Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ18_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 18_1

 

பச்சை நிற பல்லவன், பேருந்து நிறுத்தத்திலிருந்து நகர, தெருமுனையிலிருந்து இவளையே பார்த்து நின்ற ஜாவா பைக்கும் புறப்பட்டது.

 



Advertisement

“நாளைக்கு காலையில காலேஜுக்கு நான் வந்து கூட்டிட்டு போறேன்..” என்றவனிடம்.. “இல்ல மூர்த்தி சார், பக்கத்து ரூம் அக்காவும் அதே பஸ்ல தான் போவாங்களாம். அவங்க இறக்கி விடறேன்னு சொன்னாங்க. நான் பார்த்துக்கறேன் மூர்த்தி சார்” என்றால்.. அவன் விட்டுவிடுவானா?

 

பல்லவனில் இருக்கை எல்லாம் நிரம்பி இருக்க நின்று கொண்டிருந்தவள் உடல் முழுவதும் மெலிதான நடுக்கம். அவளையும் அறியாமல் ஒரு வித பயமும் தனிமையும் அவளை முற்றிலும் ஆட்கொண்டிருக்க.. உள்ளுக்குள் உதறல். ‘ஒழுங்கா அவர் கூடவே போயிருக்கணும்!’ நீண்ட மூச்சுக் காற்று வெளிவந்தது.

Advertisement

 

Advertisement

மூர்த்தி சாரோடு இருக்க ஆசை தான்.. ஆனால் அவள் ஆசையின் விலையை அவனல்லவா செலுத்தவேண்டி வரும்! இனி எல்லாமே தனித்துத் தானா? மனம் ஒருநிலையில் இல்லை. பயத்திற்கு வடிவம் கூட உண்டா என்ன? உண்டு என்று தான் அவளுக்குத் தோன்றியது.. ஏதோ வயிற்றில் ஆரம்பித்து தொண்டை வரை உருண்டுகொண்டே வந்து குரல்வளையில் மாட்டி நின்றது.

 

அவள் விடுதி அருகிலிருந்த நிறுத்தத்திலிருந்து பல்லவனைப் பிடித்தால், இரண்டாம் நிறுத்தம். நடந்து போகும் தூரம் தான். எல்லா வசதியையும் பார்த்து பின் தான் அந்த விடுதியைத் தேர்ந்தெடுத்திருந்தான், மூர்த்தி.. அவளுக்காக!

Advertisement

 

பெரிய சாலை தான்.. ஆனால் மாட்டு வண்டியும் சைக்கிளும் இடையே வந்து பேருந்தின் வேகத்தைத் தடை செய்ய, பேருந்து ஊர்ந்து கொண்டே சென்றது. வெளியே ‘பனாமா’ என்று பெரிதாய் சிகரெட் விளம்பரம் கண்ணில் பட்டு, நினைவலைகளோடு அதுவும் பின்னோக்கி சென்றது.

 

“நீங்க ஸ்மோக் எல்லாம் பண்ணுவீங்களா.. மூர்த்தி சார்?” அன்று மாடியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தவனிடம் அவள் கேட்க.. அவளை அந்த இருட்டில் அங்கு எதிர்பார்க்காதவன் கையிலிருந்ததை என்ன செய்வது என்று விழித்தது நினைவில் வந்து போனது. ‘மூர்த்தி சார்…’ மனம் அவனை மட்டும் தான் இந்த இரண்டு நாட்களாக அசை போடுகிறது. மூச்சு விட எப்படி உடல் மறப்பதில்லையோ அப்படி தான் மூர்த்தியின் நினைவுகளும்.

 

நேற்றும் சென்றான் விடுதிக்கு அவளைக் காண.. மனம் படபடக்க வந்தவள்.. அவனை கண்டதும் கட்டிக் கொண்டு அழவேண்டும் போல் தோன்றினாலும்.. “எப்படி இருகீங்க மூர்த்தி சார்?” என்றாள் வறண்ட குரலில். ஒரு நாள் இடைவெளி என்றாலும் இருவர் கண்களிலும் ஏக்கம் பொங்கி வழியத்தான் செய்தது.

 

“இருக்கேன் துளசி..” என்றான், அவனிடமிருந்து வந்த வார்த்தைகளில் எந்த உணர்வும் இல்லை. வார்த்தைகளில் மட்டும் தான்! அவளுக்கு மட்டும் தான் கட்டிக்கொள்ள ஆசை வருமா என்ன?

 

 

[the_ad id=”6605″]

 

அவன் முகத்தில் ஜீவனில்லை என்றதும் கேட்டாள், “ஸ்மோக் பண்றீங்களா?” என்று! அன்றே கூறினானே புகைப்பதற்குக் காரணத்தை.. “ரொம்ப டென்ஷன் ஆனா எப்பவாது..” என்று..!

 

“இல்ல துளசி” என்றான். அவன் ‘டென்ஷன் ஆனா..’ என்று கூறியதும், “என்னை விடவா?” என்று பதில் கேள்வி இவள் கேட்க, கையிலிருந்ததைத் தூர எறிந்தவன் தான்.

 

டென்ஷன் என்ற பெயரில் இப்படி பெண்களும் கெட்ட பழக்கங்கள் பழகினால்.. உடல் என்னாவது? வீடு என்னாவது?

 

“துளசி… இது தான் உன் ஸ்டாப்! ஆல் தி பெஸ்ட். நல்லா படிச்சு பெரியாளா வா..” என்றாள் விஜயா அக்கா, அவளின் பக்கத்து அறை புது தோழி.

 

கல்லூரி வளாகம் இளம் சிட்டுகளால் நிறைந்திருக்க.. பார்ப்பவர்களுக்கு புத்துணர்வு ஏற்பட வேண்டும்.. ஆனால் துளசிக்கோ நடுக்கம் அதிகமே ஆனது. தயங்கித் தயங்கி வந்த முகங்கள் முதல் வருடம் என்பது சொல்லாமலே உரைக்கப்பெற்றது.

 

இரண்டாம் ஆண்டு பிள்ளைகள் புது முகங்களை அழைத்து  ரகளை செய்ய.. இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போன இடம் தெரியவில்லை. சிறு வயதில் படித்த ‘அம்மா இங்கே வா வா…’ ஆரம்பித்து ‘நிலா நிலா ஓடிவா’ என்று ஆடிக் கொண்டே பாட அவளால் கண்டிப்பாக முடியாது.

 

“அன்னைக்கு ஒரு மரத்தடியில நின்ன இல்ல… நான் வர வரைக்கும் அங்க வெய்ட் பண்ணு..” என்றவனிடம் பெரிய இவள் போல் சொன்னாளே… “வேண்டாம் மூர்த்தி சார்… நான் என்ன சின்ன பொண்ணா? நானே க்ளாஸ் பார்த்து போய்க்கிறேன்” என்று. அப்படி எல்லாம் விட்டு விட மாட்டார்.. கண்டிப்பாக தேடி வருவார் என்று தோன்ற, கால் மரத்தடியை நோக்கிச் சென்றது. ஆனால் அன்று போல் இன்று காலியாக இல்லையே. எந்த மரத்தடி? அதுவும் ஒழுங்காகத் தெரியவில்லை.

 

ஒரு கூட்டத்திடம் சில புது முகங்கள் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாக.. அவள் ‘ஆள விடுங்கடா சாமி’ என்று கட்டிடத்தை நோக்கிச் செல்ல… “ஏய் பொன்னு.. கம் ஹியர்” என்றது ஒரு ஆண் குரல். கண்டிப்பாகப் பேசியவனுக்குத் தமிழ் தாய் மொழி இல்லை என்பது திண்ணம்.

 

‘நான் பொன்னு இல்ல டா.. பொண்ணு’ சொல்லவேண்டும் என்று தோன்றினாலும்.. அவள் ஏன் திரும்பப் போகிறாள்? காது கேளாதவள் போல் செல்ல.. அவனே, “ஏய்.. மரூன் சாரி.. யூ… நீ டான். வா பொன்னு” என்றான் மீண்டும். ஆங்கிலம் தாய் மொழி என்று தோன்றியது.

 

குனிந்து பார்த்தாள். மரூன் புடவை அணிந்திருந்தாள். அவளைத் தான்… அவளையே தான்.. என்ன செய்ய வேண்டும்? திரும்பிப் பார்த்தாள். நான்கு பேர் கொண்ட கூட்டம் அவளைப் பார்த்திருக்க.. அவன் தனியே தெரிந்தான். நெட்டை.. நல்ல லட்சணம்.. இந்திய வெள்ளைக்காரன் போலும்! முகத்தில் ஒட்டி இருந்த குறுஞ்சிரிப்பு.. பணக்கார களை… அதற்காகவே ஒட்டிக்கொண்டு சில எடுபிடிகள் அவன் கூடவே! அவள் அவனை எடைபோட்டு முடிக்கும் முன், அவன் இவளுக்கு மதிப்பெண் கொடுத்து முடித்திருந்தான். 10/10 வாங்கியிருந்தாள்.

 

“பயப்பட வேண்டாம். கம்” என்றான்.

 

[the_ad id=”6605″]

 

‘மூஞ்சி! இத பார்த்து பயப்படணுமாமே.. என் நேரம்!’ நினைத்து கொண்டே வந்தாலும் கொஞ்சம் படபடப்பு இருக்கத்தான் செய்தது.

 

“என்ன வேணும்?” அவன் முன் சென்று நிற்க.. அவன் புன்னகை விரிந்தது.. இன்னும் அம்சமாக இருந்தான். அவன் கண் அவள் கண்ணை ஊடுருவிக் கொண்டிருக்க… அருகிலிருந்த சுருட்டை முடி, “ஏய் என்ன.. சீனியர்ன்னு ஒரு மதிப்பு மரியாதை இல்ல…? சார்-ன்னு கூப்பிடு” என்றான்

 

பல்லை கடித்து நின்றாள். “என்ன வேணும்? எதுக்கு கூப்பிட்டீங்க?” என்றாள் எந்த அலட்டலும் இல்லாமல். உள்ளுக்குள் உதறல் தான்.

 

“உன்ன சார்-ன்னு தானே கூப்பிடச் சொன்னேன்..” என்றான் மற்றவன்.

 

அவள் முகமும் அதில் தெரிந்த அலுப்பும்.. அந்த உதட்டோடு அசைந்த கண்ணும்.. அந்த எரிச்சலிலும் கரைபுரண்ட அழகும்.. வெள்ளையனை இழுக்க.. அவளின் புன்னகையை பார்க்க ஆசை எழும்ப.. “நீ ரொம்ப அழகு” என்றான். சுற்றம் எல்லாம் அவனுக்கு உரைக்கவில்லை. 

 

அவன் எதிர்பார்த்த எந்த உணர்வும் அவளிடம் இல்லை.

 

“இந்த சொல்லத் தான் கூப்பிட்டீங்களா?” என்றாள் அலுப்பு தட்டிய குரலில். அவன் இதழோடு உள்ளமும் புன்னகை சிந்தியது.

 

“அது காம்ப்ளிமென்ட்… தாங்க் யூ சொல்லணும்” என்றான்.

 

“எதுக்கு? நான் அழகா இருந்தா… அதுக்கெதுக்கு உனக்கு தாங்க் பண்ணனும்..?“ முகம் சுருக்கி பார்த்தாள்.

 

“உனக்கு நான் சொன்னேன். சோ நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லணும். பேசிக் மேனர்ஸ்” என்றான் புன்னகை மாறாமல்.

 

“நான் தினமும் கண்ணாடி பார்ப்பேன். நீங்க சொல்லாமலே தெரியும்.. தெரிஞ்சத சொல்றதுக்கு தாங்ஸ்சா? அழகா பெத்துப் போட்ட அம்மா அப்பாவுக்கே நான் தாங்க்ஸ் சொன்னது இல்ல… இவன் வந்துட்டான்” கடைசி இரண்டு வார்த்தைகள் வாய்க்குள் முனகி விழுங்கபட்டது.

 

முதலில் அழகில் கட்டுண்டவன் பின் அவள் விழியிலும் மொழியிலும்..

 

“ஏய் பொண்ணு என்ன… சீனியர்ன்னு ஒரு ரெஸ்பெக்ட் இல்ல… இவன் யார்ன்னு தெரியாம கூடக் கூட பேசிட்டே இருக்க!” சுருட்டை மண்டை எகிற.. ‘நீ யாருடா..’ என்ற பார்வை பார்த்தாள்.

 

“ஒத்த தாங்க்ஸ் சொல்ல இந்த அலப்பறையா? தாங்கஸ் சார்னு சொல்லு” என்றான் சுருட்டை.

 

“நான் அழகா இருக்கதுல எனக்கு என்ன லாபம்? நானா என்னை பார்த்துக்குறேன்? நீங்க எல்லாம் தானே பார்த்திட்டு நிக்கறீங்க.. வேணும்னா நீங்க சொல்லுங்க உங்க தாங்க்ஸ்ச… ஆனா அத கேக்கிற மூட் எனக்கு இல்ல… நேரம் ஆச்சு நான் க்ளாஸ் போறேன்..”

 

வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் ஆக.. ஒவ்வொரு கூட்டமும் மெதுவாக  கலைய.. இவளும் நகர..  சுருட்டை முடி, “ஏய்… உன் பேரு என்ன… பேசிட்டு இருக்கேன்.. ஒரு மரியாத இல்ல.. நில்லு.. நான் சொல்லறதுக்கு முன்ன நகர்ந்த என்ன பண்ணுவேன்னு தெரியாது” வீர வசனம் பேச… நிற்க வைத்து பேசிய தேவை இல்லாத பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவன் வார்த்தைகள் காற்றோடு கரைய.. ‘உன்ன விட நிறைய பார்த்திட்டேன்’ என்று நினைத்திருப்பாள் போலும், “முதல்ல தெரிஞ்சுட்டு வா..” அவள் நடக்க அவனுக்குள் சுர்ரென்று கோபம்..

 

“ஏய் உன்ன தான்..” என்று கை நீட்டினான். ஏதோ ஆவேசம் அவ்வளவு தான். அவளை அதட்டத் தான் நினைத்தானே ஒழிய வேரெதுவும் இல்லை. யாரின் பொல்லாத நேரமோ.. புடவை முந்தியை அவன் பிடிக்க.. அவள் கவனிக்காமல் நகர.. பட்டென்று ரவிக்கையொடு புடவையை இணைத்திருந்த ஊக்கு தெறிக்க.. வலது கை மார்போடு ஒரு புத்தகத்தையும் மத்திய உணவையும் ஏந்தி இருக்க.. அவள் இடது கை அடுத்த நொடியே புடவையை ஊக்கிருந்த இடத்தோடு சேர்த்துப் பிடித்தாலும்.. நான்கு ஆண்மக்கள் முன்பு அவளுக்குப் பெருத்த அவமானமாய் போனது.

 

சேதாரமில்லை.. இருந்தும் வெள்ளையன் புன்சிரிப்பு மறைந்திருக்க… சுருட்டை முடிக்கு எப்படியோ போல் ஆகிவிட… மற்ற இருவரும் மெல்லச் சிரிக்க… அவள் வலது கை வெள்ளையனின் கன்னத்தில் இறங்கியிருந்தது. அவளுக்கு யார் இழுத்ததென்று தெரியவில்லை. அருகிலிருந்தவன் வாங்கி கட்டிக் கொண்டான்.

 

வந்த அன்றே ஜூனியர் ஒருத்தி சீனியர் ஒருவனை அடித்துவிட்டாள்!! அதுவும் கல்லூரியில் மிகவும் செல்வாக்குடையவனை! இது தான் முதல் நாள் கல்லூரியின் தலைப்பு செய்தி! ஏன் அறைந்தாள்? இவர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

 

அவன் கை கன்னத்தைத் தடவ.. இதழ் விரிந்தது. அவளுக்கான மதிப்பெண் கூடியது.

 

தேவலோகத்திலிருந்து இறங்கியவன், “என்ன ஜக்.. வாட்ஸ் ராங் வித் யூ” சுருட்டைக்கு அர்ச்சனை விழ.. அவன் என்ன சொல்லுவான்.. “வேணும்ன்னு நான் செய்வேனா ராடு… அது எப்டி நடந்துதுனே இன்னும் புரியல டா.. சாரி டா.. என்னால உன்ன அடிச்சிட்டா! இரு அவள ஒரு வழி பண்ணிட்டு வரேன்..”

 

சத்தமாக சிரித்தவன்… “நீ அறை வாங்கிருந்தா.. பேசிருக்க மாட்ட ஜக். ஷி இஸ் ஸ்ட்ராங்! மை டூத் ஹர்ட்ஸ்… உனக்குனா கண்டிப்பா பல் காலி ஜக்! சோ ஷட் அப்!” என்றான் தடம் தெரிந்த கன்னம் வருடி!

 

[the_ad id=”6605″]

 

“அது சின்ன பொண்ணு ராடு.. அதுக்குப் போய் பயப்பட சொல்ற?”

 

“உன்னால நாம எல்லாரும் இப்போ பிரச்சினை! பாவம் பொன்னு. யூ ஹர்ட் ஹர் ஃப்பீலிங்! அவ கம்ப்ளெயின் பண்ணினா ஆல் ஆஃப் அஸ் ஆர் இன் ட்ரபுள் மேன்.. அடங்கு ஜக்!” என்றவன் கீழே கிடந்த புத்தகத்தையும், திறந்து கிடந்த மதிய உணவு டப்பாவையும் எடுத்தான்.

 

நோட்டு புத்தகத்தைத் திறக்க.. கண், ‘துளசி’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பெயரை வாஞ்சையாய் வருட.. விரல் எழுத்தை வருடியது. இதழ் மீண்டும் புன்சிரிப்பை சிந்தியது.

 

அவள் போன திசையைப் பார்க்க.. அவள் சென்றிருந்தாள்.  ‘டுல்சி!’ சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

 

ஏதோ கெட்டதில் நல்லதாய் அவளை ஒருவருக்கும் தெரியாது. அவள் புதுமுகம் என்பதால் பெயர் அடிபடவில்லை. நாளை கல்லூரியில் பேச வேறு தலைப்பு வந்துவிடும்.

 

இது நடந்து ஐந்து நிமிடத்திற்கெல்லாம் துளசியை தேடி வந்த வெள்ளை வேட்டி சாரின் காதில் விழுந்தது.. ‘அந்த இடத்தில் வைத்து ராட்னி அறை வாங்கிவிட்டான்’ என்பது தான். ‘சார்’ என்று அழைக்க மறுத்து அறைந்ததாக வதந்தியைப் பரப்பி விட்டிருந்தான் வெள்ளைக்காரன். இனி யாரும் தெரியாத விஷயத்திற்குக் கண்.. மூக்கு காது வைக்கத் தேவை இருக்காதே…

 

மாணவர்கள் கலைந்திருக்க… அங்கு எங்குமே துளசி இல்லை என்றதும் வகுப்பறைக்குச் சென்றிருப்பாள் மதியம் பார்த்துக் கொள்ளலாம் என்று மூர்த்தியும் அவன் வகுப்பைப் பார்க்கச் சென்றுவிட்டான்.

 

கடைவாய் பல்லைப் பெயர்த்த ஆத்மா துளசி என்று தெரிந்திருந்தால் அவளைத் தேடிச் சென்றிருப்பான்! தன்னை விட்டு துளசி தள்ளிச் சென்று கொண்டிருப்பது உவகையளிக்கவில்லை என்றாலும் அவளுக்கென்று ஒரு வேலி அமைத்துக்கொள்ள விரும்புபவளின் விருப்பத்திற்குள் குறுக்கிட மனம் வரவில்லை. நூல் கையிலிருக்கக் காற்றாடி பாதுகாப்பாகப் பறக்கட்டும்.. பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!