Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ28_1 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 28_1

 

காலை மூன்று மணி.. மூன்று ஜீவன்கள்.. மூன்று இடத்தில்.. மூன்று மனநிலையில்!

 



Advertisement

மூவரிடமும் ஒரு ஒற்றுமை! மூவரும் ஒரே காரணத்தை முன்னிட்டு தூக்கமிழந்திருந்தனர்.

 

நடுசாமம் அப்பொழுது தான்  முடிந்திருக்க, இரயில் படு வேகமாக அதன் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. தூக்கம் கண்ணை எட்டியிருக்கவில்லை பானுவிற்கு. கண்ணில் லேசான நீர்ப் படலம். மகனுக்கும் மேல் உயிராய் நினைக்கும் மூர்த்தியா? பெற்ற மகளா? அவரால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

Advertisement

 

Advertisement

மாமன் மேல் எந்த வித உணர்வும் இல்லாமல் சுற்றித்  திரிந்து கொண்டிருந்த இளம் குருத்தின் மனதில் தேவையே இல்லாமல் கல் எறிந்த முத்துமங்கை மேல் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. மூர்த்தி திருமணத்திற்கு இசைந்து கொடுக்காமல் போகவே அவனை தன் வழிக்குக் கொண்டு வர, முத்துமங்கை எடுத்த முயற்சி இது. முழுக்க முழுக்க அவர் கை மட்டும் தான் அதில் ஓங்கியிருந்தது.

 

மூர்த்தியிடம், அக்கா மகள் நந்தினியை மணக்கக் கேட்க அன்றே மறுத்தும் விட்டான். முத்து பேசியதோ.. நந்தினி மனதில் இப்படி ஒரு எண்ணம் விதைக்கப்பட்டதோ… மூர்த்தி மறுத்ததோ.. பானு காதை எட்டியிருக்கவில்லை. மூர்த்தி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அதை மறந்தும் விட்டான்.

Advertisement

 

சிறு பெண் மறந்தாளா? இல்லை! முத்து மறக்க விடவில்லை. “உன் மாமன் உனக்குத் தான்” என்று கூறிவிட்டிருக்க, சிறுப்பென் அதைப் பிடித்துக் கொண்டாள். மாமனின், கண்ணைப் பறித்த வனப்பும்.. படிப்பும், தங்கத்தைத் தரையில்  விடாமல் தாங்கும் இயல்பும் அவளை ஈர்த்தது.

 

இது எதுவும் அறியாதா பானுவிற்கு மூர்த்தி மனதில் ஒரு பெண் இருப்பது மட்டும் தெரியும். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்ய விருப்படுவதாகவும் தெரிவித்து விட்டான். மூர்த்தி விருப்பமே பிரதானம் என்பதால் பானுவும் வீட்டில் பேசி, அவன் விருப்பட்டவளையே முடிக்கத் தான் நினைத்தார்… நந்தினி கிணற்றில் குதித்து உயிரை விடத் துணிந்த நிமிடம் வரைக்கும்.

 

மகளின் உயிரா… உயிரானவன் உணர்வா.. என்று வந்ததும் அவரால் முடிவு எடுக்க முடியவில்லை. அவருக்குக் காதல் எல்லாம் புரியவில்லை. குடும்பம், அன்பு என்பது மட்டுமே தெரியும். மகள் வேண்டும்… மூர்த்தியிடம் அவள் நலமாய் இருப்பாள் என்பது மட்டும் புரிந்தது. மூர்த்தியும் அது தானே நினைப்பான்.

 

மூர்த்தி ஏதோ ஒரு பெண்ணின் மேல் ஆசை கொண்டிருப்பான்.. நந்தினி நிலை கூறினால் புரிந்து நடந்துகொள்வான் என்று தான் நினைத்தார். வீட்டில் பேச முடியாது என்ற காரணத்தால் தான் அவசர அவசரமாக அவர் சின்ன மகளோடு மெட்ராஸ் வந்தது. ஆனால் நடந்தது? ‘அந்த பெண் வேண்டாம்’ என்றார். விளக்கம் கேட்கவேண்டியவன், ஏன் என்று கேட்கவில்லை. சண்டை இடவில்லை. மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் மனதில் இருந்தவளை மனைவி என்றுவிட்டான். மூர்த்தியின் அன்பின் ஆழம் அவன் கூறிய இரண்டு வரியில் புரிந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று பெற்ற தாய்க்கு தெரியவில்லை.

 

காலை மூர்த்தி கல்லூரிக்குச் சென்றுவிட, மடித்த துணியை மகள் தங்கள் அறையில் வைக்காமல் மூர்த்தியின் அலமாரியில் வைத்துவிட… துணியை எடுக்கச் சென்றவர், அலமாரியில் மூர்த்தி வேட்டியோடு மடித்து வைத்திருந்த புடவையைக் கண்டதுமே நின்றுவிட்டார். புடவை மட்டும் இருந்திருந்தால் கூட மூச்சு முட்டி இருக்காது. அவன் ஏன் மனைவி என்று சொன்னான் என்பது அவருக்குச் சுத்தமாக இப்பொழுது புரியவில்லை. இங்கு அவள் தங்கியிருக்க வேண்டும் என்றது மடித்து வைத்திருந்த ஆடைகள்.

 

மூர்த்தியா? திருமணம் முடிந்து விட்டதா? குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டானா? இப்பொழுது அவள் எங்கே? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. மாலை தான் அவனிடம் கேட்க வேண்டும். ஆனாலும் மூர்த்தியை தவறாய் நினைக்க முடியவில்லை அவரால். கண்டிப்பாக அந்த உடைகளுக்கு ஒரு காரணம் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டார்.

 

அதிர்ச்சி அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. புத்தக அலமாரியில் அழகாய் வண்ண காகிதத்தால் பொதியப்பட்ட பரிசுப் பொருள் அடுத்த அதிர்ச்சியை தாங்கி இருந்தது. தங்கம் பிரித்திருந்தாள். ஒரு புத்தகம்.. ஒரு நன்றி அட்டை மற்றும் ஒரு ஒலிநாடா இருக்க… குட்டி பெண் அதை ஓட விட்டாள்.

 

துணியை மடித்துக் கொண்டிருந்தவர் காதில் விழுந்துகொண்டிருந்தது.. வாலிப பிள்ளைகளின் வாழ்த்துரை.. பாடல்கள்.. கிட்டார் வாசிப்பு.. நன்றி உரை. தம்பியைப் பற்றின பெருமை பேச்சு கேட்க அருமையாக இருக்கவே.. வாலிப பிள்ளைகளின் அன்பு, நெகிழ செய்தது. அவரும் இன்முகமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அதை ஓட விட்ட தங்கம் ஓடியிருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“ராட் எல்லாம் ஒழுங்கா ரெக்காட் ஆகிருக்கா? செக் பண்ணிட்டியா? சரியா இருந்தா அவங்க கிளம்பிடுவாங்க.” சம்மந்தமே இல்லாமல் ஒரு பெண் கேட்டாள்.

 

“எஸ் டுல்சி… எல்லாம் ஃபைன். நீங்க கிளம்புங்க” ஒருவன் பேசினான்.

 

ஒலிநாடாவின் பதிவாகி கொண்டிருப்பது தெரியாமல் ஏதேதோ பேச்சு சத்தம். பின் ‘பாய்.. டாடா.. கிளம்பறேன்..’ என்று சத்தத்தோடு அனைவரும் செல்ல.. ஒருவன் பேசினான்.

 

“டுல்சி.. உன் கிட்ட பேசணும்.” என்றான், முன் பேசியவன்.

 

“சொல்லு ராட்..” என்றாள் டுல்சி என்பவள். இது என்ன பேரோ.. ‘டுல்சி.. ராட்..’ நினைத்து சிரித்து கொண்டார் பானு.

 

“நீ எம்.பி-ய லவ் பண்ணுதா?” சத்தமாக சிரித்துவிட்டார் பானு. அவனும் அவன் பேச்சும். கிள்ளை தமிழ். அழகாகத் தான் இருந்தது. ஆனால் யார் அந்த எம்.பி? சக மாணவனாக இருக்கும்!

 

“ஏன் ராட்? அவர் எங்க நான் எங்க… நான் எப்படி ராட்?” அவள் மனதை மறைத்தது பானுவிற்கே புரிய.. நேரில் நிற்பவனுக்குத் தெரியாதா?

 

“என் கிட்டப் பொய் பேச வேண்டாம் டுல்சி! பொய் டான் பேச போகிறேனா.. என் கிட்ட நீ பேசவே வேண்டாம்.” அவனுக்குக் கோபம் வந்துவிட்டது போலும். அவன் ஏற.. அவள் இறங்கினாள்.

 

“பிடிக்கும் ராட்.. அவர எனக்கு உயிரா பிடிக்கும்.” என்றாள். அந்த குரல்.. அதிலிருந்த ஒரு ஏக்கம் பானுவை ஏதோ செய்தது.

 

“யார் உன்கு அவர்?”

 

“நான் பன்னெண்டாவது  கூட முடிக்கல.. சின்ன பொண்ணு. அப்போ எனக்குன்னு பார்த்த மாப்பிள்ளை தான் அவர். எங்க தூரத்து உறவு.”

 

“ஓ.. வாவ். சோ நீங்க மேரி பண்ண போறீங்களா? நீ ரொம்ப பேட் டுல்சி.. நீ எங்கிட்ட மறைச்சுட்ட. நீ எனக்கு ரொம்ப க்ளோஸ்-னு நினைச்சேன். நீ என் கிட்ட ட்ரூவா இல்லவே இல்ல…” அவனிடம் அடிப்பட்ட தொனி..

 

அவன் முகம் அவளைப் பாதித்திருக்க வேண்டும்.. அவசர அவசரமாக பதில் உரைத்தாள். “என்ன பேசற ராட். நீ எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். சத்தியமா தான். நீ என் லைப்-ல வந்த பிறகு நடந்த எதையுமே நான் மறைக்கல பா. பழசுல சொல்றமாதிரி எதுவுமே இல்ல ராட்.”

 

“பரவால சொல்லு டுல்சி.. உன் பழச நான் கேக்கும்”

 

‘ஆமா சொல்லு டுல்சி..’ பானுவும் சிரித்துக்கொண்டார்.

 

“அவர முதல் முதலா பார்த்ததுமே ஃப்லேட் ஆகிட்டேன்… அவர் நடந்து வந்த ஸ்டைல்.. அவர் வேட்டியை பிடிக்கர விதம்… அவர் தோரண.. சிரிக்கும் போது அவர் கன்னக்குழி… அந்த மீசையை முறுக்கி விடுற ஸ்டைல்…” அவள் மூச்சை இழுத்து விட… அவள் உருகும் சத்தத்திற்கு பானு நிமிர்ந்து அமர்ந்தார். பெண் அந்த எம்.பி-யை அணு அணுவாக ரசிப்பது பானுக்கு தெரிந்தது. ‘அனுபவி எம்.பி’

 

“அவர பத்தி எனக்கு தெரியாது. இருந்தும் அவர் தான் எனக்கு புருஷன்னு பார்த்த அன்னைக்கே சொன்னேன்… அப்போ எனக்குத் தெரியாது அவர் தான் எனக்குப் பார்த்த மாப்பிளைன்னு. ஆனா.. அவருக்கு முன்னமே என்னைத் தெரியும் போல… எங்கிட்ட அவர் என்னத்த பார்த்தாரோ.. என் மேல் உயிராகிட்டார்.”

 

‘காரணம் இல்லாத காதல் போல..’ பானுவின் மனவோட்டம்.

 

“ம்ம்.. அப்புறம்? ஏன் கல்யாணம் பண்ணிக்கல?”

 

[the_ad id=”6605″]

 

 

“எனக்கு அம்மா இல்ல. அப்பாக்கு வேற குடும்பம் இருக்கு. நான் தாத்தா கூடத் தான் இருந்தேன். தாத்தா இறந்துட்டாங்க. அப்புறம் என்னை டெல்கி கூட்டிட்டு போயிட்டாங்க… அதோட எல்லாம் முடிஞ்சு போச்சு!

 

அவர் என் மேல உயிரே வச்சிருக்கார் ராட். என்னை அவர் வைஃபுன்னு தான் சொல்லுவார்ன்னா பாரேன்..

 

எனக்கும் அவர்னா கொள்ளை பிரியம். என் புருஷன்னு நினைச்சுக்கலாம்.. ஆனா ‘புருஷனா’ எல்லாம் கனவு கூட காண எனக்குத் தகுதி இல்ல ராட். அவர் தகுதிக்கு நான் பொருத்தமில்ல..”

 

“ரப்பிஷ். நீ ரொம்ப ஸ்வீட் கேர்ள். அப்படி பேசாத. உன்ன விட அவருக்குப் பொருத்தமான பொண்ண அவர் கண்டுபிடிக்கவே முடியாது. மேரி ஹிம் டுல்சி. அவர பார்த்தேன் அன்னைக்கு அவர் வீட்டுல உன்ன கைல தூக்கி வச்சிருக்கும் போது. எம்.பி. ஃபேஸ்ல அவ்வளவு ஹாப்பினஸ்.. உங்கிட்ட இருந்தா மட்டும் தான் எம்.பி வாழ்க்கைல ஹேப்பியா இருப்பார். நீயும் அவர் கைல அவ்வளவு அழகா சிரிச்சிட்டு இருந்த. சோ.. ப்லீஸ் உன் சில்லி தாட்ஸ்னால அவர் சந்தோஷத்தையும் உன் சந்தோஷத்தையும் கெடுக்காத டுல்சி..”

 

‘ஏன் டுல்சி… ஆச படுற பையனை கட்டிக்காம ஏன் இப்படி பேசற. அவனையே கல்யாணம் பண்ணி ரெண்டு பேரும் சந்தோஷமா தான் இருங்களேன்..’ பானு டுல்சிக்கு ஆலோசனை கொடுத்தார்.

 

“சோ.. அவர் வீட்டிலையும் நோ சொல்ல மாட்டாங்க… உனக்கும் யாரும் இல்ல இப்போ… சோ கல்யாணம் தான்.”

 

“அவங்க வீட்டுல ஒத்துக்கறது கஷ்டம் ராட். அவங்க என்னை பொண்ணு கேட்டு.. அப்புறம் கல்யாணம் நடக்கல இல்லையா.. சோ அவங்களுக்கு கௌரவ குறைச்சல்ன்னு ஒத்துக்க மாட்டாங்க. ஆனா அவர் அக்காக்கு அவர்ன்னா உயிராம். அவங்க தான் அவருக்கு அம்மா மாதரின்னு சொல்லுவார். இவர் எது கேட்டாலும் செய்வாங்களாம். அவங்களுக்கு என்னை பத்தி தெரியுமாம். சோ அவங்க பார்த்துப்பாங்க.. அவருக்கு அவங்க அக்கா மேல அவ்வளவு நம்பிக்கை” அவள் குரலில் அப்படி ஒரு திடம். கேட்டுக் கொண்டிருந்த பானு நெற்றி சுருங்க ஆரம்பித்தது.

 

“ஆசம் அக்கா..”

 

“ஆமா ராட். பானு அக்கா நிஜமாவே ரொம்ப நல்லவங்களா தான் இருக்கணும். இல்லேனா அவர் ஏன் அவங்க அக்கா மேல் அவ்வளவு பாசமா இருக்கணும்? அவங்க பொண்ணு தங்கத்த.. அவர் மக(ள்)ன்னு தான் சொல்லுவார்…”

 

நாடா முடிந்திருக்க.. ‘ட்ப்’பென்று ஒலிநாடா நின்றது. பானுவின் இதயமும் தான். எம்.பி என்றால்.. மூர்த்தியா? டுல்சி… துளசியா? துளசி தான் கோமுவா? உறைந்தே போனார். ஒலிநாட இருந்த இடத்தில் சென்று அமர்ந்துகொண்டது.

 

[the_ad id=”6605″]

 

 

 

இது எல்லாம் போதாதென்று மாமி வேறு அவர் பங்கிற்குத் துளசியின் புகழ் பாடிச் சென்றார். “என்ன தான் நல்ல பிள்ளைங்கனாலும் பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வைக்கலாமோ? காலா காலத்துல சின்னஞ்சிறுசுகள சேர்த்து வைடி மா. ரெண்டும் மாத்தி மாத்தி பார்த்து உருகுது. நேக்கே அவ ரெண்டி பேரயும் பார்த்து பாவமா போயிடுத்து டி. சமத்து டி அவ.. இனிக்க இனிக்க பேசற.. துளசி இங்க இருந்தா, நேக்கு பொழுது நன்னா போகும்டி பானு”

 

இதற்கு மேல் எதையும் கேட்க அவருக்குத் திராணி இல்லை. அன்று இரவே கிளம்பிவிட்டார் பானு, ஏன்.. எதற்கு.. என்ற எந்த விளக்கமும் அளிக்காமல். ரயில் கிளம்பிச் சென்று ஆறு மணி நேரமாயிருக்கத் தூங்க முயன்று கண்ணை மூடிக்கொண்டார்.

 

பானு ரயில் ஏறும் முன் அடுத்த நாளே விடுப்பு எடுத்து வருமாறு கட்டளையிட்டிருக்க.. மூர்த்திக்கு ஏன் என்றே புரியவில்லை. கண்டிப்பாக அவன் கூறிய பதில் தான் காரணம் என்று நம்பினான். ஊருக்குப் போனால்? அடுத்து? அவனுக்கு யோசிக்கவே பிடிக்கவில்லை. வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் அவன் முடிவில் மாற்றமில்லை. துளசி படிப்பும் முடியும் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் அவன்  அப்படி எல்லாம் கவலையில் மூழ்கிவிடவில்லை. தன்னை மீறி என்ன நடந்துவிடப் போகிறது என்ற திடம். அவன் கண் முன் வளர்ந்த நந்தினியின் நிலை காணும் வேளை என்ன ஆகுமோ தெரியாது.

 

‘முதல் வேலையாகக் காலை கல்லூரி சென்று விடுப்பு எடுக்க வேண்டும்.. மாலை கிளம்பிவிட வேண்டும்!’ முடிவு எடுத்தபின், துளசியின் புடவை ஒன்றை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு தூங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!