Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ20_2 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 20_2

 

கோழிக் கூட்டை திறந்து இரண்டு பெடையை தவிற மற்றதை வெளியே விட்டுக் கொண்டிருந்தாள் மூர்த்தியின் செல்ல வாண்டு. அந்த இரண்டும் இன்று மூர்த்தியின் வரவால், மதிய உணவாக மாற காத்திருந்தது. மூர்த்தியை பார்த்ததும் கூண்டை அடைத்துவிட்டு… “மாமா…” கூவிக்கொண்டே ஓடிவந்த வேகத்தில்.. அவன் குனிய, அவன் கழுத்தில் தொங்கி ஏறியிருந்தாள். ஆறு வயது தோற்றமுடைய செல்ல சிட்டுக்கு எட்டு வயது. அவள் தான் மூர்த்தியின் தங்கம்.

 



Advertisement

மகள் உச்சந்தலையில் முத்தம் பதித்தவன்… “கோழி குஞ்ச விட்டுடீயே.. பருந்து தூக்கிட்டு போயிடுமே. பாட்டி, மாமாக்கு கோழிய பிடிச்சு வைக்க சொன்னாங்களா?”, கேட்டுக்கொண்டே பதில் வருமுன், அடைத்து வைத்திருந்த கோழிகளுக்குத் தற்காலிக விடுதலை கொடுத்தான்.

 

கூட்டம் அதிகம்… அவர்களிடம் நெருக்கமும் அதிகம். ஆனால் கட்டி அணைத்து செல்லம் கொஞ்சி எல்லாம் அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள்.  மூர்த்தி வெளியூர் வாசம் என்பதாலோ.. இல்லை அவன் இயல்பிலேயே அதிக பாசம் காட்டும் குணம் கொண்டவன் என்பதாலோ.. அவனைப் பார்த்தால் மட்டும் சிட்டுக்குருவிகள் அவனை ஒரு வழியாக்கிவிடுவார்கள்.

Advertisement

 

Advertisement

“வந்திட்டியளா..”

 

ஒற்றைக் கையில் தூக்கிக் இருந்தவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஒரே அழுகை. மூர்த்தி மேல் கொள்ளை பிரியம்.. அந்த ஒரு விஷயத்தில் அம்மாவை உரித்து வைத்திருந்தாள் தங்கம்மா.

Advertisement

 

“ஏன் மாமா என்னை பாக்கவே வரல? அண்ணா சொன்னான்.. இனி என்னை பாக்கவே வர மாட்டிய-ன்னு! எத்தன மட்டம் சொன்னேன் வீட்டுக்கு வர சொல்லி… மாமா வரவே இல்ல”

 

“யாரு மணியா?” 

 

மாசிலா மணி, பானுவின் மூத்த மகன். மூர்த்தியை கண்கொண்டு காணப் பிடிக்காது. விபரம் தெரிந்த அன்றிலிருந்தே மனதளவில் மூர்த்தியை வெறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பரம எதிரியாய் பார்த்தான். மூர்த்தியை விட ஒரு வயது சின்னவன். குடும்பத்திற்கு அடங்கா களிறு.. முரடன். இன்று எங்கு உள்ளான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். குடும்பத்தோடு ஒன்றி இருக்க அவனுக்குக் காரணம் இருக்கவில்லை.. அவனே அவனுக்கு தண்ணீர் தெளித்து குடும்பத்திலிருந்து தன்னை பிரித்து விட்டுக் கொண்டான்! நந்தினி, தங்கம்மா என்றால் அவனுக்கு உயிர்.. ஆனால் எல்லோரும் போல் தங்கத்திற்கும் மூர்த்தியின் மேல் பற்று அதிகம். மூர்த்தியை அறவே பிடிக்காது போனதிற்கு இதுவும் ஒரு காரணம். காரணங்கள் ஆயிரம், இது அதில் ஒன்று. மொத்த குடும்பத்தில் அவன் மட்டும் தனி ரகம். ஒரு வருடம் முன்வரை பம்பாயிலிருந்ததாக தகவல் வந்தது. அவனுக்கான பெண்ணை அவனே தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினான். இன்று எங்கோ?

 

[the_ad id=”6605″]

 

 

 

எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் ஒரு கடிதம் வரும்.. அவ்வளவு தான். என்றாவது தபால் அலுவலகத்தில் தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுவித்து அடுத்து அவன், என்று.. எப்போது.. அழைப்பான் என்ற தகவல் தருவான். அவன் கூறிய நேரத்தில் இவர்கள் தபால் அலுவலகத்தில் காத்திருந்தால்.. அவன் அழைப்பைப் பெற்றுப் பேசலாம்.

 

வசதியாக மூர்த்தி கழுத்தில் தலை சாய்த்திருந்தவள் விசும்பலோடு.. “ஆமா மாமா… அவிய தான்” என்றாள்.

 

“சொல்லி இருப்பான். நான் இங்க வராம போனா அவனுக்கு மட்டும் தான் நிம்மதி!” வாய்க்குள் முணுமுணுத்தான். குடும்பத்திற்கே தெரியும் மணிக்கு மூர்த்தி மேல் இருக்கும் பகைமை. அவனுக்கு புரியவைக்க எடுக்கப்பட்ட எந்த முயற்சியும்  பயனளிக்கவில்லை. ஏனோ சிறு வயது முதலே அவனுக்கான இடத்தை மூர்த்தி எடுத்துக் கொண்டதாய் ஒரு எண்ணம் அவனுக்குள். அவன் அன்னையின் செல்லப் பிள்ளையாயிற்றே மூர்த்தி! மூர்த்தியை எள்ளளவும் பிடிக்காது போனதற்கான முதல் காரணம் இது! 

 

மகளின் கண்ணைத் துடைத்துவிட்டு, “மாமாக்கு கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு தங்கம்.. அடிக்கடி வர முடியல. அது தான் வந்துட்டேனே.. இன்னும் எதுக்கு அழற?”

 

பிறந்த அன்று இவன் தான் முதலில் குழந்தையைக் கையில் வாங்கினான். இருபது வயது ஆண்மகன் கையில்.. அவன் அக்காவின் பச்சிளம் குழந்தை.  சின்னஞ்சிறு சிகப்பு மேனியை அவன் மார்பில் சேர்த்து அணைத்த அன்றே அவன் மகளாகிப் போனாள். குட்டி மகளுக்கு பெயர் சூட்டியதும் இவன் தான். மகள் பிறப்பைப் பார்க்கும் முன்னே தந்தையின் உயிர் பிரிந்திருக்க.. மாமன் மூர்த்தி தான் தங்கத்திற்கு எல்லாம் ஆகிப்போனான். அது பொக்கை வாயைக் காட்டி சிரிக்கவும் முதல் முறை சிறங்கில்லாமல் பறந்தான். குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம்.. தங்கம் கொடுத்த தாக்கமாகவும் இருக்கலாம். 

 

நாற்பதை தொடுமுன்னே விதவை கோலம் பூண்ட பானுவை வெள்ளை புடவை கட்ட விடவில்லை மூர்த்தி. பொட்டில்லாமல் இருக்க விட மாட்டான். விபரம் தெரிந்த நாளிலிருந்தே பூ சூடாத நாளில்லை பானு. அவர் தலையிலிருந்து பூவை எடுக்க விடவில்லை அவன். பானுவின் சின்ன மாமியார் வீட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகள். வெளியே சொல்லமுடியாத அளவு சித்திரவதைகள்.  ‘போங்கடா நீங்களும் உங்க சட்ட திட்டமும்’ என்று அக்காவை தன்னோடு அழைத்து வந்துவிட்டான்.

 

மூர்த்தி பிறந்த அடுத்த வருடத்தில் அவருக்கு முதன் மகன் மாசிலா மணி பிறந்தான். பெயரில் மட்டும் தான் மாசு இல்லை! அதன் பின் அடுத்த மகள் நந்தினி. கடைக்குட்டி தங்கம்மா. மூர்த்தியின் இருபதாம் வயதில் மீண்டும் பெற்ற வீட்டிற்கே வந்துவிட்டார், மூன்று பிள்ளைகளோடும்.

 

இவனையே பார்த்து நின்ற அக்காவிடம் சென்றவன்.. குனிந்து, “அக்கா…” என்று ஒற்றைக் கையால் அவரை அணைக்க… அவன் தலை வருடியவர், பனித்த கண்ணை முந்தியில் துடைத்துக்கொண்டே.. “நல்லா இருக்கிதியா மக்களே… மோன் முகம் கழுவி வா. காபி தண்ணி குடிச்சிதியா?” என்று அடுக்களைக்கு நகர்ந்தார். ஒரு வருடம் இப்படி அவன் தள்ளி இருந்ததே இல்லை. வீடு முழுவதும் ஆட்கள் இருந்தாலும் மூர்த்தி தான் அவரின் முதல் மகனும் செல்லப் பிள்ளையும். அவனுக்கும் அப்படி தான்.. பானு, அம்மா என்றால்… தங்கம், அவன் செல்ல மகள். அவளையும் பிரிந்து இருந்து விட்டான் ஒருத்திக்காக!

 

பின்னோடே பின்கட்டிற்கு சென்றான். “க்கா காபி வேண்டாம். அக்கானி (பனையிலிருந்து எடுக்கப்படும் பதப்பட்ட நீர்) இறக்கலியா?”

 

அடுக்களையில் அம்மா முத்துமங்கை, காலை உணவுக்கு பச்சை பயிரை அவிக்க வைத்துவிட்டு… தேங்காவோடும் துருவியோடும் அமர்ந்தார். அண்ணிகளில் ஒருவர் பாலை காய்ச்சி கொண்டிருக்க.. மற்றவர் புட்டுக்கு மாவை பிசைந்து கொண்டிருந்தார். பெரிய குடும்பம் என்பதால் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

 

அம்மாவிடம்.. “அம்மா..” என்றான் அவ்வளவு தான்… அவர் ஆரம்பித்தார். “மக்களே வந்தியா.. வீட்டுக்கு வந்து ஒருவாடு நாளாச்சு! அம்மையும் அப்பனையும் பாக்க வேண்டியே? அது என்ன ஜோலி மோனே.. வீட்டையும் பிள்ளையளையும் மறந்து? விடுப்பு குடுக்க மாட்டேன்னு சொன்னானுவளா?இவனுவ அத்தன எளுப்பத்தில ஜீவிக்க விடமாட்டினும்.. அந்த வேலை நமக்கு வேண்டாம் மக்களே. இங்கன பாக்க வேலையா இல்ல? அங்கனையே இருந்தியனா கொம்மையையும் கொப்பனையும் யாரு பல்லே பாக்கிறது? மூனு மாசத்துக்கு ஒருதரம் போல வந்து போன. பொறவு… அது ஆறு மாசம் ஆச்சு. இப்போ ஒரு வருஷம்.. என்ன டேய் இது?”, அவர் பேசிக்கொண்டே போக… இவன் அக்காவை பார்க்க…

 

[the_ad id=”6605″]

 

 

 

பானு, “கொறச்சு நேரம் சும்மா இருடி அம்மா… இந்தா அவன் மொகத்த பாத்தியேளா அத்தரைக்கு ஷீணம். மோன் போ..  சட்டைய களத்திட்டு.. முகம் கழுவு. இனி இப்போ அக்கானி வரும்.”

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அண்ணிகளிடம் இரண்டு வாரத்தைப் பேசிவிட்டு நகர்ந்தான்.  அத்தனை களேபரத்திலும் தங்கம்மா அவன் கழுத்தை விட்டாளில்லை. இன்றிலிருந்து மூர்த்தி கிளம்பும் வரை பள்ளிக்கும் செல்ல மாட்டாள். அவனை நிம்மதியாக கை கால் நீட்டி அமரவிட மாட்டாள். அவ்வப்போது தொலைப்பேசியில் பேசினாலும்.. ஒரு வருடக் கதையை கூறி முடித்த பிறகே வாய் மூடுவாள். கோழி குஞ்சு பொரித்தது முதல்.. நேற்று இரவு உண்ட மீன் கறி வரை அவள் நினைவில் வரும் அனைத்தையும் ஒப்பிக்கும் வரை ஓயமாட்டாள்.

 

வீட்டின் பின்னால் கிணற்றடிக்கு தூக்கிச் சென்றவன் அதன் சுவரில் கரித்துண்டு கொண்டு வரைந்திருந்த படங்களைப் பார்த்தான். கன்னத்தில் முத்தமிட்டவன்.. “யார் இது?” எனவும்

 

“மாமாவும்..  மோங்குட்டியும்” பெருமையாக கண் மின்ன விளக்கினாள்.

 

அங்கிருந்த உமிக்கரியைக் கொண்டு அவளுக்குப் பல் தேய்த்துவிட்டு… அவனும் பல்லைத் தேய்த்து இருவருமாக முகம் கழுவி வர… அக்கானியும் வந்து இறங்கியிருக்க… மகளும் மாமனும் ஒரு சொம்பு அக்கானியைக் குடித்துவிட்டு, அக்கானி கலயத்தை வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்றனர். உடலுக்கும் சத்தும், எலும்புக்கும் உறுதியும் தரக்கூடிய இயற்கையின் பானம். 

 

கடவுளுக்கு மிகவும் பிடித்த பூமியாக இருக்க வேண்டும் இந்த பூமி. அதன் செழிப்பும் அழகும்.. அதற்கு நிகர் அது தான்!

 

தனியாக பனந்தோப்பு அவர்கள் வைத்திருக்கவில்லை. அவர்கள் வீட்டை சுற்றியிருந்த நிலத்தின் எல்லையைச் சுற்றி வரிசையாக பனை மரம் இருந்தது. ஒவ்வொரு பனை மரத்திற்கும் இடையே புருத்திசக்கை (அன்னாசிபழம்) செடி அல்லது கற்றாழை வரிசையாக இருக்கும். அது தான் அவர்கள் நிலத்தின் எல்லைக் கோடு. 

 

பனை மர உச்சியிலிருக்கும் பாளையை சீவ அதிலிருந்து சுரக்கும் நீரைச் சுண்ணாம்பு தடவிய கலயத்தில் சேகரிக்க அக்கானி(பதநீர்) கிடைக்கும். உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்படாத மண்கலயங்களில் சேகரிக்கப்பட்டு.. புளிக்கும்  திரவமே கள் எனப்படுகிறது.

 

பனை போலத் தெங்கும் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்திருக்க… அதன் கீழ் எங்கும் நூற்றுக் கணக்கான பச்சை பசேல் என்று வரிசையாய்.. கைவிரல்கள் போன்ற இலைகள் கொண்ட மரிச்சினி (ஆலுவல்லி கிழங்கு) செடிகள். தங்கம்மா கைநிறைய இலைகளோடு வர,  இருவருமாக இலையைக் கிள்ளி தேங்கா சிரட்டையின் கண் (ஓட்டை) மீது வைத்தனர்.

 

தங்கம்மாவிற்கு பிடித்த வேலை அங்கு வரிசையாக ஐம்பது குட்டி குட்டி மணல் குவியல் ஏற்படுத்துவது. இரண்டு கை பிடி மணலை குவியலாக ஏற்படுத்தி தயார் செய்த சிரட்டையை அதில் வைக்க… பக்குவமாக காய்ச்சப்பட்ட ஆக்கானி பாகை அதில் ஊற்றி வைத்தார் முத்து. சில மணி நேரத்தில் அது கருப்பட்டி ஆகிவிடும்.

 

வியர்த்து வழிந்து நின்றவனைப் பார்த்த முத்து, “வெசர்ப்பு தீர போய் மேல் கழுவு..” எனவும், மாமனும் மகளும் குளத்திற்கு சென்று குளித்து வரவுமே.. வீட்டின் வாண்டுகள் அனைவரும் பள்ளி/கல்லூரிக்கு தயாராகியிருக்க… அவனைப் பார்த்த மாத்திரத்தில் பண்டத்தை ஈ மொய்ப்பது போல் வாண்டுகள் அவனை மொய்த்துக் கொண்டனர். சின்ன அண்ணனின் மூன்று வயது குட்டி பார்வதிக்கு என்ன புரிந்ததோ.. “சின்னையா (சித்தப்பா)..” என்று அவன் அடுத்த தோளில் ஏறிக் கொண்டாள்.

 

“மூர்த்தி இரி. தங்கம் தாழ இறங்கு” மூர்த்தியும் பள்ளிக்குக் கிளம்பும் பிள்ளைகள் அனைவரும் அமர..

 

முத்து, “இஞ்ச வாலே நந்தினி.. அங்கன போயி மாமனுக்கு விளம்பு”, என்று நந்தினியை இழுத்து விட்டார் உணவு பரிமாற.காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் வீட்டிலிருப்பவர்கள் வரை ஒன்றாய் உண்ணும் பழக்கம் குடும்பத்தில்.

 

பெண்ணும் ஏதோ இன்று தான் மூர்த்தியை முதன் முதலாகப் பார்ப்பது போல் நெளிந்தாள். கள்ளப்பார்வையும்.. உதடு கடித்த நாணமும் மூர்த்திக்கு புதிது. “என்ன நந்து? ஏன் நெளியற? ஏதாவது சொல்லணுமா?”, மூர்த்தி கேட்ட மாத்திரத்தில் பெண் கிளுக்கி விட்டு கதவின் பின் மறைந்தாள்.

 

செம்பா அரிசி புட்டும், மட்டி பழமும், அவித்து தேங்காய்ப்பூ போட்டுத் தாளித்த பச்சை பயிரும், பப்படமும் அவனுக்கு நந்தினி எடுத்து வைத்திருக்க.. மடியில் அமர்ந்திருந்த தங்கத்திற்கு ஊட்டு விட்டு தானும் உண்டு எழும்பியவன் வயிற்றை பசும் பால் காபி நிரப்ப.. தோட்டம் துரவு என்று மாமனும் மகளும் வேடிக்கை பார்க்கக் கிளம்பிவிட்டனர்.

 

மண்ணின் வளம் அங்கிருந்த மரம் செடிகளில் தெரிந்தது. அவர்கள் நிலம் ஓரே இடதிலில்லை. வசதி ஏற்படக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடப்பட்டது என்றதால் அங்கும் இங்குமாக இருந்தது.

 

சரிவான சாலையில் கீழ் நோக்கி நடக்க… ஊர் எல்லையில் சேனலை ஒட்டி அவர்களின் சிறிய தோட்ட வீடும்.. குடௌன் போன்ற அமைப்பைக் கொண்ட  உபயோகத்தில் இல்லாத கட்டிடமும் இருந்தது. அந்த நிலப்பரப்பை வாங்கும் போது கிடைத்த வீட்டை பராமரித்து வருகின்றனர். மணி வந்தால் வீட்டோடு தங்க மாட்டான்.. இங்கு தான் இருப்பான். சுற்று வட்டாரத்தில் யாருமே இல்லாத தனிமையில் இருப்பதையே விரும்பினான். காளைகளை சென்று பார்த்தவன், அடுத்து சென்றது வீட்டை சுற்றி இருந்த தோப்பிற்கு.

 

நேந்திரம் வாழைக் குலைகளுக்கு தென்னங்கீற்றால் முடையப்பட்ட பாதுகாப்பு கவசத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கு தான் செல்வமணி நின்று கொண்டிருந்தார். மூர்த்தியின் அப்பா. உழைப்பாளி.. அங்குள்ள பஞ்சாயத்து ப்ரெசிடென்ட். பதினைந்து வயதில் ஒரு ஏக்கர் பூமிக்குச் சொந்தக்காரர் இன்று பல ஏக்கர் நிலப்பரப்பில் தேக்கு, (அயனி)ஐனி, மா, பலா, வாழை, பாக்கு, மிளகு, புளி, தென்னை, பனை, மரிச்சினி, அண்டி.. என்று இன்னும் என்னன்வோ.. இது போக அரிசி மற்றும் பயிர் வகைகளை குடும்பத்தோடு பராமரித்து வருகிறார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஊரில் அவருக்கென்று தனி மதிப்பு. அவர் குணத்தை அப்படியே பெற்றிருந்தான் மூர்த்தி. நின்ற இடத்திலிருந்து வேலை வாங்கவும் தெரியும். வேலை ஆட்களோடு ஒருவனாய் வேலை செய்தாலும் அவன் பேச்சைக் கேட்க வைக்கவும் தெரியும்.

 

திறமை மிக்க மகன் மேல் மிகுந்த மரியாதை மனிதனுக்கு. அவருக்குப் பின், அவன் தான் குருவிக் கூட்டை காப்பான் என்பதில் அவருக்கு துளி ஐயமில்லை. அவன் ஒன்று செய்தால் அதில் ஒழுங்கு இருக்கும்.. காரணம் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. இன்று வரை குடுப்பத்திற்கு விருப்பமில்லாத காரியம் செய்தது இல்லை மூர்த்தி.

 

அப்பாவின் வார்த்தையை மகன் தட்டியது இல்லை. மகனின் எண்ணத்தில் அவரும் தவறு கண்டதில்லை. இனி எப்படியோ?

 

சட்டையைக் கழட்டியவன்.. அடுத்த மூன்று மணி நேரம் காக்கோட்டியை கொண்டு அங்கிருந்த சிகப்பு கீரை தோட்டத்திற்கு சேனலிலிருந்து தண்ணீர் பாய்ச்சினான்.

 

மதிய உணவாய் சிகப்பு அரிசி சோறும், அவித்து இடித்த மரிச்சினியும், அவியலும், நாட்டு மிளகாயும் புளிச்சிகாயும் போட்டு செய்த மீன் குழம்பும் வயிற்றை நிரப்ப, உழைப்புக்கும் உணவிற்கும் கண்ணைக் கட்ட.. தன் அறைக்குச் சென்றவன், தங்கத்தை மார்பில் போட்டுக்கொண்டு நல்ல உறக்கம். காலடியில் கருப்பன்.

 

அது அவனுக்குப் பிடித்த நிம்மதியான வாழ்க்கையும் கூட. அதை மிஞ்சிய மோகம் கணிதம் மேல். இன்று அதையும் மிஞ்ச ஒருத்தி அவன் வாழ்வில்.

 

மனரம்மியமான நான்கு  நாட்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இன்றோடு எடுத்த விடுப்பு முடிய, கிளம்பவேண்டும் என்ற எண்ணம் கசக்காமல் போக ஓரே ஒரு காரணம் தான் அவனிடம் இருந்தது. அவளைப் பற்றி வீட்டில் பேச வேண்டும். வீட்டில் இருக்கும் குட்டிகளுக்கு எல்லாம் காரியம் ஆக வேண்டும் என்றால் மூர்த்தியிடம் வந்து நிற்பர்.. அவன் காரியம் சாதிக்க? அவனுக்கு அவன் அக்கா தான்!

 

கண் மூடிக்கொண்டு இது வேண்டும் என்று பானுவிடம் அவன் கேட்டால்.. அது ஏதுவென்றாலும் அவனுக்குக் கிடைத்துவிடும். இது தான்.. மணிக்கு இந்த குடும்பம் பிடிக்காமல் போனது. மூர்த்தி ஒன்றைக் கேட்டால்,  ஏன் என்ற கேள்வியே இல்லாமல் கேட்டது அப்படியே கிடைத்துவிட.. மணி எதையாவது அவன் அம்மாவிடம் கேட்டால்.. ‘ஏன்? எதற்கு?’ என்று ஆயிரம் எரிச்சல் மூட்டும் கேள்விகள், அனைவரிடமும் இருந்து! அவனுக்கு அன்றும் புரியவில்லை இன்றும் புரியவில்லை.. இருவரின் விருப்பத்திலிருந்த நியாயங்களும், பாகுபாடுகளும்!

 

அக்காவிடம் பேசவேண்டும்… துளசி பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் எழுந்தாலும் அங்கிருந்த தினங்களில் பேசத் தனிமை கிடைக்கவில்லை. இரண்டு நாளில் தோளை விட்டு இறங்குபவள் இம்முறை ரயில் கிளம்பும் வரை மூர்த்தியை விடவில்லை.

 

“வய்யிட்டு கிளம்புதியளா?” காலை பொழுது புலர்ந்ததுமே கேட்ட தங்கம் சட்டை போல் ஒட்டிக்கொள்ள எங்கிருந்து பேச?

 

கிடைத்த நிமிடங்களில் ஓரிரு வார்த்தைகளை அக்கா காதில் போட்டு வைத்தான். கிளம்பும் வேளை தங்கம்மா அழுத அழுகைக்கு… அவளை விட்டுச் செல்ல அவனுக்கு மனமில்லை. வந்த நிமிடம் முதல் தோளிலேயே தவழ்ந்தாள்.

 

இறங்க மனமில்லை… இறக்கவும் மனமில்லை. ஆனால் கூட்டிச் செல்லவும் முடியாதே..

 

“யாருக்காக இல்லேனாலும் உன்னையே நினைச்சுட்டிருக்க தங்கத்துக்காகவாது அடிக்கடி வா மூர்த்தி. எத்தன பேர் இருந்தாலும் அவ உன்ன தான் தேடுதா”, வழி அனுப்ப வந்த வலியண்ணன் சுவாமி கூறினார்.

 

மூர்த்திக்குத் தொண்டை அடைத்தது. “மாமா.. டாட்டா..” விசும்பிக் கொண்டே தங்கம் கையசைக்க… “ரெண்டு மாசம் தான் தங்கம்… லீவுக்கு வந்திடுவேன் அழக் கூடாது!”, கட்டி அணைத்து முத்தம் பதித்து தலை வருடி சமாதானம் சொன்னான்.

 

இப்படி ஒரு அன்பான குடும்பம் இங்கிருக்க மெட்ராசில் அவன் என்னத்தைக் கண்டானோ? ‘பி.ஹெச்.டி முடியவும் வந்திடணும்’ மனதின் ஆழத்தில் பதிந்து போன எண்ணம் இது.

 

ரயில் நகர.. அமர்ந்திருந்தவன் நினைவலைகளில் அடுத்த சிறுமியின் கண்ணீர் வந்தது. மூர்த்தியின் குட்டி பெண்! வார்டன் துளசியிடம் கூறியிருப்பாரா? சனிக்கிழமை தேடி இருப்பாளா? வரவில்லை என்றதும் அழுதிருப்பாளா? கோபமாக இருப்பாளா? பல கேள்விகள் முன் வந்து நின்றது.

 

‘துளசி’ அவளை நினைத்தாலே நெஞ்சம் தித்தித்தது. வீட்டிற்கு வரச் சொன்னதின் காரணம் நேற்று கண்டுக்கொண்டான். மகனிடம் திருமணம் பற்றிப் பேச, யாருக்கும் தெரிவிக்காமல் தங்கத்தை உசுபேத்தி, முத்து செய்த வேலை! அக்கா மகள் நந்தினியைத் தான் முத்து கைகாட்டினார். வீட்டிற்குப் போன அன்றிலிருந்தே பெண்ணும் இவனைக் காணும் போதெல்லாம் நெளிந்தாள். அன்று புரியாதது நேற்று புரிந்தது.

 

“அம்மா.. நந்தினியா? வயசு 17 தான் ஆகுது. படிக்கட்டும். சின்ன பொண்ணு மனச கெடுக்காதீங்க! அவளும் தங்கம் மாதிரி தான் எனக்கு. தேவை இல்லாத பேச்சு இது.” என்று அம்மாவிடம் அவன் கூற.. எதிர்த்து முத்து வாக்குவாத்தில் இறங்கும் முன்.. செவலை பசு வலியில் கத்த.. அவன் தப்பித்துக் கொண்டான். மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சிறுப்பென் நந்தினிக்கு வலிக்கத்தான் செய்தது. பாட்டியின் புண்ணியத்தில் சில வார கனவென்றாலும்.. கனவு கனவு தானே.

 

ரயில் ஏறும் அன்று, மதியம் போல் முன் முற்றத்து திண்ணையில் அமர்ந்து தென்னங்கீற்றிலிருந்து ஈக்கில் உருவிக் கொண்டிருந்த அக்கா மடி சாய்ந்தவன் கூறிவிட்டான் அவன் மனதை.

 

“அக்கா.. காலேஜ்ல ஒரு பொண்ணு.. பிடிச்சிருக்கு. வேற பொண்ணு பாக்க வேண்டாம். ரெண்டு வருஷம் போகட்டும்..” அவர்கள் பேச்சு முடிவுக்கு வரும் முன் தங்கம் அவன் வயிற்றில் அமர.. கருப்பன் அவன் முகத்தில் முட்ட.. பேச்சு நின்று போய் இருவரோடும் விளையாட ஆரம்பித்தான். இன்றும் கருப்பனுக்கு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு பட்டாம்பூச்சி பிடிக்கப் பிடிக்கும்… அவன் வால் பிடித்து, கூடவே தங்கம்!

 

ஊரில் பெயர்ச் சொல்லும் அளவிற்கு பெரிய குடும்பம்.. சிக்கலில்லாமல் துளசியை மணக்க வேண்டும். துளசி தான் அவனுக்கு பார்த்திருந்த கோமல் என்று தெரியும் பட்சத்தில்.. மகனை வேண்டாம் என்ற குடும்பத்திலிருந்து பெண்ணை எடுப்பார்களா? கண்டிப்பாக மாட்டார்கள்!  அவள் பம்பாய் வாழ்வு பற்றி தெரிந்தால்?

 

இந்த திருமண பேச்சில் அவனை தவிர ஒருவருக்கும் விருப்பம் இருக்கப் போவதில்லை என்பது உறுதி.. அதில் துளசியும் அடக்கம்!

 

‘துளசி..’ நினைத்தவனுக்குப் பெருமூச்சு மட்டும் தான் மிச்சமாய் போனது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!