவு. உன் முடிவுக்குத் தான் காத்திருக்கேன்.. நீ இல்லாத வாழ்க்கை எனக்குக் கண்டிப்பா வேண்டாம்.”

 

 

[the_ad id=”6605″]

 

 

இதை விட வலி வேறு உண்டா? இவருக்கு நானா? ஒரே நிமிடத்தில் கடந்த கால கதறல்களும் அருவருப்புகளும் முன் வர.. அந்த மிருகங்கள் வைத்த மீதியா அவள் மூர்த்தி சாருக்கு? மனம் ஒப்பவில்லை. உடலெங்கும் புழு ஊற.. மறந்த எல்லாம் மீண்டும் கண் முன் வந்து அவளை உயிரோடு தின்றது. அவளால் கண்டிப்பாக ஒரு பந்தத்திற்குள் நுழையவே முடியாது. உயிராய் மூச்சுக் காற்றாய் போன மூர்த்தியின் வாழ்வை கெடுக்கவும் முடியாது. ‘செத்து போ துளசி..’ கைக்குள் முகம் புதைக்க.. உடல் குலுங்கியது. 

 

அவன் தலை வருடவுமே.. அவள் எழுந்துவிட்டாள். அவனைத் தனியே விட்டுவிட்டு அன்று இரவு படுக்கையறை சென்றவள் அடுத்த நாள் அவனை விட்டுச் செல்ல பெட்டியோடு தயாராய் நின்றாள்.

 

“நான் ஹாஸ்டல் போறேன் மூர்த்தி சார்” என்று காலை டிபனுக்கே கிளம்பி நின்றாள்.

 

துளசிக்குச் சிறகு வேண்டும் என்று நினைத்தான். அவன் சிறகை இழப்பான் என்று நினைக்கவே இல்லை.

 

“வேண்டாம் துளசி. உனக்கு உலகம் தெரியணும்னு தான் ஹாஸ்டல் போகணும்னு நினைச்சேன். யாரும் உன்னை தப்பா பேசிட கூடாதுன்னு தான் என் முடிவில ஸ்ட்ராங்கா இருந்தேன். நேத்து வரைக்கும் பார்த்த எல்லோரும் நம்மள பத்தி என்ன நினைச்சாங்களோ அதையே மாமிட்ட சொல்லிடலாம். நீ சரி சொன்னா.. இப்போவே ஒரு முகூர்த்த நாள வீட்டில பார்க்க சொல்றேன். இப்படியே இருப்போம்… என்னை விட்டு போகாத துளசி மா..”

 

“உங்க கூட.. உங்க இணையா இந்த போட்டோல கூட இருக்க எனக்குத் தகுதி இல்ல மூர்த்தி சார்” என்றுவிட்டாளே..

 

“நான் போறேன் மூர்த்தி சார்” என்று தான் கூறினாள். “இது உன் வீடு துளசி… போயிட்டு வரேன்னு சொல்லு” என்றதிற்கு வலியோடே மீண்டும் அதையே தான் கூறினாள், “போறேன் மூர்த்தி சார்” என்று.

 

“நீங்க செஞ்ச உதவியை நான் மறக்கவே முடியாது. அத என்னால இந்த ஜென்மத்தில ஈடு செய்யவே முடியாது. என்னால ஒண்ணே ஒண்ணு செய்ய முடியும்.. அது உங்களுக்கு வர ஒரு நல்ல வாழ்க்கையை கெடுக்காம இருக்க முடியும். என் விருப்பத்துக்கு எந்த தடையும் இன்னைக்கு வரைக்கும் நீங்க போட்டதில்ல. என் போட்டோவோட என்னையும் உங்க வாழ்க்கையில இருந்து எடுத்திடுங்க மூர்த்தி சார். என் முடிவுக்கு மதிப்பு தாங்க மூர்த்தி சார். எனக்கு உங்க குட்டி பொண்ணா இருந்தா மட்டும் போதும் மூர்த்தி சார்..” குரலில் வலி இருந்தாலும் அவள் தீர்மானமாய் கூறுவது தெரிந்தது. அவள் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்து வாதம் செய்யவில்லை.

 

குட்டி பெண்ணாய் இருக்க விருப்பம் தெரிவித்தவள்.. அவன் குட்டி பெண் போல் பேசவில்லையே.. அவள் விடுத்திக்குள் நுழைய எத்தனிக்கவும் அவனால் தாள முடியவில்லை. அவன் சிட்டு குருவி அவனை விட்டு பறந்து கொண்டிருக்கிறதே.. “துளசி மா? வேண்டாம்.. இந்த ஹாஸ்டல் வேண்டாம்… வா வீட்டுக்கு” அவள் கண்ணீருக்கு அவன் கரைய… அவன் கண்ணீருக்கு அவள் ஏன் கரையவில்லை.

 

“இது உங்களுது மூர்த்தி சார். கல்யாணத்துக்கு போட்டுக்க குடுத்தீங்க. இனி மேல் வேண்டாமே..” அவள் கழுத்திலிருந்த அவனின் தங்க சரடை அவள் அவிழ்க்க எத்தனிக்கவும் அவனுக்கு வருத்தத்திலும் கோபம் எட்டிபார்த்தது. “வேண்டாம் துளசி என் பொறுமையைச் சோதிக்காத. உனக்குக் கொடுத்தது  உனக்குத் தான்! என் மனசும்! போ. உன் இஷ்டம் மாதிரி இரு. என் கூட வான்னு கூப்பிடவே மாட்டேன். என் விருப்பத்தைச் சொல்லி உன்ன படுத்தவும் மாட்டேன்.  உன் விருப்பம் என்னவோ அதையே செய். என்னைத் தள்ளி நிறுத்த மட்டும் நினைக்காத. நீயே தள்ளிப் போனாலும் நாள் தள்ளி நிக்க மாட்டேன்!” என்றவனால் வீட்டிற்கு வர முடியவில்லை.

 

என்று வலது காலை எடுத்து வைத்து வீட்டினில் நுழைந்தாளோ அன்றிலிருந்தே அவளில்லாமல் அவன் அந்த வீட்டில் நிமிடம் கழிக்கவில்லை. இனி தனிமை மட்டும் தானா? மாலை வரை சுற்றித் திரிந்தவன், பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, கேட்டை திறக்க.. அங்கு அவள் நட்டுச் சென்றிருந்த செடிகள் அவனைப் போலவே வாடி நின்றது.

 

அவனிடம் அடம் பிடித்து மஞ்சள், சிகப்பு, வெள்ளை, ரோஜா செடிகளும் இரு பன்னீர் ரோஜாச் செடிகளும் வாங்கி அந்த இடத்தை நிரப்பி இருந்தாள்.

 

“ஒரு நாள் மூர்த்தி சார், எல்லா செடியும் பூத்துக் குலுங்கும் பாருங்களேன். மண்ணு தான் நீங்க… செடி தான் நான். என்னை மாதிரியே இந்த செடி எல்லாம் ஹாப்பியா இருக்கணும். ஒண்ணக் கூட வாட விடக் கூடாது. நானே விட்டுட்டா கூட நீங்க தான் பத்திரமா பார்த்துக்கணும்.” அவனிடம் ஆடர் போட்டது நினைவில் வந்தது. பொறுமையோடு தண்ணீர் பாய்ச்சினான்.

 

ஓரமாய் வண்டியை கேட்டிற்குள் நிறுத்திவிட்டு வாசலுக்கு வர அவள் கிறுக்கி வைத்திருந்த கோலம் அவனை வரவேற்றது.

 

அவள் வந்த இரண்டாம் நாள், நாளிதழ் போடும் சிறுவனை அவள் படுத்திய பாடு நினைவில் வர உதடு விரிந்தது. ‘துளசி மா…’ உள்ளே அடைத்த காற்றை நீண்ட மூச்சினால் சீராக்கினான். அவளைப் போலவே அவள் இடும் கோலங்களும் கதை பேசுமே..

 

“கலர் பொடி வாங்கணும் மூர்த்தி சார்… வெறும் வெள்ளையா… நல்லாவே இல்ல. நீங்க கலர் பொடி வாங்கி தாங்க அசத்திடுவேன்” என்றாள். அவள் அசத்தல் தான் அவனுக்குத் தெரியுமே… ரவா பிரியாணி கண்ணில் வந்து சென்றது. அன்று கோலத்தைப் பார்த்தவன் அசந்துபோய்விட்டதாய் காட்டிக் கொண்டான்.

 

“நான் எப்படி ஒரு பூவ பார்த்ததே இல்ல துளசி… சூப்பர் போ…” என்றதும் அவள் கால் தரையில் இல்லை. ஏதோ கிரீடம் கிடைத்தது போல் குதித்தாள்.

 

“அசத்திற துளசி… நிஜமா” என்றவனிடம்

 

“போங்க மூர்த்தி சார்… பொய் சொல்றீங்க..” என்று வெட்கம் கூடப் பட்டாளே.. அன்றிலிருந்து தினமும் ஏதோ ஒரு நிறத்தில் மலர் அவர்கள் வீட்டு வாசலை அலங்கரித்தது.

 

இன்றும் மலர் தீட்டியிருந்தாள்… குழந்தையின் கிறுக்கல். ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு நிறம்… நடுவே மகரந்தத்திற்கு ஒரு நிறம் என்று மொத்தம் பத்து நிறங்கள். அவள் இருந்த அழகான வண்ணமயமான நாட்கள் தான் ஒவ்வொரு இதழுமாம்.

 

வீட்டிற்குள் செல்ல காலியான வீடு அவனைப் பார்த்து முறைத்தது. அவள் வரும்முன் எப்படி இருந்ததோ அதே போல் தான் இருந்தது, இருந்தும் அவனுக்கு வெறுமையாகத் தோன்றியது.

 

அவள் விரித்த கூந்தலும்.. புடவை முந்தியும் தழைய.. ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல்.. இன்று சத்தமில்லாமல் சிலையாய் நின்றிருந்தது.

 

அவள் சாய்ந்து கதையடிக்கும் மேசை அடிக்கி வைத்த புத்தகங்களுடன் உயிரற்று இருந்தது. அவளுக்கு அடுக்கிய புத்தகங்களைப் பார்த்ததும் அதைப் புரட்டியே ஆகவேண்டும். அவளைப் போலவே புத்தகங்களை கலைத்துப் போட்டான். இதை எல்லாம் அடுக்கிக் கொண்டிருக்காமல் இருந்திருந்தால்.. அவள் ஒரு மணி நேரம் தன்னை குழப்பும் வரை அவளைத் தனியே விட்டிருக்கவே மாட்டானே.. அவன் மேல் அவனுக்கு கோபமாய் வந்தது.

 

அவன் சமைக்க.. அடுக்களை மேடையில் அமர்ந்து கதையடிப்பாள்… அவள் பாட்டி தாத்தா சுந்தரி.. புராணமாகத் தான் இருக்கும். உயிர்ப்போடு அவள் பேச.. ரசித்துக் கேட்பான்.

 

அவளிருந்தவரை தனியே சமைத்து தனியே சாப்பிடவேண்டாம். என்ன செய்தாலும் ருசித்து உண்பாள். அவள் விரலை நக்கும் அழகே தனி அழகு. அதற்காகவே அதிக சிரத்தையோடு ருசியாகச் சமைப்பான். ஒவ்வொரு வாய் உணவிற்கும் .. “ம்ம்ம்” வரும்.. இனி என்னத்தைச் சாப்பிடுவாளோ?.

 

சமையல் முடியும் வரையுமே அங்கே தான்.. அந்த கடப்பா கல் மேடையில் காலாட்டிக் கொண்டே அமர்ந்திருப்பாள். உள்ளங்கையில் குழம்பை ஊற்றி உரிஞ்சி ருசிபார்க்கும் அழகே அவனைச் சரித்துவிடும். அவள் அமரும் இடத்தை தடவிப் பார்த்தான்…

 

இனி.. அவள் கண் மூடி ரசித்து சப்புகட்டி அவன் உணவை ருசிப்பது சாத்தியமா? அடுக்களை சுவரோடு சுவராய் நின்றுவிட்டான். ‘துளசி..!’ மூச்சு அடைத்தது. நேற்று அவள் அமர்ந்து அழுதது… மனதின் ஒட்டு மொத்த நிம்மதியையும் எடுத்துப் போட்டது. 

 

பத்து நாட்கள்.. ஆம் பத்தே நாட்கள்… அவன் வாழ்வை முற்றிலும் மாற்றிச் சென்றிருந்தாள்.

 

அங்கிருந்த எல்லா பொருளிலும் அவள் தெரிந்தாள். வீடு முழுவதும் துளசியின் ‘மூர்த்தி சார்’ ரீங்காரமிட்டது. ‘துளசி..’ அவன் மனம் அவள் நாமத்தையே உச்சரித்தது.

 

 

[the_ad id=”6605″]

 

 

வீட்டின் பின்னால் சென்று படியில் அமரப்போனவன் அவளுக்காகக் கட்டிவிட்டிருந்த ஊஞ்சல் பலகையில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் கை படும் இடத்திலெல்லாம் அவனின் பழைய வேட்டியைக் கிழித்துச் சுற்றியிருக்க அதைப் பார்த்தவள் கண்களில் அன்று ஆனந்தக் கண்ணீர்.. “நீங்க என் தாத்தாவுடைய மறுபிறப்பு மூர்த்தி சார்” என்றாள்.  

 

அவள் கை வருடிய அந்த வேட்டி துணியை மெல்ல வருடிப் பார்த்தான். ‘துளசி..’ காலம் மீண்டும் அவளை இங்கு அழைத்துவருமா? தெரியாது! ஆனால் கண்டிப்பாக அவள் விட்டு சென்ற நினைவுகளைக் காலத்தால் அழிக்க முடியாது.

 

“மூர்த்தி சார்.. நான் தான் இழுப்பேன்” என்ன சொன்னாலும் கேட்காமல், வளையல் குலங்க அவள் தண்ணீர் இறைப்பதும்.. துணி துவைக்கிறேன் பேர்வழி என்று முழுதும் நனைந்து நிற்பதும் நினைவைத் தொட்டு சென்றது.

 

காலையில் அவள் துவைத்துக் காயப் போட்டிருந்த அவள் புடவையும் அவன் வேட்டியும் அவனைப் பார்த்துச் சிரித்தது. “வேட்டிக்குப் புடவை தான் பொருத்தம் மூர்த்தி சார்!” துளசியின் குரல் கேட்டது. இந்த ஒற்றை வாக்கியம் தான் அவள் மனதில் அவனுக்கு இன்னும் இடம் இருப்பதற்கான ஒரே ஆதாரம்! இறுக பிடித்துக் கொண்ட வாக்கியம் இது!

 

“இந்த தொட்டியில உங்க பிள்ளைங்க விளையாட நான் தான் தண்ணி இழுத்து ஊத்துவேன் மூர்த்தி சார்!” என்றாள். ‘நம் பிள்ளைகள் துளசி’ என்று சொல்ல நினைத்து உள்ளே பாடுபட்டு விழுங்குவான். 

 

புதிதாய் ஒற்றை அடுக்கு செம்பருத்தியும்.. மருதாணியும் கிணற்றிற்குப் பின் நட்டிருந்தாள். 

 

“செம்பருத்தி பூ உடம்புக்கு நல்லதாம்… நான் அப்படியே பிச்சு சாப்பிடுவேன். முடி நல்லா முளைக்கும்னு பாட்டி எண்ணைல மருதாணி கூடப் போட்டு காச்சுவாங்க. நம்மளும் காச்சலாம்.. உங்களுக்கு பொண்ணு பிறந்தா குட்டி பாப்பாக்கு தேச்சு விடுங்க..” செடியை நடும்போதும், அதைப் பற்றி சொல்லிக்கொண்டே தான் நட்டாள்.

 

‘உன்னைப் போலவே பெற்றுக் கொள்ளலாம்!’. சாத்தியமில்லை என்று தெரிந்தும் உள்ளுக்குள் ஆசைப் பட மட்டும் தான் முடிந்தது. அவளின் ஒவ்வொரு பேச்சிலும் மயங்கி நிற்பான். அவன் பக்க அக்ரிமென்ட்டை அவன் கைபிடிக்கவே இல்லை! அவளிடம் அவன் மனதை நேற்றுவரை திறக்கவே இல்லை!

 

“இந்த மருதாணி வளந்ததும் இலை எல்லாம் பறிச்சு மசிய அரச்சு என் விரல் பூரா தொப்பி வச்சுப்பேன்.. கால்ல கூட கொலுசு போட்டுப்பேன்.. நான் கைல போட்டுக்கும் போது நீங்க வாசம் பிடிச்சு பாருங்க.. அப்படி மணக்கும்!” கதை கதையாய் பேசினாள்.

 

ஊஞ்சல் கயிற்றில் தலை சாய்த்துக் கொண்டான்.

 

‘மூர்த்தி சார் … நான் மேல பறக்கணும்… நல்லா பின்னாடி இழுத்து விடுங்க..’ அவள் சத்தம்.. அதைத் தொடர்ந்து வந்த அந்த சிரிப்பொலி..

 

“துளசி..” என்றான்.. கண்மூடி!

 

மூச்சுக்கு முந்நூறு முறை ‘மூர்த்தி சார்’ என்பாள். அவள் சத்தம் காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்று அவனின் ஒவ்வொரு மூச்சுக்கும் அவளைக் கூப்பிட்டான்.

 

“நீ இல்லாத இந்த வீட்டில நான் எப்படி துளசி இருப்பேன்.. முடியல துளசி மா. சீக்கிரம் வந்திடு என் கிட்ட” கண்மூடி வாய்விட்டு அவள் விட்டுச் சென்ற மூச்சுக் காற்றோடு கதை பேசினான். அவளுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவனைப் போலவே அவளின் வளர்ப்பு பிராணியும் ‘கா..கா..’ என்று அவளைத் தான் தேடியது. தனிமையும் வேறுமையும் அவனுக்கு மட்டுமல்ல… இதே வலியோடும் வேதனையோடும் அவன் உயிரும் அங்கே உருகிக் கொண்டிருந்தது.

 

காதலா? ஆம்.. மூர்த்திக்கு அவன் துளசி மேல் கண்மூடித்தனமான கட்டுக்கடங்காத காதல். சுத்தமான களங்கப்படாத காதல். அதில் சொட்டு காமம் கலக்கவில்லை. அப்படி ஒரு காதல் சாத்தியமா என்றால்… மூர்த்தியை பார்த்தால் சாத்தியம் எனலாம்.

 

இன்றைய நிலையில் அவளால் ஒரு குடும்ப வாழ்விற்குள் நுழைய முடியாது. திருமணம்.. தாம்பத்தியம்.. இதெல்லாம் அவளால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தெரிந்தே காதலித்தான். மஞ்சத்தை அல்ல நெஞ்சத்தை நிரப்ப மட்டுமே அவள் அவனுக்குத் தேவைப்பட்டாள்.

 

அவன் மூர்த்தி! துளசியின் மூர்த்தி. வறண்டச் செம்மண் அவன்.. அவனின் தாகத்தைப் போக்கும் மழைத்துளி அவள்… இவை ஒன்று சேரும் சாத்தியம் உண்டா? அவனுக்குத் தெரியவில்லை. காலமெல்லாம் காத்திருக்க அவன் தயார் தான்!

 

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு

எப்போ வருவ எடுத்துக்க

உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு

என்னைக் கொஞ்சம் சேத்துக்க…

 

மனசு வாசனை வீசுந் திசையில

உன்னத் தேடி ஓடுனேன்

கலைஞ்ச காத்துல எந்த மூச்சு

உன்னக்காட்டும் தேடுனேன்…

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!